"இலங்கையில் அமைதிக்கான அய்ரிஷ் கருத்து மன்றம்' 19.11.2009 அன்று ஒரு மக்கள் தீர்ப்பாயத்தை நடத்தக் கோரியது. சூலை 2006 இல் போர் தொடங்கிய நாள் முதல் ஏப்ரல் 2009 வரை, அய்க்கிய நாடுகள் அவையின் உள் ஆவணங்களின்படி, வான் வழித் தாக்குதல் மற்றும் கனரக ஆயுதங்களின் பயன்பாடு காரணமாக, ஒரு நாளைக்கு 116 பேர் கொல்லப்பட்டதாக அந்த அய்ரிஷ் குழு கூறியது.

இறுதி சில வாரங்களில் மட்டும் 20,000 தமிழ் மக்கள் கொல்லப்பட்டதாக பிரிட்டிஷ் மற்றும் பிரெஞ்சு ஊடகங்கள் செய்தி வெளியிட்டன.

போர் குறித்த ஜெனிவா ஒப்பந்தங்களை இலங்கை பாதுகாப்புப் படையினர் மீறியதாகவும், குறிப்பாக போரின் இறுதி 5 மாதங்களான சனவரி முதல் மே 2009 வரையிலான காலகட்டத்தில் கொடூரமான போர்க் குற்றங்களையும், மானுடத்திற்கு எதிரான குற்றங்களையும் அவர்கள் புரிந்ததாகவும் பல குற்றச்சாட்டுகள் வைக்கப்பட்டன.

da_32மக்களின் வாழ்விடங்கள், மருத்துவமனைகள், அரசு அறிவித்த "பாதுகாப்பு வலையங்கள்', பாதுகாப்புப் படையினர் அறிவித்த "தாக்குதல்கள் அற்ற வலையங்கள்' ஆகியவற்றின் மீது பாதுகாப்புப் படையினர் நடத்திய குண்டுவீச்சுத் தாக்குதல்களும், அவற்றின் மூலம் பல மக்களும் மருத்துவர்களும் தொண்டு ஊழியர்களும் கொல்லப்பட்டதும் இந்த குற்றச்சாட்டுகளில் அடங்கும். போர்ப் பகுதிகளில் மக்களின் அன்றாட வாழ்வியல் தேவைகளான உணவு, நீர் மற்றும் மருத்துவ வசதிகள் வழங்கப்படாததும் இப்புகார்களில் அடங்கும். இவற்றைத் தவிர, மானுடத்திற்கு எதிரான கொடூரக் குற்றங்களும் அதில் அடங்கும்.

போர் முடியும் முன்பே அய்.நா. அவையின் நிறுவனங்கள், நடைபெற்று வரும் மனித உரிமை மீறல்கள் மற்றும் மக்கள் மீது இலங்கை அரசின் ஆயுதப் படையினர் நடத்தும் தாக்குதல்கள், விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் முன்பு இருந்த பகுதிகளில் வாழும் மக்களுக்கு எல்லாவித உதவிகளும் மறுக்கப்பட்டமை ஆகியவை குறித்து இலங்கை அரசிடம் தங்கள் கவலையை வெளிப்படுத்தின. ஆனால் இலங்கை பாதுகாப்புப் படையினர் இந்த எச்சரிக்கைகளை எல்லாம் அலட்சியப்படுத்திவிட்டு, தங்கள் போக்கில் கொடூரக் குற்றங்களைத் தொடர்ந்தனர்.

போர் முடிந்த உடனடி மாதங்களில், அனைவரின் கவனமும் வன்னிப் பகுதி தடுப்பு முகாம்களில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள 2 லட்சத்து 80 ஆயிரம் இலங்கைத் தமிழர்கள் மீது திரும்பியது. முகாம்களில் நெருக்கமாக அடைக்கப்பட்டு, பாதுகாப்பான உணவு, நீர், சுகாதாரம் மற்றும் மருத்துவ வசதிகளை அளிப்பதற்கான போதுமான கட்டமைப்புகள் இன்றி அவர்கள் வைக்கப்பட் டிருந்தனர். இந்நிலையில், இலங்கை அரசு அவர்களில் உள்ள புலி ஆதரவாளர்களைப் பிரித்தெடுக்கும் வரை, இடம் பெயர்ந்த தமிழ் மக்கள் அனைவரும் அந்த முகாம்களிலேயே வைக்கப்படுவார்கள் என்று அறிவித்தது.

