தூத்துக்குடி மாவட்டம், வேம்பாறு, வைப்பாற்றின் கழிமுகப் பகுதிகளான கடற்கரைப் பகுதிகளில் அரசின் விதிமுறைகளை மீறி கார்னெட், இலிமனேட் போன்ற தாதுமணல் அள்ளப்படுவதை மாவட்ட ஆட்சியர் ஆசிஸ்குமாரின் உத்தரவின் பேரில் அதிகாரிகள் நேரில் சென்று ஆய்வு செய்தனர். இந்த நடவடிக்கையை மேற்கொண்ட சிலமணி நேரங்களிலேயே அதாவது ஆய்வு செய்த 06-08-2013 அன்றே மேற்படி ஆட்சியர் இடமாற்றம் செய்யப்பட்டார்.

 தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாக்குமரி, இராமநாதபுரம் உள்ளிட்ட கடலோர மாவட்டங்களில் கார்னெட், இலிமனேட் போன்ற அரியவகை தாது மணல்கள் நிறைந்துள்ளன. இம்மணல்கள் ஆற்று மணலைப்போல சாதாரணமானவை அல்ல. தாதுக்கள் நிறைந்த இவ்வகை மணலுக்கு வெளிநாட்டில் ஏக கிராக்கி இருப்பதால் கடந்த 25 ஆண்டுகளாக ஆளும் கட்சிகளின் அனுமதியுடன் தங்குதடையின்றி மணல்வேட்டை நடந்து வருகின்றது.

 கடந்த இரு ஆண்டுகளில் மட்டும் தூத்துக்குடி துறைமுகத்திலிருந்து ஆளும் கட்சிக்கு நெருக்கமான வி.வி.மினரல்ஸ் மற்றும் இன்டஸ்டரியல் மினரல் இந்தியா பிரைவேட் லிமிடெட் என்ற நிறுவங்களின் சார்பில் சுமார் 3.50 லட்சம் டன் கார்னெட் மணல், 2.05 இலட்சம் டன் இலிமனேட் ஏற்றுமதி என்கிற பெயரில் வெளிநாடுகளுக்குக் கடத்தப்பட்டுள்ளது.

 கடந்த இருபத்தைந்து ஆண்டு காலமாக மேற்படி மணல் கொள்ளை மாபியாக்கள் நிகழ்த்தியுள்ள சுற்றுச்சூழல்கேடு, கனிமக்கொள்ளை, மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிப்பு, அரசின் வருவாய் இழப்பு என இவைகளையெல்லாம் தொகுத்துப் பார்த்தால், 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை தமிழகத்தை மாறி மாறி ஆண்ட, ஆண்டுகொண்டிருக்கும் இரு கழகங்களின் அனுமதியில்லாமல் இக்கொள்ளை நடந்திருக்க வாய்ப்பில்லை.

 எந்தக் கட்சி ஆட்சிக்கு வந்தாலும் அந்தக் கட்சிக்கு நெருக்கமானவர்களாக இம்மணல் கொள்ளையர்கள் இருப்பதால், இவர்கள் மீது அதிகாரிகள் யாரும் நடவடிக்கை எடுக்க தயங்கியச் சூழலில் துணிச்சலாகவும், அதிரடியாகவும், தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் ஆசிஸ்குமார் செயல்பட்ட விதம் பலரையும் வியக்க வைத்துள்ளது. அவரை மனதாரப் பாராட்ட வைத்துள்ளது. மணல் கொள்ளையர்கள் மீது நடவடிக்கை எடுத்தால், தனக்கு என்ன நிகழும் என்று தெரிந்தே நடவடிக்கையில் இறங்கிய ஆட்சியரை பலரும் பாராட்டி வரும் வேலையில், தமிழக அரசோ ஆட்சியருக்கு இடமாறுதல் வழங்கி மணல் கொள்ளையர்களுக்கு சாதகமாகச் செயல்பட்டுள்ளது.

