தேர்தல் அறிக்கை, பாராளுமன்றத்திற்கான தேர்தலாயின், முக்கியமாக கொள்கைகளைப் பற்றிய விவாதமாக இருக்க வேண்டும். பொருளாதாரக் கொள்கை, வெளியுறவுக் கொள்கை, பாதுகாப்பு பற்றிய கொள்கை முடிவுகள், கடைபிடிக்கப்பட்டவையும், அதனைப் பற்றிய விவாதமும், மாற்றுக் கொள்கை வரைவுகளும் மக்கள் முன் வைக்கப்பட்டு, விவாதிக்கப்பட்டு தேர்தல் நடத்த வேண்டும். மக்கள் ஓட்டளிக்கும் கொள்கைகளே, அடுத்த ஐந்தாண்டுகளுக்கு கடைப்பிடிக்க மக்கள் அளித்த தீர்ப்பாக கொள்ளப்படும். இதுவே தேர்தல் குறித்து ஜனநாயகம் எதிர்பார்க்கும் மரபாகும்.

                நாடாளுமன்றம், சட்டங்கள் செய்யும் இடமாகையால், கொள்கை முடிவுகளுக்கு சமுதாயத்தின் ஒப்பளிப்பு அவசியமாகும்.

                நமது அரசியல் அமைப்புச் சட்டம், நாட்டின் பொது அதிகாரத்தினை மத்திய அரசுக்கும், மக்களின் அன்றாட மற்றும் அடிப்படை தேவைகளைக் குறித்த அதிகாரத்தினை மாநிலங்களுக்கும் பிரித்தளித்திருக்கிறது என்று நாம், பொதுவாக புரிந்து கொள்ளலாம். அவைகளை பட்டியலில் சிலவற்றை நாம் பகுத்துப் பார்த்தால் இது எளிதாக்கிவிடும்.

                கல்வி, சுகாதாரம், உணவு, விவசாயம், தண்ணீர், பாசனம், சட்டம் ஒழுங்கு, மாநிலங்களுக்கானவை.

                ராணுவம், அன்னிய உறவு, நாட்டின் நாணயம், வங்கிகள், வளங்கள், எல்லைகள், நீதி, சட்டம் இவைகளை மத்திய அரசுக்கானவை.

                india poverty 340ஆக சட்டமன்றத் தேர்தல் அம்மாநிலத்தின் சமுதாய சேவை குறித்து பெரிதும் விவாதத்திற்குள்ளாகும். பரிதாபமாக, நமது பாராளுமன்றத் தேர்தல் விவாதம், தனி நபர்களைப் பற்றிய விமரிச்சனமாகவே ஆரம்பம் முதலே இருந்து வருகிறது. ஊழல் என்ற ஒரு பொருள் மட்டுமே, பொதுத்தன்மையுடைய விவாதமாக இருக்கிறது என்றால், அது எதிரணியினருக்குச் சாதகமானதாக இருக்கின்ற காரணத்தினாலேயே கையாளப்படுகிறதே தவிர கொள்கை ரிதியாக அல்ல. ஏனெனில், ஊழல் பற்றிப் பெரிதாக பேசுபவர்கள், அதனை ஒழிக்க, அல்லது கட்டுப்படுத்திட எந்த செயல் திட்டத்தினையும் முன்வைக்கவில்லை என்பதனை நாம் உன்னிப்பாக கவனிக்க வேண்டும்.

                ஆக, ஆளும் கட்சியின் ஊழலை விமர்ச்சிப்பவர்களின் கோரிக்கையெல்லாம், அவர்கள் மட்டுமா ஆதாயம் அடைய வேண்டும் என்பது பார்வையில், தங்களுக்கும் அந்த வாய்ப்பை கோருகின்றனர் என்று தான் கருதமுடியும்.

                ஊழல் செய்வதற்கான வாய்ப்பை பங்கிட்டுத் தாருங்கள் என்ற வாதம் மக்களை எவ்வளவு ஏமாளியாக அரசியல் கட்சிகள் பார்க்கின்றன என்பது புலனாகும். இது கற்பனையல்ல, இதன் பரிணாமத்தை இன்று தேர்தல் ஆணையம் செய்து வரும் விளம்பரங்களைப் பார்த்தால் புரிந்து கொள்ள முடியும், என்ன சொல்லுகிறது தேர்தல் ஆணையம்? வாக்களிக்க பணம் தருவதும், வாங்குவதும் குற்றம். எல்லோரும் வாக்களிக்க வேண்டும். இது உங்கள் ஜனநாயகக் கடமை. யாரையும் தெரிவு செய்ய விரும்பாவிட்டால் அதனையும் பதிவு செய்யலாம். அதுமட்டுமல்ல, கணக்கில் வராத பல கோடிகள் தேர்தல் நேரத்தில் பிடிபடுகின்றன. இது துளியாகத் தான் இருக்கும். வெள்ளம் முன்னதாக பாய்ந்து தேங்கிக் கிடக்கிறது என்பது புரிந்து கொள்ளமுடியும்.

                இது ஊழல் இல்லையா?

பணத்திற்காக வாக்களிக்காதே என்பது எவ்வளவு மோசமான புரிதலை மக்கள் முன்வைக்கிறது. மக்களை பணத்திற்காக வாக்களிக்காதே என்ற சொல்லும் பொழுது, அவர்கள் எதற்காக வாக்களிக்கிறார்கள் என்று தெரியாமலேயே வாக்களித்து வந்திருக்கிறார்கள் என்பது தான் பொருளாகிறது. வாக்குக்கான பணமோ, பொருளோ, சாதிப் பற்றோ, மதப் பற்றோ, முடிவு செய்யுமானால் திரும்பவும் ஊழலுக்கும், சமுதாய ஒழுங்கு சீரழிவுக்குமான ஒட்டளிப்பாகத்தானே இது முடியும்.

