modi with subramanian swamyசமீபத்தில் சுப்பிரமணியன் சுவாமி போட்ட ஒரு ட்வீட் மிகப் பெரும் சர்ச்சைக்குள்ளாகியிருக்கிறது. ‘ஒரு பார்ப்பனருக்கு உண்டான குணங்கள் நமோவிடம் இருப்பதால் எனக்கு இருக்கக் கூடிய அதிகாரத்தைக் கொண்டு அவரை ஒரு பார்ப்பனராக ஆக்குகிறேன்...’

இது வழக்கம் போல அவரது கோமாளித்தனம் கொண்டவரிகள் என்று ஒதுக்கிவிட முடியாது. இரண்டாயிரம் வருட பார்ப்பன ஆதிக்கத்தின் இந்திய வரலாறு அது. Historical replay. சாமி நிறைய ட்விட்களைப் போட்டிருக்கிறார். அவை எல்லாவற்றையும் மடத்தனம் என்று ஒதுக்கிவிடலாம். ஆனால், இந்தக் கருத்து மட்டும் சாதியக்கட்டமைப்பின் வர்ணாசிரமக் கோட்பாட்டை முன் வைக்கிறது.

‘மோடி என்கிற மனிதரிடம் பார்ப்பனருக்குரிய குணங்கள் இருக்கின்றன என்று நல்ல விஷயம்தானே சொல்கிறார் சாமி...’ என்று மேலோட்டமான திராவிடக் கிண்டலுடன் நிறுத்திக் கொள்ளாமல் மேலும் இதை நுட்பமாக அவதானிக்க வேண்டும்.

தமிழ்ச் சூழலில் தற்போது எழுச்சி பெற்று வரும் இடைநிலைச் சாதிகளின் அரசியல் ஆதிக்கம், இடஒதுக்கீடு குறித்த ஆதரவு மற்றும் எதிர்நிலை விவாதங்கள், பொருளாதார வளர்ச்சியினால் சாதியத்தின் படிநிலை அமைப்புகள் மாறிவரும் சூழ்நிலை... போன்ற இத்தருணத்தில் சாமியின் கருத்து, கோமாளித்தனம் என்கிற போர்வையில் நுட்பமான தந்திரத்துடன் ஒரு கருத்தியலைக் கட்டமைக்கிறது.

சமீபகாலங்களில் இடைநிலைச் சாதிகளின் அரசியல் எழுச்சி பெற்று வருகிறது. அதற்கு அடிப்படையாக ஒவ்வொரு சாதியினரும் தங்களை ஒவ்வொரு அரசாண்ட மன்னர்களின் பாரம்பரியம் என்று நிறுவுகின்றனர்.

நூல்களாக எழுதுகின்றனர். வாதப் பிரதிவாதங்களை முன் வைக்கின்றனர். அதற்கான அடையாளங்களைத் தேடிப் பிடித்து தரவுகள் சேகரித்தும், செயற்கையாக உருவாக்கியும் தூள்கிளப்புகின்றனர்.

இந்த வளர்ச்சி, ஆதிக்கத் தன்மையிலேயே இருந்து வந்த சமூகத்திற்கு பெரும் அச்சுறுத்தலாக மாறியிருக்கிறது. அதனால் மீண்டும் வேத சாஸ்திரங்களைக் கையில் எடுக்க வேண்டிய நிலை உருவாகியுள்ளது.

பண்டைய காலந்தொட்டு ஒவ்வொரு நூற்றாண்டின் இறுதியிலும், இதுபோன்ற தருணங்கள் தோன்றும். சங்ககாலத்தில் துடியர், பறையர், புலையர் போன்ற கடைசனம் எழுச்சி பெறும்போது வேத சாஸ்திரங்களின் உச்சாடனம் அவைகளை அடக்கிவிடும். பல்லவர் மற்றும் சோழப் பேரரசு காலத்தில் சாதிய முறைகள் வலுவடைந்தபோது வலங்கை இடங்கைப் பிரிவுகளாக சாதிகளை மாற்றி மாற்றிப் போட்டு வீரியத்தைக் குலைக்கும்.

19 ஆம் நூற்றாண்டில் சாதி சங்கங்கள் மீண்டும் எழுச்சி பெற்றன. ஒவ்வொரு சாதியினரும் தங்களது சாதிப் பெருமைகளைப் போற்றி எழுதினார்கள். எதிர்சாதிகளைக் குறைத்து மதிப்பிட்டார்கள். சாதி நூல்கள் பெருகின. அக்கணத்தில் நால் வர்ணத்தை முன் வைத்து ஒரே அடி.