 இந்நிலையில் 09-08-2013 அன்று ‘அரசியலாக்கப்படும் தூத்துக்குடி ஆட்சியர் மாற்றம்’ என்ற தலைப்பில் தினமணி நாளேடு செய்தி ஒன்றிணை வெளியிட்டுள்ளது. உயிரைத் துச்சமாக மதித்து துணிவுடன் நடவடிக்கையில் இறங்கிய ஆட்சியரை பாராட்டாமல் ஆட்சியரையே குற்றவாளிக் கூண்டில் நிறுத்த தினமணி முயலுகிறது.

 “தூத்துக்குடி ஆட்சியர் பணியிடை மாற்றம் செய்யப்பட்ட விவகாரத்தை உத்திரப்பிரதேச ஆட்சியர் துர்கா விவகாரத்துடன் ஒப்பிட்டு, தூத்துக்குடி ஆட்சியரை மீண்டும் அங்கேயே பணியிலமர்த்த வேண்டுமென சிலஅரசியல் கட்சித்தலைவர்கள் அறிக்கை வெளியிட்டுள்ளனர். மணல் கொள்ளையர்கள் மீது நடவடிக்கையை மேற்கொண்டதாலேயே பழிவாங்கும் நோக்கில் உத்திரப் பிரதேசத்தில் உதவி ஆட்சியர் துர்கா தற்காலிகப் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார் என்ற விவகாரம் நாடு முழுவதும் விவாதத்தை எழுப்பியுள்ள நிலையில், தமிழகத்தில் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் பணியிடை மாற்றம் செய்யப்பட்டுள்ள விவகாரம் அதனுடன் ஒப்பிடுவதில் பலருக்கும் கருத்து வேறுபாடு உள்ளது” என தினமணி கூறுகிறது. ‘பலருக்கும் கருத்து வேறுபாடு’ உள்ளதாகக் கூறும் தினமணி யார் அந்தப்பலர் என்று வெளிப்படுத்தவில்லை. உண்மையில் தினமணிக்குத்தான் கருத்து வேறுபாடுள்ளது. அதையே ‘’பலருக்கும்’ என்று சமாளிக்கும் யுக்தியை தினமணி கையாளுகிறது.

 தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் மட்டுமல்ல நேர்மையாகப் பணிபுரியும் பல இந்திய ஆட்சிப்பணியாளர்கள் ஆளும் வர்க்கத்தினரின் கோபப்பார்வைக்கு கடந்த காலத்தில் ஆளாகியுள்ளனர்.

 கடந்த 2011ஆம் ஆண்டு ஈரோட்டில் காலிங்கராயன் கால்வாயை மாசுபடுத்தி வந்த கே.கே.எஸ்.கே. தோல் தொழிற்சாலையை இழுத்து மூடிய காரணத்திற்காக அப்போதைய ஈரோடு மாவட்ட ஆட்சியரான ஆர்.சரவணகுமார் இரண்டாம் நாளே இடமாற்றம் செய்யப்பட்டார்.

 சத்துணவுப் பணியாளர் நியமனத்தில் சட்டப்படியான வெளிப்படை முறையைக் கொண்டு வந்ததால் கடந்த 2012ஆம் ஆண்டு விருதுநகர் மாவட்ட ஆட்சித்தலைவராக இருந்த பாலாஜி உடனடியாக இடமாற்றம் செய்யப்பட்டார்.

 மதுரை மாவட்டத்திலுள்ள இரு ஊராட்சிகளில் கிரானைட் கற்கனை முறைகேடாக வெட்டி கடத்தியதன் மூலம் தமிழக அரசுக்கு 16ஆயிரம் கோடிரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது, என்று அரசுக்கு அறிக்கை சமர்ப்பித்த ஒரே காரணத்திற்காக நான்கே நாட்களில் அப்போதைய மாவட்ட ஆட்சியர் சகாயம் அதிரடியாக இடம் மாற்றம் செய்யப்பட்டார்.

