தலைமையமைச்சர் மோடி சென்ற வாரம் ஆற்றிய உரையொன்றில் இந்தியப் பொருளாதாரம் நல்ல நிலையில் இருப்பதாகப் பல புள்ளிவிவரங்களை மேற்கோள் காட்டிக் கூறியிருந்தார். அப்படி நினைக்காதவர்கள் தேவையில்லாமல் நம்பிக்கையிழந்த நிலையில் இருக்கின்றனர் என்றார்.

தான் முன்வைத்த புள்ளிவிவரங்களுக்கு அப்பால் வேறு புள்ளிவிவரங்களையும் அவர் பார்த்திருந்தால் நிலைமை முற்றிலும் மாறாக இருப்பது தெரிந்திருக்கும். இந்தியப் பொருளாதாரம் நல்ல நிலைமையில் இல்லை என்பதைக் காட்டும் பல புள்ளிவிவரங்களை இந்தக் கட்டுரையில் பார்ப்போம்.

1. இந்த ஆண்டு வைப்பகங்கள் தந்த கடன்களைப் பற்றிப் பார்ப்பதில் நம் ஆய்வைத் தொடங்கலாம். உணவுப் பண்டங்களைக் குடும்ப அட்டையின் பேரில் வழங்குவதற்காக அரசு நிர்ணயித்த குறைந்தபட்ச ஆதார விலையில் உழவர்களிடம் இருந்து நெல், கோதுமை ஆகியவற்றை இந்திய உணவுக் கழகம் மற்றும் மாநிலங்களின் உணவுப் பண்டங்களை வாங்கும் துறைகள் நேரடியாகக் கொள்முதல் செய்வது வழக்கம். அதற்குத் தரப்பட்ட கடன்களைத் தவிர (உணவல்லாத) பிற துறைகளில் வைப்பகங்கள் தந்த கடன்களைப் பற்றி முதலில் காணலாம் (படம் 1).

indian economy 1

வேளாண்மை, ஆலைத் துறை, சேவைத் துறை, சில்லறை வணிகம் ஆகியவற்றுக்கு வைப்பகங்கள் கடந்த ஐந்து ஆண்டுகளில் தந்த கடன்களைப் பற்றிய விவரங்கள் இப்படத்தில் காட்டப்பட்டுள்ளன. இவ்வாண்டு வைப்பகங்கள் இந்த வகைக் கடன்களைத் தரவேயில்லை என்பதை இந்தப் படம் தெளிவாகக் காட்டுகிறது. கடந்த ஐந்தாண்டுகளில் இந்த ஆண்டு தான் இந்நிலை நேரிட்டுள்ளது. இந்தத் துறைகள் ஒவ்வொன்றைப் பற்றியும் சற்று விரிவாக இனிப் பார்க்கலாம்.

2. கடந்த ஐந்து ஆண்டுகளில் வேளாண்மை மற்றும் அத்துடன் இணைந்த துறைகளுக்கு வைப்பகங்கள் தந்த கடன்களைக் குறித்த விவரங்கள் படம் 2-இல் உள்ளன.

indian economy 2

 

இவ்வாண்டு இந்த வகைக் கடன்கள் தரப்படவில்லை என்பது வெளிப்படை. மாநில அரசுகள் உழவர்களின் கடன்களைத் தள்ளுபடி செய்ததன் விளைவா என்பதைக் காலந் தான் சொல்லவேண்டும்.

3. ஆலைத் துறைக் கடன் விவரங்களைப் படம் 3 காட்டுகிறது. இந்த வகைக் கடன்கள் வர வரக் குறைகின்றன. ஆலைகளுக்கு ஏற்கெனவே தந்த கடன்கள் நிலுவையில் இருப்பதால் வைப்பகங்கள் ஆலைகளை நம்பிக் கடன் தருவதில்லை.

indian economy 3

4. சேவைத் துறைக் கடன் விவரங்களைப் படம் 4 காட்டுகிறது.

indian economy 4

இந்த நிதியாண்டில் சேவைத் துறைக் கடன்கள் வெகுவாகக் குறுகியிருப்பது பெருவியப்பளிக்கிறது. இந்தத் துறை இந்தியப் பொருளாதாரத்தில் பாதிப் பங்கு வகிக்கிறது. அதில் உள்ள நிறுவனங்கள் கடன் வாங்குவதில் ஆர்வம் கொள்ளவில்லையெனில் இந்தியப் பொருளாதாரம் நல்ல நிலைமையில் இருப்பதாக எப்படிச் சொல்லமுடியும்?

