குஜராத் மாநில முதலமைச்சர் நரேந்திர மோடி, வளர்ச்சியின் நாயகனாக ஊடகங்களால் முன்னிருத்தப்பட்டிருக்கிறார். 2002 ஆம் ஆண்டு, கோத்ரா ரயில் எரிப்பு சம்பவத்துக்குப் பிறகு, 2000க்கும் கூடுதலான முஸ்லிம்கள் கொலை செய்யப்பட்ட சம்பவம் பாஜகவின் வரலாற்றில் ஒரு கரும்புள்ளி. யமுனையில் வெளுத்து எவரஸ்ட்டில் காயப்போட்டாலும் கழுவிப் போகாது மோடி மீது படிந்த பச்சிளங் குழந்தைகளின் ரத்தக்கறை. இந்த இனப்படுகொலை உலக அளவில் கவனப்பட்ட போது, மதவாதத்தை அடிப்படையாகக் கொண்ட பாரதிய ஜனதா அவமானப்பட்டு கூனிக்குறுக வேண்டி வந்தது. வாஜ்பாய் கூட வருத்தப்பட்டார். அமெரிக்க அரசும் குஜராத் கொலைகள் காரணமாக மோடிக்கு விசா வழங்க ஆண்டு தோறும் மறுத்து வந்தது. இக்கொலைகளில் மோடிக்கு நேரடியான தொடர்பு இல்லையென்ற சிறப்பு விசாரணை குழுவின் முடிவினை, எந்த விசாரணைக்கும் உட்படுத்தாமல் இந்திய உச்சநீதிமன்றம் அப்படியே ஏற்றுக் கொண்டுள்ளது. இருந்தபோதும், இக்கொலைகளில் மோடிக்கு உள்ள தொடர்பு சந்தேகமற்ற வகையில் நிருபிக்கப்படவில்லையென்றே அமெரிக்க அதிபருக்கான மத ஆலோசனை குழு அதிபர் ஒபாமாவிடம் தெரிவித்துவருகிறது.

modi rajnathsingh 400மோடி செய்த பிழை அல்லது அவரது ஆட்சியில் நடந்து விட்ட பிழையில் இருந்து பிழைக்க மோடியைக் கொண்டே தீர்வு காண வகுப்புவாத சக்திகள் திட்டமிட்டனர். 'கொலைகாரன்' என்ற குற்றச்சாட்டில் இருந்து 'வளர்ச்சி நாயகன்' என்ற கொண்டாட்டத்துக்கு தூக்கி வந்தனர். இந்தியாவின் முக்கியமான பத்திரிகைகளில் இந்தியா டுடேயும் ஒன்று. அந்த வார இதழ் இந்தியாவின் தலைசிறந்த 10 முதல்வர்கள் என்ற பட்டியலை வெளியிட்டது. அதில் முதல் இடத்தில் இருப்பவர் குஜராத் முதல்வர் நரேந்திர மோடி என்று தெரிவித்தது. அப்போதுதான் மோடி முதன்முதலாக குஜராத்துக்கு வெளியே தெரியவந்தார். குஜராத்தில் நடந்த படுகொலைகள் மறக்கடிக்கப்பட்டு சுமார் 10 ஆண்டுகள் குஜராத்தின் வளர்ச்சி முன்வைத்து பேசப்பட்டது. 2000 பேர் கொல்லப்பட்டது குறித்தும், கட்டுப்படுத்த தவறிய மோடியின் இயலாமை அல்லது ஒத்துழைப்பு குறித்தும் பொது ஊடகங்கள் இறுதிவரை பேசவே இல்லை. வளர்ச்சி என்ற கட்டுக்கதைகளையே தொடர்ந்து எழுதியும் பேசியும் வந்திருக்கின்றன.

குஜராத்தில் மோடி தொடர்ந்து மூன்று முறை முதல்வராக தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார். குஜராத்தை வளர்ச்சியின் பாதையில் மோடி கொண்டு சென்றதால் மக்கள் அவருக்கு தொடர்ந்து வெற்றியை கொடுப்பதாகவும் வெளி உலகத்தை நம்பவைத்தனர். சிறுபான்மை முஸ்லிம்களும் மோடிக்கு வாக்களிக்கிறார்கள் என்றனர். மோடியை எதிர்த்து வாக்களித்துவிட்டு குஜராத்தில் எப்படி உயிருடன் இருப்பது என்ற அச்சம் தான், முஸ்லிம்கள் மோடிக்கு வாக்களிக்க காரணம். மோடி ஆட்சியில் ஒரு முறை கூட முஸ்லிம்களுக்கு இடம் கொடுத்தது கிடையாது. இன்றுவரை குஜராத் அமைச்சரவையில் ஒரு முஸ்லிம் கூட இடம்பெறவில்லை. பாஜக சார்பில் ஒரு முஸ்லிம் உறுப்பினர் கூட சட்டமன்றத்தில் இல்லை. குஜராத்தில் முஸ்லிம்கள் 11%மாக உள்ளனர். பின்னர் அச்சமின்றி வேறெந்த காரணத்துக்காக மோடிக்கு முஸ்லிம்கள் வாக்களிக்க முடியும்.

