மரம் வேண்டுமா? குடை வேண்டுமா? மற்றும் எதுவேண்டும் சொல் மனமே! (மேற்கண்ட வரிகளை அவைகளுக்குரிய மெட்டில் இசையுடன் பாடிக் கொள்க!)
இம்மாதம் 30-ந் தேதியன்று சென்னைக் கோட்டையில் ஒரு கூட்டம்! (பொதுக் கூட்டமல்ல! அழைக்கப்பட்டவர்களின் கூட்டம்.)
அடுத்துவரும் பொதுத் தேர்தலில் கட்சிகளின் சின்னங்களை நிர்ணயிப்பதற்காகவும், அது பற்றிய இதர விஷயங்களை ஆராயவும் அரசியல் கட்சிப் பிரதிநிதிகளின் கூட்டம் ஒன்று நடைபெறுமாம், கனம் கோபால் ரெட்டியவர்கள் இதற்குத் தலைமை வகிப்பாராம்!
தேர்தலுக்கு நிற்காத திராவிடர் கழகத்தின் பொதுச் செயலாளருக்குங்கூட அழைப்பு வந்திருக்கிறது!
“உம் கட்சிக்கு எந்தச் சின்னம் வேண்டுமோ, அதைக் கூறுக”, என்று அழைத்திருக்கிறார்கள். தேர்தல் அதிகாரிகள்!
“மரம், கை, பூ, தீப்பந்தம், தானியக் கதிர், வண்டி, படகு, ஏர், பறவை, விளக்கு, குடை, தராசு, மண்வெட்டி, ஹுக்கா, குடம், யானை, ஒட்டகம், குதிரை.
- இந்த 18 சின்னங்களில் ஒவ்வொரு கட்சியும் தனக்குத் தேவையானதை எடுத்துக் கொள்ளலாமாம் - அதாவது தேர்தலுக்காக!
முன்பு வர்ணப் பெட்டி வைத்திருந்தார்களல்லவா? அதில் சில சிக்கல்கள் இருந்தனவாம்! சில வர்ணங்கள் பல மக்களுக்குச் சரியாகத் தெரிவதில்லையாம்! இந்தத் தேர்தலில் அதிகமான அபேட்சகர்கள் நிற்பார்களாதலால், அத்தனை வர்ணங்களும் வர்ணக்கோடுகளும் கிடைப்பது கஷ்டமாம்!
அதற்காகத்தான் இந்தப் புதுமுறை! அதாவது மக்களுக்குப் படிப்பில்லாத படியால், ஒவ்வொரு வேட்பாளரின் பெட்டியிலும் அந்தந்தச் சின்னம் படமாக ஒட்டப்பட்டிருக்கும். அதன்படி வோட்டர்கள் தங்களுக்கு விருப்பமான பெட்டியில் வோட்டுப் போடலாம்.
உதாரணமாக, காங்கிரஸ் கட்சி வண்டி என்ற சின்னத்தை எடுத்துக் கொள்கிற தென்று வைத்துக்கொள்வோம்! அந்தக் கட்சியானது, “வண்டிக்கு வோட் போடுங்கள்” என்றுதான் பிரசாரஞ் செய்யும்.
அதன்படியே வோட்டர்கள் உள்ளே சென்று வண்டியில் வோட்டுச் சீட்டைப் போடுவது பொருந்துமா அல்லது மண்ணைப் போடுவது பொருந்துமா என்பதை முடிவுசெய்து பொருத்தமான ஒன்றைப் போட்டுவிட்டு வரலாம்!
“மஞ்சள் பெட்டியில் வோட்டுப் போடுங்கள்” என்று முன்பு கேட்டார்கள்! மஞ்சள் வெளுத்துப்போய்விட்டபடியால், இப்போது கலர் முறையையே மாற்றி விட்டார்கள்!
“மரத்துக்கு வோட்டுப் போடு!”
“தீவட்டிக்கு (தீப்பந்தம்) வோட்டுப் போடு!”
- மேற்படி சின்னங்களில் இன்றியமையாத அரிவாள் இல்லாத காரணம் எனக்குத் தெரியவில்லை - “அரிவாள் - சம்மட்டி” நினைவு வந்து விடும் என்ற காரணமோ, என்னவோ?
“காங்கிரஸ் பெயரால் கழுதை நின்றாலும் வோட்டுப் போடுங்கள்”, என்று அந்தக் காலத்தில் அடிக்கடி கூறிவந்த ஒரு விலங்கை இச்சமயம் காங்கிரஸ் ஆட்சியினர் கைவிட்டுவிட்டது நன்றிகெட்ட செயலாகும்!
ஆனால் ‘மரம்’ ஒரு சின்னமாக இருப்பது அதன் மந்திரியான முன்ஷிக்கு மகிழ்ச்சி தரும்! சர்க்கார் தந்திருக்கின்ற வரிசையில் முதலில் மரமும் அடுத்தபடியாக கையும் இருப்பதனால் காங்கிரஸ் உறுப்பினர் கை காட்டி மரங்களாக இருப்பதைச் சர்க்கார் அதிகாரிகள் ஜாடையாகக் காட்டிப் பழி தீர்த்துக் கொண்டிருக்கிறார்கள் என்றே கருத வேண்டியிருக்கிறது! இந்தப் பட்டியலிலுள்ள -
1. விளக்கு 2. ஹூக்கா ஆகிய இரண்டும் வெளி நாட்டுச் சரக்குகள்!
“லாண்டர்ன்” என்று இங்கிலீஷில் இருப்பதானால், குத்துவிளக்காகவோ அகல் விளக்காகவோ இருக்காது! ‘ஹூக்கா’ வட இந்தியாவுக்குச் சொந்தமானது! ‘சுருட்டு’ ஒரு சின்னமாக இருந்திருந்தால் சுருட்டுத் தொழிலாளர்களின் வோட்டுகளில் இரண்டொன்றைப் பறித்துப் பார்க்க வழி ஏற்படும்!
எந்தச் சின்னத்தை எந்தக் கட்சி எடுத்துக்கொண்டாலுஞ் சரி; சின்னத்துக்காக யாரும் வோட் தரப் போவதில்லை!
உதாரணமாக, காங்கிரஸ் கட்சி ‘யானை’ என்ற சின்னத்தை எடுத்துக் கொண்டு தான் பார்க்கட்டுமே! அதற்காகவா வோட் வரப் போகிறது? வோட்டர்கள் அத்தனை பேரும் பல கட்டெறும்புகளாக ஆகி அதன் காதுக்குள் புகுந்து கொள்வார்கள்!
என்ன நடக்கும்? “அநாதை ரட்சகா! ஆபத் பாந்தவா! கோட்சே சம்ஹார ப்ரீதி குணசீலா! என்னால் சகிக்க முடிய வில்லையடா! தலை சுற்றுகிறதப்பா! அடியோனை ஆட்கொள்வாயடா?”
- என்று அலறுவதைத் தவிர யானையினால் என்ன முடியும்? காதுக் குள்ளே புகுந்த கட்டெறும்புகள் யானை மீது பழி தீர்த்துக் கொள்ளாமலா வெளியே வரும்?
- குத்தூசி குருசாமி (22-6-51)
நன்றி: வாலாசா வல்லவன்