சாதியும் தீண்டாமையும் இந்துசமயத்தின் இருபெரும் தூண்கள். இவையிரண்டையும் ஒன்றிலிருந்து ஒன்றாக தனியே பிரித்துப் பார்க்கமுடியாது. சாதி என்பது சமத்துவத்திற்கும் மனிதநேய சிந்தனைக்கும் எதிரானது. எங்கெல்லாம் சாதிய ஒடுக்குமுறைகள் இருக்கின்றனவோ அங்கெல்லாம் தீண்டாமை வன்கொடுமைகளும் அரங்கேறிக் கொண்டுதானிருக்கும். சமீபத்தில் உசிலம்பட்டி ஒன்றியத்திற்கு உட்பட்ட வடுகபட்டி கிராமத்தைச் சேர்ந்த தலித் சிறுவன் அருண்குமார் மீது நிகழ்த்திய சாதிவெறி வன்கொடுமையை நாம் யாரும் மறந்திருக்க முடியாது.

 உசிலம்பட்டி என்றாலே நமக்கெல்லாம் சட்டென நினைவுக்கு வருவது பாப்பாபட்டி, கீரிப்பட்டி, நாட்டார்மங்கலம் கிராமங்கள் தான். 1999 மற்றும் 2001 ம் ஆண்டுகளில் அப்பகுதியில் வாழ்ந்த தலித் மக்கள் ஆதிக்கசாதியினருக்கு நிகராத தேர்தலில் பங்கேற்கமுடியாத நிலையும், உள்ளாச்சித் தேர்தல் நடத்தமுடியாத நிலையும் இருந்து வந்தது. பல்வேறு போராட்டங்களுக்கு மத்தியில் 2002ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் பாப்பாபட்டி, கீரிப்பட்டி பகுதியில் பஞ்சாயத்துத் தேர்தல் நடத்தப்பட்டது. தேர்தலில் தேர்ந்தெடுக்கப்பட்ட தலித் பஞ்சாயத்து தலைவர்கள் பெறுப்பேற்றுக் கொண்ட சில நிமிடங்களிலேயே தங்களது பதவியை ராஜினாமா செய்யவேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டது. அன்று முதல் இன்று வரை ஆதிக்கசாதியினர் தாங்கள் விரும்பிய ஒருவரை தாழ்த்தப்பட்ட சமூகத்திலிருந்து தேர்ந்தெடுத்து உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடச் செய்து பின்பு தங்களின் பதவியை ராஜினாமா செய்ய வைப்பதும் அல்லது அவர்களை கைம்பொம்மையாக வைத்து செயல்பட வைப்பதும்; தமிழக வரலாற்றின் கோர பதிவுகளாய் நிலைத்து நிற்கின்றன. அதன் தொடர்ச்சியே வடுகபட்டி சாதிவெறி வன்முறைச் சம்பவம்.

 மதுரை மாவட்டம் உசிலம்பட்டி ஒன்றியத்திற்கு உட்பட்ட வடுகபட்டி கிராமமானது மதுரையிலிருந்து சுமார் 40 கி.மீ தொலைவிலும், உசிலம்பட்டியிலிருந்து சுமார் 5 கி.மீ தொலைவிலும் அமைந்துள்ளது. தேசிய நெடுஞ்சாலைக்கு மிக அருகில் அமைந்துள்ள அக்கிராமத்தைச் சுற்றி பசுமையான வயல்வெளிகளும், செங்கல்சூளையும் உள்ளது. வடுகபட்டி கிராமம் ஊர், சேரியென இரண்டாகப் பிரிக்கப்பட்டு ஊருக்குள் ஆதிக்கசாதியினரும் காலனியில் தாழ்த்தப்பட்ட மக்களும் வாழ்ந்து வருகிறார்கள். பறையர், சக்கிலியர், பிரம்மலைக்கள்ளர், அம்பட்டையர் மற்றும் புதரைவண்ணார் ஆகிய நான்கு சாதியினர் வாழ்ந்து வந்தாலும் எண்ணிக்கையில் ஆதிக்கசாதியினரே (700 குடும்பங்கள்) அதிகமாக உள்ளனர். அவர்களைத் தொடர்ந்து பறையர் சமூகத்தினர் 250 குடும்பங்களும் இதர சாதியினர் ஓரிரு குடும்பங்களும் இருக்கிறார்கள்.

