‘தேசியம்’ என்ற கருத்தாக்கம் மேற்குலகில் முதலாளியச் சமூகம் உருவான பின்னணியில்தான் தோன்றியது என்று பொதுவாகச் சொல்லப்படுகிறது. ஆனால் தமிழ்நாட்டு வரலாற்றுச் சூழலில் இது வேறுவிதமாக அமைந்துள்ளது என்றே கருதத் தோன்றுகிறது. ‘வடவேங்கடம் தென்குமரி ஆயிடை தமிழ்கூறும் நல்லுலகம்’ என்று ஓர் எல்லையை வகுத்துக் கொண்டு, அந்த எல்லைக்குள் பேசப்பட்ட ஒரு மொழியைத் ‘தமிழ்’ மொழி என இலக்கணப்படுத்தி ஒழுங்குப்படுத்துவதன் மூலம் நிலைநிறுத்த முயலும் போதே பிறமொழி ஆதிக்கத்திலிருந்தும் தன்மொழியைப் பேணிப் பாதுகாத்துக் கொள்ளுகிற முயற்சியிலும் ஈடுபடுகிற தன்மையைப் பார்க்கிற போது இங்கே ‘தமிழ்த் தேசியம்’ என்ற கருத்தாக்கம் மிகப் பழமையானது எனச் சொல்லத் தோன்றுகிறது. தொடர்ந்து ஆக்ரமிப்பிற்கு இடையில் வாழ நேர்ந்த ஒரு மொழி பேசும் இனத்திற்குள் இது அடிப்படைத் தேவைகளுள் ஒன்றாகவும் இயங்கி உள்ளது என்றும் தமிழக வரலாற்றில் பார்க்க முடிகிறது.

 மார்க்சியத்திலிருந்து தமிழ்த் தேசிய கருத்தாக்கத்திற்குள் வந்தடைந்த ஞானி, கடந்த இருபது ஆண்டுகளுக்கும் மேலாகத் தமிழ்த் தேசியம் குறித்துப் பல்வேறு கோணத்தில் வகைவகையான உரையாடலைப் பெரிதும் நிகழ்த்திக் கொண்டிருப்பவராக விளங்குகிறார். அதன்பொருட்டுத் ‘தமிழ்நேயம்’ பத்திரிக்கையையும் நடத்தி வருகிறார். ‘மனிதர்களின் மனநிறைவான வாழ்விற்கு அவர்களின் தாய்மொழி வழியாக அமைந்த தேசிய வாழ்வு ஒரு சிறிதும் பங்கமில்லாமல் கட்டமைக்கப்பட வேண்டும். மனித விடுதலைக்கு இத அடிப்படை’ என்கிற சிந்தனையின் மேல் இயங்குகிறார். அடிப்படையில் அன்றும் இன்றும் மார்க்சியவாதியான ஞானி ‘தேசிய இனம்’ குறித்துத் தாய்மொழி அடிப்படையில் விளக்கம் தரும் ஸ்டாலின் வரையறைகளைப் பல இடங்களில் சொல்லிச் செல்லுகிறார். அவற்றை இந்த இடத்தில் நினைவுபடுத்திக் கொள்வதும் நல்லது.

1. தொடர்ந்து ஒரே மொழி பேசும் ஒரு மக்கள் கூட்டம்.
2. குறிப்பிட்ட எல்லைக்குட்பட்ட நிலப்பரப்பில் தொடர்ச்சியாக வாழும் மக்கள் கூட்டம்.
3. இதன் விளைவாக அவர்களுக்கே ஆன வரலாறு ஒன்று வந்தமைதல்.
4. இதன் தொடர்ச்சியாக அவர்களுடைய பண்பாட்டு அடிப்படையிலான உளவியல் தன்மைகள்.

இந்த நான்கு கூறுகளும் ‘ஒரு தேசிய இனம்’ என்கின்ற அடையாளம் உருவாகி நிலைபெற காரணமாகி விடுகின்றன. ஸ்டாலின் கூறும் இந்த விளக்கத்தின் அடிப்படையில் பார்த்தாலும், ஞானி ஓரிடத்தில் குறிப்பிடுவது போல,

“ஒரு தேசிய இனம் என்ற முறையில் தனக்கென ஒரு நாடு அமைத்துக் கொள்ளும் உரிமை கொண்டது தமிழ்த் தேசிய இனம்” (ஏன் வேண்டும் தமிழ்த் தேசியம், ப.34)

இவ்வாறு ஒரு தேசிய இனமாக குறிப்பிட்ட எல்லைக்குள் தன்க்கான ஒரு தேசத்தோடு வாழ்ந்த தமிழினம் இன்றைக்கு என்னவாகி இருக்கிறது? இதன் உட்பகையும் வெளிப்பகையும் இதன் ஆன்மாவை எவ்வாறெல்லாம் தின்று தீர்க்கின்றன? இந்த இனத்திற்கு எதிர்காலம் இருக்கிறதா? இதற்கு விடுதலை சாத்தியம்தானா? இனி நாம் என்ன செய்யப் போகிறோம்? நமக்கான வரலாற்றை எப்படி மீட்கப் போகிறோம்? இவ்வாறு ஞானியே கூறுவது போல ‘இருளில் துளாவுகிறவர்களாக வெளிச்சங்களுக்காக காத்திருப்பவர்களாக’ (தமிழியம், தமிழ்த் தேசியம் - ஞானியின் மெய்யியல் கட்டுரைகள் - 1, ப.51) நம்முடைய தமிழ்த்தேசியம் குறித்த மொழியாடல் பெரிதும் அமைந்து கிடக்கின்றது. அவற்றை இனி காணலாம்.

***

முதலில் தேசிய இனச்சிக்கல் என்பது தமிழினத்திற்கேயான தனியொரு பிரச்சனை இல்லை. அது எல்லா நாடுகளிலும், இந்தியாவிற்குள்ளே பல மாநிலங்களிலும் நெருப்பாய்க் கனன்று கொண்டு இருக்கிற ஒன்றுதான் என்பதை ஞானி திரும்பத் திரும்பச் சொல்லிக் கொண்டே போகிறார். “கனடாவிலிருந்து கியுபெக் மாநிலம் பிரிந்து செல்ல முயல்கிறது. ஸ்பெயினிலிருந்து காட்டலோனியா மாநிலம் பிரிவினை வேண்டுகிறது. பிரிட்டனிலிருந்து ஸ்காட்லாந்து தன்னாட்சி கோருகிறது. சோவியத் யூனியனிலிருந்து பல்வேறு தேசிய இனங்களும் பிரிந்து தனிநாடாகி விட்டன. இரசியக் குடியரசில் இருந்து பிரிய சச்சன்யா போராடுகிறது. செக்கோஸ்லேவியாவும் இரண்டு தேசங்களாகப் பிரிந்து விட்டன. சீனாவிலிருந்து திபெத் பிரிய விரும்புகிறது” இப்படிச் சொல்லிக் கொண்டே போகிற ஞானி,

