(பழங்குடி-மலைவாழ் மக்களை காட்டைவிட்டு வெளியேற்றும்... காடுகளைத் தனியார்மயமாக்கும்... புலிகள் காப்பக திட்டத்தை எதிர்த்துப் போராடுவோம்! - என்னும் தலைப்பில் மேற்குத்தொடர்ச்சி மலைவாழ் மக்கள் இயக்கத்தின் சார்பாக வெளியிடப்பட்டிருக்கும் துண்டறிக்கை)

வீரஞ்செறிந்த உழைக்கும் மக்களே!

வியர்வை சிந்தி, பாடுபட்டு இந்நாட்டின் அத்தனை செல்வத்தையும் உருவாக்குபவர்கள் நாம். நமது உழைப்பை உறிஞ்சி, தின்று கொழுத்து திரிபவர்கள் உள்நாட்டு, வெளிநாட்டு பெருமுதலாளிகள். அப்பெரு முதலாளிகளுக்கு ஏவல் வேலை செய்து, ஊழல், இலஞ்சத்தின் மூலம் உயிர் பிழைப்பவர்கள் தேர்தல் அரசியல்வாதிகளும், அதிகாரிகளும். இந்த பெருமுதலாளிகள் – தேர்தல் அரசியல்வாதிகள் – உயர்மட்ட அதிகாரிகளின் கூட்டணியானது நம்மைச் சுரண்டுவதற்காக காலங்காலமாக பல பெயர்களில் பல திட்டங்களை கொண்டுவருகின்றது. அவற்றை ‘மக்கள் நலனுக்கான திட்டங்கள்’ என்று நம்மிடமே பொய்ப் பிரச்சாரம் செய்கின்றது. அத்தகையதொரு திட்டம்தான் இந்திய அரசும், மாநில அரசுகளும் இணைந்து நடைமுறைப்படுத்தி வரும் புலிகள் காப்பகத் (Tiger Reserve) திட்டமாகும்.

சத்தியமங்கலம் புலிகள் காப்பகம்

தமிழகத்தில் ஏற்கனவே  3 புலிகள் காப்பகங்களை மக்களின் கடும் எதிர்ப்புகளுக்கு இடையே அரசு நிறைவேற்றி உள்ளது. 2010 ஆம் ஆண்டு இந்திய அரசும், கருணாநிதி தலைமையிலான தமிழக அரசும் ஆலோசித்து, ஏற்கனவே வனவிலங்கு சரணாலயமாக உள்ள சத்தியமங்கலம் வனப்பகுதியை புலிகள் காப்பகமாக அறிவிக்கும் திட்டத்தை உருவாக்கின. இது தமிழ்நாட்டிலேயே மிகப்பெரிய புலிகள் காப்பகமாக இருக்கும். இப்போது இத்திட்டம் வேகமாக நடைமுறைக்கு வருகிறது. 524 சதுர கி.மீ. பரப்புடைய சத்தி வனவிலங்கு சரணாலயத்தை வனத்துறை 2011 செப்டம்பரில் 1,412 ச.கி.மீட்டராக அதிகரித்தது. இந்த முழு பரப்பும் இப்போது சத்தி புலிகள் காப்பகமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இப்பரப்பில் 917 ச.கி.மீ. (அதாவது 65%) பரப்பு கொண்ட பகுதி மையப்பகுதி (Core Area) ஆகும். இப்பகுதிக்குள் வசித்துவரும் பழங்குடிகளும், பாரம்பரிய மலைவாழ் மக்களும் வெளியேற்றப்படுவார்கள். வன அதிகாரிகளுக்கு மட்டுமே இப்பகுதிக்குள் நுழைய அனுமதி உண்டு. மீதமுள்ள 35% பகுதி சுற்றுவட்டாரப் பகுதி (Buffer Area) ஆகும். இதற்குள் வசித்துவரும் மக்களுக்கு கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்படும். காட்டிற்குள் வனப்பொருட்கள் சேகரித்தல், மாடு மேய்த்தல் உள்ளிட்ட அனைத்து வன உரிமைகளும் பறிக்கப்படும்; அரசின் வளர்ச்சிப் பணிகள் எதுவும் இனி மேற்கொள்ளப்படாதுஇவ்வாறு கட்டுப்பாடுகள் விதித்து அம்மக்களின் வாழ்வாதாரத்தைப் பறிப்பதானது அவர்களைத் தாங்களாகவே வெளியேறும் வண்ணம், மறைமுகமாக காட்டைவிட்டு வெளியேற்றுவதாகும்.

