கோத்ரா ரயில் எரிப்பு நடைபெற்ற அன்று இரவு இரண்டு கூட்டங்கள் நடத்தப்பட்டன. அகமதாபாத்தில் ஒன்று. பரோடாவில் ஒன்று. ஏறத்தாழ 65 முதல் 70 முக்கிய நபர்கள் பங்கேற்ற அந்தக் கூட்டத்தில், நாங்கள் எங்கள் திட்டங்களை வகுத்தோம். எவ்வாறு ஆயுதங்களை அளிப்பது? காவல் துறை கைது செய்தால் என்ன செய்ய வேண்டும்? இந்துக்களுக்கு அடிபட்டால், அவர்களை எப்படி மருத்துவமனைகளுக்கு எடுத்துச் செல்ல வேண்டும்? எப்படியெல்லாம் உதவ வேண்டும்? எல்லாம் திட்டமிட்டோம். ஒரு வழக்குரைஞர் குழுவை அமைத்தோம். மூன்றடி நீள இரும்புத் தடிகளை தயாரித்தோம். இரும்புக் கம்பிகள். பஜ்ரங்தளை சேர்ந்தவர்களாக இருந்தால் திரிசூலங்கள். ஆயுதங்களை சேகரிப்பதற்கும் அதை விநியோகிப்பதற்கும் திட்டம் வகுத்தோம். ஆயுதங்களை அளித்த பிறகு இந்துக்கள் பெரும் உற்சாகம் அடைந்தனர். இதுவரை எங்கள் நடவடிக்கைகளில் நேரடியாகப் பங்கு பெறாதவர்களையும் சந்தித்துப் பேசினோம். காவல் துறை மற்றும் வழக்குரைஞர்கள் கொண்ட குழுவை அமைத்திருப்பதை அவர்களிடம் சொன்னோம். அதனால் அவர்கள் கைது செய்யப்பட்டாலும், சிறைக்குச் சென்றாலும் அவர்களை நாங்கள் விடுவிப்போம் என்று உறுதி அளித்தோம். இது நன்றாக வேலை செய்தது.

Gujrat victims
-எம்.எஸ். பல்கலைக்கழகத்தின் தலைமை கணக்காயர் (ஆடிட்டர்) திமாந்த் பட்

அண்மையில் "தெகல்கா' ஆங்கில வார இதழ் துணிவுடன் புலனாய்வு செய்து, கோத்ராவிற்குப் பின்னான குஜராத் கலவரங்களில் நேரடியாக ஈடுபட்டவர்களிடம் பெற்று வெளியிட்டுள்ள வாக்குமூலங்கள்-இத்தனை ஆண்டுகளாக மனித உரிமையாளர்கள் உரத்த குரலில் கூறி வந்த பல அதிர்ச்சிகரமான உண்மைகளுக்கு சான்றுரைக்கின்றன. திமாந்த் பட் போன்று கல்வியிலும் சமூக நிலையிலும் உயர் நிலையில் இருப்பவர்கள் உட்படப் பலர் இந்துத்துவ வெறியுடன்-கலவரத்தின் மூளையாகவும் முன்னணியாகவும் செயல்பட்டுள்ளனர். அவர்கள் சொற்களாலேயே தாங்கள் செய்ததை சற்றும் குற்ற உணர்ச்சியோ, கூச்ச நாச்சமோ, அச்சமோ இன்றி, இன்னும் சொல்லப் போனால் மிகுந்த பெருமிதத்துடன் கூறியுள்ளனர்.

"முஸ்லிம்களை கொன்ற பிறகு நான் வீட்டிற்குச் சென்று, உள்துறை அமைச்சரை அழைத்து அனைத்தையும் கூறினேன். அந்த நிமிடம் நான் என்னை மகாராணா பிரதாப் போல் உணர்ந்தேன். பெருமிதத்துடன் உறங்கச் சென்றேன்'' என்கிறார் பஜ்ரங்தள் தலைவர் பாபு பஜ்ரங்கி. எத்தனை நேர்த்தியாகத் திட்டமிட்டு, எத்தனை கொடூரமாக இந்த கலவரங்கள் நடத்தப்பட்டுள்ளன என்பதற்கு இந்த வாக்குமூலங்களே சான்று பகர்கின்றன.

