முதல் பகுதி: மாற்றுத் தேர்தல் அறிக்கை - 1

வளங்களும் - திட்டமிடுதலும்

                நாட்டின் வளங்கள் என்பவை நிலத்திலிருந்து வெட்டியெடுக்கப்படும் கனிமங்களை மட்டும் குறிப்பதல்ல.

                இயற்கை தரும் அத்துணைச் செல்வங்களும் வளங்களே. காடு, மலை, தாவரங்கள், உயிரினங்கள், கடல், கடல்வாழ் உயிரினங்கள், நதிகள், நீர் நிலைகள், நிலம், விளைவிக்கப்படும் உணவுப் பொருட்கள் உட்பட நாட்டின் வளங்களே.

                இவற்றுடன் மனித ஆற்றலும், உழைப்புச் சக்தியும் நாட்டின் வளமாகத்தான் கருதப்பட வேண்டும்.   நாட்டில் விளையும் மூலிகைகளும், மூலிகை தாவரங்களும் அதன் தொடர்பான பாரம்பரிய மருந்து முறைகளும் நாட்டின் செல்வமே.

                நாம் முதலில் பார்த்தது போல வளங்களைத் தனியாருக்கு திறந்து விட்டபோதே, ஊழலின் வளர்ச்சி அபரிமிதமாகவும், அரசு இயந்திரத்தின் அத்தனை பகுதிகளிலும் துருப்பிடிக்க வைத்துள்ளது.       

manipur ladies 540 

                நாட்டின் வளங்கள், மக்களின் பொதுச் சொத்து. அதன் மீது அனைவருக்கும் உரிமையுண்டு. எந்த குடிமகனுக்கும், அவனது நியாயமான தேவைக்கு இதில் உரிமை கொண்டாடலாம்.

வளங்கள் மீது பணமிருப்பதால் ஒருவருக்கு எல்லையற்ற உரிமையை வழங்க கூடாது. வளங்கள், பணத்திற்காக மாற்றப்படும் பயனீட்டுப் பொருளல்ல (Consumer goods); அது எல்லா உற்பத்திக்கும் மூலதனம்.

உணவும், இருப்பிடமும் மக்கள் தொகை மிகுந்த நாட்டில், வீணடிக்க யாருக்கும் உரிமையை வழங்காது. தேவையான உணவு வழங்கப்படுவது எந்த அளவுக்கு அரசின் கடமையோ, அதே அளவுக்கு யாரும் உணவை வீணாக்கவும் உரிமை இல்லை.

பணமிருப்பதால், அம்பானி 27 அடுக்கு வீடு கட்ட அனுமதிக்கப்பட்டிருக்க கூடாது. இவரின் பணத்திற்காக, நாட்டின் பொது வளமான மணல், இரும்பு இத்தியாதிகள் மாற்றப்பட்டிருக்கக் கூடாது. இவை வீணடிக்கப்பட்ட வளம். பங்கீட்டளிப்பதில் உள்ள கட்டுப்பாடு வரையறுக்கப்பட வேண்டும்.

வளங்களை பயன்படுத்தும் வழியே திட்டமிடுதலாகும். திட்டக் கமிஷன் இந்த பொதுத் தன்மையிலிருந்து வெகுதூரத்தில் உள்ளது; ‘வளர்ச்சி விகிதம்’ என்ற ஒற்றைச் சொல் மந்திரத்திற்காக வளங்களை வாரி வழங்கி சீர்குலைத்திருக்கிறது.

கனிமங்கள், ஆற்றல் மூல வளங்கள் (நிலக்கரி, எண்ணெய், எரிக்காற்று) நீர், காடுகள் அரசிடம் இருந்த பொதுச் சொத்து. மாற்றப்பட்ட பொருளாதாரக் கொள்கையில், தனியாரிடம் பங்கு வைக்கப்பட்டன. தனியார் கைக்கு போன இவற்றில் மின்சாரம், விலை உயர்ந்து சாதாரண மக்களிடமிருந்து இன்று அன்னியப்பட்டுக் கொண்டுள்ளது. இந்த வரிசையில் அடுத்து தண்ணீர் நின்று கொண்டிருக்கிறது.

திட்டமிடுதல், பயனீட்டு பொருளுற்பத்தியில் (Consumer goods) கட்டுப்பாட்டை விதிக்க வேண்டும்.