5. இந்த நிதியாண்டில் சில்லறை வணிகத் துறைக்கு வைப்பகங்கள் தந்த கடன்களைப் படம் 5 காட்டுகிறது. இவை மட்டுமே உயர்ந்திருக்கின்றன. ஆனால் இவையும் கடந்த சில ஆண்டுகளில் இருந்த அளவை விட அதிகம் வேறுபடவில்லை.

indian economy 5

வட்டி விகிதங்கள் பெருமளவு குறைந்துள்ளபோதும் மக்கள் கடன் வாங்குவதில் ஆர்வம் செலுத்தவில்லையெனில் இந்தியப் பொருளாதாரம் எப்படி நல்ல நிலைமையில் இருக்க முடியும் என்பது நியாயமான கேள்வி.

தன் உரையில் மோடி இந்தப் புள்ளிவிவரங்கள் எவற்றையும் சேர்த்துக்கொள்ளவில்லை என்பது வருந்தத்தக்கது.

6. இந்திய ரிசர்வ் வைப்பகம் 2017 செப்டம்பர் மாதத்தில் நடத்திய நுகர்வோர் உறுதிப்பாட்டு ஆய்வு பின்வருமாறு தெரிவிக்கிறது: “இந்தியப் பொருளாதாரம் குறித்த நுகர்வோர் கண்ணோட்டம் கடந்த நான்கு காலாண்டுகளாகவே நம்பிக்கை தரும்வண்ணம் இல்லை; இந்நிலை மேன்மேலும் மோசமாகிவருகிறது. … வேலை வாய்ப்புக் குறித்த நம்பிக்கையை மக்கள் வெகுவேகமாக இழந்துவருகின்றார்கள்; அது குறித்த எதிர்பார்ப்புகளும் தொய்வடைந்துவிட்டன.”

7. கடந்த ஐந்தாண்டுகளில் சிமென்ட் உற்பத்தி எவ்வாறிருந்தது என்பதைப் படம் 6 காட்டுகிறது.

indian economy 6

சென்ற ஆண்டைவிட உற்பத்தி இந்தாண்டு குறைந்துள்ளது. கட்டடம் மற்றும் வீட்டுமனைத் துறைகள் தொடர்ந்து சிக்கலில் இருப்பதை இது காண்பிக்கிறது. நிறையப் பேருக்கு - குறிப்பாக, பயில்திறம் குறைந்தவர்களுக்கு - வேலை வாய்ப்புத் தருபவை இந்தத் துறைகள்.

8. புதுத் திட்டப் பணிகள் செயல்படுத்தப்படுவதும் குறைந்துவருகிறது. இந்தியப் பொருளாதாரத்தைக் கூர்நோக்கும் நடுவம் (Centre for Monitoring Indian Economy) பின்வருமாறு தெரிவிக்கிறது: “செப். 2017-இல் முடிந்த காலாண்டில் 51,200 கோடி ரூபாய் மதிப்புள்ள புதுத் திட்டப் பணிகள் செயல்படுத்தப்பட்டன. இந்தக் கணிப்பு வரும் கிழமைகளில் ('வாரங்களில்') உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது. எழுபதாயிரங் கோடி ரூபாயை எட்டக்கூடும். அப்படியே ஆனாலும், அது மோடி ஆட்சியில் இதற்கு முந்தைய காலாண்டுகளில் செயல்படுத்தப்பட்ட திட்டங்களின் மதிப்பைக் காட்டிலும் குறைவானதாகும்.