“ஒன்றுக்கு மேற்பட்ட தேசிய இனங்களைக் கொண்ட தேசம் எதுவும் இனி அமைதியாக இருக்க முடியாது” (மெய்யியல் கட்டுரைகள் - 1, ப.203)

எனச் சொல்லி முடிக்கிறார். இந்தியாவிற்குள்ளும் “சிவசேனை” (இங்கே சொந்த மாநிலத்தவர்க்கே வேலை என்று சட்டம் இயற்றப்பட்டு விட்டது), கர்நாடக மாநிலத்தில் ‘கன்னட சேனை, தமிழ்நாட்டில் ‘தமிழர் பாதுகாப்புப் படை’, ‘தமிழ்த் தேசியப் பொதுடைமைக் கட்சி’, பஞ்சாபில் காளிஸ்தான் இயக்கம், காஷ்மீரின் விடுதலை இயக்கம், வடகிழக்கு மாநிலங்களில் உல்ஃபா, போடோ, அஸ்ஸாம் மாணவர் இயக்கம், நாகலாந்து விடுதலை இயக்கம், (தெலுங்கானா போராட்டம்) எனப் பல்வேறு தேசிய இனப் போராட்டங்கள் உருவாகிய வண்ணம் இருக்கின்றன.

 தமிழ்த் தேசிய இன வாழ்விற்கு எதிராக இருப்பவர்களை வெளிப்பகைவர்கள், உட்பகைவர்கள் என இரண்டாக வகுத்துக் கொள்ளலாம். வெளிப் பகைவர்களாக ஞானி முதலில் கருதுவது அதிகார மையமாக விளங்கும் மைய அரசைத்தான். மொழி வழியிலான மாநில அரசுகளின் கொஞ்ச நஞ்ச அதிகாரங்களையும் பிடுங்கித் தனக்குள் சுருட்டிக் கொள்ள எப்பொழுதும் முயன்ற வண்ணம் இருக்கிறது. நிதி ஆதாரங்களின் மையப்புள்ளியாக விளங்கும் மைய அரசிற்கு மாநிலங்களைப் பகடைக்காய் போலப் பயன்படுத்துவது மிக எளிய செயலாக இருக்கிறது. கூடவே இராணுவத்தையும் தேசியப் பாதுகாப்பு என்ற பெயரில் நாட்டின் வருமானத்தின் பெரும் பகுதியை அதிலே அள்ளிக் கொட்டிப் பெருக்கி வைத்துக் கொண்டுள்ளது. அடுத்தது உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் உள்ள ஏகபோக முதலாளித்துவம். முதலாளிகள் சுரண்டிச் செழித்து வளர, பல்வேறு தேசிய இனங்களை ஒடுக்கி உள்ளடக்கிய ‘இந்தியா’ போன்ற பெரும் எல்லைப் பரப்புள்ள ஒரு நாடு அவர்களுக்குத் தேவையாக இருக்கிறது. ஒவ்வொரு ஆண்டும் தங்கள் நிகர வருமானத்தைப் பன்மடங்குப் பெருக்கிக் கொண்டே போவதன் மூலம், அரசு அதிகாரத்தைத் தங்களின் எடுப்பார் கைப்பிள்ளையாகக் கையாளுவதில் அவர்களுக்கான சிரமம் குறைந்து கொண்டே போய் விடுகிறது. இவர்களுடன் அரசு ஊழியர்களையும், நாட்டின் நடுத்தர வர்க்கத்தினரையும் தேசிய இன வாழ்விற்கு எதிரானவர்களாக அடையாளம் காணுகிறார் ஞானி (மே.நூ.ப.202)

***

 உட்பகை என்று பார்த்தால் தமிழ்த் தேசிய இன வாழ்விற்கு முதல் தடையாக இருப்பது, தமிழின மக்களைப் பிரித்து வேரறுக்கும் இதன் சாதிய அமைப்புதான். கலப்புத் திருமணம், காதல் திருமணம், அகமண ஒழிப்பு, சீர்திருத்த திருமணம் முதலியவைகள் மூலமாகவும், வேலை வாய்ப்பில் இட ஒதுக்கீடு மூலமாகவும் தீண்டாமை ஒழிப்புச்சட்டம் மற்றும் பிரச்சாரங்கள் மூலமாகவும், இச்சாதி உணர்வை நீக்கிவிடலாமென்று முயற்சி செய்யப்பட்டது. ஆனால் நாட்டில் அரசியல்வாதிகள் - ஓட்டுவங்கிகளை நம்பும் மக்களாட்சி அரசியல்வாதிகள் - தேர்தல் வரும் போதெல்லாம் துருப்புச் சீட்டாகப் பயன்படுத்துவது இந்தச் சாதி உணர்வைத்தான். விடுதலைக்குப் பின்பு நடந்த முதல் பாராளுமன்ற தேர்தலிலேயே (1951) காங்கிரஸ் கட்சி, வட்டார ரீதியாக எந்தச் சாதி மேலோங்கி இருக்கிறது என்ற அடிப்படையிலேயே தனது தேர்தலுக்கான வேட்பாளர்களைத் தேர்வு செய்தது என்பது வரலாறு. கூடவே இந்த நாட்டின் மதம் சாதியைப் புனிதமாகக் கொண்டாடுகிறது. விளைவு, இந்த ஒன்றினாலேயே ஏறத்தாழ ஒரு நூற்றாண்டுக்கும் மேலாக ஞானி போல, “சாதிகளைக் கைவிடுவோம் தமிழராய் இணைந்திடுவோம்” என்று முழக்கமிட்டு முயற்சி செய்தும், ‘தமிழினம், தமிழ்த்தேசியம்’ என்கிற ஒன்றை இங்கே இன்னும் உருவாக்க முடியாத நிலையே நீடிக்கிறது. கூடவே மதத்தின் அடிப்படையில் “இந்துமதத் தேசியம்” என்கிற அரசியலும் இங்கே மேலெழுந்து, மத அடிப்படையிலும் தமிழின உணர்வு உருவாகி விடாமல் பார்த்துக் கொள்கிறது. இந்தச் சாதி அரசியல், இந்துமத அரசியல் முதலிய இன உணர்விற்கு எதிரான அரசியல் அனைத்திற்கும் “பார்ப்பனர்கள்தான்” காரணம் என்றும், அவர்களை அழித்துவிட்டால் எல்லாம் சரியாகி விடும் என்றும் ஒற்றைவாதம் பேசும் கருத்தாடலையும் ‘ஞானி’ ஏற்கத் தயாராக இல்லை. பார்ப்பனியம் எல்லாச் சாதியினருக்குள்ளேயும் பரவி ஆழமாக ஊடுருவித் தங்கி விட்டது என்கிறார். பிறகு தீர்வுதான் என்ன? ஞானி எழுதுகிறார்:-