‘உபயோகி – தூக்கியெறி’ என்ற தற்போதைய வணிக வாசகம், வளத்தை அழிப்பதுடன், நாட்டை குப்பைத் தொட்டியாக்குகிறது. இந்த வகைப் பொருளில் உபயோகிக்கும் பகுதி என்பது தூக்கியெறியும் பகுதியுடன் ஒப்பிடும்போது மிகச்சிறிய பகுதியாகும். பால்பேனாவின் ‘இங்க்’காக பேனாவே தூக்கியெறியப்படுகிறது. இவை சந்தையில் ‘தேவை’யை உற்பத்தி செய்யவும், பொருளுற்பத்தி நிறுவனத்திற்கு தொடர் வாய்ப்புக்காகவும், ஆற்றலும் வளமும் வீணடிக்கப்படுகிறது.

தாராளமயமாக்கல், சந்தைப் போட்டியை முன்னிறுத்துகிறது. சந்தைப் போட்டி வேறு எந்த அக்கறையுமின்றி இதுபோன்ற பண்பாட்டை பறைசாற்றி விற்பனையை வளர்க்கின்றன.

தொழிலுற்பத்திக்காக வழங்கப்படும் சலுகைகள், மூலதனப் பொருட்களில், ஆய்வுக்காக செலவிடுதலை கட்டாய நிபந்தனையாக்க வேண்டும். அதேபோல், உற்பத்தி வருவாயில், சமூக செலவினம், கட்டாயமாக்கப்பட வேண்டும்.

திட்டமிடுதலில், மூலதனப் பொருளுற்பத்திக்கு முன்னுரிமையாக்கப்பட வேண்டும். வளங்களின் ஒத்துழைப்பு இந்த வகைத் தொழில்களுக்கு முன்னுரிமையுடையதாகவும், பயனீட்டு பொருளுற்பத்தியில் தேர்வு அடிப்படையிலான வாய்ப்பும் வழங்கப்படுதல் அவசியம்.

உயர்ந்து வரும் இரும்பு, மணல் போன்ற வளங்களுக்கு, கழிவுகளிலிருந்து மாற்று பொருள் கண்டறிய திட்டமிடுதல் வேண்டும்.

அனைத்து தொழில் உற்பத்திகளிலும் மனித ஆற்றலுக்கு பெரிய வாய்ப்பளிக்கும் வகையாகவும், இவைகள் ஒருங்கிணைக்கப்பட்ட வாய்ப்பாகவும் இருக்க வேண்டும்.

கிராமப் புறங்களை மையப்படுத்தி வளங்கள், மனித வளத்தை பெருமளவில் பயன்படுத்தும் பொருளுற்பத்தியாக இருக்க வேண்டும்.

இந்த வகைத் திட்டமிடுதலே வளர்ச்சியில், சமூகத்தினை உள்ளடக்கிய வளர்ச்சியாக இருக்க முடியும்.

வளங்கள் மனித பயன்பாட்டுக்கு மாற்றப்படும் அதே அளவில், இவை புதுப்பிக்க முடிந்த வளமாக்கும் திட்டமும் உள்ளடக்க வேண்டும்.

விவசாய நிலங்கள், காடுகள், நீர் நிலைகளில் தொழில்களுக்கு அனுமதி மறுக்கப்பட வேண்டும்.

விவசாயிகள், மீனவர்கள், மலைவாழ் மக்கள், பரிவோடு அணுகப்பட வேண்டிய சமுதாயமாகவும், இவர்களின் வாழ்க்கை முறைகளை அழிக்கும் எந்த மாற்றத்தினையும் திட்டமிடுதல் தவிர்க்க வேண்டும்.

பாரம்பரிய தொழில் வல்லமையை காக்கவும் ஊக்குவிக்கவும் திட்டமிடுதல் கைகொள்ள வேண்டும்.

ஒரே வரியில் சொல்வதானால் பணம் எல்லா உரிமைகளையும் வழங்கி விடாது என்பதனை திட்டமிடல் அடிப்படையாகக் கொள்ள வேண்டும்.

வெளிஉறவும் - உள் உறவும்

                அணி சேரா நாடுகள் என்பது தான் சுதந்திர இந்தியாவின் வெளியுறவுக் கொள்கை என ஆரம்பத்தில் அறிவித்தது. பஞ்சசீலக் கொள்கையென்ற திட்டத்தையும் நேரு அவர்கள் முன் வைத்தார். ஆனால் 1962ல் ஏற்பட்ட இந்தோ-சீனா சண்டை இந்தக் கொள்கையை பின்னடைய வைத்தது. 1965 நடந்த பாகிஸ்தானுடனான சண்டை அணி சேரா நாடு என்பது சாத்தியமல்ல என்றாக்கியது. 1971ல் பாகிஸ்தானுடன் நடந்த இரண்டாவது சண்டை, இந்தியாவை ரஷ்யாவின் பக்கத்தில் சேர்த்தது.