                தேர்தல் அறிக்கை என ஓர் அரசியல் கட்சி முன் வைக்குமானால் அதுதான், அக்கட்சியின் கொள்கை அறிவிப்பாகவும், விவாதத்திற்குரிய கொள்கையாகவும், கடைபிடிக்கப்பட்ட கொள்கைகளைப் பற்றிய விமர்சனமாகவும் இருக்க வேண்டும். ஆனால் களத்திலிருக்கும் எதிர்க் கட்சி, நாட்டின் ஒரு பகுதியில் தேர்தல் நடக்கும் நேரத்தில் தான், தனது அறிக்கையை வெளியிட முடிந்திருக்கிறது. ஆனால் தேர்தலுக்கு பத்து மாதங்களுக்கு முன்பாகவே, நமது அரசியல் சட்ட நடைமுறைகளுக்கு அப்பால் 'பிரதமரை' முன்மொழிந்து விட்டது.

                இது வரையில் ஆண்ட கட்சியிலோ, மக்களைச் சந்திக்காத, மக்களால் ஒரு நகராட்சி வார்டில் கூட தேர்வு செய்யப்படாத ஒருவர்தான், இந்நாட்டின் பிரதமராக பத்தாண்டு காலம் இருந்திருக்கிறார். இன்று மக்களை வருந்தி, வருந்தி வாக்களிக்க கோரும்பொழுது, இவர் ஒருமுறை வாக்களிக்காமலேயே இருந்திருக்கிறார் என்ற உண்மையையும் நாம் கருத்தில் கொள்ள வேண்டும்.

                பாராளுமன்ற ஜனநாயகத்தின் நான்காவது தூண் என்றுரைக்கப்படும், செய்தி ஊடகங்கள், இந்த அரசியல் கடமை தவறவிடப்பட்டிருப்பதைச் சுட்டிக்காட்டி மக்களை விழிப்படைய வைத்திருக்க வேண்டும். பரிதாபமாக, கணிப்புகளையும், பரபரப்புகளையும், தங்கள் விளம்பரங்களுக்கான தாளவரிசைகளையும் தட்டுகின்றன. இவர்களும் அரசியல் கட்சிகள் பண்பாட்டில் ஒன்றிப் போய்விட்டன.

                முன்பு எந்த காலத்தையும்விட படுமோசமான எதிர்காலத்தை நோக்கி நிற்கின்றோம் என்பதே நமது நிலைப்பாடும் கவலை சூழ்ந்த அச்சமும். இதில் எம் கடமையை ஆற்றவே இந்த மாற்றுத்தேர்தல் அறிக்கையாக, முன் வைக்கின்றோம்.

காலம் தேர்தலைக் கடந்து போனாலும், கொள்கை ரீதியில் நடத்தப்படாமல், அதிகாரத்திற்கான போட்டியென நடத்தப்பட்ட தேர்தலில், கொள்கைமுடிவுகளை வலியுறுத்தும் உரிமை மக்களுக்குண்டு.

                70 சதமக்கள் ஒருவேளை உணவுகூட இல்லாது இருக்கும் நம் நாட்டில் மக்கள் தொகையும் மிக அதிகம். மிகத் தெளிவான கொள்கையும் மிக்க ஈடுபாட்டுடன், செயல்படுத்தும் அரசும் இருந்தால் மட்டுமே, நலம் எதிர்காலம் வளமையாக இல்லாவிட்டாலும் குறைந்தபட்ச நலமாகவாவது இருக்கும்.

                ஒரு பொருள் அறிந்த விவாதத்தில் நாம் பலமுறை அக்கறையற்று வேடிக்கையாகவே தள்ளிவிட்டிருக்கிறோம். இது எங்களின் வரைவு தேர்தல் அறிக்கை. உங்களின் பரிசீலனைக்கு வைக்கின்றோம். இதனை மேலும் வலுப்படுத்தவும், செம்மையாக்கவும் உங்கள் கருத்துகளையும், ஆலோசனைகளையும் வேண்டுகிறோம்.

இந்தியா-ஓர் பார்வை

ஒரு நாட்டின் வரையறை என்று சொல்லக்கூடிய பாரம்பரியம், மொழி எல்லைகள், சமூக அமைப்பு, பண்பாடு என்ற வரிசைகளில் அமையாத நாடே இந்தியா. பலதரப்பான மொழிகள், பண்பாட்டு நாகரிகங்கள், நம்பிக்கைகள் வேறுபாடான எல்லைக் கோடுகள், சமூக பழக்கங்களைக் கொண்ட இந்தியாவை இணைக்கும் சமூக வரலாற்றுப் பின்னணிகள் ஒன்றும் இல்லை.

                சுரண்டிவந்த வெள்ளையர்கள், வரைந்து வைத்த எல்லைக்கோடுகள்தாம், இன்று நாடாகவும், நாடுகளுக்குள்ளேயான போராட்டங்களாகவும் தெற்காசியாவில் நிலவுகின்றன.

