தமிழ் மொழி பல்வேறு சிறப்புக்களைப் பெற்ற உயர்தனிச் செம்மொழி! தொன்மை – முதன்மை – எளிமை – இளமை – வளமை – மேன்மை – ஆழ்மை – உயர்மை – பயன்மை – இசைமை – போன்று பத்துக்கும் மேற்பட்ட பண்புகளைக் கொண்டது இப்பைந்தமிழ்!

 இதனைத், ‘தமிழ் கூறு நல்லுலகம்’ எனத் தொல்காப்பியமும், ‘தெளிதமிழ் முத்தமிழ்’ என தேவாரமும், ‘தேனின் தீஞ்சுவைத் தமிழ்’ எனக் கம்பராமாயணமும், ‘இன்பத் தமிழ்’ எனச் சீவக சிந்தாமணியும், செப்பி மகிழ்ந்தன! ‘மேன்மைத் தமிழ்’ எனப் பெரிய புராணமும், ‘தெள்ளுதமிழ்’ எனத் திருப்புகழும், விருப்பத்தோடு விளம்பின! ‘தானின்று உலகம் தழையத் தழைத்த தமிழ்’ என மீனாட்சி இரட்டை மணிமாலையும், ‘சீர்த்ததமிழ்’, ‘செந்தமிழ்’ எனத் திருஅருட்பாவும் அருந்தமிழை ஆராதித்துள்ளன!

 ‘மனோன்மணியம்’ ஆசிரியர் பேராசிரியர் சுந்தரம்பிள்ளை, ஆரியம் போல் உலக வழக்கு அழிந்தொழிந்து சிதையா 'உன் சீரிளமைத் திறம் வியந்து செயல் மறந்து வாழ்த்துதமே' என, என்றுமுள தென்தமிழின் இளமையைச் சிறப்பித்து வாழ்த்துப் பாடியுள்ளார்!

   “யாமறிந்த மொழிகளிலே
   தமிழ் மொழி போல்,
   இனிதாவது எங்கும் காணோர்”!

என்று மகாகவி பாரதியார் தமிழை வியந்தும் ஏற்றியும் போற்றியுள்ளார்.

   “தமிழுக்கும் அமுதென்று பேர்! - அந்தத்
   தமிழ், இன்பத் தமிழ், எங்கள் உயிருக்கு நேர்!”

என்ற பாடலில் புரட்சிக் கவிஞர் பாரதிதாசன், இன்பத் தமிழ்மொழிக்கு அமுது, நிலவு, மணம், மது என்றெல்லாம் புதுப்புதுப் பெயரும் பொருளும் புகன்று உரைப்பார்! மேலும், அதன் மேன்மையை, இவ்வாறு பாராட்டுவார்: தமிழானது, உயிருக்கு நிகரானது!  சமூகத்தின் நல்ல விளைச்சலுக்கு நீரானது! வாழ்வதற்கு ஏற்ற இருப்பிடமானது! உரிமைக்கு ஆணி வேரானது! புலவர்க்குக் கூறிய வேலானது! அசதியை நீக்கும் அருமைத் தேனானது! அறிவுக்குத் துணை கொடுக்கும் வீரத் தோளானது! கவிதைக்கு வைரம் பொருந்திய வாளானது, உயர்வுக்குப் பரந்து விரிந்த வானானது! இவ்வாறெல்லாம் அன்னைத் தமிழின் ஆற்றலையும் அரிதான பண்பினையும் அடுக்கடுக்காய்த் தொடுத்துக் காட்டுவார்!

 ‘எங்கள் தமிழ், தங்கத்தமிழ்’ என வீண் பெருமை மட்டும் பேசிக் காலம் கழிப்போரைக் கண்டால் கழியால் அடிப்பார்! வாய் நீளம் காட்டுவதால் வளர்ச்சி அடையாது என்பார்! தாய்த்தமிழை மேலும் வளர்க்க, நம் தமிழர்கள் செய்ய வேண்டிய பணிகள் இவை, இவை எனக் கீழ்க்கண்டவாறு பட்டியலிடுகிறார் புரட்சிக் கவிஞர்.

• தமிழுக்கு நாள்தோறும் நல்ல தொண்டு ஆற்றிட வேண்டும்.

• எளிய நடையில் தமிழ் நூல்கள் பலவற்றை எழுதிக் குவித்திட வேண்டும்.

• புதிய புதிய இலக்கண இலக்கிய நூல்கள் இயற்றிட வேண்டும்.

• அறிவியல் கண்டுபிடிப்புகளைத் தமிழில், மொழியாக்கம் செய்து வெளியிட வேண்டும்.