“சோசலிசம் இங்குச் செயல்பட்டிருக்குமானால், தொழில் வளர்ச்சி இங்கு சேர்ந்து வேலை வாய்ப்புகள் பெருகியிருக்குமானால், சாதி என்ற பிசாசின் கோரத் தாண்டவம் எழுந்திருக்க முடியாது. துரமான கல்வி அனைவருக்கும் என்ற முறையில் தரப்பட்டிருக்குமானாலும் சாதியின் ஆதிக்கம் குறைந்திருக்குமென்று அறுதியிட்டு உறுதியாகச் சொல்லலாம்”. (மே.நூ.ப.198)

ஏறத்தாழ பத்தாண்டுகளுக்கு முன்பு (2003) எழுதிய கட்டுரைகயில் இப்படி எழுதியுள்ளார்:- இன்றைக்கு அந்த அளவிற்கு அறுதியிட்டு உறுதியாகக் கூறுவாரா என்பது எனக்கு ஐயமாகவே இருக்கிறது. ஏனென்றால் தமிழ்ச் சூழலில் ‘சாதியம்’ எந்த அளவிற்கு எளிமையாக விலகிக் கொள்ளக் கூடிய ஒன்றாகத் தெரியவில்லை. காரணம், அவரே சொல்வது போல இது இனக்குழச் சமுதாயத்தின் தொடர்ச்சியாக வருகிறது (மே.நூ.ப.199). இனக்குழுச் சமூகம் போலவே இன்றும் இது மோதிக் கொள்கிறது. வெட்டிச் சாய்த்துக் கொள்கிறது. அச்சமூகம் போலவே இது “தனது குழுவின் பெருமையை மேல்”, “மானத்தின் மேல்” இயங்கிக் கொண்டிருக்கிறது. இந்தப் “பெருமையைத் தள்ளிவிட்டு, அந்த இடத்தில் “தமிழ்ப் பெருமையைப்” பொருத்துவதென்பது தமிழ்இனத் தேசிய அரசியலின் முன்நிற்கும் மிகப்பெரிய சவாலெனப் படுகிறது. இதனாலேயே இங்கே தோன்றிய தமிழ்த் தேசிய இயக்கங்களான “நாம் தமிழர் இயக்கம்”, “தமிழரசுக் கழகம்”, “தமிழ்த் தேசிய பொதுவுடைமைக் கட்சி” முதலியன பலவும் வளர்வதற்கு வாய்ப்பிழந்து போய்விட்டன எனக் கருதலாம்.

***

 தமிழ்த் தேசியம் என்பது அடிப்படையில் “தமிழ்மொழி என்ற ஒன்றிலிருந்து உருவானது. ஆனால் சாதி, மதம் என்பவை அந்தத் தமிழ்மொழி பேசுபவர்களுக்குள் இருந்து, இந்த மனித வாழ்வை வாழ்ந்து தீர வேண்டிய நெருக்கடியில் பிறந்தவை. எனவே சாதி, மதம் பற்றிய புனைவுகள், ஒரு தேசிய இனத்திற்குள்ளே எழுப்பும் சமூகப் பிரச்சனைகளாகத்தான் கருதித் தீர்க்கப்பட வேண்டுமேயொழிய, அவற்றையே அரசியல் இயக்கமாக முன்னிறுத்தி, அரசியல் அதிகாரத்தை அவற்றின் மேல் கட்ட முயல்வது அந்தத் தேசிய இனத்தின் அழிவிற்குத்தான் இட்டுச் செல்லும். ‘நண்டு வலைக்குள் எது கிழக்கு எது மேற்கு’ என்று மோதிச் சிதைகிற நிலைதான் ஏற்படும். எனவே தேசிய இனப் பிரச்சனைகளுக்கு முதன்மை கொடுத்துப் பெருவாரி மக்களைத் திரட்டத் தென்படுகிற ஒரு வழியாக, அந்தத் தேசிய இன மக்களின் மொழி குறித்த உணர்வுதான் தென்படுகிறது. எனவே ஞானி ‘தமிழ்மொழி’ குறித்த உணர்வை மக்களிடம் வளர்த்தெடுக்க முயல வேண்டும் என்கிறார்.

இந்த முயற்சியில் கவனமாக மேற்கொள்ள வேண்டிய ஒன்று, இந்தத் தமிழ் உணர்வையும், அதன் பெருமையையும் வாயளவில் சொல்லாடி, அதையும் தங்களின் பிழைப்பு அரசியலுக்குப் பயன்படுத்திக் கொண்டிருக்கும் தீயசக்திகளிடமிருந்து இந்தத் தமிழ் உணர்வை மீட்கிற வேலையாகும். தமிழுக்கு எதிரான இந்தத் தீயசக்திகளை ஞானி ஆதிக்க அரசியல்வாதிகளிடம் மட்டும் அடையாளம் காணவில்லை. தமிழைத் தங்கள் பணம் தேடும் புத்திக்குப் பயன்படுத்தும் படைப்பாளிகள், பதிப்பாளர்கள், பத்திரிக்கையாளர்கள், பரிசு, பாராட்டுக்களைத் தேடித் தங்களைத் தாழ்த்திக் கொள்பவர்கள், கவியரங்கு, பட்டிமன்றம், கோவில் திருவிழா என்று தமிழை மலினப்படுத்துபவர்கள், பல்கலைக்கழகத் தமிழ்த்துறைகள், தமிழாய்வு நிறுவனங்கள் என்று தமிழுக்கு எதிரான தீயசக்திகளைப் பலவற்றிலும் அடையாளம் காணுகிறார். இவர்களிடம் இருந்தெல்லாம் தமிழை மீட்கும் போதுதான் உண்மையான தமிழ் உணர்வும், தமிழ்;த் தேசிய உணர்வும் ஊற்றெடுக்க வாய்ப்புகள் ஏற்படும்.

 இவ்வாறு தீயசக்திகளை அடையாளம் காணும் ஞானி, தமிழ் உணர்வை ஊட்டி வளர்க்கப் பாரதிதாசனிடம் செல்லுமாறு வழிகாட்டுகிறார். இந்த இடத்தில் அவர் எழுத்தை அப்படியே தருவது பொருத்தமாக இருக்குமெனப் படுகிறது.

‘பாரதிதாசன் அவர்களைப் பொறுத்தவரை தமிழ் என்றால் காதல் மற்றும் வீரம். தமிழ் என்றால் அன்பு, அறிவு, ஆண்மை, பெண்மை, தாய்மை. துமிழ் என்றால் அழகு, கலை, இயற்கை. தமிழ் என்றால் நாடு, நிலம், தமிழ் ஆட்சி. துமிழ் என்றால் தவம், விடுதலை. இப்படித் தமிழுக்கு நாறு பொருள் கண்டவர் பாரதிதாசன்… பாரதிதாசனுக்குள் தமிழ் உணர்வின் திரட்சியை, உச்சத்தைக் காண்கிறோம்.

