இந்தியக் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி கடந்த 20 ஆண்டுகளில் பின்பற்றப்படாத நடைமுறைக்கு உயிரூட்டியிருக்கிறார் என ஊடகங்கள் வானளாவப் புகழ்கின்றன. குடியரசு தினத்தை முன்னிட்டு நடைபெற்ற ராணுவ அணி வகுப்புக்குப் பின், துருப்புகள் பாசறைக்குத் திரும்பும் நிகழ்ச்சியில் பிரணாப் முகர்ஜி கலந்து கொண்டு பாரம்பரிய குதிரை வண்டியில் பவனி வந்து, ஆச்சரியம் அளித்திருக்கிறார்.

pranab_mukerjee_640

இதைவிட ஆச்சரியம் கலந்த, ஆனால் அதிர்ச்சியான சம்பவம் குடியரசு தினத்தன்று நடைபெற்றது. பல்வேறு வீர தீர செயல்கள் புரிந்தவர்களுக்கு ஆண்டுதோறும் குடியரசுத் தலைவர் விருது வழங்கப்படுவது வழக்கம். அப்படி இந்த ஆண்டு நடைபெற்ற விருது வழங்கும் விழாவில் தான் அந்த சம்பவம் நடைபெற்றது.

நக்சலைட்டுகளை ஒடுக்குவதற்காக பீஹார் மாநிலத்தின், சக்ரபந்தா அடர்ந்த காடுகளில் தாக்குதல் நடவடிக்கையில் ஈடுபட்டு உயிரிழந்த பிரிகு நந்தன் சவுத்ரி-க்கு 'கீர்த்தி சக்ரா' விருது வழங்கப்பட்டுள்ளது.

வீர தீர செயலுக்காக இந்திய அரசால் வழங்கப்படும் இரண்டாவது உயரிய விருது 'கீர்த்தி சக்ரா' விருதாகும். மத்திய ரிசர்வ் படை வீரர் (சி.ஆர்.பி. எஃப்.) ஒருவருக்கு, அதுவும் கொரில்லா தாக்குதல் பயிற்சி பெற்ற வீரர்களைக் கொண்ட 'கோப்ரா' (Commando Battalion for Resolute Action - CoBRA) படைப் பிரிவில் நக்சலைட்டுகளை ஒடுக்க போரிட்ட ஒருவருக்கு முதன்முறையாக கீர்த்தி சக்ரா விருது வழங்கப்பட்டுள்ளது.

இந்த விருது பிரிகு நந்தன் சவுத்ரியின் தியாகத்துக்காக மட்டும் வழங்கப்படவில்லை. ஆளும் அரசின் பொருளாதார கொள்கைகளை செயல்படுத்த உதவியதற்காகவும் அவருக்கு இந்த விருது வழங்கப்பட்டிருக்கலாம். பொருளாதார நடவடிக்கைகளுக்காக அதிகாரிகள் ஊழியம் செய்த நிலை மாறி, இப்படி படைப் பிரிவினரும் உயிரை விடும் நிலை இந்தியாவில் ஏற்பட்டுள்ளது.

மன்மோகன் சிங் இரண்டாவது முறையாக பிரதமராக பதவியேற்றதிலிருந்து, உள்நாட்டுப் பாதுகாப்புக்கு நக்சலைட்டுகள் கடும் அச்சுறுத்தலாக இருப்பதாக புலம்பி வருகிறார். முதல்வர்கள் மாநாட்டிலும் இதனை அவர் கூறி மாநில அரசுகளை எச்சரிக்கத் தவறுவதில்லை.

கார்ப்பரேட் முதலாளிகளுக்கும், அந்நிய முதலீட்டை ஈர்ப்பதற்கும் இந்திய வனப்பகுதிகளைத் தாரை வார்க்க ஆட்சியாளர்கள் தயாராகி விட்டனர். அதற்கெதிராக போராடும் ஆதிவாசிகளையும், அவர்களை அணி திரட்டும் நக்ஸலைட்டுகளையும் வளர்ச்சியின் எதிரிகளாக, உள்நாட்டு பாதுகாப்பின் அச்சுறுத்தலாக பிரதமர் அடையாளம் காட்டுவதின் உள் அர்த்தத்தை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

வளர்ச்சிக்கு எதிரான இந்த பயங்கரவாதிகளை ஒடுக்குவதன் மூலம், வளர்ச்சிக்கு வித்திடும் முதலாளிகளுக்கு நம்பிக்கையை ஏற்படுத்த உயிர்நீத்த ஜவானுக்குத் தான், மன்மோகன் சிங்கின் அமைச்சரவையில் நிதி அமைச்சராக பணியாற்றி, தற்போது குடியரசுத் தலைவராக வீற்றிருக்கும் பிரணாப் முகர்ஜி விருது வழங்கியிருக்கிறார்.