தொடர்ந்த வாரங்களில், பல நூறு எண்ணிக்கையிலான தமிழ் இளைஞர்கள் முகாம்களில் இருந்து காணாமல் போவதும், பாதுகாப்பு படையினர் அல்லது அரசின் ஆதரவு பெற்ற ஒட்டுக் குழுக்களால் கூட்டிச் செல்லப்படுவது குறித்தும் பெரும் எண்ணிக்கையிலான புகார்கள் எழுந்தன. நூற்றுக்கணக்கானோர் கொல்லப்பட்டிருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.

அய்ந்து மாதங்களுக்கு மேல் தமிழ் மக்கள் இவ்வாறு முகாம்களில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளமை குறித்து எழுந்த உலகளாவிய எதிர்ப்பினைத் தொடர்ந்து, அதில் குறிப்பிடத் தகுந்த எண்ணிக்கையிலானவர்கள் மீள் குடியமர்த்தப்படுவார்கள் என அரசு அறிவித்தது. இருப்பினும், பி.பி.சி. மற்றும் பிற செய்தி ஊடகங்கள் "இவ்வாறு முகாம்களிலிருந்து விடுதலை செய்யப்பட்டவர்கள், மீண்டும் ஊரை விட்டுத் தள்ளி உள்ள பிறிதொரு முகாமுக்கே கொண்டு செல்லப்பட்டனர்' என்று கூறின. தனது படையினர் மீது வைக்கப்பட்ட அனைத்துக் குற்றச்சாட்டுகளையும் தொடர்ந்து மறுத்து வந்த இலங்கை அரசு, இக்குற்றச்சாட்டுகள் இலங்கையின் இறையாண்மை மீது தொடரப்பட்ட தாக்குதல் எனப் புறந்தள்ளியது.

தமிழ்ப் பகுதிகளுக்கு நேரடியாகச் சென்று உள்ளூர் மக்களுடன் உரையாடுவதன் மூலம் உண்மைகளை வெளிக் கொணரும் வாய்ப்பினை அளிக்க, எந்த தேசிய அல்லது பன்னாட்டு ஊடகங்களுக்கோ, பிற நிறுவனங்களுக்கோ, அய்.நா. அமைப்பினருக்கோ அனுமதி அளிக்க இலங்கை அரசு மறுத்து விட்டது. இலங்கையின் தென் பகுதியில் – போர் நடத்தப்பட்ட முறை குறித்தும் உலகளவில் ஏற்றுக் கொள்ளப்பட்ட போர் நடைமுறைகள் மற்றும் மனித உரிமைகளின் அடிப்படையில் இலங்கை பாதுகாப்புப் படையினரின் நடவடிக்கைகள் குறித்தும் கேள்வி எழுப்புவது, தேசத் துரோகச் செயலாகவே பார்க்கப்பட்டது.

இந்தப் பின்னணியில்தான் நிரந்தர மக்கள் தீர்ப்பாயம், கீழ்க்காண்பவற்றை ஆராயுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டது :

1. உலகளாவிய குற்றவியல் நீதிமன்றத்தின் "ரோம்' சட்டத்தில் மானுடத்திற்கு எதிரான குற்றங்கள் என விளக்கப்பட்டுள்ள முறையில், திட்டமிடப்பட்ட தாக்குதல்கள் நடைபெற்றனவா?

