அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழான அருப்புக்கோட்டை தேவாங்கர் அறிவியல் மற்றும் கலைக்கல்லூரியில் நான்கு மாணவிகளுக்கு ஏற்பட்டது பாலியல் அத்துமீறல் அல்ல. கணிதப் பேராசிரியரான நிர்மலா தேவி மாணவிகளிடம் யாருடைய இச்சைக்கோ இணங்கச் சொல்வதோடு, அதற்கான கூலியையும் பேசுகிறார். ஆக, நிர்மலா தேவி அந்த மாணவிகளை பாலியல் தொழிலுக்கு அழைத்துள்ளார்.

sexual assaultபாலியல் அத்துமீறல் என்பது வேறு; பாலியல் தொழில் மயமாவது என்பது வேறு.

“எங்களுக்கு மானம்தான் பெருசு. எங்க சாதிப் புள்ளைங்கள வேற சாதிக்காரன் காதலிச்சா கொலை செய்வோம்” என மார்தட்டுகிற, ஆண்ட பரம்பரை அரசியல் பேசுகிற சாதி கட்சிக்காரர்கள் யாருக்கும் இது மானப் பிரச்சினையாகவில்லை.

ஆகவும் முடியாதாம். காரணம் கொஞ்சம் சூசகமானது. கல்வித்துறை என்பது ஒரு அரச சாம்ராஜ்யம். கவர்னர்தான் வேந்தர், அதாவது மன்னர். உயர்கல்வி அமைச்சர் இணை வேந்தர். அப்புறம் ஒவ்வொரு பல்கலைக்கழக வாரியான துணைவேந்தர்கள்.

இந்த துணைவேந்தர் பதவிக்காலம் 3 ஆண்டுகள்தான். ஆனால் அந்தப் பதவியின் தற்போதைய ரேட் 15 கோடியாம். இந்தத் தொகையை பதவிக்கு வருகிறவர்கள் கொடுப்பதில்லை. அவர்களை வைத்து காரியம் சாதித்துக் கொள்ளலாம் என நினைக்கிற சாதிய முதலாளிகளும், சாதிப் பின்புலம் உள்ள அரசியல்வாதிகளும்தான் கொடுக்கிறார்களாம்.

இப்படி காரியம் சாதித்துக் கொள்ள கோடிக்கணக்கில் முதலீடு செய்கிற இந்த சாதியப் பின்புலம் கொண்ட முதலாளிகளுக்கும், அரசியல்வாதிகளுக்கும் ஏதோ காரியம், யாரோ பெரிய மனிதர்கள் மூலம் ஆக வேண்டியிருந்திருக்கிறது; அந்த பெரிய மனிதர்கள் தங்களுக்கான கூலியாக மாணவிகளை கேட்டிருக்கிறார்கள்; தொழிலுக்கு இடைத்தரகராக நிர்மலா தேவி செயல்பட்டிருக்கிறார்; மாணவிகள் சாதியப் பின்புலம் கொண்ட முதலாளிகள் மற்றும் அரசியல்வாதிகளின் நலனுக்காக பாலியல் தொழிலுக்கு அழைக்கப்பட்டிருக்கிறார்கள்.

இது குறிப்பிட்ட சாதியப் பின்புலமுள்ள அரசியல்வாதிகளும், முதலாளிகளும் மட்டுமே செய்கிற வேலையல்ல. எல்லா சாதிப் பின்புலத்திலானவர்களும் செய்வதுதான். இவர்கள்தான் ஆண்ட பரம்பரை அரசியலுக்கும் பைனான்சியர்கள். விசுவாசிகள் எப்போது எஜமானர்களுக்கு எதிராக குரைப்பார்கள்? ஆதலால் ஆண்ட பரம்பரை அரசியல் பேசுகிற அனைவரின் வாயிலும் அடைப்பான் செருகப்பட்டுள்ளது.

விபச்சாரம் முதலாளித்துவத்தின் அங்கம்!

முதலாளியம் என்றால் சுரண்டல் என்று மட்டும் பொருளல்ல. அது போட்டி மிகுந்த சமூக அமைப்பு என்றும் பொருள். முதலாளிகள் தங்களுக்கு இடையிலான போட்டியை எதிர்கொள்ள பயன்படுத்துகிற இலஞ்சம் என்ற வழிமுறையில் பணம் வகிக்கும் பாத்திரத்திற்கு இணையாக பாலியல் சமாச்சாரங்களுக்கும் முக்கியத்துவம் உண்டு.

