தமிழகத்தில் என்றுமில்லாத அளவில் தேசிய இனங்களின் தன்தீர்வு உரிமை குறித்து அதிகமாக விவாதிக்கப்படுகிறது. எதிர்காலத்தில் இவ்விவாதம் மேலும் அதிகரிக்கக் கூடும். ஏனெனில் தோழர்.கார்முகில் சொல்வதைப் போல இந்தியாவில் இரண்டு அரசியல் போக்குகள் செயல்படுகின்றன. ஒன்று இந்திய தேசியம் எனும் தேசிய இன ஒடுக்குமுறைப் போக்கு. மற்றொன்று அதற்கு எதிர் நிலையில் வளர்ந்து வரும் தேசிய இனங்களின் ஜனநாயக போக்கு. முதலாவது போக்கில் இந்திய பெரு முதலாளிகள், நிலப்பிரபுக்கள், ஏகாதிபத்தியங்கள், பார்ப்பனிய அதிகாரத்துவ ஆற்றல்கள் கைகோர்த்துள்ளனர். அதற்கு எதிர்நிலையில் வளர்ந்து வரும் ஜனநாயக போக்கில் தேசிய இன விடுதலைப் புரட்சியாளர்கள், போராளிகள், மற்றும் ஜனநாய ஆற்றல்கள் கைகோர்த்துள்ளனர். முதலாவது போக்கை பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சிகளாக காங்கிரஸ், பி.ஜே.பி, சி.பி.ஐ, சி.பி.ஐ.(எம்) போன்ற பிற்போக்கு கட்சிகளும், இரண்டாவது போக்கை பிரதிநிதித்துவப் படுத்தும் கட்சிகளாக தமிழ்த் தேசிய விடுதலையை இலட்சியமாகக் கொண்டிருக்கும் கட்சிகளும் உள்ளன. சந்தர்ப்ப வாதிகளாக சி.பி.ஐ (எம்-எல்) -லின் பல்வேறு பிரிவுகளும் அந்தந்த தேசிய இன அடிப்படையில் அமைந்த மாநில கட்சிகளும் செயல்படுகின்றன.

                அரசியல் என்பது எளிதான முழுவெண்ணை ஒத்ததல்ல. அது கடினமான பின்ன எண் கணக்கைப் போன்றது. அதனை ஊடுறுவிப் பார்த்து சமுதாயத்தின் நடு இழையை இறுகப் பற்ற வேண்டும். ஒவ்வொரு சமுதாயத்திலும் எண்ணிலடங்கா வர்க்கங்கள், போக்குகள், ஒன்றை ஒன்று எதிர்க்கின்றன, ஒன்றுபடுகின்றன, மீண்டும் போராடுகின்றன. இதுதான் சமுதாய இயக்கங்களின் எதிர் மறைகளுக்கு இடையிலான ஒற்றுமையும் போராட்டமும் ஆகும். வர்க்க சமுதாயத்தில் எண்ணிலடங்கா முரண்பாடுகள் தற்காலிகமாக தோன்றி மறைந்து வந்த போதிலும் சில முதன்மை அடிப்படை முரண்பாடுகள் மக்கள் புரட்சியின் மூலமாகத்தான் தீர்க்கப்படுகின்றன. சமுதாய வளர்ச்சி விதிகள் தனி மனிதர்களின் விருப்பு, வெறுப்பைச் சார்ந்தது அல்ல. அது சமுமுதாய புறநிலை இயக்க விதிகளைச் சார்ந்தது. வரலாற்றில் தனி நபர்களின் பாத்திரம் என்பது கூட சமுதாயத்தின் புற நிலை விதிகளை அறிந்துக் கொண்டு அதற்கேற்ப செயல்படுவதுதான். எனவே இந்தியாவில் உள்ள தேசிய இன மக்களின் வரலாறு ஆளும் வர்க்கங்களது விருப்பங்களிலிருந்தோ, அல்லது அவர்களது கையுருண்டைச் சோற்றுக்கு வேலை செய்யும் புரட்டல்வாதிகளின் விருப்பங்களுக்கு அப்பால் முன்னேறத்தான் போகிறது. வரலாற்றில் இக்கும்பல்கள் சிறு சிறு தடைகளை ஏற்படுத்த இயலும் என்ற போதிலும் அதன் போக்கை தடுக்க இயலாது.

                11.06.2013 -ல் தினமணியில் சி.பி.ஐ.(எம்) -ன் புரட்டல்வாத தலைவர்களில் ஒருவரான டி.கே.ரெங்கராஜன் “சுய நிர்ணய உரிமை - தொடரும் விவாதங்கள்” என்ற தலைப்பில் கட்டுரை ஒன்றை எழுதியுள்ளார். அதில் தன்தீர்வு உரிமை, அது ஏன் முன்வைக்கப்பட்டது? ஒரு நாட்டிற்கு மட்டுமா? உலகம் முழுமைக்குமானதா? அத்தீர்வு எக்கால கட்டம் வரைக்குமானது? இந்தியா இலங்கைக்கு இத்தீர்வு பொருந்துமா? என புரட்டல்வாதி கேள்வி எழுப்பி விளக்கவே இல்லை. நாம் முற்படுவோம்.

                கட்டுரையின் இறுதியில் கூறுகிறார் “இந்திய மார்க்சிஸ்ட்டுகள், மார்க்ஸ், ஏங்கல்ஸ், லெனின் மற்றும் ஸ்டாலின் ஆகியோரின் கருத்துக்களின் மீது நின்று இன்றைய உலகையும், சமுதாய பிரச்சனைகளையும் அணுகுகிறார்கள்”. சி.பி.ஐ. (எம்) - ன் புரட்டல்வாத கும்பல் மார்க்சிய அறிஞர்களின் கருத்துக்கள் மீது நிற்கிறார்களா? அல்லது இந்திய ஏகாதிபத்தியவாதிகளின் கருத்துக்களின் மீது நிற்கிறார்களா? என படித்துப் பார்த்து நீங்களே முடிவு செய்யுங்கள்.          

                உலகம் எம்படி முன்னேறி வருகிறது? முன்னேறுவதற்கான திசை வழியில் இருக்கிறது?

                நிலப்பிரப்புத்துவம் அல்லது மன்னர்களது ஆட்சியில் அரசின் எல்லைகள் மக்களின் விருப்பத்திற்கு மாறாக மன்னர்களின் படை வலிமைக் கொண்டு தீர்மானிக்கப்பட்டன. முதலாளி;த்துவ ஜனநாயத்திற்கான போராட்டம் தொடங்கியபோது அது தேசிய இன மக்களின் விருப்பத்திற்கு ஏற்ப தேசிய இன அரசுகளாக தோன்றின. இப்போராட்டம் மேற்கு ஐரோப்பா நாடுகளின் முதலாளிகளால் முதலில் தொடங்கி வைக்கப்பட்டது. மக்களும் இதற்கு செவி சாய்த்தனர். முற்போக்கான முதலாளித்துவ அரசு (தேசிய இன அடிப்படையிலான அரசு) உலகிலேயே ஜப்பானைத் தவிர மேற்கு ஐரோப்பாவில்தான் தோன்றின. மேற்கு ஐரோப்பாவில் அயர்லாந்தைத் தவிர தேசிய இன அரசு அமைவது பொது விதியாக இருந்தது. அயர்லாந்து தனது பல்தேசிய இன அரசு என்ற விதிவிலக்கான நிலைமையை எதிர்த்து தேசிய இன அரசுக்கான போராட்டத்தை நடத்தியது. தென் அயர்லாந்து விடுதலையை அடைந்ததும், வட அயர்லாந்து விடுதலைக்கான போராட்டத்தை இன்றும் நடத்தி வருகிறது. கிழக்கு ஐரோப்பா மற்றும் ஆசியா கண்டத்தில் ஜப்பானைத் தவிர பல்தேசிய இன அரசுகள் தோன்றுவதே பொது விதியாக இருந்தன. பல்தேசிய இன அரசுகளில் ஒடுக்கும் தேசிய இன ஆளும் வர்க்கத்திற்கு எதிரான போராட்டத்தை ஒடுக்கப்படும் தேசிய இன மக்கள் நடத்தினர், நடத்தி வருகின்றனர்.

                சமுதாய இயக்கமானது நாடோடி, ஆண்டான்-அடிமை, நிலப்பிரபுத்துவம், முதலாளித்துவம், சோசலிசம் - கம்யூனிசம் என்றவாறு முன்னேறி வருவதைப் போல உலகில் அடிமைப்பட்டுள்ள அனைத்து தேசிய இனங்களும் விடுதலை பெற்ற பிறகுதான் சர்வதேசியம் (தேசிய இனங்களின் சமத்துவம்) தோன்றப் போகிறது. இந்த வரலாற்று உண்மையை புரட்டல்வாதி டி.கே.ரெங்கராஜன் மூடி மறைக்கிறார்.

