சென்னையில் எழுச்சியுடன் நடைபெற்ற அப்சல் குரு தூக்கு தண்டனை எதிர்ப்பு கண்டன ஆர்ப்பாட்டத்தில் பெரியாரிய அமைப்புகள், தமிழ்த் தேசிய அமைப்புகள், தலித் அமைப்புகள், மனித உரிமை செயல்பாட்டாளர்கள், பத்திரிக்கையாளர்கள், இசுலாமிய அமைப்புகள் கலந்து கொண்டன.

இந்த ஒன்றினைவுக்கு ஒரு வேட்டு வைக்கும் ஒரு கட்டுரையை அண்மையில் பார்த்தேன்.

டி.என்.டி.ஜெ அதாங்க தமிழ்நாடு தவ்ஹீது ஜமாத்து இணைய தளத்தில் வந்த ஒரு கட்டுரையை சரியா படிச்சாங்களோ இல்லையோ, தெரியல.. அடடா மரணதண்டனைக்கு எதிராக‌ கருத்து சொல்றாங்களேனு நம்ம‌ மக்கள் புல்லரிச்சுப் போய் கட்டுரையை சமூஊக வலைத் தளங்களில் பகிர்ந்துக்கிட்டாங்க..

பரவாயில்ல.. அல்லா இப்பவாச்சும் இவங்களுக்கு நல்ல புத்திய கொடுத்துட்டான்னு நானும் படிக்க ஆரம்பிச்சேன்.

'அப்சல் குரு தூக்கு- உணர்த்தும் உண்மைகள்' என்ற தலைப்பில் அந்த கட்டுரை அருமையாகத் தொடங்குகிறது அந்தக் கட்டுரை. http://www.tntj.net/130426.html

"2001ம் ஆண்டு டிசம்பர் 13ஆம்தேதி பாராளுமன்ற வளாகத்தில் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது. இந்த துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்ட 5 பேரையும் பாதுகாப்புப் படையினர் பதில் தாக்குதல் நடத்தி, சம்பவ இடத்திலேயே சுட்டுக் கொன்று விட்டனர். ஒரு பயங்கரவாதியைக் கூட அவர்கள் தப்பிக்க விடவில்லை. பாதுகாப்பு படையினரின் இந்த நடவடிக்கையை நாடே வரவேற்றது. தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடியது. இந்நிலையில் பாராளுமன்ற தாக்குதலுக்கு சதி செய்ததாக சொல்லி, காஷ்மீரைச் சேர்ந்த அப்சல் குருவை மத்திய அரசு ‘திடுதிப்’ என்று தூக்கில் போட்டுள்ளது. இது காஷ்மீரில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தி, போலீசாரின் துப்பாக்கிச் சூட்டில் மட்டும் 50க்கும் அதிகமான பொது மக்கள் படுகாயம் அடைந்துள்ளனர்.

தொலைபேசி, இன்டர்நெட் உள்ளிட்ட தொலைத்தொடர்பு சேவைகள் அனைத்தும் காஷ்மீரில் முடக்கப்பட்டுள்ளன. 14 மாவட்டங்களில் ஊரடங்கு உத்தரவு அமுல்படுத்தப்பட்டுள்ளது. இந்த எதிர்ப்புக்கு காரணம் – அப்சல் குரு சட்டத்தின் அடிப்படையில் தூக்கில் போடப்படவில்லை. மாறாக அரசியலுக்காக தூக்கில் போடப்பட்டார்.”

இப்படி நல்லாத்தான் போயிட்டு இருந்த அந்தக் கட்டுரையில் தமிழ், ஆங்கில, இன்னும் எந்த ஊடகங்களிலும் வராத ஒரு செய்தி இருந்ததை கண்டு ஆச்சரியம் அடைந்தேன். காஷ்மீரில் எந்த ஊடகங்களும் செய்தி சேகரிக்கவோ அல்லது செய்திகளை அச்சிட்டு வெளியிடவோ செய்ய முடியாமல், உலகிற்கும் காஷ்மீருக்கும் இடையில் எவ்வித செய்தி தொடர்பும் இல்லாமல் அம்மக்களை ஒரு இருண்ட கண்டத்தில், ராணுவத்தின் ஆக்கிரமிப்புப் பிடியில் வைத்திருக்கும் வேளையில் நம்ம தமிழ்நாடு தவ்ஹீத்ஜமாத் இணையம் மட்டும் ஓர் அதிர்ச்சிகரமான செய்தியை வெளியிட்டு உள்ளது.

