இந்தியாவில், ஆங்கிலேயர்கள் ஆட்சி அமைக்கும் முன்பு, ‘கிழக்கிந்திய கம்பெனி’ என்ற பெயரில் வர்த்தகம் செய்ய வந்தனர். இந்தியாவில் கால் மட்டும் வைக்க இடம் கேட்டவர்கள் சிறிது காலத்தில் ஆட்சியையே பிடித்து விட்டனர்; நம்மை அடிமை படுத்திவிட்டனர். அது போல, இப்போது இந்தியாவில் பொருளாதார ரீதியாக கால் பதிக்க வெளிநாட்டு நிறுவனங்கள் படையெடுத்து வருகின்றன.

இந்தியா முழுவதும் 10 லட்சத்துக்கும் மேல் மக்கள் தொகை உள்ள 53 பெரு நகரங்களில், வெளிநாட்டு நிறுவனங்கள் அனைத்து தரப்பொருட்களையும் (Multi Brand) விற்கும் பெரிய கடைகளைத் தொடங்க விரும்பினால் 51% முதலீடு செய்யலாம் என்றும், ஒரேயொரு குறிப்பிட்ட தரப்பொருளை (Single Brand) மட்டும் விற்கும் கடையை தொடங்கினால் 100% முதலீடு செய்யலாம் என்றும் மத்திய அமைச்சரவை முடிவு எடுத்து உள்ளது.

உலக வர்த்தக நிறுவனம், இந்தியாவில் சில்லறை வியாபாரத்தில் அன்னிய முதலீட்டை அனுமதிக்க வேண்டும் என்று நிர்ப்பந்திக்கிறது. மத்திய அரசு அதற்கு அடிபணிந்து செயல்படுகிறது.

"சில்லறை வணிகத்தில் பன்னாட்டு நிறுவனங்கள் நுழைவதால் எந்த ஆபத்தும் இல்லை" - என்று உலக வங்கியின் முன்னாள் ஆலோசகரும், தற்போது இந்தியாவின் பிரதமருமான மன்மோகன் சிங் கூறியுள்ளார்.

"ஒரு கோடி பேருக்கு வேலை வாய்ப்புகள் உருவாகும். இந்திய விவசாயிகள் பயனடைவார்கள் , பொருட்களின் தரம் உயரும், விலைவாசி குறையும்" – என்று பிதற்றுகிறார் மத்திய வர்த்தகத் துறை அமைச்சர் ஆனந்த் சர்மா.

"சில்லறை வியாபாரத்தில் பன்னாட்டு நிறுவனங்கள் அடியெடுத்து வைப்பதால், இடைத்தரகர்கள் இருக்கமாட்டார்கள். விவசாயிகளிடம் நேரடியாக விளைபொருட்கள் கொள்முதல் செய்வதால், அவர்களுக்கு நல்ல விலை கிடைக்கும்" - என்று உலக வங்கியின் முன்னாள் ஆலோசகரும் – முன்னாள் மத்திய நிதியமைச்சரும் - தற்போதைய மத்திய உள்துறை அமைச்சருமான - செட்டிநாட்டு சீமான் ப.சிதம்பரம் வக்காலத்து வாங்குகிறார்.

ஆனால், சில்லறை வர்த்தகத்தில் நேரடி அன்னிய முதலீட்டை அனுமதித்தால், வியாபாரிகள், விவசாயிகள், போக்குவரத்து உரிமையாளர்கள் மிகவும் பாதிக்கப்படுவார்கள்.

அன்னிய பன்னாட்டு நிறுவனங்கள் பொருட்களை வாங்கி தங்களது கிடங்குகளில் பதுக்கி வைப்பார்கள். மூன்று அல்லது நான்கு ஆண்டுகள் கழித்து நமது பொருட்களுக்கு கூடுதல் விலை வைத்து நம்மை மிரட்டுவார்கள். நமது பொருட்களை வெளிநாடுகளில் குறைந்த விலைக்கு விற்பார்கள்.

