மனித சமுதாயம் எப்போது வரையில், பேச்சு முறையில் மட்டும் தகவல் பரிமாற்றங்களை தங்களுக்குள் நிகழ்த்திக் கொண்டுருந்ததோ அப்போது வரையில் மட்டும்தான் எந்தவித பிரிவினைக்கும் இடம் கொடுக்காமல் சமுதாயத்திற்குத் தேவையான படிப்பினைகள் எல்லாம் எந்தவித வேறுபாடும் பார்க்காமல் பரிமாறிக் கொள்ளப்பட்டிருந்தது. அதேபோல், சமுதாயத்தில் சிலர் பல விசயங்களை கற்றுக் கொண்டிருக்கலாம், தெரிந்து கொண்டிருக்கலாம். ஆனால், அப்போதும் அதிகமாக கற்றவர், அதிகமான விசயம் தெரிந்தவர் என்ற எந்த வேறுபாடும் பார்க்கப்படவில்லை, அதேபோல் குறைந்த விசயங்கள் தெரிந்தவர்களும், எந்தவித வேறுபாடும் பார்க்காமல் சமுதாயத்தில் சமத்துவம், சகோதரத்துவம், பாதுகாப்பும் எல்லாருக்கும் கிடைத்தது. ஏனெனில், தனி நபரின் கற்றல் என்பது ஒட்டுமொத்த சமுதாயத்தின் நலன் சார்ந்தவையாக இருந்தது.

சமுதாயத்திற்குத் தேவையான கற்றல்களை பெற்றிருந்தவர்கள் அல்லது தெரிந்தவர்கள் அல்லது உருவாக்கியவர்கள் எல்லாம் அறிவாளியாக இருந்தனர். ஆனால், அறிவாளி என்பதற்காகவும், அதிகம் கற்றவர் என்பதற்காகவும் அவர் மற்றவரைக் காட்டிலும் உயர்ந்தவர் என்றோ அல்லது மற்றவர்கள் எல்லாம் தாழ்ந்தவர்கள் என்றோ எந்தவித எண்ணமும் இல்லாமல் சமுதாயம் இருந்து. அங்கு, அனைவருக்கும் வாய்வழி - செவிவழி தகவல் பரிமாற்றும் திறமை என்பது இருந்தது. அதனால் எந்தவித பிரிவினைக்கும் ஏன் அப்படிபட்ட எண்ணமே வந்ததில்லை. ஆனால், இந்த நிலைமை முற்றிலுமாக மாறத் தொடங்கியது. அதாவது, எழுதவும், படிக்கும் திறமை மூலம் தகவலை பரிமாறிக்கொள்ளும் நிலை வந்தவுடன், பொதுவாக இருந்துவந்த கற்றல் என்பது தனி நபர் சார்ந்து போனது. எப்படியெனில், வாய்வழி - செவிவழி கற்றல் இருந்தபோது தகவல்கள் எல்லாருக்கும் தாராளமாக பரிமாறிக் கொள்ளப்பட்டது.

தகவல் தொடர்புக்கு புதியதாய் எழுத, படிக்க வேண்டும் என்ற நிலை வந்தவுடன் அத்தகைய திறமையை வளர்த்துக் கொள்வதில் பலவிதமான தடைகள் இருந்த‌து. ஏனெனில், அப்படிப்பட்ட திறமையானது புதியதாக இருந்த‌தால் அதை கற்றுக்கொள்வதில் விருப்பம் இல்லை. அதுபோல மிக எளிதில் கற்று, தேர்வது என்பது மிகக் கடினமாக இருந்தது. எனவே, எழுத்து, படிப்பு மூலம் தகவல் பரிமாறும் திறமையை சமுகத்தின் ஒரு சிலரே கற்றுவந்தனர். அத்தகைய கற்றல் சமுகத்தின் எல்லாருக்கும் கிடைக்கவில்லை. எனவே, நாளடைவில் எழுதி, படிக்கும் தகவல்கள் தான் உண்மையானவை, நம்பகத்தன்மையானது என்ற கருத்து சமுதாயத்தால் நிலை நிறுத்தப்பட்டது. அதோடு மட்டும் இல்லாமல் ஒருவரின் கற்றலின் திறமை அல்லது அறிவு என்பது பழங்காலத்தில் பயன்படுத்திய வாய்வழி - செவிவழி தகவல் தொடர்பு கற்றலின் மூலம் இல்லாமல் புதியதாகத் தோன்றிய எழுத, படிக்க தெரிந்திருக்க வேண்டும் என்ற அளவுகோலை வைத்து ஒருவரின் திறமையும், அறிவும் வரையறை செய்யப்பட்டது. அப்படி வரையறுத்ததால்தான் கற்றல் என்ற ஒரு சாதாரண‌ விசயமானது மிகப் பெரியதாக ஒரு பிம்பமாக சமுதாயத்தில் உருவாக்கப்பட்டது.