                நாகரீக உலகில், நாடுகளில் தேசத்தில் அனைத்துப் பெண்களுக்கும் விவாகரத்து உரிமை உண்டு. இதனை மறுப்பவர்கள் பிற்போக்காளர்கள், கயவர்கள். அதே போல உலகில் உள்ள அனைத்து தேசிய இனங்களுக்கும் தன் தீர்வு உரிமை உண்டு. இதனை ஏற்காதவர்கள் பிற்போக்காளர்கள், ஏகாதிபத்திய கைகூலிகள், கயவர்கள், தேசிய இன ஒடுக்குமுறையாளர்கள். ஏனெனில் இக்கும்பல் தேசிய இனங்களின் சுதந்திரமான தங்க தடையற்ற முதலாளித்துவ வளர்ச்சிக்கு தடை ஏற்படுத்துகின்றன. முதலாளித்துவத்தை கடந்துதான் சோசலிசம், கம்யூனிசம் நோக்கி வரலாறு முன்னேறும். தேசிய இனங்களின் தன் தீர்வு உரிமை என்பது ஒரு தேசிய இனம் தனது அரசியல், பொருளியியல் பண்பாட்டை தானே தீர்மானித்துக் கொள்ளும் உரிமையாகும். வேறொரு வகையில் கூறினால், ஒரு தேசிய இனம் தனது தலைவிதியை தானே தீர்மானித்துக் கொள்ளும் உரிமையாகும். இது ஒரு தேசிய இனத்தின் மிகப் பெரும் ஜனநாயக உரிமையாகும். இதன் பொருள் ஒரு தேசிய இனம் அவ்வுரிமையுடன் பிற தேசிய இனங்களுடன் சேர்ந்தோ அல்லது தனித்தோ வாழ்வதைக் குறிப்பதுடன், தனது அரசியல், பொருளியியல் பண்பாட்டை முற்போக்காவோ, பிற்போக்காவோ அமைத்துக் கொள்ள முழு உரிமை படைத்தவையாகும். இது தேசிய இனங்களின் வளர்ச்சி விதிகளை கணக்கில் கொண்டும் ஏகாதிபத்திய ஆக்கிரமிப்புக்கு எதிராகவும் மார்க்சால் முன்வைக்கப்பட்டது. இதற்கு விரிவான ஆய்வுக் கட்டுரைகளை லெனின் வெளியிட்டார்.

                1896 ஆம் ஆண்டு லண்டன் சர்வதேச காங்கிரசின் தீர்மானம் கூறுவதாவது, “எல்லா தேசிய இனங்களுக்கும் சுய நிர்ணயத்துக்கான முழு உரிமை உண்டு என்பதை, தான் ஆதரிப்பதாக இந்த காங்கிரஸ் அறிவிக்கிறது, இராணுவ, தேசிய இன, அல்லது இதர வரம்பற்ற அதிகாரத்தின் நுகத்தடியின் கீழ் துயருறும் எல்லா நாடுகளின் தொழிலாளர்களுக்கும் இது தனது அனுதாபத்தைத் தெரிவித்துக் கொள்கிறது, சர்வதேச முதலாளித்துவத்தை முறியடிப்பதற்காகவும், சர்வதேச சமூக - ஜனநாயத்தின் இலட்சியங்களை அடைவதற்காகவும் ஒன்று சேர்ந்து போராடுவதற்காக உலகம் முழுவதும் உள்ள வர்க்க உணர்வு கொண்ட தொழிலாளர்களின் அணிகளில் சேரவருமாறு அனைத்து நாடுகளின் தொழிலாளர்களையும் இக்காங்கிரஸ் அழைக்கிறது”

                “எல்லா தேசிய இனங்களுக்கும் சுயநிர்ணயத்துக்கான முழு உரிமை உண்டு” என லண்டன் சர்வதேச காங்கிரசின் தீர்மானம் கூறுவது கவனிக்கத்தக்கது.

                இப்படி ஒரு தீர்மானம் இருக்கிறது என்பது புரட்டல்வாத தலைவர்களின் ஒருவரான டி.கே.ரெங்கராஜனுக்கு தெரியாமல் இருக்க வாய்ப்பில்லை. தெரிந்தே இவ்வுரிமை உலகம் முழுமைக்குமானது இல்லை என கூசாமல் பொய் சொல்கிறார். உலகம் முழுவதிலும் முதலாளித்துவ காலக்கட்டத்தில் தேசிய இன அரசு அமைவது பொது விதியாக இருக்கிறது, எனவே எல்லா தேசிய இனங்களின் தன் தீர்வு உரிமையை அங்கீகரிக்க வேண்டும். இதனை வலியுறுத்தி லெனின் மூன்று புத்தகங்களை வெளியிட்டார். அவை, 1.தேசிய இனப் பிரச்சனைகளும் பாட்டாளி வர்க்க சர்வதேசியவாதமும், 2.ஏகாதிபத்திய பொருளாதாரவாதமும் மார்க்சியத்தை இழிவு படுத்தும் கேலிச் சித்திரமும், 3.பாட்டாளி வர்க்க சர்வதேசியவாதமும். மார்க்சியமும் தேசிய இனப்பிரச்சனையும் என்ற நூலினை ஸ்டாலின் வெளியிட்டார். இந்த நூல்கள் அனைத்தும் உலகில் உள்ள அனைத்து தேசிய இனங்களின் தன்தீர்வு உரிமையை அங்கீகரிக்க வேண்டும் என வற்புறுத்துகின்றன. தேசிய இனங்களின் தன் தீர்வு உரிமையை அங்கீகரிக்க வேண்டும் என்பது பொதுவான கோட்பாடு. குறிப்hன நிலைமைகளில் தேசிய இனம் பிரிந்து போவது குறித்து ஆதரித்தோ, எதிர்த்தோ வேலை செய்ய வேண்டும் என்பதை மறந்துவிடக் கூடாது. இதில்தான் சி.பி.ஐ.(எம்-எல்)-லின் பல்வேறு குழுக்கள் சந்தர்ப்பவாதிகளாக காட்சி அளிக்கின்றனர்.

                தேசிய இனம், தேசிய இன அரசு அமைவது வரலாற்றில் பொது விதியாக இருப்பதை லெனினின் மேற்கோளிலிருந்து சில எடுத்துக் காட்டுகளை தருகிறேன்.

                “ருஷ்யாவின் தேசிய இன இயக்கங்கள் தோன்றியிருப்பது இதுதான் முதல் தடவையல்ல, இவை இந்த நாட்டுக்கு மட்டுமே பிரத்தியேகமானதும் அல்ல. உலகம் பூராவும் நிலபிரபுத்துவத்தை எதிர்த்து முதலாளித்துவம் அடையும் இறுதி வெற்றியின் காலப்பகுதி தேசிய இன இயக்கங்களுடன் இணைந்துள்ளது” …

                … “எனவே, ஒவ்வொரு தேசிய இன இயக்கத்தின் போக்கும், தேசிய இன அரசுகளை நிறுவும் திசையிலானதாகும். அவ்வரசுகளின் கீழ் நவீன முதலாளித்துவத்தின் இந்த தேவைகள் மிகவும் நன்றாக பூர்த்தி செய்யப்படும். மிகவும் தீர்க்கமான பொருளாதார காரணிகள் இந்த இலட்சியத்தை நோக்கி இட்டுச் செல்கின்றன. எனவே மேற்கு ஐரோப்பா, ஏன் நாகரீக உலகம் முழுமைக்குமே முதலாளித்துவ காலப்பகுதியில் தேசிய இன அரசு மாதிரி படிவமானது, சகசமானது”. (முதல் நூல் பக்கம் - 76)