இந்திய பொருளாதாரத்தை நகர்த்தும் சக்கரம் போன்றது சில்லறை வர்த்தகத்துறை. மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 13.8% சில்லறை வர்த்தகத்தின் பங்காகும். பெரிய தொழில் நுட்பக் கல்வி பெறாத, சாமானிய சமூகத்தின் பின் தங்கிய பகுதி மக்களுக்கு வேலை வாய்ப்புகளை சில்லறை வர்த்தகத் துறை உருவாக்கித் தந்திருக்கிறது. இந்தியாவில் 50% மக்களுக்கு சுய வேலை வாய்ப்பை சில்லறை வர்த்தகம் அளித்துள்ளது. “இந்தியா உலக சில்லறை வர்த்தகத்தின் கேந்திரமான நாடு" என சர்வதேச ஆய்வுகள் குறிப்பிடுகின்றன.

அமெரிக்க நாட்டு நிறுவனமான வால்மார்ட், பிரான்ஸ் நாட்டு வணிக நிறுவனமான கேரிபோர், இங்கிலாந்து நாட்டு நிறுவனமான டெஸ்கோ ஆகிய நிறுவனங்கள், பல வெளிநாடுகளில் தங்கள் முதலீடுகளை சில்லறை வணிகங்களில் போட்டு, அங்கெல்லாம் சில்லறை வர்த்தகங்களே இல்லாத ஒரு நிலையை உருவாக்கி விட்டன‌.

எந்த நாட்டில் என்ன பொருள்கள் விளைகிறது என்பதை அறிந்து, நேரடியாகச் சென்று ஏகபோக கொள்முதல் செய்து இருப்பு (ஸ்டாக்) செய்து விடுவதுடன், உலகம் முழுவதும் உள்ள தங்கள் நிறுவனங்களின் கடைகளுக்கும் அனுப்பி உலகத்திலுள்ள ஏழை மக்களை சுரண்டி விடுவார்கள். எந்த பொருள்கள் என்றாலும் அவற்றை கொள்முதல் செய்வதிலும் , விற்பனை செய்வதிலும் ஏகபோகத்தை நிறுவிவிடுவார்கள். இத்தகைய பன்னாட்டு நிறுவனங்கள் ஒரு நாட்டில் நுழைந்து விட்டால், அந்த நாட்டில் சில்லறைக் கடைகள், இல்லாத நிலையை ஏற்படுத்தி விடுவார்கள்.

இந்த ஏகபோக சாம்ராஜ்யத்துக்கு முன்னால் சின்னஞ்சிறு பெட்டிக்கடைகளும், சிறிய கடைகள் வைத்திருப்போர்களும் பாதிக்கப்படுவார்கள். “ஆடிக்காற்றில் அம்மியே பறக்கும் போது, அப்பளம் என்ன ஆகும்?" என்னும் பழமொழிக்கேற்ப இந்தியாவில் சில்லறை வர்த்தக நிறுவனங்கள் காணாமல் போய்விடும். கடைகள் மட்டும் காணாமல் போய்விடாது; அதில் பணிபுரிபவர்கள், அந்த வியாபாரத்தை நம்பி பொருட்களை விற்பவர்கள், அந்த விற்பனையை நம்பி சிறிய அளவில் பயிர் சாகுபடிகளை மேற்கொள்ளும் சிறிய விவசாயிகள், உற்பத்தி செய்யும் இடத்திலிருந்து மொத்த மார்க்கெட்டுக்கும், மொத்த மார்க்கெட்டிலிருந்து கடைகளுக்கும் கொண்டு போய் சேர்க்கும் போக்குவரத்துத் தொழிலாளர்கள், சுமை தூக்கும் பணியில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்கள் என அனைவரின் வாழ்விலும் மண் விழும்.

அன்னிய நிறுவனங்கள் மூன்றில் ஒரு பங்கு பொருட்களை இந்திய சிறுதொழில் நிறுவனங்கள், விவசாயிகள், கைவினைக் கலைஞர்கள் ஆகியோரிடமிருந்து நேரடியாக கொள்முதல் செய்ய வேண்டும் என்று மத்திய அரசு கூறுகிறது. உலக வர்த்தக அமைப்பின் ஒப்பந்தத்தில் அப்படி எந்த ஒரு விதியும் இல்லை என பன்னாட்டு நிறுவனங்கள் அறிவிக்கின்றன. மத்திய அரசின் நிபந்தனையான, 30% பொருட்களை சிறுதொழில் நிறுவனங்களிடமிருந்து தான் கொள்முதல் செய்திட வேண்டும் என்பதை, அன்னிய நிறுவனங்கள் மதிக்கப் போவதில்லை.

