போராட்டங்கள் அனைத்தும் அரசியல் அதிகாரத்தை அடைவதற்கானதே. இதை உணராத போராட்டங்கள் எவ்வளவு வீரியத்துடன் (உண்மையில் சாரத்தை இழந்துவிட்ட இத்தகையப் போராட்டங்கள் வீரியமானதேயில்லை) நடந்தாலும் முழு வெற்றியை அல்ல தற்காலிகத் தீர்வைக் கூட அடைய முடியாது. இந்த உண்மையை நமது அணு உலை எதிர்ப்புப் போராட்டம் நிரூபித்துக் கொண்டிருக்கிறது.

tuticorin church 600

அணு உலை எதிர்ப்புப் போராட்டத்தில் மீனவர் சமுதாயம் தங்களது ஒற்றுமையை உலகுக்கு உணர்த்தி வழி காட்டியது. குறிப்பாக தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களின் மீனவ மக்கள் பெண்கள், குழந்தைகள், பெரியவர், ஆண்கள் என அனைவரும் ஒன்றுபட்டு ஒரே குரலில் அணு உலையை எதிர்த்து உலகை திரும்பிப் பார்க்க வைத்தனர்.

இந்தப் போராட்டத்தின் நியாயத்தை இன்னொரு வழியில் எடுத்து செல்லத்தான் போராட்டக்குழுவிலிருந்து மூன்று பேர் தேர்தலில் போட்டியிட்டனர். ஆனால் மூன்று பேரும் மிகக் குறைந்த வாக்குகள் பெற்று படுதோல்வி அடைந்தனர். இவர்களின் தோல்வி தனிநபர் தோல்விகளல்ல. அணு உலை எதிர்ப்புப் போராட்டத்தின் தோல்விகளாகும். இருக்கின்ற அணு உலைகளை மூடும் போராட்டத்தின் தோல்வி மட்டுமல்லாது, இனி நிறுவ இருக்கின்ற 3, 4 அணு உலைகளை நிறுவுவதற்கு ஒப்புக் கொண்டதைப் போன்ற தோல்வியுமாகும்.

இந்த வெளிப்படையான உண்மை நமக்கு முன் சில கேள்விகளை எழுப்புகிறது.

இந்தப் போராட்டத்தில் மீனவர் சமுதாயத்தை வழிநடத்தியது யார்?

போராட்டக்குழுவா? அல்லது கிருத்துவ திருச்சபைகளா?

போராட்டக்குழுவாக இருந்தால் போராட்டத்தில் உறுதியாக நின்ற மீனவர்களின் வாக்குகளை ஏன் பெற முடியாமல் போயிற்று?

கிருத்துவ திருச்சபைகள் என்றால் போராட்டக்குழுவை தோற்கடித்ததில் சபைகளுக்கு என்ன லாபம்?

திருச்சபைகளும் – மீனவர் சமுதாயமும்

பொதுவாகவே மீனவர் சமுதாயம் நிலவுகிற அரசு மற்றும் அதன் அதிகாரம் குறித்து அதிகமாக கவலைப்படாதவர்கள். மீனவர்களின் வாழ்வை கடலும் கடல் சார்ந்த இயற்கையுமே தீர்மானிப்பதால் அவர்களின் வாழ்வில் தீர்மானகரமான பங்காற்றாத அரசு குறித்து அலட்டிக் கொள்வதேயில்லை. முதலாளித்துவ வளர்ச்சியில்தான் மீனவர் சமுதாயத்தின் மீது அரசின் தலையீடு உண்மையில் உருவாகத் தொடங்குகிறது.

சந்தைக்கான போக்குவரத்தில் கடலும் கடல் சார்ந்த நிலப்பரப்பும் அரசுக்கு முக்கியத்துவமாகி விடுவதோடு நாட்டின் அனைத்து மக்களையும் தனது பொருள் உற்பத்தி நடவடிக்கையில் (உற்பத்தி செய்ய – விற்க – வாங்க) ஈடுப்படுத்தவும் மீனவர் மீது அரசின் தலையீடு அவசியமாகி விடுகிறது.

மீனவர் சமுதாயத்திற்கும் முதலாளித்துவ கல்வி மற்றும் சமூக நடவடிக்கைகள் காரணமாக பொது அரசியலுக்குள் நுழைவது அவசியமாகி விடுகிறது.

