‘கணக்கு மொழியினால்தான் இந்த இயற்கைப் புத்தகம் எழுதப்பட்டிருக்கிறது’ என்கிறார் கலிலியோ. ஆனால் எனக்கு இந்த கணக்குப் பாடம் வகுப்பு வந்தாலே போதும் வாத்தியார் பூதம் போலத் தோன்றுவார். இந்தப் பூதத்திற்குப் பயந்து

போய்தான் இளங்கலையில் தமிழ் இலக்கியப் பாடம் எடுத்தேன் என்று சொல்ல வேண்டும். ‘எண்ணும் எழுத்தும் கண்ணெனத் தகும்’ என்கிறார்கள். ஆனால் எனக்கு இன்றைக்கும் கூட, ‘எழுத்து’ மட்டும்தான் அப்படியான ஒன்றாகத் தோன்றுகிறது.

எழுத்தில் ‘காட்சி’ இருக்கிறது; எண்களில் அது இல்லை எனப்படுகிறது. அதனால்தான் என்னமோ எண்களை நினைவில் இருத்திக் கொள்ள என் மூளை சிரமப்படுகிறது போலும்.

 எனக்கொரு நண்பன் இருந்தான். கணக்குத் துறைப் பேராசிரியன். பெயர் சோழராசன். போனை எடுத்துச் சுற்றினான் என்றால் ஒரே நேரத்தில் எந்தக் கையேட்டையும் பார்க்காமல் ஒரு இருபது பேர் எண்களைச் சுற்றுவான். எனக்கு என்

பிள்ளைகள் இரண்டு பேரின் எண்களைக் கூடப் பார்த்துதான் பண்ண வேண்டியதிருக்கிறது. சில நேரங்களில் எனது தொலைபேசி எண்களையே சரியாகச் சொல்ல முடியாத தருணங்களையும் என் மூளை எனக்கு வழங்கி விடுகிறது. எனவே கைபேசி வந்த

பிறகு, என் பெயரைப் போட்டுப் பதிவு செய்து வைத்துள்ளேன்.

 எனது மூளைக்கும் இந்த எண்களுக்குமான உறவில் மற்றுமொரு விசித்திரமும் இருக்கிறது. நான் பணியாற்றிக் கொண்டிருந்த உயராய்வு மையத்தின் தொலைபேசி எண்களை ‘ரெண்டு ரெண்டு அம்பத்தொன்று ஆறு எட்டு ஏழு’ என்று

தமிழில்தான் யார் கேட்டாலும் சொல்ல முடிகிறது. கேட்கிறவர்கள் ஆங்கிலத்தில் திரும்பச் சொல்லிச் சரியா என்பார்கள். நான் மறுபடியும் தமிழில்தான் சொல்வேன். ஆங்கிலத்தில் சொல்லச் சொன்னால், எழுதிக் கொண்டு பார்த்துச் சொன்னால்தான்

சாத்தியமாகிறது. இது இப்படி என்றால், எழுத்தாளர் கி.ரா-வின் தொலைபேசி எண்களை ஆங்கிலத்தில்தான் சொல்ல வருகிறது. தமிழில் கேட்டால் எழுதிக் கொண்டு பார்த்துதான் சொல்லுகிறேன். இவ்வளவிற்கும் மனப்பாடமாகச் சொல்லத் தெரிந்த

எண்கள் இந்த இரண்டுதான். இதைச் சொல்வது ‘கத வுடுறான்’ என்றுதான் நினைக்கத் தோன்றும். ஆனால் மூளையின் செயல் முறையை இப்படிக் கவனித்துப் பார்த்தால் அது நிகழ்த்தும் திருவிளையாடலின் முன் நமது கடவுளர்களின்

திருவிளையாடல்கள் தோற்றுப் போகும்.