அதன்பிறகு இந்த வர்ண பேதத்தை ஆதாரமாக வைத்து பிரிட்டிஷ் ஆட்சி, காலனிய இந்தியாவின் சாதிகளை வரைமுறைப்படுத்தி மக்கள் தொகைக் கணக்கெடுப்பின் மூலம் நிரந்தரத் தன்மையை ஏற்படுத்தியது. மெல்ல மெல்ல அதன் தன்மையில் வளர்ந்து இன்றைக்கு பெரும் சக்தியாக மாறிக் கொண்டிருக்கிறது. இந்தக் கையறு நிலையில்தான் பார்ப்பனியம் இப்படியான ஒரு கருத்தை முன் வைக்கிறது.

பிற்படுத்தப்பட்ட சமூகமான நீங்கள் என்ன தான் வளர்ச்சியடைந்தாலும் பார்ப்பனன் என்னும் உயர்நிலைக்கு வர முடியாது. அதற்கு நாங்கள்தான் மாற்ற வேண்டும். நாங்கள் மனது வைத்தால்தான் நீங்கள் உயர்நிலையை அடைய முடியும் என்கிற ஒரு ஆதிக்கக் கருத்தியலை அதற்குள் வைக்கிறார் சு.சாமி.

இதுதான் பார்ப்பனியத்தின் மிகப் பெரிய அதிகாரம். மோடி பெரும்பான்மை பெற்று ஜெயித்துவிட்டால் கூட இந்தியாவை ஆளும் தகுதி பெற முடியாது. ஏனெனில் அவர் பிற்படுத்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவர் என்று தாழ்வு மனப்பான்மையை உருவாக்குவதன் மூலம் பார்ப்பனிய நிலையை முன்வைக்கிறார். சூத்திரன் ஆட்சி புரியத் தகுதியற்றவன் என்று மனு கூறுகிறது.

அதனால்தான், மகாபாரதத்தில் பிறப்பு வர்ணம் தெரியாத கர்ணன் அங்க தேசத்தை ஆள, முடிசூட்டிக் கொள்வதற்கு குறிப்பிட்ட யாகம் செய்ய வேண்டியிருந்தது.

அதேபோல, பழங்குடி இனத்தைச் சேர்ந்த மராட்டிய சிவாஜி அரசுக் கட்டிலேறும்போது பலத்த எதிர்ப்பு கிளம்பியது. அதன்பிறகு பார்ப்பன அந்தணர்களின் ஆலோசனைப்படி குறிப்பிட்ட சடங்கு நடத்தி, யாகம் செய்து, அவர் சத்திரியனாக மாற்றம் பெற்ற பிறகுதான் அரியணையில் அமர முடிந்தது.

இப்படியான பல்வேறு பார்வைகளை அந்தக் கருத்து நம்முன் வைக்கிறது. இதன் மூலம் மோடிக்கு ஆதரவு தெரிவிக்கிறேன் என்று மேலோட்டமான பார்வையில் அணுக வேண்டியதில்லை. இதில் நான் முன்வைப்பது வேறு ஒரு பார்வையை. சாமி ஒரு பிற்படுத்தப்பட்டவரை உயர்சாதியாராக மாற்றுகிறேன் என்று சொல்லும் நுண்ணரசியலை.

இந்த இடத்தில் செப்பேடுகளிலும், கல்வெட்டுக்களிலும் சுட்டிக்காட்டப்படும் ‘ஹிரண்ய கர்ப்பம்’ என்னும் சடங்கியல் வழிபாட்டை நினைவு கூறலாம். ரிக்வேதமும், உபநிடதங்களும், சாஸ்திரங்களும் இதன் புனிதத்துவத்தைப் பெருமை பொங்கப் பேசுகின்றன. இந்தச் சடங்கு குறித்த செயல்பாடுகளை, தன்மைகளை, பல ஆய்வாளர்களும் பலவிதமான பார்வைகளில் முன் வைக்கின்றனர்.