இவ்வாறு மீனவர் சமுதாயத்தின் மீது அரசின் தலையீடும், மீனவர் சமுதாயம் பொது அரசியல் அரங்கிற்குள் நுழைகிற தேவையும் நமது நாட்டில் வெள்ளையர் வருகையால் (அவர்கள்தானே முதலாளித்துவத்தைத் திணித்தார்கள்) விழைந்தது. ஆனால் மீனவர் சமுதாயத்தின் மீது நேரடியாக வெள்ளை அரசின் அதிகாரம் நிறுவப்படாமல் அவர்களின் கிருத்துவ மெஷினரிகளின் அதிகாரமே நிறுவப்பட்டது. தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களின் மீனவ மக்கள் கிருத்துவ மெஷினரிகளின் கீழ்தான் இந்த அரசின் அதிகாரத்திற்குள் கொண்டு வரப்பட்டனர். அரசு கிருத்துவ மெஷினரிகளான திருச்சபைகள் மூலம்தான் அம்மக்களை வழிநடத்தியது; இப்போதும் நடத்தி வருகிறது.

ஒருவகையான சுய பொருளாதார வாழ்க்கைமுறையைக் கொண்ட மீனவ மக்களுக்கு அரசின் நேரடியான அதிகாரத்தின் கீழ் வாழ்வதைவிட சுயசார்பு கொண்டதைப் போல் தோற்றமளிக்கிற திருச்சபைகளின் கட்டுப்பாட்டில் வாழ்வது பெரிய சிக்கலை உருவாக்கிவிடவில்லை.

இயற்கையோடு இணைந்த நிலையான பொருளாதார வாய்ப்புகள் இருப்பதால் மீனவர்கள் இதுவரை பெரிய அரசியல் நெருக்கடிகள் எதையும் எதிர்கொள்ளவில்லை. அவர்களுக்கு நேர்ந்த வழிபாடு சம்பந்தமான அனைத்து நெருக்கடிகளையும் திருச்சபைகளே முன்னின்று அரசிடம் பேசித் தீர்த்து வைத்துள்ளன. திருச்சபைகளால் முறைப்படுத்தப்பட்டு அமைப்பாக்கப்பட்டிருக்கும் இம்மக்கள் இன்றுவரை திருச்சபைகளின் கட்டுப்பாட்டின் கீழ்தான் இருக்கிறார்கள்.

அணு உலை எதிர்ப்புப் போராட்டமும் – திருச்சபைகளும்

திருச்சபைகளை மீறி அணு உலை எதிர்ப்புப் போராட்டம் நடக்கவில்லை. மீனவ மக்கள் அணு உலை எதிர்ப்புப் போராட்டத்தின் காரணமாக திருச்சபைகளோடு முரண்பட்டதாகவோ, மோதியதாகவோ எந்த ஆதாரமும் கிடையாது. அணு உலை எதிர்ப்புப் போராட்டத்தில் தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களின் திருச்சபைகள் முழுமூச்சாகப் பங்கேற்றன. போராட்டக்குழுவில் பங்குத் தந்தைகள் இருக்கிறார்கள். பங்குத் தந்தைகளின் விடுதலை இறையியல் அரசியல் மேடைகளில் அனல் பரப்பின. ஆக திருச்சபைகளின் கட்டுப்பாட்டில் இருந்து மீனவ மக்கள் துளியும் விலகாதப் போராட்டமே அது. ஒன்றின் மீது கட்டுப்பாட்டைக் கொண்டிருப்பவர்கள்தான் அதை வழிநடத்தவும் முடியும். எனவே போராட்டத்தை திருச்சபைகளே வழிநடத்தின.

திருச்சபைகளும் – தேர்தல் தோல்வியும்

பணத்துக்காக ஓட்டுப் போடுகிறவர்களல்ல மீனவர்கள். கடலன்னை அள்ளித் தருகிற அளவில்லாச் செல்வத்திற்கு சொந்தக்காரர்களான அம்மக்கள் அற்பக்காசுக்கு ஆசைப்படுகிறவர்களில்லை. அதேபோல திருச்சபைகளின் சொல்லை மீறி வாக்களிக்கிறவர்களில்லை. அவ்வளவு கட்டுப்பாடானவர்கள்.

