நாகரிக சமுதாயமாக மனிதர்கள் வாழத் தலைப்பட்ட நாள்களில், வளமான ஆறுகள் பாய்ந்து ஓடுகின்ற பகுதிகளிலேயே வசிக்கத் தொடங்கினார்கள். அப்படித்தான், காவிரிக்கரை நாகரிகம், நைல் நதிக்கரை நாகரிகம், யூப்ரடீஸ்-டைக்ரிஸ் நாகரிகம், சுமேரிய நாகரிகம், சிந்து சமவெளி நாகரிகம், கங்கை நதிக்கரை நாகரிகம் என நதிக்கரை நாகரிகங்கள் உருவாயின என்பதை நாம் அறிவோம்.

அதுபோல, உயிர் வாழத் தேவையான வளங்கள் இருக்கக்கூடிய இடங்களில்தான் மனித சமுதாயம் பல்கிப் பெருகி, வளர்ச்சி பெற்றது. சிற்றூர்கள், பேரூர்கள் ஆயின; பேரூர்கள் நகரங்கள் ஆயின; இன்று, நகரங்கள் பெருநகரங்களாக ஆகிக்கொண்டு இருக்கின்றன.

இந்த இருபத்து ஒன்றாம் நூற்றாண்டில், அடிப்படைத் தேவைகள் என்ற நிலையைக் கடந்து, ஆடம்பரத் தேவைகள் பெருகி விட்டன. அவற்றை நிறைவு செய்யத் தேவை பணம். மாந்தர்கள் கூட்டமாக, பெருமளவில் எங்கே வசிக்கின்றார்களோ, அங்கேதான், பணம் சார்ந்த பொருளியல் நடவடிக்கைகளும் இருக்கும்.

அந்த வகையில், பெருநகரங்கள், தொழில் நகரங்களில்தான் பணப்புழக்கம் இருக்கின்றது. எனவே, கிராமப்புறங்களில் இருந்து மக்கள், நகரங்களை நோக்கிப் புலம் பெயர்ந்து வருகின்றனர். கடந்த இருபதாம் நூற்றாண்டில் உலகம் முழுமையும், இத்தகைய இடப்பெயர்வுகள் வெகுவாக நிகழ்ந்து கொண்டு இருக்கின்றன. அதைத் தவிர்க்க இயலாது.

இப்படிக் கோடிக்கும் மேற்பட்ட மக்கள் குடியேறும்போது, நகரங்கள் விரிந்துகொண்டே போகின்றன. நியூ யார்க், லண்டன், பாரிஸ் ஆகிய நகரங்களுக்கு நான் சென்றபோது, விமான நிலையத்தில் இறங்கினால், தங்க வேண்டிய இடத்துக்கு, 100 கிலோமீட்டர்களுக்கும் மேல், காரில் பயணிக்க வேண்டி இருந்தது. அந்த அளவுக்குப் பரந்து விரிந்து இருக்கின்றன. இதனால், ஓரிடத்தில் இருந்து மற்றொரு இடத்துக்கு மக்கள் சென்று வர வேண்டும் என்றால், போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.

ஐரோப்பிய நாடுகளில் மக்கள் தொகைப் பெருக்கம் குறைவு. எனவே, அங்கே சில நகரங்கள் பெருகுவதால் பிரச்சினை இல்லை. ஆனால், நமது நாட்டில் என்ன நிலைமை? ஒவ்வொருவரும் தனித்தனியாக வீடுகளைக் கட்டிக் கொண்டே போனால், இந்தியா முழுமையும் விவசாய நிலங்கள், காடுகள் எல்லாம் அழிந்து, கடைசியில் மனிதர்கள் வசிக்கின்ற வீடுகளாக மட்டுமே ஆகிவிடும்.

எனவே, நகரங்களில் தனித்தனியாக வீடுகளைக் கட்டுவதைத் தவிர்க்க வேண்டும்; அது பெரும் பணச்செலவும்கூட. பிறகு, அவர்கள் எங்கே வசிக்க முடியும்? எனவேதான், அடுக்குமாடிக் குடியிருப்பு என்ற கொள்கை உருவாகியது.

கூடி வாழ்ந்தால் கோடி நன்மை என்று நம் முன்னோர்கள் சொல்லி வைத்தது, இன்று நனவாகிக் கொண்டு இருக்கின்றது. சென்னையின் புறநகர்களில், அடுக்குமாடிகள், புற்றீசல்போலப் பெருகிக் கொண்டு இருக்கின்றன.

ஆனால், சிலருக்கு அடுக்குமாடி என்றால் பிடிக்காது. வேண்டாவெறுப்பாகத்தான் பலர் இங்கே வசிக்கின்றார்கள். என்ன இருந்தாலும், சொந்த வீடு போல வருமா? என்பார்கள். கையில் ஒரு தொகையை வைத்துக் கொண்டு, தங்கள் விருப்பம் போல வீடு கட்டுவதற்காக, தனி மனை வாங்க அலைவார்கள். அவர்களிடம் உள்ள பணத்துக்கு ஏற்ற வகையில் இடம் அமையாது. வாங்காமல் விட்டுவிடுவார்கள். அப்படி இவர்கள் பார்த்து வாங்காமல் போன இடம், அடுத்த ஆண்டிலேயே சில பல இலட்சங்கள் விலை கூடி விடும். அப்போது, கடந்த ஆண்டிலேயே வாங்காமல் போனேனே? என்று பரிதவிப்பார்கள். மனையே வாங்க முடியவில்லை என்றால், தனி வீட்டுக்கு எங்கே போவது? அப்படிப் பலரை நான் பார்த்து இருக்கின்றேன்.

சரி கையில் பணம் இருக்கின்றது; மனையும் இருக்கின்றது. உடனே வீட்டைக் கட்டி விட முடியுமா? கட்டட வரைபடம் வேண்டும்; உள்ளாட்சி அமைப்புகளில் விண்ணப்பித்து, வீடு கட்ட ஒப்புதல் வாங்க வேண்டும்; இதற்கெல்லாம் கால நேரம் இருக்கின்றதா?