பாரதிதாசன் அவர்களுக்குள் இருந்த தமிழ் உணர்வை நமக்குள்ளும் திரட்டிக் கொள்ள வேண்டும். நமக்குள்ளிலிருந்து எழுப்பிக் கொள்ள வேண்டும்’. (மே.நூ.ப.39)

இவ்வாறு தமிழ்த் தேசிய உணர்வை, தமிழர்களின் இதயத்தில் கொண்டு போய்ப் பொருத்துவதற்கு மொழி உணர்வை வளர்த்தெடுக்க வேண்டும் என்று ஞானி சொல்லும் போது, தமிழுக்கு எதிரக வந்த இந்திக்கு எதிரான (1965-ஆம் ஆண்டு) போராட்டக் காலத்தில் தமிழ் நிலத்தில் நிலவிய தமிழ் உணர்வையும் தமிழ்த் தேசிய உணர்வின் பெருக்கத்தையும் நினைத்துப் பார்த்தால் அவருடைய வாதத்திலுள்ள வலுவை அறியமுடியும். மேலும் ‘மனிதர் என்பவர் அவரது மொழியைத் தவிர வேறில்லை. ‘உண்மை’ என்பதே மொழியை யார் கைப்பற்றி வைத்திருக்கிறார்களோ அவர்கள் கட்டமைப்பதுதான்’ என்கிற புரிதல்கள் எல்லாம் நிகழ்ந்திருக்கிற நமது காலகட்டத்தில் மொழி உணர்வின் அருமை மேலும் கூடுதலாக நமக்குப் பிடிபடுகிறது.

***

 மொழி உணர்வை வளர்க்கத் தனித்தமிழ் இயக்கம் வேண்டும் ஆரிய எதிர்ப்பு தேவை இல்லை. (ப.313) அதைவிட ஆங்கில மொழி எதிர்ப்பு வேண்டும் என்றெல்லாம் பேசும் ஞானி, மிகவும் இன்றியமையாத ஒரு கருத்தாக்கத்தை முன்மொழிகிறார். காரல் மார்க்ஸின் மருமகனாக அறியப்படும் லபார்க்கே என்ற பிரெஞ்சு மார்க்சிய அறிஞர் சிந்தனையில் வெளிப்பட்டுள்ள அன்றாட மார்க்சியம் என்ற ஒன்றைக் குறித்துப் பேசுகிறார்:-

“உலகளவில் வல்லரசு அதன் போக்கு முதலியவற்றை அழித்தொழிக்க வேண்டுமென்பது பேருருவ அரசியல். இது போதாது. வல்லரசியமோ முதலாளியமோ நம் அன்றாட வாழ்வியலுக்குள்ளும் ஊடுருவி நம்மை வசப்படுத்தி வைத்திருப்பதன் மூலமே அவை நமக்குள் வெற்றி பெறுகின்றன என்று சொல்லுவது அன்றாட மார்க்சியம்” (மே.நூ.ப.205)

என அக்கருத்தாக்கத்தை விளக்குகிறார் ஞானி. ஆளும் அதிகார சக்திகள், மக்களுக்கு எதிரானவைகளை, அந்த மக்களின் சம்மதத்தோடு ஆனால் அவர்களுக்குத் தெரியாமலேயே அவர்கள் அதை எல்லாம் செய்து கொண்டிருக்கும் படி உச்சகட்ட தந்திரத்தோடு இயங்கக் கூடிய ஒன்று. எனவே ஒவ்வொரு கணமும் நம்மை நாம் விழிப்பாக வைத்துக் கொண்டு நம்மை பேணிக் கொள்வது என்பது பெரிய சவாலாக இருக்கிறது. எனவேதான் சமூக வெளியில் பெரிய பெரிய இயக்கங்களைக் கட்டமைத்துப் போராடுகிற அதே வேளையில், நமது சிக்கலான மனவெளியிலேயும் பெரிய பெரிய வேலைகளை நிகழ்த்திக் காட்ட வேண்டிய தேவை இருக்கிறது என்பதை ஞானி, தனது எழுத்து முழுவதிலும் தொடர்ந்து வலியுறுத்துபவராக இயங்குகிறார். இப்படி எழுதுகிறார்:-

“நாம் ஒவ்வொரு நாளும் என்ன உணவு உட் கொள்கிறோம்? என்ன உடை களிக்கிறோம்? நமது நம் குழந்தைகளுக்கு எந்த மொழியைக் கற்பிக்கிறோம்? நமது பொழுதுபோக்கு என்ன? நமது திருமண முறை என்ன? எந்த வகை மருந்துகளை நாம் பயன்படுத்துகிறோம்? பெண்களோடு நமது உறவு எப்படி? நமது வீட்டின் அமைப்பு என்ன? நாம் தேர்ந்தெடுக்கும் போக்குவரத்துச் சாதனங்களின் தன்மை என்ன? நாம் எங்கெல்லாம் பயணம் செய்கிறோம்? நமக்கு மேல் உள்ளவர்களோடு அல்லது கீழ் உள்ளவர்களோடு நாம் கொள்ளும் உறவு என்ன? நாம் படிக்கும் பத்திரிகை எது? நாம் கற்ற கல்வி எது? நாம் பயன்படுத்தும் கருவிகள் எத்தகையவை?” (மே.நூ.ப.205)

இவ்வாறு ஒவ்வொரு நாளும் நூறு கேள்விகளோடு கவனமாக இயங்க வேண்டும். இந்தக் கேள்விகளுக்கான பதிலில் தெரிந்து விடும். உண்ணும் உணவு, இருக்கும் இடம், உடுத்தும் உடை, கற்கும் கல்வி, பேசும் மொழி, நோய்க்கான மருந்து, வாசிப்பதற்கான பத்திரிக்கை, வாழ்வதற்கான மனித உறவு முதலிய அனைத்திலும் நாம் நம்மை அறியாமலேயே எப்படி ஆதிக்க வர்க்கத்தினரின் மற்றும் ஆதிக்க தேசிய இனவாதிகளின் பிடிக்குள் சிக்கிக் கிடக்கிறோம் என்கிற தெளிவு. இந்தத் தெளிவு இல்லாததனால்தான் இந்தியாவில் 90% மக்கள் முட்டாளாக இருக்கிறார்கள் என்கிறார் நீதிபதி என்றால், எனவே ஞானி சொல்லுகிறார் இப்பொழுது நமக்குத் தேவை அன்றாடத் தமிழ்த் தேசியம்.