                தண்ணீரில் மிதக்கும் எண்ணெய் போல், வடகிழக்கு மாநிலங்களும் காஷ்மீரமும், தென்னகமும், இந்தியாவுடன் ஏதோ ஒருவகையில் மனமுறிவுடனே தொடர்கின்றன. போதாத குறைக்கு, இந்திய முதலாளிகளான டாடா, எஸ்ஸார் குழுமம், வேதாந்த நிறுவனங்கள், மத்திய இந்தியாவில் குவிந்து கிடக்கும் வளங்களை வளைத்துப்போட முயன்றதால், மத்திய பிரதேசம், சட்டீஸ்கர், மேற்கு வங்கத்தின் மேற்கு பகுதி, ஜார்கண்ட், ஆந்திரத்தின் வடக்குபகுதி, ஒடிசா என மத்திய இந்தியாவில் இருக்கும் மலைவாழ் மக்கள் இன்று அரசுகளுக்கு எதிரான போரில் குதித்துள்ளார்கள். இந்திய தொழில்களுக்காக, தங்கள் வாழ்வாதாரங்களையும், பண்பாட்டு அடையாளங்களையும், பலி கொடுக்க வேண்டுமென்ற அரசின் போக்கு, ஆதரிக்க முடிந்த வாதமல்ல. கடலோர மீனவர்கள், குஜராத் ஆனாலும், ஆந்திரமானாலும், தமிழகமானாலும் ஒரே மாதிரியான தாக்குதலுக்குள்ளாகி வருகின்றனர்.

                புதிய பொருளாதார கொள்கை இன்று விவசாயத்தை நசுக்கிக் கொண்டே வருகிறது. நகர்ப்புற பொருளாதாரத்தை மையமாக்கிவிட்ட கொள்கை கிராமப்புற வாழ்க்கையை வெகுவாக பின்னுக்கு இழுத்துக் கொண்டு போய்விட்டது.

                பாரம்பரியமாக, கிராமப்புற வாழ்க்கை, தனது தேவைகளை கிட்டத்தட்ட தனக்குள்ளேயே தேடிக் கொண்டது. நமது பொருளாதாரமே கிராமிய பொருளாதாரமாகத்தான் பல நு}ற்றாண்டுகளாக இருந்து வந்திருக்கிறது. அரசர்கள் காலத்தில் கூட பாதுகாப்பு என்ற ஒன்றிற்காக மட்டுமே மக்கள் அரசனை தேர்வு செய்தார்கள் என்று கூடச் சொல்ல முடியும். இந்நிலை இன்னும் மாறிடவில்லை.

                நம் நாட்டின் பெரும் பகுதி ஏழை மக்கள், அன்றாட பிரச்சனைகளைச் சந்திப்பதே இவர்கள் வாழ்க்கை முறையாக இருக்கிறது.

                இன்றைய ஜனநாயகம் என்று சொல்லும், சட்டம், நீதிமன்றம், செய்தி ஊடகங்கள், பலவித பொருட்கள், விளையாட்டுகள், பொழுது போக்குகள், போராட்டங்கள், தேர்தல்கள் எல்லாமே, நடுத்தர வர்க்கம் எனப்படும்35 கோடி மக்களுக்காக மட்டுமே. இந்த ஜனநாயகம் இவர்களைத் தாண்டி ஏழை மக்களைச் சென்றடையவில்லை. அது அவர்களுக்குத் தேவையாகவும் இல்லை. நாட்டின் சட்டம் ஒழுங்கைக் குலைத்தவர்கள் எல்லாம், காவல்துறையும், நடுத்தரவர்க்கமுமே; ஏழை மக்கள், அவர்களுக்கான பண்பாட்டு ஒழுக்கத்துடனும், ஏழ்மையுடனும், வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். அதாவது 70 சதமக்கள் இந்திய ஜனநாயகத்தில் அங்கம் வகிப்பவர்கள் அல்லர். பாரம்பரிய ஒழுங்கும் பண்பாடுமே அவர்களுக்குப் போதுமானது மட்டுமல்ல, எந்த சமூக பிரச்சனைகளையும் உண்டாக்கவில்லை என்பதும் பொதுவான உண்மை. இவர்கள் துயரம் குறித்து அரசோ, நடுத்தரவர்க்கமோ என்றும் அக்கறை காட்டியதில்லை.

                உதாரணமாக, மணிப்புரியில் இருக்கும் இராணுவம் நடத்தும் கொடுமைகளுக்கு அளவே இல்லை. 12 ஆண்டுகளாக இக்கொடுமையை எதிர்த்து உண்ணாவிரதம் இருந்த ஐரோம் சர்மிளி எந்த எதிர்ப்பலையையும் அரசு, மக்கள் மத்தியில் உண்டாக்கவில்லை. இராணுவத்தின் பாலியல் வன்முறையை எதிர்த்து, நடுத்தரப் பெண்கள், நிர்வாணமாக இராணுவமுகாம் நோக்கி ஊர்வலமாக போனார்கள். இதுகூட நாட்டில் எந்த பிரதிபலிப்பையும் ஏற்படுத்தவில்லை.

                காஷ்மீரத்தில் ஒரு கிராமத்தின் மொத்த பெண்களும் எந்த வயது வித்தியாசமின்றி பாலியல் வன்கொடுமைக்கு ஆளானார்கள். 22 ஆண்டுகளாக இவர்கள் நியாயம் கோரும் போராட்டம், இந்திய மக்களை ஈர்க்கவில்லை.

                தமிழகத்தின் வாச்சாத்தி வன்கொடுமைக்கு தமிழகம் கொதித்தெழுந்திடவில்லை. 17 ஆண்டுகளுக்கு பின்னர் நீதி வழங்கியது நீதிமன்றம்.

                ஆனால், புதுடில்லியில் நடந்த ஒரு பாலியில் வன்கொடுமைக்கு நாடு கொந்தளித்தது. டில்லி திரண்டு எழுந்தது. உடனே ஊடகங்கள் உணர்ச்சி பொங்க உரையாற்றின. மும்பை பெண் பத்திரிக்கையாளர் வன்கொடுமைக்கு உடனடியாக தூக்குத் தண்டனை கூட வழங்கியாயிற்று. மணிப்பூருக்கும், காஷ்மீரத்திற்கும், தண்டகாரண்யாவுக்கும், நடந்த கொடுமைக்கு என்ன என்பதனைப் பற்றி யாரும் பேசவில்லை.

