இந்தியாவில் உள்ள குழந்தைகளின் எண்ணிக்கை சுமார் 22 கோடியாகும். இதில் 12 கோடி குழந்தைகளால் மட்டுமே பள்ளி செல்ல முடிகிறது. இந்த 12 கோடி குழந்தைகளில் பள்ளிப் படிப்பை முழுவதுமாக முடிப்பவர்களின் எண்ணிக்கை 3 கோடிக்கும் குறைவாகும். 2005-ல் இந்தியாவில் உள்ள தொடக்கப் பள்ளிகளின் எண்ணிக்கை சுமார் 6 லட்சமாகும். ஆனால், அறியாமை இருள் நீக்கிட மக்கள் தொகை வளர்ச்சிக்கேற்ப, பொருளாதார, கலாச்சார, பண்பாடு வளர்ச்சிக்கேற்ப கல்விக் கூடங்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டிருக்குமானால் குறைந்தபட்சம் 20 லட்சம் தொடக்கப் பள்ளிகள் தற்போது செயல்பட்டுக் கொண்டிருக்க வேண்டும். இந்தியாவில் 10 கோடி குழந்தைத் தொழிலாளர்கள் உள்ளனர். அதில் 6.5 கோடி குழந்தைகள் பள்ளிக்கூடங்களையே எட்டிப்பார்க்க முடியாத அவலமான நிலையில் உள்ளனர். இதனால் கல்வி ஏழைகளுக்கு எட்டாக் கனியாக உள்ளது.

முழுமையான கல்வி பெறுவதில் பிரச்சனைகள்:

                தமிழகத்தில் நிரப்ப்படாத ஆசிரியர்களின் காலிப் பணியிடங்கள் ஒரு லட்சத்திற்கு மேல் உள்ளது. இதனால், கல்விச் சூழல் மிகவும் சீர்கேடு அடைந்துள்ளது. தமிழகத்தில் சுமார் 1500 பள்ளிகள் இன்றுவரை ஓராசிரியர் பள்ளிகளாகவே உள்ளது. பெருகிவரும் மாணவர்களின் எண்ணிக்கைக்கேற்ப ஆசிரியர்கள் நியமனம் செய்யப்படாமல், பற்றாக்குறை காரணமாக மாணவர்களின் கல்வி பாதிக்கப்படுகிறது.

                students 339தமிழகத்தில் ஏழை, எளிய குடும்பங்களைச் சேர்ந்த 70 லட்சம் மாணவர்கள் அரசு கல்விக் கூடங்களையே நம்பியுள்ளனர். தமிழக அரசு அளிக்கும் புள்ளிவிவரப்படி சுமார் 16 சதவீதம் மாணவர்கள் 5ம் வகுப்பு முடிப்பதற்குள்ளாகவே பள்ளிக் கல்வியை பாதியிலேயே விட்டுவிடுகின்றனர். 5 முதல் 12 ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களில் சுமார் 50 சதவிதத்திற்கும் மேற்பட்டோர் பள்ளிப் படிப்பை தொடர முடியாமல் இடையிலேயே நின்று விடுகின்றனர். +2 முடித்த மாணவர்களில் 66 சதவீதம் பேர் கல்லூரிக்குச் சென்று கல்வி பயில முடியாத நிலை உள்ளது. அதற்கு முக்கிய காரணங்கள் ஆங்கில மொழிக் கல்வி வழி படித்து வரும் மாணவர்கள்தான் தொழில் கல்லூரிகளிலும், மருத்துவக் கல்லூரிகளிலும் அதிக வாய்ப்பை பெறுகின்றனர். 80 சதவீதம்பேர் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயின்ற மாணவர்களால் 20 சதவீதம் இடங்களையே பெற முடிகிறது. 80 சதவீதம் இடங்களை தனியார் மெட்டிக்குலேசன் பள்ளிகளில் படித்த மாணவர்கள் பெற்றுவிடுகின்றனர்.

கல்விக்கான நிதி - செலவா?

                இளைய தலைமுறையினருக்கு முறையான கல்வி அளிக்க செலவளிக்கும் நிதி என்பது நாட்டின் வருங்கால முன்னேற்றத்திற்கான முதலீடேயன்றி வேறல்ல என்பது உலக நாடுகளின் கருத்து. ஆனால், இந்தியாவில் கல்விக்காக 3.4 சதவீதம் மட்டுமே நிதி ஒதுக்கப்படுகிறது. ஆனால், இராணுவத்திற்கு 30 சதவீதத்திற்கு மேல் நிதி நிலை அறிக்கையில் நிதி ஒதுக்கப்படுகிறது. இந்தியாவில் உள்ள மிக முக்கிய பிரமுகர்கள், மிக மிக முக்கிய பிரமுகர்கள் ஆகியோரை பாதுகாக்க ஒதுக்கும் நிதியைவிட கல்விக்கு ஒதுக்கும் நிதி மிகவும் குறைவானதாகும். நடுவண் அரசு கல்விக்கு 10 சதவீதமும், மாநில அரசு 30 சதவீதமும் கல்விக்கு நிதிநிலை அறிக்கையில் நிதி ஒதுக்கிட வேண்டும் என தொடர்ந்து கல்வியாளர்கள் வற்புறுத்தி வருகிறார்கள். அமெரிக்கா, ஜப்பான் போன்ற நாடுகளில் உள்ள அரசு கல்விக்காக அதிகமான நிதியை ஒதுக்கீடு செய்து கல்வி வளர்ச்சியை ஊக்குவித்து வருகின்றன.

