இந்தியாவில் நடைபெறும் ஐ.பி.எல். என்ற கிரிக்கெட் போட்டியில் சென்னையில் இலங்கை கிரிக்கெட் வீரர்களை விளையாட தமிழக அரசு தடை விதித்திருப்பதை மக்கள் சிவில் உரிமைக்கழகம் (PUCL) வரவேற்கின்றது. இந்தத் தடை என்பதை வெறும் இலங்கை கிரிக்கெட் வீரர்கள் என்று இல்லாது, இலங்கை கிரிக்கெட் அணியோடு இந்திய கிரிக்கெட் சம்மேளன‌ம் எல்லா உறவுகளையும் துண்டித்துக் கொள்ள , நாடு முழுவ‌துமுள்ள சனநாயக சக்திகள் குரல் கொடுக்க வேண்டும் என வேண்டுகின்றோம்.

தென்னாப்பிரிக்க அரசு நிறவெறிக் கொள்கையை கடைபிடித்து வந்த காலகட்டங்களில் இந்தியா அந்நாட்டுடன் விளையாட்டு உறவை முற்றிலும் துண்டித்துக் கொண்டது. பல நாடுகள் கொடுத்த அழுத்தத்தின் காரணமாக 1970 ஆண்டு சர்வதேச ஒலிம்பிக் குழுவிலிருந்து அந்த நாடு விலக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து தென்னாப்பிரிக்கா விளையாட்டுத் துறையில் தனிமைப்பட்டது . ஐக்கிய நாடுகள் சபை விளையாட்டில் தென்னாப்பிரிக்காவை தனிமைப்படுத்த பிற நாடுகளை ஊக்குவித்தது குறிப்பிடத்தக்கது.

தமிழ் மக்கள் மீது இலங்கை இனப்படுகொலை குற்றம் புரிந்துள்ளது. 2009 இறுதிப் போரில் சுமார் ஒன்னரை லட்சத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள், குழந்தைகள் கொல்லப்பட்டுள்ளனர். போர் முடிந்த பின்னரும் தமிழ் மக்கள் திட்டமிட்டு அழித்தொழிக்கப்பட்டுள்ளனர். இன்று வரை மனித கண்ணியம், உயிர்வாழும் உரிமை, அடிப்படை சுதந்திரமின்றி வாடும் நிலைக்கு தமிழ் சமூகம் இலங்கை அரசால் ஆளாக்கப்பட்டுள்ளது. இக் குற்றங்கள் மனித குலத்தின் மீது நிகழ்த்தப்பட்ட கொடூரமான தாக்குதல்கள். இந்த குற்றங்களைச் செய்த ஒரு நாட்டை தனிமைப்படுத்துவதின் மூலமே பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதியின் வெளிச்சம் கிடைக்கும். புறக்கணிப்பு (Boycott) என்ற ஆயுதத்தினை தனது அகிம்சா போராட்டத்தின் ஒரு வடிவமாக காந்தியடிகள் பார்த்தார். ஒத்துழையாமை இயக்கம் இதன் தொடர்ச்சியாகவே உருவானது.

விளையாட்டையும் அரசியலையும் வேறுபடுத்திப் பார்க்க வேண்டும் என இலங்கை கிரிக்கெட் வீரர்களுக்கு சார்பாக எழும் குரல்களுக்கு கடந்த 1988 மே மாதம் 6 நாள் ஐ.நா சபையின் நிறவெறிக்கு எதிரான சிறப்பு பிரச்சார கூட்டத்தில் இந்திய டென்னிஸ் வீரர் விஜய் அமிர்தராஜ் பேசிய பேச்சின் சாராம்சம் வழி பதில் சொல்வதே பொருத்தமானது.

"1974 ஆண்டு டேவிஸ் கோப்பை இறுதிப் போட்டியில் நுழைந்தோம். சுதந்திரத்திற்குப் பின் இரண்டாவது முறையாக அந்த வாய்பு வந்தது. அப்போது எனக்கு 20 வயது. இறுதிப் போட்டியில் தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி கோப்பையைக் கைப்பற்றும் வாய்ப்பு பிரகாசமாக இருந்தது. ஆனால் இந்திய அரசு எங்களை விளையாட வேண்டாம் என உத்திரவிட்டு விட்டது. 20 வயதான இளைஞனான நான் மிகுந்த ஏமாற்றமடைந்தேன். அதற்கு இரண்டாண்டுகள் கழித்து தென்னாப்பிரிக்கா 13 ஆண்டுகள் விளையாட்டில் அதன் நிறவெறி பாகுபாடு காரணமாக விலக்கி வைக்கப்பட்டது. அந்த நாட்டை கூர்ந்து கவனித்த போது நடந்தேறிய சாவுகள், வன்முறைகள் இயற்கை சீற்றத்தால் நடந்ததல்ல. ஒரு சிறுபான்மை சமூகத்தின் இன வெறிக் கொள்கையால் நடந்ததை அறிந்து கொண்டேன்.

விளையாட்டு என்பது வெறும் விளையாட்டு மாத்திரமல்ல; அது வியாபாரத்தோடு தொடர்புடையது. விளையாட்டால் பேரும் புகழும் வரும்போது சக மனிதனின் வாழ்வுரிமை குறித்த பொறுப்புணர்வும் தேவை. விளையாட்டை வெறும் விளையாட்டு என்று மாத்திரம் பார்த்து அரசியலிருந்து விலக்கி வைக்கவேண்டும் என குரல்களும் வருகின்றன. ஆனால் அது சாத்தியமற்றது. சில நிகழ்வுகளில் நமது நிலைப்பாட்டை ஆதரவு அல்லது எதிர்ப்பு என காட்டவேண்டியது முக்கியம். ஒன்றை முக்கியமாக அறிந்து கொள்ளவேண்டும். முதலில் நாம் மனிதர்கள். அதற்குப் பின்னரே விளையாட்டு வீரர்கள். தனிப்பட்ட முறையில் நான் தென்னாப்பிரிக்காவில் விளையாட நிர்பந்திக்கப்பட்டேன்.

ஒரு விளையாட்டு வீரராக இருக்கட்டும் அல்லது கலைஞராக அல்லது வேறு பதவியிலிருப்பவராக இருக்கட்டும், நம் எல்லோருக்கும் சக மனிதன் குறித்த சமூக அக்கறை வேண்டும். அதுதான் இந்த உலகினை சமத்துவம், கண்ணியம், சுதந்திரம் உள்ள உலகாக உருவாக்க துணை புரியும்."

இலங்கை வீரர்கள் பங்குபெறும் கிரிக்கெட் வெறும் விளையாட்டு மட்டுமல்ல. சர்வதேச் சமூகம் தரும் ஒவ்வொரு சனநாயக அழுத்தமுமே தமிழ் மக்கள் மீது நடத்தப்பட்ட‌ கோரங்களுக்கு நீதி கிடைக்க வழி செய்யும். இலங்கை கிரிக்கெட் அணியை எல்லா வடிவிலும் புறக்கணிப்போம்

‍ - ச.பாலமுருகன், மாநிலச்செயலர், மக்கள் சிவில் உரிமைக்கழகம் PUCL

Pin It