மானுட வாழ்வில் வாழ்க்கை வட்டச் சடங்குகள் என்பது பிறப்பு முதல் இறப்பு வரை நிகழும் ஒரு சமூகப் பண்பாட்டு நிகழ்வாகும். இந்நிகழ்வுகளின் அனைத்து நிலைப்பாடுகளிலும் முக்கிய பங்கு வகிப்பது வழிபாடு குறித்த சடங்கியல் கருத்தாக்கங்களேயாகும். ‘வழிபாடு’ என்பது மனித நம்பிக்கையில் ஆழமாக வேரூன்றிய ஒரு செயல்பாடாக உள்ளது. இவ்வடிப்படையில் வழிபாடு மனித வாழ்வில் அனைத்து நிகழ்வுகளிலும் முழுமைத் தழுவிய தன்மை பெற்றிருப்பதைச் சங்க இலக்கியங்கள் வாயிலாக அறிய முடிகிறது. ‘கடவுள்’ அல்லது ‘இறைவன்’ என்னும் கருத்தாக்கம் உருப்பெறும் முன்னரே சடங்குகள் தோற்றம் பெறலாயின. இச்சடங்குகள் இறை நம்பிக்கை சார்ந்ததாகவும், நம்பிக்கை மற்றும் பழக்க, வழக்கங்கள் சார்ந்ததாகவும் நிகழ்த்தப்பட்டுள்ளன. மனித வாழ்வோடு இறை தொடர்பான சடங்கு, வழிபாடு சார்ந்த இயங்கியல் கூறுகளை விளக்க முற்படுவதே இக்கட்டுரையின் பொருண்மையாகும்.சடங்கும் மானுடவியலும்
‘சடங்கு’ என்பது மனித வாழ்வை நெறிப்படுத்தும் பொருட்டு முன்னோர்களால் உருவாக்கப்பட்ட சமூகப் பண்பாட்டு நிகழ்வாகும். “வழி வழியாக வரும் பழமரபுகளைக் காத்தல் மனித மனத்தின் ஆழத்தில் இருக்கும் உணர்வுப்பூர்வ செயல் வடிவமாகும். சடங்குகள் இதற்குப் பெரிதும் துணைபுரிகின்றன. “முன்னோர் செய்த செயல்களைக் காரண, காரிய ஆராய்ச்சியில் ஈடுபடாமல் தாம் கண்டவாறே பின்பற்றுவதும், நிகழ்த்துவதும் சடங்கின் முறை” என்று வாழ்வியற் களஞ்சியம் குறிப்பிடுகிறது. இச்சடங்கு முறைகளின் வழியே மனிதனின் சமூக ரீதியான பருவமாற்றுத் தன்மையை அறியமுடிகிறது.
சங்க இலக்கியத்தில் சடங்கியல் ரீதியான நிகழ்வுகள் குறித்த பதிவுகள் பல இருப்பினும், ‘சடங்கு’ என்ற சொல்லாக்கம் எங்கும் காணப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கதாகும். சடங்கு குறித்த கருத்தாக்கத்தை தொல்காப்பியர் எடுத்துக்கூறும் போது ‘கரணம்’ என்ற சொல்லின் வழி எடுத்தியம்புகிறார்.
“பொய்யும் வழுவும் தோன்றிய பின்னர்
ஐயர் யாத்தனர் கரணம் என்ப” (தொல்காப்பியம் - நூற்.1091)
என்னும் நூற்பா மூலம், மனித வாழ்வியல் பொய், குற்றம் ஆகிய புலப்பாடு ஏற்படும் தருணத்தில், மனிதனை நெறிப்படுத்தும் பொருட்டு இக்கரணம் (சடங்கு) என்ற முறைமையை முன்னோர்கள் வகுத்தனர் என அறிய முடிகிறது. இந்நிலையில் ‘சடங்கு’ என்ற சொல் பிற்காலத்தில் எழுந்த ஒரு சொல்தான் என்பது உறுதிப்படுகிறது.
வழிபாடு விளக்கம்
‘வழிபடு’ என்ற வேர்ச்சொல்லிலிருந்து பிறந்த தொழிற்பெயரே ‘வழிபாடு’ என்ற சொல்லாகும். இச்சொல்லிற்கு அகராதிகள் “இறைவனை வணங்கும் செயல்” என்று பொருள் தருகின்றன.