 எண்ணிக்கையில் மட்;டுமல்ல நிலவுடமை ஆதிக்கத்திலும் ஆதிக்கசாதியினரே மேலோங்கியிருப்பதால் தாழ்த்தப்பட்ட மக்கள் தங்களுக்கான நிரந்தர வேலை மற்றும் பொருளாதார தேவைக்கு ஆதிக்கசாதியினரையே நம்பியே வாழவேண்டியிருக்கிறது. அதனாலேயென்னவோ வடுகட்டி கிராமத்தில் ஆதிக்கசாதியினர் தாழ்த்தப்பட்ட மக்கள் மீது பல்வேறு சாதிய வன்கொடுமைகளை திணித்து வருகிறார்கள். இன்றும் தாழ்த்தப்பட்ட மக்கள்

Ø ஊருக்குள் செருப்பணிந்து நடக்க முடியாது.

Ø தேநீர்க்கடைகளில் உள்நுழைந்து தேநீர் அருந்தவோ கடைமுன்பு போடப்பட்டுள்ள பெஞ்சில் அமர்ந்து தேநீர் பருகவோ உரிமையில்லை.

Ø ஊர்ப்பொது கோயிலுக்குள் நுழைய அனுமதி இல்லை. எத்தகைய நேர்த்திக்கடனாக இருந்தாலும் கோவிலுக்கு வெளியே நின்றுதான் செய்யவேண்டும்.

Ø செத்த பிணங்களை ஊர் வழியே எடுத்துச் செல்லமுடியாது. மழைக்காலத்திலும் கூட வயல்வெளி சுற்றிதான் பிணங்களை எடுத்துச் செல்லவேண்டும்.

Ø பொதுச் சொத்துக்களை அனுபவிக்கும் உரிமை கிடையாது.

Ø அரசியல் கட்சியிலோ, ஆட்சி நிர்வாகத்திலோ பங்கேற்க உரிமை மறுக்கப்பட்டிருக்கிறது.

Ø அரசு கட்டிடங்கள் (பஞ்சாயத்து அலுவலகம், நியாயவிலைக்கடை, கலையரங்கம்;) மீது உட்காரவோ, உள்நுழையவோ அனுமதி இல்லை.

 இதுபோன்ற எண்ணற்ற எழுதப்படாத சட்டங்களால் அடக்குமுறைக்கு உள்ளான தாழ்த்தப்பட்ட சமூகத்தில் ஒருவர் கூட இதுவரை அரசுப்பணியில் இல்லை. ஒருவர் கூட படித்து பட்டதாரி இல்லை என்கிற அவலமான நிலைதான் இன்னும் இக்கிராமத்தில் தொடர்ந்து கொண்டிருக்கிறது. சுதந்திர இந்தியாவில் அறுபத்தி ஆறு ஆண்டுகளில் ஒரு அரசு ஊழியர், ஒரு படித்த பட்டதாரி கூட இன்னும் தாழ்த்தப்பட்ட சமூகத்தில் மலர முடியவில்லை என்றால் இந்த சமூக அநீதிக்கு, துரோக வரலாற்றிற்கு பொறுப்பேற்பது யார்? இது சனநாயக நாடு என்று எப்படிக் கூறமுடியும்?