அதில் ஒரு பார்வையை இங்கு பார்க்கலாம்:

ராஜ ராஜசோழன், தனது மகன் என்னும் ராஜேந்திர சோழனுக்கு இந்தச் சடங்கு செய்ததாக பிரிட்டன் வரலாற்று ஆய்வாளர் மைக்கேல் விட்ஸ் தனது, The Story of India - Ages of gold நூலில் எடுத்துரைக்கிறார். ஹிரண்ய கர்ப்பம் என்பது ‘சாதி மாற்றம்’ செய்யும் சடங்கு. ஹிரண்ய: தங்கம். கர்ப்பம்: கருவறை. ‘தங்கக் கருவறை புகுதல்‘ என்கிற பொருள் படும்படியான மறுபிறப்பு என்கிற தாத்பர்யத்தை ஏற்படுத்தும் சடங்கு .

இந்தச் சடங்கைச் செய்ய ஆகம நிலை கண்ட 101 பார்ப்பனர்கள் முன்நின்று வேள்வியைத் தொடங்க வேண்டும். ஒரு மனிதன் உள்ளே புகுந்து போய் வரும்படியான அளவில் மிகப் பெரிய பசுவின் உருவம் ஒன்றை தங்கத்தால் செய்ய வேண்டும். தனது சாதியை மாற்றிக் கொள்ளும் சடங்கைச் செய்யும் நபர், அந்தப் பசு வின் வயிற்றுக்குள் புகுந்து கர்ப்பக் கிரகத்தில் குறிப்பிட்ட நாழிகைகள் அமர்ந்திருந்து, பிறகு வெளியே வந்தால் புதுப்பிறப்பெடுத்து வருவது போல, தனது சாதி மறைந்து உயர்சாதியாக மாற்றம் பெறுவார் என்பது ஐதீகம். (அந்தப் பசுவின் தங்கத்தைப் பிரித்து வேள்வி பார்ப்பனர்களுக்கு தானம் கொடுத்துவிட வேண்டும்.)

இந்தச் சடங்கின் வழிபாடு அரசர் காலத் தமிழ்ச் சமூகத்தில் எண்ணற்ற முறைகள் நடந்திருப்பதாக செப்பேடுகள் தெரிவிக்கின்றன. கேரள மாநிலத்தில் திருவிதாங்கூர் சமஸ்தானத்தில் கடந்த நூற்றாண்டு வரை சாதி மாற்றச் சடங்கை நம்பூதிரிகள் முன்னின்று நடத்தி வைத்திருக்கின்றனர்.

ஸ்ரீபத்மனாபபுரம் அரண்மனையில் தற்போதும் காட்சியில் உள்ள ஒரு ஓவியத்தில் இந்த நிகழ்வு அழகுறத் தீட்டப்பட்டிருப்பதைக் கண்ணுறலாம். மேலும், மலம்புழா அணையில் உள்ள ஒரு பசுமாட்டின் சிலை பற்றியும் ஒப்பு நோக்கலாம். அந்தச் சிலையின் வயிற்றுக்குள் நுழைந்து வெளியே வந்தால் எல்லாப் பிரச்னைகளும் தீர்ந்து புதிய மனிதனாகப் பிறப்பெடுத்து விடலாம் என்ற மக்களின் நம்பிக்கையையும் இத்துடன் பொருத்திப் பார்க்க வேண்டும்.

இப்படி ஒவ்வொரு முறையும் ஒடுக்கப்பட்ட மக்களின் சமூகநிலை உயர்வதாகக் கருதும் போதெல்லாம், சாதியப்படி நிலை அமைப்பையும் அதன் பண்டைய படிமங்களையும் சுட்டிக் காட்டிக்கொண்டே யிருப்பதுதான் இந்துத்துவ உளவியல்.

நான் இங்கு சாதிமாற்றம் என்று குறிப்பிடுவதை வர்ணமாற்றத்தின் கருத்தியலுடன் பொருத்தி அவதானிக்க வேண்டுகிறேன். இந்திய அரசியலில் வர்ணம்தான் பெரும் பங்கு வகிக்கிறது. சமூகத்தில் மனிதனின் நிலை என்ன என்பதை வரையறுக்கும் வேலையை வர்ணாசிரம தர்மம்தான் தீர்மானிக்கிறது. ஒரு சாதியிலிருந்து மற்றொரு சாதிக்கு மாற்றம் பெறுவதென்பது அதே சாதியின் பல்வேறு பிரிவுகளில் நிகழலாம். இதுவல்ல விஷயம். படிநிலை அமைப்பின் நால்வர்ண ரீதியாக ஒரு வர்ணத்திலிருந்து மற்றொரு வர்ணத்திற்கு மாறுவதுதான் விஷயம்.

இந்த இடத்தில் பல்வேறு கேள்விகள் எழுகின்றன.