                “ “தேசிய இன அரசு இன்றைய நிலைமைகளுக்கு” (அதாவது மத்திய கால, முதலாளித்துவத்துக்கு முந்தியதான நிலைமைகளில் இருந்து வேறுபட்டதான முதலாளித்துவ, நாகரீகமான, பொருளாதார முறையில் முற்போக்கான நிலைமைகளுக்கு) “மிகவும் பொருத்தமான அரசு வடிவமாகும் இந்த வடிவத்தில்தான் அரசு தனது பணிகளை (அதாவது முதலாளித்துவத்தின் மிகத் தடையற்றதான, மிக விரிவான, மிக விரைவான வளர்ச்சிக்கு வகை செய்யும் பணிகளை) “மிகவும் நன்கு செய்து முடிக்க முடியும்” கலப்பான தேசிய இன இயைபுடைய (தேசிய இன அரசுகளில் இருந்து வேறுபட்ட நிலையில் பல்தேசிய இன அரசுகள் என்று அறியப்படும்) அரசுகள் “ஏதேனும் ஒரு காரணத்தால் எப்போதுமே அசாதாரணமான, வளர்ச்சி குன்றிய” (பின் தங்கிய) “நிலையிலான உள் அமைப்பினை கொண்டனவாக” இருக்கும் என்ற காவுத்ஸ்கியின் மேலும் துல்லியமான முடிவான கருத்தை இதோடு சேர்த்துக் கூற வேண்டும். வளர்ந்து வரும் முதலாளித்துவத்தின் தேவைகளுக்கு நன்கு தகவமைவது எதுவோ அதனுடன் பொருந்தாமை என்ற பொருளில் மாத்திரமே அசாதாரணம் பற்றி காவுத்ஸ்கி கூறுகிறார் என்பதை நாம் சொல்லத் தேவையில்லை”. (முதல் நூல் பக்கம் - 78)

                “ஆசியாவின் உள்ளே ஜப்பானில் மட்டுமே, அதாவது ஒரு சுதந்திரமான தேசிய இன அரசில் மட்டுமே பண்ட உற்பத்தியின் மிகவும் முழுமையான வளர்ச்சிக்கும், மிக தங்கு தடையற்ற, மிக விரிவான, மிக விரைவான முதலாளித்துவ வளர்ச்சிக்கும் தேவையான நிலைமைகள் உருவாக்கப்பட்டுள்ளன என்ற உறுதியான உண்மையை எவ்விதத்திலாயினும் அசைக்க முடியுமா? ஜப்பான் ஒரு முதலாளித்துவ அரசு, அந்த காரணத்தால், அதுவே மற்ற தேசங்களை ஒடுக்கவும், காலனிகளை அடிமைப்படுத்தவும் தொடங்கிவிட்டது, முதலாளித்துவத்தின் வீழ்ச்சிக்கு முன்பாக, ஐரோப்பாவைப் போலவே சுதந்திரமான தேசிய இன அரசுகளின் ஓர் அமைப்பாக வளர்வதற்குறிய கால அவகாசம் ஆசியாவுக்கு கிடைக்குமா? இல்லையா? என்பதை நம்மால் கூற முடியாது. ஆனால் முதலாளித்துவமானது, ஆசியாவை தட்டி விழிப்புறச் செய்துவிட்டு, அந்த மாகண்டத்திலும் கூட எல்லா இடங்களிலும் தேசிய இன இயக்கங்களை வெளிக்கொணர்ந்துள்ளது என்பதும், இந்த இயக்கங்களின் போக்கு ஆசியாவில் தேசிய இன அரசுகளை உருவாக்கும் திசையிலானது என்பதும், இத்தகைய அரசுகள்தான் முதலாளித்துவத்தின் வளர்ச்சிக்கான மிகச் சிறந்த நிலைமைகளை உத்தரவாதம் செய்யும் என்பதும் மறுக்க முடியாத உண்மைகள்”   (முதல் நூல் பக்கம் - 81)

                “முற்போக்கான நாகரீகமுள்ள மனித குலம் முழுமையின் உதாரணமும், பால்கன் நாடுகள், ஆசியா ஆகியவற்றின் உதாரணமும், தேசிய இன அரசு என்பது முதலாளித்துவத்தின் விதியும் “பொது வழக்கும்” ஆகும். பல்தேசிய இன அரசு என்பது பின் தங்கிய நிலையைக் குறிப்பது. அல்லது அது ஒரு விதிவிலக்கு என்னும் காவுத்ஸ்கியின் கருத்து முற்றிலும் சரியானது என்பதைக் காட்டுகின்றன”. (முதல்நூல் பக்கம்-82)

                “முதலாளித்துவ உறவுகளை அடிப்படையாகக் கொண்ட இத்தகைய அரசு தேசிய இனங்கள் சுரண்டப்படுவதையும், ஒடுக்கப்படுவதையும் ஒழித்துவிட முடியும் என்று இதை அர்த்தப்படுத்திக் கொள்ளக்கூடாது என்பது தெளிவு. தேசிய இன அரசுகளை உருவாக்குவதற்கான ஆவாவினைத் தோற்றுவிக்கும் வலிமை வாய்ந்த பொருளாதார காரணிகளை மார்க்சியவாதிகள் காணத் தவறிவிடக் கூடாது என்பதே இதன் பொருள் ஆகும். மார்க்சிய வேலைத் திட்டத்தில் உள்ள “தேசிய இனங்களின் சுய நிர்ணயம்” என்பதை வரலாற்று - பொருளாதார கருத்துப்படி பார்த்தால் அது அரசியல் சுய நிர்ணயம், அரசு சுயாதினம், தேசிய இன அரசின் உருவாக்கம் என்றே பொருள்படும். அது வேறு எதுவாகவும் இருக்க முடியாது”. மேலே கூறிய அனைத்தும் லெனின் முன்வைத்தவை. (முதல் நூல் பக்கம் - 82)

                இந்தியாவைப் பற்றி ஸ்டாலின் கூறுவதை கேளுங்கள் “இன்று இந்தியா ஒரே முழுமை என்று சொல்லப்படுகிறது. ஆனால் இந்தியாவில் ஒரு புரட்சிகர எழுச்சி ஏற்படும் போது, தமக்கென்று தனிப்பட்ட மொழிகளையும், கலாச்சாரங்களையும் கொண்டவையும் இதுவரை அறியப்படாதவையுமான பல தேசிய இனங்கள் அரங்கில் தோன்றும் என்பதில் ஐயமில்லை. பல்தேசிய இனங்களிடையே பாட்டாளி வர்க்க கலாச்சாரத்தை கொண்டு வருவது என்பது, இந்த தேசிய இனங்களின் மொழிகள் மற்றும் வாழ்க்கை முறைக்கு இசைவான முறையிலே நடைபெறும் என்பதில் ஐயமில்லை” மேலும் கூறுவார் “இந்தியாவின் விசயத்தில் கூட முதலாளித்துவ வளர்ச்சி மேலே செல்லச் செல்ல அதுவரை உறங்கிக்கிடந்த எண்ணற்ற தேசிய இனங்கள் உயிர்ப்பெற்று எழக்காணலாம்”.

                மேலே கூறிய 1896 ஆம் ஆண்டு லண்டன் சர்வதேச காங்கிரசின் தீர்மானம், லெனின், ஸ்டானின் மேற்கோள் ஆகியவற்றிலிருந்து கீழ்வரும முடிவுகளுக்கு நாம் தைரியமாக வரலாம்.

1.            உலகம் முழுவதிலும் தேசிய இன இயக்கங்கள் தோன்றின, தோன்றி வளர்ந்து வருகின்றன. அவை தேசிய இன அரசுகளை அமைத்தன, அமைக்கும் திசை வழியில் உள்ளன.

2.            தேசிய இன இயக்கங்கள்தான் ஜனநாயக புரட்சியயை நடத்துகின்றன.

3.            தேசிய இன இயக்கங்கள், தேசிய இன அரசுகளை தோற்றுவிக்கின்றன.

4.            தேசிய இன அரசுகள்தான் முதலாளித்துவத்தின் சுதந்திரமான தங்கு தடையற்ற வளர்ச்சிக்கு துணை செய்கின்றன.

5.            முதலாளித்துவ வளர்ச்சிக் கட்டத்தில் தேசிய இன அரசு உருவாவது உலகில் பொது விதியாக இருக்கிறது.

6.            தேசிய இன அரசு உருவாவதற்கான சக்தி வாய்ந்த பொருளாதார காரணிகளை மார்க்சியவாதிகள் காணத் தவறக்கூடாது.

7.            தன் தீர்வு உரிமை இல்லாத பல்தேசிய இன அரசு பிற்போக்கானது. பின் தங்கிய நிலைமையினை குறிப்பது.

8.            உலகம் முழுவதிலும் உள்ள அனைத்து தேசிய இனங்களுக்கும் தன்தீர்வு உரிமை உண்டு.

