ஒருவன் தனது அறிவையும் பெருமையையும் புகழ் வாழ்வையும், உள்ளத்தின் நலத்தையும், உடலின் பலத்தையும் இழக்கக் காரணமாக இருப்பது கள்! அக்கள்ளின் தீமையைப் பற்றி, திருக்குறளில், கள்ளுண்ணாமை என்ற அதிகாரத்தில் திருவள்ளுவர் அறிவுறுத்தியுள்ளார்.

மகாத்மா காந்தி அடிகளோ, மதுவின் தீமை பற்றி இவ்வாறு எடுத்துரைத்துள்ளார்:- “மலேரியா நோய் மனிதனின் உடல்நலத்தை மட்டும் பாதிக்கும்.  மதுவும், கஞ்சாவும் உடலோடு ஆன்மாவையும் பாதிக்கும்.”

“குடி  என்பது வளர்ந்து கொண்டே வரும் ஒரு சமூகத் தீமை”.

“நீங்கள் கண்ணியமாக வாழ விரும்பினால், குடிப்பழக்கத் தீமையை அடியோடு விட்டொழிக்க வேண்டும்.”

“ஒரு மணி நேரத்திற்கு இந்தியா முழுமைக்கும் என்னைச் சர்வாதிகாரியாக ஆக்கினால், முதல் காரியமாக, இழப்பீடு ஏதும் கொடுக்காமல், அனைத்து வகைக் கள்ளுக் கடைகளையும், மதுக்கடைகளையும் மூடிவிடுவேன்.” – இதைவிடவும் மேலாக, மதுவின் தீமையை எப்படி எடுத்துரைக்க முடியும் !

தென்னாட்டு காந்தி எனப் போற்றப்படும் பேரறிஞர் அண்ணாவின் அறிவார்ந்த கூற்று என்ன தெரியுமா? இதோ:- “ மதுப்பழக்கம் வாழ்க்கை முறைகளை மட்டுமல்ல, வாழ்க்கை நெறிகளையும் கெடுக்கிறது.  காலம் காலமாக நாம் குடிப்பழக்கத்தை ஒரு தீமையாகவே கருதி வந்திருக்கிறோமே தவிர, அதை ஒரு பிரச்சினையாக மட்டும் எண்ணியதில்லை” இவையே அவரது சிந்தனையில் விளைந்த சீரிய கருத்துக்கள் .

“கோப்பையிலே என் குடியிருப்பு”:- என்று பாடல் எழுதியதுடன், அப்படியே வாழ்ந்து மறைந்துவிட்ட கவியரசர் கண்ணதாசனின் பட்டறிவு விட்டுச்சென்ற விழுமிய கருத்து இதோ :- “மதுவைத் தொடாவிட்டால் சபையில் மதிப்புயரும்; அம்மதிப்பினால் மனையில் பல நன்மைகள் கொலுவிருக்கும்;நீண்ட நாட்கள் உழைத்திட உடலில் வலுவிருக்கும்;  மது மரியாதையை இழக்கச் செய்யும். நம் பெருமையைச் குலைக்கச் செய்யும்;  உடலையும் கெடுக்கும்;  குடும்ப கௌரவத்தையும் கொத்திப் பிடுங்கும்;  மது அருந்தாதவனை அனைவரும் வணங்கிப் போற்றும் நிலை ஏற்படும்.” – இவையாவும் அவரது அனுபவம் சமூகத்திற்கு விட்டுச் சென்றுள்ள தத்துவ முத்துக்கள்!.

சென்னை மகாணத்தின் முதலமைச்சராக 1948-ஆம் ஆண்டு ஓமாந்தூர் இராமசாமி ரெட்டியார் பதவி ஏற்றார்; அவர் பதவியேற்றவுடன் முழுமையான மதுவிலக்கை அமல்படுத்தினார்.அப்போது, மதுவிலக்கினால் மக்களின் பொருளாதார, ஆன்மீக, நல வாழ்வு சிறக்கும் என்று மக்களுக்கு உரைத்தார்!

மகாத்மா காந்தி, இராஜாஜி, தந்தை பெரியார், ஓமாந்தூரார், பேரறிஞர் அண்ணா ஆகியோர், நம் சமூகத்தின் அடித்தளத்தில் உள்ள சாதாரண மக்களைக் குடிப்பழக்கத்தின் கொடுமையிலிருந்து தடுப்பதற்காக மதுவிலக்கைத் தங்கள் கொள்கையாக்கி வாழ்நாள் முழுவதும் போராடினார்கள்.  ஆனால் இன்றோ, தேசம் எங்கும் இத்தீமை தலைவிரித்தாடுகிறது.