இப்படிப்பட்ட எழுதும், படிக்கும் திறமை என்பது சமுகத்தில் உள்ள அனைவருக்கும் கிடைக்கும் மாதிரி சமுகமானது கட்டமைக்கப்பட்டிருந்தால் பரவாயில்லை. ஏனெனில், எல்லாருக்கும் எழுதவும், படிக்கவும் தெரியும் என்னும் போது எந்தவித பாகுபாடும் சமுதாயத்தில் வரப்போவதில்லை. எனவே, சமுகத்தில் எந்தவித பிரிவினையும் உண்டாகாமல் சமத்துவத்துடன் பாதுகாப்பான, சுதந்திரமான சமுதாயம் எப்பொழுதும் இருந்திருக்கும். ஆனால், அப்படிப்பட்ட கற்றல் என்பது சமுகத்தில் உள்ள எல்லாருக்கும் கிடைக்கப் பெறவில்லை. நாளடைவில் அப்படிப்பட்ட திறமைகளைக் கற்றவர்கள் எல்லாம் கல்வி பயின்றவர்கள் எனவும், அப்படிபட்ட திறமைகளை வளர்த்துக் கொள்ளாதவர்கள் எல்லாம் கல்லாதவர்கள் என்றும் அவர்களின் திறமைகள் கற்றுக்கொண்ட முறைக்கு கல்வி என்று பெயர் சூட்டப்பட்டது. இப்படித்தான் கல்வி என்ற மிகப் பெரிய ஊழல் உருவாக்கப்பட்டது.

சமதர்மம் உள்ள ஒரு சமுதாயத்தை கல்வி என்ற ஒரு திறமையானது பிரிக்க ஆரம்பித்தது. மேலோட்டமாகப் பார்த்தால், கல்வி என்பது சமுதாயத்தில் தகவல் பரிமாற்றத்திற்குத் தேவையான மிக எளிமையான ஒரு வழி தானே என்று தோன்றலாம் ஆனால், அப்படி நிகழவில்லை. மாறாக, சமுதாயத்தில் கற்றவர்கள் என்றும், கல்லாதவர்கள் என்றும் பிரிவினை உண்டாக கல்வி என்ற தகவல் பரிமாறிக்கொள்ளும் திறமை உதவியது. மேலும், கற்றவர் எல்லாரும் சமுகத்தின் வளர்ச்சிக்காகத் தானே தங்கள் திறமையை வளர்த்துக் கொண்டார்கள். எனவே, அவர்கள் மற்ற இதுபோல திறமையை வளர்த்துக் கொள்ளாத கல்லாதவர்களுக்கு, தான் கற்ற, பெற்ற தகவல்களை பரிமாறிக்கொண்டு ஒரு சமதர்மம் உள்ள சமுதாயத்தை உருவாக்குவார்கள் என்றும் தோன்றலாம். ஆனால், எப்போது கல்வி என்ற கற்றல் தொடங்கியதோ அது எப்போது சமுதாயத்தில் எல்லாருக்கும் சரியாக கற்று கொடுக்கப்படவில்லையோ அப்போதே அப்படிப்பட்ட திறமைகளை வளர்த்துக் கொண்டுள்ளவர்களை மற்றவர்கள் சார்ந்து வாழ வேண்டும் என்ற கட்டாயம் உருவாகிவிட்டது அல்லது உருவாக்கப்பட்டது.

