sirasri dasguptaநக்வெய்ன் மார்க்சியப் பள்ளியில் (19)

பொதுவாக ஏற்கப்பட்ட பொருளாதாரப் போக்கில் குழுமமும்/ குடும்பமும்:

குழுமம் என்பது முழுக்க முழுக்க உற்பத்திக்கான தளமாகவும் இல்லம் அல்லது குடும்பம் என்பது நுகர்வுக்கான தளமாகவும் கருதப்படுகின்றன. சமூகம் பொருளாதாரத்திற்குப் புறத்தே அமைந்திருப்பதாகக் கருதப்படுகிறது.

குழுமப் பொருளாதாரத்தில் கூட குழுமம், இல்லம் இவை இரண்டுக்கும் இடையிலான தொடர்பு பெரிய அளவில் ஆய்வு செய்யப்படவில்லை. மூலதனத் திரட்டலுக்கான நிறுவனங்களாக இவை செயல்படுவது குறித்துக் குறிப்போ, ஆய்விலக்கியமோ காணப்படவில்லை.

ஆனால் வணிகக் குடும்பங்கள் நம் அன்றாட வாழ்க்கையை ஆக்கிரமித்துள்ளன. காலனியாதிக்கக் காலத்திலிருந்தே இந்தியாவில் குழுமம் குடும்பத்துடன் பிணைந்து காணப்படுகிறது. அது தனக்கேயுரிய இரட்டைத் தன்மை கொண்டுள்ளது.

இந்தியாவில் குடும்பத்திற்குச் சொந்தமான வணிகக் குழுக்களின் பின்னணி:

இந்தியாவில் குடும்பத்திற்கு சொந்தமான வணிகக் குழுக்கள் என்பவை கூட்டுப் பங்குக் குழுமங்களாகவும், (பொதுத் துறையிலும் தனியார் துறையிலும்) பங்குதாரர் நிறுவனங்களாகவும், அறக் கட்டளைகளாகவும், வரையறுக்கப்பட்ட கடப்பாடுடைய ஏராளமான கூட்டாண்மை நிறுவன அமைப்புகளாகவும் உள்ளன.

இவை ஒவ்வொன்றும் முறையே நிறுவனச் சட்டம்-2013, இந்தியக் கூட்டாண்மைச் சட்டம்-1932, சங்கங்கள் பதிவுச் சட்டம்-1860, வரையறுக்கப்பட்ட பொறுப்புக் கூட்டாண்மைச் சட்டம்-2008 ஆகிய வெவ்வேறு சட்டங்களின் ஒழுங்குமுறைக்கு உட்பட்டவை ஆகும்.

இத்தகைய வெவ்வேறு விதமான பெருங்குழுமங்களை ஒழுங்குபடுத்தப் பல்வேறு சட்டங்கள் இருந்த போதிலும், இந்தக் குழுமங்கள் ஒன்றிணைந்த இயக்குநரகமும் பொதுவான பங்குதாரர்களும் கொண்டு இந்திய வணிகக் குழுக்களின் சமூக நிறுவனமாக அமைந்துள்ளன (தாஸ் குப்தா, 2013).

1951ஆம் ஆண்டில் இந்தியாவின் முதல் இருபத்திரண்டு வணிக நிறுவனங்கள் இந்த பின்னிப்பிணைந்த அமைப்புகளின் மூலம் இந்தியப் பொருளாதாரத்தின் மொத்த மூலதன உருவாக்கத்தில் 25 விழுக்காட்டை நேரடியாகக் கட்டுப்படுத்தின.

1990களில், இது இந்தியாவின் மொத்த மூலதன உருவாக்கத்தில் 28 விழுக்காடாக இருந்தது, இன்றைய அளவில் குறைந்தது 40 விழுக்காடாக இருக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. ஒரு விழுக்காட்டிற்கும் குறைந்த அளவிலான உண்மை முதலீடுகளைப் பயன்படுத்தியே வணிகக் குழுக்கள் இந்தளவுக் கட்டுப்பாட்டை ஈட்டியுள்ளன. (தாஸ் குப்தா, 2016). 

இந்தியச் சட்டத்திலும் கொள்கையிலும் குடும்பத்திற்குச் சொந்தமான வணிகக் குழு:

1965ஆம் ஆண்டில் நீதிபதி கே.சி. தாஸ்குப்தா தலைமையில் அமைந்த ஏகபோகங்களுக்கான விசாரணை ஆணையம்  பெருங்குழுமங்களுக்கு இடையிலான முதலீடுகள் கொண்டும் ஒன்றிணைந்த இயக்குநரகம் கொண்டும் இந்தியாவில் ஏகபோக அதிகாரம் படைத்த குழுமமே ‘பெருங்குழுமம்’ என்று அடையாளப்படுத்தியது.

வணிகக் குழு என்பது (1967ஆம் ஆண்டின் தொழில்துறைத் திட்டமிடல், உரிமக் கொள்கை பற்றிய  ஹசாரி குழு அறிக்கையின் அதிகாரமுறைச் சொல்வழக்கில் 'தொழில்துறை இல்லம்' என்பது)

உரிம அமைப்பு முறையைப் பயன்படுத்தி முதலீடுகளைக் கட்டுப்படுத்துவதில் ஏகபோகம் செலுத்தும் குழுமமாக இந்திய அரசால் அதிகாரமுறைப்படி இனங்காணப்பட்டது.

இந்த ஹசாரி அறிக்கையும், 457 அமைப்புகளின் ‘குழுச் சார்பை’ப் பதிவு செய்த 1969ஆம் ஆண்டின் தொழில்துறை உரிமக் கொள்கை விசாரணைக்கான தத் கமிட்டியின் அறிக்கையும் இந்தியாவில் ஏகபோகக் கட்டுப்பாடு குறித்துக் குறுகிய காலம் நடப்பிலிருந்த சட்டத்தின் அடிப்படையை உருவாக்கின.

ஏகபோகங்கள், கூடா வர்த்தக நடைமுறைகள் சட்டம்-1969 ‘ஒரே மேலாண்மை’, ‘ஒன்றினைந்த குழுமப் பொறுப்பு’ ஆகியவற்றை இந்தியாவில் ஏகபோகங்களைக் கண்டறிவதற்கான அளவுகோலாக்கியது.

சமூகப் பொருளாதாரத் துறைகளில் அரசின் கட்டுப்பாடு ஓங்கிய காலகட்டத்திலான (dirigisme) சட்டமும், சட்ட ஆக்கமும் வணிகக் குழுக் குழுமத்தை ஆய்வலகாகக் கொண்டு இந்தியாவில் பெரிய வணிகக் குழுக்களின் மூலதனத் திரட்டலை வரையறுத்தது.

புதிய தாராளமயத்தின் கீழ் சட்ட இடையூறு:

இந்தியாவில் 'வணிகக் குழுவை'த் தொழில்வணிக அலகாக அடையாளங்காணும் முறை  புதுத் தாராளமய மாற்றத்திற்குப் பிறகு ஏகபோகங்கள், கூடா வர்த்தகநடைமுறைகள் சட்டம் திரும்பப் பெறப்பட்டு அதனிடத்தில் போட்டிச் சட்டம் வந்ததுடன் முடிவுக்கு வந்தது.

போட்டிச் சட்டமானது தனிப்பட்ட நிறுவனங்களைக் கட்டமைப்பின் அடிப்படையில் அல்லாது அவற்றின் குறிப்பிட்ட செயல்பாடு, நடைமுறைகளின் அடிப்படையிலேயே ‘போட்டி எதிர்ப்பை’க் குறிப்பிடும் விதமாக மாற்றம் செய்யப்பட்டது.

1970களிலிருந்து வளர்ந்து எழுந்து வரும் புதிய வணிகக் குழுக்களின் சமூக எதார்த்தத்துடன், வணிக அலகு குறித்த சட்டக் கருத்தாக்கத்தில் உள்ள முரண்பாடு குறித்துப் பெருமளவில் ஆய்வு செய்யப்படவில்லை (மசூம்தர் 2006; நௌதெட் 2015; நாஸ் 2016).

இந்தியாவில் ஏகபோக மூலதனம் ஒருசில பிரதிநிதித்துவக் குடும்பங்களுக்குச் சொந்தமான வணிகக் குழுக்களின் ஆதிக்கத்தில் இருப்பதையும், தொழில்வர்த்தகத்தின் பெரும்பாலான பகுதிகளில் மூலதன அமைப்பின் அலகுகளாக அவை இருப்பது கண்கூடாகத் தெரிந்த காலகட்டத்திலும் கூட சமூக ஆய்வுகளில் 'குடும்பத்திற்குச் சொந்தமான வணிகக் குழு' ஆய்விலிருந்து அறவே விலக்கப்பட்டிருப்பது இன்னுங்கூட விசித்திரமானது.