 எண்களை விட்டுவிட நம்மால் முடிவதில்லை. பயணம் செய்யும் போது எப்பொழுதுமே இந்த அறுபது வயதுகளிலும் கூட ஜன்னல் ஓரத்தை ஓடிப் பிடிப்பதுதான் எனது பழக்கமாகத் தொடர்கிறது. அவ்வாறு பயணம் செய்யும் போது சாலை

ஓரங்களில் வரிசையாக நிற்கும் மரங்களின் அடிப்பகுதியில் செதுக்கி வண்ணத்தில் (பெரும்பாலும் மஞ்சள்) எழுதியுள்ள எண்களை என்னை அறியாமலேயே எண்ணிக் கொண்டே வருகிற பழக்கம் எப்பொழுது ஒட்டிக் கொண்டது என்று சொல்ல

முடியவில்லை. ஆனால் இன்றைக்கும் அதை நிறுத்த முடியவில்லை. ஏறுவரிசையில் (அ) இறங்குவரிசையில் வருகிற எண்கள் ஒரு குறிப்பிட்ட எண்களுக்குப் பிறகு மறுபடியும் முதலிலிருந்து தொடங்கும். இப்படி ஏன் எழுதியிருக்கிறார்கள் என்று கேள்வி

கேட்டபடியே மனது எண்களை எண்ணிக் கொண்டே வரும். மரங்களைப் பராமரிக்கிற நெடுஞ்சாலைத் துறையினர் ஏதோ ஒரு கணக்கு முறையைப் பின்பற்றுகிறார்கள் போலும் என்று பதிலையும் சொல்லிக் கொள்ளும். அந்தக் கணக்கு முறை என்ன என்று

அறிந்து கொள்ள இதுவரை ஆர்வம் கொண்டதே இல்லை.

 எனது நண்பர் ஒருவர் அரசின் உயர் அதிகாரியாக இருந்தார். அவருக்குப் பதவி உயர்வு. அதன் பொருட்டு கடலோரம் இருக்கும் உணவு விடுதி ஒன்றில் விருந்துக்கு அழைத்திருந்தார். ‘நீங்கள், இன்னொரு நெருங்கிய நண்பர், நான்,

அவ்வளவுதான்’, என்று சொல்லியிருந்தார். போனால், அந்த நெருங்கிய நண்பர் என் மாணவர்தான். நான் கல்லூரி ஆசிரியராகச் சேர்ந்த ஆண்டு பொருளாதாரம் படித்த மாணவர். இப்பொழுது தொழிலதிபராகப் பெரிய அளவில் உடலாலும்

வளர்ந்துள்ளார். எனவே பார்த்தவுடன் முதலில் அடையாளம் தெரியவில்லை. ‘சார்! நான் உங்க மாணவன்’ என்று சொன்ன பிறகுதான் என்னால் நினைவுபடுத்திக் கொள்ள முடிந்தது. தலையில் முடி எல்லாம் உதிர்ந்து என்னைவிட வயதானவராகக்

காட்சி அளித்தார். ஆனால் தொழிலதிபர்களோடு, அரசியல்வாதிகளோடு, உயர் அதிகாரிகளோடு பழகி வளர நேர்ந்ததால் ஏற்படும் ஒருவிதமான மிடுக்குத் தூக்கலாக வெளிப்பட்டுக் கொண்டே இருந்தது.

 பேசிக் கொண்டே சாப்பிடத் தொடங்கினோம். ஏதோ ஒரு பேச்சின் திருப்பத்தில் ‘எண் சோதிடம்’ குறித்த பேச்சு வந்தது. என் மாணவர், சாதாரணமானவர்களாக இருந்து பெரிய அரசியல்வாதிகளாக, பணக்காரர்களாக அதேநேரத்தில்

எங்களுக்கும் தெரிந்தவர்களாக இருக்கிறவர்களின் ‘ராசி’ எண்களைச் சொல்லிக் கொண்டே வந்தார். அந்த எண் ராசிதான் அவர்களை இந்த அளவிற்கு உயர்த்தி விட்டது என்றும் பேசிக் கொண்டிருந்தார். எனக்கு அதில் ஒன்றும் தெரியாது. ஆர்வமும்

கிடையாது. மேலும் எந்தச் சோதிடத்திலும் நம்பிக்கையும் கிடையாது. எனவே அவர்கள் பேசுவதைக் கேட்டுக் கொண்டிருப்பவனாக இருந்தேன்.