                அமெரிக்கா போன்ற மிகவும் வளர்ந்த நாடுகளில் கூட மாணவர்களின் முழு படிப்புச் செலவுகளையும் அரசே ஏற்றுக் கொள்கிறது. அதேபோல் இந்தியாவில் மாணவர்களின் முழு படிப்புச் செலவினையும் அரசே ஏற்றுக்கொள்ள வேண்டும். நமது நாட்டின் அரசியலமைப்புச் சட்டத்தில் 45 வது பிரிவில் 1960க்குள் 14 வயதுவரை உள்ள அனைவருக்கும் கட்டாய, இலவசக் கல்வி அளிக்கப்படும் என உத்தரவாதம் கொடுக்கப்பட்டது. ஆனால், சுமார் 60 ஆண்டுகள் ஆகியும்கூட இன்றுவரை அரசியல் அமைப்புச் சட்டத்தின் உத்தரவாதம் நிறைவேற்றப்படவில்லை.

                அரசுப் பள்ளிகளில் படித்துவரும் மாணவர்களுக்கு உயர்கல்வியில் தனியாக இட ஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்து வருகிறது. அரசுக் கல்லூரிகளில் கல்விக் கட்டணங்கள் அதிக அளவு உயர்த்தப்பட்டதால் ஏழை, நடுத்தரக் குடும்பங்களைச் சேர்ந்த கிராமப்புற மாணவர்கள் கடுமையான பாதிப்புக்கு உள்ளாக்கப்பட்டுள்ளனர். 1980க்குப் பின்னர் அரசு புதியக் கல்லூரிகளை ஆரம்பிப்பதில் அதிக அளவு அக்கரை காட்டவில்லை. இதனால் அனைவரும் உயர்க் கல்வி பெற முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, நடுவண் அரசும், மாநில அரசும் கட்டாயமாக, இலவசமாக பள்ளி முதல் கல்லூரிவரையிலான கல்வி அனைவருக்கும் கிடைக்க உத்தரவாதம் ஏற்படுத்தித் தரவேண்டும்.

தனியார்மயமாகும் கல்வி

                கடந்த 35 ஆண்டுகளாக தமிழகம் தனியார் கல்வி நிறுவனங்களின் வளர்ச்சியில் இந்தியாவில் முதலிடம் பெற்றுள்ளது. கல்விக் கூடம் ஆரம்பிப்பது, “அதிக முதலீடு இல்லாத வியாபாரம்” என்ற நிலை ஏற்பட்டு கல்வி வியாபாரிகள் வளர்ந்துள்ளனர். கல்வித் தகுதியில்லாத கல்லாப்பெட்டிகாரர்களும், கறுப்புப் பணக்காரர்களும், கல்வித் தகுதி கொண்ட கல்வி வியாபாரிகளும் வளர்ந்துள்ளனர். ஓரளவு முதலீடு செய்ய நிதி, அரசியல் செல்வாக்கு, மாணவர்களின் பெற்றோர்களிடம் எந்தெந்த வகைகளில் நிதி வசூலிக்கலாம் என்ற வித்தை, படித்த ஆண், பெண் ஆசிரியர்களை குறைந்த ஊதியத்திற்கு பணி அமர்த்தி தங்கள் விருப்பப்படி வேலை வாங்கும் சாதுரியம் ஆகியவற்றைக் கொண்டவர்கள் கோடிக்கணக்கில் பணம் சம்பாதிக்கும் தொழிலாக கல்வி நிறுவனங்கள் நடத்துவதை நாம் காணமுடிகிறது.

                நன்கொடைகள் என்ற பெயரில் லடசக்கணக்கில் வசூலிப்பதுடன், கட்டிட நிதி, வளாக வளர்ச்சி நிதி, நூலக வளர்ச்சி நிதி எனப் பல வழிகளிலும் தனியார் கல்வி நிலையங்களில் பணம் வசூல் செய்யப்படுகிறது.

