சிவகங்கையில் இந்துகவி என்ற சிறுமி பாலியல் வன்முறைக்கு பலரால் உள்ளாக்கப்பட்டது குறித்த வழக்கில் காவல்துறையினர் உட்பட பலரின் தொடர்பு இருந்து வருவதாக வழக்கு தாக்கல் செய்யப்பட்டு, வழக்கு புலன் விசாரணை சி.பி.சி.ஐ.டி போலிசாரால் நடத்தப்பட்டு வருகின்றது. இந் நிலையில் மேற்கண்ட குற்றம் குறித்து புகார் கொடுத்த புகார்தாரரான செல்வி என்பவரையே காவல்துறை கைது செய்துள்ளது. மேலும் புகார்தாரரின் 16 வயது மகன் விஜய் என்பவரையும் கைது செய்து சிறைப்படுத்தியுள்ளது. மேற்கண்ட கைது நடவடிக்கையானது வழக்கின் சாட்சியங்களை நீர்த்துப் போகச் செய்யும் நடவடிக்கையாகவும் சாட்சிகளை அச்சுறுத்தி வழக்கினை திசைதிருப்பும் செயலாகவும் கருதத் தோன்றுகின்றது.

காவல்துறையினைச் சார்ந்த சில அதிகாரிகளின் பெயர்களும், பாலியல் வன்முறை வழக்கில் வெளிப்பட்டுள்ள நிலையில் புகார்தாரரான செல்வி என்பவரை அச்சுறுத்தும் நடவடிக்கை நடந்துள்ளதாகவும், மேற்கண்ட புகார்தாரர் கடந்த 21.10.2015ம் தேதி சென்னை அழைத்து வரப்பட்டு சி.பி.சி.ஐ.டி போலிசார்களால் சித்தரவதை செய்யப்பட்டதாகவும், மேலும் 24.10.2015 தேதி மதுரை அழைத்து வரப்பட்டு மீண்டும் சித்தரவதை செய்யப்பட்டு, வழக்கில் சிறுமி புகார் கூறியுள்ள குற்றவாளிகளுடன் செல்விதான் உறவு வைத்திருந்ததாக ஒப்புக்கொள்ளும்படி சித்தரவதை செய்யப்பட்டதாகவும், பாதிக்கப்பட்டவரின் தரப்பின்மூலம் மூலம் அறிய முடிகின்றது.

மேலும் மேற்கண்ட சாட்சி செல்வி தொடர்ந்து சில குற்றவாளிகளால் தொடர் அச்சுறுத்தலுக்கு உள்ளான நிலையில், தனது சொந்த வீட்டுக்குக் கூட போக முடியாத அச்சத்தில் இருந்த சூழலும் இருந்துள்ளது. காவல்துறை சாட்சிகளுக்கு பாதுகாப்பு வழங்குவதற்குப் பதிலாக சாட்சியங்களுக்கு அச்சுறுத்தல் தரும் செயலாக இக் கைதினை கருத வேண்டியுள்ளது.

கோவையில் 12.12.2015 கைது செய்யப்பட்ட செல்வி, அவரின் மகன் விஜய் மீண்டும் காவல்துறையால் மதுரையில் வைத்து தாக்கப்பட்டுள்ளனர் என்பதை அறிய முடிகின்றது. எனவே இந்த வழக்கில் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு சட்டப்படியான தீர்வை சி.பி.சி.ஐ.டி காவல்துறை விசாரணை பெற்றுத் தருமா என்பது பல்வேறு வகையில் சந்தேகங்களை எழுப்பியுள்ளது. இந் நிலையில் நடு நிலையான விசாரணை மேற்கொள்ளும் முகமாக மத்திய புலனாய்வுத் துறையின் விசாரணைக்கு இந்த வழக்கை உடனடியாக தமிழக அரசு மாற்ற வேண்டும் என மக்கள் சிவில் உரிமைக்கழகம் (PUCL) கோரிக்கை விடுக்கின்றது. மேலும் சி.பி.சி.ஐ.டி போலிசரால் புகார்தாரர் செல்விக்கு நிகழ்ந்துள்ளதாகக் கூறப்படும் சித்தரவதை குறித்து விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ் வழக்கில் மனித உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும்.

- பேரா.சரஸ்வதி , மாநிலத் தலைவர் & ச.பாலமுருகன், மாநிலச் செயலர், மக்கள் சிவில் உரிமைக்கழகம் (PUCL)

Pin It