கல்யாணத்தைப் பண்ணிப் பார்; வீட்டைக் கட்டிப் பார் என்று அக்காலத்திலேயே நம் முன்னோர்கள் சொல்லி வைத்து இருக்கின்றனர். இத்தனைக்கும், வேலைக்கு ஆட்கள் கிடைப்பது எளிதாக இருந்த காலத்தில் அப்படிச் சொல்லி வைத்து இருக்கின்றார்கள்.
 
பெருநகரங்களில் வீடு கட்டுவது என்றால், வேலைக்கு ஆட்களை எங்கே தேட முடியும்? எத்தனைப் பேருக்கு அதற்கு நேரம் இருக்கின்றது? அப்படி ஒருவர் வீடு கட்ட முயன்றால், அதற்காகத் தன் வாழ்நாளில் ஒரு பகுதியைச் செலவிட வேண்டும். இங்கேதான், தனியார் மற்றும் அரசு கட்டுமான நிறுவனங்களின் தேவை உருவாகிறது. தொடக்கநிலைச் சிக்கல்களைச் சமாளித்து, இன்றைக்குத் தரமான அடுக்குமாடிகளை உருவாக்கித் தருகின்ற எண்ணற்ற நிறுவனங்கள் வளர்ந்து உள்ளன. அப்படி அவர்கள் உருவாக்குகின்ற அடுக்குமாடிக் குடியிருப்பில் வசிக்கும்போது, உங்களுக்குப் பல நன்மைகள் கிடைக்கின்றன.

இன்றைய நிலையில், உங்கள் கையில் 10 அல்லது 15 இலட்சம்தான் இருக்கின்றது. நீங்கள் சென்னை மாநகரத்தில் வாடகைக் குடியிருப்பில் வசிக்கின்றீர்கள். தனி வீடுதான் வேண்டும் என்றால், அந்தத் தொகைக்கு, சென்னை மாநகருக்கு உள்ளே வீடு வாங்க முடியுமா? செங்கல்பட்டைத் தாண்டி, திண்டிவனத்துக்குப் பக்கத்தில்தான் போக வேண்டும். அதாவது, 100 கிலோ மீட்டர்களைத் தாண்டிச் செல்ல வேண்டும்.

பத்து ஆண்டுகளுக்கு முன்பு ஒருமுறை, பெருமழையால், திருச்சி, சென்னை இடையே தொடர்வண்டிப் போக்குவரத்து ஒன்றிரண்டு நாள்கள் தடைப்பட்டது. அப்போது திருச்சியில் இருந்த நானும் என் நண்பர் ஒருவரும் சேலம் சென்று, அங்கிருந்து தொடர்வண்டியில் ஏறி சென்னைக்கு வந்துகொண்டு இருந்தோம். முன்பதிவு இல்லாத பொதுவகுப்பில்தான் பயணித்தோம். அங்கே, மின் விளக்குகளை அணைத்து வைக்க முடியாது. எனவே, இரவு முழுவதும் உறக்கம் இல்லை. அதிகாலை 4.00 மணி. வேலூர் வந்தது. திடீரென பத்துப் பதினைந்து பேர் ஏறி, உள்ளே படுத்துக் கிடந்தவர்களை எல்லாம் தட்டி எழுப்பி நேராக உட்காருங்கள்; தள்ளி இருங்கள் என்று சொல்லி நெருக்கியடித்து உட்கார்ந்து கொண்டார்கள். எதிரும்புதிருமாக உட்கார்ந்தவர்கள், ஒரு பெட்டியைக் கீழே வைத்தார்கள். அதன்மேல் ஒரு துணியை விரித்தார்கள். சீட்டுக் கட்டைப் பிரித்து, சீட்டு விளையாடத் தொடங்கிவிட்டார்கள்.

அவர்கள் எல்லோருமே சென்னையில் வேலை செய்கிறார்கள். காலை ஏழு மணி வேலைக்காக, 4 மணிக்கே வேலூரில் இருந்து வருகின்றார்கள். இரண்டு மணி நேரப் பயணம். 4 மணிக்குத் தொடர்வண்டி நிலையத்துக்கு வர வேண்டும் என்றால், அவர் மூன்று மணிக்கே எழுந்து ஆயத்தமாகிப் புறப்பட்டு இருக்க வேண்டும். அதேபோல, மாலையிலும் மூன்று மணி நேரத்தைப் பயணத்துக்காகச் செலவழிக்க வேண்டும். அதாவது, ஒரு நாளைக்கு ஆறு மணி நேரம் அவர் பயணத்திலேயே கழிக்கின்றார். அவரால், வேறு என்ன செய்ய முடியும்? தமது பிள்ளைகளுக்காக நேரத்தைச் செலவிட முடியுமா? குடும்பப் பணிகள் எதையாவது கவனிக்க முடியுமா? வேலூர் மட்டும் அல்ல, செங்கல்பட்டு, மதுராந்தகத்தில் இருந்தும், இப்படித்தான் தொடர்வண்டிகளில் பயணித்து, வேலைக்கு வந்து செல்கிறார்கள்.

அவர்களுக்கு ஒரு தீர்வாக, நடுத்தர மக்களுக்கு ஒரு கொடையாக அமைந்து இருப்பதுதான் இந்த அடுக்குமாடி.

இவ்வாறு, கிராமங்களில் இருந்து மக்கள் வேலைக்காக மட்டுமே நகரங்களை நோக்கி வருவது இல்லை. சொந்தமாக பெரிய வீடு, நிலபுலன்களை வைத்துக் கொண்டு, நல்ல வாழ்க்கை வசதிகளோடு கிராமங்களில் வசிப்பவர்கள், தங்களது பிள்ளைகளை நகர்ப்புறங்களில் உள்ள நல்ல பள்ளிகளில் படிக்க வைக்க வேண்டும் என்று கருதி, நகரங்களுக்கு வருகின்றார்கள்.