 வடுகபட்டி காலனியில் குடியிருப்பவர் நாகம்மாள். இவரது கணவர் பாண்டி (லேட்) ஒன்பது ஆண்டுகளுக்கு முன்பே இறந்துவிட்டார். நாகம்மாள் தன்னுடைய ஒரே மகனான அருண்குமாரோடு தனியே கூலிவேலை செய்து பிழைப்பு நடத்தி வருகிறார். அருண்குமார் வடுகபட்டி கள்ளர் நடுநிலைப் பள்ளியில் ஆறாம் வகுப்பு படித்து வந்துள்ளான். தேர்வு விடுமுறையில் இருந்த அருண்குமார் 03.06.2013 அன்று தேர்வு முடிவுகளை பார்ப்பதற்காக சகநண்பர்களுடன் பள்ளிக்குச் சென்றுள்ளான். முடிவுகளை பார்த்துவிட்டு திரும்பி வரும் வழியில் பள்ளியின் பின்புறமுள்ள குளக்கரையில் கள்ளர் சமூகத்தைச் சேர்ந்த இளைஞர்கள் கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்ததை பார்த்த மேற்படி சிறுவன் அங்கேயே சிறிது நேரம் நின்று வேடிக்கை பார்த்துள்ளான். அப்போது அவ்வழியே நடந்து சென்ற ஆதிக்கசாதியைச் சேர்ந்த படிவராஜா மகன் நிலமாலை வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்த அருண்பாண்டியனைப் பார்த்து “டேய் இங்க வாடா, யாரா கேட்டுடா எங்க ஏரியாவுக்குள்ள செருப்ப போட்டு நிக்கிற, ஏண்டா பறத்தேவிடியா மகனே ஒனக்கு எவ்வளவு தைரியம் இருந்தா செருப்பு போட்டு வந்திருப்பேன்னு” சொல்லி திட்டியதும் அருண்குமார் பயந்தநிலையில் “இனிமே இந்தப் பக்கம் செருப்பு போட்டுட்டு வரமாட்டேன்"னு கெஞ்சியுள்ளான்.

“ஒன்ன இப்படியே விட்டா நாளைப்பின்ன ஒனக்கு பயம் இல்லாம போயிருமுன்னு சொல்லி செருப்பை கழட்டி தலையில வச்சுக்கிட்டே வீட்டுக்கு போடான்னு” நிலமாலை சொல்ல செய்யமாட்டேன்னு அடம்பிடித்த அருண்குமாரை அடித்து வலுக்கட்டாயமாக தலையில் வைத்து நடக்கச் சொல்லி மேற்படி நிலமாலையும் அருண்குமாரை தொடர்ந்து வந்துள்ளான். கலையரங்கம் வரை தலையில் செருப்பை வைத்துக்கொண்ட நடந்து வந்த அருண்குமார் காலனிப் பகுதி வந்ததும் தலையிலிருக்கும் செருப்பை எடுத்து காலில் போட முயற்சி செய்துள்ளான். ஆனால் நிலமாலையின் சாதிவெறி அவ்வளவு எளிதில் அச்சிறுவனை விட்டுவிடுவதாயில்லை. “ஒங்க வீடு வரைக்கும் செருப்பு கையில தூக்கிட்டு போடான்னு” சொல்லி மிரட்டியுள்ளான். வேறுவழியின்றி சொன்னபடியே வீடு வரைக்கும் கையிலேந்தியபடி வந்த அருண்குமார் யாரிடமும் சொல்லாமல் இரண்டு நாட்களாக அழுதபடியே இருந்துள்ளான். அருண்குமாரின் நடவடிக்கையில் மாற்றத்தை உணர்ந்த அவனது அம்மா காரணம் கேட்டபோது நடந்தவற்றை கூறியுள்ளான். இச்சம்பவம் குறித்து நாகம்மாள் ஊரிலுள்ளவர்களிடம் தகவல் தெரிவித்துள்ளார்.