***

தமிழ்த் தேசியம் குறித்த பிரச்சனை இன்றைய சந்தைப் பொருளாதாரம், உலகமயமாதல் சூழலில் புதிய பல பரிமாணங்களைப் பெற்றுள்ளது. பெரும்பெரும் பன்னாட்டு வணிகக் குழுக்களின் கொள்ளைக் காடாகத் தமிழ் நிலமும், மனித வளமும், கனிம வளங்களும் மாறியுள்ளன. இந்தச் சூழலில் உலக அரசியலையும் நடக்கிற நிகழ்வுகளையும் வலிகளோடு உற்று நோக்கும் போது “தேசியம்” மட்டுமே இக்காலகட்டத்து மூன்றாம் உலக மனிதர்களுக்கான அரசியல் உண்மையாக விளங்க முடியும். இந்த ‘உண்மையை’ உணர்ந்து ஒன்று திரளாத எந்தவொரு தேசிய இனமும் எதிர்காலத்தில் அடையாளமே இல்லாமல் போவதற்கான சாத்தியப்பாடுகள் பன்மடங்கு கூடியுள்ளன. இதை ஞானி இவ்வாறு வலியுறுத்துகிறார்:-

‘அண்மைக் காலத்தில் நேர்ந்த சில நெருக்கடிகள் தமிழினத்தை ஒட்டுமொத்தமாக ஹவரலாற்றிலிருந்து வெளியேற்றக் கூடியனவாகத் தெரிகின்றன. சந்தைப் பொருளாதாரம் என்ற பெயரில் தமிழ் மக்களின் நிலம், காடுகள், கடல் வளம் முதலியவை அன்னியர்களிடம் ஒப்படைக்கப்படுகின்றன. ஆறுகளும் பிற நீர் நிலைகளும் நச்சுப்படுத்தப்படுகின்றன… முதலாளிகள் அரசியல்வாதிகள் மட்டுமல்லாமல் மத்திதர வர்க்கத்தினர் அனைவரும் நுகர்வெறிக்கு ஆளாகியுள்ளனர். அன்னியப் பொருட்களின் மீது மோகம் அதிகரிக்கிறது. (குறிப்பாக ஆங்கில மொழி மீது என்பதையும் சேர்க்க வேண்டும் - பஞ்சு) தமிழ் மொழிக்கு மதிப்பில்லை. தமிழ் உணர்வு மதிக்கப்படுவதில்லை. தமிழ்நாட்டின் இயற்கை அழிந்த பிறகு தமிழர்களுக்கு வாழ்வில்லை என்ற உண்மை இங்கு உரைக்கவில்லை’ (மே.நூ.பக்.50-51)

இவ்வாறு தமிழ்த் தேசியத்தைச் சூழலியல் உணர்வோடும் ஞானி அணுகியிருப்பது நமது காலகட்டத்தில் குறிப்பிடத்தக்க ஒன்று. ஒரு மொழி அழியும் போது ஒரு தேசிய இனம் அழிகிறது என்பது எந்த அளவிற்கு உண்மையோ அதே அளவிற்குத் தொல்காப்பியரால் முதற் கருப்பொருள் எனப்படும் நிலமும் பொழுதும் உணவும் விலங்குகளும் மரங்களும் பூக்களும் பறவைகளும் நீர்நிலைகளும் தொழில்களும் கலைகளும் தெய்வங்களும் அழிக்கப்படும்போதும் அந்த இனம் அழிவை நோக்கித்தான் போகிறது என்றுதான் பொருள். ஞானி மிகச் சரியாக முன் வைக்கிறார்.

***

 இவ்வாறு நவீன முதலாளித்துவத்தின் ஆதிக்கத்தை இன்று தேசிய இன எழுச்சியின் மூலமே எதிர்கொள்ள முடியும் (மே.நூ.ப.165) என்கிற ஞானி, அந்தத் தேசிய எழுச்சிக்கு வேண்டிய மெய்யியல் என்ன என்பதை நோக்கியும் சிந்தித்துள்ளார். அடிப்படையில் மார்க்சியவாதி என்பதனால் எந்தவொரு இயக்கமும் தனக்கானத் தத்துவப் பின்னணியின் மேல் இயங்க வேண்டும், அப்படித் தத்துவத்தை முதன்மைப் படுத்தாத இயக்கம் இறுதியில் அதுவுமொரு ஆதிக்க அரசியலுக்கு இடம் கொடுத்துவிட்ட ஒன்றாகத்தான் போய் முடியும் என்கிறார் (மே.நூ.ப.167). சரி! தமிழ்த் தேசிய இன எழுச்சிக்கான மெய்யியல் புலம் என்னவாக இருக்க முடியும்? சித்தர் மெய்யியல் அசலான தமிழ் மெய்யியல். இது கணியன் பூங்குன்றனார் தொடங்கி இன்று ஜெயகாந்தன் வரை தமிழ் வரலாறு நெடுகிலும் வேரோடி உள்ளது. எனவே சித்தர் மெய்யியல்தான் தமிழ்த் தேசிய இயக்கத்தின் மெய்யியலாகn இருக்க முடியும் என்கிறார். கூடவே இன்றைய சூழலில் பெரியாரியம், மார்க்சியம், அம்பேத்காரியம் ஆகியவை இயைந்து ஒரு முனையில் குவிந்து தமிழ்த் தேசிய இயக்கத்திற்கான தத்துவப் பின்புலமாக இயங்க முடியும் எனக் கருதுகிறார். இப்படிக் கருதுவதற்கான அடிப்படை என்ன என்று பார்த்தால், இத்தகைய தத்துவப் பின்புலத்தில் தமிழ்த் தேசியம் - தமிழ்நாடு – அமைந்தால்தான் இங்கே உழைக்கும் பெருவாரி மக்களுக்கான தேசியம் மலருமென நம்புகிறார். எனவேதான் இப்படி எழுதுகிறார்:-

“வாழ்க்கையில் என்னதான் இந்த மக்கள் தாழ்ந்திருந்தாலும் இவர்கள்தான் அசலான தமிழர்கள். உழவர்களாகவும் கைவினைஞர்களாகவும் கலைஞர்களாகவும் உழைக்கும் இவர்களைக் கொண்டுதான் தமிழ் வரலாறு, தமிழ் அரசியல் முதலியன இயங்குகின்றன. இவர்களுக்குத்தான் முதல் உரிமை உடையது இந்தத் தமிழ்த் தேசம்” (மே.நூ.ப.211)

இவ்வாறு தமிழ்த் தேசிய இன உணர்வைக் கட்டமைக்கும் போதே அதற்கான மெய்யியலையும் பழந்தமிழ் வாழ்விலிருந்தே மீட்டுருவாக்கம் செய்து கொள்ள வேண்டும் என்ற முக்கியமான ஒரு கருத்தை முன் வைக்கிறார்.