9. முதலீடு குறித்த முன்னீடுகளும் குறைந்துவிட்டன. இந்தியப் பொருளாதாரத்தைக் கூர்நோக்கும் நடுவம் பின்வருமாறு தெரிவிக்கிறது: “செப். 2017-இல் முடிந்த காலாண்டில் 84,500 கோடி ரூபாய் மதிப்புள்ள புதுத் திட்டப் பணிகள் முன்வைக்கப்பட்டன. மோடி அரசு ஆட்சிக்கு வந்த பின்னர் மிகக் குறைவான மதிப்புள்ள முதலீட்டு நோக்கங்கள் முன்வைக்கப்பட்டது இந்தக் காலாண்டில் தான்.

10. நிறுவனங்களின் உபரி பெருமளவு சரிந்துள்ளது. “பங்குச் சந்தையில் பதியப் பட்ட 1,127 நிறுவனங்களின் நிதியறிக்கையில் இருந்து இந்தத் தகவலையும் இதையொட்டிய பிற தகவல்களையும் நாம் உய்த்துணர்கிறோம். … இந்நிறுவனங்களின் வரிக்கு முந்தைய உபரியின் மதிப்பு கடந்த ஆண்டு இருந்ததைக் காட்டிலும் 27.9 விழுக்காடு வீழ்ந்துள்ளது" என்கிறது இந்தியப் பொருளாதாரத்தைக் கூர்நோக்கும் நடுவம்.

11. ஏற்றுமதிக்கும் இறக்குமதிக்கும் இடையிலான வேறுபாட்டை (வணிகத் துண்டுவிழல் - trade deficit) படம் 7-இல் காணலாம். இந்த நிதியாண்டில் இது வேகமாக வளர்ந்துள்ளது.

indian economy 7

நான் முன்னர் வேறொரு கட்டுரையில் குறிப்பிட்டிருந்தவாறு, பண மதிப்பழிப்பு நடவடிக்கையின் பின்னர் பெட்ரோலியம், தங்கம், வெள்ளி ஆகியன தவிரப் பிற பொருள்களின் இறக்குமதி வேகமாக அதிகரித்ததே இதற்குக் காரணம். பண மதிப்பழிப்பு நடவடிக்கையின் வெளிப்படையாகத் தெரியாத எதிர்மறை விளைவுகள் பொருளாதாரத்தின் மீது தொடர்ந்து தாக்கம் செலுத்துகின்றன.

12. "[பண்டங்கள் மற்றும் சேவைகளின்] ஒட்டுமொத்தத் தேவை வளர்ச்சியின் பல்வேறு வகைகளைப் பொருத்தவரை தனிநபர் நுகர்வுச் செலவு 2017-ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் ஆறு காலாண்டுகளைவிடக் குறைவாக வளர்ந்துள்ளது" என ரிசர்வ் வைப்பகத்தின் நாணயத் திட்டக்கொள்கை அறிக்கை (monitory policy statement) தெரிவிக்கிறது.

13. அந்த அறிக்கை மேற்கொண்டு இவ்வாறு தெரிவிக்கிறது: “ப்ரெசீல், இந்தோனேசியா, தென் கொரியா, துருக்கி, வியட்நாம் ஆகிய வளர்ந்துவரும் பிற பொருளாதாரங்களுடன் ஒப்பிடுகையில் இந்திய ஏற்றுமதி வளர்ச்சி கதொடர்ந்து குறைவாகவே உள்ளது. பண்டங்களின் விலைகள் உலகளவில் மீண்டும் அதிகரித்துவருவது மேற்கண்டவற்றில் சில நாடுகளுக்குப் பலனளித்துள்ளது.”.

14. மொத்த உள்நாட்டு உற்பத்தியை ஒப்பிடுகையில் முதலீட்டின் விகிதம் எவ்வாறுள்ளது என்பதைப் படம் 8 காட்டுகிறது.

indian economy 8

2017 சூன் மாதத்துடன் முடிந்த காலாண்டில் இந்த விகிதம் சற்றே உயர்ந்துள்ளது. ஆனாலும் இது மிகக் குறைவாகவே உள்ளது. ரிசர்வ் வைப்பகத்தின் நாணயத் திட்டக்கொள்கை அறிக்கை தெரிவிப்பதைப் போல, “பண்டங்கள் மற்றும் சேவைகள் வரி இதுவரை செயல்படுத்தப்பட்ட விதமும் பொருளாதாரத்தைப் பாதித்திருப்பதாகத் தெரிகிறது. உற்பத்தித் துறையின் குறுகிய கால வாய்ப்புகளின் உறுதித் தன்மை பாதிக்கப்பட்டுள்ளது. வைப்பகங்கள் மற்றும் பிற நிறுவனங்களின் நிதி நிலைமை ஏற்கெனவே சீர்கெட்டிருப்பதால் இந்த உறுதியற்ற தன்மை முதலீடுகளை மேலும் தாமதமாக்கலாம்.

