இலங்கையில் கடந்த 2 மாதங்களில் 103 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டு பல்லாயிரக்கணக்கான தமிழர்கள் இடம் பெயர்ந்துள்ள அவல நிலைக்கு முற்றுப்புள்ளி வைக்க இந்திய அரசு தலையிட தமிழக அரசியல் கட்சிகள் வலியுறுத்த வேண்டும் என்று கழகத்தின் தலைவர் கொளத்தூர் மணி வேண்டுகோள் விடுத்துள்ளார். கழகத் தலைவர் வெளியிட்டுள்ள அறிக்கை:

சிங்கள அரசுக்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் போர் நிறுத்த ஒப்பந்தம் கையெழுத்தாகி 4 ஆண்டுகள் கடந்து விட்டன. அந்த ஒப்பந்தப்படி 3 மாத கால அவகாசத்தில் நிறைவேற்றியிருக்க வேண்டிய துரோகக் குழுக்களின் ஆயுதக் களைவு;

வாழ்விடங்கள் மற்றும் வழிபாட்டு இடங்களிலிருந்து அரச படைகள் வெளியேறுதல்;

தமிழர் தாயகப் பகுதியில் கடலுக்குள் மீன்பிடித் தொழிலை தடையேதுமின்றி அனுமதித்தல்;

ஆகிய எதனையுமே நிறைவேற்றாத சிங்கள அரசு, கருணா போன்ற புதிய துரோகக் குழுக்களை உருவாக்கியது.

இந்நிலையில் மகிந்த ராஜபக்சே பதவியேற்புக்குப் பின் 22.2.2006 இல் நடைபெற்ற ஜெனீவா பேச்சு வார்த்தையில் மீண்டும் அதே கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டு பேச்சு வார்த்தைகள் ஏப்ரலுக்கு ஒத்தி வைக்கப்பட்டு 24.2.2006 இல் முடிவுக்கு வந்தது.

24.2.2006 முதல் 27.4.2006 வரை சிங்கள அரசு படைகளாலும் அதன் துணையோடு துரோகக் குழுக்களாலும் சிங்களக் காடையர்களாலும் நிகழ்த்தப்பட்ட படுகொலைகளால் 103 தமிழர்கள் கொல்லப்பட்டனர். கொல்லப்பட்டவர்களில் 18 வயதுக்கும் குறைந்த இளையோர் 6 பேரும், 4 வயது குழந்தை உட்பட 3 குழந்தைகளும் 15 பெண்களும் அடங்குவர்.

ஜனநாயக வழியில் தமிழ் மக்களின் உரிமைக்குக் குரல் கொடுத்து வந்த திரிகோணமலை தமிழ் மக்கள் பேரவைத் தலைவர் விக்னேஷ்வரன், அகில இந்திய தமிழ் காங்கிரஸ் வவுனியா மாவட்டத் தலைவர் செந்தில்நாதன் உள்ளிட்ட தமிழர் தலைவர்களும் படுகொலைக்கு ஆளாகியுள்ளனர்.

திரிகோணமலையில் ஏப்ரல் 12 ஆம் நாள் சந்தைப் பகுதியில் ஒரு குண்டு வெடிக்க வைக்கப்பட்ட பின்னர் 10 முதல் 15 நிமிடத்துக்குள்ளாகவே ஒரு லாரியில் 100 முதல் 150 சிங்களக் காடையர்கள் அப்பகுதியில் இறக்கப்பட்டு தமிழர்களது கடைகள், வீடுகள் சூறையாடப்பட்டு தீக்கிரையாக்கப்பட்டதுடன் 12க்கும் மேற்பட்ட தமிழர்கள் வெட்டியும் எரித்தும் படுகொலை செய்யப்பட்டனர்.

இந்த படுகொலைச் சம்பவங்களின்போது சிங்கள அரசு படைகள் அங்கு நின்று வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்ததாக ஆம்னஸ்டி இண்டர் நேஷனல் போன்ற பல்வேறு சர்வதேச மனித உரிமை அமைப்புகளும் ஊடகங்களும் குற்றம் சாட்டியுள்ளன.

இந்நிலையில் கொழும்பில் சிங்கள இராணுவத் தளபதி சரத் பொன்சேகா மீது அடையாளம் தெரியாத நபர்களால் நிகழ்த்தப்பட்ட தற்கொலைத் தாக்குதலைக் காரணமாகக் காட்டி சிங்கள அரசின் முப்படைகளும் திரிகோண மலைப்பகுதியில் விடுதலைப் புலிகளின் நிலைகள் மீது தாக்குதல் நடத்துவதாகக் கூறிக்கொண்டு தமிழர் குடியிருப்புகள் மீது தாக்குதல் நடத்தின.

இதில் தமிழீழ விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளில் மட்டும் அல்லாது சிங்கள அரசின் கட்டுப்பாட்டிலுள்ள தமிழ் முஸ்லிம்கள் வாழுகிற பகுதிகளிலும் (மூதூர் கிழக்கிலுள்ள வட்டம் என்ற ஊரில்) கூட சிங்கள படைகள் தாக்குதலை நடத்தியுள்ளது. இதில் மௌலவி உள்ளிட்ட 4 இஸ்லாமியர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.

தமிழீழ விடுதலைப் புலிகளின் நிலைகள் மீது “மட்டுப்படுத்தப்பட்ட ஒரு இராணுவ நடவடிக்கையை” தொடர்ந்து நடத்துவோம் என்ற சிங்கள அமைச்சர்களும் சிங்கள அரசின் சமாதான செயலகப் பொறுப்பாளர் பாலித கோனென்னவும் அறிவித்துள்ளது ஒரு மிகப் பெரிய போர் நிறுத்த ஒப்பந்த மீறலேயாகும். இந்த உண்மைகளுக்கு மாறாக தமிழ்நாட்டு ஊடகங்கள் சிங்களவர்கள் கொல்லப்படுவதாகவும் சிங்கள இராணுவத்தினரது குடும்பத்தினர் கதறி அழுகிற வண்ணப்படங்களை வெளியிடுவதும் ஊடக அறநெறிகளுக்கு எதிரானது.

இப்போக்கை வன்மையாகக் கண்டிக்கும் அதே வேளையில் தமிழ் மக்கள் உண்மை நிலையை அறிந்து போர் நிறுத்த மீறலை நிகழ்த்தி வரும் சிங்கள அரசுக்கு கண்டனம் தெரிவிக்க வேண்டும் என்று இந்திய அரசை நாம் வலியுறுத்துகிறோம்.

தமிழகக் கட்சிகளும் இலங்கையில் மீண்டும் தலைதூக்கியுள்ள தமிழினப் படுகொலையைக் கண்டித்து குரலெழுப்பவும் தமிழினப் படுகொலையைத் தடுக்கவும் இந்திய அரசை வலியுறுத்த வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுக்கிறோம்.

Pin It