அடுக்குமாடி வாழ்க்கை குறித்து, சென்னையில் ஒரு குடியிருப்பின் தலைவரது அனுபவங்களைக் கேட்போம்.

"நான் கப்பலில் வேலை பார்க்கின்றேன். விடுமுறையில்தான் ஊருக்கு வருகின்றேன். அப்போது, என் கிராமத்திலேயே நான் இருந்து கொள்ளலாம். எனக்கு அங்கே அனைத்து வசதிகளும் இருக்கின்றன. ஆனால், பல நாடுகளை நான் பார்க்கும்போது, எனக்குள்ளே ஒரு தாழ்வு மனப்பான்மை. அவர்களுக்கு ஈடு கொடுத்துப் பேசிப் பழகச் சில காலம் பிடித்தது. அந்தக் காலகட்டத்தில், என்னுடைய நேரம் விரயமானதுபோல உணர்ந்தேன்.

1991 ஆம் ஆண்டு, சென்னையில் ஐந்தாம் வகுப்பு படிக்கின்ற குழந்தை ஆங்கிலம் பேசுவதைப் பார்த்தபோது எனக்கு வியப்பாக இருந்தது. என்னுடைய பிள்ளைகளின் கல்விக்காக, நல்ல பள்ளி இருக்கின்ற பகுதியில்தான் குடியேற வேண்டும் என்று கருதித்தான் சென்னைக்கு வந்தேன். அப்போது, சென்னையில் எந்தப் பகுதியில் வசிக்கலாம் என்று நண்பர்களிடம் கேட்டேன். அண்ணா நகர் மற்றும் அதைச் சார்ந்த விரிவாக்கப் பகுதிகளில் குடியேறுங்கள் என்றார்கள்.

அப்போது, அரசுத்துறை நிறுவனம் ஒன்று, வடமேற்குச் சென்னையில், 800 வீடுகள் கொண்ட ஒரு குடியிருப்பைக் கட்டுவதாக அறிவித்தது. அவர்களது வாடிக்கையாளர்களுக்கும் வீடுகள் ஒதுக்கப்படும் என்றார்கள். படித்து முடித்த உடனேயே கப்பல் பணியில் சேர்ந்ததால், கையில் கொஞ்சம் பணம் சேர்ந்து இருந்தது. நானும், அந்த நிறுவனத்தின் வாடிக்கையாளர்களுள் ஒருவன் என்பதால், விண்ணப்பித்தேன். வீடு கிடைத்தது. இரண்டு அறைகள் கொண்ட வீடு, ஐந்து இலட்சம் ரூபாய்தான். நான் வீடு வாங்கியபோது எனக்கு வயது 23. அந்தக் காலத்தில், அந்த வயதில் வீடு வாங்கியது ஒரு சாதனை. அடுத்த ஓராண்டிலேயே, 1995 ஆம் ஆண்டு, என் மாமன் மகளைத் திருமணம் செய்து கொண்டு, சென்னையில் வாங்கிய சொந்த வீட்டில் குடியேறினேன்.

என்னைப் போலவே என் மனைவியும் திருநெல்வேலியைத் தாண்டி வெளியே வந்தது இல்லை. நாங்கள் குடியேறி ஒரு வாரம் இருக்கும். ஒருநாள் இரவு 9 மணிக்கு ஒருவர், எங்கள் வீட்டு அழைப்பு மணியை அழுத்தினார்.

கிராமங்களில் என்றால், அந்த நேரம் யாராவது வீட்டுக்கதவைத் தட்டினால், ஏதோ விபரீதம் அல்லது அவசர உதவியாக இருக்கக் கூடும். அந்த உணர்வோடு, இந்த வேளையில் யார் வந்துஇருக்கின்றார்கள்,  என்ற அச்சத்தோடு கதவைத் திறந்தேன். கையில் நோட்டுடன் ஒருவர் நின்றுகொண்டு இருந்தார்.

‘நீங்கள் மூன்று மாதங்களாக, நமது குடியிருப்போர் நலச்சங்கத்துக்கு, மாதாந்திரப் பராமரிப்புத் தொகை (மெயின்டெனன்ஸ்) கட்டவில்லை. 300 ரூபாய் கொடுங்கள்’ என்றார்.

எனக்குக் கோபமாக வந்தது. ‘நீங்கள் யார்?’ என்று கேட்டேன்.

‘நான் நமது குடியிருப்பின் பொதுநலச் சங்கத்தில் இருந்து வருகிறேன். இந்த வளாகத்தில், நமது தொகுப்பில் உள்ள வீடுகளுக்கு (பிளாக்) நான்தான் சங்கப் பிரதிநிதி. பராமரிப்புத் தொகை வசூலிக்க வேண்டியது என் பொறுப்பு’ என்றார்.

நான் சொன்னேன்: ‘இரவு ஒன்பது மணிக்கு வந்து நீங்கள் மணி அடித்தது தவறு. குடியிருப்பில் என்ன பராமரிப்பு செய்கிறீர்கள்? இங்கே பாருங்கள் சுவிட்ச் சரி இல்லை; நல்ல தண்ணீர் வரவில்லை. நான் ஏன் பணம் தர வேண்டும்?’ என்று கேட்டேன்.

அவர் மிகவும் பொறுமையாக, ‘சார் நானும் உங்களைப்போல ஒரு குடியிருப்புவாசிதான். உங்கள் வீட்டுக்குக் கீழேதான் வசிக்கின்றேன். சற்று நேரத்துக்கு முன்னால்தான் அலுவலகத்தில் இருந்து வீட்டுக்கு வந்தேன். நாளைக் காலையில் நான் பணத்தைக் கட்டிவிட்டு அலுவலகம் செல்ல வேண்டும். அதனால்தான், இப்போது வந்தேன்’ என்றார்.

இப்போது, குடியிருப்புவாசிகள் நேரடியாக சங்க அலுவலகத்தில் கட்டுகின்றார்கள். அந்த நாள்களில், ஒவ்வொரு தொகுப்புக்கும் பொறுப்பான ஒருவர், பணத்தை வசூலித்துக் கொண்டு போய்க் கட்டுவார்.

