பிரிட்டிஷ் உளவாளி ஹெம்பரின் வாக்குமூல தொடர்ச்சி...

நான் பஸ்ராவிற்கு வந்த உடன் ஒரு மசூதியில் தங்கினேன். அந்தப் பள்ளியின் இமாம் சுன்னி பிரிவைச் சார்ந்தவர். அவரின் பெயர் ஷேக் உமர் தாயி. அவரிடம் உரையாடத் தொடங்கினேன். தொடக்கத்தில் அவர் என்னை சந்தேகத்துடன் பார்த்தார். சில கேள்விகளைக் கேட்டார். நான் இந்த அபாயகரமான நிலைமையை சமாளித்தேன். "நான் துருக்கியின் இக்திர் பகுதியைச் சேர்ந்தவன். இஸ்தான் புல்லின் அஹ்மத் எபன்டியின் சீடர். அங்கு காலித் என்பவரிடம் தச்சராக பணிபுரிந்தேன்." என்று கூறினேன். மேலும் துருக்கியைப் பற்றி சில தகவல்களை சொன்னேன். துருக்கி மொழியில் சில வாக்கியங்களைப் பேசினேன். அவர் வேறொருவரை நோக்கி கண் அசைத்து நான் துருக்கியில் சரியாகப் பேசுகிறேனா என்பதை கவனிக்கச் சொன்னார். அதற்கான விடை நேர்மறையாக இருந்தது. இமாமை சரிகட்டியதால் நான் மகிழ்ச்சியடைந்தேன். ஆனால் இன்னும் அவர்களுக்கு நான் தவறானவனாகவே தெரிந்தேன். அந்த ஏமாற்றத்தை சில நாட்களுக்குப் பின் பார்த்தேன். அவர்கள் என்னை துருக்கிய உளவாளியாகப் பார்த்தார்கள். பின்னர் அவருக்கும் அந்த மாகாண கவர்னருக்கும் இடையே பரஸ்பரம் விரோதம் ஏற்பட்டதையும் பார்த்தேன்.

ஷேக் உமரின் பள்ளியிலிருந்து நான் வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்ட பின்னர் விடுதியில் அறையை வாடகைக்கு எடுத்து தங்கினேன். அதன் உரிமையாளர் படு முட்டாளாக இருந்தார். அவர் பெயர் முர்ஷித் எபன்டி. ஒவ்வொரு நாள் அதிகாலையிலும் அவர் என் அறையின் கதவை தட்டி எழுப்பி விடுவார், அதிகாலை தொழுகைக்காக. நான் அவருக்கு அடி பணிந்தேன். அதன் படி எழுந்து ஒவ்வொரு நாளும் தொழுதேன். அதன் பிறகு அவர் சொன்னார். நீங்கள் குர்ஆன் படிக்க வேண்டும். நான் சொன்னேன் இது படிப்பது கடமையாக்கப்படவில்லை. ஏன் என்னை இதற்காக வற்புறுத்துகிறீர்கள் என்றேன். இந்த நேரத்தில் தூங்குவது வறுமையையும், இந்த விடுதிக்கும், இதில் தங்கியிருப்பவர்களுக்கும் கெடுதலையும் ஏற்படுத்தும் என்றார் அவர். நான் இதனை கடைபிடிக்க ஆரம்பித்தேன். இல்லாவிட்டால் என்னை இந்த விடுதியை விட்டு வெளியேற்றி விடுவார். அதற்காக நான் அதிகாலையில் எழுந்து தொழுது விட்டு ஒரு மணிநேரம் குர் ஆனையும் படிக்கத் தொடங்கினேன்.

ஒரு நாள் முர்ஷித் எபன்டி என்னிடம் வந்து இவ்வாறு சொன்னார். " நீ இங்கு தங்கியதிலிருந்து துரதிஷ்டம் என்னை சூழ்ந்து கொண்டிருக்கிறது. உங்கள் விதியைப் போக்க விரும்புகிறேன். நீங்கள் திருமணமாகாதவராக இருக்கிறீர்கள். அவ்வாறு இருப்பது தீங்கிற்கு அறிகுறி. ஆகவே நீங்கள் திருமணம் செய்து கொள்ளுங்கள். அல்லது இதனை விட்டு வெளியேறுங்கள்" என்றார். அதற்கு நான் "என்னிடம் திருமணம் செய்து கொள்ள போதுமான சொத்துக்கள் இல்லை". அஹ்மத் எபன்டியிடம் சொன்னது மாதிரி இவரிடம் என்னால் சொல்ல முடியவில்லை. நான் உண்மையைத் தான் சொல்கிறேனா என்பதை அவர் என் ஆடையைக் களைந்து சோதித்துப் பார்த்தார்.