இவற்றின் விரிந்த பொருளை இரா. சீனிவாசன் ‘வழிபாடு’, ‘ஆற்றுப்படை இரண்டும் ஒரே பொருளுடைய சொற்கள் என்றும் வழிப்படுத்துதல் என்பது வழிபாடு என்றானது. ஒருவன் தன்னையோ, பிறரையோ இறைவனிடம் வழிப்படுத்துதல்” என்று கூறிச் செல்கிறார். இவ்வகையே வழிபாடு என்பது மனிதனை வழிப்படுத்துவதற்காக அமைந்தது எனலாம். அஃதாவது இறைவன் முன் வேண்டுதல் அல்லது முறையிடல் என்ற கருத்தாக்கத்தில் நிகழ்த்தப்பெறும் சடங்காகிறது என்பது தெளிவாகிறது.
இறைவழிபாட்டின் தொடக்க நிலை
தொடக்கக்காலத்தில் மனிதன் இயற்கையின் சூழலில் வாழத் தலைப்பட்டவன் என்பதைச் சங்க இலக்கியப் பதிவுகளின் வாயிலாக அறிய முடிகிறது. இவ்வியற்கைச் சூழலே கால மாறுபாடுகளில் அவனிடத்தில் அச்சத்தை விளைவித்தது. இவ்வச்சமே ஒருவித அச்சத்தையும், பயத்தினையும் ஏற்படுத்தியது. இவ்விடத்து “அச்சமும் உணவுத் தேவையும் கொண்ட மனிதன் இயற்கையின் பேராற்றலை வணங்கத் தலைப்பட்டான். கூட்டு உழைப்பினால் உணவைத் தேட மனிதன் முற்பட்ட போது ஆற்றல் மிகுந்த இயற்கையைத் தனக்கு இணங்க வைக்க முயன்றான்” என்பார் தொ.பரமசிவன். இதன் வாயிலாக மனிதன் தன்னைவிட மேம்பட்ட ஆற்றல் ஒன்று இருக்கின்றது என்பதை உணரலானான். இவ்வித ஆற்றலின் தாக்கத்திலிருந்து தன்னைப் பாதுகாத்துக் கொள்ள வேண்டும் எனக் கருதினான். இம்முறையே அம்மனிதனுக்குள் உருவெடுத்த ஒருவிதச் சிந்தனையின் வெளிப்பாடே வழிபாடாக வளர்ச்சியுற்றது.
மனித வாழ்வில் சடங்கின் படிநிலை
மனிதன் தமது வாழ்நாளில் ஏற்படும் பருவ மாற்றங்களை அடிப்படையாகக் கொண்டு ஒவ்வொரு நிலையில் நுழையும் போது அந்நிகழ்வைக் குறிப்பதாகவும் அதன் சிறப்பையும், பண்பையும் பலனையும் நினைவூட்டுவதற்காகச் சிறப்புச் செயல்களைச் செய்கிறான். இந்நிலைப்பாட்டில் சடங்குகள் வாழ்வின் நிலைமாற்றத்தை உணர்த்தும் ஒரு மரபுசார் கருவியாக இயங்குகிறது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
இந்நிலையில் “பிறப்பு முதல் இறப்பு வரை மனிதனின் வாழ்க்கை சடங்குகளால் கட்டுண்டு கிடக்கிறது” என்று வாழ்வியற் களஞ்சியம் கூறுவது இங்கு உணரத்தக்கதாகும். மனித வாழ்வில் இயற்கையாக நிகழும் நிகழ்வுகளின் வழியே அவனது வாழ்வை நெறிப்படுத்தும் நோக்கத்திற்காக சடங்குகள் தோற்றம் பெறலாயின எனக் கருதப்படுகிறது.