 இப்படி நேர்மையான அதிகாரிகள் துணிவுடன் செயல்படும் போதெல்லாம் அவர்களைப் பாதுகாக்க வேண்டிய தமிழகஅரசு பழிவாங்கும் நடவடிக்கையில் இறங்கி வருவதைக் கண்டிக்க துணிவில்லாத தினமணி போன்ற ‘நடுநிலை’ நாளேடுகள், இவ்விடயத்தில் ஆளுங்கட்சியுடன் கூட்டு சேர்ந்து கொள்கிறது. (அதுவும் ஆளும் கட்சி அதிமுக என்றால்தான் கூட்டு)

 “கடந்த 2 மாதங்களுக்கு முன்பு பீச் மினரல் நிறுவனத்தில் நடத்தப்பட்ட சோதனையின் போது பறிமுதல் செய்யப்பட்ட மினரல் மண் குறித்து இதுவரை அளவைக் கணக்கெடுக்காத நிலையும், அதன் மீது அபராதம் விதிக்காமல் தாமதம் செய்யப்பட்டு வரும் நிலையில் தற்போது வி.வி. மினரல் நிறுவனம் மீது ஓரிரு நாட்களில் அபராதம் விதிக்கப்படுமென ஆட்சியர் அவசரம் காட்டுவது ஏன்?” என்று தினமணி வினாக் கணை தொடுக்கிறது.

 ஆட்சியரிடம் கேள்வியெழுப்பும் தினமணியிடம், நாம் சில கேள்விகளை கேட்க விரும்புகிறோம். இரண்டு மாதங்களுக்கு முன்பே பீச் மினரல் நிறுவனத்தின் மீது ஆட்சியர் எடுத்த நடவடிக்கையை தினமணி ஏன் செய்தியாக வெளியிடவில்லை? பீச் நிறுவனத்தின் மீது அபராதம் உடனடியாக விதிக்க வேண்டுமென்று ஏன் தலையங்கம் எழுதவில்லை? அரசியல் பெரும்புள்ளிகளின் திரைமறைவு வேலைகளை எல்லாம் துப்பறிந்து வாரந்தோறும் ‘மெய்யாலுமா?’பகுதியை வெளியிடும் தினமணி ஏன் பீச் மினரலின் கனிமக் கொள்ளையை அம்பலப்படுத்தவில்லை? வி.வி.மினரல் நிறுவனத்தின் மீது அபராதம் விதிக்கவேண்டுமென்றால் முதலில் பீச் நிறுவனத்தினர் மீதுஅபராதம் விதிக்க வேண்டுமென்று தினமணி ஏன் அங்கலாய்த்துக்கொள்ள வேண்டும்.

 வி.வி. மினரல் நிறுவனத்தின் மீது கொண்ட பாசத்தின் விளைவாகத்தான் ‘தூத்துக்குடி, அரியலூர் மாவட்ட ஆட்சியர்கள் மாற்றம்’ என்று 08-08-2013 அன்று தினமணி செய்தி வெளியிடுகிறது. அரசியல் செல்வாக்குப்பெற்ற வி.வி. மினரல் நிறுவனத்தின்மீது கை வைத்ததாலேயே தூத்துக்குடியிலிருந்து ஆட்சியர் ஆசிஸ்குமார் இடமாற்றம் செய்யப்பட்டார். இது தினமணி போன்ற அறிவு ஜீவிகளின் நாளேட்டைப் படிக்காத பாமரர்களுக்கும் தெரிந்திருக்க, தினமணி மட்டும் அதை ‘இரு மாவட்ட ஆட்சியர்களின் இடமாற்றம்’ என்று சாதாரணமாய்ப் பார்க்கிறது. தூத்துக்குடி ஆட்சியரை மாற்றம் செய்தால் அந்த இடத்திற்கு புதிய ஆட்சியரை நியமித்தாக வேண்டும். அதற்காகவே அரியலூர் மாவட்ட ஆட்சியர் தூத்துக்குடிக்கு மாற்றம் செய்யப்படுகிறார். எனவே எதற்காக ஆசிஸ்குமார் மாற்றம் செய்யப்பட்டார் எனக் கேள்வி எழுப்புவதை விடுத்து, இடமாற்றத்திற்கான தலைமைச் செயலாளரின் அறிவிப்பை மக்களிடம் கொண்டு செல்லும் ‘போஸ்ட்மேன்’ வேலையையே தினமணி செய்கிறது.