கோத்ரா ரயில் எரிப்பு நிகழ்வும், அதில் எரிந்து போனவர்களின் உடல்களும் தொலைக்காட்சிகளில் தொடர்ந்து காட்டப்பட்டுள்ளன. அது இந்துக்களிடையே வெறியூட்டப் பயன்படுத்தப்பட்டுள்ளது. வெறியூட்டப்பட்ட இந்துக்களுக்கு விதம் விதமான ஆயுதங்கள் விநியோகிக்கப்பட்டன. துப்பாக்கிகள், எறி குண்டுகள், வாள், கத்தி, இரும்பு கம்பிகள், லிட்டர் லிட்டராக பெட்ரோல், மண்ணெண்ணெய், தடிகள், திரிசூலங்கள் எல்லாம் அளிக்கப்பட்டன. கோத்ரா எம்.எல்.ஏ. ஹரேஷ் பட்டின் வாணம் தயாரிக்கும் தொழிற்சாலையில் விதவிதமான குண்டுகள் தயாரித்து விநியோகிக்கப்பட்டன.

"ஆயுதங்களை ஏற்றிச் செல்லும்போது காவல் துறையினர் வழி மறித்தால், "ஜெய் சிறீராம்' என்று சொல்வோம். காவல் துறையினரும் இந்துக்கள் தானே! உடனே எங்களுக்கு வழி விட்டுவிடுவார்கள்''-இது வி.எச்.பி.யை சேர்ந்த தவால் ஜெயந்தி படேலின் வாக்குமூலம். கையில் ஆயுதங்கள், வெறியூட்டப்பட்ட மனநிலை இவற்றோடு, முஸ்லிம்கள் வாழும் பகுதிகளுக்குள் நுழைந்து கொலை வெறியாட்டம் நடத்தியுள்ளனர். தாக்குதலுக்கு உள்ளாகும் முஸ்லிம்களை காக்க வேண்டிய காவல் துறையினரோ, தாக்க வந்தவர்களுக்குப் பாதுகாவலாக நின்றிருந்தனர். நரோதா பாட்டியா என்றொரு முஸ்லிம் குடியிருப்பு. அதனுள் நுழைந்த கொலைவெறிக் கூட்டம் வீடு வீடாக புகுந்து, ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என்ற பாகுபாடின்றி அனைவரையும் வெட்டியும் எரித்தும் கொன்றிருக்கிறது. தப்பி ஓடியவர்களை திட்டமிட்டு ஒரே திசையில் துரத்தி, அவர்களை ஒரு கிணற்றிற்குள் தஞ்சம் புக வைத்துப் பின்னர் அந்த கிணறையே ஒட்டுமொத்தமாக எரித்திருக்கின்றனர்.

"நாங்கள் பாட்டியாவை முற்றிலும் அழித்துவிட்டு வந்த பிறகு, இரவு காவல் துறையினர் எங்களை வந்து அழைத்தனர். ஒரு சாக்கடையில் சிலர் தப்பிச் சென்று பதுங்கியிருப்பதை காட்டினர். அந்த சாக்கடைக்குள் 7 அல்லது 8 பேர் இருந்திருப்பார்கள். அவர்களைப் பிடிக்க உள்ளே சென்றால் பிரச்சினை என்று நாங்கள் அந்த சாக்கடையை அழுத்தமாக மூடினோம். அதன் மேல் கனமான பொருட்களை வைத்து அதைத் திறக்க முடியாதவாறு செய்தோம். காலையில் காவலர்கள் அந்த சாக்கடையிலிருந்து பிணங்களை எடுத்தார்கள்.'' தாக்குதல் முடிந்த பிறகு காவல் துறையினர் செய்த உடனடி வேலை, கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கையை குறைக்கும் வழி வகையை செய்வது.

கொல்லப்பட்டவர்களின் உடல்கள் லாரிகளிலும், காவல் துறையின் ஜீப்களிலும் ஏற்றப்பட்டு, நகரெங்கும் பல இடங்களில் மொத்தமாக புதைக்கப்பட்டன. இப்படுகொலையை முன்னின்று நடத்திய பஜ்ரங்தள் தலைவர் பாபு பஜ்ரங்கியின் கூற்றுப்படி, குறைந்தபட்சம் 200 பேர் அன்று கொல்லப்பட்டுள்ளனர். ஆனால், காவல் துறை காட்டிய கணக்கு 105 மட்டுமே. சிதைக்கப்பட்ட, கொடூரமாக வெட்டப்பட்ட, குத்துப்பட்ட, பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கப்பட்ட உடல்கள் வலுவான ஆதாரங்களாகிவிடும் என்பதால், அவை உடலாய்விற்கு உட்படுத்தப்படவில்லை. ஏறத்தாழ 41 உடல்கள் அவ்வாறு உடலாய்விலிருந்து தவிர்க்கப்பட்டன. இதற்கு எந்த விளக்கமும் அளிக்கப்படவில்லை. 58 உடல்கள் மட்டுமே உடலாய்விற்கு உட்படுத்தப்பட்டன.

