தமிழ், ஆங்கிலம் இரு மொழிகளிலும் புலமைப்பெற்ற ஒரு அறிஞர் சிறப்புரையாற்றுகையில் இவ்வாறு சொன்னார் “சிலப்பதிகாரத்தை இயற்றிய இளங்கோவடிகள் ஆங்கிலத்தை எவ்வளவு அழகாக கையாண்டிருக்கிறார் தெரியுமா! சிலப்பதிகாரத்தில் உயிரூட்டமான இடம் மதுரையில் பாண்டிய மன்னன் நெடுஞ்செழியனை கற்புக்கரசி கண்ணகி சந்திக்கிற இடம்தான். கண்ணகி,தன் கணவனுக்கு கிடைத்த அநீதிக்காக சிலம்பை ஒடித்து, மன்னனிடம் நீதி கேட்கிறாள். தன் தவறை உணர்ந்த பாண்டிய மன்னன் சொல்கிறான். என்னவொரு ஆங்கிலப்புலமை பாருங்கள். யான் No (நோ) அரசன். நான் a (ஏ) கள்வன்“. ஒரு சிறப்புரை எப்படியெல்லாம் சிரிப்புரையாகிறது. இதை எத்தனைப்பேர் இதை ரசித்தார்கள். எத்தனைப்பேர் ஏற்றுக்கொண்டார்கள் என்பதை பற்றியெல்லாம் அவருக்கு கவலையில்லை. அவருக்குத் தேவை கைத்தட்டல். அதை அவர் அதிகமாகவே அறுவடை செய்துவிட்டார்.

தேவநேயப்பாவாணர் ஒரு நாள் பால் வாங்கிக்கொண்டு மிதிவண்டியில் சென்று கொண்டிருந்தார். அவர் மீது ஒரு சிறுவன் மோத, பாவாணர் கீழே விழுந்துவிட்டார். பால் சிந்திவிட்டது. மோதியவன் “மன்னித்துக் கொள்ளுங்கள் அய்யா“ என்றான். சினம் கொண்டிருந்த அந்த சூழ்நிலையிலும் பாவாணர் சொன்னார். ”பொறுத்துக்கொள்ளுங்கள் என சொல்லுங்கள் தம்பி”. எந்த நிலையிலும் தனித் தமிழில் பேச முடியும் என்பதற்கு இது ஒரு உதாரணம்.

 மொழியில் கலப்பு நீக்கமற எல்லா மொழிகளிலும் நடந்தேறிவிட்டது. ஆனால் மொழி கலப்பிற்கு எதிராக முதலில் குரல் கொடுத்தவர் ரஷ்யாவின் தந்தை என அழைக்கப்படும் லெனின்தான். ருஷ்யன் மொழியுடன் பிற மொழிகள் கலப்பதை, கலந்து பேசுவதை வன்மையாகக் கண்டித்தார் அவர். அதற்குக் காரணம் அவர் ருஷ்யன் மொழியை அதிகமாக நேசித்தார் என்பதால் அல்ல. பலதரப்பட்ட மக்களை நேரடியாக சந்தித்து மக்கள் குறைகளை கேட்டறியும் போது, மக்கள் பேசும் பல்வேறு மொழிகள் அவருக்குப் புரியவில்லை என்பதால்.

துருக்கி தேசத்து அதிபர் முஸ்தபா கமால் (அத்தாதுர்க்) அவர்கள் லெனினை விடவும் ஒரு படி சென்று அவரது மொழியில் சீர்த்திருத்தம் மேற்கொண்டார். அந்த சீர்த்திருத்தத்தை அவருடைய பெயரிலிருந்து தொடங்கினார். கமால் என்பது பாரசீக மொழி என்பதால் தன்னுடைய பெயரை அத்தாதுர்க் என துருக்கீஸ் மொழிக்கு மாற்றிக்கொண்டார். மேலும் அவர் மக்கள் பயன்படுத்திய 1,58,000 அந்நிய சொற்களை களைந்து தனி துருக்கீஸ் மொழிக்கு மாற்றினார். அவர் ஏற்படுத்திய மொழி சீர்த்திருத்தம் உலக மொழி சீர்த்திருத்தத்திற்கு முன்னோடியானதாகும். மதராஸ் சென்னையானது, பம்பாய் மும்பையானது, கல்கத்தா கொல்கத்தா ஆனது, ஒரிஸா ஒடிசி ஆனது இவை அனைத்திற்கும் முன்னோடி முஸ்தபா அத்தாதுர்க்தான். அவர்தான் முதன்முதலில் நகரத்தின் பெயரை தாய்மொழிக்கு மாற்றினார். ஆம், துருக்கி தேசத்தில் வரலாற்று சிறப்புமிக்க நகரமான கான்ஸ்டான்டி நோபிள் என அழைக்கப்பட்ட நகரத்தை இஸ்த்தான்புல் என மாற்றினார்.

