கடந்த 12.9.2013 ஆம் தேதிய தமிழக அரசின் உள் துறை அரசாணைப் படி (G.O. (Ms) NO.659) தமிழகத்தின் 12 காவல் மாவட்ட எல்லைகளின் காவல் துறை துணை ஆணையர்களுக்கு நிர்வாக நடுவர் (Executive magistrate) அதிகாரம் குற்றவியல் நடைமுறைச்சட்டம் பிரிவு 107 முதல் 110 பிரிவுகள் வரை பொது அமைதியை ஏற்படுத்துவதற்காக வழங்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அரசின் இந்த முடிவு சனநாயக வடிவங்களை நசுக்கும் வழிவகைகளில் ஒன்றாகும்.

நிர்வாக நடுவர்களாக கருதப்படும் தாசில்தார், கோட்டாச்சியர் மற்றும் மாவட்ட ஆட்சியரின் அதிகாரத்தை காவல்துறைக்கு வழங்குவதன் மூலம் குற்றம் சுமத்துபவரே நீதிபதியாக செயல்பட அதிகாரம் வழங்கியுள்ளது தமிழக அரசு.

குற்றவியல் நடைமுறைச் சட்டம்(கு.வி.ந.ச) 107 ன் கீழ் ஒருவர் பொது அமைதிக்கு ஊறு விளைவிப்பது போன்று கருதும் சூழலில் அவர் அவ்வாறு செய்யாதிருக்க உரிய பிணையத்தையோ அல்லது உத்திரவாதத்தையோ கோரும் அதிகாரம்,  பிரிவு 108 (கு.வி.ந.ச) ன் படி அரசுக்கு எதிராக வாய் மொழியாகவோ அல்லது எழுத்துப்பூர்வமாகவோ அல்லது வெளியீடுகள் வழியாக இந்திய தண்டனை சட்டத்தின் 124 A பிரிவில் உள்ள தேச துரோக கருத்துக்களை வெளிப்படுத்துவது அல்லது 153 A,153 B ஆகிய இந்திய தண்டனை சட்டத்தின் பிரிவுகளான இரண்டு குழுக்களுக்குள் அல்லது பிரிவுகளுக்குள் பகைமையை உருவாக்குவது போன்ற கருத்துக்களை வெளியிடுவது மற்றும் ஆபாசமாக வெளியீடுகளை வெளியிடுகின்றார்கள் என்ற தகவலை வாய் மொழியாகவோ அல்லது அது போன்ற முயற்சியில் ஈடுபடுவார்கள் என்று கருதினாலோ, சம்மந்தப்பட்ட நபரை அது போன்று நடக்காதிருக்க ஒரு ஆண்டுக்கு உரிய ஜாமின்தாரருடனோ அல்லது ஜாமின்தாரரின்றியோ பாண்டு எழுதி தரத் நிர்பந்திக்க முடியும்.

பிரிவு 109 (கு.வி.ந.ச) படி ஒரு நபர் எதிர்காலத்தில் ஒரு பெரும் குற்றத்தை புரிவார் (cognizable offense) என்று நிர்வாக நீதிபதி கருதும்போது ஒராண்டுக்கு அது போன்ற நடவடிக்கையில் ஈடுபடமாட்டேன் என பிணையம் எழுதி வாங்கி அந் நபரை கண்காணிக்க முடியும்.

பிரிவு 110 (கு,வி,ந.ச) பிரிவு படி கொள்ளையடிப்பதை வழக்கமாக கொண்டவர்கள், திருடும் வழக்கம் உள்ளவர்கள், திருட்டு பொருள்களை வாங்கி விற்பவர்கள், திருட்டு பொருட்களை மறைத்து வைப்பவர்கள் மற்றும் பெண்களுக்கு எதிரான குற்றம் புரிபவர்கள், பொது அமைதிக்கு பங்கம் விளைவிப்பவர்கள் மற்றும் மருந்து சட்டம் 1940. அந்நிய செலவாணி சட்டம் 1973, தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி சட்டம் 1952, உணவு கலப்பு சட்டம் 1959, சுங்க சட்டம், தீண்டாமை சட்டம் 1955. வெளிநாட்டவர் சட்டம் ஆகிய சட்டங்களில் குற்றம் புரியக்கூடியவர்கள் என கருதும் போது மேற்கண்ட நபர்களிடம் மூன்றாண்டு காலத்திற்கு பிணையம் உரிய ஜாமீன்தாரகளுடன் எழுதித் தர கோரி பெற்று அந்த நபர்களை நிர்வாக நடுவர் கண்காணிக்க முடியும்.