***

 தமிழ்த் தேசியம் பேசும் போது இதற்கே உரிய தனிச் சிறப்பான ஒரு சிக்கல் இருக்கிறது. “திராவிடத்தால் வீழ்ந்தோம்” என்று குணா எழுப்பிய சிக்கல்தான் அது. பல்வேறு போராட்டங்களுக்குப் பிறகு 1956-இல் மொழிவாரி மாநிலம் பிரிக்கப்பட்ட போது, தென்னிந்தியாவைப் பொருத்தவரை மலையாளிகளுக்குக் கன்னடர்களுக்குத் தெலுங்கர்களுக்கு முறையே திருவனந்தபுரம், பெங்களூரு, ஐதரபாத் ஆகிய தலைநகரங்களோடு கூடிய தனித்தனி மாநிலம் கிடைத்தது. ஆனால் தமிழர்களுக்குக் கிடைத்ததா? இல்லை என்பதுதான் யதார்த்தம்.

இன்றுவரை சென்னை மாகாணம் என்று அன்று பிரிக்கப்படாத நாளில் அழைக்கப்பட்டது போலவே, எல்லோருக்குமான மாகாணமாகவே ‘தமிழ்நாடு’ இருக்கிறது. எல்லோருக்கும் என்று நால்வரையும் சேர்த்துக் கூடச் சொல்லமுடியாதபடி, தமிழர்களை விடுத்த மற்ற மூன்று மாநிலத்தவர்களுக்கான கூடுதலொரு மாநிலமாகவே தமிழ்நாடு இருக்கிறது. இந்நிலையில் தமிழ்நாடு தமிழருக்கே என்று பேச வேண்டிய நெருக்கடி இன்னும் அடர்த்தியாகத் தேவைப்படுகிறது. இதற்குப் பெரிய புள்ளி விவரங்கள் தேவையில்லை. விடுதலைக்குப் பிறகு தமிழ் மாநிலத்தை ஆண்டவர்கள் யார் யார்? மற்ற மாநிலத்தில் இப்படி நடந்துள்ளதா? ஏன் நடக்கவில்லை? என்பதற்கான பதில்களே போதும். மேலும் தந்தை பெரியார் தமிழ்நாட்டில் நீதிபதி உட்பட உயர் பதவிகளில் பார்ப்பனர்கள் வகித்த எண்ணிக்கையைக் கணக்கிட்டது போல, பிறமொழியாளர்கள் வகித்த எண்ணிக்கையைக் கணக்கிட்டால் தெரியும், தமிழ்நாடு, தமிழ்மக்கள் கைக்குள் இல்லை என்கிற உண்மை. ம.பொ.சி.யின் ‘தமிழகத்தில் பிறமொழியினர்’ என்ற நூல் சிறந்ததொரு சான்று.

 இந்நிலையில் தமிழ்நாட்டில் தமிழ்த் தேசிய உணர்வை எப்படி முன்னெடுப்பது? குணா, பெ.மணியரசன் போன்றவர்கள் இப்பிறமொழியாளர்கள்தான் தமிழ்த் தேசிய உணர்விற்குப் பெருந்தடையாக இருக்கிறார்கள். எனவே இவர்களைத் தமிழகத்தை விட்டு வெளியேற்ற வேண்டும். அல்லது முதலில் இவர்களின் ஆதிக்கப்பிடியிலிருந்து தமிழகத்தை மீட்க வேண்டும். அதற்குப் பிறகே தமிழ்த் தேசியத்தை முன்னெடுக்க முடியும் என்றொரு முக்கியமான அதே நேரத்தில் மிகவும் சிக்கலான கருத்தாடலை முன்வைக்கிறார்கள். ஞானி இந்த இடத்தில் குணா கூறுகிற வரலாற்று உண்மைகளை ஏற்றுக் கொள்ளுகிறார். ஆவைகளை மறுக்க இயலாது என்கிறார். அதேநேரத்தில் அந்தப் பிறமொழியாளர்களைத் தமிழர்களாகவே நாம் ஏற்க வேண்டும். காரணம், அவர்கள் பல்லாண்டு இந்த நிலத்தோடும் மொழியோடும் கலை இலக்கியங்களோடும் மனிதர்களோடும் ஒட்டி உறவாடி வாழ்ந்து விட்டார்கள்.

மற்றொன்றையும் குறிப்பாகச் சுட்டி எச்சரிக்கிறார் ஞானி. அண்மைக் காலத்தில் தமிழ்த் தேசிய அரசியலுக்கு எதிராக அவர்களைத் தெலுங்கர்களாக, கன்னடர்களாக உணர வைக்கும் முயற்சிகளும் நடைபெறுகின்றன. அவர்களும் அதை நோக்கிப் போய்க் கொண்டிருக்கிறார்கள். இதை எப்படி எதிர்கொள்வது? ஞானி இதை மிகவும் எளிமைப்படுத்தி, பல்லாண்டு இங்கு வாழ்ந்து கொண்டிருக்கும் அந்தத் தெலுங்கர்களும் கன்னடர்களும் “நாங்கள் தமிழர்கள்”, எங்களை மீண்டும் கன்னடர் ஆக்க வேண்டாம், தெலுங்கர் ஆகக் வேண்டாம்” என்று குரல் கொடுக்க வேண்டுமாம். தமிழகத்தில் மேலும் ஒரு தெலுங்கு தேசத்தை உருவாக்க முயற்சி வேண்டாம் என்று இவர்கள் சொல்ல வேண்டுமாம் (ப.148). ஞானி சில இடங்களில் இப்படி குழந்தை போல ஒரு கற்பனாவாதியாக நிலத்தில் காலூன்றாமல் பறப்பதைப் பார்க்க நேர்வது நமக்குப் புதிதல்ல. ஆனால் பிரச்சனை இருக்கிறது. தமிழ்த் தேசிய உணர்வைக் கட்டமைக்க இதை மேலெடுத்துப் பேச வேண்டியது இருக்கிறது. வேறு வழியில்லை. விளைவு என்னவாக இருந்தாலும் என்றே நான் கருதுகிறேன்.