புலிகளின் பாதுகாவலனாக வேடம் போடும் குள்ளநரிகள்

“இந்தியாவில் புலிகளின் எண்ணிக்கை குறைந்து வருகிறது... அடர்ந்த வனப்பகுதியில் உள்ள புலிகளுக்கு அங்கு வசிக்கும் பழங்குடி இனமக்களால் பாதிப்பு ஏற்படுகிறது” என்று மத்திய அமைச்சர் ஜெயந்தி நடராஜன் குறிப்பிடுகிறார். புலிகள் மட்டுமல்ல, இந்தியாவில் பல்வேறு வன உயிரினங்கள் அழிந்துவருவது உண்மைதான். ஆனால், புலிகள் அழிவதற்கு பழங்குடிகள்தான் காரணம் என்று கூறுவதுதான் மகா மோசடி. உண்மையில் புலிகளை பிரிட்டிஷ் காலத்தில் வேட்டையாடி அழித்தவர்கள் மன்னர்களும், ஜமீன்தார்களும், பிரிட்டிஷ் அதிகாரிகளும்தான். யானைத் தந்தம், புலித்தோல் போன்றவை இன்றளவும் கடத்தப்படுவதன் பின்னணியில் பெரிய, பெரிய முதலாளிகளும், அரசியல்வாதிகளும், வனத்துறையினரும்தான் இருக்கின்றனர் என்பது ‘ஊரறிந்த இரகசியம்’.

இன்னும் சொல்லப்போனால் புலிகளையும், வன விலங்குகளையும், வனத் தாவரங்களையும் பாதுகாப்பவர்கள் பழங்குடிகள்தான். காட்டைத் தெய்வமாக வழிபடும் அவர்கள் காட்டை அழிப்பதைப் பற்றி கனவிலும்கூட சிந்திப்பதில்லை. ‘இலாபத்தையே’ கடவுளாக வழிபடும் முதலாளிகள்தான் காட்டை அழித்து, விலங்குகளின் வழித்தடங்களை மறித்து  பெரும்பெரும் தோட்டங்களும், தொழிற்சாலைகளும், உணவு விடுதிகளும், ‘ரிசார்ட்டு’களும் அமைத்து வனவிலங்குகள் அழிவதற்குக் காரணமாக உள்ளனர்.

எல்லாவற்றும் காரணமான இந்த உள்நாட்டு, வெளிநாட்டு பெருமுதலாளிகளும் அவர்களிடம் நிதி பெற்று இயங்கும் தன்னார்வத் தொண்டு நிறுவனங்களும், அரசியல்வாதிகளும் ‘புலிகளின் பாதுகாவலர்களாக’ வேடம் போடுகிறார்கள். ‘டபிள்யூ.டபிள்யூ.எஃப்’ (the WorldWide Fund for nature - WWF) போன்ற சர்வதேச ‘சூழல் பாதுகாப்பு’ தொண்டு நிறுவனங்களும், ‘ஓசை’ போன்ற உள்ளூர் நிறுவனங்களும் இந்த பெரு முதலாளிகளுக்கு சேவை செய்கின்றன.

