அண்மைக்காலமாக நம் நாட்டின் பொருளாதார நிலை மிகவும் பலவீனமானதாகவும் கவலைக்குரியதாகவும் மாறியுள்ளது. இதற்கு இந்திய ரூபாய் மதிப்பின் கடும் வீழ்ச்சி ஒரு காரணியாகச் சுட்டிக் காட்டப்படுகின்றது. நாட்டின் நிதிப்பற்றாக்குறை, நடப்புக்கணக்குப் பற்றாக்குறை, பணவீக்கம் போன்றவற்றால் ரூபாயின் மதிப்பு கடந்த அறுபது ஆண்டுகளில் மிகவும் சரிந்துள்ளது. இது மேலும் சரியக்கூடும் என்று வேறு கணிக்கப்படுவதுதான் பேரச்சத்தை நம்மிடையே வளர்ப்பதாக இருக்கின்றது. நடப்புக்கணக்குப் பற்றாக்குறை அதிகரிப்பால் மட்டும் இவ் இக்கட்டான சூழ்நிலையினை மாற்றியமைத்திட இயலாது எனலாம். அதாவது உள்நாட்டு உற்பத்தி ஏற்றுமதியின் அளவைக் கூட்டுவதும் அதைத் திறம்பட செயல்படுத்துவதும் அயல்நாட்டு இறக்குமதியின் அளவைக் கட்டுக்குள் கொண்டுவருவதும் இதற்குள் அடங்கும். இதில் தனி மனிதன் செய்யவேண்டிய காரியம் ஒன்றுமில்லை. அனைத்தும் அரசாங்கத்தின் கையிலுள்ளது. தனித்துவமிக்க உள்நாட்டு உற்பத்திப் பொருள்களுக்குப் போதிய ஆக்கமும் ஊக்கமும் வழங்குவதோடு அதற்குரிய, உகந்த விலை நிர்ணயம் உறுதிசெய்யப்படுவதை அரசு தம் தலையாயப் பணியாகக் கொள்ளவேண்டும்.

பன்னாட்டு வணிகம் சிறக்க உள்நாட்டு வணிகத்தை நசுக்குதல் என்பது தமக்குத்தாமே சவக்குழித் தோண்டிக் கொள்வதற்குச் சமம். பன்னாட்டுப் பெருவணிக முதலாளிகள் என்போர் பெரும் இலாபம் ஈட்டுவது ஒன்றையே தம் முதன்மைக் குறிக்கோளாகக் கொண்டு தமக்குச் சாதகமாக விளங்கும் நாடுகளை நோக்கிப் படையெடுக்கும் சாதகப் பறவைகளாவர். அதுதான் அவர்களது இயல்பு. அதைக் குறை கூறிக்கொண்டே இருப்பதும் மீளவும் அவர்களுக்காகப் பட்டுக்கம்பளம் விரித்து நெடுந்தவமிருப்பதும் வீண்வேலையாகும். அதற்குள் இங்குள்ள பொருளாதாரம் அதலபாதாளப் படுகுழிக்குள் போய்ச்சேர்ந்து விடும்.