15. மொத்த உள்நாட்டு உற்பத்தியில் அரசு அல்லாத பகுதியின் பொருளாதார வளர்ச்சி விகிதத்தைப் படம் 9-இல் காணலாம்.

indian economy 9

இது மொத்தப் பொருளாதாரத்தில் எண்பத்தேழு முதல் தொண்ணூற்றிரண்டு விழுக்காடாகும். இதன் வளர்ச்சி விகிதம் வரவரக் குறைந்து நான்கு விழுக்காட்டை நெருங்கிவிட்டது. முதன்மை வாய்ந்த இந்த விவரம் தலைமையமைச்சர் மோடியின் உரையில் இடம்பெறவில்லை.

அரசுத் துறைகள் நீங்கலான பொருளாதாரம் இவ்வளவு மெத்தனமாக வளர்ந்தால் வேலைதேடும் சந்தையில் ஒவ்வொரு மாதமும் புதிதாக நுழையும் பத்து லட்சம் இளைஞர்களுக்கு எப்படி, எப்போது வேலைகளை உருவாக்கமுடியும்?

16. ஒட்டுமொத்த ஆலைத் துறை, உற்பத்தித் துறை, கட்டுமானத் துறை ஆகியவற்றின் வளர்ச்சி விகிதம் படம் 10-இல் உள்ளது.

indian economy 10

இது நம் கவலையை அதிகரிக்கிறது. ஏனெனில் இந்த வளர்ச்சி விகிதம் கடந்த ஐந்தாண்டுகளில் இப்போது மிகக் கீழ் நிலையில் உள்ளது. 2017 ஏப்ரல்-சூன் காலாண்டில் உற்பத்தித் துறை 1.17 விழுக்காடும் கட்டுமானத் துறை இரண்டு விழுக்காடும் வளர்ந்துள்ளன.

இந்தத் துறைகள் நிறையப் பேருக்கு வேலை தரக்கூடியவை என்பதால் இந்தக் குறைவளர்ச்சி கவலையளிக்கிறது. கட்டுமானத் துறையில் பத்து லட்சம் ரூபாய் மதிப்புள்ள உருவாக்கம் பன்னிரண்டு தொழிலாளர்களுக்கு வேலை தரும் என க்ரைசில் ரிசர்ச் (Crisil Research) எனும் நிறுவனத்தின் கணிப்பு தெரிவிக்கிறது. உற்பத்தித் துறை பத்து லட்சம் ரூபாய்க்கு ஏழு தொழிலாளருக்கு வேலை தருகிறது.

17, தொழிலாளர் அதிகம் தேவைப்படும் துறைகள் 2017 சனவரி முதல் சூன் வரையான காலத்தில் சுணக்கம் கண்டிருப்பதைப் படம் 11 காட்டுகிறது.