மக்கள் ஒட்டுமொத்தமாக எரிக்கப்பட்ட அந்த கிணறு, இந்தப் படுகொலையின் மிக முக்கிய ஆதாரமாக இருந்திருக்கக் கூடியது. ஆனால் இந்த கிணறு,ஆய்விற்கு உட்படுத்தப்படவேயில்லை. பா.ஜ.க. எம்.எல்.ஏ. மாயாபென் கொட்நானிதான் கொலை வெறிக்கும்பலை வழிநடத்தியதாக, நரோதா படுகொலையில் தப்பித்தவர்கள் தெரிவித்துள்ளனர். ஆனால், அவரது பெயர் வழக்கில் சேர்க்கப்படவே இல்லை. வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் மிக நீண்ட நாட்களுக்குப் பிறகே கைது செய்யப்பட்டனர். அதன் பிறகும் அவர்களிடமிருந்து எவ்வித ஒப்புதல் வாக்குமூலமும் பெறப்படவில்லை.

இம்மாதிரியான தாக்குதலில் கொல்லப்பட்டவர்கள் சாதாரண மக்கள் மட்டுமல்ல. காங்கிரஸ் முன்னாள் எம்.பி. ஜாப்ரியையும் அவர்கள் விட்டு வைக்கவில்லை. குல்பர்காவில் ஜாப்ரி, முஸ்லிம்களிடையே மிகுந்த செல்வாக்கு மிகுந்தவராகத் திகழ்ந்தார். அவர்களுக்குப் பெரும் பாதுகாப்பாகவும் அவர் இருந்தார். அதனால் அவரை நீண்ட நாட்களாக குறி வைத்திருந்தவர்கள், இந்த சந்தர்ப்பத்தை பயன் படுத்திக் கொண்டனர். காவல் துறை கண்காணிப்பாளர் எர்தாவின் பாதுகாப்போடு குல்பர்கா சொசைட்டிக்குள் புகுந்தனர். "உங்களுக்கு 2 அல்லது 3 மணி நேரம்தான் அவகாசம். அதற்குள் என்ன செய்ய வேண்டுமோ அத்தனையும் செய்து முடியுங்கள்'' என்று உத்தரவிட்டார் எர்தா.

வேகமாக உள்ளே நுழைந்த அந்த வெறிக் கும்பல், அங்கிருந்த அத்தனை பேரையும் எரித்துக் கொன்றது. இதற்கிடையே எர்தா சில முஸ்லிம்களை ஒரு வண்டியில் ஏற்றிக் கொண்டிருந்தார். அவர்களை ஏன் காப்பாற்றுகிறீர்கள் எனக் கேட்ட வன்முறைக் கும்பலிடம், "வண்டி சிறிது தூரம் சென்றவுடன் வண்டியின் பாதுகாப்பிற்கு இருக்கும் காவலர் ஓடி விடுவார். பின்னர் வண்டியை ஒட்டுமொத்தமாக கொளுத்திவிடுங்கள். அத்துடன் முழு கதையும் முடிந்தது'' என்றார். கலவரக் கும்பலும் அப்படியே செய்தது.

பின்னர் குல்பர்கா சொசைட்டிக்குள் இருந்த முன்னாள் காங்கிரசு எம்.பி. ஜாப்ரி, காவல் துறையினருக்கும் அரசியல் தலைவர்களுக்கும் தொலைபேசி மூலம் தகவல் தெரிவித்து அவர்களை காப்பாற்றுமாறு கெஞ்சினார். ஆனால், எதுவும் நடக்கவில்லை. வேறு வழியின்றி ஜாப்ரி, கலவரக்காரர்கள் மீது துப்பாக்கி சூடு நடத்தியுள்ளார். அதில் சிலருக்கு காயமேற்பட்டுள்ளது. பின்னர் அவர், தான் பணம் கொடுப்பதாகவும் தன்னையும் பிற முஸ்லிம்களையும் விட்டுவிடுமாறு கலவரக்காரர்களிடம் கெஞ்சியுள்ளார். உடனே கலவரக்காரர்கள் அவரை பணத்துடன் வெளியே வருமாறு அழைத்துள்ளனர். பணத்தை எடுத்துக் கொண்டு வெளியே வந்த ஜாப்ரி, பணத்தை வீசிவிட்டு அவசரமாக உள்ளே திரும்ப முயன்றார். ஆனால், அதற்குள் அவர் மீது பாய்ந்த கலவரக்காரர்கள் அவரை வெளியே இழுத்து வந்து நன்றாக அடித்து உதைத்தனர். பின்னர், அவரது கை, கால்கள் என உடல் உறுப்புகளை ஒவ்வொன்றாகத் துண்டாக்கினர். அதன் பின்னர் உயிரோடு அவர் மீது மண்ணெண்ணையை ஊற்றி அவரை எரித்துக் கொன்றனர்.