சில தாக்கங்கள்:

  1. முக்கியமான பழைய, புதிய வணிகக் குடும்பங்கள் தங்களால் நடத்தப்படும் வணிக இல்லத்தின் குழுமக் கட்டமைப்பின் மூலம் முடிவுகள் எடுப்பதில் கட்டுப்பாட்டைப் பேணுவதற்கான வழிகளைக் கண்டறிந்தன (தாஸ் குப்தா, 2010).

இந்தத் தன்மையே ஒருங்கிணைந்த இயக்குநரகம், ஒருங்கிணைந்த பங்குதாரர்கள்  மூலம் உரிமை மற்றும் கட்டுப்பாட்டு முறைகளைக் கைக் கொண்டு மூலதனத் திரட்டலுக்கான நிறுவன அடிப்படையை ஒழுங்கமைப்பதில் முக்கியத்துவம் பெறுகிறது.

  1. குழும வணிகவியல், பொருளாதாரச் சமூகவியல் மற்றும் பரந்த சமூக அறிவியல் ஆய்விலக்கியங்களில் ‘வணிகக் குழு’ நிறுவனம் அதற்கான இடத்தைப் பெற்றிருந்தாலும் கூட குடும்ப அடிப்படையிலான உரிமை, கட்டுப்பாடு குறித்து அவ்வளவாக ஆய்வு செய்யப்படவில்லை.

இந்த உரிமையும் கட்டுப்பாடும் அரசின் வரி வருவாயை நேரடியாக ஏய்ப்பதில் மட்டுமல்லாது மூலதனத் திரட்டல், முதலீடு, மூலதனக் குவிப்பு ஆகியவற்றிலும் முக்கியத் தாக்கம் கொண்டிருந்தது.

பெருங்குழுமச் சட்டம், வரிச் சட்டங்கள் என பல சட்டங்கள் மூலம் 'வணிக இல்ல’த்தின் அமைப்பு சட்டமுறைப்படி அனுமதிக்கப்பட்டு, பெருங்குழும நிர்வாகத்தின் ஆய்வுப் பொருளாக்கப்பட்ட போதும், , 'குடும்பம்' என்ற நிறுவனம் 'தனியாள் சட்ட நெறிகளின்’ ஆளுகையில் வைக்கப்பட்டிருந்தது (தாஸ் குப்தா, 2013).

நோக்குநிலையின் முறைசார் சிக்கல்கள்:

ஆனால் மேற்கூறியவை இரண்டும் வெவ்வேறு சிறப்புப் புலங்களாகத் தனித்தனியே பல்வேறு துறைகளிலும், அவற்றுக்கிடையிலும் ஆய்வு செய்யப்படுகின்றன. அதீதமான துறைசார் நிபுணத்துவமும், துறைகள், துணைத் துறைகளின் குறுகிய வரம்பும்  குழுமங்கள் நிறுவனங்களைப் பற்றிய புதுத்தாராளமய புரிதலால் வடிவமைக்கப் படுகின்றன.

பொதுவாக ஏற்கப்பட்ட மரபுவழித் துறைகளில் மட்டுமல்லாமல், விமர்சனப் பாங்குள்ள முற்போக்கான, மாற்றுப் பொருளியல்  ஆய்விலக்கியங்ககளிலும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளன.

இவ்வாறு குடும்பத்தைச் சமூக அமைப்பின் அலகாகக் கருதுவது குறித்தும், இவ்வகையில் ‘உயரடுக்கினர்’ குறித்துமான ஆய்வு இலக்கியத்திலும் கூட, பெரும்பாலும் மூலதனத் திரட்டலால் உந்தப்படும் சமூக உற்பத்தி, சமூக மறுவுற்பத்தி ஆகியவற்றிலிருந்து தனிமைப்படுத்தியே இப்பொருள் குறித்து ஆய்வு செய்யப்பட்டுள்ளது.

நகைமுரணாக, 'வணிகப் பேரரசுகளை' நிர்மாணிப்பதில் குடும்பத்தை மையமாகக் கொண்ட ஒரே இலக்கியம் பெரும்பாலும் புகழ்பாடும் சுயசரிதைகளில் மட்டும் காணப்படுகிறது. (முதலாளித்துவ முயற்சிகளில் 'தொழில் வணிக அறிவுக் கூர்மையே' 'வெற்றிக்கு' விளக்கமாகக் கொண்டாடப்படுகிறது) பிறகு தொழிலதிபர்களின் தனித்துவமான பண்புகளே வெற்றிக்குக் காரணமாகவும், அதில் குடும்பத்தின் ஆதரவு தடையற்ற பங்கு வகிப்பதாகவும் காட்டப்படுகிறது.

பிரிக்கப்படாத இந்துக் குடும்பம் என்பது சட்டமுறைப்படி வரி செலுத்தும் நிறுவனமாகவும், தனிநபர்களிடமிருந்தும், பெருங்குழுமங்களிடமிருந்தும் (குழுமச் சட்டம், கூட்டுப் பங்காளர் சட்டத்தின் கீழ் வரையறுக்கப்பட்டவை) வேறுபட்டதாகவும் தனித்துவமானதாகவும் அங்கீகரிக்கப்பட்டது.

மற்றப் பெருங்குழும அமைப்புகள், தனியாள் வருமான வரி பெருமங்குழும வருமான வரிச் சட்டங்களில் அங்கீகரிக்கப்பட்டுக் குழுமச் சட்டத்தின் அடிப்படையில் வரையறுக்கப்படும் போது, பிரிக்கப்படாத இந்துக் குடும்பமோ இந்துத் தனியாள்  சட்டத்தின் அடிப்படையில் வரையறுக்கப்படுகிறது.

இந்துக் குடும்பத்திற்குச் சொந்தமான வணிகக் குழுக்களின் சட்டப் பதிவு:

குழுமங்களும் குடும்பங்களும் முறையான சட்டக் கட்டமைப்புகள் மூலம் பின்னிப் பிணைக்கப்பட்டுள்ளன. பெருங்குழும நிர்வாகத்தின் சட்ட அமைப்பானது பொதுவான பங்குதாரர்களின் மூலம் கூட்டாண்மை, வரையறுக்கப்பட்ட தனியார் நிறுவனங்கள், பதிவு செய்யப்படாதவையும் பதிவு செய்யப்பட்டவையுமான  வரையறுக்கப்பட்ட பொதுக் குழுமங்கள் போன்ற பல்வேறு வகைக் குழுமங்களின் சாதகமான கூட்டமைப்பை ஏற்படுத்த வழிவகுக்கிறது.

இது அபாயத்தை பரவலாக்குவதற்கான ஒரு வழியாக மட்டுமல்லாமல், 1973க்குப் பிறகு ஏகபோகங்கள்,  கூடா வர்த்தக நடைமுறைகள் சட்டத்திலிருந்து (1991இல் அது விலக்கிக் கொள்ளப்படும் வரை) தப்பித்துக் கொள்வதற்கான சட்ட வழிகளையும் வழங்கியது.

1926ஆம் ஆண்டின் தொழிற்சங்கச் சட்டத்தின் (தாஸ்குப்தா, 2016) நிபந்தனைகளின் கீழ் தொழிற்சங்கம் உருவாக வாய்ப்பே இல்லாமற்செய்யும் வகையில் பெரும்பாலான குழுக்கள் ஏழுக்கும் குறைவான ஊழியர்களையே கொண்டிருந்தன.

பெருங்குழும ஆளுகைக் கட்டமைப்புகள், குடும்பச் சட்டங்கள் மற்றும் வரிச் சட்டநெறிகளை ஒன்றிணைப்பதன் மூலம் பிரிக்கப்படாத இந்துக் குடும்ப (HUF - Hindu Undivided Family) வகையினத்திற்குச் சட்ட அங்கீகாரம் வழங்கப்பட்டது. இவ்வாறு வணிகக் குழுக்களின் நிறுவனக் கட்டமைப்பின் மீதான குடும்பத்தின் கட்டுப்பாடும், இந்த கட்டமைப்புகள் மூலம் உருவாக்கப்படும் செல்வத்தின் மீதான உரிமையும் சட்டமுறைப்படி பேணிக் காக்கப்பட்டது (தாஸ்குப்தா, 2013).

இந்தியாவில் தனித்துவமான குழும அமைப்பு:

குடும்பங்களுடன் பிணைக்கப்பட்ட குழுமங்கள், இந்தியாவில் மூலதனத் திரட்டலை அமைப்புசார்ந்து  பதிவு செய்யும் சட்டக் கட்டமைப்பாகும். முதல் நிலையிலான குழும-குடும்பப் பிணைப்பு உலகளாவிய முதலாளித்துவ நிறுவனங்களில் காணப்படுவது குறிப்பிடத்தக்கது, அதாவது குடும்பங்களின் தனிப்பட்ட உறுப்பினர்கள் பங்குகளின் மீது உரிமையும் கட்டுப்பாடும் கொண்டிருக்கிறார்கள்.