ஆக மீனவர்கள் போராட்டக்குழுவினருக்கு ஓட்டுப் போடாமல் மற்றவர்களுக்கு போட்டார்கள் என்றால் திருச்சபைகளை ஏமாற்றி விட்டார்களா? திருச்சபைகளின் வழிகாட்டல் இல்லாமல் அவர்கள் எந்த முடிவையும் எடுப்பதில்லை.. பெண்கள், குழந்தைகள், பெரியவர், ஆண்கள் என குடும்பம் குடும்பமாக போராட்டத்தில் உணர்வுப்பூர்வமாக பங்கேற்ற மக்களிடம் ஓட்டை மாற்றிப் போடுவதற்கான வலிமையான வற்புறுத்தல்கள் இருந்துள்ளது. இப்பகுதி மீனவர்களிடம் திருச்சபைகளைத் தாண்டி யாரும் வற்புத்திவிட முடியாது. எனவே போராட்டக்குழுவினரின் தோல்விக்குப் பின்னால் திருச்சபைகளின் வழிகாட்டல் இருக்கிறது.

திருச்சபைகளின் அரசியல்

திருச்சபைகள் என்பது தேவனின் துதிப்பாடி பக்தர்கள் தருவதைக் கொண்டு உயிர்வாழ்கிற மடங்களல்ல. அவைகள் பல்வேறு கல்வி நிறுவனங்களையும், வணிக வளாகங்களையும், தேவாலய இடங்கள் மற்றும் விளைநிலங்களையும் கொண்ட பலகோடி மதிப்புடைய சொத்துக்களுக்கு அதிபதிகளாகும். இந்த சொத்துக்களின் பொருட்டு அவைகள் அரசோடு சமரசம் செய்துக் கொள்ள வேண்டுமே தவிர அரசை வீழ்த்துகிற வேலைகளில் ஈடுபடவே முடியாது.

எல்லா சொத்துடைய வர்க்கங்களைப்போல் திருச்சபைகளும் ஒரு பிரச்சினையில் ஆளும்வர்க்கங்களுக்கு இடையில் பிளவு இருக்குமானால் தனக்கு சாதகமான பக்கம் சாய்ந்து கொள்ளலாம். அப்படியில்லாமல் ஆளும்வர்க்கம் ஒன்றாய் நின்று நிறைவேற்றுகிற செயல்களை எதிர்க்க முடியாது. அப்படி எதிர்க்கத் துணிந்தால் திருச்சபைகள் தங்களின் சொத்துக்களைப் பாதுகாக்க முடியாது.

இவ்வளவு நீண்ட காலமாக ஆளும்வர்க்கத்தில் ஒரு அங்கமாக நீடித்துக் கொண்டிருக்கும் திருச்சபைகளுக்கு இது தெரியாதா? தெரிந்தும் எப்படி இவ்வளவு பெரியப் போராட்டத்தில் இறங்கின?

தெரிந்ததுதான். அதனால்தான் அவைகள் போராட்டத்தில் இறங்காமலிருந்தன.

ஆம். உதயகுமார் உள்ளிட்டோர் வந்து சொல்லும்வரை மக்கள் அணு உலையின் ஆபத்தை உணராமலிருந்ததில் நியாயம் இருக்கிறது. ஆனால் உயர்கல்வியாளர்களையும், பல ஆய்வாளர்களையும், உலக ஞானம் உடையோர்களையும், உலகத் தொடர்புகளையும் கொண்ட திருச்சபைகள் அணு உலையின் ஆபத்தை உணராமலா இருந்தன? அதேபோல அணு உலைப் பிரச்சினையில் அரசு மற்றும் அரசியல் கட்சிகளின் முடிவுகள் குறித்தும் உணராமலா இருந்தன?

இவை மட்டுமல்ல, மீனவர் வாழ்வை கேள்விக்குள்ளாக்கும் சேது சமுத்திரத் திட்டம், கடற்கரை வளர்ச்சித் திட்டங்கள், கடற்கரை மேலாண்மை சட்டங்கள், கடற்கரைப் பண்ணைவிடுதிகள், இறால் பண்ணைகள், பெரும் மீன்பிடிக் கப்பல்கள், சிங்கள கடற்படைத் தாக்குதல்கள் என எல்லாம் தெரியும். எல்லாம் தெரிந்து அவைகள் அரசுக்கு எதிராக சிறு துரும்பைக் கூட நகர்த்தவில்லை. நகர்த்தினால் அவைகளின் சொத்துக்களைப் பாதுகாக்க முடியாது.

திருச்சபைகளுக்கு மீனவ மக்களின் நலன்களைவிட தமது சொத்துக்களின் நலங்களே முதன்மையானது. அதனால் அரசோடு சமரசம் செய்கிற அரசியலை மேற்கொள்ளுமே தவிர அரசுக்கு எதிரான அரசியலை ஒருபோதும் நடத்தாது.