இவ்வாறு மிகக் கொடூரமாக நடந்த இந்த இரு படுகொலை வழக்கிலும் கைது செய்யப்பட்டவர்கள் அனைவரும் தற்போது வரை வெளியில் உள்ளனர். நரோதா பாட்டியா படுகொலையில் ஈடுபட்ட மக்களை, அன்று இரவே நரேந்திர மோடி நேரில் சென்று பாராட்டியுள்ளார். அப்படி இருக்க அவர்கள் மீது என்ன மாதிரியான நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்க முடியும்? நரோதா பாட்டியா வழக்கில் குற்றவாளிகளுக்காக வாதாடிய வழக்கறிஞர் சேத்தன் ஷா, பின்னர் குல்பர்கா சொசைட்டி வழக்கில் அரசுத் தரப்பு வழக்குரைஞராக நியமிக்கப்பட்டார். இவர் விஸ்வ இந்து பரிஷத் உறுப்பினர். விஸ்வ இந்து பரிஷத்தின் சபர்கந்தா மாவட்டத் தலைவர்தான் அம்மாவட்ட அரசு வழக்குரைஞர்.

குஜராத் கலவரங்கள் குறித்து விசாரிக்க அமைக்கப்பட்ட நானாவதி -ஷா கமிஷனில் அரசு வழக்குரைஞராக நியமிக்கப்பட்டவர் அரவிந்த் பாண்டியா. "மோடி இல்லையென்றால் இந்துக்கள் கோத்ராவிற்கு பழி வாங்கியிருக்கவே முடியாது'' என்று இவர் பெருமிதத்தோடு சொல்கிறார். இவரை அரசு வழக்குரைஞராக நியமித்துக் கொண்டு வழக்கை நடத்தினால், நீதியும் நியாயமும் கிடைக்குமா?

முஸ்லிம்கள் மீதான வெறுப்பும் பகைமை உணர்ச்சியும் திட்டமிட்டுப் பரப்பப்படுகிறது. இது இந்துக்களின் நாடு; இங்கு முஸ்லிம்கள் ஏன் வாழ வேண்டும் என்ற உளவியல், சாதாரண மக்கள் மத்தியிலும் வெகு ஆழமாக எடுத்துச் செல்லப்படுகிறது. மோடி தலைமையிலான அரசு, இந்த உளவியலை எல்லா வகையிலும் நியாயப்படுத்துகிறது. அண்மையில் வெளிவந்த ‘போலி மோதல்' படுகொலைகள் குறித்த செய்திகளும் முஸ்லிம்களுக்கு எதிரான இவ்வாறான செயல்பாடுகளின் தொடர்ச்சியே. போலி மோதல் படுகொலைகளில் கொல்லப்பட்டவர்கள் அனைவரும் முஸ்லிம்கள் என்பதும், அவர்கள் அனைவருமே மோடியை கொலை செய்யும் நோக்கத்துடன் வந்ததாக குற்றம் சாட்டப்பட்டு கொல்லப்பட்டனர் என்பதும் தற்செயலானது அல்ல.

தங்கள் கருத்துப் பரப்பலுக்கு வலு சேர்க்கும் விதத்திலேயே அவ்வப்போது இத்தகைய மோதல் படுகொலைகள் நடத்தப்பட்டு வந்திருக்கின்றன. எரிகின்ற வெறுப்புத் தீயை அணையாமல் காக்கும் நோக்கிலேயே அவை நிகழ்த்தப்பட்டு வந்திருக்கின்றன. மிகவும் பரபரப்பாகப் பேசப்பட்ட அந்த வழக்குகளின் நிலையும் இன்று கிணற்றில் போட்ட கல்லாகவே இருக்கிறது.