indian economy 11

க்ரைசில் ரிசர்ச் அண்மையில் வெளியிட்ட ஆய்வுக் குறிப்பொன்றில் பின்வருமாறு சுட்டிக்காட்டுகிறது: “கடந்த இரண்டு காலாண்டுகளில் பின்வரும் மூன்று வகைத் துறைகளில் வளர்ச்சி மொத்த உள்நாட்டு உற்பத்தியின் வளர்ச்சியைக் காட்டிலும் அதிகமாக உள்ளது: () வணிகம், விடுதிகள், போக்குவரத்து, தொலைத் தொடர்பு, அலைபரப்புத் துறை (broadcasting) தொடர்பான சேவைகள்; () மின்சாரம், எரிவளி (gas), தண்ணீர் வழங்கல் உள்ளிட்ட அடிப்படைத் தேவைச் சேவைகள் (utilities); () பொது நிர்வாகம், பாதுகாப்புத் துறை உள்ளிட்ட சேவைத் துறைகள். இவற்றில் வணிகம், விடுதிகள் ஆகியவற்றில்தாம் அதிக எண்ணிக்கையில் தொழிலாளர்கள் தேவைப்படுவர். பத்து லட்ச ரூபாய் மதிப்புள்ள விளைவளவுக்கு [அதாவது, சேவை 'உற்பத்திக்கு' - output] இந்தத் துறைகளில் ஆறு தொழிலாளர் தேவைப்படுகின்றனர். ஆனால், மொத்த உற்பத்தியில் இந்தத் துறைகளின் பங்கு வெறும் பன்னிரண்டு விழுக்காடு தான். இதற்கு மாறாக, பொது நிர்வாகம், பாதுகாப்பு உள்ளிட்ட வேகமாக வளர்ந்துவரும் சேவைத் துறைகள் மொத்த உற்பத்தியில் அதிகப் பங்கு வகித்தபோதிலும் அவற்றின் தொழிலாளர் தேவை [பத்து லட்ச ரூபாய் விளைவளவுக்கு] மூன்று பேர் மட்டுமே. தொழிலாளர் அதிகம் தேவைப்படும் கட்டுமானம் (12 பேர்), பொருள் உற்பத்தி (7 பேர்) போன்ற துறைகள் மொத்த உள்நாட்டு உற்பத்தியின் வளர்ச்சி விகிதத்தைவிடக் குறைவாக வளர்ந்துள்ளன.

பொதுநிர்வாகம், பாதுகாப்பு, பிற சேவைத் துறைகள் பெருமளவு அரசுத் துறைகளே என்பதை நாம் கவனத்தில் கொள்ளவேண்டும். வேலைகளை உருவாக்குவதை அரசாங்கமும் நிறுத்திவிட்டது.

18. ஆலை உற்பத்திக் குறியீட்டை (ஆஉகு - index of industrial production - IIP) படம் 12 காட்டுகிறது.

indian economy 12

இந்தக் குறியீடு நாட்டில் ஆலைச் செயல்பாடுகளின் அளவைக் காட்டுகிறது. பொருள் உற்பத்தி அளவையும் இந்த வரைபடம் காட்டுகிறது. மொத்த ஆஉகு-வில் பொருளுற்பத்தி முக்கால் பங்குக்கும் அதிகம் உள்ளது. இவ்விரு அளவைகளின் வளர்ச்சியும் சிறிது காலமாகவே பத்துக்கும் மிகக் குறைவாக இருந்துவருகிறது. இது கவலைக்குரியது.

19. கடந்த ஐந்தாண்டுகளில் பெட்ரோலியப் பொருள் நுகர்வு எவ்வாறு இருந்தது என்பதைப் படம் 13 காட்டுகிறது.

indian economy 13

முந்தைய நிதியாண்டுடன் ஒப்பிடுகையில் இந்த நுகர்வு ஏறக்குறைய [வளராமல்] அதேயளவு இருந்துள்ளது. பொருளாதார வளர்ச்சி குறைவதற்கான முதன்மை அறிகுறிகளில் இதுவும் ஒன்று.

20. வணிக ஊர்தி விற்பனை விகிதமானது ஆலையுற்பத்தி சார்ந்த பொருளாதாரத்தின் நிலையைச் சுட்டிக்காட்டும் குறியீடுகளில் முதன்மையானதொன்று. இந்த நிதியாண்டில் வணிக ஊர்தி விற்பனை குறித்த புள்ளிவிவரங்கள் அடுத்த படத்தில் ( படம் 14) காட்டப்பட்டுள்ளன. முந்திய ஆண்டைவிட இவற்றின் விற்பனை குறைவாக உள்ளது.

indian economy 14

21. கடந்த ஐந்தாண்டுகளில் அரசு நிதியில் எந்த அளவு துண்டு விழுந்துள்ளது (அரசு வருவாய்க்கும் செலவுக்கும் உள்ள இடைவெளி எவ்வளவு) என்பதைப் படம் 15 காட்டுகிறது.

indian economy 15

நடப்பு நிதியாண்டுக்கான நிதிப் பற்றாக்குறையில் தொண்ணூற்றாறு விழுக்காடு முதல் ஐந்து மாதங்களிலேயே நேர்ந்துவிட்டது. இதற்கு என்ன காரணம்? பொருளாதார வளர்ச்சி மந்தமாகிவிட்டது, அதை வேகப்படுத்துவதற்காக அரசு அதிகம் செலவிடுகிறது என்பது தான் இவ்வினாவுக்கு பதில்.

