பேரன்புக்குரிய தம்பி, தங்கைகளே! மாமதிப்பிற்குரிய மாணவப் புலிகளே! நேச வணக்கம்.

உலகமே சேர்ந்து தமிழினத்தை அழித்த பெருங்கொடுமையை எண்ணி எண்ணித் துடித்துக் கொண்டும், இதற்கொரு விடிவு வராதா என ஏங்கிக் கொண்டும் இருக்கும் பல கோடித் தமிழ் மக்களில் ஒருவன்தான் நான்!

ஆனால் என்னைப் போலவோ, என்னைப் போலிருக்கும் இன்னும் ஏராளமான தமிழ் மக்களைப் போலவோ வீட்டுக்குள் வெம்பிக் கிடக்காமல் வீதிக்கு வந்து போராடும் உங்கள் எழுச்சி கண்டு நாங்கள் மலைத்து நிற்கிறோம்! உங்களை விட அகவையிலும், பட்டறிவிலும், புகழிலும், செல்வாக்கிலும் இன்னும் எத்தனையோ வகைகளிலும் மேம்பட்டிருக்கும் பெரும்பான்மை மக்கள் செய்யாததை, செய்யத் தவறியதை இன்று நீங்கள் செய்து கொண்டிருக்கிறீர்கள்! அதற்காகத் தமிழ்ச் சமூகம் உங்களுக்குத் தலைவணங்குகிறது!

ஈழத்தில் தமிழர் போராட்டம் தொடங்கிய காலத்திலிருந்து அதை வைத்து அரசியல் நடத்தி வருபவரும், தமிழ் இனத்தையே அழிக்கக் காரணமாயிருந்தும் தமிழ் மக்களிடையே செல்வாக்கு இழக்காதவரும், இன்றளவும் உலகத் தமிழர் பிரதிநிதிகளால் தமிழினத் தலைவர் என அழைக்கப்படுபவருமான ஒருவரே ஈழத் தமிழர்களுக்காகப் போராடுவதில் உங்களோடு போட்டி போட்டு இன்று தோற்றிருக்கிறார் என்றால் எந்த அளவுக்குத் தமிழ் மக்களிடையே உங்கள் போராட்டத்துக்கு ஆதரவு அலை வீசுகிறது, எந்த அளவுக்கு உங்கள் போராட்டம் மக்களிடையே தமிழ்த் துரோகிகளுக்கெதிரான விழிப்புணர்வை ஏற்படுத்தியிருக்கிறது என்பதை நீங்கள் உணரலாம்!

அதே நேரம், உங்களுடைய இந்தப் போராட்டத்தைக் கண்டு மெய்சிலிர்த்துப் போய் இந்தப் போராட்டமாவது நம் மக்களுக்கு ஒரு நல்வாழ்வைத் தந்துவிடாதா என எதிர்பார்த்து நிற்கும் உலகத் தமிழ் மக்கள் அனைவரின் சார்பில், பொதுமக்களுள் ஒருவன் எனும் முறையில் சில வேண்டுகோள்களை உங்களிடம் முன்வைக்க விரும்புகிறேன்! கனிவு கூர்ந்து பரிசீலியுங்கள்!

தோழர்களே! உங்கள் போராட்டமும், அதன் வழிமுறைகளும் உண்மையிலேயே மெச்சத்தகுந்தவை! அதே நேரம், நீங்கள் அனைவரும் தனித் தனியாக, கல்லூரி கல்லூரியாக இந்தப் போராட்டத்தில் ஈடுபட்டிருக்கிறீர்கள். இதனால் உங்கள் போராட்டமும் பல வகைகளில் பிரிந்து கிடக்கிறது. ‘தமிழீழம்’ எனும் ஒரே கோரிக்கைக்காகப் போராடும் நீங்கள் இப்படித் தனித் தனியாகப் பிரிந்து நிற்பதை விட ‘தமிழீழத்துக்கான தமிழ்நாட்டு மாணவர் அமைப்பு’ ஒன்றை உடனடியாக உருவாக்கி அதன் கீழ் ஒரே மொத்தமாகத் திரண்டால் அதன் ஆற்றல் எப்பேர்ப்பட்டதாக இருக்கும் என்பதைக் கொஞ்சம் கற்பனை செய்து பாருங்கள்!