அன்றிலிருந்து அமெரிக்காவுடான உறவும் தள்ளியே இருந்தது. 1975-ம் ஆண்டு தொடங்கி 91 வரையிலான 16 ஆண்டுகாலத்தில், தெற்காசிய நாடுகளான இந்தியா பாகிஸ்தான், பங்களாதேசம் என்ற ஆங்கிலேயர் ஆண்ட இந்தியாவில், மக்கள் செல்வாக்கு பெற்ற நான்கு அரசியல் தலைவர்கள் கொல்லப்பட்டார்கள். பாகிஸ்தானின் பிரதமரான பூட்டோவைத் தூக்கிலிட்டார் ஜியா-வுல் ஹக். இவரும் விமான விபத்தில் இறந்தார். அமெரிக்காவை எதிர்த்து வந்த தென்னமெரிக்க நாடான பனாமா அதிபர் டோரி சூஜாஸ், இக்குவட்டாரின் ரோல்டோஸ் என்ற மக்கள் ஆதரவு கொண்ட இத்தலைவர்களும் விமான விபத்தில் தான் இறந்தார்கள். சிலியில் இவர்களைப் போன்றே மக்கள் ஆதரவுடைய அலண்டேவும், பங்காளதேசத்தின் தந்தையென அழைக்கப்பட்ட முஜிபுர் ரஹ்மானும், உள்நாட்டு ராணுவத்தால் கொல்லப்பட்டார்கள். இந்தியாவின் இந்திரா காந்தியும், ராஜிவ் காந்தியும், நேருவிற்குப் பிறகு மக்கள் செல்வாக்கு பெற்ற தலைவர்களாக இருந்தனர். இவர்கள் கொலையும் உள்நாட்டு உணர்ச்சி பிரதிபலிப்பு போன்று இன்றுவரை சித்தரிக்கப்பட்டுள்ளது. இத்தலைவர்களின் மறைவுக்குப் பிறகு, இவர்களைப் போன்ற தனித்து முடிவெடுக்கும் அரசோ, தலைவர்களோ இந்தியாவில், 1989க்குப் பிறகு இன்றுவரை பதவிக்கு வரவில்லை. ஆக நாட்டின் வலிமையான தலைமையென்பதை வெளி சக்திகள், தெளிவாக அமெரிக்கா, இந்தியாவில் இல்லாமல் பார்த்துக் கொண்டது; கொள்கிறது.

இந்திரா காந்தி, ராஜிவ் காந்தி கொலைகளில் தொடர்புடையவராக சந்தேகிக்கப்படுகின்றவர் சுப்பிரமணியசாமி. பதவிக்கு வரக்கூடுமென எதிர்பார்க்கப்படுகின்ற, பெரிய அரசியல் ஞானமற்ற மோடி பிரதமர் பதவியேற்றால் சுப்பிரமணியசாமி நிதி, வெளியுறவு, சட்டம், நீதி துறைகளில் ஒன்றில் இருத்தப்படுவார் என்று எதிர்பார்க்கலாம். மாறாக, மூன்றாவது கூட்டணியோ, காங்கிரஸோ பதவிக்கு வந்தால், அது விரைவிலேயே கவிழ்க்கப்படுமென்பதனையும் கணிக்க முடியும். இந்தச் சூழலில் தமிழகத்தில் இருக்கும் மூன்று அணிகளுமே பாரதிய ஜனதாக் கட்சி அணிகளாகத்தான் பார்க்க முடிகிறது. மூன்றில் ஏதாவது இரண்டு என்ற வகையில்தான் காட்சி மாறக் கூடும். மோடி ஆட்சி அமையுமானால் இந்தியாவில் மதப் போராட்டங்கள் வெடித்து மக்கள் பிரச்சனை பின்னுக்குப் போகும். அன்னிய சக்திகள் தாங்கள் நினைத்ததை மிக எளிதாக இந்தியாவில் நிறைவேற்றுவார்கள். வேறு அரசியல் கட்சிகள் வந்தாலும், அது பலவீனமான அமைப்பாகவே இருக்கும். அதுவும் அமெரிக்காவிற்கு எளிதானதுதான்.

ரஷ்யாவின் கூடங்குளம் அணு உலை மின்சாரத்திற்கானதல்ல. இந்தியாவின் அணு சக்தி துறையில் ரஷ்யாவா, அமெரிக்காவா என்ற வணிகப் போர் அது.