ஆனால் இந்தியாவில், குழுமங்களுடன் பிரிக்கப்படாத இந்துக் குடும்பத்துக்குள்ள பிணைப்பு குடும்பத்தின் கட்டுப்பாட்டைப் பேணுவதில் தனித்துவமானதாகவும், குறிப்பாதானகவும் உள்ளதோடு மட்டுமல்லாது, ஒரு சட்டமுறை நிறுவனமாக இந்தச் சலுகை இந்துக்களுக்கு மட்டுமே வழங்கப்படுகிறது, இது இந்துத் தனியாள், குடும்பச் சட்ட அரசுநெறிகளில் வரையறுக்கப்பட்டுள்ளது, அதாவது முஸ்லீம், பார்சி, கிறிஸ்தவர், யூதர் அல்லாத எவரும் ஓர் இந்துவாகக் கருதப்படுவார்.

பிரிக்கப்படாத இந்துக் குடும்பம் மூன்று - படிச் செயல்வழி மூலம் வணிகக் குழு அமைப்பின் நிறுவன அடிப்படையாகச் சட்டமுறையாக்கப்பட்டது.

முதலாவதாக, இந்துச் சட்ட நெறி அரசுச் சட்ட நெறியாக ஏற்றுக்கொள்ளப்பட்டது. முஸ்லீம், கிறிஸ்தவர், பார்சி அல்லது யூதர் அல்லாத ஒருவர், பௌத்தம், சமணம் மற்றும் சீக்கியம் போன்ற பிற நிறுவனமயமாக்கப்பட்ட மதத்தைக் கடைப்பிடிக்கிற ஒருவர், மத ஒழுங்கமைப்புகளுக்குப் புறத்தே ஆதிவாசியாக இல்லாத ஒருவர் இந்து ஆவார் என வரையறுக்கப்பட்டது. ஒருவர் தான் இந்து அல்ல என்பதை நிரூபிக்க வேண்டிய பொறுப்பு  அந்தத் தனியாளையே சாரும் (தாஸ்குப்தா, 2016).

இரண்டாவதாக, இந்துச் சட்ட நெறி தயாபாகா மற்றும் மிடாக்ஷரா சொத்துகள் வைத்திருப்பதற்கான அங்கீகாரத்தை ஏற்படுத்திக் கொடுத்தது (சொத்து மீதான பரம்பரை உரிமைகளை வரையறுப்பதில் வழக் சார்ந்த சட்டங்களை நீக்குவதற்கு முன்மொழியப்பட்ட அசல் வரைவில் செய்யப்பட்ட சமரசம்).

இரண்டு இந்துக்களுக்கு இடையிலான திருமணம் மட்டுமே (சாதி நெறிமுறைகளுக்கு இடமளிக்கும் வழக்கத்தின் சட்டப்படி அகமணமுறை, புறமணமுறை ஆகிய இரண்டின் விதிகள் மற்றும் நடைமுறைகள்) சட்ட வரம்புக்குள் கொண்டுவரப்பட்டது.

தத்தெடுத்தல், வாரிசுரிமை ஆகியவை வழக்கம் சார்ந்த நெறிகள் அடிப்படையில் நீதித்துறையில் வரையறுக்கப்பட்டது. ஆண் வம்சாவளியே சொத்தின் இயல்பான வாரிசுகளாக நிறுவனமயமாக்கப்பட்டது. திருமணத்திற்கு வெளியே பிறந்த குழந்தைகளுக்கு சொத்தின் மீதான எந்தவொரு உரிமையையும் பறிக்கப்பட்டது.

மூன்றாவதாக, எந்தவொரு திருமணமான இந்து ஆணும் ‘கூட்டுக் குடும்பத்திலிருந்து’ விலகி, ஒரு புதிய பிரிக்கப்படாத இந்துக் குடும்பத்தைத் தொடங்குவதற்கான சட்ட வெளியை அது உருவாக்கியது. தனிக் குடும்ப அமைப்புகள் ஏற்பட்ட போதும், ஒவ்வொரு தனிக் குடும்பமும் ஒரு புதிய பிரிக்கப்படாத ‘இந்துக் குடும்பத்தின் தொடக்கத்தைக் குறிக்கும் என்பதால், பிரிக்கப்படாத ‘இந்துக் குடும்பம் ஒரு சட்டமுறை நிறுவனமாக நிலைத்திருக்க முடிந்தது.

இவ்வாறு, முஸ்லீம், கிறிஸ்தவர், பார்சி, ஜெயின் அல்லாத அனைத்துக் குடிமக்களுக்கும், இந்துத் தனியாள் சட்டம் அரசுச் சட்டமாக மாறியது. இந்தியாவில் செல்வம், சொத்துக்களின் அமைப்பு முறையில் ஆணாதிக்க அடிப்படையிலான சொத்துரிமை கட்டமைப்பு நிறுவனமயமாக்கப்பட்டது.

மிடாக்க்ஷரா சட்டத்தின் கீழ் மகள்களுக்கு (மனைவிகள் / விதவைகள் / விவாகரத்துப் பெற்றவர்களுக்கு அல்ல)  சமமான இணைமரபுரிமைகளை வழங்கிய 2005 சட்டத் திருத்தம் நடைமுறைப்படுத்தப்படும் வரை பெண்களுக்கு அனைத்துச் சொத்துக்களிலும் சம பங்கு மறுக்கப்பட்டது, ‘நிலம் துண்டாடப்படுவதைத் தவிர்ப்பதற்காக என்று கூறி பெண்களுக்கு நிலத்தில் எந்தவிதச் சொத்து உரிமையும் மறுக்கப்பட்டது.

ஆனால், நாங்கள் ஆய்வு செய்த நேர்வுகளில், 2011ஆம் ஆண்டின் பிற்பகுதியில் கூட, ஒரு விழுக்காடு பெண்கள் மட்டுமே மகள்களாக இணை மரபுரிமைகள் கொண்டிருக்கக் கண்டோம். இவ்வாறு இந்து, பிரிக்கப்படாத இந்துக் குடும்பம் என்ற இரண்டு வரையறைகளின் உதவியுடன், மதம், சாதி, ஆணாதிக்கம் ஆகியவை சொத்துரிமைகளை நிர்ணயிப்பதற்கான நிறுவன அடிப்படையாக நிறுவப்பட்டன.

பிரிக்கப்படாத இந்துக் குடும்பத்தைச் சட்டபூர்வமான அமைப்பாக்குவதன் மூலம் இந்து ஆண்களுக்குச் சாதகமாகச் சொத்துரிமையை அரசியலமைப்பால் உத்தரவாதம் அளிக்கப்பட்ட ஒரு சட்ட உரிமையாக மாற்றியமைத்தனர். இது சுதந்திரத்திற்குப் பிறகான முதல் பத்தாண்டுகளில் செய்யப்பட்ட மிக முக்கியத் தலையீடாகும்

பிரிக்கப்படாத இந்துக் குடும்பம் நடைமுறைக்கு வந்த சூழ்நிலைகள் விவாதத்திற்கு உட்பட்டவை. இந்தியாவில் வருவாய், சொத்து வரிச் சட்டங்களின் கீழ், பிரிக்கப்படாத இந்துக் குடும்பம் வரிவருவாய்க்கு ஒரு தனித்துவமான அளவீடாக மதிப்பிடப்படுகிறது.

சட்டத்தில் (அரசால் ஏற்றுக்கொள்ளப்பட்ட இந்துச் சட்டநெறிமுறையின் அடிப்படையில்), ஒரு பிரிக்கப்படாத இந்துக் குடும்பம், பொதுவான மூதாதையரிடமிருந்து வந்த அனைத்து ஆட்களையும், அவர்தம் மனைவிமார்கள் மற்றும் திருமணமாகாத மகள்களையும் உள்ளடக்கியது; இந்து இணை-மரபுரிமை என்பது பிறப்பின் அடிப்படையில் சொத்துரிமை பெறுவதற்கான  அமைப்பாகும்.

பிரிக்கப்படாத இந்துக் குடும்பம் சட்டப்படியான வரிசெலுத்தும் நிறுவனமாகவும், தனியாட்களிடமிருந்தும், பெருங்குழுமங்களிடமிருந்தும் (குழுமச் சட்டம், பங்குதாரர் சட்டத்தின் கீழ் வரையறுக்கப்பட்டவை) வேறுபட்டுத் தனித்துவமானதாகவும் அங்கீகரிக்கப்பட்டது.

பெருங்குழுமம் மற்றும் தனியாள் வருமான வரிச் சட்டங்களால் அங்கீகரிக்கப்பட்ட மற்ற அனைத்து நிறுவன அமைப்புகளும் குழுமச் சட்டத்தின் அடிப்படையில் வரையறுக்கப்பட்டுள்ளன என்ற போதும், பிரிக்கப்படாத இந்துக் குடும்பம் இந்துத் தனியாள் சட்டத்தின் அடிப்படையிலேயே இந்திய வரிச் சட்டத்தில் ஒரு சட்டப்பூர்வ நிறுவனமாக வரையறுக்கப்படுகிறது.