இந்திய சில்லறை வர்த்தகத்தில் அந்நிய பன்னாட்டு நிறுவனங்களை அனுமதித்தால், அது வணிகத்தைப் பாதிக்கும். வணிகர்களின் வாழ்வாதாரத்தைப் பாதிக்கும். இந்திய வணிகர்களுக்கு தூக்குக் கயிற்றை தொங்கவிடச் செய்யும் செயலுக்கு ஒப்பாகும். தமிழகத்தில் மட்டும் 20 லட்சம் பேர் சில்லறை வணிகத்தில் ஈடுபட்டுள்ளனர். இதைச் சார்ந்து ஏறக்குறைய ஒரு கோடி குடும்பங்கள் வாழ்ந்து வருகின்றன. இந்தியாவில் 7 கோடி சில்லறை வணிகர்களும், இதன் மூலம் சுமார் 20 கோடிக்கும் மேற்பட்டோர் வேலை வாய்ப்பும் பெற்றுள்ளனர். குறைந்த படிப்பு உள்ளவர்களுக்கு அதிக வேலைவாய்ப்பு சில்லறை வர்த்தகத்தில் தான் கிடைக்கிறது.

கடந்த காலங்களில் தமிழகத்தில் பேரூராட்சி அளவிற்கு கிராமங்களில் சோடா, குளிர்பானக் கம்பெனிகள் இருந்தன. நகரங்களில் இன்னும் பல பெரிய கம்பெனிகள் செயல்பட்டன. காளிமார்க் கோலாவிற்கு ஈடாக இன்னும் எந்தப் பானமும் வரவில்லை. ஆனால், அமெரிக்காவிலிருந்து கோகோகோலா, பெப்சி என்ற புலிகள் வந்தன. நடிகர்களும், நடிகைகளும், விளையாட்டு வீரர்களும் அவற்றின் விளம்பரக் கூத்தாடிகள் ஆனார்கள். ஒவ்வொரு பெட்டிக் கடைக்கும் ஒரு குளிர் சாதனப் பெட்டி இலவசமாகக் கொடுக்கப்பட்டது. தங்கள் குளிர்பானங்களைத் தவிர, வேறு எந்தப் பானங்களும் அந்தப் பெட்டிக்குள் அடைக்கலம் காணக்கூடாது என்று கட்டுப்பாடு விதிக்கப்பட்டது. பரம்பரையாக தமிழகத்தில் உற்பத்தி செய்யப்பட்ட அத்தனை குளிர்பானக் கம்பெனிகளும் மூடப்பட்டன. சோடா, கலர்பானக் கம்பெனிகள் எதிர்த்துப் போராட முடியவில்லை. காரணம் மத்திய அரசு அமெரிக்க கம்பெனியான கோகோகோலா கம்பெனியின் காலில் விழுந்து கிடக்கிறது. மத்திய அரசை அமெரிக்காவும், உலக வங்கியும் மிரட்டிப் பணிய வைக்கின்றன‌.

உலகில் சில்லறை வணிகத்தில் கொடி கட்டிப் பறக்கும் வால்மார்ட்டும், ஏர்டெல் நிறுவன மிட்டலும் சேர்ந்து இந்தியாவில் இனி கடைகள் திறக்கப் போகிறார்கள். ஆஸ்திரேலிய உல்வொர்த் நிறுவனமும் இந்தியாவில் சில்லறை வணிகத்தில் ஈடுபட உள்ளார்கள். இதனால் இந்தியாவில் சில்லறை வியாபாரம் அழியும்.

சில்லறை வணிகத்தில் ஈடுபடும் பன்னாட்டு நிறுவனங்கள் வெவ்வேறு தொழில்களை நடத்துகின்றன. கோடி, கோடியாக லாபங்களைக் குவிக்கின்றன. ஆனால், பரம்பரையாக சில்லறை வணிகத்தை நம்பியுள்ள‌ பல லட்சம் குடும்பங்களின் வாழ்க்கை என்ன ஆகும் என்பதை மத்திய அரசு பரிசீலிக்கத் தயாராக இல்லை.