‘பிறமொழியாளர் ஆதிக்கம்’ என்ற அரசியலை முன்னெடுக்காமல் தமிழ்த் தேசிய உணர்வை ஒரு சிறிதும் மேலெடுத்துச் செல்ல முடியாது என்றே நான் கருதுகிறேன். தமிழ்த் தேசிய உணர்வை முளைக்க விடாமல் சீரழிக்கும் மிகப்பெரிய ஆதிக்க அரசியல் சக்திகளாக நான் அவர்களைக் கருதுகிறேன். வங்காளிகளின் பேரின ஆதிக்கத்திற்கு முன்னால் கிழக்கு இந்திய மாகாணங்களில் அஸ்ஸாம் போன்ற மாநில மக்களின் வாழ்வும் பண்பாடும் எப்படி ஆதிக்கத்திற்கு உள்ளாகியிருந்ததோ அதே மாதிரிதான் தமிழ் மாநிலமும் பிறமொழியாளர்களின் ஆதிக்கப்பூமியாகத்தான் உள்ளது. அஸ்ஸாம் மாநிலப் பொதுமக்கள், மாணவர்கள் முதலியோர் வங்காளிகளின் ஆதிக்கத்தை உணர்ந்து கொண்டிருக்கிற அளவிற்கு இங்கே தமிழர்கள் பிறமொழியாளர்களின் ஆதிக்கத்தை உணர்ந்திருக்கிறார்களா? என்பது சந்தேகமே! தமிழ்ச் சினிமாவின் வரலாற்றைப் புரட்டினாலே போதும், இவர்கள் எத்தகைய அடர்த்தியான கும்மிருட்டில் கண் புதைத்துக் கிடக்கிறார்கள் என்பதைப் புரிந்து கொள்ள. ஞானி இந்தப் பிரச்சனையில் இன்னும் ஆழமாக, விரிவாகப் பயணித்திருக்க வேண்டும் எனச் சொல்லத் தோன்றுகிறது.

***

 இவ்வாறு தமிழ்த் தேசியத்தைக் கட்டமைக்க வேண்டிய தேவை குறித்தும், எதிர்கொள்ள வேண்டிய சவால்கள் குறித்தும், பல்வேறு கோணத்தில் உரையாடும் ஞானி, தமிழ்த் தேசியத்தின் அரசியல் முழக்கம், எப்படி இருக்க வேண்டும் என்ற சிக்கலையும் பலவாறு பல இடங்களில் பேசுகிறார். தனிநாடா? சுயநிர்ணய உரிமையோடு கூடிய கூட்டாட்சியா? நாம் எதை முன்னிறுத்துவது? சுய நிர்ணய உரிமை என்ற சொல்லுக்குப் பதிலியாக ‘தன்னுரிமை’ என்ற சொல்லைக் கையாள விரும்பும் ஞானி, அதை இப்படி விளக்குகிறார்:-

“மக்கள் தம் ஆக்கத்திற்கான அரசியல், பொருளியல், வேளாண்மை, கல்வி, மருத்துவம் முதலியவற்றைத் தாமே நிர்ணயித்துக் கொள்ள வேண்டும்… மக்கள் என்று குறிப்பிடும் போது உழைக்கும் மக்களைத்தான் முதன்மையாக நாம் பொருள் படுத்துகிறோம்”.

என்று சுயநிர்ணய உரிமையை விளக்கி விட்டு, இன்றைக்குத் தமிழ்த் தேசியம் பேசுபவர்கள் அனைவரும் ஒரே குரலில், எப்பொழுதும் விரும்பினால் எந்தவொரு இந்தியத் தேசிய இனமும் பிரிந்து செல்ல உரிமையோடு கூடிய கூட்டாட்சியை நோக்கி ஒலிக்க வேண்டும். அதற்கான சட்ட திருத்தங்களை மேற்கொள்ளுமாறு முயற்சி எடுக்க வேண்டும். இப்போதைக்கு இதுதான் சாத்தியமென்று ஒரு போராட்ட உத்திமுறையை முன்வைக்கிறார்:-

“ஒரே அடியாக விடுதலை இன்றைக்குச் சாத்தியமில்லை. சுயநிர்ணய உரிமை என்ற முறையில் எல்லாத் தேசிய இனங்களினுள்ளும் மக்களைப் பெருமளவு திரட்டுவதுதான் இன்றைய முதற் கடமையாக இருக்க முடியும்” (மே.நூ.ப.169)

இந்தியாவின் அரசியல் அமைப்புச் சட்டம் மறு ஆய்வுக்கு உட்படுத்தப்படுகிற சூழல் உருவாகியுள்ள நிலையில் அதை நாம் பயன்படுத்திச் சுயநிர்ணய உரிமையை வலியுறுத்தி, ‘கூட்டாட்சி முறைக்கு’ இந்திய அரசியல் சட்டத்தை மாற்ற வேண்டும் என்கிறார். ஆயுதப் போராட்டங்களுக்குக்கான வாய்ப்பு இல்லாத நிலையில் (ப.169) தமிழ் மக்களைத் திரட்ட இதுதான் சிறந்த வழிமுறை என்கிறார். இப்படி ஒரு பத்தாண்டுக்கேனும் செயல்பட்டால் ஒழிய விடுதலை பற்றிப் பேசுவது பொருள் இல்லை’ (மே.நூ.ப.169) என்கிறார். மக்களைத் திரட்ட கிராமப்புறங்களுக்குச் செல்லுங்கள் என்கிறார். நகரங்கள் நம்மைப் பாழ்படுத்துபவை. ‘தமிழ்த் தேசியம்’ என்று சொல்லி, ஒன்று கூடுவதற்குப் பதிலாக, அதே பெயரில் பல திசைகளுக்குள் சென்று முரண்பாடுகளை வளர்த்துக் கொண்டு மோதிக் கொள்வதில் அர்த்தமில்லை என்றும் சுட்டிக் காட்டுகிறார். (ப.170)

***

 ஈழப் போராட்டத்தின் எழுச்சி, இந்தியாவிலும் தமிழ்த் தேசியம் குறித்த குரல் மீண்டும் உரத்து ஒலிக்கத் தொடங்கியுள்ளது. இதற்கு ஈழத் தமிழர்களுக்குத் தமிழ் மக்கள் நன்றி சொல்ல வேண்டும் (ப.176) என்று ஈழப் போராட்டம் நடந்து கொண்டிருந்த போது எழுதிய ஞானி இந்தியர் உட்படப் பன்னாட்டு அரசியல் தலைவர்களின் சூழ்ச்சியால் அது மிகக் கொடூரமான முறையில் வீழ்த்தப்பட்ட சூழலில் மிகவும் நம்பிக்கை இழந்த குரலில் தமிழ்த் தேசியம் குறித்துப் பேசுகிறார் இப்படி:-

 தமிழ்த் தேசியம் என்று ஐம்பது ஆண்டுகளுக்கு மேலாக நாம் பேசி வந்த போதிலும் இக்கொள்கை பற்றிய உறுதியான தெளிவு நம்மிடையே இல்லை.

 காஷ்மீர் பற்றி, வடகிழக்கு மாநிலங்களில் நடைபெறும் விடுதலைப் போராட்டங்கள் பற்றி நமக்கு அக்கறையில்லை.

 காவிரி, முல்லைப் பெரியாறு இல்லாமல் நமக்கு முடியாது என்பதில் நமக்கு உறுதியில்லை.

