கீற்றில் தேட...

தொடர்புடைய படைப்புகள்

தமிழ்நாட்டில் தற்போது தமிழை வளர்க்கிறோம் என்று வேற்று மொழிப் பொருட்களின் பெயர்களை தமிழ்படுத்தி தமிழை வளர்க்க முற்படுகின்றனர். அதன்மூலம் வேற்று நாட்டில் கண்டுபிடிக்கப்பட்ட பொருள்களுக்கு தூய தமிழ் பெயர் வைக்கிறோம் என்றும், அந்தப் பொருள்களின் பெயர்களுக்கு இணையான சொற்கள் தமிழில் செறிந்து காணப்படுகிறது என்றும் தமிழ் மொழியின் பெருமையை கள்ளத்தனமாக நிலை நாட்டுகின்றனர்.

தமிழ் கலாச்சாரம், தமிழ் பண்பாடு மற்றும் தமிழ் மரபு என மூச்சுக்கு முன்னூறு முறை சொல்லிக் கொள்பவர்கள்தான் சிறிதும் மனசாட்சி இல்லாமல் தார்மீக அடிப்படை எண்ணமும் இல்லாமல் மொழிபெயர்ப்பு என்ற இழிவான செயலில் ஈடுபடுகின்றனர். அதாவது, வேற்றுமொழியில் மற்றவர்கள் பயன்படுத்திவரும் பொருள்களின் அல்லது செயல்களின் அல்லது பின்பற்றிவரும் ஏதாவது பழக்க வழக்கங்களை அவர்களின் பொருள்களுக்கு, நிகழ்வுகளுக்கு, செயல்களுக்கு இணையான ஒன்றை நாம் ஏற்கனவே செய்துகொண்டிருந்தால் அதை தம் வசதிக்கு ஏற்ப தம் மொழியில் பெயர் சூட்டிக்கொள்ளலாம்.

எடுத்துக்காட்டாக‌, Rice என்பதற்கு அரிசி எனவும், Sleep என்பதற்கு தூக்கம் எனவும், அதேபோல், Water என்பதற்கு தண்ணீர் எனவும், Walking என்பதற்கு நடத்தல் எனவும், Time என்பதற்கு நேரம் எனவும், Road என்பதற்கு சாலை எனவும், Tree என்பதற்கு மரம் எனவும், Dress என்பதற்கு உடை எனவும், Eyes என்பதற்கு கண்கள் எனவும் இப்படி மிக அடிப்படையான விசயங்களை தம் மொழியில் சொல்லிக்கொள்ளலாம். ஆனால் அதன் எல்லை இதனுடன் நின்றால் பரவாயில்லை. ஏனெனில் இவையனைத்தும் தம் சமுகத்தில் தம் அறிவுக்கு ஏற்றவாறு தாம் மற்ற நாட்டுக்காரர்களுக்கு அல்லது மொழிக்காரர்களுக்கு இணையாக சுய கண்டுபிடிப்பால் பயன்படுத்திவரும் விசயங்களாகும். இதை மொழிபெயர்ப்பது என்பது மிக அடிப்படையானது.

ஆனால், என் மொழி உலகிலே சிறந்தது, புனிதமானது என கூறிக்கொண்டு சமகாலத்தில் புதியதாக அறிவியல் பூர்வமாக மற்றவர்கள் கண்டுபிடிக்கும் பொருள்கள் உள்ளிட்ட விசயங்களுக்கு என் மொழியிலே அந்த விசயத்திற்க்கு இணையான சொற்கள் கொட்டிக்கிடக்கிறது என வெற்றுப் பெருமை பேசி புதியதாக ஒரு சொல்லை உருவாக்குகின்றார்கள். ஆனால், அப்படியொரு பொருள் கண்டுபிடிக்கப்படவில்லை என்றால், தங்களின் மொழிப் புலமையை காட்டும் இவர்கள் கண்டுபிடிக்கப்படாத அந்த பொருளுக்கு சொல் எப்படி உருவாக்க முடியும்? அதாவது Current என்பது கண்டுபிடித்ததால் தான் மின்சாரம் என்ற பெயரும், Computer கண்டுபிடித்ததால்தான் கணினி என்ற சொல்லும், Mobile கண்டுபிடித்ததால்தான் கைபேசி அல்லது தொலைபேசி அல்லது அலைபேசி என்ற சொல்லும், Flight கண்டுபிடிக்கப்பட்டதால்தான் விமானம் என்ற சொல்லும், ஏன் Facebook என்ற கண்டுபிடிப்பால்தான் முகநூல் என்ற சொல்லும் உருவாக்கப்பட்டதே தவிர‌ தமிழ் மொழியில் அப்படி ஒரு சொல் கிடையாது.

ஆனால், எங்கள் மொழியில் சொற்கள் கொட்டிக்கிடக்கிறது என வெட்டிப்பெருமை பேசிக்கொண்டிருக்கின்றனர். மாறாக எந்த ஒரு கண்டுபிடிப்பையும் செய்வதில்லை. குறைந்தபட்சம் யாராவது ஒரு பொருளை கண்டுபிடித்தால் அவர் வைக்கும் பெயரை வைப்பதுதான் நாம் அந்த கண்டுபிடிப்பாளருக்கும், கண்டுபிடிப்புக்கும் கொடுக்கும் மரியாதை. அதைவிடுத்து, எந்தவித அறிவையும் பயன்படுத்தாமல் வெறும் சாதிப் பெருமை பேசிக்கொண்டும், பெண்களை அடிமைப்படுத்திக் கொண்டும் மற்றும் பல பிற்போக்குத்தனமான விசயங்களை செய்துகொண்டும் யாரோ ஒருவரின் அறிவை நோகாமல் சுரண்டி அதற்கு தம் மொழியில் பெயர்வைத்துக் கொள்வது மிக கேவலமான நிகழ்வு.

உண்மையில் மொழியை வளர்க்க வேண்டும் என்றால் புதியதாக ஒரு கண்டுபிடிப்பை நிகழ்த்தி அதற்கு வேண்டுமானால், தமிழ், சிலப்பதிகாரம், குண்டலகேசி, வளையாபதி, கம்பர், சோழன், பாண்டியன், சேரன் என தமிழில் தமக்குப் பிடித்த பெயரை வைத்தால் உலகமே அதைத்தான் உச்சரிக்கும். இப்படி படைப்புத்திறன் இல்லாமல், வேறு ஒருவரின் கண்டுபிடிப்பை வைத்து அதை மொழிபெயர்த்துதான் தமிழை வளர்க்க வேண்டுமென்றால் அதற்கு தமிழ் மொழி அழிவதே மேல்.

- மகா.தங்கா (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)