குஜராத்தில் காங்கிரசும் பலமிக்க கட்சியாக இல்லை. கடந்த சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு தோற்றுப் போனவர்கள் பா.ஜ.கவில் இருந்து வெளியேறியவர்களும், மோடியால் நெருக்கி தள்ளி வெளியேற்றப்பட்டவர்களும் தான். இன்றும் கூட, குஜராத் வதேரா தொகுதியில் மோடியை எதிர்த்து காங்கிரஸ் சார்பில் போட்டியிடுபவர் முன்னர் மோடியின் நண்பராக இருந்தவர். இருவரும் ஆர்.எஸ்.எஸ். அமைப்பில் ஒரே காலத்தில் ஒன்றாக செயல்பட்டவர்கள். இந்த சூழ்நிலையில் குஜராத் முஸ்லிம்கள் மோடியிடமே சரணடைவதைத் தவிர வேறு வழியில்லை என்பதை உணர வேண்டும்.

மேலும், பாகிஸ்தானில் பயிற்சி பெற்ற முஸ்லிம் தீவிரவாதிகளால் மோடி உயிருக்கு ஆபத்து என்ற கட்டுக்கதை தொடர்ந்து தலைப்புச் செய்திகளாக்கப்பட்டன. அதன் மூலம் இந்தியாவில் முஸ்லிம் தீவிரவாதிகளால் அச்சுறுத்தபப்படும் பரிதாபத்துக்குரிய ஓர் இந்து என்று ஊடகங்களால் திட்டமிட்டு பிரச்சாரம் செய்யப்பட்டார். 'நான் ஒரு இந்து அடிப்படைவாதி' என்பதை வெளிப்படையாக மோடி சொன்னதையும் சேர்ந்து மோடி ஓர் உண்மையான இந்துவாக இருக்கும் காரணத்தால் அவர் முஸ்லிம் தீவிரவாதிகளின் எரிச்சலுக்கு ஆளாகி இருக்கிறார் என்ற கவனத்தை மக்கள் புரிந்து கொள்ள ஊடகங்கள் திட்டமிட்டன.

மோடியை கொலை செய்ய உண்மையில் எந்த முஸ்லிமும் முன் வந்திருக்காத நிலையில், அதனால் எரிச்சல் அடைந்தவர்கள் மோடியை கொல்லும் திட்டம் என்ற நாடகத்தை அரங்கேற்றினர். இஷ்ரத்ஜஹான் என்ற 17 வயது பெண் உள்ளிட்ட பல இளைஞர்களை குஜராத் காவல்துறை பிடித்துக் கொண்டு வந்து கைகளை கட்டிப்போட்டு சுட்டுக் கொன்றது. இவர்கள் லஷ்கர்-இ-தொய்பா தீவிரவாதிகள், மோடியை கொல்லவந்தார்கள் என்று குஜராத் காவல்துறை கூறியது. இதுவரை 22 பேர் குஜராத் காவல்துறையினரால் கொலை செய்யப்பட்டுள்ளனர். இக்கொலைகள் மோடியை விளம்பரப்படுத்துவதற்காகவும், அதன் மூலம் இங்குள்ள பெரும்பான்மை இந்து மக்களுக்கு முஸ்லிம் இளைஞர்கள் மீது கோபமும், மோடி மீது பச்சாதாபமும் ஏற்படவும் குஜராத் அரசே திட்டமிட்டு நடத்தியது என்ற உண்மை உச்சநீதிமன்ற தலையீட்டால் வெளிப்பட்டது.