பிறப்புச் சடங்குகள்
மனித வாழ்வின் தொடக்க நிலைச் சடங்குகளாகப் போற்றப்படுவன பிறப்புச் சடங்குகளாகும். மனிதன் கருவாக ஒரு பெண்ணின் வயிற்றில் உருக்கொண்டது முதல் அக்கரு ஓர் உருவமாக கருவறை விட்டுப் புற உலகிற்கு வரும் வரையிலும் அதன் பின்னும் ஒரு குறிப்பிட்ட பருவம் வரை நிகழ்த்தப்பெறும் சடங்குகள் பிறப்புச் சடங்குகள் என்னும் நிலைத்தன்மைக்குள் அடங்குகின்றன. “மனித வாழ்வியல் நிலைப்பாட்டில் பிறந்தது முதல் இறக்கும் வரை அவர்களுடைய வாழ்க்கை முழுவதும் ஏதாவது ஒரு சடங்கைச் செய்து திருப்தி அடைகிறார்கள்” என்பர் சோமலே. “கருவுற்றதிலிருந்தே சடங்குகள் தொடங்கி விடுகின்றன. குழந்தைப் பிறப்பிலிருந்தே வாழ்வின் ஒவ்வொரு கட்டத்திலும் சடங்குகள் நடைபெறுகின்றன” என்கிறார் ம.வேலுச்சாமி.
இவர்கள் முன்வைக்கும் கருத்துக்களின் வழி பிறப்புச் சடங்கின் தன்மையை அறியலாகிறது. இச்சடங்கிற்கு கருவுற்ற பெண்ணும் (தாய்) கருவும் (குழந்தை) நிலைக்களன்களாக அமைகின்றனர். இவர்களுள் ஏற்படும் மாற்றத்தின் புலப்பாடாகப் பிறப்புச் சடங்குகள் அமைகின்றன. இவ்வாழ்க்கை வட்டச் சடங்குகளை சங்க இலக்கியப் பாடல்களின் பரப்பில் பரவலாக காண முடிகிறது.
சூல் கொண்ட மகளிர் வழிபாடு
சூல் கொண்ட மகளிர் தங்களின் சூலுற்ற நிறைமாத காலத்தில் மகப்பேறு நல்ல முறையில் நிகழ இறைவனை வழிபடும் பொருட்டு ஒரு சடங்கு நிகழ்த்தியமையை மதுரைக் காஞ்சி எடுத்துரைக்கின்றது. இதனை,
“நுண்ணி ராகுளி இரட்டப் பலவுடன்
ஒண்சுடர் விளக்க முந்துற் மடையடு
நன்மா மயிலின் மென்மெல இயலிக்
கருஞ்சூல் மகளிர் பேணிக் கைதொழுது
பெருந்தோட் சாலினி மடுப்ப ஒரு சார்” (மது.கா. 606-610)
என்னும் பாடல் வரிகள் விளக்குகின்றன. நிறைந்த சூலைக் கொண்ட மகளிர் மெல்ல மெல்ல மயில் போல நடந்து சென்று கடவுளைக் கைதொழுதனர், பல மங்கல வாத்தியங்கள் ஒலிக்க இறைவனுக்குச் சுடர் விளக்கு, பாற்சோறு இட்டுப் படைத்தனர். பெரிய தோளையுடைய இறைவனுக்குப் பணி செய்யும் தேவராட்டி வழி படைப்புப் பொருளைச் செலுத்தி வழிபட்டனர். இம்முறையே “சூல் உற்றதற்கு தெய்வங்களுக்குப் பலிச்சோறு படைக்கும் பழையச் சடங்கும், புதிய சமய வழிபாடும் கலந்ததொரு வழக்கமாகத் தெரிகிறது (Magico and Religious Rite) என்பர் அறிஞர்.
இவ்வழிபாடானது குழந்தைப் பேற்றின் போது நிகழும் இடையூறுகளிலிருந்து தம்மைக் காத்தருள வேண்டும் என்ற நிலைப்பாட்டில் இடம் பெற்றமையை ‘மடுப்ப’ என்ற சொல்லாக்கம் குறிப்பிடுகிறது. இவ்வழிபாடு சூல் கொண்ட மகளிர்க்கு ‘இறைகாப்பின்’ பொருட்டு நிகழ்த்தியதை அறியமுடிகிறது. குறிப்பாகச் சோறு சமைத்து சூல் உற்ற மகளிர்க்காக வழிபாடு நிகழ்த்தியமையை ‘மடை’ என்ற சொல் விளக்குகிறது. இம்முறையை நடைமுறைச் சமூகத்தோடு நோக்கும்போது இந்நிகழ்வு அனைத்தும் சூல் உற்ற மகளிர்க்கு நிகழும் ‘வளைக்காப்புச் சடங்கோடு’ ஒப்பிடத்தக்கதாக விளங்குகிறது. இத்தகு சடங்கு முதல் சூல் கொண்ட மகளிர்க்கே நிகழ்த்தப்படுகிறது என்பது மேற்கண்ட சங்கப் பாடலின் வழி அறிய முடிகின்றது.