ஒரு நாட்டின் வளர்ச்சிக்கு நீடித்த, நிலைத்த, முன்னோக்கிச் செல்லும் பொருளாதாரம் அவசியம். அதற்கு எப்போதும் அயலாரின் கையையே எதிர்பார்த்துக் கொண்டிருப்பது என்பது அறிவீனம். பொய்க்கால்களை எடுத்துவிட்டு சூம்பிக்கிடக்கும் சொந்தக்கால்களுக்கு நாம் முதலில் வலுவூட்டுதல் நல்லது. நலிவுற்றுக் கிடக்கும் பாரம்பரியமிக்கத் தொழில்களான விவசாயம், நெசவு, பல்வேறு குடிசைத்தொழில்கள் போன்றவற்றிற்கு புத்துயிர் தந்து மேம்படுத்தி வருவாயைப் பெருக்கி நாட்டின் நிதிப்பற்றாக்குறையினை நிவர்த்தி செய்திட முயலுதல் என்பது ஒரு வழிமுறையாகும். இதன் காரணமாக நாட்டில் பஞ்சம், பட்டினி, வேலையில்லாத் திண்டாட்டம் முதலானவை ஒழியும். தனிமனித வாழ்க்கைத்தரம் உயரும், மேம்படும். அதன்வாயிலாக நாட்டின் பொருளாதாரம் செழுமையுறும் என நம்பலாம்.
அதுபோல், வரி வருவாயைப் பெருக்குவதன் மூலமாக நிதிப் பற்றாக்குறையும் பணவீக்கமும் குறைய அதிக வாய்ப்புண்டு. அந்நிய முதலீடுகளை ஈர்ப்பதும் ஈடுபடுத்துவதும், அளவுக்கு மீறிச் சலுகை காட்டுவதும் மட்டும் ஒரு தேசத்தின் இன்றியமையாத நோக்கமாகத் திகழ்வது நல்லதல்ல. அதற்கான பலனை இப்போது அனுபவித்துக் கொண்டிருக்கிறோம் என்றால் மிகையில்லை. நாட்டின் வரி வருவாயானது பல்வேறு வழிகளில் நேரடியாகவும் மறைமுகமாகவும் தற்போது பெறப்பட்டு வந்தாலும் பேரளவிற்கு நிகழும் வரி ஏய்ப்பை யாராலும் தடுக்க முடியவில்லை. அது மறைவாகவும் மிக நுட்பமாகவும் கணந்தோறும் நிகழ்ந்துகொண்டிருப்பதும் அதற்குக் காரணமாகும். இதைத் தடுப்பதற்கான வழிமுறைகள் பற்றி ஆராயவும் செயல்படுத்தவும் இதுவே தக்கத் தருணமாகும்.

வரிச்சலுகையென்பது இங்கே திறந்தவெளிச் சந்தையாக உள்ளது. நியாயமும் உண்மைத்தன்மையும் வரிச்சலுகையின் இருபக்கங்களாவன. அந்நியச் செலாவணி இருப்பைக் கூட்டவும் முதலீடுகளைக் கவரவும் வரிச்சலுகைகளை வாரியிறைப்பது என்பது தேவையற்றது. இந்திய சந்தை என்பது மிகவும் பரந்துபட்டது. பல்வேறு பரப்புரைகளால் பெருந்திரள் மக்கள் நுகர்வுக் கலாச்சார அடிமைகளாகிவிட்டனர். அவர்களுடைய வாங்கும் சக்தி கூடியுள்ளது.

படித்த, பாமர மக்களிடையே வேறுபாடின்றி அனைவரும் உலகத்தோடு போட்டிப்போடத் துவங்கிவிட்டனர். ஆக, பன்னாட்டு முதலாளிகள் நாம் ஆதரிக்கவிட்டாலும்கூட தாமே துணிந்து தம் உற்பத்திப் பொருள்களைச் சந்தைப்படுத்திட விழைவதை வாடிக்கையாகக் கொள்வர். ஏனெனில், உலக மக்கள்தொகையில் சீனாவிற்கு அடுத்தபடியாக இருப்பது நாம் மட்டுமே. நமக்குப் போட்டி எவருமில்லை. அதேபோல், இந்திய வர்த்தகம்போல் சீன வர்த்தகம் கிடையாது. அரசால் தணிக்கைக்குட்படுத்தப்பட்ட, கட்டுப்பாடுமிக்க, தரம் பற்றிக் கவலைப்படாமல் பெருமளவிலான, எளிய மக்கள் பயன்பாட்டை நோக்கமாகக் கொண்ட வர்த்தகம் அவர்களுடையது. இங்குள்ள மக்கள் தரத்திற்குத்தான் முக்கியத்துவம் தருகின்றனர். அப்படியிருக்கும்பட்சத்தில் வியாபார நிர்பந்தம் எளிதாக உள்ளே அவர்களை ஈர்த்துவிடும். அல்லது நம் கட்டுப்பாடுகளுக்குத் தாமாவே கீழ்ப்படிந்து வியாபாரத்தைச் செம்மையாக மேற்கொள்ளும் நடவடிக்கைகளில் இறங்கிவிடுவர். எப்போதும் தும்பைவிட்டுவிட்டு வாலைப் பிடிக்கும் கதையாக, சிறப்பு நேர்வாக எல்லாவற்றிற்கும் தேவையின்றிச் சலுகைகள் வழங்கி வழக்கம்போல் திண்டாட்டத்தில் தவிப்பது இங்கு வாடிக்கையாக உள்ளது. அதாவது, கொக்கைப் பிடிக்க சிறு தீனி போதும். அதைவிடுத்து வற்றாதக் குளத்தையா நெடுநாள் குத்தகைக்கு விடுவது?

