ஆதி காலத்தில் இருந்து மனிதனின் அறிவு தனது தேவையை ஒட்டி பல அரிய கண்டுபிடிப்புகளை நிகழ்த்தி இருக்கின்றது. நெருப்பு, சக்கரம் என ஆரம்பித்து இன்றைய கூகுள் கார் வரைக்கும் இது தொடர்ந்து கொண்டிருக்கின்றது. தன்னுடைய நேரத்தை மிச்சப்படுத்தவும், உழைப்பை எளிமைப்படுத்தவும் அதன் மூலம் மனித வாழ்க்கையை மகிழ்ச்சியானதாக மாற்றவும் பல அறிவியல் அறிஞர்கள் தன்னுடைய வாழ்க்கையையே தியாகம் செய்திருக்கின்றார்கள். இவர்கள் எல்லாம் இல்லை என்றால் இன்று நாம் சுகமாக அனுபவித்துக் கொண்டிருக்கும் பல பொருட்கள் நமக்குக் கிடைக்காமலேயே போயிருக்கும்.
புராதான பொது உடமைச் சமுதாயம் தொடங்கி நிலப்பிரபுத்துவ சமுதாயம் வரையிலும் பல கண்டுபிடிப்புகள் நிகழ்த்தப்பட்டிருந்தாலும் அதில் பெரிய அளவில் மக்களை சுரண்டுவதற்கான திட்டமிட்ட கண்டுபிடிப்புகள் இல்லை எனலாம். ஆனால் முதலாளித்துவ சமூக அமைப்பில் இந்த நிலை தலைகீழாக மாற்றப்பட்டது. முதலாளித்துவ சமூக அமைப்பில் இரண்டு வகையான விஞ்ஞானிகளும் இருந்தனர். ஒரு சாரார் மக்களின் நலன் சார்ந்து எவ்வித எதிர்பார்ப்பும் இன்றி மக்களுக்காகவே கண்டுபிடிப்புகள் செய்தவர்கள், இன்னொரு சாரார் முதலாளிகளின் லாபவேட்கையை உறுதிபடுத்துவதற்காகவே கண்டுபிடிப்புகள் செய்தவர்கள். இதில் சாமானிய மக்களுக்காக கண்டுபிடிப்புகள் செய்தவர்களை விட முதலாளிகளின் லாப வேட்கைக்காக கண்டுபிடிப்புகள் செய்தவர்களே முதலாளித்துவ சமூக அமைப்பில் அதிகம்.
இதற்குக் காரணம் முதலாளித்துவ சமூக அமைப்பைத் தவிர பிற சமூக அமைப்புகளில் விஞ்ஞானிகள் என்பவர்கள் பெரும்பாலும் அறம் சார்ந்த கண்டுபிடிப்புகளையே மேற்கொண்டனர். ஆனால் முதலாளித்துவ சமுக அமைப்பானது முற்றிலும் விஞ்ஞானிகளைத் தனது கூலி அடிமைகளாக மாற்றிவைத்துள்ளது. அவர்கள் மனிதர்களை வாழ வைப்பதற்காக அல்லாமல் அவர்களை சாகடிப்பதற்காக தங்களது கண்டுபிடிப்புகளை மேற்கொள்கின்றார்கள். கல்வி கற்பதும், அறிவியல் சிந்தனைகளை வளர்த்துக் கொள்வதும், பணம் சம்பாதிப்பதற்கான வழியாக முதலாளித்துவ சமூக அமைப்பு அவர்களுக்குச் சொல்லிக் கொடுத்துள்ளது.
கண்டுபிடிப்புகள் என்பது மக்கள் நலன் சார்ந்து அல்லாமல் முதலாளிகளின் பேராசையை நிறைவேற்றவும், தன்னுடைய வாழ்வாதரத்தை மிகப்பெரிய அளவில் மேம்படுத்திக் கொள்வதற்குமானதாக ஆகியுள்ளது. மார்க்ஸ் சொல்வது போல மனிதர்களுக்கேற்ற பொருட்களை உற்பத்தி செய்யும் நிலை மாறி பொருட்களுக்கேற்ற மனிதர்களை உற்பத்தி செய்யும் நிலையை முதலாளித்துவம் துவக்கி வைத்துள்ளது.
அப்படி அந்த முதலாளித்துவத்தைத் தாங்கிப் பிடித்து அதன் அத்தனை சீரழிவு கலாச்சாரத்தையும் குறிப்பாக குடி கலாச்சாரத்தைத் தமிழ்நாட்டில் மூலை முடுக்கெல்லாம் பரவ விட்டிருக்கும் ஜெயலலிதாவின் ஆட்சியில் அறிவியல் கண்டுபிடிப்புகள் எப்படி இருக்கும் என்பதற்கு ஒரு உதாரணமாக வந்திருக்கின்றது ஒரு கண்டுபிடிப்பு. மார்ச் 3-ம் தேதியிட்ட டைம்ஸ் ஆப் இந்தியா இதழில் இரண்டு முழுப்பக்க அளவில் அந்த விளம்பரம் வந்திருந்தது. நாம் கூட முதலில் அந்த விளம்பரத்தை ஏதோ குடிதண்ணீர் விளம்பரம் என்றுதான் நினைத்தோம். பிறகுதான் அது மதுவில் ஊற்றி குடிப்பதற்காக பிரத்தியேகமாக தயாரிக்கப்பட்ட தண்ணீர் என்பது தெரிந்தது. அதன் பெயர் பெலிகானா டி டி(pelicana DD) என்பது.