                தனியார் கல்லூரிகளின் இடங்கள் முறையாக நிரப்பப்படுவதை கண்காணிக்கவும், நெறிப்படுத்தவும் நீதிபதி சுப்ரமணியன் குழுவும், தனியார் கல்லூரிகளில் கட்டணத்தை முறைபடுத்தி, நெறிப்படுத்தி கண்காணிக்க இராமன் குழுவும் அமைக்கப்பட்டது. அதற்கு மேலும், உச்சநீதிமன்ற நீதிபதி வி.என்.கரே தலைமையிலான அரசியல் சட்ட அமர்வுக் குழுவும் அமைக்கப்பட்டது. ஆனால், இவைகளின் பரிந்துரைகளை நடுவண் அரசும், மாநில அரசும் முறையாக அமல்படுத்த உரிய நடவடிக்கைகள் எடுக்கவில்லை என்பது வேதனை தருவதாகும்.

                தமிழக தனியார் கல்வி நிறுவனங்கள் குறித்து ஆய்வு மேற்கொண்ட சிட்டிபாபு குழு தனது அறிக்கையில், 67 சதவீத தனியார் கல்வி நிறுவனங்கள் அடிப்படை வசதிகளின்றி மிகவும் மோசமான நிலையில் உள்ளது எனவும், அதனால் தேர்ச்சி விகிதம் குறைவாக உள்ளது எனவும் கூறியுள்ளது.

                தனியார் கல்வி நிறுவனங்கள் மீது நடுவண் அரசு மற்றும் மாநில அரசு, பல்கலைக் கழகங்கள் ஆகியவற்றின் கண்காணிப்பு மிக அவசியமானதாகும். மாணவர்களுக்கு வகுப்பு நடத்தும் ஆசிரியர்களின் கல்வி தகுதி நிர்ணயம் செய்யப்பட வேண்டும். தனியார் கல்வி நிறுவனங்களின் ஆசிரியர்களுக்கு குறைந்தபட்ச ஊதியம், ஆண்டு ஊதிய உயர்வு, அதற்கு மேலும் அவர்களுக்கு பணிப்பாதுகாப்பும் அளிக்கப்பட வேண்டும்.

                மாணவர்களுக்கான பாடத் திட்டங்களை உருவாக்குவதில் சமூக அக்கரையுள்ள ஆசிரியர்களின் பங்களிப்பு போதுமானதாக இருக்க வேண்டும். மேலும், மக்களின் மண் சார்ந்த வாழ்க்கை முறைகளோடு தொடர்பு கொண்டதாகவும், மாணவர்களிடையே சுய சிந்தனை, கற்பனைத் திறன், செயல் ஆற்றல் போன்றவற்றை வளர்க்கும் திறன் உடையதாக பாடத் திட்டங்கள் வகுக்கப்பட வேண்டும்.

                மருத்துவக் கல்லூரியில் ஒரு இடம் ரூபாய் 20 லட்சம் முதல் 25 லட்சம் வரை விலைபோய்க் கொண்டிருக்கிறது. இது தவிர, பல கட்டணங்கள் உண்டு. தமிழக மருத்துவக் கல்லூரி மாணவர்களின் தொடர் போராட்டங்களின் விளைவாக தனியார் மருத்துவக் கல்லூரிகள் திறக்கப்படுவது கட்டுப்பாட்டுக்குள் உள்ளது. தமிழகத்தில் 5 தனியார் மருத்துவக் கல்லூரிகள் உள்ளது. அரசு மருத்துவக் கல்லூரிகள் 11 உள்ளது. ஏராளமான மருத்துவ மேதைகள், நிபுணர்கள், அர்ப்பணிப்புள்ள, திறமையான மருத்துவர்களை இந்த சமூகத்திற்கு கொடுத்தது அரசு மருத்துவக் கல்லூரிகளே என்பது நாடறிந்த உண்மையாகும். அரசின் நிதி ஒதுக்கீடு குறைக்கப்பட்டதாலும், அடிப்படை வசதிகளை செய்து கொடுக்காததாலும் மருத்துவக் கல்வி மிகவும் பாதிப்படைந்து வருகிறது. அரசு கூடுதலாக மருத்துவக் கல்லூரிகனை திறக்கவும், கூடுதலாக நிதி ஒதுக்கீடு செய்யவும் உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டியது காலத்தின் கட்டாயம்.