உண்மையில் கல்லாதவர் அதிக படிப்பினைகளைப் பெற்றிருந்தாலும், நிறைய விசயங்கள் தெரிந்து இருந்தாலும் சமுதாயத்தில் அவர்களின் கருத்துக்கு முக்கியத்துவமோ, அவர்களுக்கு மரியாதையோ கிடைப்பதில்லை. ஆனால், அதே திறமையை கல்வி பயின்றவர்கள் பெற்றிருந்தாலோ அல்லது கல்லாதவர் அளவுக்கு நிறைய விசயங்கள் தெரிந்து இருக்கவில்லை என்றாலும், சமுகத்தில் மதிப்பும், மரியாதையும் கொடுக்கப்படுகிறது. இப்படிப்பட்ட கல்வி என்பது சமுகத்தில் இல்லாமல் இருந்தபோது கூட ஒற்றுமை நிலவியது. ஆனால், இன்றைய கல்விமுறை உருவான பின்புதான், சமதர்மம் உள்ள சமுதாயமானது சமத்துவத்தை இழந்து, சகோதரத்துவத்தை இழந்து, சுதந்திரத்தை இழந்து, பாதுகாப்பற்று வாழத் தொடங்கியது.

கல்வியும் சமுதாயமும்

கல்வி என்பது சமத்துவம் உள்ள பாதுகாப்பான சமுதாயத்தை மேன்மேலும் வளர்ச்சியடைய வைப்பதற்காகத்தான் இருந்திருக்க வேண்டும். அதுதான் கல்வி உருவாக்கபட்டதன் நோக்கமும், அதுதான் கல்வியின் நியதி. ஆனால், அப்படி இல்லாமல் கல்வி என்பது சமுகத்தை பிரிக்கக்கூடிய ஒரு மோசடியாகவும், ஊழலாகவும் உருவாகிவிட்டது. அது மேலும், கற்றவர்தான் எல்லா விசயங்களையும் செய்யமுடியும் எனவும் அவர்கள்தான் எந்தவித வேலைக்கும், செயலுக்கும் பொருத்தமானவர்கள் எனவும், அவர்களை எல்லாம் தனியாகப் பிரித்து அவர்களுக்கு தகுந்தது போல வேலையைப் பார்க்க வேண்டும் என்ற எண்ணமும் உருவானது. அப்படியே, அப்படிப்பட்ட வேலையே கற்றவர்களுக்கு கொடுக்கப்பட்டது. மேலும், கல்லாதவர்களுக்கு எந்த வேலைகள் எல்லாம் கடினமாக உள்ளதோ அந்த வேலைகள் பிரித்து கொடுக்கபட்டது.