பிரிக்கப்படாத இந்துக் குடும்பத்தை (HUF) 1955-56ஆம் ஆண்டில் தனியாள் சட்ட நெறிகளினால் வரையறுத்த பின்னர், சொத்து வரிச் சட்டம் 1957, 1961 வருவாய் வரி சட்டத்தின் பிரிவு 2 ஆகியவற்றின் மூலம் இந்தப் பிரிக்கப்படாத இந்துக் குடும்ப அமைப்பை  நிலைத்திருக்க செய்ய அரசு அடுத்த கட்ட நடவடிக்கை எடுத்தது. இதன் மூலம் 'குடும்ப வருவாய்' மீதான வரியை ஏய்ப்பதற்கான வசதிகளும், மற்றப் பிரிவுகளுடன் ஒப்பிடும் போது அதிக வரிவிலக்குகள், குறைந்த வரிவிகிதங்கள் ஆகிய சலுகைகளும் அளிக்கப்பட்டன.

வாஞ்சூ குழு, கே என் ராஜ் குழுவின் பரிந்துரைகளினால் பிரிக்கப்படாத இந்துக் குடும்பத்தின் மீதான வரி விகிதங்கள் தனியாட்களின் மீதான வரி விகிதத்திற்குச் சமமாக்கப்பட்டன.

இந்தியாவில் 150 குடும்பத்திற்குச் சொந்தமான வணிகக் குழுக்கள் பற்றிய எங்கள் ஆய்வு இரண்டு கட்டங்களாக (2003-05 மற்றும் 2008-11) மேற்கொள்ளப்பட்டது, எங்கள் கணக்கெடுப்பில் இந்து வம்சாவழியைச் சேர்ந்த இரண்டு குழுக்கள் தவிர, அனைத்து வணிகக் குழுக்களும் பிரிக்கப்படாத இந்துக் குடும்பத்தை (HUF ) சேர்ந்தவை.

சராசரியாக, ஒவ்வொரு குழுவும் 47 நிறுவனங்களை நேரடியாகவும் மறைமுகமாகவும் கட்டுப்படுத்தின. ஒவ்வொரு வணிகக் குழுவும் சராசரியாக மூன்று முதல் நான்கு சார்புக் குழுமங்களையும் ஒன்று முதல் மூன்று முதன்மைக் குழுமங்களையும் கொண்டிருந்தன.

இந்தக் குழுமங்களில் குடும்பத்தின் தலைவரும், மற்ற உறுப்பினர்களும் தனியாட்களாகப் பங்குகள் வைத்திருந்தனர். பிரிக்கப்படாத இந்துக் குடும்ப அமைப்புகள் இந்தக் குழுமங்களில் அடுத்த மிகப் பெரிய ஒற்றைப் பங்குதாரராக இருந்தன.

குறைந்தது இரண்டு குடும்ப உறுப்பினர்கள் இந்தக் குழுமங்களின் இயக்குநர்களாக இருந்தனர். இந்தக் குழுமங்கள் பிற வரையறுக்கப்பட்ட பொது, தனியார் மற்றும் கூட்டுக் குழுமங்களின் பங்குகளைத் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருந்தன. அத்தகைய குழுமங்களில், குடும்ப உறுப்பினர்களும், பிற வணிகக் குடும்பங்களின் நெருங்கிய கூட்டாளிகளும் இயக்குநர்களாகச் செயல்பட்டனர்.

இவ்வாறு வணிகக் குடும்பங்களால் மூலதனக் திரட்டல் தொடர்பான அனைத்து நடவடிக்கைகளையும் கட்டுப்படுத்துவதற்கான உடைமையுரிமைக்கும்  ஆளுகைக்கும் முறையான கட்டமைப்பு உருவாக்கப்படுகிறது.

கணக்கிடப்பட்ட 35.3 விழுக்காடு குழுக்களில், பிரிக்கப்படாத இந்துக் குடும்பங்கள் பட்டியலிடப்பட்ட பொதுத் துறை நிறுவனங்களில் குழுக் குழுமங்களின் பங்குகளைப் வைத்திருக்கவில்லை, வரையறுக்கப்பட்ட தனியார்’ நிறுவனங்களிலிலேயே அவற்றை வைத்திருந்தன.

கணக்கிடப்பட்ட 61.3 விழுக்காடு குழுக்களில், பிரிக்கப்படாத இந்துக் குடும்பத்தின் தலைவரும், மற்ற உறுப்பினர்களும் பட்டியலிடப்பட்ட பொதுத்துறை நிறுவனங்களில் பங்குகளைக் கொண்டிருந்தனர். இவ்வாறு பிரிக்கப்படாத இந்துக் குடும்பமும், அதன் உறுப்பினர்களும் ஒரே நேரத்தில் வருவாய்  பெறும் விதத்தில் இந்தக் குழுக்கள் பேணிக் காக்கப்படுகின்றன.

அதே நேரத்தில், பிரிக்கப்படாத இந்துக் குடும்பம் மற்றச் சொத்துகளையும் வைத்திருக்க முடியும். காட்டாக, வீடுகள், பணம், தங்கம், பங்குச் சான்றிதழ்கள், நிலையான வைப்புத்தொகை ஆகியவை வணிகக் குழுவின் சொத்துக் கணக்கில் கருதப்பட மாட்டா. பிரிக்கப்படாத இந்துக் குடும்பத்தின் வருவாயும் செல்வ இருப்புக்களும் வணிகக் குழுவின் உரிமை மற்றும் சொத்துகளின் ஆளுகையில் கணக்கிடப்படுவதில்லை.

குழுமங்கள் மற்றும் குடும்பங்களின் இந்த ஒருங்கிணைந்த அமைப்பு பல சலுகைகளைப் பெற உதவுகிறது,  இதில் இரண்டு முக்கியச் சலுகைகளாக 1. வரி ஏய்ப்பு, 2. வணிகக் குழுவின் மூலதனச் சுற்றுகள் மீது குடும்பத்தின் கட்டுப்பாடு ஆகியவை அமைந்துள்ளன.

உதாரணமாக அ, ஆ, இ என்ற மூன்று சகோதரர்களும் ஒரு நிறுவனத்தைச் சொந்தமாக வைத்துள்ளனர். அவர்களில் ஒவ்வொருவரும் திருமணமானவர். அவர்கள் ஒவ்வொருவருக்கும் திருமணமாகிய இரண்டு மகன்கள் உள்ளனர். அ, ஆ, இ ஆகிய ஒவ்வொருவருக்கும் ரூ.12 லட்சம் ஆண்டு வருவாய் கிடைப்பதாகக் கொள்வோம்.

பிரிக்கப்படாத இந்துக் குடும்ப அமைப்புக்கென்று சட்ட வழிமுறை இல்லாதிருப்பின் 2015-16 நிதியாண்டிற்கான வரிவிதிப்பு விகிதங்களின் படி சகோதரர்கள் ஒவ்வொருவரும் வருமான வரியாக ஆளுக்கு ரூ. 5,55,000/- செலுத்த வேண்டும்.

ஆனால் அ, ஆ, இ சகோதரர்கள் வருமான வரிச் சட்ட விதிகள் மற்றும் இந்துச் சொத்துகளைப் பற்றிய நான்கு சட்டங்களின் அடிப்படையில் தங்களுக்கிடையில் குறைந்தது பத்து பிரிக்கப்படாத இந்துக் குடும்பங்களை உருவாக்கி, அவர்களின் வருவாயைத் தனியாள் வரிக் கணக்குகளிலும், பத்துப் பிரிக்கப்படாத இந்துக் குடும்பங்களுக்கிடையிலும் பகிர்ந்து கொள்ள முடியும். அத்தகைய சூழலில், நிறுவனத்தில் பங்குதாரராக உள்ள மூன்று சகோதரர்களும் அவர்களது குடும்பங்களும் செலுத்த வேண்டிய மொத்த வரித் தொகை வெறும் ரூ.35,000/- மட்டுமே.

வருமான வரிச் சட்டத்தின் கீழ் பிற விதிவிலக்குச் சாத்தியப்பாடுகளைத் தனித்தனியாகப் பயன்படுத்துவதன் மூலம், பல ஆதாரங்களிலிருந்து வரும் மிகப்பெருமளவிலான வருமானத்துக்குச் செலுத்த வேண்டிய வரிப் பொறுப்பான்மையை சுழிய அளவிற்குக் குறைக்க முடியும்.