நான் அவ்வாறு சொன்னதும் அவர் என்னை கடிந்து கொண்டு "என்ன பலவீனமான நம்பிக்கையை நீ கொண்டுள்ளாய்? அல்லாஹ்வின் வசனத்தை நீ வாசிக்கவில்லையா? ஒருவர் ஏழையாக இருந்தால் அவருக்கு அல்லாஹ் செல்வத்தையும், தாராளத்தையும் கொடுப்பான்." நான் முட்டாளாக்கப்பட்டேன். இறுதியாக நான் சொன்னேன். "எல்லாம் சரி. நான் திருமணம் செய்து கொள்கிறேன். ஆனால் நீங்கள் தேவையான பணத்தைத் தர முடியுமா? அல்லது எனக்கு பொருத்தமான பெண்ணை தேடித்தர முடியுமா?"

சிறிது நேர யோசனைக்குப்பின் எபன்டி சொன்னார் " நான் பொருட்படுத்த மாட்டேன். ஒன்று இந்த ரஜப் மாத தொடக்கத்தில் திருமணம் செய்து கொள். அல்லது இந்த விடுதியை விட்டு வெளியேறு." ரஜப் மாதம் தொடங்குவதற்கு இன்னும் 25 நாட்களே உள்ளன.

அரபி மாதங்களை இங்கு குறிப்பிடுகிறேன். முஹரம், சபர், ரபி உல் அவ்வல், ரபி உல் ஆகிர், ஜமாதுல் அவ்வல், ஜமாதுல் ஆகிர், ரஜப், ஷாபான், ரமதான், ஷவ்வால், துல்காயிதா, துல்ஹஜ். இந்த மாதங்கள் முப்பது நாட்களை விட அதிகமாகவோ அல்லது இருபத்தொன்பது நாட்களை விட குறைவாகவோ இருக்காது. இவை சந்திரனை அடிப்படையாகக் கொண்டவை.

நான் முர்ஷித் எபன்டியின் விடுதியை விட்டு வெளியேறி விட்டேன். ஒரு தச்சரிடம் உதவியாளராக வேலைக்குச் சேர்ந்தேன். அவரிடம் குறைந்த ஊதியத்திற்கு வேலை செய்ய சம்மதித்தேன். மேலும் என் உணவு மற்றும் தங்குமிடம் போன்றவற்றை அவர் அளிப்பதாக சொன்னார். நான் என் பொருட்களையெல்லாம் அவரின் கடைக்கு மாற்றினேன். அவர் மிகுந்த மனிதநேயமிக்க மனிதர். அவர் என்னை தன் மகன் போன்று பார்த்தார். அவர் ஒரு ஷியா முஸ்லிம். ஈரானின் கொரசான் பகுதியைச் சேர்ந்தவர். அவரின் பெயர் அப்துர் ரிதா. அவரின் நிறுவனத்தைக் கொண்டு நான் பாரசீக மொழியை கற்கத் தொடங்கினேன். ஒவ்வொரு நாள் மதியமும் ஈரானின் ஷியாக்கள் அவரின் இடத்தில் கூடி அரசியல் முதல் பொருளாதாரம் வரையிலான பல விஷயங்கள் குறித்து பேசத்தொடங்கினார்கள். அவர்கள் சொந்த அரசாங்கத்தின் குறைகளைப்பற்றியே தான் பேசிக்கொண்டிருப்பார்கள். புதிய நபர்கள் யாராவது நுழைந்தால் தனிப்பட்ட விவகாரமாக தங்கள் பேச்சை மாற்றிக்கொள்வார்கள். அவர்கள் என்னை அதிகமாக நம்பினார்கள். எனினும் பிந்தைய கட்டத்தில் நான் துருக்கி மொழியைப் பேசுவதால் என்னை அசர்பைஜானாக நினைத்தார்கள்.