பன்னாட்டு நிறுவனங்கள், நூறு ஏக்கருக்கு மேல் விவசாயம் செய்யும் நிலச்சுவான்தார்களின் பண்ணைகளிலிருந்து கொள்முதல் செய்யத் திட்டமிட்டுள்ளன. அந்தத் திட்டம் செயலுக்கு வரும்போது, விவசாயிகளிடம் நேரடிக் கொள்முதல், இடைத்தரகர்கள் ஒழிப்பு என்னும் சிதம்பரங்களின் பிதற்றல் மரித்துப் போகும். மேலும், இதன் மூலம் பன்னாட்டு நிறுவனங்கள்- நிலப்பிரபுக்களின் புதிய கூட்டணி உருவாகும்.

தாய்லாந்து நாட்டின் தலைநகரமான பாங்காங்கில் வால்மார்ட்டுகள் அனுமதிக்கப்பட்டதால் 60 ஆயிரம் பேர் வேலை இழந்தனர். மேலும், தென் அமெரிக்காவின் ஒவ்வொரு நாடும் இன்றைக்கு வால்மார்ட்டு நிறுவனங்களை வழி அனுப்பி வைக்கின்றன. தாய்லாந்தில் அன்னிய சூப்பர் மார்க்கெட்டுகள் திறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

இன்றைக்கு அமெரிக்காவிலேயே நியூயார்க், லாஸ்ஏஞ்செல்ஸ் போன்ற நகரங்களில் வால்மார்ட்டு கடைகள் திறக்க முடியவில்லை. ஏன்? 60 சதவிகித நகரங்கள் அதனை அனுமதிக்கவில்லை. அப்படி அனுமதித்த நகரங்கள் ஆரம்பத்தில் குறைந்த விலையில் தரமான புதிய பொருட்கள் என்று மகிழ்ந்தன. ஆனால், ஐந்து ஆண்டுகளுக்குப் பின்னர், அங்கேயே எதிர்ப்பு இயக்கங்கள் வளர்ந்தன. காரணம், படிப்படியாக எல்லாப் பொருட்களின் விலையும் உயர்த்தப்பட்டு விட்டன.

வால்-மார்ட் அமெரிக்காவில் பல வழக்குகளை சந்தித்துக் கொண்டிருக்கிறது. அந்நிறுவனத்தில் ஊழியர்களுக்கு சரியான ஊதியம் கொடுக்காதது, அதிக நேரம் வேலை வாங்குவது, அருகாமையில் உள்ள நீர் நிலைகளை மாசுபடுத்துவது, சிறு கடைகளை வியாபாரத்தை விட்டு விரட்டியடிப்பது போன்ற வழக்குகள் பல ஆண்டுகளாக, பல நகரங்களில் தொடர்ந்து நடந்து கொண்டிருக்கின்றன. பல லட்சம் டாலர்கள் அபராதமாக கட்டிக்கொண்டும், சட்ட ஆலோசனை குழுக்கள் ஏற்படுத்தியும் வால்மார்ட் சமாளித்து வருகிறது. வழக்குகளை சந்திக்க சுமார் 2.50 லட்சம் டாலர்கள் ஒதுக்கி பெரிய சட்டத்துறையை ஏற்படுத்தி செயல்பட்டு வருகிறது.

வால்மார்ட் கம்பெனி ஜெர்மனி, கொரியா முதலிய நாடுகளில் தோல்விகளைத் தழுவியது. இந்தோனேஷியத் தலைநகரமான ஜகர்தாவில் 1998 ஆம் ஆண்டில் அன்னிய சூப்பர் மார்க்கெட்டுகள் அனைத்தும் அடித்து நொறுக்கப்பட்டன. இந்தோனேஷியத் தாய்மார்களுக்கு சில்லறை வியாபாரம் ஓர் வரப்பிரசாதம். தங்கள் வீடுகளின் வாசலில் சில்லறை வியாபாரம் செய்து, தங்கள் குடும்பச் செலவை ஈடுகட்டி வந்தனர். அவர்களின் சில்லறை வியாபாரம் பாதித்து, வாழ்வு பறிபோனது.

நம்ம ஊர் அரிசி, பருப்பு, மிளகாய், உப்பு , புளி, கடுகு, மிளகு, சீரகம், வெந்தியம், எண்ணெய் போன்ற மளிகைப் பொருட்களை விற்பதற்கு அன்னிய பன்னாட்டு நிறுவனங்கள் இந்தியாவிற்கு வர வேண்டுமா? சில்லறை வர்த்தகத்தில் அன்னிய முதலீடு என்பதனை வணிக சமூகமே ஒட்டு மொத்தமாக எதிர்க்கிறது.