இப்போது இந்த திட்டமிட்ட கொலைகள் தொடர்பாக இந்திய உளவுத்துறையான I.B.யின் இணை இயக்குநர் ராஜேந்திரகுமார் உள்ளிட்டு காவல்துறை உயர்அதிகாரிகள் குற்றம் சாட்டப்பட்டுள்ளனர். குஜராத்தின் காவல்துறை தலைவர், காவல்துறை ஆணையர் உள்ளிட்ட இருபத்துக்கும் கூடுதலான ஐ.பி.எஸ். அதிகாரிகள் சிறையில் உள்ளனர். இப்போதும் அதே உளவுத்துறைதான், தேர்தல் நேரத்தில் மோடியை கொல்ல தீவிரவாதிகளின் சதி என்றும், பாகிஸ்தானில் பயிற்சி பெற்ற தீவிரவாதிகள் எல்லையில் தயாராக இருப்பதாகவும், பொம்மை விமானங்களை வைத்து தாக்கத் திட்டம் என்றும் கூறியுள்ளது கவனிக்கத்தக்கது.

மோடியை நவீன நீரோ மன்னன் என்று உச்சநீதிமன்றமே விமர்சனம் செய்தது. ஆனால் மோடியின் மீதான விமர்சனங்கள் மக்களின் கவனத்தில் இருந்து நழுவச்செய்து விட்டு மோடி நல்லவர், நிர்வாகத் திறமைமிக்கவர், குஜராத்தை முன்னேற்றியது போல் இந்தியாவையே முன்னேற்றி விடுவார் என்று பொய் சொல்லி மக்களை நம்பவைத்துள்ளனர். ஊடகங்களின் இந்த பொய்யுரை அனைவரையும் மயக்கியுள்ளது. படித்தவர்கள் சமூகசேவகர்கள் கலைஞர்கள் அனைவரும் கூட இன்று மோடியை நேசிக்க இந்த பொய்யுரைதான் காரணம். ரஜினிகாந்த் கூட இந்த பொய்யை உண்மையென்று நம்புகிறார். மோடி மீதான கொலைக்குற்றம், உளவுபார்த்த குற்றம், என்கவுண்டர் குற்றம் எதுவும் அவரது அறிவுக்கு எட்டவில்லை. அதேநேரம் மோடி மிகச்சிறந்த நிர்வாகி, நல்ல மனிதர், அவர் நினைப்பது நிறைவேற வேண்டும் என்றெல்லாம் புகழ்ந்திருக்கிறார். ஆனால், உண்மையாக ரஜினி அனைத்து மத்தினரையும் மதிக்கும் ஒரு மாண்பாளர். தமிழ்த் திரைப்படத்துறையில் சூப்பர்ஸ்டாராக இருந்த போதும், எந்த ஒரு மதத்தினரையும், சமூகத்தினரையும் காயப்படுத்தும் படியோ, மனம் நோகும்படியோ, நடித்தது இல்லை. ஆனால், அவர் கூட மோடிக்கு மயங்கிய மகுடியாக ஆகிவிட்டார். உண்மைகள் மறைக்கப்பட்டு கற்பனையான தகவல்களை ஊடகங்கள் பரப்பிவந்ததுதான் காரணம்.

ஊடகங்களை கச்சிதமாக பயன்படுத்தி இவ்வளவு பெரிய காரியத்தை யார் செய்திருக்க முடியும் என்ற கேள்விக்கு விடையளிக்க ஆர்.எஸ்.எஸ்யே முன்வந்தது. 2014 மக்களவை தேர்தலில் பிரதமர் வேட்பாளராக தன்னை தான் பா.ஜ.க முன்னிருந்தும் என்று அத்வானி நம்பினார். அத்வானி இல்லாத இடத்தில் தங்களுக்குத்தான் அந்த நாற்காலி என்று அருண்ஜெட்லி, சுஷ்மா சுவராஜ், ஜஸ்வந்த்சிங், முரளிமனோகர் ஜோஷி, உமாபாரதி ஆகியோர் நெடுங்கனவில் இருந்தனர். ஆனால் பா.ஜ.க என்பது ஒரு கிளை, அதன் தலை ஆர்.எஸ்.எஸ். அவ்வமைப்பின் பல்வேறு பிரிவுகளில் ஒன்று பா.ஜ.க என்பது. அரசியலில் ஆர்.எஸ்.எஸ் காட்டும் திசையில் தான் பா.ஜ.க செல்ல வேண்டும்.