இந்நிலையில் சில மாதங்கள் கடந்தன. அவ்வப்போது ஒரு இளைஞர் இந்த கடைக்கு வந்து போவதை நான் கவனித்தேன். அவரின் தோற்றம் அறிவியல் ஆராய்ச்சி செய்யும் மாணவர் போன்று இருந்தது. அவருக்கு அரபி, பாரசீகம் மற்றும் துருக்கி மொழி தெரிந்திருந்தது. அவரின் பெயர் முஹம்மத் இப்னு அப்துல் வஹ்ஹாப் அல் நஜ்தி. அந்த இளைஞர் மிகவும் முரட்டுத்தனமானவராகவும், உணர்ச்சிமயப்பட்டவராகவும் இருந்தார். அவர் துருக்கிய உதுமானிய பேரரசைப்பற்றி மோசமாகப் பேசுவார். ஆனால் ஒருபோதும் ஈரானிய அரசைப்பற்றி எதுவும் பேசமாட்டார். அவர்களுக்கிடையே நட்பு ஏற்படுவதற்கு பொதுவான விஷயமாக துருக்கிய எதிர்ப்பு இருந்தது. ஆனால் இது எப்படி சாத்தியமாகிறது. இவர் சுன்னி. இவருக்கு பாரசீகம் தெரிகிறது. ஆனால் கடை உரிமையாளரோ ஒரு ஷியா. இந்நகரத்தில் ஷியா, சுன்னி இரு தரப்பினரும் மிகுந்த இணக்கத்துடன் இருக்கின்றனர். இந்நகரத்தில் குடியிருப்பவர்கள் அனைவருக்கும் பாரசீகம் மற்றும் அரபி ஆகிய இரு மொழிகள் தெரிகின்றன. மேலும் பலருக்கு துருக்கி மொழியும் தெரிகிறது.

அப்துல் வஹ்ஹாபைப் பொருத்தவரை வெளிப்படையான சுன்னி. பெரும்பாலும் சுன்னிகள் ஷியாக்களை விமர்சிப்பார்கள். அவர்களைப் பொருத்தவரை பெரும்பாலான ஷியாக்கள் நம்பிக்கையற்றவர்கள். ஆனால் இவர் மட்டும் ஷியாக்களைத் திட்ட மாட்டார். அவரைப் பொருத்தவரை சுன்னிகள் நான்கு மத்ஹபுகளில் ஏதேனும் ஒன்றை பின்பற்றத் தேவையில்லை. அல்லாஹ்வின் புனித நூலில் இது தொடர்பான எந்த ஆதாரமும் இல்லை. அவர் இது சம்பந்தமான வசனங்களையும், சில நபிமொழிகளையும் நிராகரித்தார்.

நான்கு மத்ஹபுகளைப் பொருத்தவரை, நபியின் மரணத்திற்கு நூறு வருடத்திற்குப் பிறகு நான்கு கல்வியாளர்கள் சுன்னி முஸ்லிம்களிடத்திலிருந்து உருவானார்கள். அபூ ஹனீபா, அஹ்மத் இப்னு ஹம்பல், மாலிக் பின் அனஸ் மற்றும் முஹம்மத் பின் இத்ரீஸ் பின் ஷாபி. சில ஆட்சியாளர்கள் இந்த அறிஞர்களில் எவரேனும் ஒருவரைப் பின்பற்ற வற்புறுத்தினார்கள். குர் ஆன் மற்றும் ஹதீஸிற்கு விளக்கம் சொல்ல இவர்களைத் தவிர வேறு எவருக்கும் உரிமை இல்லை என்று குறிப்பிட்டார்கள். இந்த இயக்கம் அறிவு மற்றும் புரிதலுக்கான வாசல்களை அடைத்தது. இஜ்திஹாத் என்னும் அறிவியக்கத்தின் வாசல்களை அடைத்தது தான் இஸ்லாத்தின் இன்றைய தேக்க நிலைக்கு காரணம்.