அந்த செய்தி "இது காஷ்மீரில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தி, போலீசாரின் துப்பாக்கிச் சூட்டில் மட்டும் 50க்கும் அதிகமான பொது மக்கள் படுகாயம் அடைந்துள்ளனர்."

இது எப்போழுது நடந்தது; எங்கு நடந்தது என்று TNTJ விளக்கமாக வாசகர்களுக்கு அறியத் தர வேண்டும். ஏன் என்றால் நீங்கள் உண்மையைத் தவிர ஆதாரம் இன்றி(!)எதையும் பேசமாட்டீங்கனு இன்னும் நம்பிக்கிட்டு இருக்கிறவர்களுக்கு நீங்க உண்மைய விளக்க வேண்டும் பாருங்க அதுக்குதான்..

இப்படி உண்மை பேசிக்கிட்டே வந்த அந்த கட்டுரையில் அல்லா நல்ல புத்திய கொடுத்துட்டானேனு இந்தியாவில் மரண தண்டனைகள் அநீதியாக கொடுக்கப்படுகிறதுனு நல்லா புரிஞ்சுக்கிட்டாங்கனு நானும் நம்பி இருந்தவேலையில் அடிச்சாங்க பாருங்க ஒரு யூ டர்னு…

"இங்கு ஒரு விஷயத்தை நாம் கூடுதலாக பதிவு செய்ய வேண்டியுள்ளது. அப்சல் குரு தூக்கிலிடப்பட்டதை நாம் எதிர்த்தவுடன் ஒட்டுமொத்தமாக மரண தண்டனையே கூடாது என்று நாம் எதிர்ப்பதாக யாரும் விளங்கிக் கொள்ளக்கூடாது. மரண தண்டனையே கூடாது என்பது நமது வாதம் அல்ல. அது சட்டப்படி முறையாக விசாரித்து வழங்கப்பட வேண்டும் என்பதே நமது வாதம்.” இந்த சட்டப்படி வெங்காயப்படி எப்படி தூக்கு தண்டனைகள் வழங்கப்படுகிறது என்று இவர்களுக்கு கொஞ்சம் புளிபோட்டு ஏற்கனவே “மரணதண்டனையும் இசுலாமிய இயக்கங்களின் பார்வையும்” என்ற தலைப்பில் கீற்றில் ஏற்கனவே ஒருகட்டுரை எழுதப்பட்டுள்ளது(http://www.keetru.com/index.php?option=com_content&view=article&id=20618) இதில் அப்சல் குருவிற்கு அநீதியான முறையில் எப்படி மரண தண்டனை வழங்கப்பட்டுள்ளது என்று நாம் விளக்கியுள்ளோம். அப்ப அந்த கட்டுரைக்கு எதிராக குதி குதி என்று குதித்தவர்கள் இன்று அப்சல் குருவின் மீதான மரண தண்டனைக்கு மட்டும் வேக்கியானம், வெங்காயம் பேசுவது 'உனக்கு வந்தால் ரத்தம்; எனக்கு வந்தால் தக்காளி சட்டினி' என்று பேசுவதுபோல் தோனுகிறது. சரி பரவாயில்லை என்று விட்டால் அப்புறம் வச்சாங்க பாருங்க ஆப்பு…