\செல்வம் மற்றும் சொத்து வரியை ஏய்ப்பதற்குப் பிரிக்கப்படாத இந்துக் குடும்ப அமைப்பைப் பயன்படுத்த முடியும். மேலும், பிரிக்கப்படாத இந்துக் குடும்பத்தின் உறுப்பினர் எவரும் திரட்டப்பட்ட ‘குடும்ப வருவாயின் மூலமே வருவாய் ஈட்டினால், அந்த வருவாய் ‘பிரிக்கப்படாத குடும்பத்தை’ப் பராமரிப்பதற்கான கூடுதல் செலவாகக் கருதப்பட்டு வரிவிதிப்பிலிருந்து விலக்கு அளிக்கப்படும்.

இந்துக் குடும்பம் நீடிப்பதால் கிடைக்கும் பொருளூக்கம்:

அ, ஆ அல்லது இ-க்கு ஒரு மகளும், திருமணமான  ஒரு மகனும் இருந்தால், அவரால் ஐந்துக்கு பதிலாக மூன்று பிரிக்கப்படாத இந்துக் குடும்பங்களை மட்டுமே உருவாக்க முடியும்.

அவர்களில் யாருக்காவது மகன் இல்லாது இரண்டுமே மகள்களாக இருந்தால், அவர் இரண்டு பிரிக்கப்படாத இந்துக் குடும்பங்களை மட்டுமே உருவாக்க முடியும். அதேபோல், மகன்களில் யாராவது திருமணம் செய்து கொள்ளா விட்டால், கூடுதலாகப் பிரிக்கப்படாத இந்துக் குடும்பங்களை உருவாக்குவதற்கான வாய்ப்பும் குறையும்.

இவ்வாறு ஒவ்வொரு தலைமுறையிலும் மகனுக்கு முன்னுரிமை அளிப்பதன் மூலமும், அரசின் இந்து சட்டநெறிமுறையின் படி சாதி, மத  நெறிமுறைகளால் பிணைக்கப்பட்ட பாரம்பரியத் திருமணங்களைச் செய்வதன் மூலமும் சாதி இந்துக் குடும்பத்தை மூலதனத் திரட்டலுக்கான ஓர் அலகாக நிர்மாணிப்பதற்கு, இந்தியாவின் பிரிக்கப்படாத இந்துக் குடும்பத்தின் வரி அமைப்பு முறையான சட்டப்பூர்வமான பொருளூக்கம் அளித்துள்ளது.

சட்ட வழக்கு அடிப்படையில் பிரிக்கப்படாத இந்து குடும்பப் பயன்பாட்டின் வகைபாடு: 

       1. இந்துச் சட்ட அடிப்படையில், சட்டங்களில் ஏற்கப்பட்ட இந்து வரையறையைப் பயன்படுத்தி இந்துக்                     குடும்பத்திற்குள்ளே (ஆண் வம்சாவளியை அடிப்படையாகக் கொண்டது) சொத்துக்களை பராமரித்து வைத்திருத்தல்.

  1. வரி ஏய்ப்புக்காகத் தனியாட்களுக்கும், பிரிக்கப்படாத இந்துக் குடும்பத்திற்கும் இடையில் வருவாயைப் பிரித்தல்.
  1. ஒரே ஆளே தலைவராகவும் நிறுவனராகவும் செயல்பட்டுப் பிரிக்கப்படாத இந்துக் குடும்பம், மற்றும் குழுக் குழுமங்களுக்கிடையில் சிக்கலான பரிவர்த்தனையில் ஈடுபடுவதன் மூலம் பெரிய அளவிலான வரிகளை ஏய்த்தல்.
  1. மூலதன ஆதாயங்களில் வரிவிலக்குச் சலுகை பெறுதல்.
  1. முன்னோர்களால் வரதட்சணையாகப் பெறப்பட்டதாகக் கூறிப் பிரிக்கப்படாத இந்துக் குடும்பத்தில் பெரும் மதிப்பிலான நிலத்தை வைத்திருத்தல்.
  1. பிரிக்கப்படாத இந்துக் குடும்பம் குழுக் குழுமங்களுக்கிடையில் நிதிகளையும், சொத்துக்களையும் ஒன்றிணைத்தல்.
  1. பிரிக்கப்படாத இந்துக் குடும்பக் குழுக் குழுமங்களின் பங்குகளை விற்றல், வாங்கலின் மூலம் ஊக லாபம் ஈட்டுதல்.
  1. ஒரே குடும்பத்தில் பொதுவான தலைவர்களையும் உறுப்பினர்களையும் கொண்ட பல பிரிக்கப்படாத இந்துக் குடும்பங்களை உருவாக்குதல், பின்னர் இந்த வெவ்வேறு பிரிக்கப்படாத இந்துக் குடும்பங்களின் ஒரு சொத்தை பல பரிவர்த்தனைகளில் ஈடுபடுத்துதல். காட்டாக, பிரிக்கப்படாத இந்துக் குடும்பங்களுக்கிடையில் ஒரே நிலம் வெவ்வேறு நோக்கங்களுக்காக உறுதியளிக்கப்பட்டு மீண்டும் மீண்டும் பரிமாற்றத்திற்குள்ளாதல்.

வட்டார உள்ளடக்கம்:

1961ஆம் ஆண்டில் மகாராஷ்டிரா, குஜராத், பஞ்சாப் டெல்லி, அரியானா ஆகிய ஐந்து மாநிலங்கள் பிரிக்கப்படாத இந்துக் குடும்பங்களின் மொத்த எண்ணிக்கையில் 31 விழுக்காட்டைக் கொண்டிருந்தன. 1989இல், மொத்தமுள்ள பிரிக்கப்படாத இந்துக் குடும்பங்களில் இந்த மாநிலங்கள் 47 விழுக்காட்டைக் கொண்டிருந்தன.

அதே காலகட்டத்தில், நடுத்தர வருவாய் கொண்ட தமிழ்நாடு, கர்நாடகம், கேரளம், ஆந்திரம், மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களிலும், குறைந்த வருவாய் கொண்ட பீகார், ராஜஸ்தான், ஒரிசா, உத்தரபிரதேசம், மத்திய பிரதேசம் ஆகிய மாநிலங்களிலும் பிரிக்கப்படாத இந்துக் குடும்பங்களின் விகிதம் குறைந்திருந்தது. நடுத்தர வருவாய் கொண்ட மாநிலங்களில் பிரிக்கப்படாத இந்துக் குடும்பங்களின் விகிதம் 31 விழுக்காட்டிலிருந்து 28 விழுக்காடாகக் குறைந்தது; குறைந்த வருவாய் கொண்ட மாநிலங்களில் பிரிக்கப்படாத இந்துக் குடும்பங்களின் விகிதம் 37 விழுக்காட்டிலிருந்து 23 விழுக்காடாக கணிசமாகக் குறைந்தது.

1976இல் கேரளத்தில் கூட்டுக் குடும்ப அமைப்பும், பிரிக்கப்படாத இந்துக் குடும்பத்திற்கான சலுகைகளும் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டன. 1990க்குப் பிறகு தமிழ்நாட்டிலும் அவ்வாறே செய்யப்பட்டது இந்திய அரசு பிரிக்கப்படாத இந்துக் குடும்பத்தின் வருவாய் மற்றும் வரி குறித்தத் தரவுகளை வெளியிடுவதை 1990 முதல் நிறுத்தி விட்டது. இந்த மாநிலங்களில் 1990க்குப் பிறகு பிரிக்கப்படாத இந்துக் குடும்பங்களின் பங்கு மேலும் குறைந்து விட்டதாகத் தெரிகிறது.

மாநில அளவிலான மாறுபாடுகள்:

வட இந்திய மாநிலங்களான அரியானா, இமாச்சல், ஜம்மு-காஷ்மீர், உ.பி., டெல்லி ஆகியவற்றின் சொத்துரிமைச் சட்டங்கள் ஆண் வாரிசுகளுக்கு வலுவான முன்னுரிமை அளிப்பதையே பிரதிபலிக்கின்றன. குஜராத், பம்பாய், ஆந்திரா, மேற்கு வங்கம் போன்ற மாநிலங்களில் அத்தகைய முன்னுரிமை குறிப்பிடப்படவில்லை. இவற்றில் .ஆணாதிக்கக் கட்டமைப்பு வேரூன்றியுள்ள தனியால் சட்டங்களால் அது வரையறுக்கப்படுமாறு விடப்பட்டுள்ளது (சக்சேனா 2012).