ஆசியாவிலும், ஐரோப்பாவிலும், அமெரிக்காவிற்கு எதிராக தன்னை நிலை நிறுத்தி வரும் ரஷ்யா பக்கம் இந்தியா போய்விடக் கூடாது என்பதில் அமெரிக்கா கவனமாக இருக்கும். 6 லட்சம் கோடிக்கான அமெரிக்கா அணு உலை ஒப்பந்தத்திற்கு போட்டி கூடாது என்பதுதான் இதன் முக்கியத்துவம். இதன் பின்னணியில், தேவயானி மற்றும் சோனியா காந்திக்கான நீதிமன்ற சம்மன் போன்றவைகளை ‘கையை முறுக்கும்’ யுக்தியாகவே பார்க்க முடிகிறது. அதுபோன்றே இலங்கை இனப் பிரச்சனையில், இந்துமாக்கடலில், அமெரிக்கா-சீனா போட்டியில் இந்தியாவைத் தன் பக்கம் வைத்துள்ளது அமெரிக்கா. இதன் விளைவே இலங்கையின் இனப்பிரச்சனையில், அமெரிக்காவே முடிவெடுக்கவும், அதனை தமிழகத்தில் தேர்தல் வாய்ப்பை ஒட்டி மட்டும் முடிவெடுப்பதும், இந்தியாவின் நிலையாகவுள்ளது. உண்மையில் இதனை அமெரிக்காவிடம் தந்துவிட்டு அதன் பின்னே நிற்கிறது இந்தியா. இதன் பின்னணி நெருக்கடி ஏது என்பது தெரியவில்லை. தேவயானி, சோனியா காந்தி பற்றிய அமெரிக்கா உறவு பற்றி ஏதோ என மக்களுக்குத் தெரிவிக்கப்பட்டாலும் இந்த சூழலிலேயே 4000 கோடிக்கான அமெரிக்க ராணுவ தளவாடங்களுக்கு இந்தியா ஒப்பளித்துள்ளதையும் பார்க்க வேண்டும்.

                இந்த பின்னணியில்தான், இத்தேர்தலில் இந்தியாவின் வெளியுறவு, உள்நாட்டு உறவு நிலைகள் குறித்த கொள்கை முடிவுகள் மிக முக்கியத்துவம் வாய்ந்ததாகும். நேருவின் காலத்தைவிட, உறுதியான நிலைப்பாட்டை இந்திராகாந்தி கடைபிடித்தார் என்றுதான் சொல்ல வேண்டும். கச்சத்தீவு விஷயத்தில் கசப்பு இருந்தாலும், இனப் போராட்டம் குறித்து தமிழகம் ஏற்கும் நிலைப்பாடே இருந்தது.

                ராஜிவ் காந்தி காலத்தில், வெளியுறவு ஓரடி முன்னதாகவும், மூன்றடி பின்னதாகவுமான தெளிவற்ற முடிவுகள், அவரது அனுபவமின்மையை வெளிப்படுத்தியது. பொதுத்தன்மையில், பஞ்சாப் லோங்கோவாலுடன் ஒப்பந்தம், போடோ மக்களுடனான ஒப்பந்தம், ஜெயவர்த்தனேவுடனான ஒப்பந்தமென்று, இன்று சொல்லிக் கொள்ள முடியாத முடிவுகளே இருந்தன. ஆனால் 1991ல் மீண்டும் பதவிக்கு வரும் வாய்ப்புள்ள நிலையில், இவர், உள்நாட்டு பிரச்சனைகளிலும், வெளியுறவுக் கொள்கையிலும், தெளிவாக இருப்பார் என்ற கணிப்பு அமெரிக்காவிற்கு இருந்திருக்கிறது.

                கடந்த காலத்தின் நிகழ்வுக் கணக்கில் நாம் புரிந்து கொள்ள முடிந்த விஷயம், மனமுறிவு சிறிதும் இல்லாத நாட்டு மக்களுடனான இணக்கம்தான், உறுதியான வெளியுறவு கொள்கை கடைபிடிக்க முடியும் என்பதாகும். இன்று அது சாத்தியமற்றுப் போய்க் கொண்டிருக்கிறது. இதனை தாராளமயக் கொள்கையும், இந்திய பெரும் தொழில் நிறுவனங்களும் இணைந்து தங்கள் லாபத்திற்காக செய்து கொண்டிருக்கிறார்கள்.