 முந்தைய திமுக ஆட்சிக் காலத்திலும் இதே நிலைப்பாட்டை தினமணி நாளேடு மேற்கொண்டிருந்தால் நமக்கு இந்தக் கட்டுரையை எழுத வேண்டிய அவசியம் ஏற்பட்டிருக்காது. ஆனால் தினமணி திமுக எதிர்ப்பு, அதிமுக ஆதரவு என்ற நிலையைக் கொண்டுள்ளது. அதற்கான காரணம் ‘இனப்பாசம்’ என்பது அனைவரும் அறிந்ததே.

 “விதிமுறையை மீறி மணல் திருடப்பட்டு வருவதாகக் கூறப்படும் இந்த விவகாரத்தில் உரிய ஆதாரங்களுடன் அரசுக்கு முறையான கடிதத்தை அனுப்பி அவர்கள் வழிகாட்டுதலின் பேரில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருந்தால் எந்தவித நெருக்கடியுமில்லாமல் பிரச்சினை சுமூகமாகவே முடிந்திருக்கும் என்கின்றனர் அரசியல் நோக்கர்கள்” என்று தினமணி பெருமூச்சு விடுகிறது. இதன்மூலம் ஒரு மாவட்டத்தின் ஆட்சியர் இனி எப்படி செயல்பட வேண்டுமென்று தினமணி பாடம் நடத்த முயல்கிறது. அதாவது உரிய ஆதாரங்களைத் திரட்ட வேண்டுமாம், அதை அரசுக்கு அனுப்பி வைக்கவேண்டுமாம். பிறகு அவர்கள் (அரசு) வழிகாட்டுதலின்பேரில் நடவடிக்கை எடுக்க வேண்டுமாம். ஆசிஸ்குமார் இப்படி செய்திருந்தால் பிரச்சினை சுமூகமாக முடிந்திருக்குமாம். இதை தினமணி சொல்லவில்லை. தினமணியிடம் அரசியல் நோக்கர்கள் சொல்லியுள்ளார்கள். அதைத்தான் தினமணி நமக்குச் சொல்கிறது. அரசியல் நோக்கர்கள் சொல்வது போல எந்தவித நெருக்கடியுமில்லாமல் பிரச்சினை சுமூகமாகவே முடிந்திருக்கும், ஆசிஸ்குமாருக்கு அல்ல வி.வி. மினரல் நிறுவனத்திற்கு என்பது யாருக்குத்தான் தெரியாதாம்.

 “தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகத்தின் மூலம் கடந்த காலங்களில் 15.55 லட்சம் டன் தாது மணல் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது. நாளொன்றுக்கு 20 கண்டெய்னர்களில் 400 டன் வரை தாதுமணல் ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது. இந்த மணலை வெறும் 40 ஹெக்டேரிலிருந்து மட்டும் எடுத்துவிட முடியாது. இந்தக்காலக் கட்டத்தில் மாவட்ட ஆட்சியராக இருந்த ஆசிஸ்குமார் என்ன நடவடிக்கை எடுத்தார்? எனவே இந்த விவகாரம் குறித்து நீதிபதி தலைமையிலான விசாரணை தேவை? இந்த நேரத்தில் மாவட்ட ஆட்சியரை நல்லவர் போல சித்தரிப்பது சரியானதல்ல. பல புகார்கள் ஆட்சியராக இருந்த ஆசிஸ்குமார் மீது உள்ளன. இது தொடர்பாக தலைமைச் செயலருக்கு கடந்த மார்ச் மாதம் கடிதம் எழுதியுள்ளேன். பல்வேறு புகார்களில் சிக்கியுள்ள ஆசிஸ்குமாருக்கு எந்தவித பொறுப்பும் வழங்காமல் அவரிடம் உரிய விசாரணை மேற்கொண்ட பிறகே பொறுப்புகளை வழங்கவேண்டும்” என மார்ச்சிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு உறுப்பினர் கனகராஜ் கூறியதாக தினமணி செய்தி வெளியிட்டுள்ளது.