 ஒரு கட்டத்தில் என் பக்கம் திரும்பினார். ‘சார், உங்கள் பிறந்த தேதி என்ன?’ என்றார். சொன்னேன். மனக் கணக்கிலேயே கூட்டிப் பார்த்தார். இரண்டில் முடிந்தது. தொடர்ந்து பையிலிருந்து ஒரு தாளையும் பேனாவையும் எடுத்தார். என்

பெயரை ஆங்கிலத்தில் எழுதச் சொன்னார். ஒவ்வொரு எழுத்துக்குமுரிய எண்களை அதன் தலையில் எழுதினார். கூட்டிப் பார்த்தார். அதுவும் இரண்டில் முடிந்தது. “ஒங்களுக்கு ரெண்டு ரெம்ப ராசியான நம்பர் சார். பிறந்த தேதியும் பெயரும்

ஒன்றுபோல் இரண்டில் முடிவதால்தான், இப்ப நீங்க ஓகோ என்று இருக்கிறீர்கள்” என்றார்.

‘என்ன பெரிசா இப்போ ஓகோன்னு இருப்பதா நினைக்கிறீங்க?'

'என்ன சார், அப்படிச் சொல்லிட்டீங்க! சாதாரண மாதச் சம்பளம் வாங்கிறத் தமிழாசிரியர் நீங்க. 35 வயதிலேயே பக்காவா ஒரு வீடு கட்டிடீங்க. ரெண்டும் ஆம்பளப் பசங்க. ரெண்டு பேரையும் செலவில்லாம டாக்டராக்கிட்டீங்க. மருமக ரெண்டு பேரு நூறு

பவுனு, வீடு, நிலம்னு பெருஞ் சொத்தோட வரப் போறாங்க. இதெல்லாம் என்ன சார்? அந்த நம்பர்தான் சார் காரணம்.'

‘எனக்கெல்லாம் அப்படிப்பட்ட நம்பிக்கை ஏதும் கிடையாதுங்க’.

'சார்! அப்படிச் சொல்லாதீங்க. நானும் சாதாரணமா ஒங்கள மாதிரி இருந்தவந்தான். அனுபவப்பட்டுப் பலரோட வாழ்க்கையப் பாத்துதான் சொல்றேன். சும்மா சொல்றேன்னு நினைக்காதீங்க. இருக்கு சார். நம்பருக்கும் வாழ்க்கைக்கும் நெருங்கிய தொடர்பு

இருக்கு சார்.'

‘இருக்கு சார், இருக்கு சார்’ என்று பல தடவை சொல்லும் போதே, போதை கொஞ்சம் கூடிப் போயிருக்கிறது என்பதை என்னால் புரிந்து கொள்ள முடிந்தது.

 இந்த நிகழ்ச்சி நடந்து பல மாதங்கள் தடயம் தெரியாமல் ஓடிவிட்டன என்றுதான் நினைத்தேன். ஆனால் திடீரென்று ஒருநாள் காலை நடை போய்க் கொண்டிருந்த போது, ‘முதல் மனைவி போய்ச் சேர்ந்து, ரெண்டாவது ஒருத்தி வந்த

பிறகுதான், வாழ்வு வளர்ச்சிப் பாதையில் நகர்ந்தது’ என்ற ஒரு உண்மை பளிச்செனத் தோன்றி மறைந்தது. அந்த மாணவத் தொழிலதிபர் பேச்சு, வெறும் பேச்சாகப் போய்விடவில்லை. விதையாக விழுந்திருக்கிறது என்பது தெரிந்தது. என் வாழ்வோடு

தொடர்புடைய பல்வேறு வகைப்பட்ட “ரெண்டுகளைத்” தொகுத்துப் பார்க்கத் தொடங்கி விட்டது மனம்.