ஷியாக்கள் இதனை நிராகரித்தார்கள். அவர்களைப் பொருத்தவரை சுன்னிகளை விட எண்ணிக்கையில் குறைவாக இருந்தார்கள். ஆனால் இப்போது சுன்னிகள் அளவிற்கு எண்ணிக்கையில் வந்து விட்டார்கள். இதன் முடிவு என்பது இயல்பானது. இஜ்திஹாத் என்ற விரிவுரை ஓர் ஆயுதம் போன்றது. இது இஸ்லாமியர்களின் சட்டம் மற்றும் குர் ஆன் ஹதீத் குறித்த புரிதலை ஏற்படுத்தக்கூடியது. இஜ்திஹாதை தடை செய்தல் என்பது பலவீனமான ஆயுதம் போன்றது. இது மத்ஹபுகளை குறிப்பிட்ட எல்லைக்குள் நிற்கச் செய்யும். இது அனுமானங்களை மூடச்செய்து, காலத்தின் தேவையை கணக்கில் கொள்ளாது. உங்கள் ஆயுதம் பலவீனமாக இருந்தால் உங்கள் எதிரி முழுமையடைந்து விடுவார். நீங்கள் அந்த எதிரியால் உடனடியாகவோ அல்லது தாமதமாகவோ வீழ்த்தப்படுவீர்கள். ஆக சுன்னிகள் இஜ்திஹாதின் வாசல்களைத் திறப்பது அவசியம். அவ்வாறு செய்யாவிட்டால் அவர்கள் சிறுபான்மையினாராகி ஷியாக்கள் இன்னும் சில நூற்றாண்டுகளில் பலம் பெற்று விடுவார்கள்.

ஆணவம் படைத்த அந்த இளைஞர் முஹம்மது அல் நஜ்தி குர் ஆன் மற்றும் ஹதீஸ் விஷயத்தில் அவரின் வேட்கையான மனதைப் பின்பற்றினார். அவர் கல்வியாளர்கள் மற்றும் நான்கு இமாம்களின் பார்வைகளை முழுமையாக புறந்தள்ளினார். அவர்கள் மட்டுமல்ல. நபியின் தோழர்களான அபூ பக்கர் மற்றும் உமரின் பார்வைகளையும் புறந்தள்ளினார். அவர் குர் ஆன் வசனத்தை உச்சரிக்கும் போதெல்லாம் அதன் விளக்கம் மரபிலிருந்து வித்தியாசப்பட்டது. அவர் சொன்னார். நபி இவ்வாறு குறிப்பிட்டார். "இந்த குர் ஆன் மற்றும் ஹதீஸை உங்களுக்கு விட்டுச்செல்கிறேன். அவர் இவ்வாறு குறிப்பிடவில்லை. "இந்த குர் ஆன், ஹதீஸ், ஸஹாபா மற்றும் நான்கு இமாம்களை உங்களுக்காக விட்டுச் செல்கிறேன்." குர் ஆன் மற்றும் ஹதீஸ் ஒன்றை உங்களுக்கு கடமையாக விதித்தால் அது மற்றவர்களின் பார்வையிலிருந்து எப்படி வேறுபட்டாலும் அதைச் செய்தாக வேண்டும்.

ஒரு நாள் இரவு வேளையில் அப்துல் ரிதாவின் மரக்கடையில் வைத்து முஹம்மத் இப்னு அப்துல் வஹ்ஹாபிற்கும் ஷேக் ஜவாத் என்ற ஷியா அறிஞருக்கும் இடையே இவ்வாறு உரையாடல் நடந்தது.

ஷேக் ஜவாத்: நீங்கள் அலீயை ஒரு முஜ்தஹிதாக (விரிவுரை அறிஞராக)ஏற்றுக்கொண்டிருக்கும் போது ஏன் ஷியாக்களைப் போன்று அவரைப் பின்பற்றுவதில்லை.

அப்துல் வஹ்ஹாப்: அலி உமர் மற்றும் பிற நபித்தோழர்கள் போன்றவரே. அவரின் அறிக்கைகள் ஆவணத்தகுதி வாய்ந்தவை அல்ல. குர் ஆன் மற்றும் ஹதீஸ்கள் மட்டுமே அதிகாரப் பூர்வ ஆவணங்கள்.

ஷேக் ஜவாத்: நபி ஒருமுறை இவ்வாறு குறிப்பிட்டார். "நான் அறிவின் பட்டணம். அலி அதன் தலைவாயில். இதன் மூலம் அலி பிற ஸஹாபிகளிடமிருந்து வித்தியாசப்படுவதை நீங்கள் கவனிக்கவில்லையா?

