பார்வை மாற்றுத் திறனாளர் தங்கள் வாழ்க்கையில் எதிர்கொள்ளும் சவால்களும் இடர்பாடுகளும் ஏராளம் ஏராளம் என்பது கற்றோருக்கு மட்டுமல்லாமல் ஏட்டுக் கல்வி பெறாத எளிய மனிதருக்கும் தெரிந்த விடையமாகும்.

பார்வை மாற்றுத் திறன் பட்டதாரிகள் கீழ் காணும் கோரிக்கைகளை முன் வைத்துப் போராடி வருகின்றனர்.

1 ஆசிரியர் பணியில் நிறப்பப் படாத 350 ஆசிரியர் பணி இடங்களை நிறப்பக் கோருதல்,

2 பார்வையற்றோருக்காக tet trb போன்ற தேர்வுகளில் வழங்கப்படும் மதிப்பெண்களில் இட ஒதுக்கீடு, அதாவது 75 மதிப்பெண்களை பணி வாய்ப்புக்கான தகுதியாகக் கொள்ளுதல்,

3 பார்வையற்றோருக்கு மடி கணினி வழங்க கேட்டல்,

உள்ளிட்ட கோரிக்கைகளை முன் வைத்து சென்னை சேப்பாக்கம் பகுதியில் 3 நாட்களாக பார்வையற்ற கல்லூரி பட்டதாரிகள் சங்கம் போராட்டம் நடத்தி வருகிறது. இன்று வரை பார்வையற்றோரின் கோரிக்கைக்கு அரசாங்கத்திடம் இருந்து எந்த பதிலும் கிடைத்த்தாகத் தெரியவில்லை.

முதல் நாள் 16-9-2013 அன்று நடந்த போராட்டத்தில் பங்கேற்ற பார்வையற்றோரில் 9 பேர் உண்ணா நோண்பு இருந்தனர். அப்படி உண்ணாவிரதம் இருந்த பார்வையற்ற சகோதரர்களை இராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அழைத்து செல்வதாக கூறிய சேப்பாக்கம் போலீஸ் காவலர்கள் மருத்துவமனைக்கு அழைத்து செல்லாமல் கே கே நகருக்கு அழைத்து சென்று அங்கு கலைந்து செல்ல கோரி இருக்கின்றனர். பார்வையற்ற சகோதரகள் கலைந்து செல்ல மறுக்க கே கே நகர போலீஸ் காவலர்களுக்கும் சேப்பாக்கம் காவலர்களுக்கும் இடையே வாக்குவாதம் நடைபெற்று இருக்கின்றது.

கே கே நகர போலீஸ் காவலர்கள் உண்ணா விரதம் இருப்போருக்கு தாங்கள் பொறுருப்பேற்கவோ பாதுகாப்பு அளிக்கவோ முடியாது என மறுத்துவிடுகின்றனர். பின் பார்வையற்றோரை சேப்பாக்கம் காவல்துறையினர் வண்டலூருக்கு கொண்டு சென்று இறங்க கோரி இருக்கின்றனர். அதற்கும் பார்வையற்ற சகோதரர்கள் மறுக்கவே கல்பாக்கம் பகுதிக்கு அழைத்து சென்று அவர்களைக் கீழே இறக்க முயற்சித்திருக்கின்றனர். நிலைமையை உணர்ந்த பார்வையற்றோர்கள் காவலர்கள் சொன்னபடி இறங்காமையால் பத்திரமான பாதுகாப்பான இடத்தில் இரவு தங்க வைத்து மீண்டும் காலை 10 மணிக்கு போராட்ட பந்தலுக்கு அழைத்துச் செல்வதாக அன்போடும் நயமாகவும் பேசி இணங்க வைத்திருக்கின்றனர். பார்வையற்ற சகோதரர்கள் காவலரின் கனிவான பேச்சுக்கு இணங்கவே அவர்களை கோவலம் சுடுகாட்டுக்கு அழைத்துச் சென்று உண்ணாவிரத கூடார போர்வைகளை விரித்து படுக்க வைத்ததோடு இரண்டு காவலரும் உடன் தங்குவதாக கூறி குறித்த இடத்தில் அவர்களை படுக்கவைத்துவிட்டு சென்றுவிட்டனர்.

 அதிகாலை பொதுமக்கள் பார்வையற்றோரை விசாரித்தபோதுதான் பார்வையற்ற நண்பர்களுக்கு தாங்கள் சுடுகாட்டில் தங்க வைக்கப்பட்டதும், காவலர்கள் யாரும் உடன் இல்லை என்பதுமான உண்மைகள் தெரிய வந்திருக்கின்றன. 17-9-2013 அன்றும் போராட்டம் தொடர்ந்தது. இரண்டாம் நாளும் போராட்டம் தொடர காவலர்கள் உண்ணாவிரதம் இருந்தோரை முதல்நாளைப் போலவே பொது மருத்துவமனைக்கு அழைத்துச் செல்வதாகக் கூறி உண்ணாவிரத பந்தலில் இருந்தோரை புதுப் பேட்டை சமுதாயக் கூடத்துக்கு வெளியே உள்ள சாக்கடை கால்வாய் பாலத்தருகே கொண்டு சென்று விட்டுவிட்டனர். பார்வையற்ற நண்பர்கள் இரவு முழுவதையும் சாக்கடைக்குமேல் உள்ள சஸ்பூன் பாலத்தின் மேலேயே கொசுக்களும் பூச்சிப் பொட்டுக்களும் துர்நாற்றமும் நிறைந்த பகுதியிலேயே  கழித்திருக்கின்றனர். 18-9-2013 காலையிலேயே போலீஸார் மேற்படி உண்ணாவிரதம் இருந்தோரை மருத்துவமனைக்கு கொண்டு சேர்த்திருக்கின்றனர் போராட்டம் 3 ஆம் நாளாகத் தொடர்ந்து நடந்து வருகிறது.

இத்தனை நடந்தும் அரசாங்கமோ அதிகாரிகளோ பார்வையற்றோரின் கோரிக்கைக்கு செவி மடுத்ததாகத் தெரியவில்லை. காந்திய வழியில் அஹிம்சை முறையில் தங்களின் கோரிக்கையை வெளிப்படுத்திய பார்வையற்றோரை காவல் துறையினர் மருத்துவமனைக்கு கொண்டு செல்வதாகக் கூறி ஏமாற்றலாமா? பார்வையற்றோரை சக மனிதராகக் கூட நடத்தாமல் இங்கும் அங்கும் இழுத்தடித்து காவலர்கள் அலைக்கழிப்பது ஞாயமானதுதானா? எப்பொழுது பார்வையற்றோருக்கான ஞாயமான கோரிக்கைகளுக்கு விடிவு பிறக்கும்? இந்திய தேசத்தில் பார்வையற்ற நண்பர்களின் நிலை சுதந்திர தேசத்து அடிமைகள் என்பதாகத்தானே காணப்படுகிறது.

Pin It