• தமிழில் பேசவும், எழுதவும் ஆன நல்ல பழக்கத்தை நடைமுறைக்குக் கொண்டு வர வேண்டும்.

• வறுமையினால், தமிழ் படிக்க முடியவில்லை, என்ற அவலநிலையைப் போக்கிட வேண்டும்.

• நூலகங்களைப் பட்டி தொட்டியெங்கும் நிறுவ வேண்டும்.

• தமிழில் இயற்றியுள்ள இலக்கியங்களை, உலகில் பிறமொமழி பேசுவோர் தங்கள் தாய்மொழியில் படித்து இன்புற மொழிபெயர்த்தல் வேண்டும்.

• வணிக நிறுவனங்களின் விளம்பரப் பலகைகளை தமிழில் எழுதுதல் வேண்டும், இல்லையென்றால் அந்த பலகைகளைக் கட்டாயம் அகற்றிட வேண்டும்.

• திருமண அழைப்பிதழ்களில் பிறமொழிக் கலப்பில்லாமல் தமிழ்மொழியிலேயே, தவறாது அச்சடிக்க வேண்டும்.

• பொருள்களுக்குத் தமிழ்ப் பெயர்களே இடப்பட வேண்டும்.

• தெருப் பெயர்கள் யாவும் தமிழில் எழுதப்பட வேண்டும்.

• பள்ளி முதல் பல்கலைக்கழகம் வரை, கட்டாயம், தமிழ்மெமாழியிலேயே கல்வி கற்பிக்கப்பட வேண்டும்.

• அரசுத் துறைகள் அனைத்திலும் தமிலே ஆட்சிமொழியாக இடம் பெற வேண்டும்.

• தமிழில் சட்டங்கள், திட்டங்கள் தீட்டப்பட வேண்டும்.

மேற்கண்ட புரட்சிக் கவிஞர் வகுத்துள்ள பணிகளைச் செய்தாலே தமிழ் தழைத்து ஓங்கும் தரணியை ஆளும்!!

 ‘தமிழ் நாட்டில் குடிபுகுந்தவர்களும், தஞ்சமடைந்த வஞ்சகர்களும் தமிழால்தான் வளர்ந்தார்கள், செழித்தார்கள்! ஆனால் உயர்ந்த பின்பு தமிழைப் பழிக்கிறார்கள். தமிழர்களின் பண்பாட்டிட, நல்லொழுக்கங்களைச் சிதைக்கிறார்கள்! என்று தனது கோபத்தைக் கொட்டுகிறார் பாவேந்தர்! தமிழன் தாய்மொழி உணர்வுடன் வாழ வேண்டுகிறார் புரட்சிக் கவிஞர்!
 
 ‘ஆங்கிலம் தான் உலகமொழி என்று அறியாமல் கூறும் தமிழர்கள், தங்கள் தாய் மொழியாம் தமிழ், உலகமொழியாக்க முயற்சிகள் மேற்கொள்ள வேண்டும் என்பதை முனைப்புடன் வலியுறுத்துகிறார்.

“செந்தமிழே! உயிரே! நறுந் தேனே!
செயலினை, மூச்சினை உனக்களித்தேனே!
நைந்தா யெனில், நைந்து போகுமென் வாழ்வு!
நன்னிலை உனக்கெனில், எனக்குந் தானே!”

 தமிழ்த் தாய் நைந்து போகிறாள் என்றால், நம்முடைய வாழ்டுவம் நைந்து போகும், தமிழ் நல்ல நிலையை எய்தினால், நமக்கும் நல்ல நிலை கிட்டும் என்று வரையறை செய்கிறார் வண்டமிழ்ப் பாவேந்தர்.

 தமிழின் சிறப்பு – செழுமை, அருமை – பெருமை, அறிவு – ஆற்றல், வனப்பு – வளம், உயிர்ப்பு – உயர்வு, எழில் – ஏற்றம் போன்ற பைந்தமிழ்ப் பண்புகளைத் தமது கவிதைகளாலும், காவியங்களாலும், பன்முகப்படைப்புகளாலும் தனித்தன்மையினைத் புரட்சிக்கவிஞர் போற்றியுள்ளார்! தனித்தன்மையினைத்குத் தக்கவாறு எடுத்துரைத்துள்ளார்!

 புரட்சிக் கவிஞரின் இலட்சிய வேட்கையினை ஈடேற்ற நாளெல்லாம் தொண்டு செய்வதே, நந்தமிழர்களின் தலையாய கடமையாகும்.

Pin It