அவர் அப்படிச் சொன்னபோதுதான், குடியிருப்போர் நலச்சங்கம் என ஒன்று இருப்பது எனக்குத் தெரிய வந்தது.

மற்றொரு நாள், வேறு ஒரு பிரச்சினை. வீட்டுக்கு வெளியே சத்தம் கேட்டது. ‘எல்லோரும் வாருங்கள்’ என்ற குரல் கேட்டு நானும் போனேன்.

அங்கே ஒருவர் கையில் கத்தியோடு, எங்கள் குடியிருப்புச் சங்கச் செயலாளரை மிரட்டிக்கொண்டு இருந்தார்.

எங்கள் குடியிருப்பு சங்கத்தின் சார்பிலேயே, பெரிய குடை (டிஷ் ஆண்டெனா) வைத்து, தொலைக்காட்சி ஒளிபரப்பு செய்து கொண்டு இருந்தார்கள். இந்த நிலையில், அப்போதுதான் புதிதாக அறிமுகமாகி இருந்த கேபிள் தொலைக்காட்சி இணைப்பை, எங்கள் குடியிருப்பில் உள்ள ஒரு வீட்டுக்குக் கொடுப்பதற்காக அவர் வந்து இருக்கின்றார். அதை, எங்கள் சங்கச் செயலாளர் அனுமதிக்கவில்லை. இங்கே நாங்கள் ஏற்கனவே தொலைக்காட்சி ஒளிபரப்பு செய்துகொண்டு இருக்கின்றோம். அதுவே எங்களுக்குப் போதுமானது. நீங்கள் ஒரு வீட்டுக்குக் கொடுத்தால், அடுத்தடுத்து பலரும் அதில் சேருவார்கள். பிரச்சினை உருவாகும். எனவே, எங்களுக்குக் கேபிள் இணைப்பு தேவை இல்லை என்பது அவரது வாதம். இதுதான் பிரச்சினை.

முன்பே, தலைவர், செயலாளருக்கு இலவசமாக இணைப்புத் தருகிறேன் என்று வேறு சொல்லி இருக்கின்றார். அதையும் எங்கள் சங்கச் செயலாளர் ஏற்றுக்கொள்ளவில்லை.

அடுத்தது, எங்கள் குடியிருப்பைக் கட்டிய நிறுவனத்தோடு சில பிரச்சினைகள். டிரிப்பர் சுவிட்ச் போட்டு இருந்தார்கள். மொத்த வீட்டுக்கும் சேர்த்து ஒரே சுவிட்ச். அடிக்கடி டிரிப் ஆகும். உயரமானவர்கள் படிக்கட்டுகளில் குனிந்துதான் போக வேண்டும். தலை தட்டும். உப்புத் தண்ணீர்தான். சாலை சரியாக இல்லை. கதவு நிலைகளை, மெட்டலில் போட்டு விட்டார்கள். முதலில் பார்த்தபோது, மரம் போலவே தெரிந்தது. அருகில் சென்று தட்டிப்பார்த்தபோதுதான், அது மெட்டல் என்று தெரிந்தது. குளியல் அறைகளில் இரண்டு மாதங்களில் துருப்பிடிக்க ஆரம்பித்து விட்டது.

நாங்கள் தொடர்ந்து கேள்விகள் கேட்கிறோம் என்பதால், எங்கள் வளாகத்தில் அவர்கள் வைத்து இருந்த அலுவலகத்தை மூடிவிட்டுப் போய்விட்டார்கள். ஒரேயொரு பொறியாளரைப் பொறுப்பாளராக நியமித்து இருந்தார்கள்.  எனவே, குடியிருப்புவாசிகள் அனைவரும் சேர்ந்து, கட்டுமான அலுவலகத்துக்கே போனோம். அது பொதுத்துறை நிறுவனம் என்பதால், வேலைகள் மெதுவாகவே நடந்தன.

மேலும், குடியிருப்பில் வீடுகள் கட்டியதுபோக, காலி இடமாக விடப்பட்ட பகுதிகள், சட்டப்படி எங்களுக்குத்தான் சொந்தம். அந்த இடத்தில், அவர்களுடைய அலுவலகத்தைக் கட்டிக் கொண்டார்கள்.

அந்த காலி இடத்தின் மதிப்பு, 1 கோடிக்கும் மேல் இருந்தது. எனவே, உள்ளூர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர முடியாது. புதுதில்லியில் உள்ள தேசிய நுகர்வோர் மையத்துக்குத்தான் போக வேண்டும் என்று சொன்னார்கள். எனவே, நாங்கள் டெல்லிக்குச் சென்று வழக்குத் தொடுத்தோம்.

வழக்குச் செலவுக்காக, குடியிருப்புவாசிகளிடம் பணம் வசூலித்தோம். ஒரு அறை வீடு, இரண்டு அறை வீடு, மூன்று அறை வீடுகளுக்கு ஏற்றவாறு, தொகை வசூலித்தோம். இந்த வழக்குக்காக, குடியிருப்புவாசிகள் அனைவரும் சேர்ந்து இதுவரையிலும், 50 லட்சம் ரூபாய் செலவழித்து விட்டோம்.

மற்றொரு வழக்கை,க நுகர்வோர் நீதிமன்றத்தில் தொடர்ந்தோம். அனைத்து வீடுகளிலும், சுவிட்சுகளை மாற்றித்தர வேண்டும்; கதவு நிலைகளை மாற்ற வேண்டும்; மரத்தில் செய்து தர வேண்டும்; தரையைச் சமமாகப் போட்டுத் தர வேண்டும்; மேடு பள்ளம் இருக்கக்கூடாது; குடிக்க நல்ல தண்ணீர் தர வேண்டும்; இந்த வசதிகள் அனைத்தையும் செய்து தர வேண்டும் என்று வழக்குத் தொடுத்தோம்.