2. "ரோம்' சட்டத்தின் மானுடத்திற்கு எதிரான குற்றங்களில் அழித்தொழிப்பு என்பதற்கு அளிக்கப்பட்டுள்ள விளக்கத்தின்படி, தமிழ் மக்களில் ஒரு பகுதியினரை அழித்தொழிக்கும் நோக்கத்துடன் – உணவு மற்றும் மருத்துவ உதவிகள் மறுக்கப்பட்டு, அவர்கள் வாழ்வியல் நிலைகளில் பாதிப்புகள் ஏற்படுத்தப்பட்டனவா?

3. தாமாகவே முன் வந்து இலங்கை ராணுவத்திடம் சரணடைந்த போர்க் கைதிகளை கொலை செய்ததன் மூலம், இலங்கை அரசுப் படைகள் உலகளாவிய போர்ச் சட்டங்களை மீறியிருக்கின்றனவா? தாங்கள் பிடித்த அல்லது தங்களிடம் சரணடைந்த தமிழர்களை இலங்கை ஆயுதப் படையினர் துன்புறுத்தல்களுக்கு உள்ளாக்கினரா? கைதிகளின் சுயமரியாதையை பாதிக்கும் வகையிலான கொடுமைகளோ, அவர்களை அவமானப்படுத்தும் அல்லது தரந்தாழ்த்தும் நடவடிக்கைகளோ மேற்கொள்ளப்பட்டனவா?

4. பாலியல் வன்கொடுமைகளும் வன்புணர்வும் போர் ஆயுதங்களாகப் பயன்படுத்தப்பட்டனவா?

5. "வலுக்கட்டாயமாக காணாமல் அடிப்பது' குறித்த ரோம் சட்டத்திற்கு எதிராக தமிழ் மக்கள் கொலை செய்யப்பட்டனரா? காணாமல் ஆக்கப்பட்டனரா?

6. உலகளாவிய சட்டங்களுக்கு முரணாக, தமிழ் மக்கள் பெருமளவில் வெளியேற்றப்பட்டனரா? அல்லது தடுத்து வைக்கப்பட்டனரா?

7. மக்கள் அடர்த்தியாக இருந்த இடங்களில் கன ரக ஆயுதங்களையும் விமானத் தாக்குதல்களையும் மேற்கொண்டதன் மூலம் – இலங்கை ஆயுதப் படையினர் போர்க் குற்றங்களைப் புரிந்துள்ளனரா? உலகளாவிய சட்டங்களால் தடை செய்யப்பட்டுள்ள ஆயுதங்களான கொத்துக் குண்டு கள், ரசாயன தன்மையுள்ள குண்டுகள் போன்றவற்றை அவர்கள் பயன்படுத்தினரா?

8. இறந்து போனவர்களின் உடல்களை சேதப்படுத்துவதன் மூலம், போர்க் குற்றங்களை இலங்கை அரசு படைகள் புரிந்தனவா?

இந்த தீர்ப்பாயம், இலங்கை அரசு புரிந்த குற்றங்களை மட்டுமே விசாரணைக்கு எடுத்துக் கொண்டுள்ளது; விடுதலைப் புலிகள் புரிந்தவற்றை குறித்து அல்ல.

இதற்குக் காரணம் என்னவெனில், இம்மாதிரியான மனித உரிமை சட்டங்கள் அரசிடமிருந்து மக்களை காக்கவே உருவாக்கப்பட்டன. தனி மனிதர்களோ, ஒரு குழுவினரோ புரியும் குற்றங்களை தண்டிக்க அரசு இருக்கிறது. ஆனால், அரசு புரியும் குற்றங்கள் பெரும்பாலும் கவன ஈர்ப்பின்றியே போய்விடுகின்றன. ஏனெனில் தனது நடவடிக்கைகளை விசாரிக்கவோ, தண்டிக்கவோ அரசு விரும்புவதில்லை.

உலகளாவிய சட்டங்களில் உள்ள மனித உரிமை மீறல்களுக்கான பிரிவுகள் அரசுக்கு பொருந்துவதாகவே உள்ளன. இந்த கோட்பாட்டின் அடிப்படையில் விசாரணையை மேற்கொள்வதே இத்தீர்ப்பாயத்தின் நோக்கம்.