காவல் துறை மற்றும் அரசு அதிகாரிகளின் உதவியோடு நடைபெற்ற அப்பாவிகளின் படுகொலைகள், நேர்மையற்ற விசாரணை, மறுக்கப்பட்ட நீதி... இவையெல்லாம் எங்கோ இருக்கும் குஜராத்தில் மட்டுமல்ல, கோத்ராவிற்கு முன்பே அவற்றை நம் தமிழ்நாடு சந்தித்து விட்டது. 1997 ஆண்டு நவம்பர்-டிசம்பர் மாதங்களில் கோவையில் நடைபெற்ற மதக் கலவரங்களில் இதே விதமான அநியாயங்கள் நடந்தேறின. அந்த கலவரத்திற்குப் பிறகு 1998 பிப்ரவரி 14 அன்று நடைபெற்ற குண்டு வெடிப்பு வழக்கில், ஏறத்தாழ ஒன்பதரை ஆண்டுகளுக்குப் பிறகு அண்மையில் தீர்ப்பு வெளிவந்திருக்கிறது. ஆனால், 1997இல் நடைபெற்ற கலவரங்களில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய நிவாரணமோ, நியாயமான வழக்கு விசாரணையோ நடைபெற்றதா? -அடுத்த இதழில் பார்ப்போம்

"மோடி முதல்வராக இல்லாதிருந்தால் முஸ்லிம்கள் மீது குண்டு வீசியிருப்பார்''

குஜராத் கலவரங்களை ஆய்வு செய்வதற்காக அதிகாரப்பூர்வமாக அமைக்கப்பட்ட "நானாவதி-ஷா ஆணையம்' கடந்த சில ஆண்டுகளாக வாக்குமூலங்களைப் பதிவு செய்து வருகிறது. ஆனால், குஜராத் அரசு வழக்குரைஞர் அரவிந்த் பாண்டியா, ஆணையத்தின் செயல்பாடுகளை எவ்வாறு திறமையாக சமாளித்து வருகிறார் என்ற உண்மையை வெளிப்படுத்தியுள்ளார்.

அரசின் முக்கிய தகவல்களை மட்டுமல்ல, மோடியின் சொந்த எண்ணங்களையும் அறிந்திருப்பவராகவே பாண்டியா இருக்கிறார். 2002 கலவரங்களின் பின்னணியில் இருந்து அதற்கு ஊக்கம் அளித்ததாக மோடியின் மீதும், அவரது அரசின் மீதும் வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளிலிருந்து அவர்களை விடுவிக்க-கடந்த 5 ஆண்டுகளாக வழக்குரைஞர்கள் குழு ஒன்றை தலைமை ஏற்று நடத்தி வரும் பாண்டியா, கலவரங்களின்போது இந்துக்களுடன் இருக்குமாறு மோடி காவல் துறையினருக்கு வாய்மொழி உத்தரவு அளித்ததாக "தெகல்கா' பத்திரிகையாளரிடம் சொல்கிறார்.

"கோத்ரா ரயில் எரிப்பு நிகழ்வுக்குப் பிறகு மோடி தனிப்பட்ட முறையில் மிகவும் பாதிக்கப்பட்டிருந்தார். விட்டிருந்தால் அவரே நேரடியாக அகமதாபாத்திற்கு அருகில் முஸ்லிம்கள் அதிகம் வாழும் பகுதியான ஜுஹாபுராவில் குண்டு வீசியிருப்பார்'' என்கிறார் பாண்டியா. ஆனால் முதலமைச்சர் என்ற பொறுப்பு அவரை கட்டுப்படுத்தியதாகவும் கூறுகிறார்.

நானாவதியோடு சேர்ந்து ஆணையத்தை தலைமையேற்று நடத்தும் கே.ஜி. ஷா, பா.ஜ.க. அனுதாபி என்கிறார் பாண்டியா. நானாவதியை பொருத்தவரை, அவருக்கு பணம் தான் முக்கியம் என்கிறார். சூன் 8 அன்று அகமதாபாத்தில் உள்ள பாண்டியாவின் வீட்டில் ‘தெகல்கா'விற்கும் பாண்டியாவிற்கும் இடையில் நடந்த உரையாடலின் ஒரு பகுதி கீழே அளிக்கப்பட்டுள்ளது :

தெகல்கா : கலவரங்களின்போது யார் முன்னணியில் இருந்தார்கள்?