குழந்தை பிறப்பு
மானுடவியல் புலத்தில் “நிலைமாற்றம்” என்ற கருத்தாக்கம் பிறப்பு என்ற தளத்திலிருந்து தனது இயங்கியல் தன்மையைத் தொடங்குகிறது. இயல்பு நிலையிலிருந்த மகளிரைக் கருவுயிர்த்தல் என்ற நிகழ்வானது மீவியல்பு நிலையை அடையச் செய்கிறது. இந்நிலையில் கரு ஓர் உருப்பெற்று தன் இருப்பை விட்டு வெளிவரும் தன்மையை,
“.............. பெண்ணீற் றுற்றெனப்
பட்டமாரி ஞான்ற ஞாயிற்றுக்
கட்டி னிணக்கு மிழிசின் கையது
போழ்தூண் டூசியின் விரைந்தன்று மாதோ” (புறம். 82: 1-4)
என்னும் பாடல் வரிகள் எடுத்தியம்புகின்றன. அதாவது மனைவி பிள்ளைப்பேற்றுக்காக நோவுற்றதையும் அவள் பிள்ளைப் பேற்றின் போது தனித்திருக்க தோல்வாரினால் கட்டில் செய்வதும், குழந்தை பிறப்பிற்கான சூழலை எடுத்துரைக்கின்றன என்பது துலக்கமாகிறது.
குழந்தைக்கான சடங்கின் தொடக்கம்
பிறப்பு மனித வாழ்வின் தொடக்கமாகும், அவை, நன்முறையில் அமைய வேண்டும் என்பதற்காக குழந்தை பிறந்தவுடன் அக்குழந்தையின் எதிர்கால நலன் கருதி பண்டைக் காலத்தில் நம் முன்னோர்கள் சடங்குகளை ஏற்படுத்தியுள்ளனர்.
“குழந்தை பிறப்பு என்பது மனித வாழ்வில் முக்கிய நிகழ்வாகும். இந்தியாவின் பிற பகுதிகளைப் போல தமிழகத்திலும் இதையட்டிய சடங்குகளும் பழக்க வழக்கங்களும் இருக்கின்றன. அது பண்டைக் காலம் தொட்டு நிகழ்ந்து வருவதாகத் தெரிகிறது” என்றார் சோவியத் அறிஞர் விதாலி ஃபுர்னீக்கா.
குழந்தை பிறந்ததும் அதற்குச் ‘சேனை வைத்தல்’ என்னும் சடங்கும் நிகழ்வு முதன் முதலில் செய்யப்படுகிறது. ஆனால் இது பற்றிய குறிப்பு சங்க இலக்கியத்தில் காணக்கிடைக்கவில்லை. இந்நிகழ்விற்குப் பின்பே தாய்ப்பால் ஊட்டப்படுகிறது. இது குறித்து,
“திதலை மென்முலைத் தீம்பால் பிலிற்றப்
புதல்வற் புல்லிப் புனிறுநா றும்மோ?” (நற்.380: 3-4)
சுணங்கு அணிந்த மெல்லிய கொங்கையின் இனிய பால் பொருகுதலாலே அந்தப்பால் சுரப்பப் புதல்வனைப் புல்லிக்கொண்டு எம்தோளும் ஈன்ற அணிமையாளாகிய முடைநாற்றம் வீசா நிற்கும் என்பர் உரையாசிரியர் சின்னத்தூரார். தாயானவள் தன் குழந்தைக்குத் தாய்ப்பால் ஊட்டிய முறைமையை இப்பாடல் வரிகள் எடுத்தியம்புகின்றன. தாய்ப்பால் ஊட்டல் என்பது சங்ககாலம் தொடங்கி இன்று வரை ஒரு மரபுசார் நிகழ்வாக இருந்து வருகிறது.