22. கடந்த இரண்டு ஆண்டுகளில் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் நேர்ந்த உயர்வில் அதிகப் பங்கு அரசுச் செலவினங்கள் அதிகரித்ததன் விளைவு என்பதைப் படம் 16 காட்டுகிறது.

indian economy 16

2015 ஏப்ரல் - சூன் இடைவெளியில் மொத்த உள்நாட்டு உற்பத்தியின் வளர்ச்சியை விட அரசுச் செலவுகள் 1.3 விழுக்காடு அதிகரித்தன. அப்போது முதல் இந்த விகிதம் வேகமாக அதிகரித்துவந்துள்ளது. 2017 சனவரி - மார்ச்சில் 39.2 விழுக்காடாகவும் ஏப்ரல் - சூன் காலத்தில் 34.1 விழுக்காடாகவும் இருந்தது.

எனவே, பொருளாதார வளர்ச்சியை அதிகரிப்பதற்காக அரசு அதிகம் செலவிடுகிறது. பொருளாதாரம் தேக்க நிலையில் இருப்பதை அரசு ஒப்புக்கொள்கிறது என்பதை அரசின் இந்தச் செயல்பாடு காட்டுகிறது. ஆனால், தலைமையமைச்சர் மோடி இதை வெளிப்படையாகச் சொல்லமாட்டார்.

23. பொதுத் துறை வைப்பகங்களின் செயல்படாக் கடன் விகிதங்களை படம்17-இல் காணலாம்.

indian economy 17

கடனாளி தொண்ணூறு நாள்களுக்கும் மேலாகக் கடன் தவணையைத் திருப்பிச் செலுத்தாமல் இருந்தால் அந்தத் தொகை செயல்படாக் கடனாகக் கணக்கு வைக்கப்படுகிறது. கடந்த இரண்டு ஆண்டுகளில் இத்தகைய கடன்கள் பெருமளவு அதிகரித்துவிட்டன.

இதன் விளைவாக 2017 அக்டோபர் 7 வரையான காலகட்டத்தில் ஏழு பொதுத்துறை வைப்பகங்கள் மீது ரிசர்வ் வைப்பகம் கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. மொத்தமுள்ள பொதுத்துறை வைப்பகங்களில் இது மூன்றிலொரு பங்காகும்.

இந்நிலையில் இந்தியப் பொருளாதாரம் நன்றாக இருப்பதாக எப்படிச் சொல்லமுடியும்?

24. இந்திய பொதுத்துறை வைப்பகங்களின் மொத்தக் கடன் நிலுவை, வாராக் கடன்களின் அளவு. இவற்றின் விகிதம் ஆகியவற்றைப் பின்வரும் பட்டியல் காட்டுகிறது.

  செயல்படாக் கடன்கள் (கோடி ரூபாய்களில்) மொத்தக் கடன்கள் (கோடி ரூபாய்களில்) விகிதம்
Indian Overseas Bank 35,098 1,40,459 24.99%
IDBI Ltd. 44,753 1,90,826 23.45%
Central Bank of India 27,251 1,39,399 19.55%
UCO Bank 22,541 1,19,724 18.83%
Bank of Maharashtra 17,189 95,515 18.00%
Dena Bank 12,619 72,575 17.39%
United Bank of India 10,952 66,139 16.56%
Oriental Bank of Commerce 22,859 1,57,706 14.49%
Bank of India 52,045 3,66,482 14.20%
Allahabad Bank 20,688 1,50,753 13.72%
Punjab National Bank 55,370 4,19,493 13.20%
Andhra Bank 17,670 1,36,846 12.91%
Corporation Bank 17,045 1,40,357 12.14%
Union Bank of India 33,712 2,86,467 11.77%
Bank of Baroda 42,719 3,83,259 11.15%
Punjab & Sind Bank 6,298 58335 10.80%
Canara Bank 34,202 3,42,009 10.00%

இந்திய வைப்பகச் சங்கத்தின் தரவுகளில் இருந்து கட்டுரையாளர் கணக்கிட்டுள்ளார். இந்தியன் ச்டேட் வைப்பகத்தின் துணை வைப்பகங்களின் கடன் தரவுகள் இதில் எடுத்துக்கொள்ளப்படவில்லை. அவை இப்போது இந்தியன் ச்டேட் வைப்பகத்துடன் இணைக்கப்பட்டுவிட்டன.

