காமன்வெல்த் நாடுகளின் கூட்டம் இந்த முறை இலங்கையில் 2013ல் வருகின்ற நவம்பர் மாதம் 15ஆம் தேதியிலிருந்து 17ஆம் தேதிவரை நடைபெற உள்ளது. அப்படி ஒரு கூட்டம் இலங்கையில் நடைபெறுமானால் அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு இவ்கூட்டமைப்பின் தலைவராக இராசபட்சேவே இருப்பார் என்பது கூட்டமைப்பின் விதி.

காமன்வெல்த் நாடுகள் என்பது பிரிட்டிஷ் ஆட்சிக்கு கீழ் காலனியாக இருந்த நாடுகளின் கூட்டமைப்பே ஆகும். இது 1867ம் விடுதலை பெற்ற கனடாவும் 1884ல் விடுதலை பெற்ற ஆஸ்திரேலியாவும் சேர்ந்து உருவாக்கியதே 'காமன்வெல்த் நாடுகள்' ஆகும்.

அதன்பின் பிரிட்டீஷிலிருந்து விடுதலை பெற்ற நியூசிலாந்து, தென் ஆப்பிரிக்கா, ஐரீஸ் போன்ற நாடுகள் சேர்ந்து 1926ல் ஒரு மாநாட்டை கூட்டி அதில் ஒவ்வொரு நாடும் எவ்வாறு செயல்படவேண்டும் என்று தீர்மானித்தார்கள்.

ஆனால் இங்கிலாந்தின் மிகப்பெரிய காலனி நாடான இந்தியா 1947ல் விடுதலை பெற்றபின் ஏற்கனவே உள்ள நடைமுறையில் மாற்றம் கொண்டு வந்து 1949ல் இலண்டன் தீர்மானம்(London Declaration)மூலம் ஒரு புதிய காமன்வெல்த் நாடுகளின் கூட்டமைப்பை உருவாக்கியது.

அதன்பின் 1950 மற்றும் 1960களில் காமன்வெல்த் நாடுகளின் கூட்டமைப்பில் மேலும் பல புதிய நாடுகள் சேர்ந்து இன்று 54 நாடுகளுடன் அது செயல்பட்டு வருகிறது.

இந்த காமன்வெல்த் நாடுகளின் கூட்டமைப்பானது இரண்டு முக்கிய தீர்மானத்தின் அடிப்படையில் செயல்படுகிறது.

1.1971ல் கொண்டுவரப்பட்ட சிங்கப்பூர் தீர்மானம்(Singapore declaration 1971 in Singapore)

2.1991ல் கொண்டுவரப்பட்ட ஹராரே தீர்மானம்(Harare declaration 1991 in Zimbabwe)

மேற்குறிப்பிட்ட இரண்டு தீர்மானமும் சில முக்கியமான பொதுவிதிகளை உறுப்பு நாடுகளுக்கு விதிக்கிறது அவை.

1.உறுப்பு நாடுகளில் வாழும் அனைத்து மக்களும் சமமாக நடத்தப்பட வேண்டும்.(Equal Rights for all citizens)2.உறுப்பு நாடுகளில் உள்ள மக்களை பாலின ரீதியாகவும், இனரீதியாகவும், மதரீதியாகவும்,நிற அடிப்படையிலும் அல்லது அரசியல் ரீதியாகவும் பாகுபாடின்றி நடத்தபட வேண்டும்.

மேற்கண்ட விதிகளின் அடிப்படையில்தான் காமன்வெல்த் கூட்டமைப்பில் உள்ள உறுப்பு நாடுகள் செயல்பட வேண்டும். அப்படி குறிப்பிட்ட விதிகளை மீறி உறுப்பு நாடுகள் செயல்படும் பட்சத்தில் அந்த நாட்டை காமன்வெல்த் நாடுகளின் கூட்டமைப்பில் இருந்து இடைநீக்கம் செய்யலாம் என்று விதிகள் கூறுகின்றன‌.

இதனடிப்படையில் 1995ஆம் ஆண்டு நைஜிரியா அரசு தனது நாட்டில் வாழ்ந்த பத்திரிக்கையாளரும் மற்றும் அங்குள்ள எண்ணைய் வளங்களை காக்கப் போராடிய ஒரு சமூகப் போராளியுமான கென் சரோ விவா( Ken Saro Wiwa)என்ப‌வரையும் அவருடன் சேர்த்து பத்து பேரையும் தூக்கிலிட்டது. அதன் காரணமாக காமன்வெல்த் நாடுகளின் விதியான 'அரசியல் ரீதியாக தனது மக்களை கொன்றது' என்ற விதியின் அடிப்படையில் 1995ஆம் ஆண்டு முதல் 1999ஆம் ஆண்டு வரை நான்கு ஆண்டுகள் அந்த நாடு இடைநீக்கம் செய்யப்பட்டது.