தற்காலங்களில் இப்படியான சாதி மாற்றுவதற்காக வழிமுறைகள் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில் இருக்கின்றவா? ஏற்கனவே உள்ள ஒரு சாதியில் உள்ளவர், வேறு ஒரு சாதியில் போய் சேருவதற்கு அதாவது மதமாற்றத்தைப் போல சாதி மாற்றம் என்கிற நிலைக்கு வாய்ப்புகள் உண்டா? அதை இந்திய அரசியலமைப்புச் சட்டம் ஏற்றுக் கொள்கிறதா? மதமாற்றத்தை அங்கீகரிப்பது போல சாதி மாற்றத்தையும் அங்கீகரிக்கிறதா?

வெறுமனே குளிரறையில் அமர்ந்துகொண்டு கருத்துகளை அள்ளி வீசும் மகானுபாவர்களின் இந்த வார்த்தைகள்தான் இடஒதுக்கீடு குறித்த பார்வைகளை அங்கதமாக்குகின்றன. தற்கால அரசியலின் நீட்சியாக மாற இருக்கும் எதிர்கால அரசியலில், தன் சுயலாபத்திற்காக எது வேண்டுமானாலும் எப்படி வேண்டுமானாலும் மாறுவதற்கான ஒரு முன்னோட்டமாகவே இதை அவதானிக்கலாம்.

அன்றைக்கு பாரதியார், தலித் பிறப்பாளரான கனகலிங்கத்திற்கு பூநூல் அணிவித்து பார்ப்பனராக ஆக்கினார். அந்த நிகழ்வு, காலங் காலமாக ஆதிக்கம் செலுத்தி வரும் பார்ப்பனியத்தின் தன்மையை உடைக்கும் அதிகார எதிர்ப்பு நிலை.

சாமி செய்வதாகச் சொல்வது, அதிகாரத்தை உருவாக்கும் நிலை, சூத்திரப் பிறப்பாளர்களின் தனித் தன்மையை பார்ப்பனியத்திற்குள் கபளீகரம் செய்து உயர்நிலை என்ற உளவியலை முன்வைக்கும் அதிகாரம், ஆதிக்கம்.

ராமானுஜர் ஒரு பெரும் கூட்டத்தையே பார்ப்பனர்களாக மாற்றிய வரலாறும் நாம் அறிவோம். அவர்களுக்கு ‘திருக்குலத்தார்’ என்று நாமகரணம் சூட்டினார். இதுகுறித்து கடும் விமர்சனங்களும் ஏற்றுக் கொள்ளாமையும் இன்று வரை நடந்து கொண்டுதானிக்கின்றன.

ஆனால், இந்த மகானுபாவர்கள் எல்லோரும் மக்களை வாழ்வியல் ரீதியாக உயர்த்துவதற்கு வழி செய்யாமல், பார்ப்பனராக (அதாவது அவர்கள் பார்வையில் உயர்நிலை) மாற்றவே ஆர்வம் காட்டியிருக்கின்றனர். இதுதான் இந்துத்துவ உளவியல்.

இந்த உளவியலுக்குள் உணர்ச்சிவயப்பட்டு இரையானவர்தான் பாரதி. அவைதீகத் தன்மை கொண்ட சமணர்களை சைவத்துக்கு மாறும்படி கட்டாயப்படுத்தியும், கொடுமைப்படுத்தியும், மாறாத சமணர்களை கழுவேற்றம் செய்த வரலாற்றையும் நாம் அறிவோம். ஆனால் தற்காலத்திய வரலாற்று விற்பன்னர்களால் அப்படி ஒரு கழுவேற்றமே நடக்க வில்லை என்று திரிப்பு வேலை செய்யும் இந்துத்துவ அரசியலின் முன்னோட்டம்தான் இந்த வர்ணாசிரம சாதிமாற்றம் என்னும் கருத்தியல்.

இப்படி தனிமனிதர்கள் சாதி மாற்றம் செய்வ தென்பது இந்திய அரசியலமைப்புச் சட்டம் அங்கீகரிக்கின்ற நிலையை நோக்கி நகர்வதற்கான யத்தனிப்பாக இதைக் கருதலாம்.

1980களில் நடந்த மீனாட்சிபுரம் சம்பவத்தை இதற்கு உதாரணமாக எடுத்துக் கொள்வோம். இஸ்லாமிய மதத்தில் இணைந்த இந்துக்களை மிகப் பெரிய யாகங்கள் நடத்தி மீண்டும் இந்துக் களாக மாற்றியது ஆரிய சமாஜ அமைப்பு. அவர்கள் மீண்டும் திரும்பி வந்தபோது ஏற்கனவே தாங்கள் இருந்த சாதியப் பிரிவுகளிலேயே அமர்த்தப்பட்டார்கள்.