தமிழகம் உட்பட, அரசுகள் மதுக்கடைகளை தாமே நடத்திக் கருவூலங்களை நிரப்புகின்றன. ஆனால், கல்வி நிறுவனங்களை தனியார் நடத்த தாராளமாய் அனுமதிக்கின்றன.  ஏழை எளியோரை நசுக்குகின்றன.  என்னே முரண்பாடு !படிப்பதால் அறிவுத் தெளிவு ஏற்படுகிறது; மதுக் குடிப்பதால் நோய்கள் ஏற்பட்டு உடல்நலம் கெடுகிறது.

குடிப்பவனை மட்டுமல்லாமல், கள்ளங்கபடமற்ற அவனது மனைவி, குழந்தைகள், பெற்றோர், உற்றார் அனைவரையும்,  மது, அழிவுப்பாதைக்கு இட்டுச் செல்கிறது.

மது அருந்துவதால் அது இரத்தத்தில் கலந்துவிடுகிறது.  மனிதனின் நிலை தடுமாறுகிறது;  மனக் குழப்பம் ஏற்படுகிறது. அனைத்துத் திறமைகளும் குறைந்துவிடுகின்றன.

மதுக் குடியர்களுக்கு எரிச்சல் உணர்வும், தற்பெருமைப் பேச்சும், பேசுவதையே பேசும் தன்மையும், அடக்கமின்மையும், கூச்சமின்மையும் கூடவே வருகின்றன.  தானாகவே பேசுவது, அழுவது, பிறரைச் சண்டைக்கு இழுப்பது, அருவருக்கத்தக்க செயல்களில் ஈடுபடுவது எனத் தொடங்கி அவர்களைத் தெருப்புழுதியில் புரள வைக்கிறது.  தன்னுணர்வு இழத்தல், நினைவு மறதி, கவனச் சிதறல் முதலிய பாதிப்புகளால், செய்யும் கடமையிலும்  தவறுகின்றனர்; காலத்தையும் வீணாக்ககின்றனர்.

மது அருந்தியவர்கள் எடுக்கும் தீர்மானங்களும் முறையற்றதாகவே முடிகின்றன.  கூறும் கருத்துக்கள் யாவும் அரைகுறையாகவே அமைகின்றன.மதுப்பழக்கத்திற்கு  அடிமையாகிவிட்டால், ‘கோர்சகாப்’ (Korskaff Psychosis) - இவர்களைத் தொற்றிக்கொள்கிறது.  இது ஒரு மனநோய்; சரியான நேரத்திற்கு உணவு சாப்பிடாமல் சீரண மண்டலம் பாதிப்படையச் செய்கின்றது.  வைட்டமின் சி1, தயாமின், நியாசின் முதலிய வைட்டமின்கள் உடலில் குறைகின்றன.  மூளை நரம்பு அணுக்கள் சிறிது சிறிதாக சிதிலமடைந்து மனக் குழப்பம் உண்டாகிறது.  இதனால், திறமைக்குறைவும் கவனக்குறைவும் ஏற்படுகின்றது.

15 ஆண்டுகளாக மதுவுக்கு அடிமையானவர்கள் போலிக் கண்ணோட்டம் (Alcoholic Hallucinosis) என்ற மன நோய்க்கும் ஆளாகிறார்கள்.  இந்நோயினால் பயம், பதற்றம், பரபரப்பு, தூக்கமின்மை, தற்கொலை உணர்வு போன்ற பாதிப்புகள் ஏற்படுகின்றன.

மது மனிதனின் மனதைப் பாதித்து, பண்பியல் தொகுப்பைச் சிதைக்கிறது.  அவனுக்குள் கொடூரமான சிந்தனையும் கூடவே தாழ்வு மனப்பான்மையும் ஏற்படுகின்றன.  குடும்பத் தகராறுகள், மனைவி, குழந்தைகளைக் கொடுமைப்படுத்துதல், பாலியல் வன்முறைகளில் ஈடுபடுதல், பொய் பேசுதல், கால தாமதம் செய்தல் போன்ற இழிவான நடவடிக்கைளில் ஈடுபடுத்துகிறது.

இந்தியாவில் நடைபெறும் சாலை விபத்துக்களில் மூன்றில் ஒரு பங்கு மது அருந்திவிட்டு போதையில் வாகனம் ஓட்டுவதால் ஏற்படுகின்றன என ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

குடிப்பழக்கம் உள்ளவர்கள் மதுவைப் பெறுவதற்கு எந்த முயற்சியிலும் ஈடுபடுவார்கள். விதிமுறைகளையும், சட்டங்களையும் மதிக்க மாட்டார்கள்.  சமூக விரோதச் செயல்களில் ஈடுபடுவதற்குத் தயங்கமாட்டார்கள்.  குடும்பத்தை பராமரித்து பாதுகாக்க மாட்டார்கள்.  பணியில், தொழிலில் கவனம் செலுத்த மாட்டார்கள்.  வருமானத்தை இழப்பார்கள் என உளவியல் நிபுணர்கள் உரைக்கிறார்கள்.