“அப்சல் குருவுக்கு முன்னால் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்ட எவரையும் மத்திய அரசு தூக்கில் போடவில்லை. உதாரணமாக முன்னாள் பிரதமர் இராஜீவ் காந்தியை கொன்று குவித்த பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகியோர் இன்றுவரை தூக்கிலிடப் படவில்லை. காலிஸ்தான் பயங்கரவாதியான தேவேந்தர் சிங் புல்லார் தூக்கில் இடப்படவில்லை. இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்தியைக் கொன்றது இந்தியாவின் பயங்கர சம்பவம் இல்லையா? பஞ்சாபின் முதல் மந்திரியை ரஜோனா என்பவர் கொன்றது பயங்கர சம்பவம் இல்லையா? தூக்குத் தண்டனை விதிக்கப்பட்ட இவர்களை எல்லாம் தூக்கில் போடாமல் இவர்களுக்குப் பின்னால் குற்றம் சாட்டப்பட்டு மரண தண்டனை வழங்கப்பட்ட அப்சல் குருவை மட்டும் தூக்கில் போட்டுள்ளார்கள்"

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் சேர்ந்த புலனாய்வுப் புலிகள் மல்லிகை இல்லத்தில் சி.பி.ஜ இயக்குநர் கார்த்திகேயனோடு வேலை பார்த்தார்களோ? ராஜீவ் காந்தியை முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகியோர்தான் கொன்று குவித்தார்களாம்... என்ன ஒரு கண்டுபிடிப்பு! அவர்களை இன்றுவரை தூக்கில் இடவில்லை என்ற கவலையையும் சேர்த்து, பக்கத்து இலைக்கு பாயாசம் கேட்கிறார்கள்.`

ராஜிவ் கொலை வழக்கைப் பொருத்தவரை சம்பவம் நிகழ்ந்த இடத்திலேயே வெடிகுண்டு பெண்ணாக வர்ணிக்கப்பட்ட தாணு இறந்துவிட்டார்.

(புரட்சியாளர் பழனிபாபா 'ராஜீவ் மடியில் கட்டி இருந்த குண்டுதான் வெடித்து அங்கு இருந்த பலரை கொன்று போட்டது. ஆகவே கொலைகாரர் ராஜீவ்தான்' என்று கூறுவார்)

இந்த வழக்கில் நேரடியாக தொடர்புபடுத்தப்பட்ட சிவராசன், சுபா போன்றோர் பெங்களூருவில் தற்கொலை செய்துகொண்டார்கள். இந்த வழக்கில் 26 பேர் கைது செய்யப்பட்டு மல்லிகை என்ற சி.பி.ஜ யின் சிறப்பு புலனாய்வுப் பிரிவு சித்திரவதைக் கூடத்தில் வைத்து 26 தமிழ்ப் பிள்ளைகள் கொடுரமாக சித்திரவதை செய்யப்பட்டு, தடா வழக்கில் பூந்தமல்லி தனிச் சிறையில் அடைக்கப்பட்டார்கள். அங்கேயே தனி நீதிமன்றம் ஏற்படுத்தப்பட்டு ரகசிய விசாரணை செய்யப்பட்டு உலக வரலாற்றிலேயே ஒரு கசாப்புக் கடை தீர்ப்பாக 26 பேருக்கும் தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது.