திருக்குறளில் திருவள்ளுவர் பயன்படுத்தாத எழுத்து ஔ. மக்கள் ஔ என்கிற எழுத்தை ஒ, ள என இரண்டு எழுத்துகளாக புரிந்து கொள்ள நேரிடும் என்பதால் அவர் அந்த எழுத்தை கையாளவில்லை. அவருடைய வாரிசுகளாகிய நாம் ல, ள என்கிற எழுத்தை இடமாற்றியும், ழ எழுத்தை மழுங்கடித்தும் வருகிறோம். 18.07.1967 அன்று மெட்ராஸ் ஸ்டேட் தமிழ்நாடு என்றானது. பிற மொழி பேசுபவர்களுக்கும், தமிழர்களுக்கும் ழ என்கிற எழுத்தை உச்சரிப்பதில் தடுமாற்றம் இருப்பதால் தமிழில் தமிழ் நாடு என்றும் ஆங்கிலத்தில் Tamil nadu (டமில் நாடு) என்றும் இருக்கட்டும் என விட்டுவிட்டார்கள். இது ழ என்கிற எழுத்திற்கு ஏற்பட்டிருக்கும் அநீதி. ஆத்திசூடி இயற்றிய ஔவையார் இன்று இருந்திருந்தால் ஙப்போல் வளை என்பதை ழப்போல் வளை என்றுதான் எழுதியிருப்பார். மதராஸ் சென்னை என மாறியதைப்போல Tamil விரைவில் Thamizh என மாற வேண்டும்.

கொடைக்கானல் பண்பலை “செப்புக செந்தமிழ்” என்றொரு நிகழ்ச்சியை வழங்கி வருகிறது. அதை எவ்வளவு பேர் விரும்பி கேட்கிறார்கள் என்று தெரியவில்லை. ஆனால் அந்த நிகழ்ச்சியில் பங்கேற்று தனித்தமிழ் பேச முயற்சிப்பவர்களின் எண்ணிக்கை ஒவ்வொரு ஆண்டும் அதிகரித்துக்கொண்டே வருவது ஆறுதலான செய்தியாகும். அந்த நிகழ்ச்சியில் நேயர்கள் படும் பாடுகளை கவனித்தால் சிரிப்பும், வியப்பும் ஒரு சேர வரும். ஆனால் பாராட்டத்தக்க, பிரமிக்கத்தக்க நிகழ்ச்சி அது. ஒரு மொழியை தனி மொழியாக செப்ப வைக்க, இதைவிட சிறந்த வழி கிடையாது.

இங்கிலாந்து நாட்டில் 1918 ஆம் ஆண்டு தனி ஆங்கிலக்கழகம் என ஒரு அமைப்பு தோற்றுவிக்கப்பட்டது. இதன் முக்கிய நோக்கம் ஆங்கிலத்தை கலப்பினமில்லாமல் அடுத்தடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்வது. அதை முன்னிட்டு இந்தக்கழகம் ஒவ்வொரு ஆண்டும் சர்வதேச அளவில் ஆங்கில உச்சரிப்பு போட்டி நடத்தி பரிசு வழங்கி வருகிறது. சென்ற வருடம் நடைபெற்ற அந்த போட்டியில் ஆங்கில உச்சரிப்புகளை மிக அழகாக உச்சரித்து முதல் பரிசை வென்றவர் ஆறு வயதுடைய ஒரு அமெரிக்க மாணவி. அவர் இந்திய வம்சாவளி.