ஆக, இந்திய அரசியலமைப்புச் சட்டம் ஏற்றுக் கொள்ளும் சாதி மாற்றம் என்பதுதான் இன்றைய சமூகச் சூழலில் முக்கியத்துவம் பெறுகிறது. காரணம், வெகுஜன சமூகத்தில் முதன்மையாக நிற்கும் பொருளாதாரம் மற்றும் அதைப் பிரதானப்படுத்திச் செயல்படும் இட ஒதுக்கீட்டுச் செயல்பாடுகள்.

அரசால் அங்கீகாரம் பெற்று நிற்கும் சாதியின்படிநிலை அமைப்பு பெரும்பான்மையாக முன்வைப்பது இடஒதுக்கீடு சார்ந்த பார்வைகளை மாத்திரமே. இந்த மேலோட்டமான தன்மையை, இந்திய அரசியல் சிந்தனையாளர் ஆனந்த் டெல்டும்ப்டே விமர்சிக்கிறார். இடஒதுக்கீட்டின் வழி மூன்று முக்கியமான விஷயங்கள் இருக்கின்றன. பொருளாதார உரிமைகள், சமூக உரிமைகள், கலாச்சார உரிமைகள். இந்த உரிமைகளுக்கான போராட்டமே இடஒதுக்கீட்டின் தன்மை என்கிறார்.

பொதுவாகவே இந்தியச் சூழலில் சாதிரீதி-யான இடஒதுக்கீடு என்பதை வெறுமனே சலுகை-கள் பெறுவதற்கான படிமமாக மட்டுமே மாற்றி வைக்கப்பட்டிருக்கிறது. இடஒதுக்கீட்டில் இடம்-பிடிக்கும் தாபம், சாதிகள் வளர வளர தங்களது வாய்ப்பு போய்விடுமோ என்கிற கவலை, பொறாமை, தங்களது சாதிப் பட்டியலில் வேறு சாதி-களைச் சேர்க்கக் கூடாது என்கிற சுயநலப் போராட்டம், சாதிகளுக்கிடையிலான பகைமை என்பது போன்ற சிந்தனைகளையே உருவாக்கிவளர்த்து விட்டுக் கொண்டிருக்கின்றன.

இத்தகைய சூழலில் சாமி முன்வைக்கும் சாதிமாற்றக் கருத்துக்கள் இடைநிலைச் சாதிகள் மத்தியில் எத்தகைய எதிர் விளைவுகளை, இந்துத்துவ ஆதரவு விளைவுகளை ஏற்படுத்தக் கூடும் என்பதை எண்ணிப் பார்க்கலாம்.

பொருளாதாரத்தில் மிக மிகப் பின்தங்கியிருந்த தலித்துகள் மத்திய தர வர்க்கத்து பொருளாதார நிலையை நோக்கி நகர்ந்து கொண்டிருப்பதற்கு பெரிதும் காரணமாகியிருப்பதாக இடஒதுக்கீட்டை கணிக்கிறது வெகு ஜன சமூகம்.

ஆனால், ஒரு தலித்திய வாழ்வியல் முழுமையடைய பொருளாதார உரிமை கிடைத்து விட்டால் மட்டும் போதாது. கலாச்சார ரீதியாக சமூகரீதியாக உரிமைகள் கிடைப்பதில்லை என்பதற்கு சமீபத்தில் தலித்துகள் மீது நிகழ்த்தப்பட்ட சமூக நிகழ்வுகளை வைத்துப் புரிந்து கொள்ளலாம்.

நான் சமீபத்தில் பார்த்த Fantry என்னும் மராத்திப் படம் ஞாபகம் வருகிறது. உயர்சாதி சிறுமிமீது அன்பு செலுத்தும் (பதின்பருவ காதல்) ஒரு தலித்திய சிறுவன், தனது சூழலிலிருந்து விலகி நாகரீகமான சூழலுக்கு மாற நினைப்பான். அதற்கு ஜீன்ஸ் ஆடைகள் அணிய வேண்டும் என்று விரும்புகிறான். ஜீன்ஸ்தான் நாகரீகம் கொண்ட உயர்நிலை ஆடவனின் குறியீடு என்பதான கருத்துக்கள் வெகுசன சமூகத்தில் விதைக்கப்பட்டிருக்கின்றன. தேசியம் தழுவிய இந்தப் பார்வை, தமிழ்ச் சூழலில், ‘தலித்துகள் ஜீன்ஸ் அணிந்து உயர்சாதிப் பெண்களை மயக்குகின்றனர்’ என்று பேசிய மருத்துவர் ராமதாஸின் கருத்தையும் இங்கு பொருத்தலாம்.