                உள்நாட்டுக் கொள்கையில் மக்களின் இன உணர்வுகளுக்கு முதலிடம் தர வேண்டும். தன் இனமக்களை நம் அரசு காக்கும் என்ற நம்பிக்கையற்றுப் போனால், அரசுடன் அவர்கள் உறவாக இருக்க முடியாது. இதில் காங்கிரஸ் அரசு, காஷ்மீரம், மத்திய இந்தியா, தமிழகம் பகுதிகளின் மக்களை அன்னியப்படுத்திவிட்டது. தமிழகத்தில் மூன்றில் ஒரு பங்கு கூட இல்லாத இலங்கை உறவுக்காக தமிழக மக்களை காங்கிரஸ் அரசு வஞ்சித்து விட்டது. இன ரீதியாக தமிழக மக்களுடன் வேற்றுமை கொண்ட பிஜேபியும் இதனை ஆதரிக்கிறது.

                காஷ்மீரத்திலும், வடகிழக்கு மாநிலங்களிலும், மத்திய இந்தியாவிலும், ராணுவத்தின் அத்துமீறல்கள், மக்களை பாதுகாப்பற்றதாக ஆக்கிவிட்டிருக்கிறது. அத்துடன் பெரிய மனக் காயத்துடனே பஞ்சாப் மாநிலம் மௌனமாக இருக்கிறது என்பதனையும் கணக்கில் கொள்ள வேண்டும்.

                modi-rahul-350அது போன்றே, மத்திய பிரதேசம், சட்டீஸ்கர், ஒரிசா மாநிலங்களில் குவிந்து கிடக்கும் வளங்களைக் கொள்ளையடிக்க இந்தியப்ப் பெருந்தொழில் நிறுவனங்கள், இம் மாநிலங்களில் தங்களுக்கு வசதியான தற்போதைய அரசுகள் பதவியிழக்காமல் பார்த்துக் கொள்கின்றன. இம் மாநிலங்களின் அரசியல் இரு கட்சி அரசியல் என்றாலும் எதிர்கட்சிக்கு வலுவான தலைமை வராமல் செய்கின்றன. இதுவே குஜராத் மாநிலத்திலும் நடந்துள்ளது. இதன் காரணமாக மக்களின் எதிர்ப்பை தெரிவிக்கக் கூட வழியற்று, தங்கள் வளங்களை இந் நிறுவனங்களிடம் இழந்து கொண்டிருக்கின்றனர் இப்பகுதி மக்கள்.

                வளங்கள் குறித்த தெளிவான உறுதியான கொள்கை முடிவுகள் மத்திய இந்தியாவில் நிலைமையைச் சீர் செய்யும்.

                இராணுவத்தின் அத்துமீறல்களுக்கு கடுமையான, நேர்மையான நடவடிக்கை எடுத்தால் தான், காஷ்மீரத்திலும், வடகிழக்கு மாநிலங்களிலும், மக்கள் நம்பிக்கைக்கு அடித்தளமிட முடியும். அத்துடன் இராணுவ ஆட்சியை நீக்கும் முறைக்குத் திரும்ப வேண்டும். இவை இல்லாமல் சாத்தியமான தீர்வைக் கண்டறிய முடியாது. இதே நிலையும் நீண்ட காலம் நீடிக்காது. ஒரு புதிய சந்தர்ப்பம், வேறு மாதிரியான தீர்வைக் கொண்டு வரலாம்.

                இலங்கையை ஒதுக்கிக்தள்ள போதுமான காரணங்கள் இந்தியாவிடம் உள்ளது. இந்த இனப்பிரச்சனையில் ‘தனி ஈழம்’ தான் இந்தியாவின் நலனுக்கும், இந்துமாக் கடலில் அரசின் கட்டுப்பாட்டுக்கும் உதவும்.

                கிரிமியாவை ரஷ்யா அங்கீகரிக்கும் போது, இந்தியா ஈழத்தை அங்கீகரிக்க வேண்டும். பங்களாதேசத்தைப் பிரிக்க எடுத்த முடிவுதான் இலங்கையில் தேவை. இல்லாவிட்டால் இந்தியாவின் வடக்குப் பகுதி என்றுமே தெற்கை வேறுகண்ணோடுதான் பார்க்கிறது என்றாகும்.

                மொழி, இனம், பண்பாடு, வரலாறு எனத் தனித்தன்மையை தமிழகம் இதுவரை பாதுகாத்து வருகிறது. இதன் இனக்காயங்களை என்றுமே ஆறிப்போகாது. இதன் ஒரே மருந்து தனி ஈழம்தான்.