                ஆக உலகில் உள்ள அனைத்து தேசிய இனங்களுக்கும் தன்தீர்வு உரிமை உண்டு என்பது தெளிவு. இந்தியாவிற்கும் இலங்கைக்கும் இது பொருந்தும். இவ்வுரிமையை செயலுக்கு வழிகாட்டியாகக் கொண்டு எக்காலகட்டம் வரைக்கும் பயன்படுத்துவது என அடுத்துப் பார்ப்போம். தேசிய இனங்களின் தன் தீர்வு உரிமை என்பது காரல்மார்க்ஸ், ஏங்கல்ஸ், லெனின் மற்றும் ஸ்டாலின் கால கட்டத்துக்கு மட்டுமே உரித்தனவா? அல்லது வர்க்க சமுதாயம் ஒழியும் வரையிலுமானதா?

                புரட்டல்வாதி டி.கே.ரெங்கராஜன் கூறுகிறார் தேசிய இனங்களின் தன்தீர்வு உரிமை மார்க்சிய அறிஞர்களின் கால கட்டத்துக்கு மட்டுமேயானதாக காட்டுகிறார். லெனின் கூறுகிறார் “சோசலிசப் புரட்சியும், தேசிய இனங்களின் சுய நிர்ணய உரிமையும்” (முதல் நூல் பக்கம் 180) என்ற ஆய்வுரைகளில் லெனின் எழுதினார் “வெற்றி பெற்ற சோசலிசம் பூரண ஜனநாயகத்தை கட்டாயம் ஏற்படுத்த வேண்டும், ஆகவே தேசிய இனங்களிடையில் பூரண சமத்துவத்தை ஏற்படுத்துவதோடு நில்லாமல், ஒடுக்கப்படும் தேசிய இனங்களின் சுய நிர்ணய உரிமை, அதாவது தடையேதும் இல்லாமல், சுதந்திரமாக அரசியல் ரீதியில் பிரியும் உரிமை நிலவும்படியும் செய்ய வேண்டும். அடிமைப்பட்ட தேசிய இனங்களை விடுதலை செய்வோம் என்றும், அவைகளுடன் சுதந்திரமான ஐக்கியத்தின் அடிப்படையில் - சுதந்திரமான ஐக்கியம் என்ற சொல் பிரியும் உரிமை இல்லாவிடில் பொய்யானது - உறவுகளை அமைத்துக் கொள்வோம் என்றும், தற்போது மட்டுமின்றி புரட்சியின் போதும், புரட்சி வெற்றி பெற்ற பின்னரும் தம் செயல்கள் அனைத்திலும் நிருபிக்காத சோசலிஸ்ட் கட்சிகள் சோசலிசத்திற்கு துரோகம் செய்பவை ஆகும்”.                                                                                           (முதல்நூல் பக்கம் 180).

                “எவ்வாறு ஒடுக்கப்படும் வர்க்கத்தின் சர்வாதிகாரம் என்ற இடைநிலைக் காலத்திற்குப் பிறகுதான் வர்க்கங்களை மனித சமுதாயம் ஒழிக்க முடியுமோ அதே போல ஒடுக்கப்படும் எல்லா தேசிய இனங்களுக்கும் முழு விடுதலை என்ற - அதாவது, பிரிந்து போகும் சுதந்திரம் என்ற - இடைநிலைக் காலத்திற்குப் பிறகுதான் தேசிய இனங்கள் தவிர்க்க முடியாத வகையில் இரண்டறக் கலத்தல் என்ற நிலையை அடைய முடியும்”. (முதல் நூல் பக்கம் 186)

                “சோசலிசத்தின் கீழ் தேசிய இனங்களின் சுய நிர்ணயத்தை அமுலாக்க மறுப்பது சோசலிசத்துக்கு துரோகம் செய்வதாகும் என்பதை நாம் வலியுறுத்தியிருக்கிறோம்”                                                                   (முதல் நூல் பக்கம் 205)

                ஆக தேசிய இனங்களின் தன் தீர்வு உரிமை என்பது முதலாளித்துவத்துக்கு மட்டும் அல்ல. சோசலிசத்திலும் அவ்வுரிமையை லெனின் வலியுறுத்துகிறார். ஆனால் புரட்டல்வாதி டி.கே.ரெங்கராஜன் எழுதுகிறார் “தேசிய இனங்களின் பிரிந்து செல்லும் உரிமையை நியாயப்படுத்த, காரல்மார்க்ஸ், ஏங்கல்ஸ், லெனின் மற்றும் ஸ்டாலின் ஆகியோர் காலத்து வரலாற்றையும், தத்துவார்த்த விளக்கங்களையும் தாராளமாகப் பயன்படுத்தி, மாற்றுக் கருத்துக் கொண்டோரை நையாண்டி செய்கிறார்கள். மார்க்சியத்தின்பால் ‘அவர்களுக்கு இருக்கும் நம்பிக்கை’ நம்மை புல்லரிக்கச் செய்கிறது! இதுபோன்ற தர்க்கங்களில் ஈடுபடுவோரின் ‘மார்க்சியப் பக்தி’ சுய நிர்ணய உரிமை என்ற முழக்கத்துடன் சுருக்கி விடுகிறது”. புரட்டல்வாதிக்கே உரிய தோரணையில் முன்வைத்துள்ளதை பார்த்தீர்களா?

                மேலும் அவர் எழுதுகிறார் “கம்யூனிஸ்ட் இயக்கம், பலதரப்பட்டவாத, பிரதிவாதங்களை வலுவாக நடத்தியது, தமிழகத்தில் திராவிட நாடு கோரிக்கையை எதிர்த்து கம்யூனிஸ்ட்டுகள் பெரும் போராட்டத்தை நடத்த வேண்டியிருந்தது. குறிப்பாக, சுய நிர்ணய உரிமை குறித்து இன்றைய வாதங்களைவிட ஆயிரம் மடங்கு வாதங்கள், தத்துவார்த்த விளக்கங்கள் முன் வைக்கப்பட்டன.

                கடந்த கால வரலாற்றை முற்றாக புறக்கணிக்காமல், இன்றைய சூழ்நிலைக்கு ஏற்ப, திட்டவட்டமான நிலைமைகள் குறித்த திட்டவட்டமான பகுப்பாய்வை அடிப்படையாகக் கொண்டிருக்க வேண்டும் என்ற முடிவுக்கு வந்தன. மார்க்சிய லெனினியத்தின் மீற முடியாத கருவியாக இக்கோட்பாடு கருதப்பட்டது. இந்த திறவுகோளின் மூலமாக உண்மையை கண்டறிய வேண்டுமே அல்லாது, ஆசையின் மூலம் அல்ல!”

                இரண்டு மேற்கோளிலும் புரட்டல்வாதி டி.கே.ரெங்கராஜன் என்ன சொல்கிறார்? தேசிய இனங்களின் தன் தீர்வு உரிமை என்பது காரல்மார்க்ஸ், ஏங்கல்ஸ், லெனின் மற்றும் ஸ்டாலின் காலத்துக்கு உரியது. மேலும் அது மீறக்கூடாத ஒன்றல்ல.

                தேசிய இனங்களின் தன் தீர்வு உரிமை என்பது முதலாளித்துவத்திலிருந்து சோசலிசம் வரையிலுமான கால கட்டத்திற்குறியது என லெனின் மேற்கோள்களிலிருந்து எடுத்துக் காட்டினேன். அடுத்து இவ்வுரிமை மீறக் கூடிய ஒன்றா என பார்ப்போம்.

                தேசிய இனப் பிரச்சனை என்றால் என்ன? பல்தேசிய நாட்டில், அல்லது ஏகாதிபத்திய சூழலில் ஒடுக்கும் தேசிய இனத்தில் உள்ள ஆளும் வர்க்கத்திற்கும், ஒடுக்கப்படும் தேசிய இனத்திற்குமான பிரச்சனையாகும். அத்தேசிய இனம் முதலாளித்துவக் கட்டத்தில் நுழைகிறது என்றால், அது நிலப்பிரபுத்துவத்தையும், ஏகாதிபத்தியத்தையும் வீழ்த்திவிட்டு ஒரு தேசமாக மாறுவதற்கான பிரச்சனையாகும்.