                அந்தப் பகுதி மக்களை அன்னியப்படுத்தப்பட்டு விட்டார்கள் என்பதுதானே இதற்கு பொருள். காவல்துறைக்கும், இராணுவத்திற்கும், பெண்களை பாலியல் வன்கொடுமை செய்ய உரிமையுண்டு என்று அரசு சொல்கிறது. இது இந்த ஏழை மக்களை காயப்படுத்தாதா?

உண்மையில் இவ்ஏழை மக்களிடையே தோன்றும் சட்டப் புறம்பான குற்றங்கள் அனைத்தும் பண்பாட்டுக்கு எதிரான நடவடிக்கையின் பிரதிபலிப்புத்தானே. அவர்களை குறைந்தபட்ச மனிதர்களாகக் கூட பார்க்கத் தவறியது அரசும், நடுத்தர மக்களும் தானே. அவர்களின் பண்பாடு, நம்பிக்கைகளைத் தொடர்ந்து ராணுவமும், காவல்துறையும் தாக்குகிறது.

                ஏழை, கிராம, மலைப்புற, கடலோர மக்களைப் பற்றி அரசும் கவலைப்படவில்லை. அரசு பற்றி இந்த மக்களும் கவலைப்படவில்லை.

                நம் அரசியல் அமைப்பில் இருக்கும் மிகப்பெரிய அச்சுறுத்தல் இதுதான். ‘யார் ஆண்டாலும் என்ன? என் கவலை என்னோடு’என்பதுதான்.

                ஆங்காங்கே தோன்றிய பெரிய கலவரங்கள், நாடு முழுவதும் பிரதிபலிக்கவில்லை. ஆனால் அதுவே தொடராது.

                67 ஆண்டுகள் ஒரு நாட்டின் வரலாற்றில் மிகக் குறுகிய காலமே. வரலாறு மெதுவாகத்தான் நகரும் இந்தியாவின் வரலாறும், இன்று அடுத்தக் கட்டத்திற்கு நகர்ந்திருக்கிறது.

                அன்னியர்களிடமிருந்து கற்றுக் கொண்ட அடக்குமுறை நிர்வாகம் தான் நமது நிர்வாக அமைப்பு. மக்களின் குறைகளுக்கு செவி சாய்க்காது, ஊழல் இதனை முழுமையாக முடமாக்கி மக்களின் எதிரியாகவே மாற்றிவிட்டது.

                அதிகாரம் என்பது பொருள் சேர்க்கும் வாய்ப்பு என்றாகிப் போன அரசியலார், என்ன சட்டம் நிறைவேறியது என்பது கூடத் தெரியாத அமைச்சர்களே உள்ள நாடு.

                பரபரப்பு, பொழுதுபோக்கு, விளம்பரம் என வாழ்ந்து வரும் ஊடகங்கள்.

                தன் அடையாளம் தேடி, ஒத்துப் போக பழகிவிட்ட அறிவு ஜீவிகளும், இலக்கியவாதிகளும்.

                இதில் நீதிமன்றங்கள், முழுமையாக இல்லாவிட்டாலும், இழுத்துப் பிடித்து இந்த ஜனநாயகத்தைக் கொண்டு செல்ல முயற்சிக்கிறது. 2ஜி, சகாரா, நியாம்கிரி பழங்குடி மக்கள் போன்றவைகளில் உச்சநீதிமன்றம் காட்டிய உறுதி நமக்கு இதனைத்தான் சொல்லுகிறது.

                அரசியல் சட்டத்திலிருந்தும், அரசிலிருந்தும் அன்னியப்பட்டு நிற்கும் பெரும் பகுதி ஏழைமக்கள்.

                35 கோடி நடுத்தர வர்க்கத்திடம் இருக்கும் வணிக வாய்ப்புகளுக்காக செயல்படும் தொழில், ஊடகம், அரசுத்துறை.

                உடைந்து போன நம்பிக்கைகளும், ஒன்றிப் போக முடியாத இனங்களாக வடகிழக்கு மாநிலங்கள், காஷ்மீரம், மத்திய இந்திய மலை வாழ்மக்கள், கடலோர மீனவர்கள், தன் இன மக்களை கொன்று குவிக்கவும், தன் மாநிலத்தையே குப்பைத் தொட்டியாக பார்க்கும் அரசு என பாரம்பரிய பண்பாட்டு இனக் காயங்களுடன் தமிழகம்.

                இதில் நடத்திடும் பாராளுமன்ற தேர்தல்தான் இது. இந்த சூழலில் நாம் எதிர்நோக்கும் ‘மாற்றுத் தேர்தல் அறிக்கை’ தான் இது.

பொருளாதாரக் கொள்கை - மறுபரிசீலனை

                50களிலிருந்து 90 வரையிலான கலப்புப் பொருளாதாரக் கொள்கையில் அரசின் முதலீடு பெருமளவுக்கு இருந்தது. வேலை வாய்ப்புகளும், உற்பத்தி வளர்ச்சியும் ஏற்பட்டுத்தான் வந்தன. நாட்டின் உற்பத்தியில் பெரும்பங்காற்றி வந்த விவசாயம் உறுதியாகவே இருந்தது.

                91ல் துவங்கிய தாராளமயக் கொள்கையும், தனியார்மயப்படுத்துதலும், ஒப்பீட்டளவில், நமக்கு ஏற்றதுதானா என எடைபோடவும் பரிசீலிக்கவுமான கால கட்டத்தில் நாம் உள்ளோம்.