                பொது இந்தியாவில், இந்து முஸ்லீம் மக்களிடையே, வெறுப்பையும், விரோதத்தையும் விதைக்கும் நடவடிக்கைகள் கடுமையாக ஒடுக்கப்பட வேண்டும். எந்த சிறுபான்மையினரும், பெருமையுடன் தன்னை தன் நாட்டு மகனாக காட்டும் நிலை இல்லாவிட்டால், கலவரங்கள் தொடர்கதைதான்.

                நாட்டு மக்களின் நம்பிக்கையைப் பெற்ற அரசுதான், பிறநாடுகள் மத்தியில், மதிப்பைப் பெறமுடியும். வணிகம், தொழில் உறவு எல்லை பிரச்சனைகள், எல்லாவற்றிலும் துணிச்சலான முடிவை எடுக்க முடியும்.

                உலகின் எந்த நாடும், தன் வெளியுறவுக் கொள்கையை, தன் மக்களின் உணர்வுக்காகவும், லாபத்திற்காகவும் மட்டுமே கடைபிடிக்கின்றன. மும்பை 26,11 தாக்குதலில் சம்மந்தப்பட்ட ஹாட்லியை இந்தியாவிடம் ஒப்படைக்க மாட்டோம் என்ற அமெரிக்கா, அத்து மீறி பாகிஸ்தானில் நுழைந்து பின்லேடனைக் கொல்கிறது. கிரிமியா, ரஷ்ய மொழி பேசும் மக்கள் என்பதால் உரிமை கொண்டாடும், ரஷ்யா, இலங்கை விஷயத்தில் ராஜபட்சேவுடன் கை கோர்க்கிறது.

                இந்தியா மட்டுந்தான், காஷ்மீர் பிரச்சனை வருமோ என்பதற்காக, ஈழத்தையும், தமிழகத்தையும் கை கழுவியது. அந்தந்த பிரச்சனைகளைப் பற்றி தனி முடிவுகளை, மக்கள் உணர்வு சார்ந்து தன் நாட்டின் வலிமைக்காக அரசு முடிவெடுக்க வேண்டும். அன்னிய நாட்டு உறவுக்காக உள் நாட்டு மக்களை இழப்பது எத்துணை முட்டாள் தனம். மக்களின் முழு நம்பிக்கையைக் கொண்ட இந்தியா வெளியுறவில் எப்படிப்பட்ட முடிவையும் எடுக்க முடியும்.

                ராமர் கோவில், 370 என்ற நாட்டை மேலும் காயப்படுத்தும் அறிக்கைகள், சிறுபிள்ளைத் தனமானது. இவர்கள், மற்ற மதத்தினரையும் ஒதுக்கி விடுவார்கள். தங்கள் மதத்தினராலும் ஒதுக்கப்பட்டு விடுவார்கள்.

போர்க் கருவிகள், மக்கள் மனதை வெல்லாது.

                நம்பிக்கைகள் தாக்குதலுக்குள்ளாகும் பொழுது வன்முறைதான் வெடிக்கும். இது பிஜேபிக்குத் தெரியும். மோடிக்குத்தான் தெரியாது.

மத்திய – மாநில அரசுகள்

                நம் அரசியல் சட்டம், அதிகாரப் பங்கீட்டை, மூன்று பட்டியலில் வைத்தது. ஒன்று மத்திய அரசுக்கானது, இரண்டாவது மாநில அரசுக்கானது, மூன்றாவது பொதுப் பட்டியல் - இரு அரசுகளுக்குமானது. முன்பு சொன்னது போல, பொதுச் சேவைகள், மக்களுக்கு அரசு செய்ய வேண்டியவைகள் மாநில அரசுக்கும், நாட்டின் பொதுத் தன்மையானவையும், இந்திய நாடாக செயல்பட வேண்டியவைகளும், பாதுகாப்புப் பணியையும், மத்திய அரசுக்கும் ஒதுக்கியது. அதே நேரத்தில் மத்திய மாநில அரசுகள் இணைந்து செயல்பட வேண்டியவை என்பது, விடுதலை பெற்ற நாட்டில், மாநில அரசு மட்டுமே செய்து விட முடியாத, ஆனால் விரைவுபடுத்தப்பட வேண்டியவற்றையே பொதுப் பட்டியலில் வைத்தனர். இதன்படிதான் மின்சாரம், மாநிலங்களுக்கிடையேயான நதிகளில் பெரிய அணைகள் என பல்வேறு அதிகாரப் படிகள் பிரிக்கப்பட்டன.

