எரிமலை வெடிப்பில் இருந்து உருவான நாடு மாரிசியசு (Mauritius).

ஆப்பிரிக்கக் கண்டத்தின் தென்கிழக்கில் 2000 கி.மீ. தொலைவில் இந்துமாக் கடற்பகுதியில் இருக்கும் தீவுக் கூட்டங்களில் ஒன்று மாரிசியசு. இதன் மொத்த நிலப்பரப்பு 2040 சதுர கி.மீ. 787 (சதுர மைல்).

மாரிசியசு தீவை முதலில் போர்த்துக்கீசியர் அடுத்து, டச்சுக்காரர்கள், பின்னர் பிரெஞ்சுக்காரர்களும் ஆண்டு வந்தனர். 1767-1810 காலஅளவில் பிரான்சு நாட்டின் கட்டுப்பாட்டில் இருந்தபோது, காரைக்கால்-பாண்டிச்சேரியில் இருந்து தமிழர் கள் மாரிசியசுக்கு கூலித் தொழிலாளிகளாகக் கொண்டு செல்லப்பட்டனர்.

தமிழர்களோடு இந்தியாவின் பிற பகுதியிலிருந்து சுமார் 5 இலட்சம் கூலித்தொழிலாளர்கள் கொண்டு சென்றார்கள். மாரிசியசு - பிரிட்டனில் இருந்து 1968 சுதந்தரம் பெற்றது. 1992 குடியரசு ஆனது.

மாரிசியசு இன்றைய மக்கள் தொகை சுமார் 13 இலட்சம். இவர்களில் 1.15 இலட்சம் பேர் தமிழர்கள். இவர்களில் பெரும்பாலோர்க்குத் தமிழ் மொழியைப் படிக்கவும் எழுதவும் தெரியும்; ஆனால் பேசவராது. 7000 தமிழர்கள் மட்டுமே தமிழை இயல்பாகப் பேசுகின்றனர்.

தமிழர்கள் எண்ணிக்கையில் குறைந்து இருந்தாலும் தமிழுணர்வில் ஒப்பற்று விளங்குகிறார்கள். இதனால் மாரிசியசு மத்திய வங்கி வெளியிடும் நாணயத் தாள் களில் பண மதிப்பு தமிழிலும் - தமிழ் எண் களிலும் இடம் பெற்றுள்ளது. 25, 50, 100, 200, 500, 1000 என பணத் தாள்களும் 20, 10, 5, 2, 1 மற்றும் சில் லறைகள் நாணயங்களாகவும் வெளியிடப்படுகிறது.

மாரிசியசு வெளியிடும் இந்த பணத் தாள்களில் தமிழ்மொழிக்கும் தமிழ் எண்களுக்கும் சிறப்புச் சேர்க்கும் வகையில் இடம்பெற்று இருக்கின்றன.

25 ரூபாய் பணத் தாளில்                 உரு

50 ரூபாய் பணத் தாளில்                 ச0

100 ரூபாய் பணத் தாளில்               க00

1000 ரூபாய் பணத் தாளில்             க000

என ரூபாய் மதிப்பு குறிப்பிடப்பட்டுள்ளது.

தமிழ் எண்களைத் தமிழகத்திலேயே பலரும் முறையாக அறிந்து கொள்ளாத நிலையில், மாரிசியசு பணத் தாள்களில் தமிழ்மொழியும், தமிழ் எண்களும் இடம்பெற்று இருப்பது மகிழ்ச்சியை ஏற்படுத்துகிறது.

மாரிசியசில் ஏறத்தாழ 100 ஆரம்பப் பள்ளிகளில் தமிழ் மொழி கற்பிக்கப்படுகிறது. முருகன், விநாயகர், அம்மன் என 125 கோவில்கள் தமிழர் வழிப்பாட்டிற்காக உள்ளன.

மாரிசியசு மக்களின் மொழிகளாக ஆங்கிலம், பிரெஞ்சு, கிரியோல், இந்துஸ்தானி, தமிழ் உள்ளன.

ஆசியக் கண்டத்திற்கு வெளியே ஆப்பிரிக்கக் கண்டத்தில் 70 விழுக்காடு இந்திய வம்சாவளி கொண்ட நாடாகவே மாரிசியசு உள்ளது.

இயற்கை வளம் கொண்ட நாடு. ஆண்டுக்கு 5 இலட்சத் திற்கும் மேற்பட்ட சுற்றுலாப் பயணிகள் சென்றுவரும் மாரிசியசு, சுயக் கட்டுப்பாடும், நேர்த்தியான கட்டமைப்பும், ஒழுக்கத் திற்கும், நாணயத்திற்கும் முன்னுரிமையும், போக்குவரத்துக் கான சாலைவிதிகளும், அன்பான மக்களும், அச்சமில்லா சுற்றுலாத் தளமாகவும் சிறந்து விளங்குகிறது.

கரும்பு விவசாயத்தால் ஆண்டுக்கு 625 இலட்சம் டன் சர்க்கரை உற்பத்தி செய்யப்படுகிறது. தேயிலை, புகையிலை, உருளை பயிர்வளம் கொண்ட நாடு.

கம்பளப் பின்னலாடை, ரம் உற்பத்தி, தேயிலைத் தயாரிப்பு உள்ள மாரிசியசு பவளப் பாறைகள் அதிகம் கொண்ட கடலால் சூழப்பட்ட கடற்கரைகள் கொண்ட நாடு.

தமிழர்களின் உழைப்பிற்கும் - உயர்வுக்கும் மதிப்பும் - மகிழ்ச்சியும் அளிக்கும் நாடு, மாரிசியசு.

Pin It