மார்ச் 21-ம் தேதி இலங்கைக்கு எதிராக ஜெனீவாவில் உள்ள ஐ.நா. மனித உரிமை கவுன்சிலில் அமெரிக்கா கொண்டு வந்த தீர்மானத்திற்கு ஆதரவாக இந்தியா வாக்களித்தது. இதைத் தொடர்ந்து பேட்டியளித்த மத்திய அமைச்சர் நாராயண‌சாமி அவர்கள் தமிழர்களின் உணர்வுகளை மத்திய அரசு மதித்து இந்த முடிவை எடுத்ததாகவும், தற்போது இந்தியாவிற்கும் இலங்கைக்கும் இடையே அவ்வளவு சுமூகமான உறவு இல்லை என்றும் அப்பாவியைப் போல முகத்தை வைத்துக்கொண்டு ஊடகங்களுக்கு பேட்டியளித்தார். அவர் மட்டுமல்ல காங்கிரசைச் சேர்ந்த பல்வேறு அமைச்சர்களும் இதே கருத்தையே வெவ்வேறு வார்த்தைகளில் கூறினார்கள்.

 ஆனால் மும்பையில் நடைபெற்ற இந்தியா- இலங்கை உறவுகள் தொடர்பான கருத்தரங்கில் பேசிய இலங்கை தூதர் கரியவாசம் இவர்களின் அப்பாவி வேடத்தை அம்பலப்படுத்தியுள்ளார். அவர் “இந்தியாவும் இலங்கையும் நட்பு நாடுகள் ஆகும். தற்போது ஏற்பட்டுள்ள சில அரசியல் பிரச்சினைகள் தற்காலிகமானதுதான். இதனால் இரு நாடுகளுக்கும் இடையேயான உறவில் எந்த பாதிப்பும் ஏற்படாது. இலங்கையின் அமைவிட உத்தியைப் பயன்படுத்தி இந்தியா ஏராளமான ஆதாயங்களை அடைய முடியும். சிறந்த வர்த்தக மையமாக பயன்படுத்திக் கொள்ள முடியும். இலங்கையில் செயல்படும் 46 சர்வதேச நிறுவனங்களில் 43 நிறுவனங்கள் இந்தியாவைச் சேர்ந்தவை. இலங்கையில் விளையும் தேயிலை உலக பிரசித்தி பெற்றது ஆகும். தேயிலையைப் பதப்படுத்தும் பணி, வினியோகம் ஆகியவற்றில் இரு நாடுகளும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும். மேலும் இலங்கையிலும் கேர‌ளாவிலும் உலகத் தரம் வாய்ந்த தேங்காய் விளைகிறது. இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி அதிகபட்ச ஆதாயம் அடைவதற்கான சாத்தியக் கூறுகளை இரு நாடுகளும் ஆராய வேண்டும். மேலும் இரு நாடுகளுக்கும் இடையேயான சுற்றுலாத் துறையை மேம்படுத்த வேண்டும்" என்று கூறியுள்ளார்.

 இது மட்டுமல்ல இந்தியாவில் ஏற்றுமதி, இறக்குமதியில் பெரும்பகுதி கடலோரங்கள் மூலமாகவே நடக்கிறது. ஏறக்குறைய 70% வணிகம் இலங்கையின் மூலமாக இந்தியாவிற்கு நடந்தேறுகிறது. இதேபோல் இலங்கையை எடுத்துக் கொண்டால் 55% வர்த்தகம் இந்தியாவுடன் நடக்கிறது.

 இந்தியப் பெருமுதலாளிகள் மிகப் பெரிய அளவில் முதலீடு செய்யக்கூடிய நாடுகளில் ஒன்றாக இலங்கை இருக்கிறது. மன்னார் மாவட்டத்தில் ஆழ்கடல் துரப்பணவு ஆய்வுகளை நடத்தி, எண்ணெய் வளங்களைப் பயன்படுத்திக் கொள்வதற்கு இந்தியாவிற்கு அனுமதி அளித்திருக்கிறது.

 யாழ்ப்பாணத்தை ஒட்டி இருக்கிற பகுதிகளிலே சிமெண்டு தொழிற்சாலை நடத்துவதற்கு பிர்லாவுக்கு அனுமதி அளித்திருக்கிறது. திரிகோணமலையிலே இருக்கக்கூடிய எரிவாயு, எண்ணெய்க் கிடங்குகளைப் பயன்படுத்திக் கொள்ள இந்தியாவிற்கு அனுமதி அளித்திருக்கிறது.