                மேற்கு ஐரோப்பாவில் பிரான்ஸ், பிரிட்டன், ஜெர்மனி, இத்தாலி ஆகிய தேசங்கள் நிலப்பிரபுத்துவத்தை வீழ்த்திவிட்டு தோன்றின. இது முதலாளித்துவத்தின் தலைமையில் நடந்தன. பல்தேசிய இன அரசான ரஷ்யாவில் ரஷ்ய தேசிய இனத்தைத் தவிர பிற தேசிய இனங்கள் நிலப்பிரபுத்துவத்துவத்தையும் ஒடுக்கும் தேசிய இன ஆளும் வர்க்கத்தையும் வீழ்த்த வேண்டிய நிலையில் இருந்தன. ரஷ்யாவில் லெனின் தலைமையில் பலமான தொழிலாளி வர்க்க கட்சி ஒடுக்கப்படும் தேசிய இனங்களின் தன் தீர்வு உரிமையை அங்கீகரித்து போராடியதால், ஒடுக்கப்படும் தேசிய இனத்திற்கு தேசிய இன அரசு என்ற பிரச்சனையும், நிலப்பிரச்சனையும் ஒடுக்கப்படும் தேசிய இன பாட்டாளி வர்க்கத்துடன் இணைந்து தீர்க்கப்பட்டன. இந்தியா போன்ற பல்தேசிய இன அரசில் ஒடுக்கும் தேசிய இனத்தில் உள்ள தேசிய இன முதலாளி, தொழிலாளி, விவசாய வர்கக்கங்கள் முதலாளித்துவப் புரட்சிக்காக சொந்த தேசிய இனத்தில் உள்ள பெரும் முதலாளித்துவ வர்க்கத்தையும், நிலபிரபுத்துவத்தையும் ஏகாதிபத்தியத்தையும், பார்ப்பனிய அதிகாரத்துவத்தையும் வீழ்த்த வேண்டிய நிலையில் உள்ளன. அதே நேரத்தில் ஒடுக்கப்படும் தேசிய இனங்கள் இந்திய ஆளும் வர்க்கத்தையும், நிலப்பிரபுத்துவத்தையும், ஏகாதிபத்தியத்தையும் பார்ப்பனிய அதிகாரத்துவத்தையும் வீழ்த்த வேண்டிய நிலையில் உள்ளனர். வரலாற்றில் புரட்சியின் சங்கிலித் தொடர் இப்படித்தான் உள்ளது. இதை காண மறுப்பவர் உறுதியாக புரட்சியைப் பற்றி அறியாத அற்பவாதி ஆவார். அவர் புரட்சிப் பற்றி பேச தகுதியற்றவர்.

                ஆக ரஷ்யாவில் ஒடுக்கப்பட்ட தேசிய இனங்கள் அரசுரிமைக்காக போராடி பெற்றனர். இந்தியாவிலும் காஷ்மீர் மற்றும் வடகிழக்கு தேசிய இனங்கள் தங்களது அரசுரிமைக்காக போராடி வருகின்றன. பிற பகுதிகளிலும் முதலாளித்துவ வளர்ச்சி மேலேச் செல்லச் செல்ல தேசிய இனங்கள் போராட்டத்தில் ஈர்க்கப்படுவர். ஒரு தேசிய இனம், ஒரு அரசு என்ற கோட்பாடு ரஷ்ய புரட்சிக்குப் பின் அதன் சரியான தன்மையால் ஐ.நா. சபையால் அங்கீகரிக்கப்பட்டது. ஏகாதிபத்திய கட்டத்தில் தேசங்கள் கபிளீகரம் செய்யப்படுகின்றன. அதற்கு எதிராகப் போராடுவது என்றால், தேசிய இனங்களின் தன்தீர்வு உரிமைக்காக போராடுவது என்று பொருள். எனவே தேசிய இனங்களின் தன் தீர்வு உரிமையை யார் ஒருவர் ஏற்றுக் கொள்ளவில்லையோ அவர் உறுதியாக ஏகாதிபத்திய கைக்கூலி என நாம கூறுவதற்கு முழு உரிமை படைத்தவராவோம். ஒவ்வொரு மனிதனுக்கும் பொது உரிமைகள் மற்றும் தனி உரிமைகள் உண்டு. அதே போல ஒவ்வொரு தேசிய இனத்திற்கும் தேசத்திற்கும் தன் தீர்வு உரிமை உண்டு. எனவே ஒடுக்கப்பட்ட தேசிய இனங்களது தன் தீர்வு உரிமையை புரட்டல்வாதி டி.கே.ரெங்கராஜன் மறுப்பதன் மூலம் ஒடுக்கும் தேசிய இனமான இந்தி ஆளும் வர்க்கத்திற்கும் ஏகாதிபத்தியங்களுக்கும் தொண்டுழியம் செய்கிறார். அடிமைப்பட்டுள்ள தேசிய இனங்களது சமத்துவத்தை மறுக்கிறார். எனவே தேசிய இன தன்தீர்வு உரிமை என்பது மீறக் கூடிய கோட்பாடல்ல.

                தேசிய இன தன்தீர்வு உரிமை இந்தியா, இலங்கைக்கு பொருந்துமா? இந்தியா பல்தேசிய இன அரசு. அதே போல இலங்கையும் இரு தேசிய இனங்களைக் கொண்ட பல்தேசிய இன அரசு. இந்தியாவில் இந்தி தேசிய இனம் தவிர பிற அனைத்து தேசிய இனங்களும் ஒடுக்கப்படுகின்றன. இந்தி தேசிய இனம் மட்டுமே சலுகைப் பெற்ற தேசிய இனமாக இருக்கிறது. சமக்கிருதத்திலிருந்து உருவான இந்தி மொழி வளர்ச்சிக்கும் அதன் இலக்கியங்கள் பண்பாடு வளர்ச்சிக்கும் பிற தேசிய இன மொழி வளர்ச்சிக்கு உதவுவதைவிட பல மடங்கு அரசால் செலவிடப்படுகின்றன. இந்தி படித்தவர்கள் என்ற ஒரே காரணத்திற்காக நடுவன் அரசிலும் அதன் அலுவலகங்களிலும் தங்களது மேலாண்மையை செலுத்துகின்றனர். இந்தியே இந்தியாவின் ஆட்சி மொழியாகவும், பிற தேசிய இனங்கள் இந்தியை ஏற்றுக் கொள்ளாத காரணத்தினால், ஆங்கிலம் துணை ஆட்சி மொழியாகவும் இருக்கிறது. இதனால், இந்தி, ஆங்கிலம் அறியாத பிற தேசிய இன மக்கள் அடக்கி ஒடுக்கப்படுவதுடன், அவர்கள் தாழ்வுமனப்பான்மைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

ஒரு இனத்தை அழிக்க வேண்டுமானால், அதன் மொழியை அழி என்பார்கள். அது போல் இந்தியாவில் உள்ள தேசிய இனங்களின் அடையாளங்கள் அழிக்கப்படுகின்றன. அவ்வினங்களுக்கு அரசுரிமை கிடையாது. இந்தியாவில் உள்ள தேசிய இனங்களில் கலப்பின குடியேற்றங்கள் நிகழ்த்தப்படுகின்றன. ஒவ்வொரு தேசிய இனங்களும் இன அழிப்பிற்கு உள்ளாக்கப்பட்டு வருகின்றன. “அரசன் தான் கைப்பற்றிய பகுதியை தனது ஆதிக்கத்தின் கீழ்த் தொடர்ந்து வைத்திருக்க வேண்டுமெனில், அங்கு தமது குடியேற்றங்களை உருவாக்குவதுதான் இராணுவ முகாம்களை உருவாக்குவதைவிட மேலானது. ஏனெனில் இராணுவத்திற்கு அரசனே ஊதியம் கொடுக்க வேண்டும். இராணுவத்தினர் அந்த மண்ணில் வேரூன்றுவதில்லை. ஆனால் மக்கள் குடியேற்றத்திற்கோ செலவு குறைவு. அவர்கள் அந்த மண்ணிலேயே வேர் ஊன்றி சந்ததி சந்ததியாக விசுவாசிகளாக வாழ்வார்கள். எனவே குடியேற்றமே அரசனின் நிரந்தர இராணுவமாகும்”. இக்கருத்து அரசியல் அறிஞர் மாக்கிய வல்லியின் கருத்தாகும்.

தற்போது இந்தி பேசும் தேசிய இனங்களையும் சேர்த்து மக்கள் தொகை சுமார் 125 கோடிக்கு மேல் தாண்டிவிட்டது. ஆக இந்திய சந்தை என்பது இந்திய பெரு முதலாளிகளுக்கும் ஏகாதிபத்தியங்களுக்கும் பெரும் வருவாயைத் தருகிறது. இந்திய சந்தையை சிதைத்து விடாமல், பாதுகாத்து இந்திய பெரு முதலாளிகளுக்கும், ஏகாதிபத்திய முதலாளிகளுக்கும் தருவதற்கான வேலையை சி.பி.ஐ.(எம்) கும்பல் சிரமேற்று செய்து வருகிறது. இந்திய பெருமுதலாளிகளுக்கு நேரடி சேவகர்கள் காங்கிரஸ், பி.ஜே.பி கும்பல் என்றால், மறைமுக சேவகர்கள் சி.பி.ஐ, சி.பி.ஐ.(எம்) கும்பலே. இவை இரண்டும் மார்க்சிய வேடம் தரித்து மக்களை ஏமாற்றுகின்றன.