பெயரிடல் சடங்கு
பிரபஞ்சத்தில் வாழும் மனித இனங்களுள் தன் வாழ்வையும் நடத்திச் செல்லப் பிறப்பின் பொருட்டு வரும் குழந்தைக்கு ‘பெயரிடல் சடங்கு’ சமூக ரீதியிலான பண்பாட்டு அடையாளத்தைத் தருகிறது. இதை மானுடவியலாளர் ‘சமூகத்திற்குள் அழைத்தல்’ என்று குறிப்பிடுகின்றனர். இச்சடங்கிற்கு மரபு ரீதியிலான சமூகப் பண்பாட்டு அடையாளத்தைச் சங்க இலக்கியங்கள் முன்வைக்கின்றன.
“......................தான்தன்
முதல்வன் பெரும்பெயர் முறையுளில் பெற்ற
புதல்வற் புல்லிப் பொய்த்துயில் துஞ்சும்” (கலி. 75:23-25)
“யகன் பெருஞ் சிறப்பிற் றந்தை பெயரன்” (ஐக். 403: 3)
“சிறந்தோன் பெயரன் பிறந்த மாறே” (நற். 40:12)
“மேதக்க எந்தை பெயரனை யாங்கொள்வோம்” (கலி. 81:35)
குழந்தைக்குத் தன்னைப் பெற்ற தந்தையின் (தாத்தா) பெயரைச் சூட்டுவதே பழந்தமிழர் மரபாக இருந்தமையை இச்சங்கப்பாக்கள் விவரிக்கின்றன.
குடுமி களையும் சடங்கு
மனித இனங்களுள் பிறந்தக் குழந்தைக்குக் காப்பின் பொருட்டு நிகழ்த்தப்பெறும் சடங்குகளுள் முடியிறக்குதலும், காது குத்தலும் சடங்கியல் நிகழ்வாகும். இம்முறை குழந்தை பிறந்த ஆறுமாதம் அல்லது ஒருவருடம் கழிந்த பின் நிகழ்த்தப்படும் சடங்கு முறையாகும். இச்சடங்குகளுள் முடியிறக்குதல் குறித்து,
“குடுமி களைந்த நுதல் வேம்பி னொண்டளிர்
நெடுங்கொடி யுழிஞைப் பவரொடு மிலைந்து" (புறம். 77:2-3)
என்னும் பாடல் வரிகள் குழந்தைக்கு முடிகளைதல் பற்றிக் கூறுகின்றன. இது பருவ மாற்றத்தை உணர்த்தும் பொருட்டு குடுமி களையப்பட்டது என்பது இங்கு துலக்கமாகிறது. ஆனால். நாட்டுப்புற மரபில் குழந்தைப் பிறந்த ஆறுமாதம் கழித்து அவரவர் வசதிக்கேற்ப குலதெய்வங்களுக்கு குடுமிகளையும் மரபு இருந்துள்ளது.
“முதலில் அல்லது மூன்றாம் ஆண்டில் குழந்தையின் தலையைச் சிரைக்கும் சடங்காகும்” என்று கலைக்களஞ்சியம் மொழிகிறது. இம்முறையே, குடிமிகளைதலும் ஒரு சடங்கார்ந்த நிகழ்வாக பழந்தமிழ் மானுடச் சமூகத்தில் இருந்தமையை அறிய முடிகிறது.
காது குத்தும் சடங்கு
காது குத்தும் சடங்கு என்பது பெரும்பாலும் முடி இறக்கும் சடங்குடன் இணைந்து நிகழும் சிறுபான்மை தனிப்பெரும் நிகழ்வாக நிகழந்திருக்கலாம். காது குத்தும் சடங்கு நிகழ்ந்தமைக்கான தெளிவானச் சான்று சங்க இலக்கியத்தில் இல்லை. ஆனால் காதில் அணிகள் அணிந்தமைக்கு,
“கா தொன்ற களைதல்” என்று தொல்காப்பியமும் (நூற்பா. 1208)
“நகைதாழ்பு துயல் வடுஉம் வகையமை
பொலிங்குழை” (திரு.முரு. 86)
என்று சங்கப்பாடல்கள் எடுத்துரைக்கின்றன. இம்முறையே காது குத்துதல் என்பது பெருவிழாவாக நிகழாவிட்டாலும் அச்சத்தின் பால் கொண்ட மரபின் பொருட்டு நிகழ்ந்திருக்கக் கூடும் என்பது அறியலாகிறது.