அதன்பின் பாகிஸ்தான் 18 அக்டோபர் 1999ல் தனது நாட்டின் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசைக் கலைத்து இராணுவ ஆட்சியை பர்வேஷ் முஷரப் நிறுவினார் என்பதற்காக ஹராரே தீர்மானத்தின் படி அப்பொழுது பாகிஸ்தான் இடைநீக்கம் செய்யப்பட்டது. மேலும் பிஜி மற்றும் ஜிம்பாப்வே ஆகிய நாடுகளும் மோசமான மனித உரிமை மீறல்களுக்காக காமன்வெல்த் கூட்டமைப்பின் சட்டத்துறை வல்லுனர்களால் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்கள். இதில் பிஜி மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகளானது இரண்டாவது முறையாக 2006 மற்றும் 2007 ஆகிய வருடங்களில் இடைநீக்கம் செய்யப்பட்டது. பிஜி நாட்டின் மீதான தடை இப்பொழுதும் தொடர்கிறது.

ஆனால் இதை விட பலமடங்கு மனித உரிமை மீறல்களையும், இனப் படுகொலைகளையும் செய்த, செய்து கொண்டிருக்கின்ற இலங்கையை ஏன் காமன்வெல்த் நாடுகளின் கூட்டமைப்பு இன்னும் இடைநீக்கம் செய்யவில்லை??

 இலங்கையை நீக்கம் செய்வதற்கான காரணங்கள்:

1.தனது சொந்த நாட்டில் வாழும் தமிழர்கள் என்ற தேசிய இனமக்களுக்கு கல்வி மறுத்து அவர்களுக்கு கட்டாய சிங்களத் திணிப்பை திணித்து இன்றுவரை தமிழர்களை இனரீதியாகப் பிரித்தது காமன்வெல்த் கூட்டமைப்பின் 1971 மற்றும் 1991ம் விதியின் படி விதிமீறலாகும்.

2.இலங்கையில் தமிழ் பேசும் இந்துக்களின் கோவில்களையும் (http://hinduexistence.org/tag/hindu-temple-destruction-in-sri-lanka/) மற்றும் முஸ்லீம்களின் தர்க்காக்களையும் (http://www.onislam.net/english/news/asia-pacific/462016-buddhist-attack-frets-sri-lanka-muslims.html) இடித்து அங்கு பவுத்த மதம் மட்டுமே இருக்க வேண்டும் என்று மதரீதியாக தனது மக்களை துன்புறுத்தி வருவது ஒரு அப்பட்டமான விதிமீறலாகும்.

3. பயங்கரவாதத்திற்கு எதிரான போர் என்று சொல்லி தனது சொந்த நாட்டு மக்கள் 90,000 பேரை முள்வேலிக்குள் அடைத்து வைத்து அவர்களுக்கு அடிப்படை வசதிகள் கூட செய்து கொடுக்காதது மற்றும் அங்குள்ள பெண்களை பாலியல் ரீதியாக துன்புறுத்துவது, இலங்கையில் வடக்கு கிழக்கு பகுதியில் மட்டும் 60,000 கைம்பெண்கள் இருப்பதாக சர்வதேச செஞ்சிலுவை சங்கம் சமீபத்தில் அறிவித்தது இப்படி பெண்களுக்கு எதிராக கொடுமைகள் செய்வதும் காமன்வெல்த் கூட்டமைப்பின் 1971 மற்றும் 1991ம் விதியின் படி விதிமீறலாகும்.