எங்களுக்கு ஒரு சமூகநலக்கூடம், ஆவின் பூத், கிளினிக் அமைத்துத் தருவதாகவும் அவர்களுடைய விளம்பரத்தில் தெரிவித்து இருந்தார்கள். ஆனால், எதையுமே செய்து தரவில்லை. இப்படியெல்லாம் இவர்கள் செய்து தர வேண்டும் என்பதே, பெரும்பாலான குடியிருப்புவாசிகளுக்குத் தெரியாது. வரைபடத்தில் குறிப்பிட்டு இருந்தபடி, எங்கள் குடியிருப்புக்கு விளையாட்டுத் திடல் உருவாக்கித் தரவில்லை.

எங்களுடைய செயலாளர், நாகர்கோவில்காரர். பொது உடைமைத் தோழர்களோடு தொடர்புகள் உண்டு. எதையும் விவரமாக ஆராய்ந்து பார்ப்பார். அவர்தான், இதையெல்லாம் எங்களுக்குச் சொன்னார். அப்போதுதான், எனக்கு விவரங்கள் புரியத் தொடங்கின. அவரோடு நான் நட்புக் கொண்டேன். பல விசயங்களைச் சொல்லித் தந்தார்.

தண்ணீர் அடிப்படைத் தேவை. அதைச் செய்து தரவில்லை என்பதற்காக, காவல் நிலையத்திலேயே குற்ற வழக்குத் தொடுத்தோம்.

ஒரு குடியிருப்பில் உள்ள வசதிகளை இரண்டு வகையாகப் பிரிக்கலாம். 1. அடிப்படை வசதிகள். 2. கூடுதல் வசதிகள்.

மனிதன் வாழ்வதற்கு ஆதாரமாக இருப்பவை அடிப்படை வசதிகள். குடிநீர் வழங்குதல், கழிவு நீர் அகற்றுதல், இணைப்புச் சாலைகள், மின்சாரம் இவையெல்லாம். சமூகக் கூடம், விளையாட்டுத் திடல், மின்தூக்கி, நூலகம், உடற்பயிற்சிக் கூடம் இவையெல்லாம் கூடுதல் வசதிகள்.

நாங்கள் அடிப்படை வசதிகள் கோரி சென்னையில் வழக்குத் தொடுத்த உடனேயே, அடிப்படை வசதிகளைச் செய்து தரத் தொடங்கினார்கள்.

சென்னைக் குடிநீர் வழங்கல் வாரியத்தில் உடனடியாகப் பணத்தைக் கட்டி, எங்களுக்காகவே ஒரு குழாய் பதித்து, எங்கள் குடியிருப்புக்குத் தண்ணீர் கொண்டு வந்தார்கள். அதற்காகவே அந்த நிறுவனம், 45 இலட்சம் செலவு செய்தார்கள். அப்போதுதான், சங்கத்தின் மதிப்பை, நான் உணர்ந்து கொண்டேன்.

நான் ஒரு தனி ஆளாகச் சென்று அவர்களிடம் கேட்டு இருந்தால், செய்து கொடுத்து இருப்பார்களா? உன்னால் ஆனதைப் பார் என்று சொல்லி இருப்பார்கள். ஒரு கூட்டு அமைப்பாக இருந்ததால்தான் இதைச் செய்ய முடிந்தது. நான் வாங்கிய வீடு ஐந்து இலட்சம்தான். அவர்கள் செலவு செய்தது 45 இலட்சம் என்றபோது எங்களுக்கு மலைப்பாக இருந்தது.

பிள்ளையார் கோவில் பிரச்சினை

என்னுடைய வீடு, ஒரு முச்சந்தியில் இருந்தது. எங்கள் தொகுப்பில் இருந்த ஒருவருக்கு 43 வயதிலேயே இருதய அறுவை சிகிச்சை. என் மகனுக்கு ஒன்றரை வயதிலேயே ஹெர்னியா ஆபரேசன். மற்றொரு வீட்டில் ஒருவர் இறந்து விட்டார். எனவே, இங்கே ஒரு பிள்ளையாரை வைத்து விடுங்கள் என்று ஒருவர் சொன்னார்.

எங்கள் குடியிருப்புச் சங்கத்துக்கு, செயற்குழு உறுப்பினர்கள் 16 பேர். மாதம் ஒருமுறை கூட்டம் நடைபெறும். 50 தொகுப்புகளின் பிரதிநிதிகளாக 66 பேர் சேர்ந்துதான் கூட்டம் நடைபெறும். ஒருமுறை நான் மனு கொடுத்தேன். ‘எங்கள் தொகுப்புக்கு உள்ளே ஒரு பிள்ளையார் கோவில் கட்டப் போகிறோம் என்று சொன்னோம். செயலாளர் முழுமையான நாத்திகர். நீங்கள் பிள்ளையார் கோவில் வைத்தால், அடுத்து ஒருவர் சர்ச் கட்டவேண்டும் என்பார்;மற்றொருவர் தொழுகை நடத்தவேண்டும் என்பார். எனவே, முடியாது’ என்றார்.

சிலர் எனக்கு ஆதரவாக வந்தார்கள். ஆலயம் இல்லாத ஊரில் குடியிருக்க வேண்டாம் என்று நம் முன்னோர்கள் சொல்லி இருக்கின்றார்கள். எங்கள் வளாகத்துக்கு உள்ளே போக்குவரத்துக்கு இடையூறு இல்லாமல் கட்டிக் கொள்கின்றோம் என்று சொல்லிவிட்டு வந்தோம். எங்கள் பிளாக்கில், இரண்டு முஸ்லிம்கள் இருந்தார்கள். அவர்களும் பிள்ளையார் கோவில் கட்டப் பணம் தருவதாகச் சொன்னார்கள். பணிகளைத் தொடங்கினோம். செயலாளர் 50 பேர்களோடு வந்தார். ‘கட்டடம் கட்டுவதற்காகப் போடப்பட்டு இருந்த சாரத்தைப் பிரியுங்கள். இது சங்க விதிமுறைகளுக்கு எதிரானது. எனவே நிறுத்துங்கள்’ என்றார்கள்.

