பத்தாண்டுகளுக்கு முன் கவிஞர், சேற்றில் முளைத்த ஒரு செந்தாமரை (பா.ஜ.க. சேறுதான், ஆனால் அதன் தலைவராக இருந்த வாஜ்பாயி அதில் முளைத்த செந்தாமரை என்று அன்றே ஒப்புக்கொண்டிருந்தனர் மக்கள்)என்று அடைமொழியும் புகழாரமும் சூட்டப்பட்ட வாஜ்பாய் மீது நம்பிக்கை கொண்டிருந்தது பாரதிய ஜனதா கட்சி. இப்போதைய அதன் அரசியல் நம்பிக்கை நரேந்திர மோடி மீது விழுந்துள்ளது. குஜராத் மாநிலத்தை துடிப்பான குஜராத்தாக முன்னேற்றப் பாதையில் செலுத்திய 'வளர்ச்சி நாயகன்' (விகாஷ் புருஷ்) என்று ஊடகங்களால் ஊதி பெரிதாக்கி நிர்வாகத் திறன்மிக்க முதல்வர் என்று திரித்து உருவாக்கப்பட்ட தோற்றத்துடன், பா.ஜ.க.வின் பிரதமர் வேட்பாளராகவும் ஆகிவிட்ட மோடி தேசமெங்கும் முக்கி இழுத்துப் பேசியவாறு 2014 பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு பா.ஜ.க.வுக்கு ஆதரவுத் திரட்டி வருகிறார். மோடி ஆட்சியின் கீழ் வளர்ந்துவிட்டதாக பேசப்படும் குஜராத் இந்தியாவின் பின்தங்கிய மாநிலங்களின் வரிசையில் இன்றுவரை இடம்பெற்றுள்ளது என்பது காவி புளுகு மூட்டையில் மறைந்திருக்கும் இரகசியங்களுள் ஒன்றாகும்.

modi_rss_230ரகுராம் ராஜன் கமிட்டியின் அறிக்கை குஜராத்தை பின் தங்கிய மாநிலங்களின் வரிசையில் வைத்துள்ளது. கல்வி, சுகாதாரம் உட்பட சமூக மேம்பாடு சார்ந்த பிரிவுகளில் குஜராத் வளர்ச்சியடைந்து வரும் மாநிலங்களின் வரிசையில் இல்லை. தனி நபர் வருமானத்தைப் பொருத்தவரையில் எட்டாவது இடம், மாநில உள்நாட்டு உற்பத்தி (NDP) யில் ஆறாவது இடம், ஊட்டச்சத்து குறைபாடு என்ற வகையில் குஜராத் பதினோராவது இடம் என பின் தங்கியே இருக்கும் குஜராத் மாநிலத்தில் குடி தண்ணீர் வசதியின்றி 16.7 விழுக்காடு மக்கள் அவதிப்படுகின்றனர். பிள்ளைகளைத் தொடர்ந்து பள்ளிக்கு அனுப்புவதில் பதினெட்டாவது இடத்தில் இருக்கிறது என்று UNDP விவரம் தெரிவிப்பதாக சொல்கிறது மார்க்சிஸ்ட் கட்சி வெளியிட்டுள்ள ‘மோடியின் குஜராத் இந்தியாவிற்கான மாதிரி அல்ல’ என்னும் அறிக்கை. வளர்ச்சி நாயகன் மோடியின் செயல்திறனால் வளர்ந்துவிட்ட குஜராத்தின் இலட்சணம் இவ்வாறிருக்க வாடகைக்கு அமர்த்தப்பட்ட ஆப்கோ வோர்ல்டுவைடு போன்ற விளம்பர விளம்பி நிறுவனங்களும் சில ஊடகங்களும் தனியார் தொலைக் காட்சிகளும் திட்டமிட்டு மோடியின் போலி புகழைப் பரப்பி வருகின்றன. அதானி, ரிலையன்ஸ், எஸ்ஸார், லார்சன் அண்டு டூப்ரோ போன்ற கார்ப்பரேட் நிறுவன முதலாளிகளின் பண ஆதரவோடு வலம் வருவதாகச் சொல்லப்படும் அவரது பிரதமர் கனவு பலிக்குமா பலிக்காதா? என்பது போன்ற காவி ஆதரவு ஊடகவியல் ஆராய்ச்சிகள் ஒரு பக்கம் நீள்கின்றன.

பத்தாண்டுகால ஊழல்கள், பொருளாதார மந்தநிலை, கட்டுக்குள் வராத விலைவாசி ஏற்றம், நலிவடைந்து வரும் விவசாயம், பக்கத்து நாடுகளின் எல்லை தாண்டிய ஊடுருவல்கள், இலங்கைத் தமிழர்கள் பிரச்சினையில் மத்திய அரசின் சிங்கள ஆதரவு நிலை, தமிழக மீனவர்கள் மீதான இலங்கை மீனவர்களும் இராணுவமும் கூட்டுத் தாக்குதல் நடத்தி சிறைபடுத்தும் கொடுமைகள் மேல் உறுதியான முடிவுகள் எடுக்காதது என அனைத்து நிலைகளிலும் தோல்வியைக் கண்டும், மக்களின் கடுமையான வெறுப்புக்குள்ளாகியும் நிற்கிறது காங்கிரஸ் கட்சி. சமீபத்தில் தில்லி உள்ளிட்ட நான்கு மாநிலங்களில் காங்கிரஸூக்கு எதிராக அமைந்திருக்கும் சட்டமன்றத் தேர்தல் முடிவுகளும் அக்கட்சி மீதான மக்களின் கடுமையான வெறுப்பை அம்பலப்படுத்திவிட்டது. காங்கிரஸ்-பாஜக அல்லாத மூன்றாவது அணி எதுவும் பலமாக இன்னும் உருவாகாத நிலையில் காங்கிரஸ் மீதான மக்கள் வெறுப்பு பா.ஜ.க. மீதான தேர்தல் அலையாக மாறிவிடும் என்னும் நம்பிக்கையில் மோடியை முன்னுக்குத் தள்ளிவிட்டு பின்னால் நிற்கின்றன அத்வானி, ராஜ்நாத் சிங், சுஷ்மா ஸ்வராஜ் உள்ளிட்ட பாஜக கூடாரத்தின் முகங்கள்.