நம்மவர்கள் இவ்வளவு சீக்கிரத்தில் நீரா ராடியாவை மறந்திருக்க முடியாது. இவரின் தொலைபேசி உரையாடல்களால் இந்தியாவே அல்லோலகல்லோலப்பட்டது. வெளிநாட்டு, உள்நாட்டு முதலாளிகளின் நலனிலிருந்து மத்தியில் மந்திரிசபை அமைப்பது முதல் 2ஜி விவகாரம் வரையிலுமாக இவரின் கைங்கர்யம் பிரபலமானது.

ஐம்பது வயதை கடந்த நீராவின் ஆடம்பர தோட்ட பங்களாதான் அனைத்தையும் தீர்மானிக்கிற இடமாக இருந்தது. 1990-களின் மத்தியில் இவருக்குச் சொந்தமான, டில்லியில் அமைந்துள்ள சத்தர்பூர் தோட்ட பங்களா விமானத் தொழிலதிபர்கள், மேல்மட்ட அரசியல்வாதிகள் உள்ளிட்ட பல பெரிய மனிதர்கள் சங்கமிக்கும் தேவாலயமாக இருந்தது. அங்கு நடைபெறும் பூஜைகளில் நீராவின் ஆடை அலங்காரங்களுக்கு தனி மரியாதை. பண்ணை இல்லத்தில் நடைபெறும் விருந்துகளுக்கான உணவு வகைகளை அரசுடமை ஓட்டலான அசோகாவிலிருந்து இந்தியச் சுற்றுலாத் துறையே நேரடியாக வழங்கின.

முதலாளிகள் தங்களுக்கான காரியத்தை சாதித்துக் கொள்ள இடத்திற்கேற்ற வகையில் பெண்களைத் தேர்ந்தெடுக்கிறார்கள். மல்லையாக்களிடம் பேரம் பேச சுங்கிடிச்சேலை கட்டியவர்களா தேவைப்படுவார்கள்? கையில் மதுக்குவளையுடன், சிகரெட்டை சிவந்த இதழால் ஈரப்படுத்தி, பற்ற வைத்து பரிமாறும் அழகிகள்தான் வேண்டும். அவர்களுக்கு நீரா ராடியாக்கள் தேவைப்பட்டார்கள்.

இங்கிருப்பவர்களுக்கு மாணவிகள் தேவைப்படுகிறார்கள். திருப்பூரில் மணிப்பூர், அசாம், ஜார்கண்ட், சட்டீஸ்கர் பழங்குடிகள் தேவைப்படுகிறார்கள்.

தமிழகத்தின் உணவகங்களில் எச்சில் இலைகளை எடுத்துக் கொண்டிருப்பவர்களைப் பாருங்கள். அவர்கள் ஜிண்டால் மாதிரியான கார்ப்பரேட் நிறுவனங்களால் சொந்த வாழ்வாதாரங்கள் பிடுங்கப்பட்டு விரட்டியடிக்கப்பட்ட வடகிழக்கு மாநிலத்தவர்கள். கொஞ்சகாலத்திற்கு முன்புவரை “எங்கள் மண், எங்கள் வளம், எங்கள் வாழ்வு” என நமது காவிரிக்கரை விவசாயிகள் போல் மானத்தோடு போராடியவர்கள்.

சொல்லப்போனால், நம்மைவிட பல மடங்கு உறுதியோடு, படை கட்டி போராடியவர்கள். இயக்கங்கள் காயடிக்கப்பட்டு அவர்களது மண்ணும் வளமும் கார்ப்பரேட்டுகள் வசமானது. அவர்கள் பிழைப்பு தேடும் நாடோடிகளானார்கள். அளவில்லா வளங்களுக்கு சொந்தக்காரர்களான இவர்கள் எச்சில் இலைகளை எடுத்துக் கொண்டிருப்பதுதான் வெளியில் தெரிகிறது. தெரியாத கொடுமை என்னவென்றால், அந்த அழகியப் பழங்குடி சிறுமிகள் பாலியல் வேட்டைகுள்ளாக்கப்படும் கதை.