அய்யா தவ்ஹீத்வாதிகளே ஒருவர் செய்ததாக சொல்லப்படும் குற்றங்கள் முழுமையாக நிரூபிக்கப்படவேண்டும். அப்படி ராஜீவ் வழக்கில் சந்தேகத்திற்கு இடமில்லாமல் நிரூபிக்கப்பட்டுள்ளதா என்றால் இல்லை என்பதுதான் உண்மை. இந்த வழக்கு அரசியல் காரணங்களுக்காக பலரை பலி கொடுத்து, பல அயோக்கியர்களை இந்த வழக்கில் இருந்து தப்பவைத்து நிரபராதிகளுக்கு தண்டனை கொடுக்கப்பட்டுள்ளது என்பது உங்களுக்குத் தெரியாதா..? இல்லை தெரிந்தும் நீங்கள் யாருக்காக இப்படி பேசுகிறீர்கள். நான் சொன்னால் கூட அதில் உங்களுக்கு சந்தேகம் இருக்கலாம். இந்த வழக்கில் புலனாய்வு அதிகாரியாக இருந்து ஓய்வு பெற்ற ரகோத்மன் அவர்கள் “Conspiracy to kill Rajiv Gandhi – From CBI files” என்ற நூலில் ராஜீவ் காந்தி கொல்லப்பட்ட வழக்கில் மிக முக்கியமான வீடியோ கேசட் சாட்சியம் ஒன்று இன்று வரை பதுக்கப்பட்டதாகவும், இதைச் செய்தவர் அப்போது ஐ.பி. தலைவராகவும் இப்போது மேற்கு வங்க ஆளுனராகவும் இருக்கிற எம்.கே.நாராயணன் என்றும், அதை வழக்கை விசாரித்த கார்த்திகேயன் கண்டுகொள்ளாமல் விட்டு விட்டதாகவும் குற்றம்சாட்டியுள்ளார் தமிழகத்தைச் சேர்ந்த ரகோத்தமன் ஏற்கெனவே “ராஜிவ் கொலை வழக்கு- மர்மம் விலகும் நேரம்” என்ற ஒரு புத்தகத்தை வெளியிட்டு இருக்கிறார். அதில் அவர் எழுப்பியிருந்த கேள்விகளுக்கே இன்று வரை பதில் கிடைக்கவில்லை. அப்படி ஒரு கேசட் கிடைத்தால் மரகதம் சந்திரசேகருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் பிரச்சனை வரும் என்று கருதி முழுப் பூசணியை மறைத்துவிட்டது ஐ.பி. என்று சாடியுள்ளார். அத்துடன் “இறந்த தலைவரைவிட இருக்கும் பிரமுகர்கள் முக்கியமாகி விடுகிறார்கள்” என்றும் ரகோத்தமன் வருத்தம் தெரிவித்திருக்கிறார்.

இந்த வழக்கில் புலன்விசாரனை அதிகாரியாக இருந்த ரகோத்த‌மன் இந்த வழக்கில் கண்டுபிடிக்கமுடியாத ஒரு விடயம் உண்டு என்றால் வெடிகுண்டு பெண் தானு தன் உடலில் கட்டியிருந்தாக சொல்லப்படும் வெடிகுண்டு ஜாக்கட்டை யார் தயாரித்தது என்று இன்று வரை புரியாத மர்மமாக இருக்கிறது என்று குறிப்பிடுகிறார். இதில் வேடிக்கை என்னவென்றால் இந்த வெடிகுண்டை வெடிக்கப் பயன்படுத்திய 9 வோல்ட் கொண்ட இரண்டு பேட்டரிகளை வாங்கித் தந்தாகத்தான் பேரறிவாளன் மீது தூக்கு தண்டனை விதிக்கப்பட்டிருக்கிறது. பொம்மைக்கு பயன்படுத்தப்படும் இரண்டு பேட்டரிகளை சின்னப் பையன் கூட பெட்டிக்கடைகளில் வாங்க முடியும். அப்படி இருக்கும் போது இரண்டு பேட்டரிகளை வாங்கித் தந்தாகத்தான் குற்றச்சாட்டு இங்கே. பேரறிவாளன், முருகன் சாந்தன் போன்றோர்கள் இந்த வழக்கில் நேரடியான குற்றவாளிகள் அல்ல என்பதையும் நினைவில் கொள்ள வேண்டும். தவ்ஹீத் ஜமாத் இணையத்தளம் ஏதோ இவர்கள் மூன்று பேரும்தான் நேரடியாக போய் ராஜீவ் காந்தியைக் கொன்றது போல் ஒரு கருத்து பயங்கரவாதத்தை விதைப்பது என்பது மிக அயோக்கியத்தனமானது.

இந்த வழக்கில் இரண்டு விசாரணை கமிசன்களின் அறிக்கைகள், ஒரு புலனாய்வு அறிக்கை ஆகியவை இன்னும் முழுமை பெறாமல் உள்ளது. கொலை சதித் திட்டம் பற்றி விசாரிக்க அமைக்கப்பட்ட ஜெயின் கமிசனில் நேரடியாக குற்றம் சாட்டப்பட்ட சுப்ரமணியன், சந்திரா…. சாமிகளை இந்த ஆட்சியாளர்களால் ஒரு மயிரையும் புடுங்க முடியவில்லை. உலக வியாக்யானம் பேசும் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்வாதிகளே இந்த செய்தியாவது உங்களுக்குத் தெரியுமா..? இல்லை வசதியாக மறந்துவிட்டீர்களா…? பாதுகாப்பு குறைபாடுகளைப் பற்றி விசாரிக்க அமைக்கப்பட்ட வர்மா ஆணையத்தின் விசாரணைகளும், பல்நோக்கு விசாரணைக் குழுவின் அறிக்கையும் இன்றுவரை முழுமையாக சமர்பிக்கப்படவிலை. இந்த கொலை வழக்கில் இப்படியான பல சந்தேகங்கள் இருக்க யாரை திருப்திப்படுத்த எம் சகோதரர்களை தூக்கில் இடச் சொல்கிறீர்கள்?