இந்து தீவிரவாத இயக்கங்களான ஆர்.எஸ்.எஸ்., விஷ்வ இந்து பரிசத், பஜ்ரங்தள் ஆகிய அமைப்புகளின் இந்து வகுப்புவாத உணர்வு வழிநடத்தும் ஓர் அரசியல் கட்சிதான் பாரதிய ஜனதா கட்சி என்பது ஆதிக்க சாதியினருக்கும் பெரும் பணக்காரர்களுக்கும் இந்திய முதலாளிகளுக்கும் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கும் வேறெவருக்கும் புரியாமல் இருக்கலாம். இந்த தேசத்தின் சிறுபான்மை மக்களுக்கும் இந்து மதக் கோட்பாடுகளாலே விளிம்பு நிலைக்குத் தள்ளப்பட்டு தீண்டாமை மற்றும் சாதிய வன்கொடுமைகளால் வதைபடும் தலித் மக்களுக்கும் சுரண்டல் முறை அழிந்தொழிந்த சமதர்ம சமுதாய அமைப்பை நிர்மாணிக்க விரும்பும் பொதுவுடைமை சிந்தனையாளர்களுக்கும் பெண் விடுதலை உணர்வாளர்களுக்கும் இன-மதக்கலவரங்கள் இல்லாத தேசத்தை கேட்பவர்களுக்கும் புரிந்தாக வேண்டும். ஏனென்றால், "முஸ்லிம்களையும் கிறிஸ்துவர்களையும் இம்மண்ணைச் சேர்ந்தவர்களாக ஏற்க இயலாது. அவர்களது வேர்கள் மெக்காவிலும் மதினாவிலும் ஜெருசலேமிலும் இருக்கின்றன" என்ற பார்ப்பனர் வீர்சாவர்க்கரின் அரசியல் வழித்தோன்றல்களால் இயக்கப்படுகிறது பா.ஜ.க.

சாவர்க்கரின் சித்தாந்தம் 'ஹிந்து இராஷ்ட்ரா' என்னும் இந்திய தேசிய ஒருமைப்பாட்டுக்கும் மதசார்பற்ற அரசியலுக்குமான எதிர் அரசியல் என்பதை நாமறிவோம். எனவே காங்கிரஸ் மீதான வெறுப்பரசியலுக்கு பா.ஜ.க. ஒன்றே மாற்று என இயங்கத் துவங்கியிருக்கும் சாதாரண மக்களின் இப்போதைய தேர்தல் அரசியல் மன ஓட்டத்தை மடைமாற்றம் செய்தாக வேண்டிய காலகட்டமிது. பா.ஜ.க.வின் பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டிருக்கும் நரேந்திர மோடி என்பவர் 'இந்து தேசியம்' என்னும் மத நல்லிணக்கத்துக்கு எதிரான இந்துத்துவா அடிப்படைவாத அரசியல் கோட்பாடுமீது நம்பிக்கைக் கொண்டவர்; இதுவரைக்குமான அவரது நடைமுறை அரசியல் அனுபவங்கள் சிறுபான்மையினரை அச்சுறுத்துவதாகவே இருந்துள்ளது என்பதற்கான சான்றாதாரங்கள் நம்மிடையே உள்ளன; இந்துத்வா சித்தாந்தம் சண்டாளன்-தீண்டத்தகாதவன் என்று சொல்லி தலித் மக்களை சமூக ஒதுக்கலுக்கும் புறக்கணிப்புக்கும் ஆளாக்குகிறது என்பதால் அதன் அரசியல் ஆதரவாளர்களான பா.ஜ. க.வும் மோடியும் என்றென்றைக்கும் தலித் விரோதிகளே; நாட்டை ஆண்கள் பார்த்துக்கொள்வார்கள், வீட்டை நிர்வகிக்கும் அளவுக்கு பெண்கள் படிப்பறிவு பெற்றிருந்தால் போதுமானது என்று, பெண்ணிய விடுதலைக்கு எதிரான பிற்போக்கு சிந்தனை கொண்டவர்கள் இவர்கள் என்பதை மக்களுக்கு மீண்டும் மீண்டும் நினைவுபடுத்துவது நமது கடமை.

மோடி ஓர் ஆர்.எஸ்.எஸ். உறுப்பினர்:

ஆர்.எஸ்.எஸ்.: முஸ்லீம் எதிர்ப்பை தனது உயிர் மூச்சாகக் கொண்டு 'ஹிந்து மாகா சபை'யில் பணியாற்றிய சாவர்க்கரின் சீடரான டாக்டர் ஹெட்கேவர் எனும் பார்ப்பனரால் 1925 ஆம் ஆண்டு இந்துக்களை ஒன்று திரட்டுவதற்காக 'ஒரு தேசம், ஒரு இனம், ஒரு மொழி' என்னும் முழக்கங்களுடன் துவக்கப்பட்ட இந்துத்வா அடிப்படைவாத இயக்கம் ஆர்.எஸ்.எஸ்.! விஷ்வ இந்து பரிஷத், பஜ்ரங் தள், பாரதிய கிஸான் சங்கம், பாரதிய மஸ்தூர் சங்கம், பாரதிய விகாஷ் பரிஷத், இராஷ்டிர சேவிகா சமிதி, ஹிந்து ஸ்வயம் சேவக்(வெளிநாட்டு வாழ் இந்துக்களுக்கானது), பாரத்-திபெத் மெய்த்ரி சங், சாகர் பாரதி, பாரதிய விசார கேந்திரா, பாரதிய வித்ய விகாஷ், வனவாசி கல்யாண் ஆஸ்ரமம் (ஆதிவாசிகளுக்கான அமைப்பு), பாரதிய ஜன் ஜாதி சன்ஸ்க்ருதி மஞ்ச், தீன் தயாள் ரிசர்ச் இன்ஸ்டிடியூட், தீன் தயாள் ஷோத் சன்ஸ்தான் என்பது போன்ற இருபதுக்கும் மேற்பட்ட இந்து அடிப்படைவாத அமைப்புகளுக்கு அரசியல் பாதுகாப்பு அரணாக பா.ஜ.க. கட்சியும் இவ்வமைப்புகளுக்கு செயல் திட்டங்களை வகுத்தளிக்கும் மூளையாக ஆர்.எஸ்.எஸ்.சும் இருந்து வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

அரசியல் ரீதியான (மகாத்மா காந்தி படுகொலையை முன்னிட்டு) ஆர்.எஸ்.எஸ்.ஸின் செயல்பாட்டுக்கு நேருவின் அரசு 1949 ஆம் ஆண்டு தடை விதித்து விடவே 1952களில் 'பாரதிய ஜன சங்கம்' என்ற அரசியல் கட்சியைத் தோற்றுவித்தது ஆர்.எஸ்.எஸ்.. இந்த அரசியல் கட்சியின் பரிணாமமாக 1980களில் பாரதிய ஜனதா கட்சி உதயமானது. மேற்கண்ட அனைத்து அரசியல் கட்சிகளின், இந்துத்வா சங் பரிவாரங்களின் தாய் அமைப்பாக இருந்துகொண்டு இவற்றை வழிநடத்தி வரும் ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தின் மையக் கோட்பாடு 'இந்து தேசியம்' என்பதுவாகும். இந்த இந்து தீவிரவாத அமைப்பின் அடிப்படை உறுப்பினராகவும் பிராச்சாரரா(முழு நேர ஊழியர்)கவும் இன்றுவரை நீடித்து வருகிறார் மோடி.

ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தின் கொள்கை என்பது நவீன அரசியல்-வாழ்வியல் மாற்றங்களுக்கு ஏற்ப குறைந்த பட்ச சீர்திருத்தங்களையோ மாற்றங்களையோக் கூட உள்வாங்கிக் கொள்ளும் மன நிலையை அடையவில்லை இன்றுவரை. இந்து மதக் கோட்பாடுகளைக் காப்பது, போற்றுவது என்னும் பழமைவாத இயக்கமாகவே அது இருந்து வருகிறது. "இந்து அல்லாதோர் வெளியிலிருந்து படையெடுத்து வந்தவர்கள் அல்லது விருந்தாளிகள். அவர்கள் இந்து மரபுகளையும் கலாச்சாரத்தையும் ஏற்றுக்கொண்டால் அன்றி அவர்களை இணையானவர்களாகக் கருத முடியாது. இந்து அல்லாதவர்கள் குறிப்பாக முஸ்லிம்களும் கிறித்துவர்களும் ஒவ்வோர் இந்து அம்சத்துக்கும் விரோதிகள்; எனவே அச்சுறுத்தல்களாகக் கருதப்பட வேண்டியவர்கள்", "இந்துக்களை எல்லாப் பக்கங்களிலும் பகைவர்கள் சூழ்ந்திருக்கிறார்கள். இந்துக்கள் ஒட்டுமொத்த எதிர்ப்புத் திறனை வளர்த்துக் கொள்ளவேண்டும். தாக்குதலே மிகச் சிறந்த பாதுகாப்பு " ஆர்.எஸ்.எஸ். தொண்டர்களைப் பயிற்றுவிக்கும் 'ஷாகா' எனும் தினசரி ஒரு மணி நேரப் பயிற்சியின் போது போதிக்கப்படும் டி.ஆர்.கோயலின் மந்திரம் இதுவாகவே இருக்கிறது.

சனநாயக இந்திய அரசமைப்புக்குக்கீழ் ஒருங்கிணைக்கப்பட்ட இந்திய சமுதாய அமைப்பு என்பது பல்வேறு மதங்கள்,மொழிகள், கலாச்சாரங்களைக் கொண்டதுவாகும். இந்திய தேசியம் எனும் ஒருங்கிணைவின்கீழ் இவ்வொருமைப்பாடு சாத்தியப்பட்டுள்ளது என்பதுவே நம் தேசத்தின் சிறப்பாகவும் போற்றப்படுகிறது. ஆனால் இன்றுவரை நரேந்திர மோடி உறுப்பினராகவும், முழு நேர ஊழியராகவும் உள்ள ஆர்.எஸ்.எஸ். இயக்கம் மதத்தின் பெயராலான பிரிவினைவாதத்தை சித்தாந்தமாகக் கொண்டு, பிறப்பினை அடிப்படையாகக் கொண்ட ஏற்றத்தாழ்வான சமூக அமைப்பை போற்றுவதுமான ஓர் இந்துத்வா அடிப்படைவாத அமைப்பாக இருந்துவருகிறது. வேற்றுமையில் ஒற்றுமை எனும் விசேசத் தன்மை கொண்ட இந்திய புவியியல்-அரசியல் அம்சத்துக்கு எதிரான இயக்கத்தின் ஒரு முழு நேர ஊழியராக இருக்கும் நரேந்திர மோடி என்னும் ஓர் இந்து பயங்கரவாதிக்கு மதசார்பற்ற இந்தியாவின் தனித் தன்மையைக் காக்கும் பொறுப்புமிக்க பிரதமர் பதவியைக் கொடுக்க நினைப்பது கடும் பசியில் தவிக்கும் ஒரு பூனையை பாலுக்கு காவல் வைப்பதற்கு ஈடானது அன்றி வேறல்ல.

விஷ்வ இந்து பரிஷத்:

1964 ஆம் ஆண்டு ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் நல்லாசியுடன் சிவசங்கர் என்ற பார்ப்பனர் ஒருவர் 'விஷ்வ இந்து பரிஷத் 'என்ற இந்து மத அமைப்பைத் துவக்கினார். இந்தியாவில் நடந்துவரும் மதமாற்ற நடவடிக்கைகளைத் தடுக்கும் போராளியாகவும் சிறுபான்மையினரை ஒடுக்கும் இயக்கமாகவும் தன்னை அறிவித்துக் கொண்டது வி.எச்.பி. இராமனும் கிருஷ்ணனும் எமது மகத்தான தெய்வங்கள்; இராம ஜன்ம பூமி, கிருஷ்ண ஜன்ம பூமியை மீட்பதுவும் இந்து இராஜ்யம் அமைப்பதுவும் எமது இலக்கு என்று சொல்லிக்கொண்டு சிறுபான்மையினர் மீது தாக்குதலைக் கட்டவிழ்த்துவிட்டது. 2002 இல் மோடியின் பேராதரவுடன் குஜராத் கலவரத்துக்கு தலைமை ஏற்று வெற்றிகரமாக நடத்திக் காட்டி அம்மாவான ஆர்.எஸ்.எஸ். அமைப்பிடம் சபாஷ் பேட்டா சான்றிதழ் பெற்று மகிழ்ந்தது.

காந்தியை சுட்டுக் கொன்றவர்கள்:

முஸ்லீம் லீக் அமைப்பானது பாகிஸ்தான் பிரிவினையைக் கோரியபோது மகாத்மா காந்தியடிகள் முஸ்லீம்களுக்கு அனுசரணையாக நடந்துகொண்டார் என்று சாவர்க்கரின் நல்லாசியோடு நாதுராம் வினாயக் கோட்சே என்பவன் பிர்லா மந்திரில் நடைபெறவிருந்த பிரார்த்தனைக் கூட்டத்துக்கு சென்றுகொண்டிருந்த காந்தியை சுட்டுக் கொன்றான். காந்தி படுகொலைக்குப்பின் ஆர்.எஸ்.எஸ். தடை செய்யப்பட்டு, நடந்த விசாரணையின் போது கோட்சே ஆர்.எஸ்.எஸ்.இல் உறுப்பினராக இருந்தவனல்ல என்று கதை திரிக்கப்பட்டது. ஆனால் இந்து இராஜ்யம் அமைப்பதைக் கனவாகக் கொண்ட கோட்சே சாவர்க்கருக்கு நெருக்கமானவன் என்றும் ஆர்.எஸ்.எஸ்.இல் உறுப்பினராக இருந்தவன் என்றும் அவனது தம்பி கோபால் கோட்சே என்பவன் எழுதி வெளியிட்டுள்ள 'காந்தி படுகொலையும் நானும்' எனும் புத்தகத்தில் இடம் பெற்றுள்ளதாக சொல்லப்படுகிறது. காந்தி படுகொலையையொட்டி வெடித்த கலவரத்தில் ஆர்.எஸ்.எஸ். அலுவலகங்கள் அடித்து நொறுக்கப்பட்டன; கோட்சே ஒரு பார்ப்பனன் என்பதால் மக்களின் கோபம் பார்ப்பனர்களின் மீதும் பாய்ந்தது. ஆர்.எஸ்.எஸ். அமைப்பு தடை செய்யப்பட்டது. கோல்வால்க்கர் உள்ளிட்ட தலைவர்கள் கைது செய்யப்பட்டனர்.

ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தின் மீது கொஞ்சம் அக்கறையாக இருந்த சர்தார் பட்டேலுக்கு சிறையிலிருந்துகொண்டே கடிதங்கள் எழுதி அவரை இணங்க வைத்தார் கோல்வால்கர். படேலின் முயற்சியால் அரசியல் வேலைகளில் ஈடுபடக் கூடாது; கலாச்சாரப் பணிகளில் பணியாற்றலாம் என்பது உட்பட பெயரளவுக்கேயான சில நிபந்தனைகளுடன் 1949 ஜூலை மாதத்தில் ஆர்.எஸ்.எஸ். மீதான தடை விலக்கிக் கொள்ளப்பட்டது. நாதுராம் கோட்சேயும் அவனது கூட்டாளி நாராயண் தத்தாத்ரேய ஆப்தேவும் தூக்கில் இடப்பட்டனர். இப்போது நரேந்திர மோடியிடம் திடீர் சர்தார் படேல் பற்று உதித்து, பேசப்படுவதற்கும் குஜராத்தில் படேலுக்கு கோடிக்கணக்கான பணம் செலவிட்டு மாபெரும் சிலை அமைப்பதற்கும் அடிப்படைக் காரணம் அன்று படேல் ஆர்.எஸ்.எஸ். அமைப்புக்கு செய்த உதவிக்கு நன்றி கடன் செலுத்தும் பொருட்டுதான்.

மண்டைக்காடு கலவரம்:

முசாபூர் கலவரத்துக்கு இந்துப் பெண்ணை முஸ்லிம் இளைஞர் கிண்டல் செய்தது காரணமாக சொல்லப்பட்டது போலவே 1982 ஆண்டு திருநெல்வேலி மாவட்டம் மண்டைக்காடு கலவரத்துக்கு காரணமாக இந்துப் பெண்களிடம் கிறிஸ்துவர்கள் தவறாக நடந்து கொண்டனர் என்று சொல்லப்பட்டது. ஆர்.எஸ்.எஸ்., வி.எச்.பி. இந்து தீவிரவாதிகளால் தூண்டி விடப்பட்ட அந்த மதக்கலவரத்தை அடக்க போலீஸ் நடத்திய துப்பாக்கி சூட்டில் ஆறு மீனவர்கள் கொல்லப்பட்டனர். மண்டைக்காடு கலவரம் அடங்கி வந்த சூழலில் அக்கலவரத்தை திருநெல்வேலி மாவட்டத்தின் மற்ற பகுதிகளுக்கு பரப்பினர் மத வெறியர்கள். இம்முறை கிறித்துவ மீனவர்களுடன் முஸ்லிம்களும் இணைந்து கொள்ள பெரும் கலவரம் வெடித்தது. இந்துக்களின் கடைகளும் வீடுகளும் கொளுத்தப்பட, பதிலுக்கு கிறித்துவர்களையும் முஸ்லிம்களையும் இந்துக்கள் தாக்கினர்; வாழ்விடங்கள் தீக்கிரையாக்கப்பட்டன. வெட்டரிவாள்கள், உருட்டுக்கட்டைகள், வெடிகுண்டுகளுடன் ஒருவரை ஒருவர் தாக்கிக்கொண்ட அக்கலவரத்தில் எங்கும் மரண ஓலம் கேட்டது. பயத்தில் உறைந்துபோன மக்கள் பல நாட்கள் வீடுகளுக்குள் முடங்கிக் கிடந்தனர். இக்கலவரத்தை முன்னின்று நடத்தியவர் இந்து முன்னணி இராமகோபாலனும் ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தைச் சேர்ந்தவர்களும் ஆவர். சிறுபான்மையின மக்கள் மீது ஈவு இரக்கமற்ற தாக்குதல்களைத் தொடுத்து அச்சுறுத்துவதன் மூலம் இந்துத்துவா அதிகாரத்தை அனைத்து மட்டங்களிலும் நிறுவுவதை உடனடி இலக்காகவும் மதச்சார்பான இந்து தேசியம் என்பதை இறுதி இலக்காகவும் கொண்டுள்ள இந்துத்வா சக்திகளால் நடத்தப்பட்ட மதக்கலவரங்களும் அதனாலான விளைவுகளும் இவ்வாறாக நீள்கின்றன.

பாபர் மசூதி இடித்துத் தரைமட்டமாக்கப்பட்டது:

1992 ஆம் ஆண்டு டிசம்பர்-6. 500 ஆண்டு கால பழமை வாய்ந்த இந்திய வரலாற்றுச் சின்னமான பாபர் மசூதி சில மணி நேரங்களில் இடித்துத் தரைமட்டமாக்கப்பட்டது. முகலாயர் ஆட்சியின் போது அங்கு இருந்த இராமர் கோவில் இடிக்கப்பட்டு பாபர் மசூதி கட்டப்பட்டது என்று சொல்லிக்கொண்டு கரசேவை என்ற பெயரில் ஆர்.எஸ்.எஸ்., விஷ்வ ஹிந்து பரிஷத் மற்றும் வி.எச்.பி.யின் இராணுவப் படை என்றழைக்கப்படும் பஜ்ரங்தள் ஆகிய இந்து பயங்கரவாத அமைப்புகள் இணைந்து இராம ஜன்ம பூமியை மீட்டு, அங்கு இராமர் கோவில் கட்டுவோம் என்று ஆரவாரமாய் அயோத்தியில் கூடினர். அப்போது உத்தரப் பிரதேச முதல்வராக இருந்த பா.ஜ.க. கல்யாண்சிங் ஆதரவுடன் பாபர் மசூதி தரைமட்டமாக்கப்பட்டது. பாபர் மசூதி இடிப்பு இந்திய சிறுபான்மையினரின் உணர்வுகள் மீது தொடுக்கப்பட்ட தாக்குதல் என்பதோடல்லாமல் ஜனநாயக இந்தியாவின் மதசார்பின்மை அரசியலுக்கு வைக்கப்பட்ட வெடிகுண்டு என்பதாகவே மனிதத்தன்மைக்கு மதிப்பளிப்பவர்களால் பார்க்கப்பட்டது.