தேவையின்றிக் கொட்டித் தரப்படும் வரிச்சலுகைகள் பலநேரங்களில் அதிகமான வரிஏய்ப்பிற்கே வழிகோலுகிறது. நாட்டின் நலன்கருதி எந்த அரசானாலும் இதற்கு தயவுதாட்சண்யமின்றிக் கடிவாளம் போடுவது நல்லது. இந்தியச் சந்தையைத் தவிர்த்து உலகச் சந்தையால் தாமே இயங்கமுடியாத சூழலே நடப்பு உண்மையாகும். இதை மீண்டும் மீண்டும் நினைவில் நிறுத்திக்கொள்வது நன்மை பயக்கும். பல்வேறு காலகட்டங்களில் நடந்த பல்வேறு தவறான பொருளாதாரக் கொள்கைகளால் 1950-60களில் ரூ4.76 ஆக டாலருக்கு நிகராக இருந்த இந்திய ரூபாயின் மதிப்பு 2005-2013களில் கடும்வீழ்ச்சி கண்டு அண்மை நிலவரப்படி ரூ68.80ஐ தாண்டிக்கடக்க முயற்சிக்கின்றது. அதுபோல், 1991-2001களில் 3500 கோடி டாலர் மதிப்பிலிருந்த நடப்புக்கணக்குப் பற்றாக்குறையின் அளவானது தற்போது 89,000 கோடியாக உயர்ந்துள்ளது. தவிர,மூலதனப் பொருள் இறக்குமதியின் அளவானது 2004-05இல் 2550 கோடி டாலரிலிருந்து உயர்ந்து 2013-14இல் 9150 கோடி டாலராக உள்ளது. இவை சீரமைக்கப்பட்டாலொழிய நமக்கு இங்கே விடுமோட்சமில்லை. அதற்காக ஒருவரையொருவர் இங்குக் குற்றம்சாட்டிக்கொண்டு இருப்பதென்பது நல்லதல்ல. உடும்புப் பிடியாய்ப் பற்றியிருக்கும் திட்டமிட்டு நடத்தப்படும் இச்சோதனைகளிலிருந்து நாட்டை விடுவிப்பதானது அரசியல்வாதிகளின் கைகளில் மட்டுமல்ல, ஒவ்வொரு இந்திய குடிமகனின் அவசர, அவசியப் பணியாகவும் உள்ளது.