                இந்தியாவில் எல்லா தேசிய இனங்களிலும் முதலாளித்துவ வளர்ச்சி ஏற்பட்டு வருகின்றது. இந்திய தேசியத்திற்கும் மொழி தேசியங்களுக்குமான முரண்பாடு முற்றி வருகின்றனது. அதன் வெளிப்பாடுதான், காஷ்மீர் மற்றும் வடகிழக்கு தேசிய இனங்களின் போராட்டங்கள். இவைத் தவிர பிற தேசிய இனங்களில் அப்படிப்பட்ட பெரும் போராட்டம் நடைபெறவில்லை என்ற போதிலும் உறங்கிக் கிடக்கும் மக்களும், அத்திசை வழியிலான போராட்டத்தை நடத்த இருக்கின்றனர். இம்மக்களின் போராட்டங்கள் அனைத்தும் தேசிய இன அரசுரிமைக்கான போராட்டங்கள் ஆகும். இத் தேசிய இன மக்களின் ஜனநாயகத்திற்கான போராட்டத்தைத்தான், இந்திய ஆளும் வர்க்கம் பிரிவினைவாத முத்திரை குத்தி ஒடுக்குகிறது. சி.பி.ஐ, சி.பி.ஐ.(எம்) மார்க்சிய வேடம் தரித்த புரட்டல்வாத கும்பல் ஆளும் வர்கங்களுக்கு பக்கவாத்தியங்கள் வாசிக்கின்றன. காஷ்மீர் இந்தியாவின் பிரிக்கமுடியாத பகுதி என இக்கும்பல் கொக்கரிக்கின்றது. இந்தியாவில் உள்ள தேசிய இன மக்களின் விடுதலைப் போராட்டத்தை இக்கும்பல் அடக்கி ஒடுக்கிவிடலாம் என மனப்பால் குடிக்கின்றது. ஆனால், வரலாறு என்பது ஆதிக்கவாதிகள் மற்றும் அவர்களது கைக்கூலிகள் விருப்பத்திற்கு எதிராகவே முன்னேறி வந்துள்ளது. இந்தியாவில் உள்ள தேசிய இனங்களில் தேசிய இன அரசு அமைவது பொது விதியாக இருப்பதையும் அவ்வரசுகளின் மூலமே முதலாளித்துவத்தின் தங்கதடையற்ற வளர்ச்சியை உத்திரவாதம் செய்ய முடியும் என்பதை இக்கும்பல் மறைக்கிறது.

                தமிழீழ மக்களின் தேசிய விடுதலைப் போராட்டத்தை எடுத்துக் கொள்ளுங்கள், தமிழீழ விடுதலைப் புலிகள் தமிழ்த் தேசிய இனத்தின் தேசிய இயக்கமாக உருவெடுத்தார்கள். அவர்களது நோக்கமும் கூட தேசிய இன அரசு அமைத்தல் என்பதுதான். இதை யாரேனும் மறுக்க இயலுமா? இது போன்ற தேசிய இன அரசுகளின் மூலமாகத்தான் மனித குலம் முன்னேறி வந்துள்ளது, முன்னேற போகிறது. இதுதான் முதலாளித்துவத்துக்கான மிகச்சிறந்த நிலைமைகளைத் தோற்றுவிக்க முடியும். அதனைத் தாண்டித்தான் மனித சமுதாயம் சோசலிசம், கம்யூனிச இலட்சியங்களை அடைய முடியும்.

                “மக்களின் விருப்பத்தின் அடிப்படையில் சோசலிசம் படைப்போம்” என சி.பி.ஐ.(எம்)-இன் இன்னொரு புரட்டல் வாதி சீத்தாராம் யெச்சூரி கேரளாவில் பத்திரிக்கையாளர் நேர்காணலில் குறிப்பிட்டார். கூறையேரி கோழிபிடிக்காதவன், வானம் ஏறி வைகுந்தம் போவேன் என்றானாம். இந்தியாவில் தேசிய இனங்களின் விடுதலையை மறுத்துவிட்டு, தேசிய இனங்களில் முதலாளித்துவம் தோன்றி சுதந்திரமாக வளர்வதற்கான வாய்ப்பை மறுத்துவிட்டு இந்திய மக்களின் விருப்பப்படி சோசலிசம் படைப்போம் எனக் கூறும் சீத்தாராம்யெச்சூரி போன்ற கோமாளிகளைப் பார்த்து கைக்கொட்டி சிரிக்கத்தான் தோன்றுகிறது. தேசிய இனங்களை அடிமை படுத்திவிட்டு தேசிய இனங்களிடையே சமத்துவம் இன்மையை வைத்துக் கொண்டு சோசலிசம் படைக்கப் போகிறேன் என்பது மந்திர வித்தைக்காரனின் மாயாஜாலமே.

                “சுதந்திரம் என்பது பேரம் பேசி பெற்றுக் கொள்ளும் வியாபாரப் பண்டமல்ல. அது இரத்தம் சிந்தி வெற்றி கொள்ளும் ஒரு புனிதமான உரிமை” இது தமிழீழ விடுதலைப் போராட்ட மாவீரன் பிரபாகரன் கூறியது. புரட்டல்வாதி டி.கே.ரெங்கராஜன் கூறுவதைப் பாருங்கள் “ஆப்பிரகாம் லிங்கன் “எந்த ஒரு நாடும் தானாகவே தன்னை துண்டாடிக் கொள்ளுகின்ற ஒரு வாய்ப்பை உருவாக்காது” எனக் குறிப்பிட்டார். ஆம் அது முதலாளித்துவ அரசோ, அல்லது கம்யூனிஸ்ட்டுகள் தலைமையிலான அரசோ எதுவானாலும் தன்னிடம் உள்ள ஒரு பகுதி இன்றைய உலகச் சூழலில் பிரிந்து செல்வதை ஒரு போதும் அனுமதிக்காது. இன்றைய எதார்த்தத்தில் அப்படிப் பிரித்துக் கொடுப்பார்கள் என எதிர்பார்ப்பதும் பொருத்தமாக இருக்காது” இப்படி கூறும் ஈனப் பிறவி டி.கே.ரெங்கராஜனிடம் நாம் எழுப்பும் கேள்வி. சோசலிசம், கம்யூனிசம் படைப்பதாக பிதற்றி அலைகிறீர்களே அதை மட்டும் முதலாளித்துவவாதிகள் அனுமதிக்கப் போகிறார்களா? விவசாயி, தொழிலாளி வர்க்கத்திற்கு சோசலிச ஆசைக் காட்டுவது அவர்களிடம் சந்தா வாங்கி பிழைக்கத்தானா?. புரட்டல்வாதி டி.கே.ரெங்கராஜன் யாருக்காக வாதாடுகிறார் எனப் பாருங்கள். ஓநாய்கள் ஒருபோதும் ஆடுகளின் விடுதலையை அங்கீகரிக்கப் போவதில்லை. ஆண்டான்கள் அடிமைகளின் விடுதலையையும், நிலப்பிரப்புகள் முதலாளிகள், விவசாயிகளின் விடுதலையையும், முதலாளிகள் தொழிலாளிகளின் விடுதலையையும் இதுவரை தானாக முன்வந்து அங்கீகரித்ததாக வரலாறு இல்லை. மக்களின் இரத்தம் சிந்திய போராட்டங்கள் புரட்சிகள் மூலமாக ஆளும் வர்க்கங்கள் தூக்கி எறியப்பட்டனர். அப்படித்தான் வரலாற்றை மக்கள் முன்னெடுத்து வந்துள்ளனர்.

                தேசிய இனங்கள் இந்தியாவில் அடிமையாய் இருப்பது குறித்து, சி.பி.ஐ.(எம்) இன் கும்பலுக்கு துளியும் கவலையே இருந்ததில்லை. அவர்கள் இந்திய பெருமுதலாளிகளின் சந்தை நலனிலேயே கவலை கொண்டுள்ளனர். இன்றைய உலகில் தேசிய இனங்களை முதலாளித்துவ நாடுகள், கம்யூனிச நாடுகள் பிரித்துக் கொடுக்கமாட்டார்கள் என புரட்டல்வாதி டி.கே.ரெங்கராஜன் கூறுவது உண்மையா? இதற்கு தமிழ்த் தேசிய தமிழர் கண்ணோட்டத்தில் (2013 ஜுன் 16 - 30) தோழர் பெ.மணியரசனின் பதிலைப் பாருங்கள்.

