தமிழ்நாடு மக்கள் கட்சியின் சார்பாக அருண்சோரி எங்கள் மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் குறித்து ஒரு குற்றச்சாட்டை முகநூலில் வைத்திருந்தார் அதற்க்கு நாங்கள் உரிய பதிலளித்திருக்கும் நிலையில் அதே கட்டுரையை அவர் கீற்றிலும் வெளியிட்டிருக்கிறார். அவர் வைக்கும் அனைத்து கேள்விகளுக்கும் மே 17 இயக்கத்தைச் சார்ந்தவன் என்ற முறையில் பதிலளிக்க நான் விரும்புகிறேன்.

முதலில் அவர் எழுதியிருக்கும் கட்டுரையின் தலைப்பிலிருந்தே தொடங்குகிறேன். இந்திய அரசுக்கு எதிரான மாணவர் போராட்டத்தைத் திசை திருப்ப முயலும் மே 17 திருமுருகன் என்று கட்டுரைக்கு தலைப்பிட்டிருக்கிறார். முதலில் அவர் ஒன்றை தெளிவாகப் புரிந்து கொள்ள வேண்டும். மே 17 என்பது தனிநபர் அமைப்பு கிடையாது. அதன் அனைத்து நிலைபாடுகளும், கொள்கைகளும் அது நடத்தும் போராட்டங்களும் எங்கள் அனைவராலும் விவாதிக்கப்பட்டு நிறை, குறைகள் ஆராயப்பட்டு, கருத்தொற்றுமை ஏற்பட்ட பின்பே முடிவு செய்யப்படுகிறது. எனவே எங்கள் இயக்கத்தின் நிலைப்பாடான அமெரிக்க எதிர்ப்பு என்ற நிலைப்பாட்டிற்கு திருமுருகனை மட்டும் குற்றஞ்சாட்டியிருப்பது முறையற்ற தனிநபர் தாக்குதலாகும். மேலும் எங்கள் இயக்கத்தின் கொள்கைக்கு திருமுருகனை மட்டும் குற்றம் சாட்டுவது அதன் மற்ற உறுப்பினர்களான எங்களை செயல்படாதவர்கள் என்று மறைமுகமாக சாடுவதாகும். எனவே திரு அருண்சோரியின் இந்த விமர்சனத்தை மே 17 இயக்கம் வன்மையாகக் கண்டிக்கிறது.

அவர் திருமுருகனின் மேல் வைத்திருக்கும் குற்றச்சாட்டு மே 17 இயக்கம் அமெரிக்கத் தீர்மானத்தை எதிர்த்து இந்தியாவை காப்பாற்றும் நோக்குடன் திசைதிருப்புகிறோம் என்பதாகும்.

நாங்கள் அமெரிக்காவை எதிர்த்து, இந்தியாவை காப்பாற்ற முயல்கிறோம் என்பது அடிப்படை புரிதல் கூட இல்லாத செயலாகும். மே 17 இயக்கம் இதுவரை நடத்திய, நடத்தப் போகின்ற அனைத்து போராட்டங்களையும் இந்தியாவை எதிர்த்தே நடந்தும், நடத்தியும் வருகிறது. இப்பொழுது நாங்கள் அமெரிக்காவை எதிர்ப்பது போராட்டத்தின் ஒரு பகுதியே தவிர, இதுவே ஒட்டுமொத்த போராட்டம் இல்லை. நாங்கள் இந்தப் போராட்டத்தை தொடங்கும்பொழுதே நாங்கள் வெளியிட்ட சுவரொட்டியில் இந்தியா+இலங்கை+அமெரிக்காவின் கூட்டு சதியை முறியடிப்போம் என்று தான் வெளியிட்டோம். 

may17_wallposter_640

எந்த அடிப்படை ஆதாரமும் இல்லாமல் எங்கள் இயக்கத்தின் மீது சேறு பூசும் நடவடிக்கை என்பது மேலே நான் குறிப்பிட்டிருக்கும் இந்த சுவரொட்டியின் மூலம் தெரிந்து கொள்ளலாம். இதுமட்டுமல்லாமல் காஷ்மீர் போராட்டக் குழுவைச் சேர்ந்த கிலானியை அழைத்து வந்து, திருநெல்வேலியில் இந்திய அரசிற்கு எதிராக ‘காஷ்மீர் விடுதலை’ குறித்து கூட்டம் நடத்தி இருக்கிறோம். அதே கூட்டத்தில் தமிழீழ அழிப்பில் இந்தியாவின் பங்கு குறித்து காசி ஆனந்தன் ஐயாவும் பேசினார். கூடங்குளம் அணு உலை, முல்லைப் பெரியாறு, தமிழகத்திற்கு தரவேண்டிய மின்சாரத்தை தராமல் இருட்டடிப்பது என்று இந்தியாவின் அனைத்து தமிழர் விரோத துரோகங்களுக்கும் எதிராக எங்கள் இயக்கம் தொடர்ந்து போராடி வருகிறது. அதேபோல் தமிழின அழிப்பிற்கு துணைபோன இந்தியாவின் ஏர்டெல் புறக்கணிப்பு போராட்டம், இந்திய வெளியுறவுக் கொள்கைக்கு முட்டு கொடுக்கும் ஹிந்து பத்திரிக்கைக்கு எதிரான போராட்டம், தமிழின இனப்படுகொலைக்கு துணைபோன ஐ.நா. அலுவலக முற்றுகை என்று தமிழீழத்திற்கு தடையாக இருக்கும் அனைத்து முட்டுகட்டைகளுக்கும் எதிராக எங்கள் போராட்டம் சரியான திசையில் செல்கிறது.