இந்த இடத்தில்தான் சாதிய இழிவு குறித்த காலங்காலமாய் சாகா வரம் பெற்றிருக்கும் கருத்துக்களைப் பார்க்க வேண்டியிருக்கிறது. சாதிய உயர்வு என்பது பொருளாதார முன்னேற்றத்தில் இல்லை. அது சமூக உரிமைகளிலும் கலாச்சார உரிமைகளிலும் இருக்கிறது. இடஒதுக்கீடு சார்ந்த இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில் அனைவரும் குறிப்பிட்ட வகுப்பினர் என்று கூறினாலும் சமூகப் பார்வையில் உங்களுக் கான இடம் எது என்பதை சமூகம்தான் தீர்மானிக்கிறது.

இப்போது சாமி போட்ட அந்த ட்வீட்டை நுட்பமாக வாசியுங்கள் . தனக்கு இருக்கக் கூடிய அதிகாரத்தைக் கொண்டு பார்ப்பனராக மாற்றுகிறேன் என்கிறார். அப்படியானால் இவருக்கு என்ன அதிகாரம் இருக்கிறது? அந்த அதிகாரம் தான்: பார்ப்பனியம்.

இங்குதான் சுப்ரமணியசாமியின் கருத்து ஆணித்தரமாகச் செயல்படுகிறது. இந்திய அரசியலமைப்புச் சட்டம் அங்கீகரிக்கும் சாதியப்பட்டியலில் மட்டுமல்லாது, சமூகவெளியில் நிலவும் சாதியப்படிநிலை அமைப்பிலும் பார்ப்பனியம்தான் அதிகார நிலையாக இருக்கிறது என்கிறார். வெறும் சாதாரண பொருளாதார நிறைவு பெறும் இடஒதுக்கீடுகளால் சாதிய உரிமைகள் முழுமையடைவதில்லை. மாறாக, சாதிமாற்றம்தான் சமூகரீதியாக, கலாச்சார ரீதியாக முழுமையடைய வைக்கும் என்கிற நுட்பத்தை முன்வைத்து, அதற்கு பார்ப்பனியம் மனது வைத்தால்தான் உண்டு என்கிற நுண்ணரசியலை நைசாகச் சொருகுகிறார் சாமி.

மதமாற்றம் என்பதைவிடவும் சாதிமாற்றம்தான் ஒருமனிதனை உயர்த்தும்; அதுவும் உயர்சாதியாக மாற்றம் பெறுவது என்கிற அடுத்த கட்ட சாதிய அரசியலை முன்வைக்கிறார் சாமி. இந்தக்கருத்தின் மூலம் இடஒதுக்கீடு பற்றிய பார்வைகள் மாற்றம் பெறுவதற்கான தருணங்களை நோக்கி நகர்த்துகிறார். அதாவது, இடஒதுக்கீட்டைக் கேள்விக்குட்படுத்தலாம் என்பது இதன் உட்கிடை.

சாமி சொல்லும் சாதிமாற்றம் என்பது சாத்தியமில்லாத ஒன்று என நிராகரித்துவிட முடியாது. மதமாற்றத்தை அங்கீகரிக்கும் இந்திய அரசியலமைப்புச் சட்டம், மனுதர்மத்தின் சாதிகுறித்த பல்வேறு பார்வைகளை உள்வாங்கி வடிவமைக்கப்பட்டது. இந்த நீட்சியில், மோடியின் ஆட்சியில் சாதிமாற்றத்தையும் அங்கீகரிக்கும் சூழல் வந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

இந்திய அரசியலமைப்புச் சட்டம் அங்கீகரிக்கும் சாதிமாற்றம் என்பது இந்தியச்சூழலில் சாத்தியமா? அதன் சாதக பாதக அம்சங்களைக் கருத்தில் கொண்டு வாதப்பிரதிவாதங்களை அரசியல் சிந்தனையாளர்கள் தொடங்க வேண்டும்.

(நன்றி - குமுதம் தீராநதி)

Pin It