மீனவர்களுக்கு முன்னால்...

அணு உலைகள் மட்டுமல்ல மீனவர் வாழ்வை கேள்விக்குள்ளாக்கும் சேது சமுத்திரத் திட்டம், கடற்கரை வளர்ச்சித் திட்டங்கள், கடற்கரை மேலாண்மை சட்டங்கள், கடற்கரைப் பண்ணைவிடுதிகள், இறால் பண்ணைகள், பெரும் மீன்பிடிக் கப்பல்கள், சிங்கள கடற்படைத் தாக்குதல்கள் என மீனவர் சமுதாயம் இப்போது பெரும் அரசியல் நெருக்கடியை சந்தித்துக் கொண்டிருக்கிறது. இந்த நெருக்கடிகளுக்குத் தீர்வு காண்பதற்கான தொடக்கமாகவே அணு உலை எதிர்ப்புப் போராட்டம் இருந்தது. அந்தப் போராட்டம் ஏற்கனவே பல நெருக்கடிகளை சந்தித்துக் கொண்டிருக்கும்போது தேர்தலில் கையாண்ட முறைகள் இன்னும் நெருக்கடிகளையே ஏற்படுத்தும்.

மீனவர் சமுதாயம் மக்களின் நலனைவிட தமது சொத்துக்களின் நலந்தான் பெரிதென மாறிவிட்ட திருச்சபைகளின் பிடியில் இருந்து முதலில் மீள வேண்டும். அடுத்து நாடு முழுவதும் ஒரு புரட்சிக்கான சூழல் இல்லாத நிலையில் நமதுப் போராட்டத்தை வெற்றியை நோக்கி இட்டுச்செல்ல அனைத்து வாய்ப்புகளையும் பயன்படுத்த வேண்டும். தேர்தலும் நமக்கு நல்ல வாய்ப்பேயாகும்.

நாம் தேர்தலைப் பயன்படுத்த வேண்டுமென்றால் இப்போது இருக்கிற தேர்தல் முறைக்குள்ளே சில மாற்றங்களை உருவாக்க வேண்டும். ஒன்று இப்போது நடக்கிற 10 பேர் போட்டியிட்டு அதில் ஒருவர் வெற்றி பெறுகிற முறைக்கு மாறாக விகிதாச்சார பிரதிநிதித்துவம் பெறுகிற முறையில் தேர்தலை மாற்ற வேண்டும். ஓட்டுக்கு ஏற்றபடி கட்சிகளுக்கு பிரதிநிதிகள் கிடைப்பதென்பது கண்டிப்பாக மீனவர் கட்சிக்கும் பிரதிநிதிகளைக் கிடைக்க செய்யும். ஆனால் இதற்கு நாடு முழுக்க குரல் எழுப்பப்பட வேண்டும். நமது கோரிக்கைகளில் நாம் பின்தங்கியிருக்கும்போது மற்ற பலருக்கான கோரிக்கையை நாம் முன்னெடுக்க முடியாது. மற்றவர்கள் முன்னெடுத்தால் நாம் இணைந்து கொள்ள முடியும்.

இன்னொன்று மீனவர்களுக்கான தனித்தொகுதிகளை கோருவது. சமூகத்தின் ஒரு பிரிவினரான நமக்கு நம்மைப் பற்றித் தீர்மானிக்கிற சட்டமன்றத்திலும், நாடாளுமன்றத்திலும் நம்முடைய பிரதிநிதிகள் இருக்க வேண்டும் என்பது அடிப்படை உரிமை. ஆகவே மீனவர் தொகுதி! மீனவர் பிரதிநிதி! என்ற கோரிக்கையை முன்னெடுப்பதாகும். இது சாத்தியமானது. நமக்கான தொகுதி உருவாக்கம் என்பது நம்மை ஒட்டி வாழ்வோரின் தொகுதியை மறு ஒழுங்குக்கு உட்படுத்துவதால் நமது நியாயத்தை மற்றவர்களையும் பேச வைக்கக் கூடியதாகும். அது நமது எல்லாப் போராட்டங்களுக்கும் ஆதரவைத் திரட்டுவதற்கான அரசியல் வெளியை உடனடியாக உருவாக்குவதாகும்.

- திருப்பூர் குணா (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)

Pin It