கடந்த வாரம் சத்தியம் தொலைக்காட்சியில் நடந்த நேர்காணலில் திருமுருகன் இந்திய அரசை பொறுக்கி அரசாங்கம் என்று விமர்சித்தார். இந்த அளவிற்கு நீங்கள் எங்காவது இந்தியாவை எதிர்த்துப் பேசியதுண்டா? இத்தனை ஆண்டுகள் நாங்கள் இந்தியாவிற்கு எதிராக போராட்டம் நடத்தும் பொழுதெல்லாம் கேள்வி கேட்காத அருண்சோரிக்கு, அமெரிக்கப் பொருட்களைப் புறக்கணிக்கச் சொல்லும்பொழுது மட்டும் ஏன் கோபம் வருகிறது? அருண்சோரியின் இந்த கோவத்தில் இந்திய எதிர்ப்பைவிட அமெரிக்கப் பாசம் அதிகம் இருப்பதன் நோக்கம் என்ன? கொலைகாரனை நீதிபதியாக்கிய LLRCயை நிராகரிப்பதும், அதையே தமிழனுக்கான தீர்வாகத் திணிக்கும் ஐ.நா மற்றும் அமெரிக்காவினை எதிர்ப்பதும் இந்தியாவிற்கு ஆதரவானது என்பது எந்த புரட்சிகர சிந்தனையில் வருகிறது என்று சத்தியமாக எங்களுக்குப் புரியவில்லை.

மேலும் எங்களின் ஐ.நா. அதிகாரிகளுக்கு எதிரான போராட்டம் குறித்து கேள்வியெழுப்பியிருக்கும் இவர் ஐ.நா. அமைப்பு என்பது உலக ஏகாதிபத்தியத்தின் பிடியில் இருக்கும் நிறுவனமாக இருந்தபோதும், தமிழீழ விடுதலையை முன்கொண்டு செல்ல உதவக் கூடிய போர்க்குற்றம் மற்றும் இனப்படுகொலைக்கான பன்னாட்டு விசாரணையை கொண்டு வருவதற்குரிய மையமாக இருக்கின்றது என்கிறார். என்ன சொல்ல வருகிறீர்கள் அருண்சோரி? ஐ.நா. அதிகாரிகள் என்ன குற்றம் செய்தாலும் அதை எதிர்த்து யாரும் கேள்வி கேட்கக்கூடாது என்கிறீர்களா?

மேலும் ஐ.நாவிற்கு எதிரான போராட்டத்தை புலம்பெயர் சமூகம் தான் செய்ய வேண்டும் என்றும் கூறுகிறார். முதலில் ஒன்றை புரிந்து கொள்ளுங்கள் ஐ.நாவின் போர்க் குற்றம் குறித்த உண்மைகளை முதன்முதலில் மிகப்பெரிய ஆய்வுக்கு உட்படுத்தி, ஒவ்வொன்றுக்கும் தெளிவான ஆதாரங்களோடு அதை வெளிக்கொண்டு வந்தது யார்? அது குறித்த புரிதல்களை மக்களுக்கு ஏற்படுத்த போராட்டங்கள் செய்யாமல் வெறும் அறிக்கைகளை மட்டும் விட்டுக் கொண்டிருந்தால் அது தமிழக மக்களிடமும் சென்று சேர்ந்துவிடுமா என்ன? இதில் கவனிக்க வேண்டிய செய்தி - நாங்கள் ஐ.நாவிற்கு எதிரான போராட்டம் செய்தது பிப்ரவரி 12 மாணவர்கள் போராட்டம் தொடங்குவதற்கு முன் என்பது அருண்சோரிக்கு தெரியாதா இல்லை அதை வசதியாக மறந்துவிட்டாரா?