ஆங்கிலேயர்கள் இந்தியாவை அடிமைப்படுத்தும் முன்பு, இங்கு வணிக நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தபோது, லாபமீட்டும் துறையாக இருந்த கடல் வாணிபம் செய்ய வசதியாக இருந்த நகரங்களில் தனி அரசாங்கமே நடத்தினர். இந்தியாவிற்குள் ஓர் அந்நிய தேசமாக இவை விளங்கின. அப்போது ஆட்சி செய்து கொண்டிருந்த அரசர்களின் சட்டங்களிலிருந்து, ஐரோப்பியர்கள் விதிவிலக்கு பெற்றிருந்தனர். அதுமட்டுமின்றி கடனை திருப்பிச் செலுத்தாத இந்தியர்களின் குரல்வளையை நெறிக்கவும் ஐரோப்பியர்கள் அதிகாரம் பெற்றிருந்தனர்.

ஆங்கிலேயர்களின் ஏகாதிபத்திய நுணுக்கங்கள் தான் இப்போது பின்பற்றப்படுகிறது. சுதந்திர இந்தியாவில், சிறப்பு அதிகாரங்கள் பெற்ற கார்ப்பரேட் தேசங்கள், ஆதிவாசிகளின் சுவாசக் காற்றாய் இருக்கும் காடுகளின் மத்தியில் உருவாக்கப்படுகிறது. இந்திய சட்டங்கள் செல்லுபடியாகாத நவீன காலனிகளை, சுதந்திர இந்தியாவின் மன்னர்கள் உருவாக்கிக் கொடுக்கிறார்கள்.

ஆங்கிலேயர்கள் இந்திய மண்ணில் நன்றாக காலூன்றிய பின், இந்தியர்களின் உழைப்பைச் சுரண்ட உதவிய தரகு முதலாளிகளுக்கு சர், வீரப்பெருந்தகை உள்ளிட்ட பட்டங்களை வழங்கி, தங்களுடைய கால்களை தொடர்ந்து நக்கித் தின்னும் இன்பக் கிளர்ச்சியை ஊட்டினர். அது போன்ற விருதுகள் இந்திய பதிப்பில் தற்போது வழங்கப்பட்டு வருகிறது.

உயிரை இழந்த வீரரின் தியாகம் குறைத்து மதிப்பிடப்படுவதாக, தேசப் பக்தியை குத்தகைக்கு எடுத்துக் கொண்டோர் வியாக்கியானம் செய்யலாம். நக்ஸலைட்டுகளை ஒடுக்குவதற்கு காவலர்கள் மத்தியிலும் எதிர்ப்பு இல்லாமல் இல்லை. பீஹார் மாநிலத்தைச் சேர்ந்த காவலர்களை படைப் பிரிவில் சேர்க்க வேண்டும் என, அம்மாநில காவல்துறை தலைவர் அபய் ஆனந்த் சி.ஆர்.பி.எஃப்.-க்கு கடிதம் எழுதியுள்ள செய்தி, இந்த மாதம் 8ம் தேதி இணைய தளங்களில் வெளி வந்துள்ளது.

பீஹாரைச் சேர்ந்த சஞ்சய் யாதவ் என்ற சி.ஆர்.பி.எஃப். உதவி கமாண்டர், நக்சலைட்டுகளுக்கு உளவு வேலை பார்த்ததாக கைது செய்யப்பட்டுள்ளார். இவர் மீது UAPA (Unlawful Activities Prevention Act) சட்டம், ரகசிய பாதுகாப்பு சட்டம் உள்ளிட்ட பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இதனைக் காரணம் காட்டித்தான் அபய் ஆனந்த் சி.ஆர்.பி.எஃப்.-க்கு எச்சரிக்கை செய்துள்ளார். எதைத் தியாகம் என்பது...எதைத் துரோகம் என்பது...?

காடுகளின் கனிம வளங்களை உறிஞ்சி காசு பார்க்கும் காங்கிரஸ் எம்.பி. நவீன் ஜிண்டாலுக்கு இஸட் பிரிவு பாதுகாப்பு வழங்கப்படுகிறது. நக்ஸலைட்டுகளால் அவரது உயிருக்கு அச்சுறுத்தல் உள்ளதாம்?!....சொந்த மண்ணை, காற்றை, நீரை காக்கும் மக்கள் குருதிச் சொட்ட சாவதைத் தவிர வேறு வழியில்லை. அனைத்து ஆயுதங்களும் அவர்களை நோக்கியல்லவா உள்ளது.

அகிம்சையைப் போதித்த அண்ணல் காந்தி, ஒரு கட்டத்தில் "அடிமைத்தனம் என்ற பேரிடரை உதறியெறிய நாம் வன்முறையையும் நாட வேண்டியிருக்கும்" என்றார். காந்தியைப் பின்பற்றும் காங்கிரஸ் கட்சி அரச வன்முறையை குடிமக்கள் மீது ஏவுகிறது. ஆங்கிலேயர்களைக் காட்டிலும் ஆதிக்கவாதிகளாக‌ இருக்கின்றனர் நமது மங்குனி அரசர்கள்...

விடுதலைப் போராட்டத்தின் போது, ஆங்கிலேயர்கள் ஆதிக்கம் செலுத்த இந்திய முதலாளிகள் தரகு வேலை பார்த்தனர். அந்த தரகு முதலாளிகளிடம் ஆட்சியை ஆங்கிலேயர்கள் ஒப்படைத்துச் சென்றுள்ளனர் எனும்போது நாடு எப்போது சுதந்திரம் அடைந்தது?

- இயக்கன் (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)

Pin It