திருமணச் சடங்கின் தோற்றம்
தமிழ் இலக்கியங்களில் திருமணம் தொடர்பான தொடக்கக் காலப் பதிவுகளை வழங்குவதில் குறிப்பிடத்தக்க இடத்தை வகிப்பது சங்க இலக்கியங்களேயாகும். இவ்வகையே திருமணச் சடங்கின் தோற்றம் குறித்துச் சங்க இலக்கியங்களில் பல பதிவுகள் காணக்கிடக்கின்றன. இனக்குழுச் சமூகத்திற்கு முற்பட்ட காலக் கட்டத்தில் திருமணச் சடங்கு குறித்த புரிதல் மக்களிடையே இருந்ததற்கான சான்றுகள் இல்லை. இனக்குழுச் சமூகம் என்ற குழு அமைப்பு உருவான நிலையில் சமூக ஒழுங்கிற்கான நெறியியல் சார்ந்த விதிமுறைகள் முறைப்படுத்தப்பட்டமையை தொல்காப்பியம் வாயிலாக அறிய முடிகிறது.
“மேலோர் மூவர்க்கும் புணர்த்த கரணம்
கீழோர்க்காகிய காலமும் உண்டே” (தொல்காப்பியம் - 1090)
என்று தொல்காப்பியர் முன்வைப்பதை நோக்குமிடத்து திருமணத் தோற்றத்திற்கான புரிதலை விரிவாக அறியமுடிகிறது. இந்நூற்பா சொற்பொருள் குறித்த கருத்தாக்கத்தை “திருமணச் சடங்குகள் தோன்றிய நிலையை விவரிக்கிறது” என்பார் சிலம்பு நா. செல்வராசு.
மண நீராட்டும் சடங்கு
மணம் செய்வதற்கு முன்பாக மணத்திற்குரிய பெண்ணை மங்கல நீராட்டுவது வழக்கமாகும். இவ்வழக்கம் பண்டைக்காலந் தொட்டு இருந்தமையை அகநானூற்றுப் பாடல்கள் உரைக்கின்றன.
“வதுகை மண்ணிய மகளிர் விதுப்புற்றுப்
பூக்கணும் இமையார் நோக்குபு மறைய” (அகம். 136:8-9)
“உச்சிக் குடத்தர் புத்தகல் மண்டையர்
பொதுசெய் கம்பலை முதுசெம் பெண்டிர்
முன்னவும் பின்னவும் முறைமுறை தரத்தரப்
புதல்வற் பயந்த திதலையவ் வயிற்று
வாலிழை மகளிர் நால்வர் கூடிக்
கற்பினின் வழாஅ நற்பல வுதவிப்
பெற்றோர் பெட்கும் பிணையை யாகென
நீரொடு சொரிந்த ஈரிதழ் அலரி
பல்லிருங் கதுப்பி னெல்லோடு தயங்க” (அகம். 86:8-16)
என்னும் பாடல் வரிகளில், மங்கல மகளிர் பலர் தங்கள் தலையில் புதிய மண் கலங்களில் தண்ணீரைக் கொணர்வர். அந்நீரைத் தங்கள் அகவைக்கேற்ப முறைப்படுத்தி அவற்றுள் மக்களை ஈன்றெடுத்த மகளிர் நால்வர் கூடி அப்பெண்ணுக்கு வாழ்த்துக்கூறி குளிர்ந்த மலரையும் நெல்லினையும் கலந்த மஞ்சள் நீரைக் கொண்டு மணப்பெண்ணை நீராட்டுகின்றனர். இதன் மூலம் மணநீராட்டுச் சடங்கு அக்காலத்தில் வழக்கில் இருந்துள்ளமையை அறிய முடிகிறது.