பாபர் மசூதி தகர்ப்பை முன்வைத்து மூண்ட மதக் கலவரம் மும்பை, சூரத், அகமதாபாத், கான்பூர், தில்லி ஆகிய நகரங்களில் சில மாதங்கள் வரை நீடித்தது. கடைகள், வாழ்விடங்கள், வழிபாட்டுத் தளங்கள் சூறையாடப்பட்டு தீயிட்டுக் கொளுத்தப்பட்டன. முஸ்லீம்களும் இந்துக்களும் 1500க்கும் மேற்பட்டோர் அந்த மதக் கலவரத்தில் இறந்து போயினர். கலவரத்தில் சேதமான பொருட்களின் மதிப்பு 9000 கோடிக்கும் மேல் என்று கணக்கிடப்பட்டது. கலவரத்தை விசாரிக்க அமைக்கப்பட்ட 'லிபரான் கமிசன்' பாரதிய ஜனதா கட்சியின் தலைவர்களே அந்த மதக் கலவரத்துக்கு காரணம் என்று குற்றஞ் சாட்டியது. காந்தி படுகொலை செய்யப்பட்டபோதும் இந்திரா காந்தி அவசர நிலைப் பிரகடனம் பிறப்பித்தப்போதும் தடை செய்யப்பட்டது போல் இம்முறை ஆர்.எஸ்.எஸ்.ஸோ, விஎச்பியோ, பஜ்ரங் தளமோ தடை செய்யப்படவில்லை. மாறாக முஸ்லீம் இயக்கங்கள் தடை செய்யப்பட்டன. இந்துத்துவா பயங்கரவாத அமைப்புகள் வகுத்தளித்த பாபர் மசூதி இடிப்பு என்ற செயல் திட்டத்தை உத்தரப்பிரதேச அன்றைய பாஜக அரசு கல்யாண்சிங் தலைமையின் கீழ் செவ்வனே நிறைவேற்றி இந்து தீவிரவாத அமைப்புகளின் கொள்கைகள் மீது தனக்குள்ள நம்பிக்கையை மெய்ப்பித்துக்கொண்டது.

அயோத்தி தீர்ப்பு :

பாபர் மசூதி தகர்ப்பு வழக்கினை விசாரித்த எஸ்.யூ.கான், சுதீர் அகர்வால், டி.வி.சர்மா ஆகிய இம்மூன்று நீதிபதிகளைக் கொண்ட அலகாபாத் நீதிமன்றம் 2010 செப்டம்பர் 30-ம் நாள் ஓர் அதிரடி தீர்ப்பை வழங்கியது. அதாவது, சர்ச்சைக்குரிய மசூதியின் மைய வளாகம் இந்துக்களுக்கு உரியது என்றும் அந்த இடத்தின் மூன்றில் ஒரு பகுதியை முஸ்லீம்கள் பயன்படுத்திக் கொள்ளலாம் என்றும் அறிவித்தது அத்தீர்ப்பு. மசூதி இருந்த இடம் இராமர் பிறந்த இடம்தான் என்ற நம்பிக்கைக்கு சட்டப்பூர்வ அங்கீகாரம் அளிக்கப்பட்டிருப்பதாக தீர்ப்பின் மீதான தனது கருத்தாக தெரிவித்த பாஜக தலைவர் இராஜ்நாத் சிங் "நீதிமன்றத் தீர்ப்புக்குப் பின்னர் இந்த நிலத்தின்மீது முஸ்லிம்கள் உரிமை கொண்டாடுவது மெக்காவில் ஒரு கோவில் கட்ட வேண் டும் என்று இந்துக்கள் உரிமைக் கொண் டாடுவதற்கு சமமானது என்று முஸ்லிம்கள் புரிந்து கொள்ள வேண்டும்" என்றார். மதசார்பற்ற இந்திய சனநாயக அரசியலை கோட்பாட்டளவில் ஒப்புக்கொள்ளாத வகுப்பு வாதம்- பிரிவினைவாதங்களை உயிரோட்டமாகக் கொண்ட, மத நல்லிணக்கத்தை பொருட்படுத்தாத இந்து பயங்கரவாத இயக்கங்களின் மதத் தீவிரவாத எண்ணங்களுக்கு அரசியல் வடிவம் கொடுக்கும் ஒரு கட்சியாகவே பா.ஜ.க. இருந்து வருகிறது என்பதற்கு இதுவெல்லாமே சான்றுகள்.

குஜராத் கலவரத்தை மோடியே இயக்கினார்:

2002, பிப்ரவரி 27 அன்று அயோத்தியிலிருந்து திரும்பிய சபர்மதி எக்ஸ்பிரஸ் இரயில் கோத்ரா புகைவண்டி நிலையத்தில் வந்து சேர்ந்தபோது கொளுத்தப்படுகிறது. இந்துக்கள் பயணித்த S6 பெட்டியில் இருந்த 14 குழந்தைகள் உட்பட 59 இந்துக்கள் தீயில் கருகி இறந்து போகின்றனர். இஸ்லாமிய கூட்டம் ஒன்றுதான் இரயிலுக்கு தீ வைத்தது என்ற தகவல் காட்டுத் தீயாய்ப் பரவுகிறது. மகாத்மா காந்தியை சுட்டுக்கொன்ற கோட்சே தனது கையில் இஸ்மாயில் என்று பச்சைக் குத்திக்கொண்டிருந்தான், காந்தி படுகொலைப் பழியை முஸ்லிம்கள்மீது சுமத்தி நாட்டில் மதக்கலவரத்தை தூண்டிவிடும் தீய நோக்கத்துடன். இதே நடைமுறை கோத்ரா இரயில் எரிப்பு விசயத்திலும் கையாளப்பட்டிருப்பதற்கான வாய்ப்பு உள்ளது என்றும் பேசப்பட்டது. ஏனெனில், எரிந்து சாம்பலான S6 பெட்டியில் பெண் சாதுக்களும் குழந்தைகளும் மட்டுமே அடைக்கப்பட்டிருந்ததாகவும் கரசேவகர்களும் பிற முக்கிய தலைகளும் வேறு பெட்டிகளில் பயணித்ததாகவும் விசாரணையில் தெரிய வந்தபோது இது திட்டமிட்ட சதியோ என்ற சந்தேகத்தையும் கிளப்பியது.

modi_360இரயில் எரிப்பு சம்பவத்தை முன்வைத்து ஆர்.எஸ்.எஸ்., வி.எச்.பி., பஜ்ரங்தள் ஆகிய இந்து தீவிரவாத அமைப்புகள் கலவரத்தை முடுக்கிவிட அகமதாபாத், நரோடா, கேயோன், குல்பர்க், கலுப்பூர், தாரியாபூர் ஆகிய நகரங்களுக்கு பரவியது கலவரம். தீ வைப்பு, கொள்ளை, வன்புணர்ச்சி, படுகொலைகள் என்று உள்ளூர் இந்து மத இயக்கங்களின் தலைவர்களின் தூண்டுதலால் மதக் கலவரம் வெடித்து குஜராத் மாநிலம் பற்றியெரிந்தது. 790 முஸ்லிம்களும் 254 இந்துக்களும் படுகொலை செய்யப்பட்டதாகவும் 223 பேர் காணாமல் போயினர் எனவும் 2458 பேர் படுகாயம் அடைந்ததாகவும் 919 பெண்கள் விதவையானார்கள் எனவும் 606 சிறுவர்கள் அனாதையாயினர் என்றும் சொல்லப்பட்டது. உண்மையில் இஸ்லாமியர்களைக் குறிவைத்து மதவெறியர்களால் நரேந்திர மோடி அரசாங்கத்தின் பேராதரவோடு நடத்தப்பட்ட அக்கலவரத்தில் 1500க்கும் மேற்பட்ட இஸ்லாமியர்கள் இறந்து போயினர் என்று 'ஆஜ்தக்' போன்ற ஊடகங்கள் வெளிச்சம் போட்டுக் காட்டின.