சமுதாய கட்டமைப்பிற்கு எந்த வேலையை யார் செய்தாலும் பரவாயில்லை என்ற எண்ணம் மறைந்து, நாளடைவில் கற்றலுக்கு ஏற்றதுபோல வேலையும், செயலும் கொடுக்கப்பட்டது. அப்படியே படித்தவர்களுக்கும், படிக்காதவர்களுக்கும் சமூகத்தில் ஏற்றத்தாழ்வு உருவாக்கப்ப‌ட்டது. கற்றவர்கள் எல்லாரும் மேன்மையானவர்கள் எனவும், கல்லாதவர்கள் எல்லாம் கீழானவர்கள் என்றும் இருபிரிவினருக்குள்ளும் தாழ்வு மனப்பான்மையும் உருவாக்கப் பட்டுவிட்டது. மேலும், தாங்கள் சமுதாயத்தின் நலனுக்காக கற்ற கல்வி என்ற தகவல் பரிமாற்ற முறையும் சமூகத்தின் எல்லாருக்கும் முறையாக கற்றுக் கொடுக்கப்படவில்லை. தெரிந்தே அப்படிபட்ட தகவல் பரிமாற்றம் தடை செய்யபட்டது. அதனால் கல்வி என்ற ஊழல் மிக வேகமாக வளர ஆரம்பித்தது, அந்த ஊழல் செய்பவர்கள் எல்லாம், அத்தகைய ஊழல் செய்ய தெரியாதவர்களை அதாவது, கல்வி என்ற தகவல் பரிமாற்றம் செய்ய தெரியாத கல்லாதவர்களை தங்கள் கட்டுப்பாட்டிற்குள் கொஞ்சம் கொஞ்சமாக கொண்டுவந்தார்கள். இப்படித்தான் கல்வி என்பது சமதர்மம் உடைய சமுதாயத்தை மேலும் வலிமையாக்குவதற்குப் பதிலாக, சமுகத்தில் இருந்த சமத்துவத்தை உடைத்து, சகோதரத்துவத்தை அழித்து, சுதந்திரத்தை பறித்துக் கொண்டது.

கல்வி என்ற ஊழல், கற்றவர், கல்லாதவர் என்ற பிரிவினையை உண்டாக்கியதோடு மட்டும் இல்லாமல், கற்றவர்களுக்குள்ளே மேலும் பிரிவினையை உருவாக்கியது. எப்படி எனில், கற்றல் என்பது பொதுவான ஒன்று. அதில், எல்லாவித விசயங்களும் அடங்கிவிடும். ஆனால், அப்படிப்பட்ட கற்றலை முழுமையாக ஒரு மனிதனால் பெற முடியாத காரணத்தால், அதாவது எல்லா விசயங்களையும் தன்னால் தெரிந்துகொள்ள முடியாது என்பதால் கற்றலில் பல பிரிவுகளை உருவாக்கியது. அப்படி, உருவாக்கப்பட்ட பல பிரிவுகளை மேலும் பல பிரிவுகளாக விரிவாக்கம் செய்து, கற்றல் என்ற பெயரில் விசயத்தை தன் வசதிக்கு ஏற்ப சிறிய சிறியதாகப் பிரித்து கொஞ்சம் கொஞ்சமாக கற்றுக் கொண்டது. அதன் அடிப்படையில்தான் தொடக்க கல்வி, மேல் படிப்பு, உயர் படிப்பு பின் அதனினும் பெரிய படிப்பு என பிரித்து வைத்துக் கொண்டது. கற்றுக்கொண்ட கல்வியின் அடிப்படையில் உயர்ந்த கல்வி, தாழ்ந்த கல்வி எனவும் விரிவாக்கப்பட்டது. ஆனால், இதற்கெல்லாம் அடிப்படை என்பது வெறும் எழுதுவதும், படிப்பதும் மட்டும்தான். அப்படிபட்ட எழுத்தும், படிப்பும் சமுகத்தின் உறுதியான கட்டமைப்பிற்குத்தான் என்பதை மறந்து கல்வி என்ற ஊழலானது படிப்படியாக வளர்ச்சியடைந்த‌து. இதில் என்னவொரு விசித்திரம் என்றால் கல்வியில் நிறைய ஊழல்கள் இருக்கிறது எனவும், சமூகத்தில் நிறைய ஊழல்கள் இருக்கிறது எனவும் கூறிக் கொள்ளும் சமுதாயமானது அப்படிபட்ட கல்வி என்பதே ஊழல் தான் என்பதை ஒருபோதும் எண்ணிப் பார்ப்பதில்லை.