அப்துல் வஹ்ஹாப்: அலியின் அறிக்கைகள் ஆவணத்தகுதியாக இருந்தால் நபி இவ்வாறு சொல்லியிருக்க மாட்டாரா? "நான் இந்த குர் ஆன், ஹதீஸ் மற்றும் அலியை விட்டுச் செல்கிறேன் "

ஷேக் ஜவாத்: ஆம். நபி அவ்வாறு சொன்னதாக நாம் கணிக்க முடியும். ஒரு ஹதீஸில் இவ்வாறு வருகிறது. "நான் அல்லாஹ்வின் புத்தகம் மற்றும் அஹ்லுல் பைத் (என் குடும்பம்) இவற்றை விட்டுச்செல்கிறேன். மேலும் அலி அந்த குடும்பத்தின் மிகப்பெரும் உறுப்பினர்.

அப்துல் வஹ்ஹாப் இதனை கடுமையாக மறுத்தார். மாறாக ஷேக் ஜவாத் இதற்குத் துணையாக பல ஆதாரங்களை எடுத்துக்காட்டினார்.

பின்னர் இதனை மறுத்து அப்துல் வஹ்ஹாப் இவ்வாறு சொன்னார். "நீங்கள் நபி அவ்வாறு சொன்னார் என்று உறுதியாக நம்புகிறீர்களா? நான் அல்லாஹ்வின் புத்தகத்தையும், என் குடும்பத்தையும் விட்டுச்செல்கிறேன்." அப்படியென்றால் அப்படியென்றால் நபியின் வழிமுறை என்னவாயிற்று?

அதற்கு ஷேக் ஜவாத் இவ்வாறு குறிப்பிட்டார். "அல்லாஹ்வின் தூதர் குறிப்பிட்டது போல் " நான் அல்லாஹ்வின் புத்தகத்தையும், என் குடும்பத்தையும் விட்டு செல்கிறேன். இதில் அல்லாஹ்வின் புத்தகம் என்பது நபியின் வழிமுறையை உள்ளடக்கி இருக்கிறது. அது முந்தையவற்றிற்கு விளக்கமாக அமைந்திருக்கிறது.

அப்துல் வஹ்ஹாப் : குர் ஆனின் விளக்கமாக அஹ்லுல் பைத்தின் அறிக்கைகள் அமைந்திருக்கும் போது ஏன் இது ஹதீஸால் விளக்கப்பட வேண்டும்.?

ஷேக் ஜவாத்: நபி அவர்கள் மரணித்து விட்ட பிறகு முஸ்லிம்கள் குர் ஆன் வசனங்களுக்கு காலத்திற்கு ஏற்ற விளக்கத்தை எதிர்பார்த்தார்கள். இந்த காரணத்திற்காக நபி தன்னை பின்பற்றுகிறவர்களிடம் குர் ஆனை பின்பற்ற வேண்டியும் அதன் கால விளக்கத்திற்காக அவரின் குடும்பத்தைப் பின்பற்ற வேண்டியும் பணித்தார்கள்.

நான் இந்த சண்டையை வெகுவாக ரசித்தேன்; விரும்பினேன். அப்துல் வஹ்ஹாப் அவரின் முன்னால் அசைவற்றவராக இருந்தார். வேடனின் கையில் அகப்பட்ட கூண்டுக்கிளியை போன்று அவர் இருந்தார்.

இந்த முஹம்மது பின் அப்துல் வஹ்ஹாப் அல் நஜ்தி தான் நான் இதுவரை தேடிக்கொண்டிருந்த நபர். அவரின் காலத்திய அறிஞர்கள் மீதான அவரின் வெறுப்பு, ஏன் முந்தைய கலிபாக்களிடம் இருந்து கூட அவர் வித்தியாசப்பட்டிருந்தார். குர் ஆன் மற்றும் ஹதீஸ் குறித்து அவரின் சொந்தப் புரிதல் அவரை தேடிக்கண்டுபிடிக்க உதவியாக இருந்தன. இம்மாதிரியான அகந்தையான இளைஞரைத் தான் இஸ்தான்புல் நகரில் அஹ்மத் எபன்டி எனக்கு கற்றுத் தந்திருந்தார். அப்படியான அறிஞர் அவரின் முன்னோடிகளைப் போன்றே மலைக்கு சமமானவர். அந்த அதிகாரமும் அவரை அசைக்க முடியவில்லை. அவர் அபூஹனிபாவின் பெயரை உச்சரிக்கும் போதெல்லாம் எழுந்து நின்று சுத்தம் செய்து விட்டு வருவார். மேலும் நபிமொழி தொகுப்பான புகாரியை கையில் வைத்திருக்கும் போதெல்லாம் மீண்டும் சுத்தம் செய்து விட்டு வருவார். சுன்னிகள் இந்தப் புத்தகத்தை அதிகம் நம்பினர்.
அப்துல் வஹ்ஹாப் அல் நஜ்தியை பொருத்தவரை சில சமயங்களில் அபூ ஹனிபாவை ஏளனம் செய்வார். நான் அபூஹனிபாவை விட அதிகம் தெரிந்தவன். மேலும் புகாரியின் பகுதி ஹதீஸ்கள் தவறானவை என்பார்.