கொலைவாட்கள், திரிசூலங்கள், துப்பாக்கிகள், வெடிகுண்டுகளுடன் ஆர்.எஸ்.எஸ்., வி.எச்.பி., பஜ்ரங்க்தள், துர்கா வாஹினி, பா.ஜ.க. தொண்டர்கள் அகமதபாத்,நரோடா நகரங்களில் இறங்கியபோது "எதிர்படும் முஸ்லிம்களை எல்லாம் கொல்லுங்கள், சூறையாடுங்கள், அழியுங்கள், உங்களை போலீஸ் கண்டுகொள்ளாது" என்ற உள்ளூர் தலைவர்களின் வாக்குறுதிகள் அவர்களுக்குத் துணை நின்றன. குறிப்பாக அன்று குஜராத் முதல்வராக இருந்த நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் கோர்தான் சபாடியா, வி.எச்.பி. மாநிலச் செயலாளர் ஜெய்தீப் படேல், ப்ரவீன் தொகாடியா போன்றவர்களின் வழிகாட்டுதல், ஒத்துழைப்புகள் தான் குஜராத் கலவரத்தை பின்னால் இருந்துகொண்டு இயக்கின என்பதற்கு 'டெஹல்கா அம்பலம்- 2007' சாட்சியாக உள்ளது நமக்கு.

"மூன்று நாள் அவகாசம் தருகிறோம், செய்து முடியுங்கள். உங்களை போலீஸ் கண்டுகொள்ளாது. சாட்சியங்களும் தடயங்களும் இல்லாமல் பார்த்துக்கொள்ளப்படும். கைதானவர்களுக்கு சட்ட உதவி செய்யப்படும். அவர்களது குடும்பங்களுக்குத் தேவையான ரேசன் பொருட்கள் வழங்கப்படும். கைதானவர்களின் பிள்ளைகள் பள்ளிகளில் கட்டணம் கட்ட வேண்டியதில்லை; நாங்கள் பள்ளி நிர்வாகங்களுடன் பேசிக்கொள்கிறோம். உங்களுக்கு எதிராக சாட்சிகள் பேச மாட்டார்கள். கொலையுண்டவர்களின் குடும்பத் தலைவர்கள் கூட சாட்சி சொல்ல வரமாட்டார்கள். உங்களை விசாரிக்கும் போலீஸ் உங்களை மிகவும் கண்ணியத்துடன் நடத்தும்" கொலையாளிகளுக்கு இவ்வாறு உள்ளூர் இந்து தீவிரவாதத் தலைவர்களால் உறுதிமொழிகள் வழங்கப்பட்டன என்பதை பாபு பஜ்ரங்ஜி, ராஜேந்திர வியாஷ், ரமேஷ் தவே, மதன் சவால், தீமன்ட் பட், தீபக்ஷ¡ ஆகிய பஜ்ரங் தள், வி.எச்.பி., ஆர்.எஸ். எஸ். அமைப்புகளின் உள்ளூர் தலைவர்களின் மூலம் டெஹல்கா வார இதழால் பெறப்பட்ட வாக்குமூலங்கள் அம்பலப்படுத்தின.

டெஹல்கா: கோத்ராவில் இரயில் தீப்பற்றியபோது நீங்கள் அங்கே நரேந்திர பாயுடன்(மோடி) இருந்தீர்கள்...அவருடைய உடனடி எதிர்வினை எப்படி இருந்தது?

வியாஸ் : முதலமைச்சராக இருந்துகொண்டு எல்லா முஸ்லிம்களையும் கொல்லுங்கள் என்று சொல்ல முடியாதுதானே... நான் இதை பொது மேடையில் வெளிப்படையாக சொல்லமுடியும். ஏனெனில் நான் விஷ்வ ஹிந்து பரிசத். பிரவின்பாய் தொகாடியா சொல்ல முடியும். ஆனால் அவர் (மோடி) இதைச் சொல்ல முடியாது... அதாவது என்ன வேண்டுமானாலும் நாங்கள் செய்துகொள்வதற்கு அவர் முழு அனுமதி அளித்தார்... போலீஸ் எங்கள் பக்கம் நின்றது. அதே போல இந்து சமூகம் முழுக்க எங்களுடன் இருந்தது. இந்த விஷயத்தில் பாய்(மோடி) கவனமாக இருந்தார். இல்லாவிட்டால் போலிஸ் அந்தப் பக்கம் போயிருக்கும்.

டெஹல்கா : பாட்டியாவின்போது மோடி உங்களுக்கு ஆதரவாக இருந்தாரா?

பாபு பஜ்ரங்கி : எல்லாவற்றையும் அவர் பார்த்துக்கொண்டார். இல்லாவிட்டால் எங்களுக்கு ஏது இத்தனை பலம்..

இப்படி வாக்குமூலம் அளித்த பஜ்ர்ங்கி “என்னை காப்பாற்றுவதற்காக மூன்று முறை நீதிபதிகளை மாற்றினார் நரேந்திர பாய் " என்கிறான்.

குஜராத் மதக் கலவரம் தொடர்பான பெஸ்ட் பேக்கரி வழக்கில் மறுவிசாரணைக்கு உத்தரவிட்டு தீர்ப்பளித்த நீதிபதிகள் ராஜு துரைசாமியும் சுர்ஜீத் பசாயத்தும் நரேந்திர மோடியை 'நவீன கால நீரோ மன்னன்' என்றார்கள். படுகொலைகள், வன்புணர்ச்சிகள் நடந்து கொண்டிருந்தபோது குற்றவாளிகளை எப்படி தப்புவிக்க செய்யலாம் என்று திட்டம் தீட்டியபடி வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்ததாக உச்ச நீதிமன்றம் மோடியை குற்றஞ்சாட்டியது என்பதுவும் இங்கு குறிப்பிடத்தக்கது. மதவெறி கோரத்தாண்டவத்தின் உச்சபட்ச கோரக் காட்சிகள் பல குஜராத் மதக் கலவரத்தின்போது நடந்தேறின.

ஒன்பது மாத கர்ப்பிணி துலு என்ற முஸ்லிம் பெண்மணியின் வயிற்றைக் கிழித்து கருவை வாள் முனையில் குத்தி வெளியே இழுத்து உயர்த்திக் காட்டி தாயையும் கருவையும் நெருப்பில் எரித்தார்கள். இஷான் ஜா·ப்ரி என்ற முன்னாள் காங்கிரஸ் எம்.பி. யின் உறுப்புகள் ஒவ்வொன்றாய் வெட்டிக் கிழிக்கப்பட்டு அவ்வுறுப்புகளையும் உடலையும் நெருப்பில் போட்டு எரித்தார்கள். மோடியின் பா.ஜ.க. அரசாங்கமும் காவல் துறையும் குஜராத்-2002 மதக் கலவரத்தின்போது கரசேவகர்களாக செயல்பட்டனவே ஒழிய சட்ட ஒழுங்கு-அமைதியைக் காக்கும் அரசு நிறுவனங்களாகச் செயல்படவில்லை என்றும் விமர்சிக்கப்பட்டது. "முஸ்லிம்களைச் சுடுவதற்கு துப்பாக்கிக் குண்டுகளையும் கூட போலீஸ் தந்தது" என்ற இந்து மத வெறியன் ரமேஷ் தவேயின் (ஆதாரம்:ஜூன்-12,2007 டெஹல்கா இதழ்) பேட்டியே இதற்குச் சான்று.