“இந்தியாவின் சில்லறை வர்த்தகத்தில் அன்னிய முதலீட்டை ஏன் இடது சாரிகள் எதிர்க்கிறார்கள் ? இந்திய விவசாயிகள், வணிகர்கள் உள்ளிட்டோரின் வாழ்க்கைத் தரம் உயர்வதை இடது சாரிகள் எதிர்க்கிறார்களா? இந்தியாவிலுள்ள சாதாரணத் தொழிலாளர்கள் பலனைடயப் போகிறார்கள். இதை இடது சாரிகள் எதிர்ப்பதற்கு என்ன இருக்கிறது என்பது எனக்குப் புரியவில்லை" இப்படிச் சொன்னவர் இந்தியாவிற்கான அமெரிக்கத் தூதர் டேவிட். சி. முல்போர்ட். இக்கூற்று ஆடு நனைகிறது என்று ஓநாய் அழுத கதையாக உள்ளது.

இந்தியாவின் பரந்து விரிந்த சந்தை, அது தரக்கூடிய அசுர லாபம், விரிவடைந்து வரும் நடுத்தர வர்க்கம் ஆகியவைதான் சில்லறை வர்த்தகத்தின் மீது அன்னிய மூலதனத்தின் கழுகுக் கண் பார்வை விழுந்திருப்பதன் ரகசியம் ஆகும்.

அமெரிக்க வால்மார்ட் போன்ற அன்னிய நிறுவனம் ஒரு நகரத்தில் திறக்கப்பட்டால், அந்நகரில் உள்ள மளிகைக் கடைகள், இரும்புக் கடைகள், சிமெண்ட், கட்டிட சாமான் கடைகள், பல் பொருள் அங்காடிகள், அழகு சாதன நிலையங்கள், செருப்புக் கடைகள், மருந்துக் கடைகள், பெட்டிக் கடைகள் என அனைத்துக் கடைகளும் பாதிக்கப்படும்.

“வால்மார்ட் ஒரு நகருக்குள் வரும்போது சின்னஞ்சிறு கடைகளை முற்றிலுமாக அழித்து விடுகிறது. இது அந்நகரத்திற்குள் நியூட்ரான் குண்டு வீசப்பட்டதைப் போன்ற நிலையை உருவாக்குகிறது. அதாவது கட்டிடம் மட்டுமே இருக்கும். மக்கள் வெளியேறி விடுவார்கள்" என அமெரிக்காவின் எதிர் காலத்திற்கான இயக்கத்தைச் சேர்ந்த இராபர்ட் எஸ்.போரோசேஜ் மற்றும் டிராய் பீட்டர்ஸ் ஆகியோர் கூறியுள்ளனர்.

சில்லறை வர்த்தகத்தில் அன்னிய மூலதனத்தை அனுமதிப்பதில் பல வளர்ந்த நாடுகளே சில கட்டுப்பாடுகளை விதித்துள்ளன.

1)            ஜப்பான் நாட்டில் அரிசி, புகையிலை, உப்பு, உணவு ஆகியவற்றின் விற்பனையில் பன்னாட்டு சில்லறை வியாபார நிறுவனங்கள் ஈடுபட தடை விதிக்கப்பட்டுள்ளது.

2)            ஆஸ்திரேலியா மற்றும் தென் கொரியா ஆகிய நாடுகளில் பெட்ரோலியப் பொருட்கள், அரிசி, பால் , உரம் , பூச்சி மருந்து ஆகியவற்றை பன்னாட்டுக் கம்பெனிகள் விற்க அனுமதி மறுக்கப்பட்டு உள்ளது.

3)            பிரான்ஸ் நாட்டில் 1200 சதுர மீட்டர் பரப்பளவுக்கு மேல் நிறுவனங்கள் உருவாக கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

ஆனால், இந்தியாவிற்குள் வால்மார்ட் போன்ற பகாசுர நிறுவனங்களை அனுமதிப்பது மோசமான, சாதாரண மக்களுக்கு எதிரான விளைவுகளையே ஏற்படுத்தும் என்பதை மத்திய அரசு புரிந்து கொள்ள வேண்டும்.

சில்லறை வர்த்தகத்தில் அன்னிய மூலதனம் அனுமதிக்கப்படும் போது, அது பல லட்சக்கணக்கானவர்களை வேலையிலிருந்து துரத்தியடிக்கும். இந்திய மக்களை பெரும் துன்பத்தில் ஆழ்த்தும்.