காடுகளைத் தனியார்மயமாக்கும் திட்டம்

புலிகள் மீதான இவர்களின் பொய்யான கரிசனத்திற்குப் பின்னால் ஒரு சர்வதேசத் திட்டம் உள்ளது. அழிந்துவரும் வன விலங்குகளைக் காப்பதற்காக என்றுகூறி மக்களை வெளியேற்றிவிட்டு, காட்டைத் தனியார்மயமாக்கி, சுலபமாகக் கொள்ளையடிப்பதே அத்திட்டம்.மேற்குத்தொடர்ச்சி மலையின் கனிம வளங்களை சுரண்டுவது இவர்களது ஒரு நோக்கம். இன்னொரு புறம், உலகின் எங்காவது ஒரு மூலையில் ஒரு பெருமுதலாளி காட்டைப் பாதுகாத்து மரம் வளர்த்தால், இன்னொருபுறம் அவன் சூழலைக் கெடுக்கும் பெரிய தொழிற்சாலைகளைக் கட்டிக்கொள்ள அனுமதி (Carbon Permit) கிடைக்கும். இதனை வைத்து பெரு நிறுவனங்கள் மிகப்பெரிய சூதாட்டம் நடத்தி பணம் கொழிக்கின்றன. தமிழகத்தில் சூழல் பாதுகாப்புக்கு என்று ஜப்பான் போன்ற நாடுகள் செய்யும் ‘உதவிகள்’ எல்லாம் இந்நோக்கத்தில்தான் நடைபெறுகின்றன.

வனம் - யாருக்குச் சொந்தம்?

ஆயிரமாயிரம் ஆண்டுகளாக வனத்திலேயே வாழ்ந்துவரும் பழங்குடிகளும், பலநூறு ஆண்டுகளாக குடியிருந்துவரும் இதர மலைவாழ் மக்களும் வரலாறு முழுவதும் மாறி மாறி வந்த பல அரசுகளால் தொடர்ந்து ஏமாற்றப்பட்டு வருகின்றனர். இன்று  சத்தியமங்கலம் மலைக்காடுகளில் இருளர் (ஊராளி, சோளகர்), குருமர் உள்ளிட்ட பல்வேறு பழங்குடிகளும், லிங்காயத், படுகா உள்ளிட்ட மலைவாழ் மக்களும் வாழ்ந்து வருகின்றனர். இவர்கள் நீர்ப்பாசனமுறை ஏதுமின்றி மழையை நம்பி விவசாயம் செய்து வருகின்றனர். பழங்குடி மக்கள் கூடுதலாக வனத்திலிருந்து கிடைக்கும் நெல்லிக்காய், சீமாறு புல் உள்ளிட்ட சிறு வனப் பொருட்களைச் சேகரித்து அதில் கிடைக்கும் வருவாயில் உயிர் வாழ்கின்றனர். பழங்குடி மக்கள் பலருக்கு இன்றளவும் அவர்களுக்குச் சொந்தமான நிலத்திற்கான முறையான ஆவணங்களை அரசு வழங்காமல் ஏமாற்றி வருகிறது.

காட்டு வளத்தைச் சுரண்டுவதற்காக, மரங்களை வெட்டிக் கடத்துவதற்காக, காட்டைத் தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டுவருவதற்காக பிரிட்டிஷ் அரசு இந்தியாவில் ‘வனத்துறையை’ ஏற்படுத்தியது. 1947 இல் ‘போலி சுதந்திர நாடகம்’ அரங்கேறிய பிறகு ஆட்சிக்கு வந்த ‘போலி சுதேசி இந்திய அரசு’ காடு முழுமையும் அரசுக்கே சொந்தம் என்றது. இந்த அறிவிப்பால் அத்தனை ஆண்டுகாலம் வன நிலங்களை பயன்படுத்தி, பாதுகாத்து வந்த அந்நிலங்களின் சொந்தக்காரர்கள் ‘ஆக்கிரமிப்பாளர்களாக’ சித்தரிக்கப்பட்டனர். அவர்களுடைய நில உரிமை மறுக்கப்பட்டது. பழங்குடி - மலைவாழ் மக்களின் நிலங்களை ஏமாற்றி அபகரித்து பெருமுதலாளிகள் தேயிலை, காபி, இரப்பர் தோட்டங்களை ஏற்படுத்தினர்.