                “இன்றைய உலகில் புரட்சிகளும் போராட்டங்களும் நடப்பது பெரிதும் தேச விடுதலைக்காகவும் ஜனநாயக்கத்திற்காகவும்தான்!

                1991ல் கம்யூனிஸ்ட் நாடான சோவியத் ஒன்றியம் 15 நாடுகளாகப் பிரிந்தது. 1992 மார்ச் தொடங்கி அடுத்தடுத்து யுகோஸ்லாவியா 6 நாடுகளாகப் பிரிந்தது. 1992 செகோஸ்லாவியா இரண்டு நாடுகளானது.

                கம்யூனிஸ்ட் அல்லாத முதலாளிய நாடுகளில் உருவான புதிய நாடுகள் பல! 2002ல் இந்தோனேசியாவிலிருந்து கிழக்கு திமோர் கருத்து வாக்கெடுப்பு மூலம் பிரிந்தது. 1993ல் எத்தியோப்பியாவிலிருந்து எரித்திரியா பிரிந்தது. 2011ல் சூடானிலிருந்து தெற்கு சூடான் பிரிந்தது.

                பிரிட்டனிலிருந்து ஸ்காட்லாந்த் பிரிய வேண்டும் என்று போராடுகிறது. மார்க்சிஸ்ட், கம்யூனிஸ்ட் கட்சி போல் அல்லாமல், பிரித்தானி முதலாளிய பேரரசு, 2014 ஆம் ஆண்டு கருத்து வாக்கெடுப்பு நடத்த ஒப்புக் கொண்டுள்ளது.

                ஸ்காட்லாந்து மக்களை பிரிட்டனின் ஆங்கிலேயர்கள் இனக்கொலை செய்யவில்லை. அவர்களின் வேலை வாய்ப்பை பறிக்கவில்லை. ஆனால், தங்கள் இன மரபு வரலாற்று பெருமிதம், மொழி அடையாளம், தங்கள் இனச்சாதனைகள் ஆகியவற்றை ஆங்கிலேயே தேசிய இனமும், ஆங்கில மொழியும் மறைக்கின்றன. எனவே தங்களுக்கு தனி நாடு வேண்டும் என்று கோருகின்றனர் ஸ்காட்லாந்து மக்கள். இப்பொழுது ஸ்காட்லாந்து மாநிலத்தை ஸ்காட்லாந்திய தேசிய கட்சிதான் ஆள்கிறது.

                கனடாவில் கியூபெக் மாநிலத்தில் பிரெஞ்ச் மக்கள் அதிகமாக வாழ்கிறார்கள். மற்ற பகுதிகளில் ஆங்கிலேயர்கள் வாழ்கிறார்கள். பிரெஞ்ச் மக்கள் கியூபெக் தனிநாடாக வேண்டும் என்று கோருகின்றனர். கனடா அரசு கியூபெக்கில் 1995ல் கருத்து வாக்கெடுப்பு நடத்தியது. தனிநாடு கோரிக்கைக்கு ஆதரவாக 49.42 விழுக்காடு மக்கள் வாக்களித்தனர். தனிநாடு வேண்டாம் என 50.58 விழுக்காட்டினர் வாக்களித்தனர். மிகக்குறைவான வாக்கு வேறுபாட்டில் கியூபெக் தனிநாட்டு கோரிக்கை தோல்வி அடைந்தது.

                ஆயினும் கியூபெக் மக்கள் மீண்டும் கோரிக்கை எழுப்பினால், அவர்களிடையே கியூபெக் தனிநாடு குறித்து மீண்டும் வாக்கெடுப்பு நடத்தலாம் என கனடா அரசு உறுதி கூறியிருக்கிறது.

                பிரிட்டனும் கனடாவும் வளர்ச்சி அடைந்த முதலாளிய நாடுகள். அவை தனிநாட்டு கோரிக்கையை ஜனநாயக வழியில் அணுகுகின்றனர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி போல முரட்டுத்தனமாக தேசிய இன தன்னுரிமையை அவை மறுக்கவில்லை.

                நாடு பிரிவதை கம்யூனிஸ்ட் அரசும் ஒத்துக் கொள்ளாது, முதலாளி அரசும் ஒத்துக் கொள்ளாது என்று ரெங்கராஜன் கூறுவதில் உண்மை இருக்கிறதா? அவர் கூற்றில் உண்மை இருந்தால், அவர் சான்று காட்டியிருப்பாரே!

                தர்க்கப் போரில், தரவுகள், சான்றுகள் என்னும் ஆயுதங்கள் எதுவும் இல்லாமல், வெறுங்கையோடு வந்து தோளில் முண்டா தட்டுவதற்கு தனித்துணிச்சல் வேண்டும்! 23ம் புலிகேசிதான் நினைவுக்கு வருகிறார்.

இன்று உலகில் முதன்மை இயங்கு ஆற்றலாகச் செயல்படுவது தேசிய இன அரசியலும், தேசிய இனப் போராட்டங்கள்தான்!

இலங்கையில் மட்டுமல்ல, இந்தியாவில், சீனாவில், பாகிஸ்தானில், துருக்கியில், ஸ்பெயினில், பிரிட்டனில், கனடாவில் இன்னபிற நாடுகளில் ஆளும் வர்க்கத்தை அச்சுறுத்தும் ஆற்றலாக இருப்பவை தேசிய இன விடுதலைப் போராட்டங்களே!” இவை அனைத்தும் டி.கே.ரெங்கராஜனுக்கு தோழர் பெ.மணியரசன் அளித்த பதில்கள்.

                கம்யூனிச நாடுகள், முதலாளிய நாடுகள் நாடுகள் பிரிந்து போவதை அங்கீகரிக்கப் போவதில்லை எனக் கூறும் புரட்டல்வாதி டி.கே.ரெங்கராஜன் கூறுவது சரியா? தோழர் பெ.மணியரசன் கூறுவது சரியா? என படிப்பவர்கள் ஒப்பிட்டு பார்க்கலாம். ஒடுக்கும் ஒடுக்கப்படும் தேசிய இனங்களுக்கிடையிலான பிரச்சனையை ஜனநாயக வழியில் நின்று தீரக்க வழிகாட்டுகிறார் தோழர் பெ.மணியரசன். ஒடுக்கும் தேசிய இனத்தின் ஆளும் வர்க்கத்திற்கு வக்காலத்து வாங்குகிறார் டி.கே.ரெங்கராஜன். தேசிய இனங்கள் சமத்துவமாக வாழ வழிகாட்டுகிறார் தோழர் பெ.மணியரசன். ஒடுக்கும் தேசிய இனத்திற்கு கொம்பு சீவி இன அழிப்பிற்கு துணை நிற்கிறார் டி.கே.ரெங்கராஜன். இலங்கையில் பேரினவாதிகளான ராஜபக்சே கும்பல், புத்த பிட்சுகள், ஜெ.வி.பி. போன்ற கும்பல்களின் தோள்களில் கைப்போட்டுள்ளார் டி.கே.ரெங்கராஜன். இன அழிப்பிற்கு உள்ளான தமிழீழ மக்களுக்கு கரம் கொடுக்கிறார் தோழர் பெ.மணியரசன். அடிமைப்பட்டுள்ள இனங்கள், நாடுகளின் விடுதலைக்காய் வாதாடுகிறார், போராடுகிறார் தோழர் பெ.மணியரசன்.