                முதலாவது காலகட்டத்தில், நமது ஏற்றுமதி என்பது விவசாயப் பொருட்கள் மற்றும் பதனப்படுத்தப்பட்ட உணவுப் பொருள்கள் மற்றும் எளிய உற்பத்தி பொருள்கள் என்றிருந்தன.

                விவசாயம் முழுமை இந்தியாவிலும் இல்லாவிட்டாலும் கூட குறிப்பிட்ட பகுதிகளில் விரிவடைந்தது.

                தொழில் உற்பத்தி என்பது, பயன்பாட்டு பொருள்கள் என்பதிலிருந்து மூலதன பொருளுற்பத்தி, இடைநிலை பெரிய கனரக உற்பத்தி என வளர்ந்தது. இதனாலேயே விவசாய பொருட்கள் ஏற்றுமதி சரியவும் தொழில் உற்பத்திப் பொருட்கள் உயரும் ஏற்றுமதியைக் காண முடிந்தது.

                77-91க்கு இடைப்பட்ட காலத்தில், ஒருங்கிணைக்கப்பட்ட தொழில் வாய்ப்புகள், 21 மில்லியனிலிருந்து 27 மில்லியனாக உயர்ந்தது. விடுதலை பெற்ற நாடு, நடை துவங்கிய இந்த கால கட்டத்தைப் போன்றதல்ல, தாராளமயக்கொள்கை வந்த காலம்.

                தாராளமயக் கொள்கை காலத்தில், ஒருங்கிணைந்த தொழில் வாய்ப்பு 91-2011 காலத்தில் 27 மில்லியனிலிருந்து 29 மில்லியனாக மட்டுமே வளர்ந்தது. ஆனால் ஒருங்கிணைந்த தொழில் வாய்ப்பு என்பது முன்பிருந்த 8 சதத்திலிருந்து 7 சதத்திற்கு குறைந்தது. அதாவது வளர்ந்த வாய்ப்புகள் தற்காலிக ஒப்பந்த வேலையாகவே வளர்ந்தன.

வளர்ச்சியில் விவசாயத்தின் பங்கு 33 சதத்திலிருந்து 16 சதத்திற்கு சரிந்தது. இந்தச் சரிவைத்தான், சேவைத்துறை எடுத்துக் கொண்டது. தொழில் துறையின் வளர்ச்சி என்னவோ ஒரு சதம் மட்டுமே உயர்ந்தது. ஆனால் பயன்பாட்டு பொருளுற்பத்தி 91ல் 27 சதமானது 2007ல் 32 சதத்தை எட்டியது. ஆனால் மூலதன பொருளுற்பத்தி தேங்கி விட்டது.

இந்த காலகட்டத்தில் நிதித்துறையில் பெருமளவு அன்னிய மூலதனம் வந்தது. தனி நபர் கடன் என்று வாகனங்கள், வீடுகள் எனவும் புதிய வீட்டு உபயோகப் பொருள்களும் பெருகின. இதனால் விரைவான லாபத்தை அன்னிய முதலீடு அடைய முடிந்தது.

அடிப்படை மூலதனப் பொருளுற்பத்தியில் முதலீடுகள் இல்லை.

                இதே காலகட்டசத்தில் மூலதனப் பொருள் ஏற்றுமதி செய்யும் நாடாக உயர்ந்த சீனா, மலேசியா, கொரியா, தாய்லாந்து நாடுகள், வணிக உபரியைப் பெற்றிருக்கின்றன.

நமது வணிக பற்றாக்குறையை, ஏற்றுமதி மூலம் நாம் ஈடுகட்ட முடியவில்லை. மாறாக, நிதித்துறையிலும், உள்கட்டமைப்பை விற்பதிலுமே சமாளிக்க முடிந்தது.

உள்நாட்டு தொழிலதிபர்கள் யாரும் நாட்டின் வளர்ச்சியில் நோக்கங்கள் கொண்டவர்கள் அல்லர். இடைவிடாது, அரசின் உதவியைக் கோருபவராகவும், நிதி மற்றும் அன்றாட உபயோகப் பொருள் வியாபாரியாகவுமே மாறினர்.

மூலதன பொருளுற்பத்தியான மருந்து தொழில்கள், மின் உற்பத்தி எந்திரங்கள், விமான உற்பத்தி போன்றவைகளுக்கான ஆய்வுகளுக்கு முதலீடு தேவை என்பதால் இதனைத் தவிர்த்து விட்டனர். இது நமது பொருளாதாரத்திற்கான வலுவை இழக்க வைத்து விட்டது.

இந்தப் போக்குடன், நாட்டின் வளத்தில் தனியாருக்குத் திறந்து விட்ட தாராளமயம், பெரும் நிர்வாக அரசியல் சிக்கலை உருவாக்கி விட்டது. ஊழலை அடிமட்டம் வரை பரப்பி விட்டது.

91க்கு முன்பான ஊழல் குற்றச்சாட்டுகள் எல்லாம் பொருள் கொள்முதலில் ஏற்பட்டதாக சொல்லப்பட்டது. அரசியல் மாற்றத்தைக் கொண்டு வந்த போபர்ஸ் ஊழல் கூட 86 கோடிதான். ஆனால் இன்று அலைக்கற்றை, நிலக்கரி, இரும்பு தாது, எரிக்காற்று, எண்ணெய், மணல் தாது, கல் குவாரி, மணல் என நாட்டின வளங்கள் தனியாருக்கு திறந்து விட்டபொழுது ஊழல் ஒவ்வொரு துறையிலும் லட்சம் கோடியைத் தாண்டி விட்டது. இதில் வளர்ந்தவர்கள், இன்று அசைக்க முடியாதவாறு வேரூன்றி, சமுதாயத்தையே அச்சுறுத்துமளவுக்கு வளர்ந்து நிற்கின்றனர்.