4.நைஜீரியாவில் ஒரு பத்திரிக்கையாளர் கொல்லப்பட்டார் என்பதற்காக அந்த அரசை இடைநீக்கம் செய்த காமன்வெல்த் கூட்டமைப்பு, இலங்கையில் இதுவரை 60க்கும் மேற்பட்ட பத்திரிக்கையாளர்களை காணவில்லை என்று சமீபத்தில் வெளிவந்த ஐ.நா தீர்மானத்திலேயே குறிப்பிடப்பட்டதை கண்டுகொள்ளவில்லை. மேலும் ”சண்டே லீடர்” பத்திரிக்கையின் ஆசிரியர் லசந்த விக்கரமசிங்கே "நான் இந்த அரசால் விரைவில் கொல்லப்படுவேன்" என்று முன்னரே தனது பத்திரிக்கையில் எழுதினார் (http://www.guardian.co.uk/commentisfree/2009/jan/13/wickrematunga-final-editorial-final-editorial) அதன்படியே இராசபட்சே அரசால் கொல்லப்பட்டார். இப்பொழுது சமீபத்தில் ஏப்ரல் 15, 2013அன்று உதயன் பத்திரிக்கை அலுவலகங்கள் அரசால் அடித்து நொறுக்கப்பட்டது. (http://cpj.org/2013/04/sri-lankan-daily-attacked-again-twice-in-two-weeks.php) இதுபோன்ற எண்ணற்ற ஜனநாயக மீறலை இலங்கை அரசு செய்கிறது.

5.இலங்கையில் உள்ள தமிழ் பேசும் தமிழர்கள் மற்றும் முஸ்லீம்கள் யாரும் இலங்கையில் அதிபர் ஆகமுடியாது என்ற ஒரு சட்டத்தை நிறுவி அங்கு அரசியல் ரீதியாகவும் சொந்த மக்களின் மீது அடக்குமுறையை ஏவி காமன்வெல்த் நாடுகளின் விதியை மீறி செயல்படுகிறது இலங்கை அரசு.

6.மேலும் தனது அரசுக்கு ஆதரவாக இல்லை என்ற காரணத்தால் இலங்கையின் தலைமை நீதிபதியான சிறானி பண்டாராநாயகாவை ஜனவரி 13, 2013அன்று நீதிபதி பதவியை விட்டு நீக்கி (http://www.thehindu.com/news/international/rajapaksa-dismisses-chief-justice/article4304287.ece) இலங்கையின் அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிராக செயல்பட்டு காமன்வெல்த் கூட்டமைப்பின் 1971 மற்றும் 1991ம் விதியினையும் மீறி செயல்பட்டு வருகின்றது இலங்கை அரசு.

7.இலங்கையின் வடக்கு கிழக்கில் வாழும் மக்களை இராணுவத்தைக் கொண்டு மிரட்டுகிற‌து. அங்கு 22 மக்களுக்கு ஒரு இராணுவம் நிறுத்தப்பட்டுள்ளதாக மனித உரிமை கண்காணிப்பகம் தனது அறிக்கையில் சொல்கிறது. மேலும் 1980ல் இலங்கையின் இராணுவ பலம் தரைப்படை, விமானப்படை, கடல்படை ஆகிய மூன்றையும் சேர்த்தே 30,000 ஆக இருந்தது. பின் இராசபட்சே பதவி ஏற்றபோது அது 1,25,000 ஆக இருந்தது. ஆனால் 2005 மற்றும் 2009 காலகட்டத்தில் மட்டும் இராசபட்சே அரசு மேலும் மேலும் ஆட்களை சேர்த்து இன்று அது 3,00,000 ஆக இருக்கிறது. ஆனால் திட்டமிடப்பட்ட இலக்கு என்பது 4,50,000 பேர். (http://www.colombotelegraph.com/index.php/notes-on-the-military-presence-in-sri-lankas-northern-province/) இப்படி இலங்கையை இராணுவ மயமாக்க இராசபட்சே அரசு திட்டமிட்டு செயல்பட்டு வருகிறது. இதே காரணத்துக்காகவே பாகிஸ்தான் அரசு 1999ல் காமன்வெல்த் கூட்ட்மைப்பில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டது.

இவ்வாறு இலங்கை அரசு காமன்வெல்த் நாடுகளின் கூட்டமைப்பில் உள்ள எந்த விதிகளையும் பின்பற்றாமல் தான்தோன்றித்தனமாக செயல்படுகிறது. இத்தனை காரணங்களையும் அடிப்படையாகக் கொண்டு காமன்வெல்த் நாடுகளின் கூட்டமைப்பை இலங்கையில் நடத்துவதை நிறுத்துவதோடு மட்டுமில்லாமல் தொடர்ந்து விதிகளை மீறும் இலங்கையை காமன்வெல்த் நாடுகளின் கூட்டமைப்பில் இருந்தே நீக்கம் செய்ய வேண்டும் என்பதே உலகமெங்கும் இருக்கும் மனித உரிமை ஆர்வலர்களின் கோரிக்கையாகும்.

- சு.கி.கொண்டல், மே 17 இயக்கம் (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)

Pin It