 இந்தியாவினுடைய போக்குவரத்துச் சாதனங்களினுடைய முக்கியமான சந்தைகளில் ஒன்றாக இலங்கை இருக்கிறது. 2009-பிப்ரவரியில் பாரதி ஏர்டெல் 150 மில்லியன் அமெரிக்க டாலர் முதலீட்டுடன் விரிந்த அளவில் 5-வது மொபைல் ஆபரேட்டராக இலங்கையில் நுழைந்திருக்கிறது.

 4 இந்திய வங்கிகள் இலங்கையில் இயங்குகின்றன. இவற்றில் ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியாவும், இந்தியன் ஓவர்சிஸ் வங்கியும் முன்னணிப் பாத்திரம் வகிக்கின்றன‌.

 இலங்கையின் முதலீடுகள் வாரியத்தின் அறிக்கையின்படி 2005-இன் வெற்றிகரமான இந்திய முதலீட்டாளர் பட்டியலில் சில் லங்கா ஐ.ஒ.சி 74 மில்லியன் டாலர், குஜராத் கிளாஸ் 19.6 மில்லியன் டாலர், குளிர்சாதன உற்பத்தியாளர்கள் ஹைகாவோ 8 மில்லியன் டாலர், மதர்சன் எலெக்ட்ரிகல்ஸ் ஆண்டு ஆட்டோ கேபிள் உற்பத்தியாளர் 1.6 மில்லியன் டாலர்.

 நிலைமை இவ்வாறு இருக்க இந்திய அரசு ஈழத்தை ஆதரிக்க வேண்டும் என்று சொன்னால் எப்படி ஆதரிக்கும்? இந்தியப் பெருமுதலாளிகளின் காவலனாக இருக்கும் காங்கிரசு இதை ஒருபோதும் செய்யப் போவதில்லை.

 இந்தியா மற்றும் இலங்கையின் பெருமுதலாளிகளின் வர்க்க நலன்களை சரியானபடி புரிந்து கொண்டால் மட்டுமே இந்தப் பிரச்சினையை சரியான திசையில் எடுத்துச் செல்ல முடியும். அதை விடுத்து இங்கே வரும் புத்த பிட்சுகளையும் சிங்களவர்களையும் தாக்குவது உடனடி எதிர்ப்பைக் காட்டுவதாக அமையுமே தவிர, ஒருபோதும் பிரச்சினைக்குத் தீர்வாகாது. தனி ஈழம் வேண்டும் என்பதும், அதற்காக அங்கே வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்பதும் நியா0யமான கோரிக்கையே. ஆனால் அதை அங்குள்ள ஈழத் தமிழ் மக்களால் மட்டுமே சாதிக்க முடியும். அதற்கு அங்குள்ள ஜனநாயக சத்திகளை ஒன்றுதிரட்ட வேண்டும், அது சிங்களர்களாக இருந்தாலும் சரி. எப்படி காஸ்மீர் மக்களுக்காக இந்தியா முழுவதும் இருந்து ஜனநாயக சத்திகள் குரல் கொடுக்கின்றனவோ அதேபோல இலங்கையிலும் தமிழர்களின் விடுதலையில் அக்கறைகொண்ட சிங்களவர்கள் இருக்கத்தான் செய்வார்கள். அவர்களை அடையாளங்கண்டு அணிதிரட்டி போராட்டத்தைக் கட்டியமைக்க வேண்டும். அது ஒரு நீண்ட நெடிய போரட்டமாக இருக்கலாம். ஆனால் அதுவே சாத்தியமானதாகும்.

 நம்முடைய போராட்டம் ஈழத்தமிழ் மக்களை போராட தூண்ட வேண்டும். அதன் வலுவைக் குறைப்பதாக ஆகிவிடக்கூடாது. ஈழ தமிழ் மக்களுக்கான உரிமைகளை இந்தியா பெற்றுத் தரும் என்று சொல்வதோ அல்லது அமெரிக்கா பெற்றுத் தரும் என்று சொல்வதோ அவர்களின் சொந்த போராட்ட உணர்வை மழுங்கடிக்கும் செயலாகும். எனவே இந்தியா மற்றும் இலங்கையில் உள்ள பெரு முதலாளிகளின் வர்க்க நலனை அம்பலப்படுத்துவதும் அவர்களின் ஏகாதிபத்திய சார்பு கொள்கைகளை மக்களிடம் சுட்டிக்காட்டி இதை ஏகாதிபத்திய எதிர்ப்பு போராட்டமாக கட்டியமைப்பதும் மிக முக்கியமாகும். அதுவே தனி ஈழத்தைப் பெற்றுத் தரும். இதை இங்குள்ள ஈழ ஆதரவாளர்களும் ஈழத் தமிழ்மக்களும் புரிந்து கொள்ள வேண்டும்.

Pin It