சிலம்பு கழீ சடங்கு
சிலம்பு என்னும் அணி சங்ககால மகளிர் அணியும் அணிகலன்களுள் ஒன்றாகும். இவ்வணி சங்ககாலத்தில் மகளிர்க்கு சிறுபருவத்திலேயே அணியப்பட்டதை அகநானூற்றுப்பாடல் (219) சான்று பகர்கிறது. இதன் பொருட்டு “பாலுண் பருவத்தின் சிலம்பு இடும் வழக்கம் இருந்தது என்பதை அறியலாம்” என்று கூறும் ந. சுப்புரெட்டியார் கூற்று இங்கு கருதத்தக்கது. இவ்வாறு அணியப்பட்ட சிலம்பு திருமணத்திற்கு முன் கழித்தல் என்பது ஒருவகை மரபாக இருந்ததை “மணம் புரிவதற்கு முன் மணமகளது காலில் பெற்றோர்களால் அணியப்பட்டச் சிலம்பை நீக்குவதற்கு ஒரு சடங்கு செய்யப்படும் அது ‘சிலம்புகழி நோன்பு’ எனப்படும்” என்று உ.வே.சா. குறிப்பிடுகிறார்.
முடிவுரை
சங்க இலக்கியத்தில் வழிபாட்டுச் சடங்குகள் என்று அணுகும்போது அவற்றுள் பல வழிபாட்டுப் பதிவுகள் உள்ளன. இவ்வழிபாட்டுச் சடங்குகள் இறைத்தன்மையை நோக்கி நகர்வதை அறியமுடிகிறது. தொடக்கக்கால மனிதவாழ்வு இயற்கைச் சூழலையே மையமிட்டு அமைந்துள்ளது. அச்சூழலில் ஏற்பட்ட அச்சமே ‘வழிபாடு’ என்ற ஒரு நிலைக்கூற்றை மனிதச் சிந்தனையில் ஏற்படுத்தியது என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. மனிதன் தன் வாழிடச் சூழலிற்கேற்ப வழிபாட்டு முறைகளை அமைத்துக் கொண்டான். இவ்வகைமையின் வெளிப்பாடாக வெறியாடி வழிபடல், நோன்பிருந்து வழிபடல், பலியிட்டு வழிபடல் ஆகிய வழிபாட்டு முறைகளை குறிப்பிடலாம். சங்ககால வழிபாடு அச்சத்தின் பொருட்டு தங்களைப் பாதுகாத்தல் என்ற கருத்தாக்கங்களின் அடிப்படையிலும் இறைவனை திருப்திப்படுத்துதல் எனும் அடிப்படையில் சடங்குகள் மேற்கொள்ளப்பட்டமையை உணர முடிகிறது.
சங்ககால வழிபாட்டுச் சடங்குகளை மானுடவியல் ரீதியாக நோக்கும்போது பண்டையக்காலப் பண்பாட்டுத் தொன்மையினை அறியமுடிகிறது. அதோடு மட்டுமல்லாது பண்டையக்கால மரபுச் சமகாலத்தில் மாற்றுரு பெற்றுத் திகழ்வதையும் அறிய முடிகிறது.
பண்டையக்கால மரபின் எச்சங்களையும் அறிந்துணர முடிகிறது. நம்முடைய காலம் வளர்ச்சிப் பாதையை நோக்கிச் சென்றாலும் பழந்தமிழரின் எச்சக் கூறுகள் ஆங்காங்கே தென்படுகின்றன. பழைய பண்பாட்டு மரபுகள் சமகாலத்தில் மாற்றுவடிவம் பெற்றாலும் ஒவ்வொரு சடங்கியல், வழிபாட்டு முறைகளிலும் தொன்மையின் எச்சப்பதிவுகள் உள்ளன என அறுதியிட்டுக் கூறமுடிகின்றது. இவ்வழிபாட்டுச் சடங்கின் பொருட்டு விளக்கம் பெறும் கருத்துக்களான வழிபாடும், வழிபாட்டுச் சடங்கும், பண்டைக்காலம் தொட்டு இன்று வரை அச்சத்தின் பொருட்டும் வளமையின் பொருட்டும் நிகழ்கின்றன என்பது மறுக்கவியலாத உண்மை எனக் கொள்ளலாம்.
- முனைவர் சு.தீபலட்சுமி, கட்டுரையாளர்: உதவிப் பேராசிரியர், தமிழாய்வுத் துறை, தனலட்சுமி சீனிவாசன் மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி (தன்னாட்சி), பெரம்பலூர்.