'ஒப்பந்த விவசாயம்' என்ற முறையை உருவாக்கி நம் விவசாயிகளை அவர்களின் தேவைகளுக்கேற்ப உற்பத்தி செய்ய வைப்பார்கள்.

அந்நிய பன்னாட்டு நிறுவனங்களும், ஏகபோக நிறுவனங்களும் இந்தியர்களுக்கு சேவை புரிவதற்காக வரவில்லை. 120 கோடி இந்தியர்களை எப்படியாவது சுரண்டி கொள்ளையடிக்க வேண்டும் என்ற முடிவுடன்தான் வருகின்றன. கவர்ச்சிகரமான சலுகைகள், வசீகரமான விளம்பரங்கள் போன்ற மோசடி வணிக உத்திகள் மூலம் இந்தியாவில் காலூன்றுகின்றன. அதன் பிறகு அந்நிய நிறுவனங்களை வெளியேற்றுவது மிகவும் கடினம்.

உணவுப் பொருட்களின் உற்பத்தியிலோ, விநியோகத்திலோ பன்னாட்டுக் கம்பெனிகளையும், உள்நாட்டு ஏகபோக முதலாளிகளையும் அனுமதிக்கக்கூடாது; தடை விதிக்க வேண்டும் என்பதை வலியுறுத்திப் போராட வேண்டியது காலத்தின் கட்டாயமாகும். பெரிய சுறா மீன்கள் சிறிய மீன்களை விழுங்குவது போல், சிறிய, நடுத்தர வர்த்தக நிறுவனங்களை அன்னிய நிறுவனங்கள் விழுங்கிவிடும். 

இந்தியாவில் உள்ள சில்லறை வர்த்தகர்களின் நாடு தழுவிய போராட்டம் இடது சாரிக் கட்சிகள் மற்றும் எதிர்க்கட்சிகளின் வலுவான எதிர்ப்பு முதலியவற்றால் மத்திய அரசு, சில்லறை வர்த்தகத்தில் அந்நிய முதலீட்டை தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளதாக அறிவித்துள்ளது; முற்றாக கைவிட வேண்டும். 

ஏற்கனவே வேளாண் மற்றும் தோட்டக் கலைத் துறையில் அன்னிய முதலீட்டுக்கு 100% அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அதாவது பன்னாட்டு நிறுவனங்கள் இங்கே தனியாக ஒரு கம்பெனியைத் தொடங்கி, நிலங்களைச் சொந்தமாக வாங்கியோ, குத்தகைக்கு எடுத்தோ விவசாயம் செய்யலாம். காய்கறி விளைவிக்கலாம். அதாவது, காலப்போக்கில் சிறு விவசாயிகள் கபளீகரம் செய்யப்பட்டு அவர்கள் விவசாயக் கூலிகளாகவும், நகரங்களில் ரிக்ஷா தொழிலாளர்களாகவும், கைவண்டி இழுப்பவர்களாகவும், காவலாளிகளாகவும், ஏவலாளிகளாகவும் பிழைப்பை நடத்துவார்கள்.

மருந்து தயாரிப்புத் துறையில் 100% அந்நிய முதலீட்டுக்கு அனுமதி அளித்ததால், மருந்து விலை அதிகமானது. பன்னாட்டு நிறுவனங்கள் இங்குள்ள புகழ் பெற்ற மருந்து தயாரிப்பு நிறுவனங்களை கபளீகரம் செய்யும் வேலைகளில் இறங்கி விட்டார்கள். காப்பீட்டுத் துறையில் 49% , ஓய்வு ஊதியத் துறையில் 26%, விமானப் போக்குவரத்துறையில் 26% அந்நிய முதலீடு அனுமதிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் மக்கள் விரோதமான இந்த முடிவுகள் இந்தியாவை வெளிநாட்டு நிறுவனங்களுக்கு அடகு வைக்கும் செயலாகும். எனவே , மத்திய அரசின் மக்கள் விரோத கொள்கைளுக்கெதிராகவும், பன்னாட்டு நிறுவனங்களின் சுரண்டலுக்கு எதிராகவும் இந்திய மக்கள் இரண்டாவது சுதந்திரப் போரை நடத்த வேண்டியது வரலாற்றுத் தேவை.

- பி.தயாளன்

Pin It