1989க்கு பிறகு மாநில வாரியாகப் பிரிக்கப்படாத இந்துக் குடும்பம் குறித்த தரவுகளை வெளியிடுவதை இந்திய அரசு நிறுத்தியுள்ளது. 1976ஆம் ஆண்டில் கேரளம் கூட்டுக் குடும்ப முறையை ஒழித்தது, அதனுடன் பிரிக்கப்படாத இந்துக் குடும்பத்திற்கான சலுகைகளும் அகற்றப்பட்டன, மற்றத் தென் மாநிலங்களில் பெண்களுக்குச் சம உரிமைகளை வழங்கும் விதமாக சட்டத் திருத்தம் கொண்டுவரப்பட்டது. கேரள கூட்டுக் குடும்ப ஒழிப்புச் சட்டத்தின் (1976) வழியில் ஆந்திரப் பிரதேசத் திருத்தச் சட்டம் (1986), தமிழ்நாடு திருத்தச் சட்டம் (1990), கர்நாடகத் திருத்தச் சட்டம் (1990) ஆகியவை நிறைவேற்றப்பட்டன.  

தென் மாநிலங்கள் தவிர, மகாராஷ்டிராவிலும் மகாராஷ்டிரத் திருத்தச் சட்டத்தின் (1994) கீழ் இணைச் சொத்துடைமை தொடர்பான சட்டத் திருத்தம் செய்யப்பட்டது. அதிக வருவாய் கொண்ட மாநிலங்களில், பிரிக்கப்படாத இந்துக் குடும்பங்களில் பெரும் பகுதி குஜராத், மகாராஷ்டிராவில் காணப்பட்டது, அதற்கடுத்தபடி, பஞ்சாப், டெல்லியிலும் அதிகமாகக் காணப்பட்டது.

மகாராஷ்டிராவில், 1961க்கும் 1989க்கும் இடையில் பிரிக்கப்படாத இந்துக் குடும்பங்களின் விகிதம் இரட்டிப்பாகியது. குஜராத்தில் பிரிக்கப்படாத இந்துக் குடும்பங்களின் விகிதம் 1961 முதல் 1980 வரை 10 விழுக்காட்டிலிருந்து 18 விழுக்காடாக அதிகரித்து, 1989ல் 14 விழுக்காடாக நிலைபெற்றது.

டெல்லியில் 1980 வரை குழுமங்களில் பிரிக்கப்படாத இந்துக் குடும்பங்களின் விகிதம் 2-3 விழுக்காடு என்ற நிலையான விகிதத்தைக் கொண்டிருந்தாலும், அதன் பின்னர் அதிகரிக்கவே செய்தது. 1989ல் இந்தியாவில் பிரிக்கப்படாத இந்துக் குடும்பங்களின் மொத்தத் தொகை 7 விழுக்காடு வரை இருந்தது.

பஞ்சாப் மாநிலத்தில் 1961க்கும் 1980க்கும் இடையில் பிரிக்கப்படாத இந்துக் குடும்பங்களின் விகிதம் 9 விழுக் காட்டிலிருந்து 3 விழுக்காடாகச் சரிவடைந்தது. ஆனால் 1989இல் 6 விழுக்காடாக அதிகரித்தது.

வணிகக் குழுமங்களின் மூலதன சுற்றுகள் மீது குடும்பத்தின் கட்டுப்பாடு:

பிரிக்கப்படாத இந்துக் குடும்பம் பெரும்பாலும் வரி ஏய்ப்புக்கான ஒரு கருவியாகக் கருதப்படுகிறது.  குடும்பத்திற்குச் சொந்தமான வணிகக் குழுமங்களின் சொத்து இருப்புகளின் அமைப்பில் இதன் முக்கியத்துவம் குறித்துப் போதிய அளவில் ஆய்வு செய்யப்படவில்லை.

ஒரு இந்து ஆண் ஒன்றுக்கு மேற்பட்ட பிரிக்கப்படாத இந்துக் குடும்ப கணக்குகளுக்கு தலைவராக இருக்க முடியும். ஒரு தனிப்பட்ட நபராகவும், பிரிக்கப்படாத இந்துக் குடும்பத்தின் தலைவராகவும் இரட்டை பாத்திரம் வகிப்பதன் மூலம் பெருநிறுவன நிர்வாக கட்டமைப்புகளுடன் பிரிக்கப்படாத இந்துக் குடும்பத்திற்கான பிணைப்பு,  ஏற்படுத்தப்பட்டது.

உதாரணமாக, ஒரு பிரிக்கப்படாத இந்துக் குடும்பம் மற்ற நபர்களுடன் பங்காளராக செயல்பட முடியாது, ஆனால் ஒரு பிரிக்கப்படாத இந்துக் குடும்பத்தின் தலைவரால் அவ்வாறு செயல்பட முடியும் (சச்ச்தேவா 1987). இதேபோல் தலைவரும், பிரிக்கப்படாத இந்துக் குடும்பத்தின் மற்ற உறுப்பினர்களும் ஊதியம் பெற உரிமை உண்டு.

மேலும் ஒரு பிரிக்கப்படாத இந்துக் குடும்பம் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட வணிக நிறுவனங்களின் உரிமையாளராக இருக்க முடியும். பிரிக்கப்படாத இந்துக் குடும்பம் தொழிற்சாலைகள் மற்றும் வர்த்தகங்கள் தொடர்பான பல்வேறு வகையான சொத்துக்களையும் வைத்திருக்க முடியும்.

பெறுநிறுவன நிர்வாகக் கட்டமைப்புகளில் நிறுவன உட்பொதித்தல்:

பிரிக்கப்படாத இந்துக் குடும்பம், வரி தவிர்ப்பதற்கான ஒரு கருவியாக இருப்பதைத் தவிர, இந்தியாவில் இந்து குடும்பத்திற்கு சொந்தமான வணிகக் குழுக்களுக்கான சொத்துக்களை வைத்திருப்பதற்கும் முக்கியமாக பயன்படுத்தப்படுகிறது.

வரி தவிர்ப்புக்கான ஆதாரமாக இருப்பதைத் தவிர, இந்து வம்சாவளியைச் சேர்ந்த 'பழைய' மற்றும் 'புதிய' முதலாளித்துவ வணிக நிறுவனங்கள் குடும்ப சொத்துக்களை ஒருங்கிணைப்பதற்கும், ஒருங்கிணைந்த இயக்குநரகம், பங்கு உடைமைகளின்  மூலம் பிரிக்கப்படாத இந்துக் குடும்பத்தில் முக்கிய நிர்வாகப் பொறுப்புகளையும், பங்குகளின் உரிமைகளையும் கொண்டவர்கள் பிரிக்கப்படாத இந்துக் குடும்பங்களுக்கு இடையிலும், அதன் அங்கத்தினருக்கு இடையிலும் பரிவர்த்தனைகளை மேற்கொள்வதன் மூலம் மூலதனத்தின் மீதான குடும்பத்தின் கட்டுப்பாடு உறுதி செய்வதற்கும் பயன்படுத்தப்பட்டது.

வணிகக் குழுவில் உள்ள மூலதன சுற்றுகள் மீது குடும்பத்தின் கட்டுப்பாட்டு முறைகளை விளக்குவதற்கு, எங்கள் கணக்கெடுப்பிலிருந்து மற்றொரு வழக்கு ஆய்வை முன்வைக்கிறோம்.

X வணிகக் குடும்பத்தைச் சேர்ந்த A என்ற ஆண், Y, வணிகக் குடும்பத்தைச் சேர்ந்த B என்பவரை மணந்தார். அவர்களுக்கு C, D என இரண்டு மகன்களும், E என்று ஒரு மகளும் உள்ளனர். C, D இருவருக்குமே M, N என்று ஒரு மகன் உள்ளனர். மகன்கள் C, D இருவருமே V, W வணிக குடும்பங்களைச் சேர்ந்த G மற்றும் Hஐ திருமணம் செய்து கொண்டனர்.

X குடும்பத்தில் இந்த கூட்டணிகளிலிருந்து உருவாக்கப்பட்ட பிரிக்கப்படாத இந்துக் குடும்பங்கள்:

  • பிரிக்கப்படாத இந்துக் குடும்பம்1 (A –தலைவர், C-யும், D-யும் இணை உடைமையாளர்கள், B உறுப்பினர்):
  • பிரிக்கப்படாத இந்துக் குடும்பம்2(C -தலைவர், G -உறுப்பினர்)
  • பிரிக்கப்படாத இந்துக் குடும்பம்3(D -தலைவர், H -உறுப்பினர்)
  • பிரிக்கப்படாத இந்துக் குடும்பம்4(A-தலைவர், C -இணை உடைமையாளர், B மற்றும் G -உறுப்பினர்)
  • பிரிக்கப்படாத இந்துக் குடும்பம்5(A-தலைவர், D -இணை உடைமையாளர், B மற்றும் H -உறுப்பினர்)
  • பிரிக்கப்படாத இந்துக் குடும்பம்6(C -தலைவர், M -இணை உடைமையாளர்(C -ஐ பாதுகாவலராகக் கொண்ட சிறுவர்)
  • பிரிக்கப்படாத இந்துக் குடும்பம்7(D -தலைவர், N -இணை உடைமையாளர்(D -ஐ பாதுகாவலராகக் கொண்ட சிறுவர்)
  • V, W மற்றும் Z குடும்பங்களில் இதேபோன்ற பிரிக்கப்படாத இந்துக் குடும்பங்கள் உள்ளன. X குடும்பம் - ABC லிமிடெட் மற்றும் DEF லிமிடெட் ஆகிய இரண்டு முக்கிய நிறுவனங்களைக் கொண்டிருந்தது. ஏபிசி லிமிடெட் நிறுவனத்தில் 5 விழுக்காடு பங்குகளை A, B மற்றும் C கொண்டிருந்தனர். பிரிக்கப்படாத இந்துக் குடும்பங்கள் 1, 2 மற்றும் 4 ஆகியவை 3 விழுக்காடு பங்குகளைக் கொண்டிருந்தன.
  • இதேபோல், DEF லிமிடெட்டில் 6 விழுக்காடு பங்குகளை A மற்றும் D கொண்டிருந்தன. மற்றொரு 2 விழுக்காட்டை பிரிக்கப்படாத இந்துக் குடும்பங்கள் 1, 3 மற்றும் 5 ஆகியவை கொண்டிருந்தன. மற்ற 8 குழு நிறுவனங்களும் சேர்ந்து ABC லிமிடெட் நிறுவனத்தின் 10 விழுக்காடு பங்குகளை வைத்திருந்தன. 7 வெவ்வேறு குழு நிறுவனங்கள் DEF லிமிடெட்டில் 11 விழுக்காடு பங்குகளை வைத்திருந்தன.

குழுவில் வேறு 2 துணை / வைப்பு நிறுவனங்களும் இருந்தன. இவை மற்ற 9 குழு நிறுவனங்களில் பங்குகளை வைத்திருக்கின்றன. பிரிக்கப்படாத இந்துக் குடும்பம் 6ம், 7ம் பத்து குழு நிறுவனங்களில் 2 விழுக்காடு பங்குகளை வைத்துள்ளன.

இரண்டு குழு நிறுவனங்கள், A, B, C, D, E, F, G, H உடன் முறையே A இன் தாத்தா, தந்தை மற்றும் தாயின் பெயரிடப்பட்ட மூன்று அறக்கட்டளைகளில் பங்குகளை வைத்துள்ளன. இந்த அறக்கட்டளைகள் ஆறு குழு நிறுவனங்களின் பங்குகளை வைத்துள்ளன.

  • V, Y, W குடும்பங்களைச் சேர்ந்த பிரிக்கப்படாத இந்துக் குடும்பம் ஆறு குழு நிறுவனங்களில் பங்குகளைக் கொண்டுள்ளன. மகள், மருமகன் மற்றும் மருமகள் (E, F, G மற்றும் H) ஆறு பெரு நிறுவனங்களில் தனிநபர்களாக பங்குகளை வைத்திருக்கிறார்கள், இதில் மூன்று கூட்டாண்மைகளாகவும், மூன்று நிறுவனங்களாகவும் இருந்தன.

இவ்வாறு தனிநபர்கள், பிரிக்கப்படாத இந்துக் குடும்பங்கள், நிறுவனங்கள் / மற்றும் அறக்கட்டளைகள் வெவ்வேறு நிறுவன நிர்வாகச் சட்டங்களால் நிர்வகிக்கப்பட்டபோதும் பல்வேறு வகைகளில் பின்னி பிணைந்து 26 நிறுவனங்கள் மற்றும் இரண்டு அறக்கட்டளைகளைக் கட்டுப்படுத்துகின்றன.

குடும்பத் தலைவர் A, ஆறு நிறுவனங்களில் இயக்குநராக உள்ளார், மகன்கள் C, D மற்றும் மருமகன் F ஆளுக்கு நான்கு நிறுவனங்களில் இயக்குநராக உள்ளனர். மகள் E இரண்டு நிறுவனங்களில் இயக்குநராக உள்ளார். V, W மற்றும் Y குடும்பங்களில் இருந்து தலா மூன்று உறுப்பினர்கள் இரண்டு நிறுவனங்களில் இயக்குநராக உள்ளனர்.

குடும்பத்தில் உள்ள அனைத்து பெண்களும் நிர்வாக அதிகாரியாக அறக்கட்டளைகளை நிர்வகிப்பதில் ஈடுபட்டுள்ளனர். பிரிக்கப்படாத இந்துக் குடும்ப ஏற்பாடு இல்லாதிருந்தால், வணிகக் குழுவில் உள்ள நிறுவனங்கள் மீது குடும்பக் கட்டுப்பாட்டைக் கொண்டுவருவதற்கு குடும்ப உறுப்பினர்கள் அதிக அளவு பங்குகளை வைத்திருக்க வேண்டும்.

இந்த வணிகக் குழு இந்தியாவின் நான்கு மாநிலங்களில் பரவிக் காணப்படும் இரண்டு பெரிய மற்றும் ஆறு நடுத்தர அளவிலான தொழிற்சாலைகளையும், இரண்டு சிறிய அளவிலான நிறுவனங்களையும் கொண்டுள்ளது.

இவற்றில், இரண்டு வரையறுக்கப்பட்ட பொது நிறுவனங்களுக்கும், நான்கு வரையறுக்கப்பட்ட தனியார் நிறுவனங்களுக்கும், இரண்டு பிரிக்கப்படாத இந்துக் குடும்பங்களுக்கும், இரண்டு கூட்டு நிறுவனங்களுக்கும் சொந்தமானவை. இந்த தொழிற்சாலைகள் வெவ்வேறு நிலைகளில் உள்ள ஆடைத்துறை இடைநிலை பொருட்களின் உற்பத்தியின் மூலம் உலகளாவிய மதிப்பு சங்கிலியுடன் ஒருங்கிணைக்கப்பட்டன.

இந்த குழுவில் உள்ள மற்ற 15 பெரு நிறுவனங்கள் ஹோட்டல், வர்த்தகம், சொத்து நிர்வாகம், குத்தகைக்கு எடுத்தல் மற்றும் பொழுதுபோக்கு (டிஜிட்டல் ஸ்டுடியோ) ஆகியவற்றில் முதலீடு செய்துள்ளன.

ஒரு கூட்டாண்மை நிறுவனம் மருத்துவ ஒலிபெயர்த்தலில் முதலீடு செய்துள்ளது, அறக்கட்டளைகள் லாப நோக்குடைய பள்ளிகளையும், கோயில்கள், முதியோர் இல்லம்,  மற்றும் சுற்றுச்சூழல் பூங்கா ஆகியவற்றையும் நடத்தின.

இருப்பினும், சராசரியாக, இருபத்து ஆறு பெருநிறுவனங்களில் பதினாறு நிறுவனங்கள் முந்தைய நான்கு ஆண்டுகளில் இழப்புகளைப் பதிவு செய்தன. குழு நிறுவனங்கள் மற்றும் பிரிக்கப்படாத இந்துக் குடும்பங்கள் வரிவிதிப்பைத் தவிர்ப்பதற்காக சொத்து மற்றும் வருவாய் பரிமாற்றங்களின் மூலம் இலாப நட்ட கணக்கை வணிகக் குழுக்களுக்குள் பரவலாக்கி குறைந்த இலாபங்களை காட்டுகின்றன.

இந்தியாவின் மிகப்பெரிய வணிகக் குழுவைப் பற்றிய நாஸின் (2016) இதேபோன்ற வழக்கு ஆய்வு, 88 குழு நிறுவனங்களில் 64 நிறுவனங்களில் தொடர்ச்சியாக இரண்டு ஆண்டுகளில் இழப்பு ஏற்பட்டதாகக் காட்டுகிறது.

இதுபோன்ற தொடர்புடையவர்களுக்கிடையிலான பரிவர்த்தனைகள் சட்ட அடிப்படையில் நிறுவனத்தின் வாரியத்தால் அங்கீகரிக்கப்பட வேண்டும் என்பதை இங்கு கவனத்தில் கொள்ள வேண்டும். குழுவில் உள்ள குடும்ப உறுப்பினர்களே வாரியத்திலும் உள்ளதால் இத்தகைய பரிவர்த்தனைகள் குடும்பத்துடன் ஒன்றிணைந்த பெருநிறுவன நிர்வாக கட்டமைப்பின் சட்டப்பூர்வ அனுமதியால் ஆசீர்வதிக்கப்படுகின்றன.

இந்த பிணைக்கப்பட்ட நிறுவனங்களிலிருந்து தன்னிச்சையாக வரிச் சட்டத்திலும் பிரிக்கப்படாத இந்துக் குடும்பம் உள்ளது. எடுத்துக்காட்டாக, மூன்று தொழிற்சாலைகளுக்கான நிலம் X குடும்பத்தின் மூன்று வெவ்வேறு பிரிக்கப்படாத இந்துக் குடும்பங்களுக்கு சொந்தமானதாகவும், தொழிற்சாலையை வைத்திருக்கும் நிறுவனத்திற்கு குத்தகைக்கு விடப்பட்டதாகவும் காட்டப்படுகிறது.