கற்றலும் கற்பித்தலும்

கல்வியை கற்றுக் கொள்வதிலும், கற்றுக் கொடுப்பதிலும் மிகப்பெரிய மாயை ஒன்று நில‌வுகிறது. அதாவது, ஒருவன் பள்ளியில் அல்லது கல்லூரியில் படித்தால்தான் அது கல்வி என சமுதாயத்தால் ஒரு மாய பிம்பம் உருவாக்கி வைக்கப்பட்டுள்ளது. எப்படியெனில், எந்தவொரு உயிரினமும் கற்றுக் கொள்வதற்கு யாராவது கற்றுக் கொடுக்க வேண்டும். ஆனால், அது பள்ளியில் இருந்துதான் தொடங்குகிறது என்பது முட்டாள்தனம். அதாவது நேரடியாக சொல்லவேண்டுமானால், ஆசிரியர்கள்தான் கல்வியை கற்றுக் கொடுக்க முடியும் என்பதும் அவர்கள் கற்றுக் கொடுப்பது மட்டும்தான் கல்வி என்பதும் ஒரு மாய பிம்பம். மற்றவர்களுக்கு கற்றுக் கொடுக்கும் ஆசிரியர் தான் சமுகத்தில் உயர்ந்தவர், அவரால் தான் நல்ல சமூகத்தை உருவாக்க முடியும் என்ற எண்ணம் இருக்கிறது.

ஆசிரியர் என்பவர் யார்? எந்தவொரு விசயத்தையும், எந்தவொரு நபர்க்கும் எதுவெல்லாம், எவரெல்லாலும் உணர்த்த முடியுமோ அல்லது உணர்த்துகிறதோ, எதுவெல்லாம் பார்த்து, கேட்டு தெரிந்துகொள்ளமுடியுமோ, உணர்ந்துகொள்ள முடியுமோ எவைகள் எல்லாவற்றிலும் இருந்து ஒருவருக்கு படிப்பினைகளைத் தரமுடியுமோ, பெறமுடியுமோ அதுவெல்லாம், அவரெல்லாம் ஆசிரியர்தான். அப்படியிருக்க, இவையெல்லாம் சமுதாயத்தில் நிலை நிறுத்தப்படாமல், பள்ளியில், கல்லூரியில் கற்றுக் கொடுப்பவர்கள் மட்டும்தான் ஆசிரியர் என்ற மாயபிம்பம் உருவாக்கி வைக்கப் பட்டுள்ளது. கல்வி பயின்று இருக்கும் தான் உயர்ந்தவர் என்ற எண்ணமும், மற்றவர் எல்லாம் தனக்கும் கீழ் என்ற எண்ணமும் இருப்பதால்தான், தன்னால் மட்டும்தான், தான் மட்டும் தான் மற்றவர்களுக்கு தான் பயின்றதை சொல்லமுடியும் என்ற எண்ணம் உருவாகிவிட்டது, உருவாக்கப்பட்டுள்ளது. மற்ற எதையும், புத்தகத்தைப் பார்த்தோ, காதில் கேட்டோ, ஏதாவது நிகழ்வினைப் பார்த்தோ தெரிந்துகொள்வதும் கல்விதான். ஆனால், அதை ஒருபோதும் சமுதாயமானதும், ஏன் அரசாங்கமும் சரி அங்கீகரிப்பது இல்லை. இதுதான் கற்றலிலும் கற்பித்தலிலும் உள்ள நிலை. இப்படித்தான் சமுதாயத்தில் ஆசிரியர் என்ற பிம்பம் மிகப் பெரியதொரு பொறுப்பாகவும், தொண்டாகவும் சமுதாயத்தால் உருவாக்கி வைக்கப்பட்டுள்ளது.