சீனா, பாகிஸ்தான் உள்ளிட்ட நாடுகளுடனான போர்க்காலங்களிலும் எதிர்பாராத இயற்கைப் பேரழிவு நிகழ்வுகளிலும் நாம் அனைவரும் இந்தியர் என்ற ஒற்றை முழக்கத்துடன் ஒன்றிணைந்து ஒருமித்து மண்ணையும் மக்களையும் ஒருசேர காக்கத் தோள்கொடுத்துள்ளதை மறக்கவியலாது. வேற்றுமைகளையெல்லாம் மறந்து நாடெங்கும் ஒளிர்ந்த அந்த தேசப்பற்றுக்கு அப்போது ஈடுஇணையில்லை. அத்தகைய ஒருநிலைதான் இப்போது இங்கு எழவேண்டும். இதற்கு நாட்டிற்குள்ளும் நாடுகடந்தும் வாழும் கோடானுகோடி இந்தியக் குடிமகன்களின் ஆக்கப்பூர்வமான ஒத்துழைப்பும் நிதியுதவியும் மிக அவசியம். இந்தியப் பெருமுதலாளிகள் வெளிநாடுகளில் பதுக்கி வைத்திருக்கும் கணக்கில் வாராதக் கருப்புப்பணம் போன்றவற்றை மனமுவந்து வெளியிலெடுத்து அரசுக்கும் மக்களுக்கும் உதவுவதன் வாயிலாகப் பரிகாரம் தேடிக்கொள்ள முடியும்.

மத்திய, மாநில அரசுகள் தேசத்தின் பொதுச்சொத்துகளாக விளங்கும் மண், மணல், நிலம், நிலக்கரி, பெட்ரோலியப்பொருள்கள், தாது உள்ளிட்ட கனிம வளங்கள், தண்ணீர், அரிய வாயுக்கள், அலைக்கற்றைகள் முதலியனவற்றை தனியாருக்குத் தாரைவார்த்து ஒதுங்கிக்கொள்ளாமல் நாட்டின் எல்லோருக்குமான அப்பொதுச்சொத்துகளைக் காத்தும் கொள்ளை போகாமல் தடுத்தும் தேசத்தின் பொருளாதார வளர்ச்சிக்கு ஆக்கமும் ஊக்கமும் தருவதைக் கடமையாகக் கொள்வது நல்லது. அரசின் நல்லாதரவுடன் செயல்பட்டு நாட்டின் பொருளாதாரத்தைக் கட்டுக்கோப்பில் வைத்திருந்து வளர்ச்சியடைந்து வந்த பொதுத்துறை நிறுவனங்கள் புதிய பொருளாதாரக் கொள்கையின் முக்கிய அங்கமான உலகமயம், தாராளமயம், தனியார்மயம் காரணமாக அவற்றின் உறுதிகுலைத்துச் சீரழிக்கப்படுவதன் விளைவே பொருளாதாரத் தேக்கத்திற்கும் பணவீக்கத்திற்குமான காரணங்களெனலாம். உலக வங்கி மற்றும் பன்னாட்டு நிதியம் ஆகியவற்றின் நிர்பந்தத்திற்கு அடிபணிந்து ஆன்றோரும் சான்றோரும் வடிவமைத்துத் தந்த இந்தியப் பொருளாதாரத்தின் தனித்தன்மைகள், சுயசார்புகள் போன்றவற்றையும் அவற்றிலுள்ள குடிமக்களின் இறையாண்மையையும் விட்டுத்தருவதென்பது இயலாத காரியம் என எண்ணுதல் நலம். எல்லாவற்றிற்கும் வருவார் ஒரு மீட்பர் என்றெண்ணி ஏங்குதல் பேதைமை. சுயநலத்தைப் புறந்தள்ளிவிட்டு தாய்நாட்டுப் பற்றுடன் தீரமுடன் உலகிற்கு நியாயத்தை எடுத்துரைத்துப் பறிபோன,போய்க் கொண்டிருக்கும் பொதுசொத்துகள் மீதான பொருளாதார உரிமைகளை மீளாய்வு, மறுச்சீரமைப்பு, மறுக்கட்டமைப்பு போன்றவற்றை அரசு சிரமேற்கொண்டு மாற்றமும் ஏற்றமும் காணவேண்டிய தருணம் இதுவாகும்.