திருப்பூர் இன்று இந்தியாவின் பல பகுதிகளில் இருந்தும் பிழைப்பு தேடி நுழைகிற இடமாகியுள்ளது. அதேநேரத்தில் திருப்பூர் தொழில் எப்போதும் அவசரத்திற்கு கைமாற்றாகப் பெறப்படும் கடன் மூலதனத்தை நம்பியே இருக்கிறது. இந்த கடனுக்கு வங்கிகள் துணைபுரிவதைவிட, வட்டிக்கு விடப்படும் சாதிய மூலதனமே பெரும் பங்காற்றுகிறது. கடன் பெறுகிறவர்களுக்கும் கொடுப்பவர்களுக்கும் இடையில் நெருக்கத்தை உருவாக்குவதில் கடா வெட்டு விருந்துகளுக்கு முக்கியத்துவம் உண்டு. ஒரு குடும்ப விழாவாக நடத்தப்படும் கடாவெட்டு விருந்துகளில் பங்கேற்பதன் மூலம் ஒருவருக்கொருவர் நெருக்கமும் நம்பிக்கையும் உடையவராக பிணைக்கப்பட்டனர்.

குலதெய்வ வழிபாட்டு தலங்களில் ஏற்படுத்தப்பட்ட இந்த நெருக்கம் இப்போது ஒதுக்குப்புறத்தில் இருக்கும் தோட்ட வீடுகளுக்கும் உதகை, கோத்தகிரி என சுற்றியுள்ள மலை இடங்களில் உள்ள காட்டேஜ்களுக்கும் மாறியுள்ளன. வழிபாடு, குலதெய்வத்தின் முன்னால் அளிக்கப்படும் சத்தியம் என்று தொழில் உறவை உறுதிப்படுத்திய நிலவுடமை முறைகளுக்கு மாறாக தற்போது முதலாளித்துவத்தின் ‘நவீன பார்ட்டிகள்’ செல்வாக்கு செலுத்துகின்றன.

இந்த பார்ட்டிகளில்தான் மணிப்பூர், அசாம், ஜார்கண்ட், சட்டீஸ்கர் பழங்குடி சிறுமிகள் பலிகடாவாக்கப் படுகிறார்கள். தொட்டால் சிவக்கும் நிறமுடைய அசாம், மணிப்பூர் சிறுமிகள் மீதும், நல்ல கட்டுமஸ்தான உடல்வாகுடைய ஜார்கண்ட், சட்டீஸ்கர் பழங்குடி சிறுமிகள் மீதும் கருத்துப் பெருத்த செல்வந்தர்களுக்கு அவ்வளவு வெறி.

இந்த இச்சை எவ்வளவு மூர்க்கமானது என்றால், தொட்டால் சிவக்குமா? என அடிப்பதும், கிள்ளினால் இரத்தம் வருமா? என கீறுவதும் போன்ற வக்கிரங்களை கொண்டது.

விபச்சாரம் முதலாளித்துவத்தின் அங்கம். முதலாளிய மூலதனம் நுழைகிற இடத்திலெல்லாம் அது விபச்சாரத்தையும் சேர்த்தே நுழைக்கிறது. அது இப்போது கல்லூரியிலும் நுழைகிறது. முதலாளிகள் எந்த மட்டத்தில் காரியம் சாதித்துக் கொள்ள விரும்புகிறார்களோ, அந்த மட்டத்திற்கான பாலியல் தொழிலாளிகளையும் உருவாக்குகிறார்கள். மேல்மட்ட பேரங்கள் நடத்த அவர்களுக்கு விபச்சாரி (Prostitute), பாலியல் தொழிலாளி (Sex Worker) போன்ற சாதாரணமானவர்கள் போதவில்லை. அவர்கள் கல்லூரிகளில் இருந்து கால்கேர்ள் (Call Girl)-களை எதிர்பார்க்கிறார்கள்.

அதற்கு பேராசிரியர்கள், துணைவேந்தர்கள் என பலதரபட்டவர்களும் உழைக்கிறார்கள். படிக்கிற காலத்தில் படிப்பை மட்டுமே கவனிக்க வேண்டும் என்று சாத்தான்கள் வேதம் ஓதுகின்றன.

- திருப்பூர் குணா

Pin It