அப்சல் குருவின் மரண தண்டனையைத் தொடர்ந்து சந்தனக் கடத்தல் வீரப்பன் கூட்டாளிகள் 4 பேரின் கருணை மனுக்களை குடியரசுத் தலைவர் நிராகரித்து இருக்கிறார். 1993–ம் ஆண்டு ஏப்ரல் 9 ந்தேதி மேட்டூர் அருகே பாலாறு என்ற இடத்தில் நடந்த கண்ணிவெடித் தாக்குதலில் 22 பேர் உயிர் இழந்தனர். இந்த வழக்கை விசாரித்த கர்நாடக ‘தடா’ நீதிமன்றம் ஞானப்பிரகாசம், சைமன், மீசை மாதையன், பிலவேந்திரன் உள்பட 7 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்தது. இந்தத் தீர்ப்பை கர்நாடக உயர் நீதிமன்றமும் உறுதி செய்தது.

இதை எதிர்த்து ஞானப்பிரகாசம், சைமன், மீசை மாதையன், பிலவேந்திரன் ஆகிய நான்கு பேரும் உச்சநீதி மன்றத்தில் மேல்முறையீடு செய்தனர். இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் 4 பேரின் ஆயுள் தண்டைனையை தூக்கு தண்டனையாக மாற்றி தீர்ப்பு அளித்தனர். குற்றவாளிகள் 4 பேரும் சமுதாயத்துக்கு பெரிய‌ அபாயம் ஏற்படுத்தும் வகையில் குற்றம் புரிந்து உள்ளனர் என்றும், இவர்களுக்கு அதிகபட்ச தண்டனை விதிக்காவிட்டால் அது நீதியை அலட்சியப்படுத்தியது போன்ற செயலாகிவிடும் என்றும் தங்கள் தீர்ப்பில் குறிப்பட்டு இருந்தனர்.

இதனை அடுத்து மரண தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைக்கக் கோரி 2004ம் ஆண்டு பிப்ரவரி 12ந்தேதி 4 பேரும் குடியரசுத் தலைவருக்கு கருணை மனுக்களை அனுப்பி வைத்தனர். 9 ஆண்டுகளுக்குப் பிறகு கடந்த 11ந்தேதி பிரணாப் முகர்ஜி கருணை மனுவை நிராகரித்திருக்கிறார்.

தடா சட்டத்தின் கீழ் கொடுக்கப்படும் வாக்குமூல‌ம் செல்லத்தக்கது என்று நீதிமன்றத்தால் அங்கீகரிக்கப்படுகிறதெனினும் அது பலவீனமான சாட்சியமே என்று கூறி உல்ஃபா இயக்கத்தைச் சேர்ந்த புய்யான் என்பவரை சமீபத்தில் (17.12.2011) விடுதலை செய்தது உச்ச நீதிமன்றம்.

இதே உச்ச நீதிமன்றம்தான் மேற்கூறிய 4 பேரின் ஆயுள் தண்டனையை மரண தண்டனையாக மாற்றி அவர்களின் இருத்தலை முடிவுக்குக் கொண்டு வந்துள்ளது. ஏன் இந்த முரண்பாடுகள்? நீதிபதிகளின் மனநிலையைச் சார்ந்து குற்றவாளிகளின் மரணம் தீர்மானிக்கப்படுகிறதா?

1973 ஆண்டு புதுப்பிக்கப்பட்ட குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் பிரிவு 354 (B)  கொலைக் குற்ற வழக்குகள் எல்லாவற்றிலும் ஆயுள் தண்டனையே விதிக்கப்பட வேண்டும் என்றும் தனிச்சிறப்பான காரணங்கள் இருந்தால் மட்டுமே மரண தண்டனை வழங்கலாம் என்றும் மரண தண்டனை வழங்கினால் அதற்கான சிறப்புக் காரணங்களை விளக்க வேண்டும் என்றும் கூறியது. ஆனால் மேற்கூறிய 4 பேரின் மரண தண்டனைக்கு நீதிபதிகள் கூறிய காரணம் ஏற்கத்தக்கதல்ல.