நான் அப்துல் வஹ்ஹாப் அல் நஜ்தியோடு நல்ல உறவை வைத்துக்கொண்டேன். எங்கும் அவரைப் புகழ்ந்துரைத்தேன். ஒரு நாள் அவரிடம் சொன்னேன். " நீங்கள் உமர் மற்றும் அலியை விட சிறந்தவராக இருக்கிறீர்கள். நபி இப்போது இருந்திருந்தால் உங்களை அவர்களுக்குப் பதிலாக கலிபாவாக நியமித்து இருப்பார். நான் உங்கள் கரங்களில் இஸ்லாம் புத்தாக்கம் பெற்று வளர்ச்சி பெறும் என்று எதிர்பார்க்கிறேன். நீங்கள் மட்டுமே இஸ்லாத்தை உலகம் முழுவதும் பரப்பத் தகுதியானவர்" என்றேன்.

முஹம்மது இப்னு அப்துல் வஹ்ஹாப் மற்றும் நான் இணைந்து குர் ஆனுக்கு புதிய விளக்கம் தர தீர்மானித்தோம். இந்த விளக்கம் எங்களின் கருத்தைப் பிரதிபலிக்க வேண்டும் மற்றும் முந்தைய கலிபாக்கள், அறிஞர்கள் ஆகியோர்களிடமிருந்து மாறுபட வேண்டும். அவை முழுக்க முழுக்க எங்களின் கொள்கைகளைப் பிரதிபலிக்க வேண்டும் என்பது எங்களின் நிலைபாடு. நாங்கள் குர் ஆனை வாசித்து அதிலிருந்து சில வசனங்களை எடுத்துக் கொண்டோம். என் நோக்கம் முஹம்மதை வழிகெடுக்க வேண்டும். எல்லாவற்றிற்கும் மேலாக அவர் ஒரு மாபெரும் புரட்சியாளராக வர விரும்புகிறார். அதன் மூலம் எங்களின் பார்வைகள் மற்றும் கருத்துக்களை மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொள்வதோடு நான் இன்னும் அவரை நம்பக்கூடியவனாக‌ இருக்க வேண்டும்.

ஒரு சந்தர்ப்பத்தில் நான் அவரிடத்தில் சொன்னேன். ஜிஹாத் என்பது கடமை அல்ல.

அதனை மறுத்த அவர் "இது அல்லாஹ்வின் கட்டளையாக இருக்கிறது. நம்பிக்கையற்றவர்கள் மீது போர் தொடுப்பது"

நான் சொன்னேன். அப்படியென்றால் ஏன் நபி முனாபிக்குகள் மற்றும் நம்பிக்கையற்றவர்கள் மீது போர் தொடுக்கவில்லை.?

அவர் சொன்னார். "நபி அவர்கள் மீது பேச்சால் ஜிஹாத் புரிந்தார்கள்."

நான் சொன்னேன். " அது கடமையாக்கப்பட்டிருந்தால் ஒருவரின் பேச்சால் அதனை செய்திருக்க முடியுமா?

அவர் சொன்னார். " நபி நம்பிக்கையற்றவர்கள் மீது போர்தொடுத்தார்."

நான் சொன்னேன். " நபி நம்பிக்கையற்றவர்கள் மீது போர்தொடுத்தது அவரை தற்காத்துக்கொள்ள. காரணம் நபியை கொல்ல அவர்கள் தீர்மானித்திருந்தார்கள்.

அவர் சம்மதித்தார்.

மற்றொரு சந்தர்ப்பத்தில் நான் சொன்னேன். முத் ஆ என்னும் தற்காலிக திருமணம் இஸ்லாத்தில் அனுமதிக்கப்பட்டிருக்கிறது.

அவர் அதனை கடுமையாக மறுத்தவராக . "இல்லை. இல்லவே இல்லை" என்றார்.

(இன்னும் தொடரும்)

Pin It