பல்கலைக் கழகங்கள் - குளறுபடிகள்

                தமிழகத்தில் 17 பல்கலைக் கழகங்கள் உள்ளன. பல்கலைக் கழகங்களுக்காக, பல்கலைக் கழக மானியக் குழுவால் ஒதுக்கப்படும் நிதி படிப்படியாகக் குறைக்கப்பட்டு வருகிறது. பேராசிரியர்களின் பற்றாக்குறை, காலியாக உள்ள பேராசிரியர்கள் பணியிடங்கள் நிரப்பப்படாமை, ஆய்வக வசதிகளை மேம்படுத்தாமை, நூலக வசதிகளை அதிகபடுத்தாத நிலை, வகுப்புகள் நடத்த இடப்பற்றாக்குறை ஆகியவைகள் தீர்க்கப்படாமல் தொடர்கதையாக உள்ளது. மேலும், வளர்ந்து வரும் சூழலுக்கேற்ப புதிய பாடத் திட்டங்களின் அடிப்படையில் புதிய பாடப் பிரிவுகள் துவங்குவதில் அக்கரையின்மை, பல்கலைக் கழக ஆட்சி மன்றக் குழு மற்றும் ஆளுகைக் குழு போன்றவற்றில் நிலவும் குழு மனப்பான்மை, அரசியல் தலையீடு ஆகியவற்றாலும் பல்கலைக் கழகங்களின் செயல்பாடுகள் தரம் குறைந்து வருகிறது.

                பல்கலைக் கழகங்களுக்கு கீழுள்ள கல்லூரிகளை கட்டுப்படுத்தி ஒழுங்குபடுத்தவும், முறைகேடுகளை கண்டறிந்து தண்டிக்கவும் அதிகாரம் அளிக்கப்பட வேண்டும். தனியார் கல்லூரிகளை ஒழுங்கமைக்க அதிகாரம் வழங்கப்பட வேண்டும். மேலும், போதுமான கல்வித்துறை அனுபவமோ, தகுதியோ, சாதனைகளோ எதுவுமில்லாத கல்லூரிகளுக்கு நிகர்நிலைப் பல்கலைக் கழக தகுதி வழங்குவது மிகவும் அதிர்ச்சியளிப்பதாகவும், வேதனை தருவதாகவும் உள்ளதென கல்வியாளர்கள் கருதுகின்றனர். அரசின் கண்காணிப்பிலிருந்தும், கட்டுப்பாட்டிலிருந்தும், அண்ணா பல்கலைக் கழக கண்காணிப்பிலிருந்தும் தப்பிப்பதற்கு குறுக்கு வழியாக நிகர்நிலைப் பல்கலைக் கழக தகுதி வழங்கப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. நிகர்நிலைப் பல்கலைக் கழகங்கள் வழிகாட்டுதல் இல்லாமலும், கண்காணிப்பு இல்லாமலும் சுதந்ரிரமாக வசூல் வேட்டை நடத்தி பணம் சம்பாதிக்க வழி ஏற்படுத்தப்பட்டுள்ளது என்பது கண்கூடான உண்மையாகும்.

                கல்விக்கான மானியத்தையும், நிதி ஒதுக்கீட்டையும் குறைத்திட வேண்டும் எனவும், கல்வி அளிக்க வேண்டியது அரசின் பொறுப்பல்ல எனவும், மாணவர்களே கல்விச் செலவை ஏற்கவேண்டும் என்பது போன்ற மக்கள் விரோதமான ஆலோசனைகளையும் உலக வங்கி அளித்து வருகிறது.

                93 வது அரசியல் அமைப்புச் சட்ட திருத்தத்தின்படி கல்வி அடிப்படை உரிமைகள் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளது. இச்சட்டத்திருத்தத்தை நடுவண் அரசு முழுமையாக செயல்படுத்திட நடவடிக்கை எடுக்க வேண்டும்.

                நடுவண் அரசில் கல்வித்துறை மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சகத்துடன் இணைக்கப்பட்டுள்ளது. கல்விக்கென தனி அமைச்சகம் ஏற்படுத்தி கல்வி வளர்ச்சியில் கவனம் செலுத்த வேண்டியது அவசியமானதாகும்.

                தமிழகத்தில் உயர்கல்வித் துறையோடு பள்ளிக் கல்வித் துறை இணைந்து செயல்படுவதற்கான தெளிவான கொள்கைகள், நடைமுறைகள் உருவாக்கப்பட வேண்டும்.

                மக்கள் பங்கெடுப்பு, கண்காணிப்பு கல்வியில் இருக்க வேண்டும். தொடக்கக் கல்வி ஏழைகளின் உரிமையாக இருக்க வேண்டும். அனைவருக்கும் இலவசக் கல்வி என்பது கட்டாய நடைமுறையாக இருக்க வேண்டும். கட்டாயக் கட்டணம் வசூலிப்பது தண்டனைக்குறிய குற்றமாக அறிவிக்க வேண்டும். ஆரம்பக் கல்வி அவரவர் தாய் மொழியில் கற்பிக்கப்பட வேண்டும். மதச்சார்பற்ற கல்வி அளிக்கப்பட வேண்டும். கல்விக்காக செலவிடப்படும் நிதி நாட்டின் வளர்ச்சிக்கான மூலதனம் என்பதை நடுவண் அரசும், மாநில அரசும் உணர வேண்டும்.

- பி.தயாளன்

Pin It