நாட்டின் வளத்தை தனியாரிடம் பங்கு வைத்த சிந்தனையற்ற செயல், இன்று நிர்வாகம், அரசியல், சமுதாயம் என பலவற்றையும் பீடித்த நோயாகி விட்டது.

நிதித்துறையில் திறந்து விடப்பட்ட அன்னிய முதலீடு, நாட்டின் செல்வத்தை, ஒரு குறிப்பிட்ட பகுதியினருக்கு மட்டும் ஒதுக்கி விட்டது.

கல்வி, சுகாதாரம் துறைகளில் நுழைந்த தனியார் துறை ஏழை மக்களை இவற்றிலிருந்து அப்புறப்படுத்தி விட்டது.

கட்டுமானம், வீடு என்று வளர்ந்த முதலீடு, நகரத்திற்குள்ளேயே தனி உயர்மட்டம் எண்ணம் கொண்ட சமூகத்தை படைத்து விட்டது.

சாலைகள், பொது பயன்பாடுகள் எல்லாம், வாகனம் படைத்தோருக்கும், வசதியானவர்களுக்கு மட்டுமே என்று ஆக்கிரமிக்கப்பட்டு விட்டது.

ஒரு பக்கமாக ஒதுக்கப்பட்ட வளர்ச்சி பலன், அதனைப் பயன்படுத்துவற்காகவே, பலவித பொழுதுபோக்கு, உபயோகங்களை ஏற்படுத்தி, நாட்டின் பெருமளவு எரிசக்தி ஆற்றலை வீணடித்துக் கொண்டிருக்கிறது.

எந்த வகையிலும் நாட்டின் வளர்ச்சிக்கு பயன்படாமல், ஆனால் அனைத்து வகையான சிதைவுகளையும் உண்டாக்கியுள்ள இந்த தாராளமய பொருளாதாரக் கொள்கை.

1.            தவறாக கையாளப்பட்டதா?

2.            தவறான கொள்கையா?

என்ற தீர்க்கமான பரிசீலனைக்கு உட்படுத்த வேண்டும்.

                வளர்ச்சி என்ற ஒற்றை அளவு, மிகவும் சிக்கலான சமூகத்தின் பலதரப்பு பிரச்சனைகளுக்கும் தீர்வாக முடியாது. ‘வளர்ச்சி’ வறுமையை ஒழிக்கும் என்பது இன்று நிரூபிக்கப்படவில்லை. மாறாக, வறுமையும் கூடவே வளர்ச்சி பெற்றிருக்கிறது.

                நாட்டின் மொத்த பொருளுற்பத்தியின் வளர்ச்சி என்பது, நாட்டின் இயற்கை வளங்கள், அழிக்கப்பட்டு பயன்பாட்டிற்கு வருகிறது என்று பொருளாகும். இதில் மனித உழைப்பு, இயந்திரங்களின் உதவியும் சேர்ந்தது.

                இப்படிப் போற்றப்பட்ட வளம் அனைத்து தரப்பு மக்களுக்கும் பயன்பட்டாக வேண்டும். வேலை வாய்ப்பாக, வருவாயாக செலவினத்தின் பங்காக இருந்திருக்க வேண்டும்.

                சந்தைப் பொருளாதாரமான இந்த தாராளமயமாக்கல், நுகர்வு பொருள்களின் வளர்ச்சியாகவே முடிகிறது. ‘உபயோகி - தூக்கி எறி’ என்று பண்டங்களை உற்பத்தி செய்யும் நிறுவனங்கள் கற்பிக்கின்றன.

                மேலும், மேலும் நிதி முதலீட்டிற்காக, நகர்ப்புற வளர்ச்சியை இது மையப்படுத்துகிறது. நகர்ப்புறமெனில், வாகனங்கள், நுகர் பொருள்கள், வீடுகள், வீட்டு உபயோகப் பொருட்கள், போக்குவரத்து, சாலை மேம்பாடு, ஆடைகள், பொழுதுபோக்கு என நுகர்வுப் பண்பாட்டின் மையமாகிறது. இதற்கான அன்னியக் கடன், சந்தையென வளர்ந்த நாடுகளின் கைவரிசை நீளுகிறது.

                நகர்ப்புற வளர்ச்சி, வளங்களின் வேகமான தேய்வாக முடியும். படுவேகமாக வளரும் வெளி ஆற்றல் தேவை, தண்ணீர் தேவை என்று பன்முகமாக நாட்டின் வளத்தை நகர்ப்புறம் மட்டும் உறிஞ்சும்.

                கிராமங்கள், நகரங்களின் தேவையை நிறைவேற்றும் இடமாகவும், சேவகம் செய்வோரின் வாழ்விடமாகவும் மாறிப்போகும்.

                தாராளமயமாக்கலில் வந்து சேர்ந்துள்ள Agreement on Agriculture (AOA) உலக வர்த்தக அமைப்பு தீர்மானம், எதிர்கால ஏழை மக்களுக்கு கிடைத்து வரும் உணவு மானியத்தை குறி வைக்கிறது. 82 கோடி மக்களின் வயிற்றில் அடிக்க காத்திருக்கும் ஒப்பந்தம் இது. இன்றைய வடிவம் பாதுகாப்பானது போல் தோன்றும். ஆனால் எதிர்கால மாற்றத்தை நம்பித்தான் கூடாரத்தில் தலை நுழைத்த ஒட்டகமாக இது வந்திருக்கிறது.

                இதன் மறைவிலேயே விவசாயச் சந்தைக்காக மரபணு மாற்ற விளை பொருள்களும் நுழைந்துள்ளன. எந்த நடைமுறைக்குள்ளும் அனுமதி பெறாத இந்த உணவுக்கான அனுமதியை பிரதமர் வழங்கியிருக்கிறார். அவரும் எந்த மரபுகளின்படியும் தேர்வாகாத பிரதமர்தானே. இந்த தாராளமயம் இதுவரை எந்த வலுவையும் காட்டியதாக காண முடியவில்லை.

                மாறாக, பல மோசமான மாற்றங்களையும், நம் வணிக மதிப்பையும், வெகு எளிதாக சீர்குலைக்க முடிந்ததாக மாற்றி விட்டது. மக்கள் தொகை மிகுந்த நாட்டுக்கு இந்த கொள்கை ஏற்புடையதா? கடுமையான பரிசீலனைக்கு உட்படுத்த வேண்டும்.

சுற்றுச்சூழல் - ஆற்றல்; தண்ணீர்

                பொருளாதார வளர்ச்சி என்றாலே பொருளுற்பத்தியின் வளர்ச்சி என்று என்ற பொருள்பட்டு சுருங்கி விட்டது.

                வறுமை ஒழிப்பு மருந்தாக முன் வைக்கப்படும் ‘வளர்ச்சி’ பற்றிய ‘முரட்டுத்தனமான’ நம்பிக்கை இன்று பல்வேறு பிரச்சினைகளைத் தீர்க்க முடியாத பிரச்சனைகளாக மாற்றி வருகிறது.

                வளர்ச்சி பற்றி பேசும்பொழுதெல்லாம், தொழில் வளர்ச்சியை பற்றியே பெரிதும் உணரப்படுகிறது. விவசாய பொருளுற்பத்தி பற்றி, தொய்வடையும் குறியீட்டை சரி செய்யுமா என்பதெல்லாம் இரண்டாம் நிலைப் பொருளாகிறது.

                எந்த தொழில் உற்பத்தியாயினும் அது இயற்கை மூலதனமின்றி சாத்தியமில்லை. நிலம், நீர், கனிமங்கள், தாவரங்கள், காற்று என விரிவடைந்த இயற்கை மூலதனம் இதற்கு வேண்டும்.

india environment 600

                ஒரு பொருள் உற்பத்தியாகும் பொழுது அங்கு அழிக்கப்பட்ட இயற்கை வளம் கணக்கில் வருவதில்லை. பெரிய தொழிற்பேட்டை ஒரு பெரிய நீர்நிலையை அழித்து உருவாக்கப்பட்டால், தொழிற்பேட்டைதான் உற்பத்தி வளர்ச்சியில் வரும். அழிந்து போன நீர்நிலை பற்றியோ அதன் சமூக விலையோ கணக்கில் வருவதில்லை. இப்படித்தான் வளர்ச்சி கணக்கிடப்படுகிறது.

                இது தொடரமுடிந்த வளர்ச்சியா என்ன?அழியும் இயற்கை வளம் எல்லையற்றதல்ல; குறிப்பிட்ட அளவே. ஓர் இயற்கை வளம், இயற்கையின் சுழற்சி ஆதார சங்கிலியின் கணுவாகும். அது துண்டாடப்படும்பொழுது, இயற்கையின் சங்கிலித் தொடர் முறிகிறது. அதன் சம நிலை மாறுகிறது.

                காடுகள் அழிக்கப்பட்டு கட்டடங்கள் உருவானால், மழையின் அளவு குறையும். நிலத்தின் அரிப்பு கூடும், ஆற்றின் நீர் குறையும். இதனைச் சுற்றிச்சார்ந்த உயிர் சங்கிலிகள் அறுந்து போகும். உருவான கட்டிடங்கள் எந்த நோக்கில் வந்ததோ அது மெதுவாக அற்றுப் போகும். இது நீண்ட காலத்திற்குத் தொடர முடியாதது என்பது வெளிப்படை. அத்துடன் ‘வளர்ச்சி’ என்ற பொருளும் நீர்த்துப் போய் பொருளற்றதாகும்.

உத்தரகாண்ட் மாநிலத்தின் பாகீரதி நதியில் ‘டெக்ரி’ அணை கட்டப்பட்டது, மக்களின் எதிர்ப்பையும் மீறி. இந்த நீர்த் தேக்கம் அவ்வப்பொழுது நில நடுக்கத்தை ஏற்படுத்துகிறது. பாகீரதியின் நீர் வரத்து வினாடிக்கு 1000 கன அடி என்பதிலிருந்து 200 கன அடியாக இன்று குறைந்து போனது. 400 மெகாவாட் மின்சாரம் கிடைக்கலாம். ஆனால் கிடைக்காமல் போன நீரும், புதிதாக கிடைத்த நில நடுக்கமும் இத்தனையையும் தகர்க்க காத்திருக்கின்றன என்பதுதானே பொருள்.

வளர்ச்சியெனத் திட்டமிடும் நாம், சுற்றுச் சூழல் ஏற்றுக் கொள்ளுமளவிலேயே அதனை அமைக்க வேண்டும்.

தாவரங்கள் இன்றி உலகில் எந்த உயிரினமும் இல்லை. நதிகள், நீர்நிலைகள், சுற்றுச் சூழலின் மடி. இதனை அழிப்பதும், கழிவு ஓடையாகவோ, தொட்டியாகவோ ஆக்குவது மனித குற்றம். நகர்ப்புறமாக்கல் பொருளாதாரமே இந்த நிலையை வெகுவேகமாகச் செய்து முடிக்கின்றன. வெளி ஆற்றல், அதாவது, எரிபொருள், மின்சாரம் தேவை உயர, உயர, சுற்றுச் சூழலும் வளங்களும் கடுமையாக தாக்குதலுக்குள்ளாகின்றன.

வெளி ஆற்றல் தேவை, இன்று வணிக ஆடம்பரங்களுக்கும், பணம் படைத்தோரின் தேவைகளுக்குமாகவே உயர்ந்து வருகிறது. இது வளத்தை வெகுவிரைவில் வற்றிப் போகச் செய்கிறது. வெளி ஆற்றல் உற்பத்தி, சுற்றுச் சூழலின் கடுமையான எதிரியும் கூட.

இந்த ‘தேவை வளர்ச்சி’யின் கட்டுப்பாடு, நுகர்ச்சிப் பொருளின் கட்டுப்பாட்டில் முடிய வேண்டும்.

இந்த நுகர்வுப் பண்பாடு, நீரின் தேவையை அதிகரிக்கிறது. அதே நேரத்தில் அதிக ஆற்றல் உற்பத்தி நீரின் சமன்பாட்டை, சுழற்சியை அழிக்கிறது. மெழுகுவர்த்தியை இரண்டு பக்கத்திலும் எரிப்பது போன்றது. வணிக உலகம், நீரின் பயன்பாட்டை நேர்படுத்த நீரை வியாபாரமாக்கப் பார்க்கிறது. அதன்மூலம், வளர்ச்சியின் பயனை ஒதுக்கிக் கொண்டவர்கள் அதிக ஆற்றலையும் அதிக நீரையும் உரிமையாக்கிக் கொள்ளவும், ஏழை மக்களை தாகத்திலும் இயற்கையின் தாக்குதலுக்கும் உள்ளாக்குகின்ற கொடுமை மௌனமாக நிறைவேற்றப்படுகிறது.

சுற்றுச் சூழல் பாதிப்புகளை கணக்கிடாத எந்த வளர்ச்சியும் விரைவிலேயே முட்டுச் சுவரில் போய் நின்று போகும்.

இயற்கையோடு ஒன்றிய வளர்ச்சி - கட்டுப்பாடான ஆற்றல் பயன்பாடு, காப்பாற்றப்படும் தண்ணீர் வளங்கள். இது பொருளாதாரத்தின் மையமாகும்.

ஆற்றல் தேவைக்கான வளங்கள், நிலக்கரி, எண்ணெய், எரிக்காற்று என எரிபொருளின் தேவையை சார்ந்து நிற்கிறது. சூரிய ஆற்றலோ காற்றின் ஆற்றலோ அது மனித கட்டுப்பாட்டில் உள்ள உற்பத்தியல்ல. இயற்கையின் கட்டுப்பாட்டில் உள்ளது. சூரிய ஆற்றல் எதிர்கால மின் ஆற்றல் தேவைக்கு மாற்றாகச் சொல்லப்படுகிறது. இதுவும் வரையறைக்குட்பட்டதுதான். நம் மின்சார நுகர்வுக்கு ஏற்றாற்போல் சூரிய மின்சாரம் பயன்பட வேண்டுமென்றால் திரும்பவும் இயற்கையிடம் இறைஞ்சியாக வேண்டும்.

இந்த மின்சாரம் சேமிக்கப்பட்டாக வேண்டும். அந்த தேவைக்கான மின்கலப் பொருள் போன்றவை வரையறைக்குட்பட்ட அளவே கிடைக்கும். எனவே எரிபொருள் என்றால், பல ஆயிரமாண்டுகள், நிலம் தன் கருவறையில் உருவாக்கிய இந்த சக்திகளை ஒரு நூற்றாண்டுகளுக்குள் தீர்த்து விடப் போகிறோம். பிறகு இயற்கையின் ஆட்டம் தொடங்கும். அது இறுதியில்தான் என்பது மட்டுமல்ல; அது நமக்கு இறுதியான ஆட்டாமாகவும் இருக்கலாம்.

சுற்றுச் சூழல் தடம் புரளாமல் நாம் தேவைகளை திட்டமிட வேண்டும்.

பாகீரதியின் நீர் ஓட்டத்திலேயே பல சிறு புனல் மின் நிலையங்களை நாம் அமைக்கலாம். எந்த சமன்பாடும் பாதிக்காது. நீர் அணை என்ற போது தேங்கும் நீரில் மூழ்கும் தாவரங்கள் ஆண்டாண்டாக மீத்தேனை வெளியேற்றும். அழிந்த தாவரங்களும், தேக்கப்படும் நீரின் கனமும், புவியியல் சார் நிலநடுக்கம் போன்ற ஆபத்துக்களை உண்டாக்கும்.

இயற்கையை நேசிக்காமல், வெறும் தேவைகளை மட்டும் தேடுவதும், பணமிருப்பதால், எல்லாம் தமக்கென்ற சூதும், நீண்ட காலப் பயணமாக இருக்க முடியாது.

ஆற்றலின் தேவையில் கவனமாகத் திட்டமிடும் பொழுது அதன் சுற்றுச் சூழல் ஏற்படும் வழியில் இருக்க வேண்டும். பயன்பாடு எல்லையற்றதானால், நாமும் உயிரினத்தில் எல்லையை வெகுவிரைவில் தொடர வேண்டி வரலாம்.

இயற்கை அன்னை நம் தேவைகளுக்கு உணவிடுவாள். பேராசைகளுக்கு அழிவைத்தான் தருவாள். Need - not greed.

(தொடர்ச்சி... மாற்றுத் தேர்தல் அறிக்கை - 2)

- சா.காந்தி (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)

Pin It