அடுத்தது, உங்கள் கோரிக்கைகளில் இருக்கும் வேறுபாடுகள். சிலர், ‘அமெரிக்கத் தீர்மானத்தை எதிர்க்கிறோம்’என்கிறீர்கள்; சிலரோ, ‘அமெரிக்கா தன் தீர்மானத்தைத் தமிழர்களுக்கு நன்மை செய்யும் வகையில் இன்னும் சில திருத்தங்களோடு கொண்டுவர வேண்டும்’ என்கிறீர்கள்; இன்னும் சிலரோ, ‘அமெரிக்காவின் இந்தத் தீர்மானம் தேவையில்லை, இந்தியாதான் ஈழத் தமிழர்களுக்காகத் தீர்மானம் கொண்டுவர வேண்டும்’ என்கிறீர்கள்.

தமிழினப் படுகொலையின்பொழுது இந்தியா இலங்கைக்குச் செய்த உதவிகளும் இன்ன பிற தமிழினத் துரோகங்களும் நீங்கள் அறியாதவையல்ல. இந்நிலையில், எந்த இலங்கை, தமிழர்களுக்கு அபாயகரமானது என்று கூறி, அவர்களிடமிருந்து தமிழர்களைத் தனிநாடாகப் பிரித்து வாழவைக்க வேண்டும் என நீங்கள் போராட்டத்தில் இறங்கியிருக்கிறீர்களோ, அந்த இலங்கைக்குச் சற்றும் குறைந்ததில்லை இந்தியா. அப்படிப்பட்ட இந்தியா, ஈழத் தமிழர்களுக்காகத் தீர்மானம் கொண்டுவர வேண்டும் என்பது எவ்வளவு ஆபத்தான கோரிக்கை என்பதை நீங்கள் சிந்தித்துப் பார்க்க வேண்டும்!

தவிர, இப்படி உங்களுக்குள்ளேயே கோரிக்கைகளில் இவ்வளவு வேறுபாடுகள் இருந்தால் அது எந்த அளவுக்குப் போராட்டத்தின் வலிமைக்கு ஊறு விளைவிக்கும் என்பதையும் நீங்கள் கனிவு கூர்ந்து சிந்தித்துப் பார்க்க வேண்டும்! ஒரே நோக்கத்துக்காகப் போராடுபவர்கள், ஒரே அணியாக ஒரே குரலில் போராடாமல், தனித் தனியாக, வெவ்வேறு கோரிக்கைகளை முன்னிறுத்திப் போராடினால், அவர்களுள் ஓரளவுக்குத் தங்கள் நிலைப்பாட்டுக்கு நெருக்கமானவர்களாகப் பார்த்துப் பேச்சுவார்த்தைக்கு அழைத்து, பொய்யான வாக்குறுதிகளைக் கொடுத்து அவர்களைப் போராட்டத்திலிருந்து பின்வாங்க வைத்து, அதைப் பார்த்து மற்ற போராட்டக் குழுவினர்களும் ஊக்கம் இழந்து படிப்படியாகப் போராட்டத்தைக் கைவிடும்படிச் செய்வது காலம் காலமாக ஆளும் வர்க்கத்தினர் கையாண்டு வரும் இராஜதந்திரம்! இதற்கு நீங்களும் பலியாகிவிடாமல், உடனடியாக உங்கள் கோரிக்கைகள் அனைத்தையும் சீர்திருத்த வேண்டியது இன்றியமையாதது!

மூன்றாவதாக, உங்கள் போராட்டங்களைத் திரித்துக் கூறும் ஊடகங்களை நீங்கள் கண்டிக்க வேண்டியதன் தேவை. எந்த ஒரு போராட்டமாக இருந்தாலும், அது மக்களிடம் சென்று சேர வேண்டுமானால் ஊடகங்களின் ஒத்துழைப்பு இன்றியமையாதது. ஆனால், தமிழ்நாட்டு ஊடகங்கள் உங்கள் போராட்டங்களைப் பற்றிக் கூறும் தவறான ஒரு கருத்து உங்கள் போராட்டத்தின் நோக்கத்தையே அழித்து விடக்கூடியதாக இருக்கிறது.