வளர்ச்சி நாயகன்( விகாஷ் புருஷ்) என்று காவி பயங்கரவாத ஆதரவு ஊடகங்களால் புகழப்படும் நரேந்திர மோடி, குஜராத் வகுப்புக் கலவரத்தை முன்னின்று நடத்தியவர், குற்றவாளிகளை சட்டத்தின் பிடியிலிருந்து காப்பற்ற உதவியவர் என்ற முறையில் மதச்சார்பற்ற இந்திய ஜனநாயக அரசியல் வரலாற்றில் ஓர் இரத்தக் கறையாக படிந்திருக்கிறார். "2002 கலவரம் தொடர்பாக அவர்(மோடி) இதுவரை நேரடியாக நாட்டு மக்களிடம் வருத்தமும் தெரிவிக்கவில்லை, கலவரத்தைத் தடுக்கத் தவறியதற்காக மன்னிப்பும் கோரவில்லை. இதில்தான் அவருடைய சித்தாந்த ரீதியான அரசியல் உத்தி அடங்கியிருக்கிறது. சங் பரிவாரங்களின் வகுப்புவாதச் சித்தாந்தத்துக்கு இரைபோடும் உத்தி" என்கிறார் என்.ராம்.(பார்க்க: 'தி இந்து'-7.11.2013) எந்தக் கோணத்திலிருந்து பார்த்தாலும் மத நல்லிணக்கத்தை விரும்பாத ஒரு சனநாயக விரோதியாகவே தென்படும் மோடி இந்த நாட்டின் பிரதமர் பதவிக்குத் தகுதி அற்றவர், அவரது கன‌வு பலித்து ஒருவேளை இந்தியாவின் பிரதமராகவும் மோடி ஆகிவிட்டால் அந்த ஆட்சி சிறுபான்மையினருக்கு ஓர் அச்சுறுத்தலான ஆட்சியாகவும் மதவெறி பிடித்தலையும் இந்து தீவிரவாத இயக்கங்களுக்கு நல்லாட்சியாகவும் அமையும். மதசார்பற்ற இந்திய அரசியல் இறையாண்மைமீது நம்பிக்கை கொண்டுள்ள ஜனநாயக சக்திகளாலும் மதசார்பற்ற சக்திகளாலும் மட்டுமல்ல மதக் கலவரங்கள்- இனக்கலவரங்கள் விரும்பாத ஒட்டுமொத்த இந்திய மக்களாலும் புறக்கணிக்கப்பட வேண்டியவ்ர் குஜராத் மதக் கலவர நாயகன் நரேந்திர மோடி.

முசாபூர் மதக் கலவரம்:

இந்து மதவாத சக்திகள் எப்போதும் சப்பையான காரணங்களைச் சொல்லிக்கொண்டுதான் மதக் கலவரங்களைத் துவக்கியிருக்கின்றன. ஆகஸ்டு மாதம் 2013 இல் உத்தரப்பிரதேச மாநிலம் முஸாபூர் நகர் கலவரத்துக்கு இரண்டு காரணங்கள் சொல்லப்பட்டன. கவால் கிராமத்தில் ஜாட் இனப் பெண்ணை முஸ்லிம் இளைஞர்கள் கிண்டல் செய்தனர். அதனை தட்டிக் கேட்ட அப்பெண்ணின் சகோதரர்களான கவ்ரவ் சிங்க், சச்சின் சிங்க் முஸ்லிம் இளைஞர் சனவாஸ் என்பவரை கொலை செய்தனர். பழிக்குப் பழி வாங்க அப்பெண்ணின் சகோதரர்கள் முஸ்லிம்களால் கொல்லப்பட்டனர். எனவே மூண்டது கலவரம் என்று ஒரு காரணம் சொல்லப்பட்டது. ஒரு வாகன விபத்து நடந்து விபத்துக்குள்ளான இளைஞர்களிடையே நடந்த தகராறு கலவரத்துக்கு காரணமாக அமைந்து விட்டது என்றும் சொல்லப்பட்டது. கவுரவ் சிங்கும் சச்சின் சிங்கும் இருசக்கர வாகன விபத்தில் இறந்தனர் என்கிறது காவல் துறையின் வழக்குப் பதிவு. ஜாட்டுகளின் மகாசபை கூடியது. அம்மகாசபைக்கு கூட்டமாக வந்தவர்களை அவமானம் செய்தனர் என்ற கதையுடன் முஸ்லிம்கள் மீது தாக்குதல் என்று துவங்கி மதக் கலவரமாய் வெடித்தது. ஆகஸ்டு 27 இல் துவங்கிய கலவரம் இருபது நாட்கள் நீடித்து 60க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். நூற்றுக்கணக்கானோர் படுகாயமடைந்தனர். ஆயிரக்கணக்கான மக்கள் வீடுகளை விட்டு வெளியேறி முகாம்களில் தங்கவைக்கப்பட்டனர். முசாபூர் மதக் கலவரம் பா.ஜ.க. சட்டமன்ற உறுப்பினர்கள் சங்கீத் சாம் மற்றும் ராணா என்பவர்களால் தூண்டிவிடப்பட்டு வழிநடத்தப்பட்டது.

மோடி இந்தியாவின் பிரதமரானால்...:

மதவாத-இனவாத வன்முறைகள் நடத்தி இந்து தேசியம் என்னும் தனது பெரும்பான்மைவாத அரசியலை மதசார்பற்ற சனநாயக ஆளுகைக்கு பழக்கப்பட்ட இந்தியாவில் நிறுவிவிடத் துடிக்கிறது சங் பரிவாரங்களின் அரசியல் அமைப்பான பாரதிய ஜனதா கட்சி என்பதை நாம் திரும்பத் திரும்ப நினைவுபடுத்த வேண்டியிருக்கிறது. ஆர்.எஸ்.எஸ்., விஸ்வ ஹிந்து பரிசத் அமைப்புகளின் ஹிந்து ராஷ்டிரம் என்னும் கனவை பாஜகவானது தனது மறைமுக செயல்திட்டமாக‌க் கொண்டிருப்பதுடன் அகண்ட பாரதமெனும் இந்து சாம்ராஜ்யத்தினை மீட்டுருவாக்கம் செய்வது இவ் அமைப்புகளின் பெருங்கனவு. இவர்களது கனவு இன-மத வேறுபாடுகள் கடந்து ஒன்றிணைந்த இந்தியாவுக்கு ஆபத்தானதாக இருக்கிறது என்பதே நமது கவலை.