 மொழிவாரி மாநிலப் பிரிவினையின் போது நாம் இழந்த பகுதிகளை மீட்கும் திட்டம் நமக்கு இல்லை.

 பன்னாட்டு நிறுவனங்களுக்கு நமது வளங்களைத் தாரை வார்க்கும் மைய, மாநில அரசியல்வாதிகள் மீது நமக்கு ஆத்திரம் ஏற்படவில்லை.

 இந்திக்கு எதிராக ஆங்கிலத்தை நிறுத்தித் தமிழை முழுமையாக நாமே கைகழுவ வேண்டிய நிலைக்கு நம்மை ஆளாக்கிய முதலாளிய கொள்ளையருக்கு எதிராக நாம் போர்க்குரல் எழுப்பவில்லை.

 தமிழ்த் தேசியம் பற்றிப் பேசும் தமிழ் உணர்வாளர்களும், தங்களுக்கு வந்து வாய்த்த வாழ்க்கை வசதிகளை இழக்கத் தயாராக இல்லை. அச்சம் காரணமாகத் தம்மைத் தாமே ஏமாற்றிக் கொண்டிருக்கிறார்கள்.

 தமிழ்த் தேசியம் என்பதன் பல்வேறு பரிமாணங்களை ஒன்றிணைத்துப் பார்க்கின்ற கோட்பாட்டுத் தெளிவு இல்லை.

 இன்றைய உலக அரசியல் பற்றிய பார்வை இல்லை. அதாவது உலக அரசியலில் நிகழ்ந்துள்ள புதிய புதிய மாற்றங்களைக் குறித்த விழிப்புணர்வு இல்லை.

 மார்க்சியம் பற்றிய புரிதல் தமிழ்த் தேசியவாதிகளிடம் இல்லை.

 தேசிய இன விடுதலை என்று எங்குக் குரல் எழுந்தாலும் அதைப் ‘பயங்கரவாதம்’ என்று தலைப்பிட்டு ஒடுக்குவதில் உலகளவிலான பொருளியல் ஆதிக்கங்கள் ஒன்றுபடுகின்றன. இத்தகைய ஆதிக்கங்களின் கைப்பாவையாகி விட்டது ஐ.நா.வும்.

 தமிழ்த் தேசியத்திற்குக் குழி தோண்டும் கட்சிகளும் முதலாளிகளும் அந்நியர்களும் தமிழகத்திற்குள்ளேயே இந்திய அரசின் பாதுகாப்போடு பத்திரமாக உள்ளன.

 ஈழத் தமிழகம் இனியும் மீண்டும் விழித்து எழ வாய்ப்புக்கள் நேரலாம். ஆனால் இந்தியத் தமிழர்களுக்கு இத்தகைய வாய்ப்புகளுக்கு வழி இல்லை. (ஏன் வேண்டும் தமிழ்த் தேசியம், பக்.60-62)

இப்படிப் பேசுகிறார் ஞானி. “வரலாறு நம் விடுதலைக்கான வாய்ப்பை வழங்குமா?” – என்று விதியின் மேல் பாரத்தைப் போடுவது போல வரலாற்றின் மேல் பாரத்தைப் போட்டு அமைதி அடைகிறார். ஆனாலும் நம் குறைகளை சுட்டிக் காட்டுகிற பாணியில் நாம் தமிழ்த் தேசியத்தைக் கட்டமைக்க இனி என்னென்ன செய்ய வேண்டும் என்றும் சொல்ல முயலுகிறார். அதன் மூலம் மிகத் தூரத்தில் தெரியும் மிகச் சின்ன ஒரு நம்பிக்கை ஒளியோடுதான் அவரது ‘தமிழ்த்தேசியம்’ குறித்த பார்வை இருப்பதாக எனக்குப் படுகிறது. காரணம் ஞானி, அடிப்படையில் ஒரு மார்க்சியவாதி.

- பேராசிரியர் க.பஞ்சாங்கம்

அடிக்குறிப்பு:

1.கூட்டாட்சி என்பதை ஞானி இப்படி விளக்குகிறார்:-

இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தில் கூட்டாட்சி என்ற கோட்பாடு இடம்பெறவில்லை. அரசியல் அமைப்புச் சட்டமன்றத்தில் தொடக்கத்தில் கூட்டாட்சி பற்றிச் சில நம்பிக்கைகள் எழுந்த போதிலும் இறுதி வடிவில் கூட்டாட்சி என்பது ஒதுக்கப்பட்டது. கூட்டாட்சி என்ற அமைப்பில் மாநிலங்கள் என்பவை தனிக் கொடியோடும், தனி அரசியல் அமைப்புச் சட்டத்தோடும் ஏற்றுக்கொள்ளப்பட்டிருக்கும். மொழி என்ற அடிப்படையில் அமைந்த தேசிய இனங்கள் கூட்டாட்சியின் உறுப்புக்களாக இடம் பெற்றிருக்கும். இறையாண்மை உடைய தேசிய இனங்கள் தம் இறையாண்மையின் ஒரு பகுதியை விட்டுக் கொடுப்பதன் மூலமே மைய அரசு உருவாகும். அனைத்துத் தேசிய இனங்களின் மொழிகளும், மைய அரசின் அலுவல் மொழிகளாக அமைந்திருக்கும். ஆளுநர் என்பவர் மைய அரசின் முகவராக இருக்க முடியாது. வேறு மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் இந்திய அரசுப் பணியாளர்களாகத் தமிழகத்திற்கு வர வேண்டியதில்லை. தமிழகத்தின் எல்லைகளுக்குள் செயல்படுகிற மைய அரசின் அலுவலகங்கள் தமிழில்தான் நடைபெறும். மாநிலங்களும் மைய அரசம் முற்றான சமத்துவம் உடைய அரசுகளாகத்தான் அமைந்திருக்கும். எந்த மாநிலமும் தேவைப்படும் பொழுது மைய அரசிலிருந்து ஒரு பொது வாக்கெடுப்பின் மூலம் பிரிந்து செல்ல முடியும்” (மே.நூ.பக்.171-172)

பயன்பட்ட நூல்கள்

1. ஞானி, தமிழியம், தமிழ்த் தேசியம் - ஞானியின் மெய்யியல் கட்டுரைகள் - 1, (2007) காவ்யா, சென்னை – 24.
2. ஞானி, ஏன் வேண்டும் தமிழ்த் தேசியம், (2012), புதுபுனல், சென்னை – 5.

கட்டுரை

1. பஞ்சாங்கம்.க, ஐம்பது ஆண்டுகாலச் சுதந்திர இந்தியாவும் தேசிய இனப் பிரச்சனைகளும், க.பஞ்சாங்கம் கட்டுரைகள் - நவீன இலக்கியக் கோட்பாடுகள், (2008), காவ்யா, சென்னை – 24.

Pin It