 05.06.2013 அன்று அருண்குமாரின் தாயார் நிலமாலையை சந்தித்து “எதுக்காக எம்புள்ளைய செருப்ப தலைல வச்சுக்கிட்டு நடந்து போகச் சொன்னீங்க, அவன் என்ன தப்பு செஞ்சான்னு” சொல்லுங்க என கேட்க பதிலுக்கு “அப்படித்தான்டி செய்யுவேன், என்னடி செய்வ, பறத்தேவடியா மகளே எவ்வளவு தைரியம் இருந்தா எங்கிட்டையே வந்து நாயம் பேசுவேன்னு” சொல்லி ஆபாசமான வார்த்தைகளால் திட்டி கம்பால் அடித்து விரட்டியதோடு மட்டுமில்லாமல் “போலீசுகிட்ட போன ஒன்ன கொலை செய்துருவேன்”னு மிரட்டியும் உள்ளார்.

 இச்சம்பவம் காட்டுத்தீ போல் அருகிலுள்ள மற்ற கிராமங்களுக்கும் தெரிய வர அப்பகுதியில் களப்பணியாற்றும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மாவட்ட துணைச் செயலாளர்; தென்னரசு@ராமன் என்பவர் பாதிக்கப்பட்ட இருவரையும் அழைத்துக் கொண்டு 05.06.2013 அன்று மதியம் 1.30 மணியளவில் உசிலம்பட்டி காவல்நிலையத்திற்குச் சென்று எழுத்துப்பூர்வமாக புகார் கொடுத்துள்ளார். புகார் கொடுத்த நேரம் முதல் இரவு எட்டு மணி வரை சம்பந்தப்பட்டவர்கள் மீது எவ்வித நடவடிக்கையோ, முதல் தகவல் அறிக்கையோ பதிவு செய்யவில்லை. மாறாக ஆதிக்கசாதியினரை காவல்நிலையத்திற்கு வரவழைத்து காவல்நிலைய துணை ஆய்வாளர் மாரிமுத்து மற்றும் இதர காவலர்கள் சமரச பேச்சு வார்த்தையில் 294 (டி) மற்றும் 506 (ii) ஆகிய பிரிவுகளின் கீழே முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டது. மறுநாள் தாழ்த்தப்பட்டவர்களை குளிர்விப்பதற்காக இருசமூகத்தினரையும் அழைத்து டி.எஸ்.பி சாமாதானக் கூட்டம் நடத்தியுள்ளார். ஆனால் வழக்குப்பதிவோ சாதாரண சட்டப்பிரிவுகளிலேயே பதிவு செய்யப்பட்டது.
 
 தீண்டாமைக் குற்றங்களுக்கு என தனியாக இயற்றப்பட்ட குடீயுரிமைப் பாதுகாப்புச் சட்;டம் 1995, தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினர் வன்கொடுமை தடுப்புச் சட்டம் 1989 ஆகிய இரு சட்டங்கள் தான் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு அதிகபட்ச பாதுகாப்பை வழங்கும் சட்டங்களாகும். அவ்விரு சட்டங்களும் திட்டமிட்டு முடக்கி வைக்க காரணமாய் இருப்பவர்கள், இந்தியா முழுவதும் அந்தந்த மாநில அரசுகளின் கட்டுப்பாட்டில் இயங்கிவரும் காவல்துறை அதிகாரிகள் தான். அவர்களின் தலித் விரோத மனநிலைதான் அவர்களைச் சட்டவிரோதமாக இயங்கச் செய்கிறது. தீண்டாமை குற்றங்கள், வன்கொடுமைகள் நடக்கும் போதெல்லாம் வழக்குப் பதிவு செய்யும் காவல்துறையினர் குடியுரிமைப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்வதில்லை. காவல்துறையினர் சாதிய உணர்வோடு தாழ்த்தப்பட்ட மக்களுக்கு எதிராகச் செயல்படுகிறார்கள் என்பதற்கு சமீபத்தில் நடந்து முடிந்த தீண்டாமைக் கொடுமை சாட்சியாய் நிற்கின்றது. காவல்துறையினரிடம் நிலவும் சாதியப் போக்கு பல்வேறு சம்பவங்களில் அவர்களின் சார்பை அப்பட்டமாக வெளிப்படுத்துகிறது.