இதுதவிர, பொதுமக்கள் அனைவரும் நாட்டின் நிதிப் பற்றாக்குறையினைப் போக்கவும் ஈடுகட்டவும் முயலுதல் நல்லது. அதன்முதற்படியாக, தனிநபர் மற்றும் தொழில் ரீதியான வருவாய் நிதிக்கணக்குகளை வெளிப்படைத்தன்மையுடன் முறையாகத் தாக்கல் செய்து உரிய வரியை அரசிற்கு செலுத்துவதை பெருங்கடமையாகக் கொள்தல் இன்றியமையாதது. தொழில் நிறுவனங்கள், பெரிய தொழில் முனைவோர்கள், அரசியல்வாதிகள், பெருமளவில் பணம் ஈட்டும் கலைஞர்கள், முதலாளிகள், வணிகர்கள், உயர்பதவி அலுவலர்கள், உயர்தொழில் மேற்கொள்வோர், கல்வி நிலைய நிர்வாகிகள் போன்றோர் துளியும் வரிஏய்ப்பில் ஈடுபட முனையாது பெருந்தன்மையுடன் வரி செலுத்தி தேசம் மேம்பட உதவுதலானது அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்துகொள்ள வழியின்றி வாடும் ஏழை, எளியோர் நல்வாழ்வு பெற வழிவகுக்கும். கணக்கில் காட்டப்படாமல் நாட்டில் எங்கும் எதுவும் நடைபெறவில்லை என்ற உயரிய நிலை மலிவதும் கருப்புப் பணம் ஒழிவதும் அவசியம். மேலும், இலஞ்சமும் ஊழலும் பொருளாதார முடக்கத்திற்கு உரமூட்டுகின்றன. இவை அடியோடு ஒழிக்கப்பட வேண்டுமானால், மனித மனத்தை ஆட்டிப்படைக்கும் பணப் பேராசை மனப்பாங்கு மாறிட வேண்டும். நீர்க்குமிழியாக விளங்கும் மனித வாழ்க்கையில் எதுவும் நிரந்தரமில்லை என்பதை உணர்ந்து ஒவ்வொருவரும் தம் கடமையுணர்ச்சியுடன் நல்வினையாற்றுதலும் நாட்டை முன்னோக்கி அழைத்துச் செல்லத்தக்கப் பங்களிப்புகளை வழங்குதலும் முக்கியம். நல்ல மனம் வைத்தால் எல்லோரும் இந்நாட்டின் மன்னர்கள் மட்டுமல்லர், மீட்பர்களும் கூட.

பல்வேறு கலைச்செல்வங்கள், தலைசிறந்த பண்பாடுகள், உயர்ந்த வாழ்வியல் விழுமியங்கள், தத்துவச் செய்திகள் போன்றவற்றை உலகிற்கு இந்தியா அளித்து வருவதால் உலகம் நம்மிடையே நிறைய எதிர்பார்க்கின்றது. தற்காலிகமாக சூழ்ந்துள்ள இருளிலிருந்து இந்தியா மீண்டெழும் என்கிற நம்பிக்கை அனைவரிடமும் காணப்படுவதைப் பல்வேறு ஊடகங்கள் மூலமாக அறியமுடிகிறது. உயிரினும் மேலானது மானம் என்பர். மானத்தினும் பெரியது நாணயமாகும். நாணயம் என்பது வெறும் சொல்லல்ல. அதுவோர் உணர்வு. மனித மனச்சாட்சியின் அத்தாட்சி. ஆதலால்தான், நம் பண்டமாற்றுக்குதவும் ரூபாயைப் பெருமையுடன் நாணயம் என்றழைக்கின்றோம். அத்தகைய நம் நாணயம் மதிப்பிழக்கலாமா?

- மணி.கணேசன், மன்னார்குடி-614001 (செல்பேசி:9442965431, இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)

Pin It