‘நாங்கள் உங்களிடம் காசு கேட்கவில்லை’ என்றோம். அடிதடி தகராறு ஏற்படும் சூழ்நிலை. ‘இது எங்களுடைய வழிபாட்டு உரிமை’ என்று சொல்லி, ஆயுதங்களோடு உட்கார்ந்துகொண்டு, கோவில் பீடத்தைக் கட்டினோம்.

அடுத்த ஆண்டு சங்கத் தேர்தல் வந்தது. அப்போது, நான் ஓராண்டு விடுமுறையில் இருந்தேன். எங்கள் சங்க நிர்வாகிகளின் பொறுப்புக்காலமும் ஒராண்டுதான். எனவே, இம்முறை நானே செயலாளர் பொறுப்புக்கு நிற்பது எனத் தீர்மானித்தேன். ஒரு அணியினர் என்னை அழைத்தார்கள். ‘எடுத்த எடுப்பிலேயே செயலாளர் பொறுப்புக்கு நிற்காதீர்கள். எங்கள் அணியில் சேர்ந்து கொள்ளுங்கள். இணைச்செயலாளர் தருகிறோம்’ என்றார்கள்.

‘இல்லை. நான் செயலாளர் பொறுப்புக்கு நிற்கத்தான் போகிறேன்’ என்று சொன்னேன். 1975 ஆம் ஆண்டு, இந்திரா காந்தி அம்மையார் இருபது அம்சம் திட்டம் ஒன்றை அறிவித்தார். அதுபோல நானும் ஒரு இருபது அம்சத் திட்டம் தயாரித்து, ஒரு துண்டு அறிக்கை அச்சிட்டேன். எல்லா வீடுகளிலும் கொண்டு போய்க் கொடுத்தேன்.

அதில், மழைநீர் சேகரிப்பு என்று போட்டு இருந்தேன். ஒருவர் தொலைபேசியில் அழைத்து, இது என்ன? என்று கேட்டார். விளக்கம் அளித்தேன். சங்க அலுவலகக் கணக்கு வழக்குகளைக் கணினிமயமாக்குவேன் என்று அறிவித்து இருந்தேன்.

குடியிருப்புவாசிகள் அனைவரையும் சந்தித்தேன். அந்தக் குடியிருப்பில் மின்தூக்கி கிடையாது. எல்லா வீடுகளுக்கும் ஏறி இறங்கியதில் கால் வலி வந்தது. முதலில் மும்முனைப் போட்டியாக இருந்தது. எனக்குக் கொஞ்சம் ஆதரவு கூடியது. எனவே, ஒருவர் விலகினார். இரண்டு அணியாக ஆனது.

தேர்தல் நடந்தது. 11 வாக்குகள் கூடுதலாகப் பெற்று வெற்றி பெற்றேன். உடனே, பழைய பொறுப்பாளர்கள், சங்கச் சாவியை எடுத்து என் கையில் கொடுத்துவிட்டுப் போய்விட்டார்கள்.

வீட்டுக்கு வந்தும் நிம்மதியாகத் தூங்க முடியவில்லை. மறுநாள் தலைவரைப் பார்த்தேன். ‘உன்னுடைய திட்டங்களை எல்லாம் செயல்படுத்து. நான் உதவியாக இருக்கிறேன்’ என்றார். எனக்கு அப்போது 30 வயது. செய்ய வேண்டிய பணிகளைப் பட்டியல் இட்டேன். மாதாந்திர பராமரிப்புத் தொகை சரியாக வசூலிக்காமல் இருந்தது. அதை வசூலிக்கும் முயற்சிகளில் இறங்கினேன்.

முதலில் ஒரு வீட்டுக்குச் சென்றோம். அழைப்பு மணியை அழுத்தினோம். கதவைத் திறந்தார்கள். ‘சங்கத்தில் இருந்து வருகிறோம். மாதாந்திரப் பராமரிப்புத் தொகை வேண்டும்’ என்றோம். அவர்கள் ஒன்றுமே சொல்லாமல், படாரென்று கதவைச் சாத்தினார்கள். அடுத்த வீட்டுக்குப் போனோம். உட்கார வைத்து காபி கொடுத்தார்கள். ‘நீங்கள் எட்டு மாதங்களாகப் பணம் தரவில்லை’ என்றோம்.

அதற்கு அவர், ‘நான் சில பிரச்சினைகளைச் சொன்னேன். சங்கம் ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லையே?’ என்று கேட்டார்.

என்ன விவரம்? என்று கேட்டேன். ‘குழாய் சரி இல்லை, சுவிட்ச் சரியாக இல்லை’ என்றார்.

‘இதை நாங்கள் சரி செய்கிறோம்’ என்று சொல்லிவிட்டு வந்து, பிளம்பரரையும் எலக்ட்ரீசியனையும் அனுப்பி சரி செய்தோம். அடுத்த நாளே, அந்த வீட்டு உரிமையாளர் பணத்தைக் கொண்டு வந்து கட்டினார்.

மற்றொருவர், முந்தைய செயலாளரைக் குறை கூறினார். அவருக்காக, இந்தச் செயலாளர் மன்னிப்புக் கேட்கிறேன் என்று சொன்னேன். இப்படியாக, 70,000 ரூபாய் வசூல் செய்தேன். அதற்குப்பிறகும், 32 பேர் பணம் தராமல் இருந்தார்கள்.

சங்கத்துக்கு மாதாந்திரப் பராமரிப்புத் தொகை கொடுப்பது போக, ஒவ்வொரு தொகுப்பிலும், நாங்கள் தனித்தனியாகப் பணம் வாங்கினோம். எதற்காக என்றால், எங்களுடைய தொகுப்பில் லாரிகள் மூலமாகத் தனியாகத் தண்ணீர் வாங்கினோம். மூன்றுஆண்டுகளாக இப்படிச் செய்தோம். அப்போது சங்கத்துக்கு மாத பராமரிப்புத் தொகை ரூ100. எங்களுடைய தொகுப்புக்குத் தனியாக 150. இன்று, 2013 ஆம் ஆண்டிலும்கூட, அந்தக் குடியிருப்பில் 500 ரூபாய்தான் வாங்குகின்றார்கள். தற்போது நான் வசிக்கின்ற குடியிருப்பில், மாதம் ரூ 1800. அதுதவிர, அவ்வப்போது வேறு பல செலவுகளுக்காகவும் கூடுதல் தொகை தர வேண்டி இருக்கின்றது.