அரவிந்த் பாண்டியா : ஒரு சிலர் இருந்தார்கள் என்றோ ஒரு சிலர் இல்லை என்றோ சொல்வது தவறு. நடைமுறையில் பார்த்தால், களத்திற்குச் சென்றவர்கள் அனைவரும் பஜ்ரங்தள் மற்றும் வி.எச்.பி.யை சேர்ந்தவர்கள். எந்த தலைவர்கள் எங்கு சென்றார்கள்? யார் என்ன பங்காற்றினார்கள்? யார் சந்தேகத்திற்குரிய பங்காற்றினார்கள்? இந்த விவரங்கள் அனைத்தும் எல்லா கைப்பேசி எண்களும் யார் எங்கு சென்றார்கள், அந்த இடங்கள் குறித்த விவரங்கள்... என எல்லா தகவல்களையும் ஆணையத்தின் முன் வைத்திருக்கிறோம்.

தெகல்கா : ஆம். சில விவாதங்கள்கூட நடந்தது.

அரவிந்த் பாண்டியா : யாருடைய கைப் பேசி எண்கள் இருந்தன என்று எனக்கு தெரியும். யார், யாரிடம், எங்கிருந்து பேசினார்கள் என்பதற்கு என்னிடம் ஆவணங்கள் உள்ளன.

தெகல்கா : இதனால் இந்துக்களுக்கும் ஜெய்தீப் பாய் போன்றவர்களுக்கும் ஏதேனும் சிக்கல் வருமா?

அரவிந்த் பாண்டியா : அரே பாய். நான்தான் வழக்காடப் போகிறேன். கவலைப்படாதீர்கள். இதைப்பற்றி கவலையே வேண்டாம். இங்கு எந்த சிக்கலும் இருக்காது. அப்படி ஏதேனும் சிக்கல் இருக்குமானால், நான் அதை தீர்த்துக் கொள்வேன். நான் இத்தனை ஆண்டுகளாக யாருக்காக உழைத்திருக்கிறேன்? என்னுடைய சொந்த ரத்தத்திற்காக.

தெகல்கா : ஆணையத்தின் அறிக்கை இந்துக்களுக்கு எதிராக சென்றுவிடுமா?

அரவிந்த் பாண்டியா : இல்லை இல்லை. காவல் துறையினருக்கு சில சிக்கல்களை உண்டாக்கலாம். அவர்களுக்கு எதிராகப் போகலாம். பாருங்கள். இதற்காக தேர்ந்தெடுக்கப்பட்ட நீதிபதிகள் காங்கிரசை சேர்ந்தவர்கள்.

தெகல்கா : ஆமாம். நானாவதி மற்றும் ஷா.

அரவிந்த் பாண்டியா : அதுதான் ஒரே சிக்கல். நமது தலைவர்கள் அந்த நேரத்தில் அவசரப்பட்டு ஒரு விவாதத்தை எழுப்பிவிட்டார்கள். நானாவதி சீக்கியர்கள் மீதான கலவரத்தில் தொடர்பு கொண்டிருந்ததால், ஒரு காங்கிரஸ் நீதிபதியை பயன்படுத்திக் கொண்டால் சிக்கல் இருக்காது, எந்த கேள்வியும் இருக்காது என்று நினைத்தார்கள்.

தெகல்கா : அப்படியானால் நானாவதி உங்களுக்கு முற்றிலும் எதிராக இருக்கிறாரா?

அரவிந்த் பாண்டியா : நானாவதி ஒரு புத்திசாலி மனிதர். அவருக்கு பணம் தேவை. இரண்டு நீதிபதிகளில் கே.ஜி. ஷா தான் உண்மையில் புத்திக் கூர்மை மிக்கவர். அவர் நம்ம ஆள். அவர் நம் மீது கரிசனம் உடையவர். நானாவதிக்கு பணம் தான் முக்கியம்.

தெகல்கா : நானாவதி-ஷா ஆணையம் இந்துக்களுக்கு எதிராக செல்லலாம்.

அரவிந்த் பாண்டியா : அவர்கள் ஆணையத்தைப் பல ஆண்டுகளாக நடத்துகிறார்கள். அவருக்கு பணம் தேவை. வேறு எதுவும் இல்லை. அவர் ஒரு காங்கிரஸ்காரர்.

தெகல்கா : அப்படியானால் ஷா?

அரவிந்த் பாண்டியா : இல்லை. ஷா நம்ம ஆளு. ஆனால் நானாவதி ஓய்வு பெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி. ஷா ஓய்வு பெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி.