தேர்தல் காலங்களில் கருத்துக் கணிப்புகள் வெளியிடப்படுவது வாடிக்கையான ஒன்றுதான். ஆனால் சிபிஐ, அமலாக்கத்துறை, வருமான வரித்துறை, தேர்தல் ஆணையங்கள், நீதிமன்றங்கள் என பாஜகவின் கட்டுப்பாட்டில் பல துறைகள் இருப்பதைப் போல ஊடகத் துறையும் ஒன்றாக கலந்து விட்டன. கருத்துக் கணிப்புகள் என்ற பெயரில் கருத்துருவாக்கத்தை கட்டமைப்பதையே பல ஊடகங்கள் செய்கின்றன. 10 ஆண்டுகால பாஜக ஆட்சியில் வேலையின்மை, விலைவாசி உயர்வு பிரச்னைகள் மக்களை வாட்டி வதைக்கிறது. விளைபொருட்களுக்கு உரிய விலை கேட்டு டெல்லியை நோக்கிச் செல்லும் விவசாயிகள் மீது மும்முனைகளில் இருந்து தாக்குதல் நடத்திக் கொண்டிருக்கிறது ஒன்றிய பாரதிய ஜனதா அரசு. காவல்துறை லத்திகளால் கடும் காயங்களை சந்தித்திருக்கிறார்கள் விவசாயிகள். கண்ணீர் புகைக் குண்டுகளை வீசி, காற்றின் வழியாகவும் நிலைகுலையச் செய்திருக்கிறார்கள். டிரோன்களை பறக்கவிட்டு, அதில் இருந்து ரப்பர் குண்டு மழை பொழிந்து விவசாயிகளின் உடல்களை குத்திக் கிழித்திருக்கிறார்கள். இதுவரை 3 விவசாயிகள் இறந்திருக்கிறார்கள்.

உற்பத்தித் துறை, ஏற்றுமதித் துறை, சேவைத்துறை என அனைத்து துறைகளிலும் பெரு நிறுவனங்கள் மட்டுமே லாபம் கொழிக்கின்றன. சிறு குறு நடுத்தர நிறுவனங்கள் தள்ளாடிக் கொண்டிருக்கின்றன. 10 ஆண்டுகால பாஜக ஆட்சியில் ஏழைகள் மேலும் ஏழையாகி இருக்கிறார்கள். பணக்காரர்கள் மென்மேலும் பணக்காரர்கள் ஆகியிருக்கிறார்கள். இந்த அதிருப்தி நாடு முழுவதும் கனலாய் தகித்துக் கொண்டிருக்கிறது. ஆனால் நாட்டு மக்கள் அனைவரும் செல்வ செழிப்போடு, சகல வசதிகளுடன் வாழ்ந்து கொண்டிருப்பதைப் போல கருத்துருவாக்கத்தை கட்டமைக்கிற முயற்சியில் இந்தியா டுடே, என்.டி.டி.டிவி போன்ற சில ஊடகங்கள் இறங்கியிருக்கின்றன.

தமிழ்நாட்டிலும் புதிய தலைமுறை ஊடகம் ஒரு கருத்துத் திணிப்பை வெளியிட்டிருக்கிறது. தமிழ்நாட்டில் பாஜக 3 முதல் 5 தொகுதிகளில் வெல்லும் என்றும், 18.48% வாக்குகளைப் பெறும் என்றும் கருத்துக்கணிப்பை வெளியிட்டிருக்கிறது புதிய தலைமுறை ஊடகம். அதிமுகவும் கூட்டணியில் இல்லை, சொல்லிக்கொள்ளும்படியான பெரிய கட்சியும் ஒன்றுகூட இல்லை... ஆனால் 18% வாக்குகள், 5 தொகுதிகள் என்று சொன்னால் பாஜகவினரே சிரிப்பார்கள். இருந்தாலும் இப்படியொரு கருத்துத் திணிப்பை செய்திருக்கிறது புதிய தலைமுறை ஊடகம். வடநாட்டிலேயே பாஜகவின் செல்வாக்கு சரிந்து கொண்டிருக்கிறது என்பதுதான் உண்மை நிலை. ஆம் ஆத்மி, சமாஜ்வாதி, திரிணாமுல் காங்கிரஸ் கட்சிகளோடு தொகுதிப் பங்கீடு செய்வது காங்கிரஸுக்கு முடியாத காரியம், சாத்தியமே இல்லை என்ற கூறிக் கொண்டிருந்த பாஜகவினர், இப்போது சுமூகமாக அங்கெல்லாம் பேச்சுவார்த்தைகள் முன்னேறுவதைக் கண்டு அச்சமடைந்திருக்கிறார்கள்.

இந்தியா கூட்டணி வலுவடைந்திருப்பது மட்டுமே அவர்களின் அச்சத்திற்கு காரணமில்லை. ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி அவய் சுக்லா என்பவர் பாஜகவின் செல்வாக்கு சரிந்திருப்பது குறித்து கட்டுரை ஒன்றை தனது வலைப்பக்கத்தில் எழுதியிருக்கிறார். ஆங்கில ஊடகங்களின் கருத்துத் திணிப்புகளை கேள்விக்குள்ளாக்கும் அந்த கட்டுரை “தி வயர்” ஊடகத்திலும் வெளியாகியிருக்கிறது. “விவசாயிகள் போராட்டத்தால் ஒன்றிய அரசுக்கு ஒரு கடும் நெருக்கடி ஏற்பட்டிருக்கிறது என்பதை ஊடகங்கள் மறைக்கின்றன. பாஜகவால் ஊழல் குற்றச்சாட்டுகளுக்கு உள்ளானவர்கள், பாஜகவில் இணைந்த பிறகு தூய்மையானவர்கள் ஆகிவிடுவதை பார்த்து மக்கள் குழம்பியிருக்கிறார்கள். சிவசேனா, தேசியவாத காங்கிரஸ் போன்ற கட்சிகளை உடைத்ததை மக்கள் சகித்துக் கொள்ள மாட்டார்கள். பாஜகவின் 303 எம்.பி.க்களில் 134 பேர் மட்டுமே உண்மையான பாஜகவினர். மற்ற எல்லோருமே வேறு கட்சிகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டவர்கள் என்று Knocking News வலைத்தளம் ஆய்வு செய்து கூறியிருக்கிறது. அவசர அவசரமாக பாஜக திணிக்க முயலும் பொது சிவில் சட்டத்தை இந்தி பேசும் மாநில மக்களே விரும்பவில்லை. இந்த எதிர்ப்புகளால் பாஜக குறைந்தபட்சமாக 40 தொகுதிகளையாவது இழக்கும்” என்கிறார் அவர். அஜய் பிரகாஷ் என்பவரின் டிஜிட்டல் மீடியா தரவுகளையும் அதற்கு ஆதாரமாக முன்வைக்கிறார்.

“மிக முக்கியமாக, மேற்கு மற்றும் இந்தி ஹாட்லேண்ட் பகுதிகளில் பாஜகவின் செல்வாக்கு பெரிதாகக் கூடவில்லை, தெற்கிலும் கிழக்கிலும் பாஜகவுக்கு எந்தவிதமான முன்னேற்றமும் இல்லை. பிறகு எப்படி பாஜக 400 தொகுதிகளை தாண்டும் என பரப்புகிறார்கள்?” என்பதே அவர் முன்வைக்கும் கேள்வி. பாஜகவை பொருத்தவரை சிறுபான்மையினர் மீதான வெறுப்புணர்வை மூட்டி, அதில் இந்துக்களை அணி திரட்டி விடலாம் என்பதுதான் அவர்கள் கையிலிருக்கும் ஒரே உத்தி. 2023 ஒரே ஆண்டில் மட்டும் நாடு முழுவதும் இஸ்லாமியர்களுக்கு எதிராக 668 வெறுப்புப் பேச்சுக்கள் பதிவாகியிருக்கின்றன. அதில் 75% (498) பேச்சுக்கள் பாஜக ஆளும் மாநிலங்களில்தான் பதிவாகி இருக்கின்றன என்று வாஷிங்டனை சேர்ந்த ஒரு நிறுவனத்தின் ஆய்வறிக்கை கூறுகிறது.

இதில் மகாராஷ்டிரா, உத்தரப் பிரதேசம், மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், குஜராத், கர்நாடகா, உத்தராகண்ட் ஆகிய மாநிலங்களில் மட்டும் இஸ்லாமியர்களுக்கு எதிராக 500க்கும் மேற்பட்ட வெறுப்புப் பேச்சுக்கள் பதிவாகியிருக்கின்றன. ஆனால் இத்தகைய வெறுப்புப் பேச்சுக்களை வைத்து வெற்றியை நீட்டித்துக் கொண்டே செல்ல முடியாது என்பதற்கு கர்நாடகத் தேர்தலே மிகச் சிறந்த எடுத்துக்காட்டு. வாழ்வாதாரத்தை மீறி மதம் முக்கியமில்லை என்று கர்நாடக மக்கள் முடிவெடுத்தார்கள். கர்நாடக மக்களை விட மிக மோசமான வாழ்வியல் சூழலில் இந்தி பேசும் மாநிலங்கள் இருக்கின்றன. அவர்களும் அதை உணர்ந்து வாக்களித்தால் பாஜக வீழ்வது உறுதி. அது இந்தத் தேர்தல் நடக்கும் என்பதே ஜனநாயக சக்திகளின் நம்பிக்கை. அந்த நம்பிக்கையை வீழ்த்தவே திட்டமிட்ட கருத்துருவாக்கங்கள் செய்யப்படுகின்றன. மக்கள் எச்சரிக்கையோடு இருக்க வேண்டும்!

- விடுதலை இராசேந்திரன்

Pin It