                நீண்ட காலமாக மாநில அரசுகள், கிராமப் பஞ்சாயத்து தேர்தல்களை முடக்கி வைத்து தங்கள் அதிகாரத்தை, அரசியல் லாபத்திற்காக தக்க வைத்துக் கொண்டனர். மத்திய அரசின் தலையீட்டிற்குப் பிறகே இது உறுதியான தேர்வாக இன்று இருந்து வருகிறது. கிராமப் பஞ்சாயத்துக்கள் தாம் மக்களுடன் அன்றாடம் சந்திக்க முடியும். நிர்வாக நடவடிக்கை மக்களை எளிதில் எட்டிடச் செய்ய முடியும். இதை பொதுவானவொரு சட்டத்தின் மூலம் மத்திய அரசு நிலைநாட்டியது.

                ஆனால் 91ம் ஆண்டிற்குப் பிறகு, மத்திய அரசு, மாநில அரசுகளின் அதிகாரத்தை மத்தியில் குவிக்கச் செய்து வருகிறது. இது மத்திய அரசை மக்களிடையே அறிமுகப்படுத்திக் கொள்ளும் அரசியல் இலாபத்திற்கானது மட்டுமல்ல, தாராளமயக் கொள்கை சேவைப் பகுதிகளில் தனியார் பங்கேற்பை வலியுறுத்துகிறது. கல்வி, சுகாதாரம், தண்ணீர், உணவு என தனது வணிகத்தை பரவலாக்கவும் உடனடி லாபம் சம்பாதிக்கவும், ஒரே இடத்தில் அதிகாரமிருப்பதை விரும்புகிறது. ஓர் அடிமை அரசு போலவே இந்திய அரசியல் அமைப்பை ஒதுக்கிவிட்டு, மத்திய அரசு இந்த அதிகாரக் குவியலைச் செய்கிறது. இதில் பெரிய சோகம் என்னவெனில் அனைத்து மாநில அரசுகளும் இதற்கு உடன்படுகின்றன. அப்படி உடன்படாத நிலையில் மத்திய அரசின் திட்டத்திலான நிதி ஒதுக்கீட்டை மாநில அரசு பெறமுடியாது என்பதாகும். இது அரசியல் சட்டப்படி சரியானதா என்பதனை நீதிமன்றங்களே முடிவு செய்ய வேண்டும். அத்துடன் மாநில அரசு இதனை ஏற்றுக் கொண்டால், நிதியும், பெரிய கான்ட்ராக்டுகளும் சாத்தியமாகும். இது பெரிய ‘அரசியல் முதலீட்டிற்கு’ வழி திறந்துவிடும். இப்படித்தான் நகர்ப்புற வளர்ச்சி திட்டம் போன்றவைகளும், நாம் பயணம் செய்யும் சொகுசு பேருந்துகளும், மெட்ரோ ரயில்களும்.

                இது ஒருவகை, மற்றொருவகையில் ஒழுங்குமுறை ஆணையம் என்ற சித்தாந்தம். இது நிர்வாக இயந்திரம். அந்தந்த சேவைத் துறையில், நீதிமன்ற அதிகாரமும் படைத்தது. மாநில அரசின் கட்டுப்பாட்டில் இல்லாத குட்டி அரசுகள் இவை. சேவைத்துறையில் மக்களுக்கு பதில் சொல்லவோ அல்லது அந்த துறை சார்ந்த எந்த பொறுப்புமோ அற்ற அதிகார மையம். இது ஜனநாயகத்தின் எதிரியாகவே பார்க்கப்பட வேண்டும். 91க்கு முன்னதாக, இது போன்ற ஆணையங்கள், குறிப்பிட்ட பொறுப்பை சுமந்துள்ளவையாக இருக்கின்றன. உதாரணத்திற்கு, ரிசர்வ் பேங்க், தேர்தல் ஆணையம், ஆடிட்டர் ஜெனரல், முதன்மை விழிப்புத்துறை ஆணையர், சர்வீஸ் ஆணையம் போன்றவை. இது போன்ற சுய அதிகாரம் பெற்ற ஆணையங்கள் 40க்கும் குறைவாகவே இருந்தன. 91 ஆண்டிற்குப் பிறகு இன்று 247 ஆணையங்கள் நடைமுறைக்கு வந்துவிட்டன. தொலைத் தொடர்பு, மின்சாரம், எரிசக்தி, நெடுஞ்சாலைத்துறை என வளர்ந்துவிட்டன.