தவ்ஹீத் ஜமாத்தின் கோண‌ல் புத்தி..

எப்பொழுதெல்லாம் இங்கே ஒரு பொது பிரச்சனைக்காக மக்களும் சனநாயக சக்திகளும் ஒன்றிணைகிறார்களோ அப்பொழுது எல்லாம் அதை கலைப்பதற்கான வேலைகளையும் மார்க்கத்தின் பெயரால் செய்ய ஆரம்பித்து விடுவார்கள்.

இந்தியாவில் மரண தண்டனை சட்டங்கள் எப்படி பாரபட்சமானது என்பதற்கு தற்போது நடக்கும் நிகழ்வுகளே சான்றாகும். இந்தியாவில் இந்த சட்டங்களால் பெரிதும் பாதிக்கப்படுவது இஸ்லாமியர்கள், தலித்கள், ஜனநாயகப் போராளிகள், ஏழைகள். நல்ல வழக்கறிஞரை வைத்து வாதிட முடியாதவர்களே இத்தகைய சட்டப்பூர்வ கொலைகளுக்கும், நீண்ட சிறைவாசத்திற்கும் ஆட்படுகிறார்கள்.

சமீபத்தில் மத்திய அரசு ஓர் உண்மையை தன்னை அறியாமல் வெளிப்படுத்தி உள்ளது. அது இந்தியா முழுவதும் விசாரணை சிறைவாசிகளாக ஏராளமானோர் சிறையில் இருந்து வருகிறார்கள். இவர்களின் குற்றம் நிரூபிக்கப்படால் எவ்வளவு தண்டனை அனுபவிக்க வேண்டுமோ அதைவிட பல மடங்கு காலம் சிறைபட்டுள்ளார்கள். அவர்களை அந்தந்த மாநில நீதிமன்றங்கள், அரசுகள் விடுதலை செய்யவேண்டும் என்பதே..

இந்தியாவில் ஏற்றத்தாழ்வான சட்ட நடைமுறைகளே பின்பற்றப்படுகின்றன‌. “சட்டத்திற்கு முன் அனைவரும் சமம்” என்ற சட்ட சொல்லே கேலிக்கூத்தாகி விட்ட நிலையில் ஒடுக்கப்படுபவர்களும், ஏழைகளும், சுரண்டலுக்கு எதிராக போராடுபவர்களும் இத்தகைய சட்ட வன்முறைகளுக்கு ஆட்படுகிறார்கள்.

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் இதுவரை அரசின் சட்ட வன்முறைகளுக்கு எதிராக எத்தனை போராட்டங்களை நடத்தி உள்ளது? தண்டனையை குறை சொல்லக்கூடாது. அது சட்டப்படி 'முறையாக' விசாரித்து வழங்கப்பட வேண்டும் என்று கூறுகிறீர்கள்.. அந்த முறையான விசாரணை என்பதின் பொருள் என்ன என்பதுதான் எமது கேள்வி. எமக்குத் தெரிந்தது முறையாக விசாரிப்பது என்பது காவல்துறையின் மூன்றாம்தர விசாரணைகளே. ஆம் இந்தியாவில் 'தடா', 'பொடா' போன்ற ஆள்தூக்கி கருப்பு சட்டங்களினால் 'முறையான' விசாரணையால் தங்கள் வாழ்கையையே இழந்தவர்களின் நிலை தெரியுமா உங்களுக்கு?