குற்றவியல் மற்றும் இந்தியத் தண்டனைச் சட்டத்தில் எந்தெந்த வழக்குகளில் ஆயுள் தண்டனை வழங்கலாம் அல்லது மரண தண்டனை வழங்கலாம் என்று தெளிவாகக் கூறப்படவில்லை. எனவே நீதிபதிகளின் மனநிலை சார்ந்து தீர்ப்புகள் வழங்க இது இடமளிக்கிறது. இவ்வாறு இருப்பது உயிர்வாழும் உரிமையை உத்திரவாதம் செய்யும் அரசியல் சட்டப்பிரிவு 21க்கு எதிரானது.

ராஜேந்திர பிரசாத் எதிர் உத்திரப் பிரதேசம் வழக்கில் தீர்ப்பு கூறிய உச்ச நீதிமன்றம் மரண தண்டனை விதிக்கப்படும் முன் குற்றவாளியின் சமூகப் பின்னணி, சமுதாயத்தில் அவரது பொதுவான நடத்தை, பொது ஒழுங்கு போன்றவற்றையும் கருத்தில் கொள்ள வேண்டும் என்றும், குற்றவாளியால் பொதுமக்களின் நலன் அச்சுறுத்தப்படும் என்றால் மட்டுமே அவருக்கு மரண தண்டனை வழங்கப்பட வேண்டும் என்றும் கூறியது. ஆனால் மேற்கூறிய 4 பேரும் சமூக‌த்திற்கு அச்சுறுத்தல் என்று நீதிபதிகள் கூறியது தவறான வாதமாகும். அவர்கள் பொதுமக்கள் யாரையும் எப்போதும் துன்புறுத்தவில்லை.

ஆந்திராவைச் சேர்ந்த கம்யூனிஸ்ட் புரட்சியாளர்களான கிருஷ்ணா கவுடா, பூமையா ஆகியோர் தங்களுக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை ஆயுள் தண்டனையாகக் குறைக்கும்படி குடியரசுத் தலைவருக்கு அனுப்பிய கருணை மனுக்கள் நிராகரிக்கப்பட்ட நிலையில், அவர்கள் உச்ச நீதிமன்றத்தை அணுகியபோது உச்ச நீதிமன்றம் அவர்களது மனுவின் மீது கீழ்க்காணும் தீர்ப்பை வழங்கியது. ஒரு கருனை மனு நிராகரிக்கப்பட்டு விட்டதாலேயே குடியரசுத் தலைவரின் அதிகாரமோ, ஆளுநரின் அதிகாரமோ தீர்ந்து போய்விட்டது என்பதாகிவிடாது. மாறிய சூழ்நிலைமைகளில் மற்றொரு கருணை மனுவைப் பரிசீலிப்பதிலிருந்து குடியரசுத் தலைவரையோ ஆளுநரையோ தடுக்கக் கூடியது ஏதும் இல்லை என்று கூறுகிறது. எனவே 4 பேரும் மீண்டும் தனது கருணை மனுவை குடியரசுத் தலைவருக்கோ அல்லது ஆளுநருக்கோ அனுப்பி வைக்கலாம்.

மேலும் இந்த கருணை மனுக்கள் மீது குடியரசுத் தலைவர் முடிவெடுக்கும் வரை மாநில ஆளுநர் காத்திருக்க வேண்டும் என்னும் அவசியமில்லை. புலவர் கலிய பெருமாள், தியாகு, லெனின், ரங்கசாமி, குருமூத்தி மற்றும் நளினி போன்றவர்களின் மரண தண்டனையை மாநில ஆளுநர்களே குறைத்துள்ளனர். அரசியல் சட்டப் பிரிவு 161 வழங்கும் அதிகாரத்தைப் பயன்படுத்தி ஆளுநர் இதைச் செய்ய முடியும்.