ஆனால் நடைமுறையில் அரசாங்கத்திற்கு எதிராக மாற்று கருத்துக்கள் வைத்திருப்போர் அல்லது தொழிற்சங்க செயல்பாட்டாளர்கள், புரட்சிகர அரசியல் மற்றும் சிறுபான்மை சமுதாயத்தினர் மற்றும் விளிம்பு நிலை மக்கள் என பலர் இதுவரை மேற்கண்ட 107 முதல் 110 வரையான குற்றவியல் நடைமுறைச் சட்டப்பிரிவுகளில் தவறு செய்யாமலேயே காவல்துறையின் பரிந்துரையில் நிர்வாக நீதிபதிகளின் முன் நிறுத்தப்பட்டு வருடக்கணக்காக சிரமங்களுக்கு ஆளாகி வந்துள்ளனர். எனினும் முன்பு வருவாய்த் துறை சார்ந்த நிர்வாக நடுவரிடம் தங்கள் நிலையை சுதந்திரமாக கூறும் நிலை இருந்தது, ஆனால் தமிழக அரசு தற்போது அந்த நீதிபதி அதிகாரத்தை போலீஸ் உயர் அதிகாரிகளுக்கு வழங்கியதன் மூலம் மேற்கண்ட சட்டம் கூடுதலாக துர்பிரயோகம் செய்யப்பட வாய்ப்புள்ளது. கருத்துரிமை மற்றும் மாற்று கருத்துக்களை வெளிப்படுத்துதல், அதற்காக அரசாங்கத்திற்கு எதிராக சனநாயக போராட்டங்கள் நடத்துவதை காவல்துறை தொடர்ந்து தடை செய்து தடுத்துவரும் நிலையில், தற்போது காவல்துறை உயர் அதிகாரிகளுக்கு கூடுதலாக கிடைத்துள்ள நிர்வாக நடுவர் அதிகாரம் என்பது மக்களின் கருத்துரிமைக்கு எதிராக பயன்படுத்தப்பட வாய்ப்புள்ளது.

மனித உரிமையும் சனநாயக உரிமையும் பிரிக்க முடியாத ஒன்று. ஆனால் மனித உரிமை என்பது தீவிரவாதிகளுக்கான கருத்து என்பது போன்ற பிரச்சாரத்தை அரசாங்கத்தின் அமைப்புகள் திட்டமிட்டு பரப்பி வரும் நிலையிலும், பல மனித உரிமை செயல்பாட்டாளர்கள் தொடர்ந்து அரசின் அடக்குமுறை மூலம் வாயடைத்துப் போய் விட செய்ய முயற்சிக்கப்படும் நிலையிலும், காவல்துறைக்கு தமிழக அரசு வழங்கியுள்ள மேற்கண்ட நிர்வாக நடுவர் அதிகாரம் மக்களை கூடுதலாக ஒடுக்கவே பயன்படுத்தப்படும் என மக்கள் சிவில் உரிமைக் கழகம் கருதுகின்றது.

எனவே தமிழக அரசின் மேற்கண்ட அரசாணை (G.O. (Ms) NO.659) நாள் 12.9.2013) கண்டிக்கத்தக்கது. அதனை தமிழக அரசு உடனடியாக திரும்பப் பெற வேண்டும்.

- ச.பாலமுருகன், செயலர், மக்கள் சிவில் உரிமைக் கழகம், தமிழ்நாடு மற்றும் புதுவை

Pin It