 இப்போது நாம் தினமணியிடம் நமக்குள்ள சில அய்யங்களை கேள்விகளாகக் கேட்க விரும்புகிறோம்.

1. 15.55 லட்சம் டன் தாதுமணல் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதியாகி உள்ளதோடு நாள்தோறும் 400டன் தாதுமணல் ஏற்றுமதி செய்யப்பட்டுக் கொண்டிருக்கும் செய்தி ஒரு கட்சியின் பொறுப்பாளருக்கே தெரியும்போது, இவ்வளவு நாட்களாக இம்மணல் கொள்ளை தினமணியின் துப்பறியும் சாம்புகளின் கவனத்திற்கு வராமல் போனது எப்படி?

2. இயற்கையை, சுற்றுச்சூழலை, மக்களின் வாழ்வாதாரத்தை அழித்து கோடிகோடியாக கொள்ளை அடித்த இம்மணல் கொள்ளையர்கள் மீது இதுவரை தினமணியின் பார்வை பதியாதது ஏன்?

3. “விதிமுறைகளை மீறி 4,91,208 க்யூபிக் மீட்டர் அளவு மணல் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது தூத்துக்குடி மாவட்டத்தில், 8 மணல் குவாரிகளும், திருநெல்வேலி மாவட்டத்தில் 27 குவாரிகளும் சட்டவிரோதமாக செயல்படுகின்றன” என்று ஆட்சியர் ஆசிஸ்குமார் வெளிப்படுத்திய உண்மையை ஏன் தினமணி செய்தியாக வெளியிடவில்லை? முறைகேடாக செயல்பட்டு வரும் மேற்படி குவாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தும் வகையில் இனியாவது தினமணியின் புலனாய்வுச் செய்தியாளர்களின் பேனாவும், கேமராவும் குவாரியின் பக்கம் திரும்புமா?

4. ஆசிஸ்குமார் மீது புகார் இருந்தால் அவர்மீதான சட்ட நடவடிக்கையை நாம் வரவேற்கிறோம். ஆனால் எது எதற்கோ ‘நமது நிருபர்’ என்ற பெயரில் சிறப்புச் செய்தி வெளியிடும் தினமணி ஆசிரியர் குழு, தென்மாவட்டத்தையே ஆட்டிப் படைக்கும் வி.வி.மினரல்சின் மணல் கொள்ளையை சிறப்புச் செய்தியாக வெளியிடுமா?

5. கடந்த 2 மாதங்களுக்கு முன்பு சாத்தான்குளம் வட்டத்திலுள்ள படுக்கப்பத்து பகுதியில் சட்டவிரோதமாக தாதுமணல் எடுத்த டி.எம்.சி. நிறுவனத்திற்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. 2,84,744 மெட்ரிக் டன் மணல் கூடுதலாக எடுத்துள்ளனர். இதற்கு அபராதமாக 3 கோடியே 10லட்சத்து 25 ஆயிரத்து 250 ரூபாயை வசூலித்துள்ளார் ஆட்சியர் ஆசிஸ்குமார். இதற்கு முன்பு தூத்துக்குடி மாவட்ட ஆட்சியராக இருந்தவர்கள் யாரேனும் இவ்வளவுப் பெருந்தொகையை மணல் கொள்ளையர்களிடம் வசூலித்த வரலாறு ஏதேனும் கடந்த காலத்தில் உண்டா? என்று தினமணியால் கூறமுடியுமா?

 தாமதமான நடவடிக்கையாக இருந்தாலும் இப்போதாவது செய்தாரே என்று ஆட்சியரைப் பாராட்டி எழுதுவதற்குப் பதிலாக, நடவடிக்கை எடுத்தவரையே குற்றவாளிக் கூண்டில் நிறுத்த நடுநிலை நாளேடான தினமணி முயற்சிப்பது யாரைக் காப்பாற்ற? யாரை மகிழ்விக்க? என்று நமக்கொன்றும் தெரியாமல் இல்லை.

Pin It