அங்கே நாங்கள் வாங்கிக் கொண்டு இருந்த கூடுதல் 150 ரூபாயில், எங்கள் தொகுப்புக்கான, மின் மோட்டார்களைப் பராமரிப்பது, சுத்தம் செய்வது உள்ளிட்ட செலவுகளை மேற்கொண்டோம்.

அடுத்த பிரச்சினை...

ஒரு புதிய குடியிருப்பு என்றால், அங்கே முதல் பிரச்சினையாக வருவது விபச்சாரம். ஏனென்றால், புதிய குடியிருப்புகளில்தாம் பக்கத்து வீட்டில் யார் இருக்கின்றார்கள் என்பதே தெரியாது. எனவே, தரகர்கள், புதிய குடியிருப்புகளாகப் பார்த்து வாடகைக்கு வீடு எடுத்துக் கொள்கின்றார்கள். ஒன்றிரண்டு ஆண்டுகள் அங்கே தொழில் நடக்கும். குடியிருப்புவாசிகளுக்குத் தெரிய வந்து பிரச்சினை செய்தால், உடனே காலி செய்துகொண்டு போய்விடுவார்கள்.

எனது குடியிருப்பில் அப்படி ஒரு வீடு இருக்கின்றது என்று, என்னுடைய நண்பர் ஒருவர் தெரிவித்தார். அந்த வீட்டைக் கவனிக்கத் தொடங்கினோம். கண்டுபிடித்து விட்டோம். பத்து இருபதுபேர் சேர்ந்து சென்று, அவர்களைக் காலி செய்யுங்கள் என்று கூறி வெளியே அனுப்பினோம்.

இவர்களால், குடியிருப்பின் பெயர் கெட்டு விடும். இன்றைக்கு இவர்கள் இந்த வீட்டின் கதவு எண்ணைக் கொடுத்து விடுவார்கள். நாளை வேறு ஒருவர் அங்கே குடி வருகின்றார் என்றால், முன்பு வந்த வாடிக்கையாளர்கள், இப்போதும் வந்து, அதே வீட்டின் கதவைத்தட்ட வாய்ப்பு இருக்கின்றது அல்லவா? எனவே, அதைத் தவிர்க்க வேண்டும்.
 
உள்ளூர்வாசிகளோடு பிரச்சினைகள் வரும். ஒரு இடத்தில் அடுக்குமாடிக் குடியிருப்பு வருகின்றது. அங்கே ஏற்கனவே இருக்கின்ற குடியிருப்புவாசிகள், குடிசைவாசிகள் பிரச்சினை செய்வார்கள். அவர்கள் அதிகாரம் செய்வார்கள். எங்கள் பகுதியில் இருந்துதான், வீட்டு வேலைக்கு ஆட்களை அழைக்க வேண்டும். கார் துடைக்க, பால் வழங்க எல்லாவற்றுக்கும் எங்களைத்தான் அழைக்க வேண்டும் என்பார்கள். தொடக்கத்தில் சில ஆண்டுகள், அவர்களைச் சார்ந்துதான் இருக்க வேண்டும். உடனடியாக மாற்றிவிடக் கூடாது. போகப்போக அந்த நிலைமை மாறிவிடும்.

பாதுகாப்பு

அடுத்தது பாதுகாப்பு. கட்டுமான நிறுவனத்தார், பாதுகாப்புப் பணியாளர்களை அமர்த்தி இருப்பார்கள். குடியிருப்பு சங்கத்தார் அதை மாற்றுவார்கள். அப்போது பிரச்சினை வரும்.

இன்றைக்கும் பாதுகாப்புக் காவலர்களுக்கு, மாத ஊதியமாக 6000 ரூபாய்தான் கொடுக்கின்றார்கள். சென்னை போன்ற பெருநகரங்களில் அது போதுமானது அல்ல.

எங்கள் வளாகத்தின் பாதுகாப்புக்காக ஒரு தனியார் நிறுவனத்தைத் தேர்ந்து எடுக்கும் முயற்சிகளைத் தொடங்கினேன். பாதுகாப்பு வேலைக்கு ஆள் தேவை என்று செய்தித்தாளில் விளம்பரம் கொடுத்தேன். பெரிய குடியிருப்பு என்பதால், 19 பேர் தேவைப்பட்டார்கள்.

ஒருநாள் காலையில், உயரமான ஒருவர் வீட்டுக்கு வந்தார். எனக்கு வாழ்த்துகள் சொன்னார். சால்வை போட்டார். ‘நீங்கள் யார்?’ என்று கேட்டேன். ‘நான்தான் ஏற்கனவே உங்கள் வளாகப் பாதுகாப்பு நிறுவனத்தின் உரிமையாளர்’ என்றார். அவர் அரசுத்துறை அதிகாரி. சீருடையோடு வந்து இருந்தார். நானும் விண்ணப்பம் கொடுப்பதற்காகத்தான் வந்தேன் என்றார்.

‘இனி சீருடையோடு இங்கே வராதீர்கள்’ என்றேன்.

அவரது நிறுவனம்தான், ஏற்கனவே எங்கள் குடியிருப்பில் பாதுகாப்புப் பணிகளை மேற்கொண்டு இருந்தது. அவர்களது பணி சரியாக இல்லை. ஆள் பற்றாக்குறை. எனவே, அவர்களை நான் தேர்வு செய்ய மாட்டேன் என்பது அவருக்குத் தெரியும்.