 இங்கிலாந்தில் தனி ஆங்கிலக்கழகம் இயங்கி வருவதைப்போல சிங்கப்பூரிலும் ஒரு ஆங்கிலக்கழகம் இயங்கிக் கொண்டிருக்கிறது. கடந்த வாரம் சிங்கப்பூர் “தி ஸ்டிரெய்ட் டைம்ஸ் “ நாளிதழும், மலேசிய நாட்டைச்சேர்ந்த “ஆர்.பி.எச். வங்கிக்குழுமமு”ம் இணைந்து ஆங்கில உச்சரிப்பு போட்டியை நடத்தியது. இப்போட்டியில் முதல் பரிசு பெற்றவர் அஸ்வின் சிவக்குமார். ஆறாம் வகுப்பு மாணவரான இவரும் இந்திய வம்சாவளியைச் சார்ந்தவரே. தமிழ்நாட்டில் அல்லது தமிழ் மொழி பேசப்படும் ஏதேனும் ஒரு தேசத்தில் தமிழ் மொழிக்கென்று இப்படியொரு அமைப்பு இருக்கிறதா? இந்த இடத்தில் கேட்டாக வேண்டிய கேள்வி இது.

தொல்காப்பியத்தை இயற்றியவர் யார்? திரணதூமாக்கினி. திருக்குறளை இயற்றியவர் யார்? சீவல்லப்பர். என்ன வியப்பாக இருக்கிறதா? ஆம் இப்படியொரு கருத்து திணிப்பு பதினெட்டாம் நூற்றாண்டில்இருந்திருக்கிறது. திரணதூமாக்கினி என்பவர் வட நாட்டுக்காரராம். வடமொழி அறிஞரான இவர்தான் வடமொழி இலக்கணங்களை தொல்காப்பியமாக தமிழ் மொழியில் எழுதினாராம். அதே போன்று சீவல்லப்பர் என்பவரும் வடநாட்டவரே. அவர் தமிழ் நாட்டிற்கு பயணம் மேற்கொண்டு வடமொழி கருத்துகளை திருக்குறளாக இயற்றினார். இது எப்படி இருக்கு? அது மட்டுமல்ல! அவர் அறத்துப்பால் தர்மசாத்திரத்தையும், பொருட்பால் அர்த்தசாத்திரத்தையும், காமத்துப்பால் காமசூத்திரத்தை தழுவி இயற்றினார். அவர்தான் பிற்காலத்தில் தமிழ் மொழி பேசும் மக்களால் திருவள்ளுவர் என அழைக்கப்பட்டார். இப்படியான பொய்ப்பிரச்சாரம் இன்றும் வட இந்தியாவில் இருக்கிறது. இத்தகைய அவதூரான கருத்து திணிப்புகளை கண்ட மறைமலையடிகள் 1916 ஆம் ஆண்டு தனித்தமிழ் கொள்கையை கையில் எடுத்தார்.

ஒரு நாள் மறைமலையடிகளிடம் அவரது மகள் நீலாம்பிகை அம்மையார் வள்ளலார் இயற்றிய ஒரு பாடலை ஒப்பித்துக் கொண்டிருந்தார். ”பெற்ற தாய்தனை மக மறந்தாலும், பிள்ளையைப் பெறும் தாய் மறந்தாலும், உற்ற தேகத்தை உயிர் மறந்தாலும். . . . . . ” என மகள் ஒப்பித்துக்கொண்டிருக்கையில் சட்டென மகளை நிறுத்தினார் அடிகள். மகளிடம் தேகம் என்பது பிறமொழி சொல் அதற்கு இணையான தனித்தமிழ் சொல் “யாக்கை” என திருத்தினார். அடிகளின் திருத்தத்தை ஏற்றுக்கொண்ட மகள் நீலாம்பிகை அம்மையார், தாங்களின் பெயரை தனித்தமிழுக்கு மாற்றிக்கொள்ள விளித்தார். மகளின் வேண்டுகோளை ஏற்றுக்கொண்ட அவர், சுவாமி வேதாசலம் என்கிற தன் பெயரை மறைமலையடிகள் என மாற்றிக்கொண்டார். அத்துடன் அவர் நின்றுவிடவில்லை. அவர் நடத்திக் கொண்டிருந்த சமரச சன்மார்க்க நிலையத்தை பொதுநிலைக்கழகம் என்றும், ஞானசாகரம் வெளியீட்டை அறிவுக்கடல் என்றும் மாற்றிக்கொண்டார். பதினெட்டாம் நூற்றாண்டில் வாழ்ந்த சிவஞான அடிகளின் கொள்கை மீது அதீத பற்றுக்கொண்டவர் மறைமலையடிகள் “மொழி தாழ்ந்தால், இனம் தாழும்” என்கிறார்.