                “மக்கள் சீனத்தில் ஆட்சி அமைத்த கம்யூனிஸ்ட்டுகள் தங்கள் அரசியல் சட்டத்தில் சுய நிர்ணய உரிமை குறித்து எதுவும் குறிப்பிடவில்லை. சுய நிர்ணய உரிமை குறித்த விவாதத்திற்கு மாவோ பதில் அளிக்கையில் “இப்போதும் கூட சிலர் மார்க்சிய - லெனினிய விளக்கங்கள் குறித்து, அரசியல் மாற்றம் அடைந்தவுடன், அனைத்து நோய்களையும் தீர்க்கத்தக்க, தயாரான நிலையில் உள்ள ‘சர்வரோக நிவாரணி’ என்று புரிந்துக் கொண்டுள்ளனர். இது போன்று அறியாமையில் உள்ளவர்களை தெளிவுபடுத்த வேண்டும். அது போல் வாதிடுபவர்களின் கருத்து குழந்தைத் தனமானது என்பதை புரிய வைக்க வேண்டும். மிகச் சரியாக குறிப்பிடுவது என்றால் - அந்த அறியாமையில் உள்ளவர்கள் மார்க்சியம், லெனினியம் என்பது மதக்கோட்பாடு போன்றது என புரிந்து வைத்துள்ளனர். மார்க்ஸ், ஏங்கல்ஸ், லெனின் மற்றும் ஸ்டாலின் ஆகியோர், தங்களின் கருத்தியல் ஏற்றுக் கொள்ளமுடியாதவை கோட்பாடுகள் அல்ல, மாறாக செயலுக்கான வழிகாட்டி எனத் திரும்ப திரும்ப கூறினர். ஆனால் சிலர் இந்த அதி முக்கியமான, மிகப் பெரிய விளக்கத்தை மறுப்பதற்கு முன்னுரிமை கொடுத்துவிடுகின்றனர்” என்று குறிப்பிட்டுள்ளார். (மா.சே.துங் 1942, கட்சி வேலைகளின் பாணியை நெறிபடுத்து)” இது புரட்டல்வாதி டி.கே.ரெங்கராஜன் முன்வைத்தவை.

டி.கே.ரெங்கராஜனை புரட்டல்வாதி என நான் குறிப்பிடுவது சிலருக்கு முகச்சுளிப்பை உண்டு பண்ணியிருக்கும். டி.கே.ரெங்கராஜன் புரட்டல்வாதி என்பதை மா.லெ., தீப்பொறி இதழ் (ஜுன் 2013 16-30) அம்பலப்படுத்துவதைப் பாருங்கள். “தோழர் மாவோவை தோழர் ரெங்கராஜன் இவ்வளவு மோசமாக வம்புக்கு இழுத்திருக்கக் கூடாது. மாவோ, சுயநிர்ணய உரிமை பற்றிய விவாதத்திற்கு பதில் சொல்லும் போது பேசிய விசயம் என தோழர் டி.கே.ரெங்கராஜன் சொல்வது தவறு. சுய நிர்ணய உரிமை பற்றிய விவாதத்திற்கு பதில் சொல்லும் போது அந்த மேற்கோளை முன் வைக்கவில்லை. கட்சிக்குள் வேலை நடையை சீர் திருத்துவது என்ற கட்டுரையில் அகநிலைவாதம், வறட்டுவாதம், அனுபவ வாதம், குறுங்குழு வாதம் போன்றவற்றைச் சாடி எழுதுகிறார்”.

மேலும் தீப்பொறி ஏடு எழுதுகிறது “சுயநிர்ணய உரிமை என்ற விசயத்தை வறட்டுத்தனமாக பார்கக் கூடாது என்பது சரியே. லெனின், ஸ்டாலின் சுயநிர்யண உரிமைப் பற்றி பேசினார்கள் என்பது போலவும், மாவோவும், சீனமும் அதற்கு எதிராக நின்றனர் என்பது போன்ற தோற்றத்தை தோழர் ரெங்கராஜன் கட்டுரை தருகிறது. இக்கருத்து அபத்தமானது என்பதைக் காட்டிலும் ஆபத்தானது என்பதே சரியாகும்”. எனவே புரட்டல்வாதி டி.கே.ரெங்கராஜன் புரட்டல்வாதி மட்டுமல்ல, சதிகாரர் ஆபத்து பேர்வழி என படிப்பவர் புரிந்துக் கொள்ள முடியும். விவசாயி தொழிலாளிகளை ஆளும் வர்க்கங்கள் அவர்களது கட்சிகள் எதிர்நிலையில் நின்று ஒடுக்குகின்றன. ஆனால் டி.கே.ரெங்கராஜன் போன்ற சதிகாரர்கள் நம்முடன் இருந்துக் கொண்டே விவசாயி, தொழிலாளிகளுக்கு உண்மையை திரித்துக் கூறி ஒடுக்குமுறைக்கு துணை செய்கின்றனர். கட்சிக்குள் வேலை நடையை சீர் திருத்துவது குறித்து மாவோ கூறியதை சுயநிர்ணய உரிமை பற்றிய விவாதத்தில் கூறியதாக புரட்டல்வாதி டி.கே.ரெங்கராஜன் இட்டுக்கட்டிக் கூறுவது எவ்வளவு பெரிய மோசடி என ஒருவர் எண்ணிப்பார்க்க வேண்டும்.

                தேசிய இனங்களின் தன்தீர்வு உரிமையை எதிர்த்து வாதிட்டவர்களுக்குத்தான் “ஏகாதிபத்திய பொருளாதார வாதமும் மார்க்சியத்தை இழிவுபடுத்தும் கேலிச்சித்திரமும்” என்ற தலைப்பிலான நூலை லெனின் எழுதினார். ரஷ்யாவை முதலாளித்துவ மீட்சிக்கு வித்திட்ட குருச்சேவை சமூக ஏகாதிபத்தியவாதி என்றும், ரஷ்யாவை சமூக ஏகாதிபத்தியம் என்றும் மாவோ குறிப்பிட்டதை ஏற்காத சி.பி.ஐ.(எம்) புரட்டல்வாத கும்பல் இன்று மாவோவுக்கு உரிமை பாராட்டுகிறது. மார்க்சியத்தின் அடிப்படை கோட்பாடுகளை மறுத்து, அவ்வறிஞர்களின் உயிரற்ற அட்டைப்படங்களை வைத்து மந்திர வித்தை காட்டும் மார்க்சிஸ்ட் கட்சி மார்க்ஸ், ஏங்கல்ஸ், லெனின் மற்றும் ஸ்டாலின் மாசேதுங் தோளில் ஏறுவதற்கு என்ன தார்மீக உரிமை இருக்கிறது?

                தோழர் பெ.மணியரசன் கூறுவதைக் கேளுங்கள் “20 ஆம் நூற்றாண்டில் லெனின் கூறிய, “பிரிந்து போகும் உரிமை” இன்றைக்குப் பொருந்தாது என்று கூறும் ரெங்கராஜன் ஆபிரகாம் லிங்கன் (1809 - 1865) 19ஆம் நூற்றாண்டில் கூறிய பிரிந்துப் போகக் கூடாது என்ற கருத்தை ஏற்றுக் கொண்டுள்ளார். ஆபிரகாம் லிங்கன் கருத்துதான் “மாறியுள்ள இன்றைய உலகச் சூழ்நிலை” -க்குப் பொருத்தமான கருத்து போலும்” ஆக, புரட்டல்வாதி டி.கே.ரெங்கராஜன் லெனின் தோளில் அல்ல, லெனினது நிழலைக் கூட நெருங்க தகுதியற்றவர். ஆனால் ஆபிரகாம் லிங்கன் தோளில் அவர் ஏறுவதற்கு முழு தகுதி படைத்தவர்.

                புரட்டல்வாதி டி.கே.ரெங்கராஜன் தனது வாதங்களை தொழிற்சங்க அளவில் நிறுத்திக் கொண்டால் நல்லது. அதுதான் அவருக்கு பொருத்தமான இடம். வீணாக மார்க்சிய அறிஞர்களை துணைக்கு அழைத்தால், இக்கும்பல் மேலும் மேலும் அம்பலப்படுவது, தவிர்க்க இயலாது. ஏனென்றால், மார்க்சியம் அதற்கான உள்ளாற்றலைக் கொண்டது.

                தனித் தமிழ்த் தேசிய இன விடுதலைப் போராட்டம் மார்க்சிய லெனினிய கோட்பாட்டு வழியில் சரியென நிருபித்துள்ளோம். ஆனால் சி.பி.ஐ.(எம்-எல்) -லின் பல்வேறு பிரிவுகள் மற்றும் மாவோயிஸ்டுகள் உட்பட இதனை பரிசீலிப்பதாகவோ அல்லது தவறு என்று நிருபிப்பதாகவோ இல்லை. அவர்களுக்கு நாம் சொல்லி கொள்வதற்கு ஒன்று உள்ளது. நீங்கள் புரட்சிக்காரர்களாக இருந்தது கிடக்கட்டும், குறைந்தபட்சம் முற்போக்கான ஜனநாயகவாதிகளாக இருக்கிறீர்களா? என உங்கள் நிலைபாட்டை தொட்டுப்பாருங்கள், இல்லாவிட்டால் வரலாறு உங்களை காறி உமிழும்.

- பாரி, அமைப்புக்குழு உறுப்பினர், தமிழ்த் தேசிய விடுதலை இயக்கம், தஞ்சாவூர்       (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)                                                                                                    

Pin It