 நெஞ்சைப் பிழியும் தீண்டாமைக் குற்றச் செயல்கள் நடந்தால் கூட மிகச் சாதரணமான குற்றப்பிரிவுகளில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்கிறார்கள். அதுதான் வடுகபட்டியிலும் நடந்துள்ளது. மீண்டும் தாழ்த்தப்பட்ட மக்கள் காவல்நிலையத்திற்குச் சென்று தொடர்ந்து கொடுத்த அழுத்தம் காரணமாகவே 07.06.2013 அன்று தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினர் வன்கொடுமை தடுப்புச் சட்டம் பிரிவு 3 (1) (ஓ) முதல் தகவல் அறிக்கையில் சேர்க்கப்பட்டது.

 பொதுவாக உசிலம்பட்டி காவல்நிலைய துணை ஆய்வாளர் மாரிமுத்து தாழ்த்தப்பட்ட மக்கள் மீது சாதி ரீதியான வன்முறைத் தாக்குதல்கள் நிகழும் போது தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினர் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் வழக்கு பதிவு செய்யாமல் சாதாரண பிரிவுகளிலேயே வழக்குப்பதிவு செய்து வருகிறார். இல்லையெனில் முதலில் ஆதிக்க சாதியினரை தாக்கியதாக தாழ்த்தப்பட்டோர் மீது ளுஊஃளுவு சட்டத்திற்கு நிகரான சட்டத்தில் வழக்குப் பதிவு செய்த பின்னரே ஆதிக்கசாதியினர் மீது தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினர் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் வழக்கு பதிவு செய்து தாழ்த்தப்பட்ட மக்களை மிரட்டி இறுதியில் கட்டப்பஞ்சாயத்தின் மூலம் வழக்கை வாபஸ் வாங்கச் செய்யும் இடைத்தரகர் வேலையினைச் அரசுப் பணியிலிருந்து மேற்கொண்டு வருகிறார் என்றும் உசிலம்பட்டி வாழ் தலித் மக்கள கருத்து தெரிவிக்கிறார்கள். வடுகபட்டி பிரச்சினையிலும் அவ்வாறே துணை ஆய்வாளர் மாரிமுத்து ஒரு சார்பாகவே செயல்பட்டுள்ளது நமக்கு வெட்ட வெளிச்சமாய் தெரிகிறது.

 பிரச்சினையின் வேகம் குறையும் நேரத்தில் 11.06.2013 அன்று தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணைய உறுப்பினர் வெங்கடேசன், சுனுழு துரைப்பாண்டியன், ஆதிதிராவிட நல தாசில்தார் மற்றும் காவல்துறை அதிகாரிகள் நேரில் சென்று நடந்த சம்பவம் குறித்து இருதரப்பு மக்களிடமும் விசாரணை மேற்கொண்டுள்ளார்கள். தே.தா.ஆ.உறுப்பினர் வெங்கடேசன் பாதிக்கப்பட்ட சிறுவனை தனியறையில் வைத்து விசாரணை நடத்தியுள்ளார்;. விசாரணைக்குப் பிறகே காலனிப் பகுதியில் பாதுகாப்பிற்காக இரு காவலரை நியமித்துள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

 சாதியக் கட்டமைப்பில் கடைநிலையில் தள்ளப்பட்ட தாழ்த்தப்பட்ட மக்கள் இன்றும் கிராமங்களில் எதிர்கொள்கின்ற தீண்டாமைக் கொடுமைகள் ஏராளம். ஒரு குறிப்பிட்ட சமூகத்தினரை ஒட்டுமொத்த சமூககட்டமைப்பிலிருந்து ஒதுக்கிவைத்து தீட்டுப்பட்டவர்களாக தீண்டத்தகாதவர்களாக பார்ப்பது தனிநபர் செயல்களாக மட்டுமே பார்க்க இயலாது. இவையணைத்தும் ஆதிக்கசாதியினரிடம் நிலவும் சாதிய உணர்வின் வெளிப்பாடுகளேயாகும்.

