ஆந்திராவைப் பிரித்து தனித் தெலுங்கானா அமைக்கப்படும் என்று காங்கிரசு கட்சி அறிவித்திருக்கிறது. பாஜக, திமுக, இபொக போன்றவை இதை ஆதரித்து இருக்கின்றன; சில கட்சிகள் மட்டுமே எதிர்த்து இருக்கின்றன

தெலுங்கானா தனிமாநில அறிவிப்பு வெளியானவுடன் தெலுங்கானா ராஷ்ட்ரிய சமிதி கட்சியின் தலைவர் சந்திரசேகரராவ் தமது கட்சியை காங்கிரசு கட்சியுடன் இணைக்கப் போவதாக அறிவித்திருக்கிறார். இதன் மூலம் அவரது தனித்தெலுங்கானா கோரிக்கையின் உண்மை நோக்கத்தை மக்கள் புரிந்துகொள்ள வேண்டும். எந்தவிதமான வர்க்கப் பார்வையும் அற்ற சந்திரசேகரராவ் போன்ற கார்ப்ரேட் கட்சிகளைச் சேர்ந்த பிழைப்புவாதிகளின் பின் அணிதிரண்டு போராடிய மக்கள் அதற்கான விலையை கூடிய விரைவில் தரப்போகிறார்கள்.

ஏறக்குறைய அறுபது ஆண்டுகால மக்கள் போராட்டத்தை மதித்து இந்த முடிவை எடுத்ததாக காங்கிரசு கட்சி கூறுகின்றது. காங்கிரசின் இந்தக் கரிசனம் நம்மை நெகிழ வைக்கின்றது! ஆனால் இந்த அறுபது ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் தனி மாநிலக் கோரிக்கைகளின் உள்ளடக்கத்தையும் மாற்றி உள்ளது.

1946-1951 வரை நடைபெற்ற தெலுங்கானா போராட்டத்திற்கும் இப்போது நடைபெறும் தெலுங்கானா போராட்டத்திற்கும் மிகப்பெரிய வேறுபாடுள்ளது. அன்று ஒன்றுபட்ட கம்யூனிஸ்டு கட்சியின் தலைமையில் செங்கொடிகளுடன் போரிட்டு ஏறக்குறைய 4000 பேர்வரை உயிர்த்தியாகம் செய்து நடைபெற்ற அந்த வீரம்சொறிந்த போராட்டம் இந்திய நிலப்பிரபுத்துவத்தையே நடுங்கச் செய்தது. பல இலட்சம் ஏக்கர் விளைநிலங்கள் நிலப்பிரபுக்களிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்டு ஏழை விவசாயிகளிடம் பிரித்துக் கொடுக்கப்பட்டு நிலப்பிரபுத்துவத்திற்கு சாவுமணி அடிக்கப்பட்டது.

டாங்கோ, அஜய்குமார் கோஷ், காட்டே, ரவி நாராயண ரெட்டி போன்ற துரோகிகளால் காட்டிக் கொடுக்கப்பட்ட போராட்டம் போலி சோசலிஸ்டு நேரு தலைமையிலான அரசால் பாரிய இழப்புக்கு உள்ளாகி தோல்வியைத் தழுவியது. போலி கம்யூனிஸ்ட்டுக்கள் தேர்தல் பாதையைத் தேர்ந்தெடுத்து நிலப்பிரபுக்களின் கள்ளக்கூட்டாளிகளாக மாறி போராடும் மக்களுக்கு துரோகம் இழைத்தனர். ஆனால் நிலப்பிரபுக்களை எதிர்த்து நடந்ததால் அது வரலாற்றில் முற்போக்கான பாத்திரம் வகித்தது.

ஆனால் இன்று தெலுங்கானா ராஷ்ரிய சமிதி போன்ற கார்ப்ரேட் கட்சிகளின், கார்ப்ரேட் கைக்கூலிகளின் தலைமையில் நடைபெறும் தனித்தெலுங்கானா போராட்டம் முழுவதும் தமக்கான வாழ்வாதாரம் சார்ந்ததாகவே உள்ளது. தெலுங்கானா தனியாகப் பிரிக்கப்பட்டால் அரசுவேலைகளில் தமக்கு முன்னுரிமை கிடைக்கும்; புதிய தொழில் வாய்ய்ப்புகள் உருவாக்கப்படும்,போன்ற கோரிக்கைகளின் அடிப்படையிலேயே பொதுமக்களும் மாணவர்களும் போராடினார்கள். வர்க்க உணர்வு பெற்ற மக்களின் போராட்டமாக இதை நாம் பார்க்கமுடியாது. தெலுங்கானா பகுதி மக்கள் தெலுங்கானாவிற்கு வெளியே உள்ள மேட்டுக்குடி மக்களால் சுரண்டப்படுகிறார்கள் என்பது உண்மையே. ஆனால் இதற்கான அடிப்படை காரணம் என்பது முதலாளித்துவமே ஒழிய வேறல்ல. தனித் தெலுங்கானா பிரித்துக்கொடுக்கப்பட்டால் தங்களுடைய வாழ்வாதாரம் மேம்படும் என்று தெலுங்கானா பகுதி மக்கள் நினைத்தால் அது அறியாமையே ஆகும். முதலாளித்துவத்திற்கு ஒரே முகம்தான் என்பதை அவர்கள் கூடிய விரைவில் அறியப்போகிறார்கள்.

இன்றைய ஏகாதிபத்திய காலகட்டத்தில் இதுபோன்ற தனிமாநிலக் கோரிக்கையென்பது அதுவும் ஒரே மொழி பேசும் மக்கள் உள்ள மாநிலங்கள் இரண்டாகப் பிரிக்கப்படுதல் என்பது ஏகாதிபத்திய, தரகுமுதலாளிகளின் சுரண்டலுக்கே வழிவகுக்கும்.

எந்தவிதமான முற்போக்கு பாத்திரமும் வகிக்காத இன்றைய தனித் தெலுங்கானா போராட்டம் அடிப்படையில் முதலாளித்துவ கட்சிகளால் தூண்டிவிடப்பட்டு அவர்கள் பாட்டாளி வர்க்கத்திற்கு தலைமை தாங்கி நடத்தப்பட்டதாகும். பாட்டாளி வர்க்கத்தால் தலைமை தாங்கப்பட்டு தரகுமுதலாளித்துவத்திற்கு எதிராகவும், ஏகாதிபத்தியத்திற்கு எதிராகவும் நடக்கும் போராட்டங்களை மட்டுமே நாம் ஆதரிக்க முடியும். முதலாளித்துவ ஜனநாயக அமைப்பில் ஒரே மொழி பேசும் மக்கள் இருவேறு மாநிலமாக பிரிவதென்பது அதுவும் பொருளாதார நலன் சார்ந்து பிரிவதென்பது மிகவும் பிற்போக்கான செயல்பாடு ஆகும்.

உண்மையான கம்யூனிஸ்டுகள் தனித்தெலுங்கானாவை இந்த அடிப்படையில் ஆதரிக்க முடியாது. அதேசமயம் தெலுங்கானா பகுதி மக்கள், பிற பகுதி மேட்டுக்குடிகளால் ஒட்ட சுரண்டப்படுவதையும் நாம் அனுமதிக்க முடியாது. இதற்கான சரியான தீர்வு என்பது வர்க்கமாக ஒன்றுபட்டு சர்வதேசியவாத சிந்தனையில் நின்று பாட்டாளி வர்க்கப் புரட்சிக்கு அறைகூவல் விடுவதேயாகும்.

Pin It