 கல்யாணம் இரண்டு. முடித்த தேதியும் இரண்டு. மாதமும் இரண்டாவது மாதம். பள்ளிப் பருவத்தில் தேர்வு நடக்கும் போது, தேர்வு அறைக்குள் முதல் ஆளாகப் போய் உட்கார்ந்தால் அன்றைக்கு வினாத்தாள் கடினமாக இருக்கும்.

இரண்டாவது ஆளாக நுழைந்தால் அன்றைக்குத் திருப்தியாக இருக்கும். இதைப் பின்பற்றவும் செய்தேன். (இவ்வளவிற்கும் சாமி கும்பிடுகிற பழக்கம் ஏதும் கிடையாது) அது நினைவுக்கு வந்தது.

 “த்ரி மஸ்கிட்டோஸ்” என்று எல்லோரும் சொல்லும் அளவிற்கு நண்பர்கள் மூவராக இருந்தோம். ஆனால் அதில் ஒருவன் தற்கொலை செய்து கொண்டான். இருவரானோம். பிள்ளைகள் இரண்டு. முதன் முதலில் வாங்கிய ஸ்கூட்டர் எண்

இரண்டில் முடிந்தது. அதற்குப் பிறகு வாங்கிய இரண்டு பைக்குகளின் எண் இரண்டு. கார் வாங்கும் போதும் எண் இரண்டில் முடிந்தது. இவை எல்லாம் தானாக வந்தமைந்தன. பணம் கட்டி ஏதும் வாங்கவில்லை.

 இப்படி இன்னும் பலவற்றைத் தொகுத்துப் பார்த்தது இந்த மனம். இரண்டின் மேல் மரியாதையே உருவாகத் தொடங்கி விட்டது. அதன் விளைவு, பயணத்திற்குப் போனாலும் ஏறும் வண்டிகளைக் கூட்டிப் பார்க்கிறது மனம். இருக்கையின்

எண்ணைக் கவனிக்கிறது. பயணத் தேதியை இரண்டில் வரும்படிப் பார்த்துக் கொள்ளுகிறது.

 சமீபகாலமாக காரோ, பஸ்ஸோ எந்த வண்டி போனாலும் உடனே அந்த வண்டி எண்களைக் கூட்டிப் பார்த்து, ‘இரண்டு’ என்று வந்தால் மகிழ்ச்சி கொள்ளுகிற ஒரு பழக்கம் உருவாகியுள்ளது. காலை நடை போகும் போது இப்படி

இரண்டில் முடியும் ஒரு பைக், ஓரத்தில் நிறுத்தப்பட்டிருக்கும். அந்த வண்டியைப் பார்ப்பதே அன்றைக்கு ராசியானது என்று எண்ணுகிற ஒரு மனப்பழக்கம் ஏற்பட்டுள்ளது. இவ்வாறு வண்டி எண்களைக் கூட்டிப் பார்க்கிற இந்தப் பழக்கத்தை

நிறுத்துவதற்கு எவ்வளவோ விழிப்புணர்வோடு முயன்று பார்க்கிறேன். ஆனால் பல நேரங்களில் முடிந்தாலும் சில நேரங்களில் என்னை அறியாமலேயே அது நிகழ்ந்து விடுகிறது.

 இரண்டிற்குப் பதிலாக மூன்று (அ) நான்கு என்று பார்த்தாலும் இந்த 64 ஆண்டு வாழ்க்கைப் பயணத்தில் அதற்கும் நீண்ட ஒரு பட்டியலைத் தந்துவிட முடியும்தானே என்று என் பகுத்தறிவு சொன்னாலும் பழக்கத்தை விட முடியவில்லை.

சிரிப்பாக இருக்கிறது. பலரைப் பார்த்துச் சிரித்தவன், இப்பொழுது என்னைப் பார்த்தே நானே சிரித்துக் கொள்கிறேன்.

 - க.பஞ்சாங்கம் (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)

Pin It