தென் இந்திய மொழிகள் திராவிட மொழிகள் என அழைக்கப்படுகிறது. அதன்படி தமிழ், கன்னடம், மலையாளம், தெலுங்கு மொழிகள் திராவிட மொழிகள். திராவிடம் என்கிற சொல் தமிழ் நாட்டில் மட்டுமே பயன்படுத்தப்படுகிறது. இரவீந்திநாத் தாகூர் இயற்றிய ஜன கண மன. . . . . . . . . . . . . தேசிய கீதத்தில் தென் இந்திய மொழிகளை திராவிட என்கிற ஒரு சொல்லிற்குள் அடைத்துவிட்டார். ஆனால் கன்னட, தெலுங்கு, மலையாள மொழி ஆய்வாளர்கள் தங்கள் மொழிகளை திராவிட மொழிகள் என்பதை ஏற்க மறுக்கிறார்கள். காரணம் கால்டுவெல் எழுதிய திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம் என்கிற நூலில் திராவிட என்கிற சொல் தமிழ், திரமிள, திராவிட என மறுவி வந்திருப்பதாக பதிவு செய்திருக்கிறார். தமிழ்தான் திராவிடமாக மருவி வந்திருப்பதால் தங்கள் மொழிகள் திராவிட மொழிகள் அல்ல என்கிறார்கள் அவர்கள்.

திராவிட மொழிகளில் தலையான மொழி தமிழ். ஆனால் தென்னிந்தியாவில் அதிகமாக பேசப்படும் மொழி தமிழ் அல்ல. தெலுங்கு. தென் இந்தியாவில் அதிக படைப்பாளர்களை கொண்ட மொழி தமிழ். ஆனால் அதிக முறை இலக்கியத்திற்கான ஞானபீட விருது பெற்றவர்கள் மலையாள எழுத்தாளர்கள். இந்திய பாராளுமன்ற நூலகம் வரிசைப்படுத்திய உன்னதமான பத்து நாவல்களில் தகழி சிவசங்கரப் பிள்ளை எழுதிய தோட்டியின் மகன் நாவல் இடம் பெற்றிருக்கிறது. ஆனால் தமிழ் நாவல் அதில் இடம் பெறவில்லை.

உலகத் தமிழ் மாநாடுகள் நடைபெறுவதற்கு முன்பே உலக கன்னட மாநாடு நடைபெற்றிருக்கிறது. தமிழ் நாட்டில் தனித்தமிழ் கொள்கை சிறந்தோங்குவதற்கு முன்பே தனி கன்னடம், தனி மலையாளம், தனி தெலுங்கு என்கிற கொள்கை தலைத்தோங்கியிருக்கிறது.

கன்னட மொழியை தாய்மொழியாகக் கொண்ட மைசூர் தேசத்தை இராட்டிரகூட மன்னன் ஆட்சி செய்து வந்தார். அவர் திருள் கன்னடம் கொள்கையை கடைப்பிடித்து தேசத்தை ஆண்டார். கன்னட மொழியுடன் பிற மொழிகள் கலக்காமல் நூல் எழுதுபவர்களுக்கு, பேசுபவர்களுக்கு பரிசு வழங்கி ஊக்கப்படுத்தினார். தனி கன்னட எழுத்தாளர்களுக்கு முன்னோடி அவரே. அவர் ”கவிராஜ மார்க்கம்” என ஒரு நூல் எழுதினார். அந்நூல் பிறமொழி கலப்பில்லாமல் எழுதப்பட்ட முதல் திருள் கன்னட நூல் ஆகும். இராட்டிரகூட மன்னன் “கன்னடத்தில் பிற மொழிகள் கலப்பது, சுடுபாலில் மோரைக்கலப்பது போன்றது“ என்கிறார். அவரை இந்திய மொழியாளர்கள் ”கன்னட மறைமலையடிகள்” என அழைக்கிறார்கள்.

  தெலுங்கு மொழி பேசும் ஆந்திர பிரதேச மாநிலத்தில் தூய தெலுங்கு நூல் என்றால் அது பொல்லிகண்டி தெலக நாரியா என்பவர் 1578 ஆம் ஆண்டு எழுதிய “யயாதி சரித்திரம்” என்கிற நூல்தான். அதுதான் தனி தெலுங்கில் வெளிவந்த முதற்காப்பியம் ஆகும். இந்நூலைத் தொடர்ந்து கூச்சி மஞ்சி திம்மகவி, வீரேசலிங்கம், ஆதிபட்ட நாராயணதாசு போன்ற நூல்கள் வெளிவந்தன.