ஆறு விண்ணப்பங்கள் வந்தன. ஒரு வாடகைக் காரை எடுத்துக் கொண்டு, அந்த நிறுவனங்கள் எங்கெல்லாம் பாதுகாப்புப் பணிகளை மேற்கொள்கின்றார்கள் என்று சோதிப்பதற்காகச் சென்றோம். அந்தந்தக் குடியிருப்புச் சங்கப் பொறுப்பாளர்களைச் சந்தித்து, அந்த நிறுவனங்களின் பணி குறித்து விவரமாகக் கேட்டோம். இத்தகைய தகவல்களை யாரும் எளிதாகத் தருவார்கள். ஒரு குடியிருப்பில், பாதுகாப்பு நிறுவனத்தைத் தேர்ந்து எடுப்பதற்கு முன்பு, இத்தகைய கள ஆய்வு மிகவும் தேவை.

வழக்கமாக ஒரு குத்தகை என்றால், பணத்தை மட்டுமே மையமாக வைத்துத் தேர்ந்து எடுப்பார்கள். ஆனால், பாதுகாப்பு என்று வருகின்றபோது, பணத்தை மட்டுமே பார்க்க முடியாது. ஒரு பாதுகாப்பு நிறுவனத்துக்கு, நல்ல அறிமுகம் தேவை. சில பாதுகாப்பு நிறுவனங்கள், குறைந்த தொகை குறிப்பிட்டு இருப்பார்கள். அவர்களை நியமித்தால், வேலைக்கு ஆட்களே வர மாட்டார்கள். பிறகு நாம் திரும்பவும் விளம்பரம் செய்ய வேண்டும்; கால நேர விரயம் ஆகும்.

பல வகையிலும் சோதித்து, ஒரு நிறுவனத்தைத் தேர்ந்து எடுத்தோம். இந்தப் பணியை நாங்கள் ஒரு குழுவாகத்தான் செய்தோம். எனவே, பிரச்சினை வரவில்லை.

பழைய நிறுவனத்தை, பணியில் இருந்து விலகிக் கொள்ளுமாறு கடிதம் கொடுத்தேன். புதிய நிறுவனப் பணியாளர்களைக் கொண்டு வந்து பணியில் அமர்த்தினேன்.

‘என் வயிற்றில் அடித்து விட்டாய்; உன்னைப் பார்த்துக் கொள்கிறேன்’ என்று கூறிக்கொண்டே சென்றார் அவர். அதைப் பற்றி நான் கவலைப்படவில்லை.

அன்று இரவு, 12 மணிக்கு ஒரு தொலைபேசி அழைப்பு வந்தது. பேசியவர், தன்னிலையில் இல்லை. ‘நாளைக் காலை உன் மகன் பள்ளிக்குச் சென்று வீடு திரும்ப மாட்டான்’ என்றார்.

மொட்டைக் கடுதாசிகள் வந்தால், அதைக் குப்பையில்தான் போட வேண்டும் என்பார் என் தந்தை. எனவே, ‘உன்னால் ஆனதைப் பார்’ என்று சொல்லிவிட்டுப் போனை வைத்து விட்டேன். ஆனால், எனக்குத் தூக்கம் வரவில்லை. மனைவியிடம் சொல்ல முடியாது.

காலையில், சங்கப் பொறுப்பாளர்களிடம் கூறினேன். காவல்துறையிடம் புகார் கொடுக்கலாம் என்றார்கள்.

இந்த இடத்தில் ஒரு தகவல்: நாம் காவல் நிலையத்தை அணுகும்போது, கையில் தக்க ஆவணங்கள் இருந்தால் கவலை இல்லை. அதாவது, ஒரு சங்கம் என்றால், கூட்ட நடவடிக்கைக் குறிப்புப் புத்தகம் (மினிட் புத்தகம்) கண்டிப்பாக இருக்க வேண்டும். அது சட்டஆவணம். நீங்கள் எந்த ஒரு முடிவை எடுத்தாலும், அது கூட்டத்தில் விவாதிக்கப்பட்டு இருக்க வேண்டும். கூட்டத்துக்கு வந்து இருந்தவர்களது கையெழுத்துகளைப் பெற்று இருக்க வேண்டும்.

பாதுகாப்பு நிறுவனத்தை மாற்றுவது குறித்து, எங்கள் சங்கக் கூட்டத்தில் பேசி எடுத்த முடிவை மினிட் புத்தகத்தில் எழுதி, கூட்டத்துக்கு வந்து இருந்தவர்களிடம் கையெழுத்துப் பெற்று வைத்து இருந்தேன். எனவே, அது நான் ஒருவனாக மட்டும் எடுத்த முடிவு அல்ல.

காவல் நிலையத்தில் புகார் கொடுப்பது தொடர்பாகவும், மினிட் எழுதி எடுத்துக்கொண்டு போனோம். காவல்நிலையம் சென்றோம். புகார் கொடுத்தோம். ஆய்வாளர் சிரித்துக்கொண்டே, ‘மிரட்டல் வந்து விட்டதா? நீங்கள் பெரிய ஆள் ஆகி விட்டீர்கள்’ என்றார்.

‘சார் நான் தவித்துக் கொண்டு இருக்கின்றேன். நீங்கள் வேடிக்கையாக நினைக்கின்றீர்களே?’ என்று கேட்டேட்ன.

‘என்றைக்குமே குரைக்கின்ற நாய் கடிக்காது. நீங்கள் கவலை இல்லாமல் இருங்கள். நான் பார்த்துக் கொள்கின்றேன். உங்கள் வீட்டுக்கு வருகின்ற தொலைபேசி எண்ணைக் கண்டுபிடிக்கின்ற கருவியைப் பொருத்த ஏற்பாடு செய்கிறேன். இப்படி ஒரு வசதி இருக்கின்றது என்பதை, உங்கள் குடியிருப்பில் எல்லோரிடமும் சொல்லி வையுங்கள்’ என்றார். அதற்குப் பிறகு மிரட்டல் வரவில்லை.

(தொடரும்...)

- அருணகிரி

Pin It