அதாவது, தமிழ் இனம் அழிந்து இத்தனை காலம் ஆகியும் இவ்வளவு நாட்களாக நீங்கள் பொறுமை காத்ததற்குக் காரணம், மேற்குலக நாடுகள் மீது நீங்கள் கொண்டிருந்த நம்பிக்கை என்பது என் கணிப்பு. நீங்கள் மட்டுமில்லை, உலகெங்குமுள்ள தமிழர்கள் அனைவரின் ஒரே இறுதி நம்பிக்கையும் அதுவாகத்தான் இருந்தது. என்னதான் இனப்படுகொலையில் இலங்கைக்கு ஆதரவாக நின்றிருந்தாலும், அதன் பிறகு தமிழர்களுக்கு ஆதரவாகப் பன்னாட்டு அளவில் ஐரோப்பிய நாடுகள் மேற்கொண்டு வந்த பல நடவடிக்கைகள் நமக்கு மிகுந்த நம்பிக்கையை அளித்து வந்தன. எப்படியும் அமெரிக்காவும் இங்கிலாந்தும் சேர்ந்து கூடிய விரைவில் தமிழீழத்தைப் பெற்றுத் தந்து விடும் என்று நாம் மிகவும் நம்பினோம். ஆனால், இலங்கைக்கு எதிரான நடவடிக்கை என்ற பெயரில் அமெரிக்கா கொண்டு வந்த இந்த உப்புச் சப்பில்லாத தீர்மானம் நம் நம்பிக்கையைத் தகர்த்தது. ‘தீதும் நன்றும் பிறர் தர வாரா’ எனும் நம் முன்னோடிகளின் முதுமொழியை நமக்கு நினைவூட்டியது.

நம் மக்களுக்காக நாம்தான் போராட வேண்டுமே தவிர மற்றவர்கள் வந்து போராட மாட்டார்கள் என்பதை நமக்கு உணர்த்தியது. அதனால்தான் நம் மக்களுக்காக மீண்டும் நீங்கள் போராட்டக் களத்துக்கு வந்தீர்கள். சுருங்கச் சொன்னால், அமெரிக்கத் தீர்மானத்தின் மீதான அதிருப்திதான் தமிழ்நாடெங்கும் கொதித்தெழுந்திருக்கும் இந்த மாணவப் போராட்டத்தின் தொடக்கப் புள்ளி. ஆனால், இதை முற்றிலும் திசைதிருப்பும் வகையில் ஏறத்தாழ எல்லா ஊடகங்களுமே, ‘அமெரிக்கத் தீர்மானத்தை இந்தியா ஆதரிக்க வேண்டி மாணவர்கள் போராட்டம்’ என்றே மீண்டும் மீண்டும் மீண்டும் கூறி வருகின்றன. அதாவது, எதை எதிர்த்து நீங்கள் போராடிக் கொண்டிருக்கிறீர்களோ அதை ஆதரித்து நீங்கள் போராடுவதாகத்தான் உண்மையில் இங்கு ஊடகங்கள் பரப்புரை செய்து வருகின்றன.

· இதை விட ஒரு பெரிய தீங்கை உங்களுக்கு யாரும் செய்து விட முடியாது.

· ஒரு போராட்டத்தை இதை விடக் கொச்சைப்படுத்தும் முயற்சி வேறெதுவும் இருக்க முடியாது.

· உங்கள் போராட்டத்தைத் தோற்கடிக்க இதை விடப் பெரிய காரணி வேறு இருக்க முடியாது.

எனவே, போராளிகள் நீங்கள் உடனடியாக இதை எதிர்த்து அறிக்கை விட வேண்டும்! இது பற்றித் தமிழ்ச் சமூகம் முழுவதிலும் நிலவுகிற, பரப்பப்படுகிற குழப்பத்துக்கு நீங்கள் உடனடியாக முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்! இல்லாவிட்டால், பாதிக்கப்பட்டவர்களின் போராட்டத்தையே இவர்கள் பாதிப்புக்கு ஆளாக்கியவனுக்கு ஆதரவான போராட்டமாகப் பதிவு செய்து விடுவார்கள்!

கடைசியாக ஒன்று! உங்களுடைய இந்தப் பிரிவுபட்ட நிலையை, உங்கள் கோரிக்கைகளில் இருக்கும் சிற்சில முரண்பாடுகளை, உங்கள் நிலைப்பாடுகளில் இருக்கும் சிறு சிறு குழப்பங்களைப் பயன்படுத்திக் கொண்டு மிகப் பெரிய அளவில், பன்னாட்டு அளவில் காய் நகர்த்தச் சில மூத்த அரசியல் பெருச்சாளிகள் ஆயத்தமாகி வருகின்றன. நிரல்பாட்டில் (programming-இல்) இருக்கக்கூடிய சிறிய ஒரு பிழை கூட மொத்தப் பிணையத்தையும் (network) காலி செய்து விடும் என்பது இன்றைய கணினியுக இளைஞர்களான உங்களுக்குத் தெரியாததில்லை!

எனவே, கனிவு கூர்ந்து உடனடியாக மேற்கண்ட வேண்டுகோள்களை நிறைவேற்றுங்கள்! தமிழர்களின் உயிர்க் குறிக்கோளான தமிழீழத்தை வென்றெடுங்கள்!!

இப்படிக்கு,

உங்கள் நேசத்துக்குரிய:

(இ.பு.ஞானப்பிரகாசன்).

Pin It