  பச்ச மலையாளம் எனகிற இலக்கண நூலை லீலாதிலகம் என்பவர் இயற்றினார். தமிழ் மொழிக்கு எப்படி பவனந்தி முனிவர் எழுதிய நன்னூல் தவிர்க்க முடியாத இலக்கண நூலோ அப்படி மலையாளத்திற்கு பச்ச மலையாளம். இன்று திருக்குறளுக்கு நூற்றுக்கணக்கானோர் உரை எழுதியிருக்கிறார்கள். எழுதிக்கொண்டிருக்கிறார்கள். ஆனால் பரிமேலழகர் உரையே மிகவும் உன்னதமான உரை என போற்றப்படுகிறது. அதேபோன்று பச்ச மலையாளம் என்கிற இலக்கண நூலுக்கு பலர் உரை எழுதியுள்ளனர். அவற்றில் சிறப்பான உரை என்பது “குமரன் ஆசான்” எழுதிய உரைதான். அந்த உரை பிறமொழி கலப்பில்லாமல் தூய மலையாளத்தில் எழுதப்பட்ட உரையாகும்.

 திருக்குறள் ஆதி நூல். மொழி கலப்பில்லாமல் தனித்தமிழில் எழுதப்பட்ட முதல் நூல். ஆனால் அதற்கு உரை எழுதுபவர்கள் பல மொழிகள் கலந்து எழுதுவதை என்னவென்று சொல்வது. . . . ?. “படை குடி கூழ் அமைச்சு நட்பு அரண்... ” என்கிற குறளுக்கு உரை எழுதும் ஆசிரியர்கள் அமைச்சு என்பதை மந்திரி என திரிக்கிறார்கள். அதையும் முந்திரி என அச்சுப்பிழையுடன் நூல் வடிக்கிறார்கள்.

மறைமலையடிகள் தமிழக இலக்கியங்களை ஆராய்ந்து பிறமொழி கலப்பினங்களை கண்டறிந்து அதற்கு இணையான தமிழ்சொற்களை புகுத்த தொடங்கினார். அவர் கலந்து கொண்டகருத்தரங்குகளின் வாயிலாக அதற்கு இணையான தமிழ் சொற்களை பயன்படுத்தக் கேட்டுக்கொண்டார். தொடக்கத்தில் நல்லதொரு ஆதரவு அவருக்கு கிடைத்தது. உயர்ந்த படைப்புகள் என கொண்டாடப்படுகிற சில தமிழ் இலக்கியங்களிலுள்ள பிறமொழிச் சொற்களை களைய முற்பட்டார். அவரது சீர்த்திருத்தத்தை மற்ற அறிஞர்கள் விமர்சிக்கத் தொடங்கிவிட்டார்கள்.

 தனித்தமிழ் முழக்கம் என்பது இன்று பேச்சளவில் மட்டுமே இருக்கிறது. அதை கொள்கையாக கடைப்பிடிப்பதில் பெரிய சவால் இருக்கவே செய்கிறது. தமிழ் நாட்டிலுள்ள கல்விக்கூடங்கள் “நீராருங் கடலுடுத்த“ தமிழ்த்தாய் வாழ்த்துடன் தொடங்குகிறது. அப்பாடலில் தக்கசிறு பிறைநுதலும் தரித்தநறுந் திலகமுமே! என ஒரு வரி வருகிறது. திலகம் என்பது பிறமொழிச்சொல். அதற்கு இணையான சொல் பொட்டு என்கிறார் மறைமலையடிகள். அப்பொட்டு வாசனைப்போல அனைத்துலகும் இன்பமுற... என திருத்தி பாட முடியுமா? அவ்வாறு திருத்துவதை மனோன்மணியம் பெ.சுந்தரம்பிள்ளை ஏற்பாரா? அவரே ஏற்றுக்கொண்டாலும் அவரது பிள்ளைகளான நாம் ஏற்றுக்கொள்வோமா?

 - அண்டனூர் சுரா (பள்ளி ஆசிரியர்), கந்தர்வகோட்டை. தொடர்புக்கு 9585657108

Pin It