 சட்டத்தால் மட்டுமே சாதிய ஒழிப்பு சாத்தியமில்லை. பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளாக இறுகிப்போன ஒரு சமூக இழிவை முற்றிலுமாக ஒழிப்பதற்கு சட்டங்கள் மட்டுமே போதாது. சட்ட வரையறையும் தாண்டி அமைப்பு ரீதியாக பல்வேறு பணிகளை கிராமங்களில் ஆற்றவேண்டடிய தேவையும் அவசியமும் உள்ளது. இருப்பினும் அமலில் இருக்கின்ற சட்டங்களின் பலன்களை பாதிக்கப்பட்ட தாழ்த்தப்பட்ட மக்கள் முழுமையாகப் பெறுவதும் வன்கொடுமை புரியும் குற்றவாளிகள் இச்சட்டத்தின் கீழ் தண்டனை அடைவதும் தீண்டாமை ஒழிப்புப் பயணத்தில் சில படிக்கட்டுகளாக அமையும்.

பரிந்துரைகள்:

1. வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட சிறுவனுக்கு உடனடியாக வழங்கப்படவேண்டிய நிவாரண மாதிரித்திட்டம் ஒன்று தயாரிக்கப்பட்டு மாவட்ட ஆட்சியரிடம் அளிக்கப்படவேண்டும். இழப்பீடுகளை வழங்கவேண்டிய பொறுப்பு அவரிடம் ஒப்படைக்க வேண்டும்.

2. பாதிக்கப்பட்ட சிறுவனின் உயிருக்கும் உடைமைக்கும் உரிய பாதுகாப்பு வழங்குவதற்கான நடவடிக்கையை மேற்கொள்ளவும், உளவியல் ரீதியாக பாதிக்கப்பட்டுள்ள அச்சிறுவனுக்கு உரிய ஆலோசனை வழங்குவதற்கான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

3. உசிலம்பட்டி காவல் நிலையத்தில் வன்கொடுமை வழக்குகளைப் பதிவு செய்யவும், புலன் விசாரணையைக் கண்காணிக்கவும் தனியான தலித் பழங்குடியினர் மையம் அமைக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். அந்த மையத்தில் தகுதி வாய்ந்த வழக்கறிஞர்களும் உறுப்பினர்களாகச் சேர்க்கப்படவேண்டும்.

4. உசிலம்பட்டி ஒன்றியத்தை சுற்றியுள்ள பெரும்பாலான கிராமங்களில் சாதி ரீதியான வன்கொடுமைகள் தொடர்ந்து நடந்தேறி வருவதால் தாக்குதல் நடந்த வடுகபட்டி போன்ற கிராமங்களை நேரடி களஆய்வு நடத்தி, அந்த இடத்தை “வன்கொடுமை நடந்த இடமாக” அனைத்துச் செய்தி ஏடுகளிலும் மாவட்ட ஆட்சியர் அறிவிக்க வேண்டும். மேலும் வன்கொடுமை நடந்த இடத்தை காவல்துறை உயர் அதிகாரிகளின் நேரடிக் கண்காணிப்பில் வைக்கவேண்டும்.

5. வடுகபட்டி கிராமத்தின் தற்போதைய சூழ்நிலை மற்றும் கடந்தகால சூழ்நிலையை மதிப்பீடு செய்வதும், உயர்மட்ட அளவிலான விழித்திருப்புக் குழுக்களும், கண்காணிப்புக் குழுக்களும் அமைத்து மேலம் வன்கொடுமை நடக்கும் சூழ்நிலையை முற்றிலும் கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும்.

Pin It