இந்து தேசியம் என்பதன் பெயரால் இந்திய சிறுபான்மையினரின் நம்பிக்கைகளைத் தாக்குவதன் மூலம் அவர்களை ஒடுக்க நினைப்பது தேசிய ஒருமைப்பாட்டுக்கு உலை வைப்பதற்கு சமமானது என்பது நமது வாதமகும். எல்லைத் தாண்டிய தீவிரவாதம்- பயங்கரவாதம் என்பவை தேசத்தின் அமைதிக்கும் வளர்ச்சிக்கும் ஆபத்தான சக்திகள் என்று நமக்கு தினந்தோறும் பாடமெடுக்கும் ஊடகங்கள் உள்நாட்டுக்குள் இருக்கும் இப்பயங்கரவாதிகள் குறித்து கள்ள மௌனம் சாதித்து மறைமுகமாக வளர்த்து வருகின்றன. காடுகளில் இருந்துகொண்டு கொரில்லா முறை தாக்குதல்கள் மூலம் ஆட்சியதிகாரத்தைக் கைப்பற்றி சுரண்டல் ஆட்சிமுறைக்கு முடிவுகட்டிவிட்டு, முதலாளித்துவ அரசமைப்பை தூக்கி எறிந்துவிட்டு, பொதுவுடைமை முறையிலான புதிய ஜனநாயகத்தை நிறுவும் இலட்சியத்துடன் இயங்கும் நக்சலைட்டுகளால் தேசத்துக்கு ஆபத்து என்று நக்சலைட்டுகளை ஒடுக்குவதற்கு கோடி கோடியாக பணம் செலவிடும் அரசாங்கம் உள்நாட்டில் பகிரங்கமாக நடமாடும், தேசிய ஒருமைப்பாட்டுக்கு குந்தகம் விளைவிக்கும் இப்பயங்கரவாதிகளுடன் அரசியல் இலாபங்களுக்காக கைகுலுக்குவது மாபெரும் முரண்நகை.

பாரதிய ஜனதா கட்சியின் உள்துறை அமைச்சராக இருந்த எல்.கே. அத்வானி மே 4,2002ஆம் ஆண்டு அந்தமான் போர்ட் ப்ளேயர் விமன நிலையத் துக்கு வீர் சாவர்க்கர் விமான நிலையம் என்று பெயர் சூட்டி ஆர்.எஸ்.எஸ்., விஷ்வ ஹிந்து பரிசத் மீதான தனது தாய் வீட்டு விசுவாசத்தைக் காட்டி மகிழ்ந்தார். முஸ்லிம்களின் வேர்கள் மெக்காவில் இருக்கிறது என்று ஒருபுறம் சொல்லிக்கொண்டே முஸ்லீமான அப்துல்கலாமை ஜனாதிபதியாக்கி அவர் கையாலேயே கருத்தியல் ரீதியாக இஸ்லாத்துக்கு எதிரானவரான வீர் சாவர்க்கர் படத்தை பிப்ரவரி 26, 2003 அன்று நாடாளுமன்றத்தில் திறந்து வைத்ததில் தனது அரசியல் முகத்தைக் காட்டிக்கொண்டது பாஜக. மகாத்மா காந்தியைக் கொன்ற நாதுராம் கோட்சே வீர் சாவர்க்கரின் வளர்ப்பு என்பதை இந்திய ஜனநாயகம் மறந்துவிட்டது; இன்றைய இந்தியாவின் ஒட்டு மொத்த மதக் கலவரங்களுக்கும் மூளையாக செயல்பட்டு வரும் ஆர்.எஸ்.எஸ். இயக்கம் 1920ஆம் ஆண்டு நாக்பூரில் பாரதீய ஸ்வயம் சேவக் மண்டலம் என்று டாக்டர் ஹெட்கேவரால் துவக்கப்பட்டது; ஹெட்கேவர் என்பவர் இந்துக்களை ஒருங்கிணைப்பதற்கு ஹிந்து மகா சபாவைத் துவக்கிய வீர் சாவர்க்கரின் சீடர் ஆவார் என்பதை முன்னரே படித்தோம் அல்லவா! இப்பின்னணியிலிருந்து நாடாளுமன்றத்தில் வீர சாவர்க்கரின் படம் திறக்கப்பட்டதைக் காண்போருக்கு பாஜகவின் அரசியல் லயம் சுலபமாகப் புரியும்.

மான்சி சோனி என்ற பெண்மணியை படுக்கை அறை வரைக்கும் பின் தொடர்ந்த விவகாரத்தில் இப்போது சிக்கிக்கொண்டு தனி மனித ஒழுக்கக் கேடான ஒரு கேவலமான ஆளாகவும் அம்பலப்பட்டு நிற்கிறது மோடி வித்தை. எதிர்வரும் 2014 நாடாளுமன்றத் தேர்தலை எதிர்கொள்வதற்கு முன்னிறுத்தப்பட்டுள்ள பாஜகவின் பிரதமர் வேட்பாளரான இப்படிப்பட்ட மோடியின் அரசியல் வாழ்க்கை வரலாற்றை மேற்கண்ட நிகழ்வுகளுடன் இணைத்துப் பார்க்க வேண்டும். இதுவரைக்கும் சுருக்கமாகக் கண்ட ஆர்.எஸ்.எஸ். உள்ளிட்ட சங் பரிவார மோடி கும்பலின் இரத்தக் கவிச்சு வரலாற்றை ஏற்றுக்கொள்வதற்கு சமமானது அவரைப் பிரதமராக ஏற்றுக்கொள்ளவதும். இதையெல்லாம் மீறி பிரதமர் நாற்காலியில் நரேந்திர மோடியை இந்தத் தேசம் உட்கார வைக்குமேயானால் இராமருக்கு கோவில் கட்டப்படும், கிருஷ்ண ஜன்ம பூமி மீட்கப்படும், காஷ்மீருக்கு இந்திய அரசியல் சட்டம் வழங்கியுள்ள சிறப்பு அந்தஸ்தான 370 வது பிரிவு விவாதத்திற்கு உட்படுத்தப்படும் என்றெல்லாம் சொல்லிக்கொண்டு சிறுபான்மையினர் உணர்வுகளை இடைவிடாமல் சீண்டிக்கொண்டே குஜராத் கலவரத்தினை பின்னிருந்துகொண்டு இயக்கியதுபோல் இன-மதக் கலவரங்களை வாய்ப்புகள் இருக்கும் பகுதிகளிலெல்லாம் முடுக்கிவிட்டு விட்டு பின்னிருந்து மந்தகாசம் புரிவார், பக்கவாட்டில் திரும்பி சங் பரிவாரங்களைப் பார்த்து திருப்தி தானே இப்போது என்றவாறு. 

பயன்பட்ட நூல்கள்:

1.ஆர்.எஸ்.எஸ்.-மதம்,மதம்,மற்றும் மதம்- பா.ராகவன்
2.டெஹல்கா அம்பலம்- அ.மார்க்ஸ்
3. அயோத்தி தீர்ப்பு
4. என்.ராம் கட்டுரை- தி இந்து, 7.11.2013
5. தலையங்கக் கட்டுரைகள்-உயிர்மை,நவம்பர் &டிசம்பர்-2013
6. கட்டுரை-இந்துத்வா பயங்கரவாதத்தின் புதிய வேட்பாளர்-கௌதம சன்னா

Pin It