இன்றைய நாள் வரையில் பல்வேறு அரசு மற்றும் தனியார் திட்டங்களுக்காக இந்தியாவில் காட்டிலிருந்து வெளியேற்றப்பட்ட மக்களின் எண்ணிக்கை ஒரு கோடி ஆகும். மொத்தக் காட்டையும் சொந்தம் கொண்டாடும் மிகப்பெரிய ஜமீன்தார் போல் வனத்துறை செயல்பட்டு வருகிறது. பழங்குடி மக்களின் போராட்டத்தின் விளைவாக, 2006 ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்ட வன உரிமைச் சட்டமானது பழங்குடிகள் மற்றும் இதர மலைவாழ் மக்களின் வன உரிமையை அங்கீகரிக்கிறது. இச்சட்டத்தை முடக்குவதற்கும் ஓய்வுபெற்ற வனஅதிகாரிகள், தொண்டு நிறுவனங்கள் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்துள்ளனர்.

நம் வாழ்வையும் நம் வனத்தையும் பாதுகாக்கப் போராடுவோம்!

பழங்குடி - மலைவாழ் மக்கள் காட்டின் சுற்றுச்சூழலில் ஒரு பகுதியாகவே இருக்கிறார்கள். பழங்குடிகளை வெளியேற்றிவிட்ட காடுகளின் சூழல் சமநிலை கெட்டு காடுகள் அழிந்துபோனதற்கு ஏராளமான வரலாற்று உதாரணங்களைக் காட்ட முடியும். பழங்குடிகள் வெளியேற்றப்பட்டு, காடுகள் வெளிநாட்டு, உள்நாட்டு முதலாளிகளுக்கு கொள்ளைக் களமாய் ஆனால் காடு அழியும்; காடு அழிந்தால், மழைவளம் குன்றிப்போகும்; ஆறுகள் வற்றிப்போகும்; விவசாயம் அழியும்; நாடே அழியும். புலிகள் காப்பகத் திட்டத்திற்கு எதிரான போராட்டம் என்பது பழங்குடி - மலைவாழ் மக்களின் வாழ்வாதாரத்தை காக்கும் போராட்டம் மட்டுமல்ல, காட்டையும், நாட்டையும் காக்கும் போராட்டம் ஆகும்.

இன்று வட இந்தியாவில் பழங்குடி மக்கள் தங்களையும், வனத்தையும் பெரு முதலாளிகளிடமிருந்து காப்பதற்கான போராட்டத்தில் உச்சநிலையை அடைந்துள்ளனர். அவர்களை மீறி எந்த உலக முதலாளியும் காட்டிற்குள் நுழைய முடியாது என்ற நிலையை தங்களின் வீரஞ்செறிந்த போராட்டத்தின் மூலம் ஏற்படுத்தியுள்ளனர். ‘புலிகள் காப்பகம்’ போன்ற எத்தனையோ திட்டங்களை, கனிம வளங்களைக் கொள்ளையடிக்கும் எத்தனையோ ஒப்பந்தங்களை செயல்படவிடாமல் தடுத்து நிறுத்தியுள்ளனர். அப்போராட்டங்களை முன்மாதிரியாகக் கொண்டு போராடுவோம்! வெற்றி பெறுவோம்!

காடும், காட்டுவளமும் பழங்குடி - மலைவாழ் மக்களுக்கே சொந்தம்!

இந்திய அரசே!

•    சத்தியமங்கலம் புலிகள் காப்பகத் திட்டம் உள்ளிட்ட அனைத்து புலிகள் காப்பகத் திட்டங்களையும் கைவிடு! வன உரிமைச் சட்டத்தை அமல்படுத்து!

தமிழக அரசே!

•    இந்திய அரசின் புலிகள் காப்பகத் திட்டங்களுக்கு ஒத்துழைப்புத் தராதே! அத்திட்டங்களை எதிர்த்து சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்று!

தொழிலாளர்களே!  விவசாயிகளே!  சிறு வியாரிகளே!  மாணவர்களே!  அறிவாளர்களே!

•    பழங்குடிகள், மலைவாழ் மக்களுடன் இணைந்து காட்டையும், நாட்டையும் பாதுகாக்கப் போராடுவோம்!

நாள்: 12.03.13

மேற்குத்தொடர்ச்சி மலைவாழ்மக்கள் உரிமை இயக்கம்

தொடர்புக்கு: 94433 49800, 91501 92047

 

Pin It