இந்தப் பட்டியலில் இருந்து நாம் என்ன அறிகிறோம்? பல பொதுத்துறை வைப்பகங்கள் சிக்கலில் இருப்பதை இது காட்டுகிறது. இவற்றில் மிக மோசமாக உள்ள Indian Overseas Bank, IDBI போன்ற வைப்பகங்களைப் பிற பெரிய வைப்பகங்களுடன் இணைத்தால் அந்தப் பெரிய வைப்பகங்களும் சிக்கலுக்கு உள்ளாகும். Union Bank of India, Bank of Baroda, Punjab National Bank, Canara Bank போன்ற பெரிய வைப்பகங்களும் பத்து விழுக்காடு அல்லது அதைவிட அதிகமாக வாராக் கடன்களில் சிக்கியுள்ளன. இவற்றில் பல வைப்பகங்கள் இன்னமும் இயங்குவதற்கு அரசு ஏன் அனுமதிக்கிறது?

25. ரிசர்வ் வைப்பகத்தின் OBICUS எனும் கள ஆய்வு 805 பொருளுற்பத்தி ஆலைகளின் நிலையைத் தொடர்ந்து கவனிக்கிறது. 2017 ஏப்ரல்-சூன் காலகட்டத்தில் அந்நிறுவனங்கள் தம் மொத்த உற்பத்தித் திறனில் 71.2 விழுக்காட்டை மட்டுமே எட்டின. கடந்த ஏழு காலாண்டுகளில் இது தான் மிகக் குறைவான அளவு.

இந்தப் பட்டியலை இத்துடன் முடித்துக்கொள்ளலாம். இது போன்ற இன்னும் பலப்பல அளவைகளைச் சுட்டிக்காட்ட முடியும். பொருளாதாரம் நன்றாக இருப்பதாகக் காட்டிக்கொள்வதற்காகத் தலைமையமைச்சர் மோடி தனக்குச் சாதகமான புள்ளிவிவரங்களை மட்டும் எடுத்துக்கொண்டார் என்பது குறித்த மேலதிக விவரங்களுக்கு இந்த இணையதளத்தைக் காண்க: https://www.newslaundry.com/2017/10/06/modi-government-bjp-economy-gdp.

இந்தியப் பொருளாதாரத்தில் நேர்மறையான [நம்பிக்கை தரும்] குறியீடுகளே இல்லை என்று [நாம்] சொல்லவில்லை. ஆனால், எதிர்மறையானவை மிக அதிக எண்ணிக்கையில் உள்ளன என்பதே உண்மை. 

ஒரு சிக்கலைத் தீர்க்கவேண்டுமானால் அந்தச் சிக்கல் இருப்பதை முதலில் ஒப்புக்கொள்ளவேண்டும். ஆனால், தலைமையமைச்சர் மோடியைப் பொருத்தவரை அப்படியில்லை. அவருடைய உலகில் எல்லாம் நல்லபடி இருக்கின்றன.

ஆங்கில மூலக் கட்டுரை: https://teekhapan.wordpress.com/2017/10/09/25-things-pm-modi-did-not-tell-you-about-the-indian-economy/

விவேக் கௌல், கட்டுரையாளர் அரசியல், பொருளாதாரம், நிதி, சந்தைப்படுத்தல் ஆகிய துறைகளில் எழுத்தாளர், ஊடகவியலாளர், விரிவுரையாளர்.

தமிழில்: 'பரிதி' (தி. ராமகிருச்ணன்), மொழிபெயர்ப்பாளர், சத்தியமங்கலம்

Pin It