அரிதினும் அரிதான வழக்குகளில் மட்டுமே மரண தண்டனை வழங்கப்பட வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் கூறுகிறது. ஆனால் இவர்களது வழக்கை அரிதினும் அரிதான வழக்காக நாம் எடுத்துக் கொள்ள முடியாது. ஏனெனில் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு தண்டனை வழங்கப்பட்டவர்கள் இவர்கள். பல கொடும் குற்றங்களில் நேரடியே மரண தண்டனைகள் வழங்குவதன் மூலம் கொலைக் குற்றங்கள் நிகழாமல் தடுக்க முடியும் என்று ஒருபோதும் மெய்பிக்கப்பட்டதில்லை. எந்தவொரு குற்றத்திற்காகவும் எந்தவொரு வழிமுறையின் மூல‌மும் ஒருவரது உயிரைப் போக்குவது கொடூர‌மான மனிதத்தன்மையற்ற, இழிவு உண்டாக்குகிற செயலாகும்.

மேலும் மரண தண்டனை ஒருமுறை நிறைவேற்றப் பட்டுவிட்டால் அதைத் திரும்ப பெற முடியாது. சட்டம் செயல்படும் முறைகள் பிழைகள் இழைக்கக் கூடியவை என்பதால் குற்றமற்றவர்கள் மீது தண்டனை விதிக்கப்படும் வாய்ப்புகள் ஏராளமாக உள்ளன.

லஞ்சம் வாங்கிக் கொண்டு குற்றவாளிக்கு சாதகமான தீர்ப்பு வழங்கிய நீதிபதிகளின் வரலாறு எல்லாம் இருக்கும்போது மரண தண்டனைகளிலும் இதுபோன்ற செயல்கள் நடக்காது என்பதற்கு என்ன உத்திரவாதம் கொடுக்கமுடியும்?

மேலும் நீதிபதிகளின் சமூகக் கண்ணோட்டமும் அவர்களின் கட்சிசார்ந்த சிந்தனையும் அவர்களை மரண தண்டனை கொடுக்க நிர்பந்திக்கும் காரணிகளாக நாம் ஏன் எடுத்துக் கொள்ள கூடாது?

காந்தி கொலை வழக்கில் கோட்சே தூக்கில் போடப்பட்டதால் இந்திரா காந்தியின் கொலையை தடுத்து நிறுத்த முடியவில்லை. இந்திரா காந்தி கொலை வழக்கில் இருவர் தூக்கிலிடப்பட்டதால் ராஜீவ் காந்தியின் கொலையைத் தடுத்து நிறுத்த முடியவில்லை. ஆசிய மனித உரிமை உரிமைகள் மையத்தின் சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கை ஒன்றில் 2001 முதல் 2011ம் ஆண்டு வரை 1455 பேருக்கு மரண தண்டனை வழங்கப்பட்டுள்ளதாகக் கூறுகிறது. ஆனால் நாட்டில் எந்தக் குற்றச்செயலும் சிறிதளவுகூட குறையவில்லை.

எனவேதான் உறுதியாகக் கூறுகிறோம், மரண தண்டனை வேண்டாம் என்று. குற்றவாளியை திருந்தச் செய்தல், அவருக்கு மறுவாழ்வு அளித்தல் என்பதுதான் தண்டனையின் குறிக்கோளாக இருக்க வேண்டும்.

மேற்கூறிய 4 பேர் மட்டுமல்ல இன்னும் குடியரசுத் தலைவரின் பரிசீலனையில் இருக்கும் அனைத்து கருணை மனுக்களும் ஏற்றுக் கொள்ளப்பட்டு தண்டனைகள் குறைக்கப்பட வேண்டும் என்பதே மனிதநேயமுள்ளவர்களின் விருப்பமாகும். மேலும் குற்றவாளிகளை தூக்கில் போடுவதற்கு பதில் குற்றங்கள் செய்யத் தூண்டும் இந்த சமுதாய அமைப்பை மாற்றுவதே சிறந்த செயலாக இருக்கும்.

Pin It