இந்தப் பானத்தை மதுவில் ஊற்றி குடி மகன்கள் குடிக்கும் போது அதில் இருக்கும் கெட்ட சமாச்சாரங்கள் எல்லாம் நீக்கப்பட்டு விடுமாம். இதனால் மதுவானது உடல் ஆரோக்கிய பானமாக மாற்றப்பட்டு விடுமாம். இந்த பானத்தில் எந்த விதமான ரசாயனங்களோ, காரத்தன்மை ஏற்படுத்தும் பொருட்களோ சேர்க்கப் படவில்லை என்று குறிப்பிடப்பட்டு இருக்கின்றது. அது மட்டும் அல்ல, இந்த பானத்திற்கு பல்வேறு ஆய்வுக்கூடங்கள் அங்கீகாரம் வேறு வழங்கியிருப்பதாகவும் அதன் பெயர்களும் விளம்பரத்தில் தெரிவிக்கப்பட்டிருக்கின்றது. குறிப்பாக இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தரக் கழகத்தின் சான்றிதழ் பெறப்பட்டிருப்பதாக கூறப்பட்டிருக்கின்றது. இந்தத் தண்ணீரை மதுவில் ஊற்றும் போது அதன் அமிலத்தன்மை காரத்தன்மையாக மாற்றப்படுமாம். கொஞ்சம் கூட மதுவின் போதையையோ அதன் உற்சாகத்தையோ இது குறைப்பதில்லையாம். எனவே குடிமகன்கள் இந்தப் பானத்தை வாங்கி பயன் பெறுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒட்டுமொத்த தமிழ்ச்சமூகமே மதுவால் அழிந்து சின்னாபின்னமாகிக் கிடக்கும்போது, அதை தடை செய்ய வேண்டும் என்பது ஒட்டுமொத்த தமிழ்ச் சமூகத்தின் பொதுக் கோரிக்கையாய் மாறியிருக்கும் போது, இப்படிப்பட்ட கண்டுபிடிப்புகள் அதுவும் தமிழ்நாட்டிலேயே நடைபெறுகின்றது என்று சொன்னால் தமிழ்நாட்டில் மனித விழுமியங்கள் எந்த அளவிற்கு வீழ்ச்சி அடைந்திருக்கின்றது என்று நம்மால் புரிந்து கொள்ள முடிகின்றது. மதுவால் அழிந்து கொண்டிருக்கும் சமூகத்தைக் காப்பாற்ற பலர் துடித்துக் கொண்டிருக்கும்போது, எந்தவித சமூகப் பொறுப்புணர்வும் அற்ற, பணம் சம்பாதிப்பதை மட்டுமே குறிக்கோளாக கொண்ட ஒரு கீழ்த்தரமானவனின் மூளையில் இந்த கண்டுபிடிப்பு நடந்திருக்கின்றது. இந்த விளம்பரத்தை நமக்குத் தெரிந்து தமிழ்ப் பத்திரிக்கைகள் எதுவும் பிரசுரிக்கவில்லை. ஒருவேளை பிரசுரித்தால் அது தமிழக மக்களிடம் கடும் அதிருப்தியை ஏற்படுத்தும் என பயந்து அவை மறுத்திருக்கலாம். ஆனால் சில பணத்தாசை பிடித்த தமிழ் செய்தி இணைய தளங்கள் இந்த விளம்பரத்தை வெளியிட்டு இருந்தன.
ஏற்கெனவே மதுவால் தள்ளாடிக் கொண்டிருக்கும் தமிழகத்தை மேலும் மோசமான நிலைக்கே இதுபோன்ற கண்டுபிடிப்புகள் கொண்டு செல்லும். ஒரு நாடே குடியால் உடல் ரீதியான சீரழிவிற்கும் பண்பாட்டுச் சீரழிவிற்கும் உள்ளாகி கிடக்கும் போது, அதை அந்த நாட்டை ஆளும் அரசே தலைமையேற்று நடத்தும்போது, அங்கு வாழும் சாமானிய மக்கள் மட்டும் அல்லாமல் அறிவுஜீவிகளும் அயோக்கியர்களாக மாறி விடுகின்றார்கள். தங்களையும் தங்களது அறிவையும் வியாபாரப் பொருளாக மாற்றி அதை விலைவைத்து விற்கும் வியாபாரிகளாக அவர்கள் தங்களை மாற்றிக் கொள்கின்றார்கள்.
இந்தப் பானத்தைக் கலந்து குடித்தால் உடலுக்கு தீங்கில்லை என்று சொல்கின்றார்கள். ஆனால் குடித்துவிட்டு அவன் யாரையும் மதுபோதையில் கொலை செய்ய மாட்டான் என்பதையோ, பாலியல் வன்முறையில் ஈடுபட மாட்டான் என்பதையோ, சாலை விபத்துகளை நிகழ்த்த மாட்டான் என்பதையோ இந்தப் பணவெறி பிடித்த பொறுக்கிகளால் உத்திரவாதப்படுத்த முடியுமா? ஏனெனில் 40% சாலை விபத்துகளும், 35% சதவீத தற்கொலைகளும், 80 சதவீத பாலியல் வன்புணர்ச்சிகளும் மதுவால்தான் நடப்பதாக மது மற்றும் போதைப்பொருள் தகவல் மையம் கூறுகின்றது. எவன் எக்கேடு கேட்டு நாசமாய்ப் போனால் நமக்கென்ன நமக்கு மிடாசில் வருமானம் வருகின்றது என்று அதை வீதிக்கு வீதி திறந்து வைத்து சாராயம் விற்கும் ஒரு அரசில் அந்த அரசின் கொள்கையோடு ஒத்த கண்டுபிடிப்புகள் தான் தோன்றும் என்பதற்கு இந்தக் கண்டுபிடிப்பே ஒரு நல்ல உதாரணம்.
- செ.கார்கி