மாணவர்கள் போராட்டத்தை மே 17 திசைதிருப்புவதாக குற்றம் சுமத்தியிருக்கும் அருண்சோரியிடம் நாங்கள் கேட்கவேண்டிய கேள்விகள் பல விடயங்களில் இருக்கிறது. இருப்பினும் இப்பொழுது அவர் மாணவர் போராட்டத்தை மையப்படுத்தியே எங்களின் மேல் குற்றம் சுமத்தியதால் நானும் மாணவர் போராட்டம் தொடர்பாகவே அவரிடம் சில கேள்விகளை கேட்க விரும்புகிறேன்.

முதன்முதலில் லயோலா கல்லூரி மாணவர்கள் உண்ணாவிரதம் உட்கார்ந்த பொழுது முதல் நாள் அன்றே “AICUF வளாகத்திலிருந்து இடத்தை மாற்ற வேண்டாம்; இன்றே போராடி கைதாவோம். நீங்கள் கைதானால் தமிழகத்தில் மாபெரும் புரட்சி வெடிக்கும்” என்று போராட்டம் மற்ற மாணவர்களுக்கு தெரியும் முன்பே ஆலோசனை கூறி நீர்த்துப்போக செய்ய முயற்சித்ததின் நோக்கம் என்ன?

மாணவர்கள் போராட்டத்திற்கு பல இயக்கங்கள், கட்சிகள் உதவி வருகின்றன. யார் பெயரும் வெளியில் தெரியாது. அதே போல் தமிழ்நாடு மக்கள் கட்சி மதுரை போராட்டத்தில் பங்கு கொண்டது. அவர்களுக்கு 14ம் தேதி பேரணிக்கு சுவரொட்டி ஓட்டும் பணி கொடுக்கப்பட்டது. மாணவர்கள் அனைவரும் ஐ.நாவில் அமெரிக்கத் தீர்மானத்தை அயோக்கிய தீர்மானம் என்று மறுத்த பொழுது சுவரொட்டி போட்டவர்கள் ஐ.நா தீர்மானத்தை இந்தியா ஆதரிக்க வேண்டும் என்று சுவரொட்டி போட்டது ஏன்? (கடைசி நேரத்தில் கவனித்த மாணவர்கள் அந்த பகுதியை கிழித்துவிட்டு ஒட்டினர்)

அமெரிக்கத் தீர்மானத்தை ஆதரித்து நீங்கள் போட்ட சுவரொட்டியை உங்கள் கட்சியின் அதிகாரப்பூர்வ முகநூல் பக்கத்தில் போட்டிருப்பது குறித்து கேள்வி எழுப்பியவுடன் அந்த கேள்விக்கு கூட பதில் சொல்லாமல் அவசர அவசரமாக அந்தப் படத்தை நீக்கியது ஏன்? உங்களிடம் நேர்மை இருந்தால் அதை ஏன் நீக்க வேண்டும்? 

 tmk_poster_628

லயோலா மாணவர்களின் போராட்டம் தொடங்கிய முதல் நாளிலிருந்து போராட்டத்தை ஒருங்கிணைக்க மாணவர்களால் உருவாக்கப்பட்ட தமிழீழ விடுதலைக்கான மாணவர் கூட்டமைப்பை உடைத்து, மாணவர் போராட்டத்தை உடைக்க ‘தமிழீழத்திற்கான மாணவர் போராட்ட குழு’ என்ற குழுவை நீங்களும் உங்கள் கட்சியும் உருவாக்க வேண்டிய அவசியம் என்ன?

மாணவர் போராட்டத்தில் எந்த அமைப்பும் தலையிடக்கூடாது என்ற உயர்ந்த நோக்குடன் செயல்படும் நீங்கள், உங்கள் கட்சியில் இணைச் செயலாளர் பொறுப்பில் இருக்கும் திவ்யாவையும், கட்சியின் மாணவர் அமைப்பில் இருக்கும் இளையராஜாவையும் தமிழீழத்திற்கான மாணவர் போராட்ட குழுவின் ஒருங்கிணைப்பாளர்களாக முன்னிறுத்துவது ஏன்?

எங்களை இந்தியாவை எதிர்த்துப் போராடவில்லை என்று குறைசொல்லும் நீங்கள், இந்தியாவின் தேர்தல் அரசியலை ஏற்றுக்கொண்டு கட்சி தொடங்கிய நீங்கள், இந்தியாவை எதிர்த்து செய்த போராட்டங்கள் தான் என்ன?

எங்கள் மேல் வைக்கப்பட்ட அனைத்து அவதூறுகளுக்கும் நாங்கள் நேர்மையாக பதிலளித்திருக்கிறோம். நாங்கள் கேட்ட எந்த கேள்விகளுக்கும் நீங்கள் இதுவரை பதில் சொல்லவில்லை. இனிமேலாவது பதில் சொல்ல முடியுமா அருண்சோரி?

-    கார்த்திக், மே 17 இயக்கம் (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)

Pin It