பிரிக்கப்படாத இந்துக் குடும்பத்தின் குத்தகை வருவாய் மீதான வரிவிதிப்பு தனியொருவருக்கான வரிக்கு இணையானதாகவே இருக்கும். எங்கள் ஆய்வுக்குட்பட்ட நேர்வுகளில் நாங்கள் காட்டியுள்ளபடி பிரிக்கப்படாத இந்துக் குடும்பம் ஒரு பெருங்குழுமம் ஆகும், எனவே இது இந்தியாவில் பெருங்குழும நிர்வாகச் சட்ட அமைப்பின் மூலம் வருமானம் மீதான பெருங்குழும வரிவிலக்கை நிலைத்திருக்கச் செய்வதற்கு மற்றொரு வழியாகும்.

தாய், மகள் மற்றும் மருமகள் (B, E, G மற்றும் H) உடனான எங்கள் நேர்காணல்கள் குழும / குடும்பப் பிணைப்பு குறித்த மற்ற இரு தன்மைகளை வெளிப்படுத்தின.

நான்கு பெண்களும் திருமணத்தின் மூலம் ஒன்றோடொன்று இணைக்கப்பட்ட குடும்பங்களை உள்ளடக்கிய பல வணிகக் குழுக்களுக்கான நிதி திரட்டலில் (சொந்த மூலதனம்) எவ்வாறு தாம் ஒரு பகுதியாக இருக்கின்றனர் என்பதை விவரித்தனர். பணமாகவும் அல்லது முறையாகத் தங்கள் சொந்த வங்கிக் கணக்குகளிலிருந்து பிரிக்கப்படாத இந்துக் குடும்பத்திற்கான காசோலைகளாகவும் சேர்க்கப்படும்  நிதியை பெண்கள்  ‘வைப்புத் தொகைகள்’ என்று குறிப்பிட்டனர்.

இவை பின்னர் பிரிக்கப்படாத இந்துக் குடும்பத்தின் மூலம் நிலம் வாங்குதலிலும் இயந்திரங்கள், பங்குகள் மற்றும் பத்திரங்களிலும் முதலீட்டு நிதி போன்ற பல்வேறு தொடர்புடைய பரிவர்த்தனைகளுக்கு வழங்கப்படும், இவை அனைத்தும் குழுக் குழுமங்களின் மூலதனத் திரட்டலுக்காகப் பயன்படுத்திக் கொள்ளப்படுகின்றன.

குடும்ப வருமானம் போன்றே அதே சுற்றுவட்ட வழிகளில் ஆரம்ப மதிப்பை விடக் கூடுத்லாக மீண்டுவரும் மூலதனச் சுற்று, மார்க்ஸின் முக்கிய வெளிபபாடான ப-ப’, அதாவது (மார்க்ஸ், 1887) தன் ஆரம்ப மதிப்பை விடக் கூடுதலான பணத்தைப் பெற்றெடுக்கும்  மூலதனத்தின் சமூக உறவைக் குறிப்பிடுகிறது.

பிரிக்கப்படாத இந்துக் குடும்பத்திற்கும் தனியொருவருக்கும் இடையிலான இந்தப் பணப் பரிவர்த்தனைகள் ஒருபோதும் பெருங்குழுமக் கணக்குகளில் காண்பிக்கப்படுவதில்லை.

தாய், மகள் மற்றும் மருமகள் (B, E, G மற்றும் H) உடனான எங்கள் நேர்காணல்கள் குழுமத்துக்கும் குடும்பங்களுக்கும் இடையிலான பிணைப்பு பற்றிய முக்கியத் தன்மைகளை  வெளிப்படுத்தின. நான்கு பெண்களும் குடும்பத்தினரால் தரகர் மூலமாக பார்த்த இணையரையே திருமணம் செய்து கொண்டனர்.

நான்கு பெண்களில் இருவர் தங்கள் இன மரபிலிருந்து  வேறுபட்ட குடும்பங்களில் திருமணம் செய்து கொண்டனர். நான்கு திருமணமும் வர்க்க நிலையின் படியும், அகமண, புறமண சாதி விதிகளின் அடிப்படையிலும் அமைந்தன.

மகனுக்கான முன்னுரிமையால் பிணைக்கப்பட்ட சாதி இந்து ஆணாதிக்கக் குடும்பம், நெருக்கம், நம்பிக்கை, குடும்ப உறவுமுறை ஆகிய அனைத்திற்குமே சட்ட அடிப்படை உள்ளது.

இவ்வாறு பிரிக்கப்படாத இந்துக் குடும்பத்தில் உறுப்பினராக உள்ள தனியொருவரைச் சட்டமுறையில் பிரித்துத் தனியாளும், பிரிக்கப்படாத இந்துக் குடும்பமும் குழுமத்தின் மீது உரிமையும், ஆளுகையும் கொண்டிருக்கும் விதமாக முறையான சட்டக் கட்டமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது, இதில் மூலதன உருவாக்கத்தில் குடும்ப உறுப்பினர்களிடையிலான பரிமாற்றத்தின் முறைசாரா தன்மை உட்பொதிந்துள்ளது.

சராசரியாக, ஒரு பிரிக்கப்படாத இந்துக் குடும்பம் என்பது ஒரு  குடும்பத்திற்குச் சொந்தமான வணிகக் குழுவால் கட்டுப்படுத்தப்படும் ஒவ்வொரு ஐந்து குழுமங்களுக்கும், குடும்பத்திற்குச் சொந்தமான வணிகக் குழுக்கள் வைத்திருக்கும் கட்டமைப்புகளில் குடும்பத்தின் கட்டுப்பாட்டை சட்டப்படி எளிதாக்குவதில் முக்கியப் பங்கு வகிக்கும் விதமாக உள்ளது.

பெருங்குழும நிர்வாக அமைப்புகளுடன் சாதி இந்து ஆணாதிக்க குடும்பத்தின் பிணைப்பானது இந்தியச் சட்டத்தில் முறையாகப் உட்பொதிந்துள்ளது. குடும்பத்திற்குச் சொந்தமான வணிகக் குழுவின் சமூக அமைப்பை உருவாக்கும் மூலதனத்தின் பொருளார்ந்த தன்மை இதுவே.

குழுமத்துக்கும் குடும்பத்துக்கும் இடையிலான தடையற்ற பிணைப்பு சட்டமுறையாக்கப்பட்டுள்ளது அதில் பிரிக்கப்படாத இந்துக் குடும்பம் குழுமமாக இருந்த போதும் குடும்பமாகப் பதியப்பட்டுள்ளது.  இந்துக் குடும்பச் சட்டம், பெருங்குழும நிர்வாகச் சட்டங்கள், அரசின் வரிவிதிப்புச் சட்டங்கள் ஆகியவற்றில் இது செய்யப்பட்டுள்ளது.

இந்தியாவில் ‘குடும்பத்திற்குச் சொந்தமான வணிகக் குழுவை’ உருவாக்கும் நிறுவனங்களின் வலையமைப்பைச் சட்டப்படியாகவும் முறைப்படியாகவும் சாதி, ஆணாதிக்கம், மதம் ஆகியவற்றின் கீழ் இயக்கும் நிதி மற்றும் மூலதன ஓட்டங்களின் சுற்றுகளில் மூலதனம் முகன்மையான சமூகப் பங்கு வகிக்கிறது.

இந்திய அரசமைப்புச் சட்டத்தில் இந்திய அரசு ஒரு மதச்சார்பற்ற அரசாகவும், தன் அனைத்துக் குடிமக்களுக்கும் சமவாய்ப்புகளை உறுதி செய்யும் அரசாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் குடும்பtத்துக்கும் குழுமத்துக்கும் இடைப்பட்ட இந்தத் தனித்துவமான, உறுதியான சட்டப் பிணைப்பு இந்துக் குடும்பத்திற்கு ஓர் அநீதியான சட்டச் சலுகையாக உள்ளது, முஸ்லிம்கள், கிறிஸ்தவர்கள், பார்சிகள், யூதர்களுக்கு இத்தகைய சலுகை கிடையாது.

மகன் - முன்னுரிமையால் பிணைக்கப்பட்ட சாதி இந்து ஆணாதிக்கக் குடும்பம் இந்தியாவில் மூலதனத் திரட்டலுக்கான நிறுவனக் கட்டமைப்புகளின் சமூக மறுவுற்பத்திக்கு முக்கியமானதாகும்.

உறவுமுறையும், குடும்ப உறவுகளின் நம்பிக்கையும் முறைசாரா தன்மையும் சட்டமுறையில் இலாபத்தின் ஏரணமாக செயல்படுகிறது.

 (தொடரும்)

ஆசிரியர்: சிரஸ்ரீ தாஸ்குப்தா

Pin It