மது அருந்தும் பழக்கத்தினால் இந்தியாவில் ஆண்டு தோறும் இருபத்து மூன்று லட்சம் பேர் உயிரிழக்கின்றனர் என உலக நலவாழ்வு நிறுவனம் (World Health Organisation) தனது ஆய்வில் குறிப்பிட்டுள்ளது.

இந்திய அரசியலமைப்புச் சட்டப்பிரிவு  47-ன்படி, குடிமக்களின் உடல் நலனை காப்பதற்காக அரசாங்கம் மதுவிலக்கை அமல் செய்ய வேண்டும்.  ஆனால், ‘அரசியலமைப்புச் சட்டத்தின்பால் மாறாத பற்றுறுதியும், நம்பிக்கையும் கொண்டு செயல்படுவேன்’- என்று உறுதிமொழி எடுத்துக்கொள்ளும் சட்டமன்ற, பாராளுமன்ற உறுப்பினர்கள், மத்திய, மாநில அமைச்சர்கள், முதல்வர்கள், தலைமை அமைச்சர் முதற்கொண்டு மதுவிலக்கில் அக்கறை காட்டுவதில்லை; மாறாக, இத்தீமையைத் தடுக்க நடவடிக்கை எடுப்பதில் அமைதி காட்டுகின்றனர். இது வேதனையளிப்பதாகும்.

“அண்டை மாநிலங்களில் மது விலக்கு இல்லை.  அதனால் நம் தமிழ்நாட்டில் மதுவிலக்கை அமல்படுத்த இயலவில்லை” என்று கூறப்படுகிறது. மற்றவர்கள் எல்லாம் என்றைக்கு நல்லவர்கள் ஆவது? இத்தீமையிலிருந்து விடுபட்டு என்றைக்கு நாம் நல்லவர்களாவது??அதுவரை, கல்விக்கூடங்களும் டாஸ்மாக் கடைகளுமா கள்ளுண்ணாமையைக் கற்பிக்கப்போகின்றன....??? ஒவ்வொரு ஆண்டும் மதுபானங்களின் விற்பனையின் மூலம் ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் அரசுக்கு வருமானம் கிடைக்கிறது.  ஆனால் அதே வேளையில், குடிப்பழக்கத்தால் உடல்நலம் கெட்டு, ஏற்படும் மருத்துவச் செலவு மட்டும் சுமார் இருபத்தைந்தாயிரம் கோடி ரூபாய் ஆகிறதென இந்திய மருத்துவக் கவுன்சில் கூறுகிறது.  மக்களை மதுவின் மூலம் நோயாளியாகவும், ஏழையாகவும் ஆக்கிவிட்டு  இலவசத் திட்டங்களால் அவர்களைக் கடைத்தேற்ற முடியுமா?

இவற்றுக்கு என்ன மாற்று?

       அரசோ, தனியாரோ மது உற்பத்தியிலும், மது விற்பனையிலும் ஈடுபடக்கூடாது.   மீறி ஈடுபடுபவர்கள் மீது கடுமையான சட்டங்கள் மூலம் அவர்களின் கொட்டத்தை அடக்க  வேண்டும்.

       தொலைக்காட்சிகள், திரைப்படங்கள், பத்திரிக்கைகள் போன்ற ஊடகங்கள் மூலம் மக்களுக்கு மதுவின் தீமைகளை வெளிச்சம் போட்டுக் காட்டி விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.

       பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கான பாடத்திட்டங்களில் மதுவின் தீமைகளை விளக்கியுரைக்கும் பாடங்கள் வைக்கப்பட வேண்டும். ஆசிரியர்களும், மாணவர்களும் ஒழுக்கமானவர்களாக உருவாக வேண்டும்.

       அரசியல் கட்சித் தலைவர்கள் உட்பட தங்கள் கட்சியின் தொண்டர்களும் மது அருந்தக் கூடாது; தனி வாழ்விலும், பொதுவாழ்விலும் இதை அவர்கள் கடைப்பிடிக்கச் செய்ய வேண்டும்.

       ‘கள்ளுண்ணாமை’ என்று வள்ளுவரின் வாய்மொழியாக மட்டும் இல்லாமல், தெள்ளுதமிழ் நாட்டின் நல்லொழுக்கமாகவும் நடைமுறைக்கு வரவேண்டும்.  இதுவே நாட்டுமக்களின் உள்ளக்கிடக்கை!

Pin It