தமிழக சிறைகளில் 15 ஆண்டுகளுக்கும் மேல் சிறையில் வாடும் இசுலாமிய சிறைவாசிகளுக்காக நீங்கள் என்றாவது வீதிக்கு வந்ததுண்டா? அப்சல் குருவிற்காக நீங்கள் பேசும்போது இந்தக் கேள்வியையும் சேர்த்தே எமக்கு கேட்கத் தோன்றுகிறது.

இந்த சிறைவாசிகள் பெரும்பான்மையோர் பொய் வழக்குகளில் வைக்கப்பட்டவர்கள்தான். உங்கள் பாணியில் சொல்லப்போனால் 'முறையான விசாரணை' செய்து தண்டனை வழங்கப்பட்டவர்கள்தான். அரசு பொதுமன்னிப்பில் மற்ற சிறைவாசிகளை விடுதலை செய்யும் போது, மத வழக்குகள் என்று காரணம் காட்டி தமிழக சிறைகளில் வாடும் இசுலாமிய சிறைவாசிகளை மட்டும் விடுதலை செய்யாமல் இருக்கிறது. முஸ்லிம்களுக்கு இந்த அநீதி இழைக்கப்படும்போது நீங்கள் எங்கே போய் இருந்தீர்கள்?

ஒரு சமுகத்தை பொதுசமுகத்திடம் இருந்து தனிமைப்படுத்தும் விதமாக பேசியும், எழுதியும் வருவதைத் தவிர நீங்கள் சாதித்தது என்ன? ஏதோ நீங்கள் பேசுவதுதான் உண்மையான மார்க்கம் என்ற அடிப்படையில் எதிர்வினையாற்றுவதும், மார்க்க அத்தாரிடிகளாக உங்களை காட்டிக் கொள்வதும் தவிர நீங்கள் சாதித்தது என்ன?

முருகன், சாந்தன், பேரறிவாளனை இன்னும் தூக்கில் போடவில்லை என்ற உங்களின் கவலைக்கும், அப்சல்குரு தூக்கிலிட்டதும் கொண்டாடிய காங்கிரசு, சங் பரிவார் கும்பலின் கொண்டாட்டங்களுக்கும் வித்தியாசமில்லை. எம் சகோதரர்களுக்கு இடையில் பிரிவினையை ஏற்படுத்தும் போக்கை நிறுத்திக் கொள்ளுங்கள். இல்லை என்றால் வரலாற்றில் இருந்து தூக்கி எறியப்படுவீர்கள்.

அன்பு சகோதரர்களே!

அப்சல் குருவின் தூக்கை மட்டுமல்ல இந்தியத்தின் வன்முறைச் சட்டமான தூக்கு தண்டனையை எதிர்த்திடுவோம்.

மக்களிடையே மார்க்கத்தின் பெயரால் பிரிவினையை ஏற்படுத்தும் சக்திகளை இனம் காண்போம்! அவர்களை புறக்கனிப்போம்!!

ராஜீவ் கொலை வழக்கில் அநீதியான முறையில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட முருகன், சாந்தன், பேரறிவாளனின் தூக்கு தண்டனைக்கு எதிராகப் போராடுவோம்.

அநீதிகளுக்கு எதிராக சனநாயக சக்திகளுடன் இணைந்து களம் காண்போம்.

பின்குறிப்பு: தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் இணைய தளத்தில் வந்த கட்டுரைக்கு மறுப்பாக நாம் எழுதும் வேளையில் அவ் அமைப்பின் அதிகாரப்பூர்வ ஏடான உணர்வில் அக்கட்டுரை பிப்.15 .21 பிரசுரிக்கப்பட்டுள்ளது. இணையத்தில் மூவர் தூக்கிற்கு எதிராக எழுதிய சில வாசகங்கள் (ராஜீவ்காந்தியை கொன்று குவித்த என்ற வாசகங்கள்) உணர்வு கட்டுரையில் இடம் பெறவில்லை.

இதுதான் இவர்களின் நேர்மைக்கு சான்று

- உமர்கயான்.சே, ஒருங்கிணைப்பாளர், இன அழிப்புக்கு எதிரான இசுலாமிய இளைஞர் இயக்கம், தமிழ்நாடு

Pin It