1950ல் பா.ஜ.க மீதிருந்த தடையை நீக்க முன்வந்த மாமேதை சர்தார் வல்லபாய்பட்டேல், அரசியலில் ஈடுபட மாட்டோம் என்ற வாக்குறுதியை வாங்கிக் கொண்டு தான் தடையை நீக்கினாராம். அதனால் தான் அரசியல் கட்சியாக தன்னை பதிவு செய்து கொள்ளாத ஆர்.எஸ்.எஸ். பாரதிய ஜனதா என்று பெயர் மாற்றிக் கொண்டு வந்தது. பாரதிய ஜனதாவில் தலைமைக்கான பிரச்சனை வந்தபோது, ஆர்.எஸ்.எஸ் தலையிட்டு அத்வானியை நீக்கிவிட்டு ராஜ்நாத் சிங்கை தலைவராக்கி வைத்தது. பாஜக தலைமை என்பது ஆர்.எஸ்.எஸ் தலைமைக்கு கட்டுப்பட்ட கீழமை தலைமை தான். அதனால் தான் ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் நேரடியாக தலையிட அத்வானி உட்ளிட்டவர்களின் நம்பிக்கையை துவம்சம் செய்து விட்டு, நரேந்திரமோடியை பிரதமர் வேட்பாளர் என்று ஆர்.எஸ்.எஸ். அறிவிப்பு செய்தது. பா.ஜ.கவே ஒரு நிமிடம் திகைத்துப் போனது. மூத்த தலைமைகளை கைகழுவிவிட்டு ஆர்.எஸ்.எஸ். ஏன் மோடியை தேர்ந்ததெடுக்க வேண்டும் என்ற கேள்வி பா.ஜ.கவிற்குள்ளேயே கிளம்பியது. ஆனால் எதிர்த்து கேள்வி கேட்காத, கிளர்ச்சியில் ஈடுபடாத கட்டுப்பாட்டை சகாக்களுக்கு கற்றுக் கொடுக்கும் அடிப்படையைக் கொண்டது ஆர்.எஸ்.எஸ். அதனால்தான் மோடியின் தேர்வை பா.ஜ.கவில் யாரும் விமர்ச்சிக்கவோ, எதிர்க்கவோ இல்லை.

சரியோ-தவறோ, வெற்றியோ-தோல்வியோ மோடியை தூக்கி சுமப்பதை தவிர வேறில்லை என்று, பலனை எதிர்பாராமல் கடமையை செய்ய பா.ஜ.கவினர் முன்வந்தனர். ஆர்.எஸ்.எஸ், பா.ஜ.க போன்ற இந்துத்துவ அமைப்புகளின் நட்சத்திர நாயகனாக மோடி அடையாளப்படுத்தப்பட்டுவிட்டார். இனி மோடி வேண்டாம் என்ற முடிவை பா.ஜ.க.வே எடுக்க முடியாது. மோடியை மற்றவர்கள் ஆதரிக்க மாட்டார்கள் என்றாலும் மோடி அல்லாத வேறொருவரை பா.ஜ.க தொண்டர்கள் ஆதரிக்கமாட்டார்கள். இப்படியான சிக்கலில் பா.ஜ.க. சிக்கிக் கொண்டது தான் உண்மை.

இப்படியாகத்தான் மோடி குஜராத்தில் இருந்து தேசிய அரசியலுக்குள் வந்து விழுந்தார். 2002 சம்பவத்தை அடுத்து மோடியை பதிவியிறக்க வாஜ்பாய் முற்பட்டபோது, அத்வானியை கொண்டு ஆர்.எஸ்.எஸ். தடுத்துவிட்டது. மோடி மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர். அண்ணன் பெரிய அட்டாக் பாண்டி, ரொம்ப கோபக்காரர், ஒரு சின்ன மாநிலத்தில் முதல்வராக இருக்கும் போதே 2000 முஸ்லிம்களை கொல்லமுடியும் என்றால் அவர் 28 மாநிலங்களுக்கு பிரதமரானால் ஒருமித்த கலவரத்தில் மொத்தம் எத்தனை முஸ்லிம்களை கொலைசெய்ய முடியும் என்பதுதான் ஆர்.எஸ்.எஸ் கணக்கு. அதற்கு மோடி இப்போது தேவைப்படுகிறார்.

எரித்தும்; கற்பழித்தும் கொல்லப்பட்ட பெண்கள், குழந்தைகளின் உயிரையும் மானத்தையும் காட்டிலும் இந்தியர்களுக்கு வளமும் வளர்ச்சியும் முக்கியமாகிவிட்டது. சிறுபான்மை மக்களை கொலை செய்யும், பெரும்பான்மை மக்களை குஷிப்படுத்தும் ஒரு அரசும், அதன் வளர்ச்சி திட்டங்களும் இந்த நாட்டுக்கு அவசியம் தேவைதானா என்று மக்கள் சிந்திக்க வேண்டும்.

- ஜி.அத்தேஷ்

Pin It