துறை சார்ந்த எந்த பொறுப்பும் அற்ற இது போன்ற ஆணையங்கள், தனியார் பங்கெடுக்கும் சேவைத் துறையில் வளர்ந்துள்ளன. தனியாருடன் கூட்டு சேர்ந்து கொண்டு இவை இன்று அசைக்கமுடியாத ஊழல் பண்ணைகளாகிவிட்டன. இவர்கள்மீது நடவடிக்கையெடுப்பதும் சுலபமல்ல. இவர்களைத் தேர்வு செய்த பின் மாற்றவும் முடியாது. ‘மக்களைக் கேட்டுத்தான்’ என்ற பாவனை வேறு. இது மாநில அரசுகளின் அதிகாரத்தைக் குறைத்து தனியார்கள் தங்கள் ஆட்சியைச் செலுத்த உருவான அமைப்புகள்.

                சேவைத் துறை மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட, மக்களிடம் விளக்கமளிக்கும் கடமை பெற்ற மாநில அரசின் கட்டுப்பாட்டிலேயே இருக்க வேண்டும். இந்த ஆணையங்கள் ஒழிக்கப்பட வேண்டும். ஓய்வு பெற்ற நிர்வாகத்துறையினரே இன்று இந்த ஆணையங்களில் நிரம்பி வழிகின்றனர்.

                அது போன்றே வெளியுறவுக் கொள்கையில் அண்டை நாடுகளுடனான உறவுகள் குறித்து எல்லையோர மாநிலங்கள் கலந்தாலோசிக்கப்பட வேண்டும் என்பது மட்டுமல்ல. அம்மாநில மக்களின் உணர்வுக் கேற்பவே உறவு நிலைகள் வகுக்கப்பட வேண்டும். இது மாநில அரசுகள் மூலம், அம்மாநில மக்களுடனான உறவாகவும் இருக்கும்.

வல்லரசும் - நல்லரசும்

                இந்தியா வல்லரசாகப் போகிறது என்ற கனவை இளைஞர்களிடம் விற்பனை செய்ய்பட்டது. ஐநாவின் பாதுகாப்பு கவுண்சில் நிரந்தர உறுப்பினராக சேரப்போகிறது என்ற ஆசையும் ஊட்டப்பட்டது. இன்று, அமெரிக்காவால் கேலி செய்யப்படும் நாடாக மாறிவிட்டிருக்கிறது. உலக வர்த்தக அமைப்பில்  விவசாயத்தில் ஒப்பந்தம் என்ற வளர்ந்த நாடுகளின் வணிகப் பேராசைக்கு நம் விவசாயிகளை பலியாகி விடாமல் இதில் 2001 ஆண்டிலிருந்து முடிவுகள் தள்ளிப் போயின. வளரும் நாடுகள் என 33 நாடுகளின் கட்டமைப்புக்கு இந்தியா தலைமை தாங்கியது. இதில் சீனாவும் அடக்கம். (12 ஆண்டுகளாக தீர்க்க முடியாத இப்பிரச்சனைக்கு, 33 நாடுகளில் ஒன்றான பிரேசிலைச் சேர்ந்த ஒருவர் தலைவரானவுடன், இந்தியா தனிமைப்படுத்தப்பட்டு 2013 இந்தோனேசியாவின் ‘பாலி’ நகரில் ஒப்பந்தம் ஏற்பட்டுவிட்டது.

                BRICS என பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா, தென்னாப்பிரிக்கா நாடுகள், உலக வங்கி, உலக நிதியத்திற்கு எதிராக 18 மில்லியன் டாலரில், ஓர் வங்கியை ஏற்படுத்தின. திருப்பியடித்த அமெரிக்கா, நிதித்துறையில் முதலீட்டை திரும்பப் பெற்றதன் மூலம், ரூபாய் மதிப்பு மட்டுமல்ல, இந்நாடுகளில் சீனாவைத் தவிர்த்த பிற நாடுகளின் நாணய மதிப்பும் சரிந்தது.

                இந்தியா வலிமை பொருந்திய நாடாக, தன்னாட்டு மக்களின் அங்கீகாரத்தையே பெற வேண்டியிருக்கிறது. 118 கோடி மக்களில், ஒரு மக்கள் தலைவரை நாம் அடையாளம் காண முடியவில்லை.

                வல்லரசு கனவு வேண்டாம். நல்லரசு கனவே வேண்டும். பிறநாட்டு மக்களை வஞ்சிக்க வேண்டாம். மனித நேயத்துடனான சமத்துவம் வேண்டும். இதுவே அரசின் இலட்சிய முத்திரையாக இருக்க வேண்டும்.

- சா.காந்தி (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)

Pin It