இன்றைய சமுதாயத்தில் கல்வி என்ற ஊழலின் நிலை

கல்வி என்பதை சமுதாய வளர்ச்சிக்காகப் பயன்படுத்தாமல், தன்னை மட்டுமே வளர்ச்சியடைய வைத்துக் கொள்ளும் வகையில் மட்டுமே கல்வி என்ற ஊழலானது போதிக்கப்படுகிறது. எல்லாவிதமான விசயங்களும் எல்லாருக்கும் தெரிந்து இருக்க வேண்டிய அவசியம் இல்லை. மேலும், கல்வியில் கற்றுத் தருவதை விட மேலாக எவருக்கேனும் விசயங்கள் தெரிந்து இருந்தாலும் அதற்காக சரியான மதிப்பும், அங்கீகாரமும் சமுதாயத்தில் கிடைப்பதில்லை. அரசாங்கமே அப்படிப்பட்ட கருத்தை ஏற்றுக் கொள்வதில்லை. சமுதாயத்திற்குத் தேவையான தகவலை யார் வேண்டுமானலும் சொல்லலாம் என்ற நிலை மாறி, இப்போது படித்தவர்கள் சொல்வது மட்டும்தான் உண்மையானது என்ற பிம்பம் உருவாக்கப் பட்டுவிட்டது.

ஊழலும் சமுதாயமும்

நாட்டில் சாதி, மதம், இனம், மொழி, பாலினம் போன்ற பிரிவினைகள் இருக்கின்றன என்று எல்லாருக்கும் தெரியும். ஆனால், கல்வி என்ற பிரிவினை இருக்கிறது என்பது யாருக்கும் தெரிவதில்லை. இத்தனை பிரிவினைகளும், நாகரீக வளர்ச்சி இல்லாமல், சிந்திக்கக் கூட தெரியாமல் இருக்கிற சமுதாயத்தில்தான் சாதி, மதம், இனம், மொழி, பாலினம் போன்ற வேறுபாடுகள் எல்லாம் இருக்கும். இதனை எல்லாம் களைந்து மிகச் சரியான, சமதர்மம் உள்ள மாற்றுவதுதான் கல்வி கற்றவனின் கடமை. ஆனால், அப்படிபட்ட கற்றல்தான் இன்றைய சமுதாயத்தில் இல்லை. இதை எல்லாம் செய்ய வேண்டிய கல்வி என்பதே இங்கே ஊழலாகத்தானே இருக்கிறது. ஏனெனில் ஒட்டுமொத்த சமுதாயத்தின் வளர்ச்சியும், இப்படிப்பட்ட கற்றல் உள்ளவர்களின் கைகளில்தான் உள்ளது. கல்வி கற்காதவர்கள் எல்லாரும் தான் உழைத்ததோடு மட்டும் இல்லாமல், தனக்கு உணவு இல்லை என்றாலும் வரி கட்டி சமுதாயத்தின் மற்றவர்களை படிக்க வைக்கின்றனர். அப்படி மற்றவர்களின் பணத்தில் படித்தவர்கள்தான் இன்று, அவர்கள் வாழ்க்கைக்கு என்னென்ன தேவையோ அதை மட்டும் இல்லாமல், தேவைக்கும் அதிகமாகவே தன்னை மட்டும் உயர்த்திக் கொள்ளப் பார்க்கிறார்கள்.

சமுதாயத்திற்கு பயன் தரும் செயல்களைச் செய்யும், சமுதாயத்தால் படிக்காதவர்கள் என அழைக்கப்படுவர்கள் எல்லாம் கற்றவர்களா அல்லது அவர்களின் பணத்தில் படித்து, தன்னை மட்டும் முன்னேற்றிக் கொண்டு சமுதாயத்திற்கு எந்தவித நன்மையும் செய்யாதவர்கள் கற்றவர்களா என்றால், உண்மையில் சமுதாயத்தால் படிக்காதவர்களாக அடையாளப்படுத்தி வைக்கப்பட்டிருக்கும் மக்கள் தான் கற்றவர்கள்.

கல்வி என்ற பெயரில் சமுதாயத்திற்குத் தேவையானது எதையும் கொடுக்காமல், சமுகத்தின் வளர்ச்சிக்கு எதுவும் செய்யாமல் மற்ற எல்லாவற்றையும் முன்னேற்றிக் கொண்டிருக்கிறார்கள். உண்மையில், உலகம் மிகப் பிரமாண்டமாக வளர்ச்சியடைந்து நிற்கிறது. ஆனால், வெறும் பொருட்கள் மட்டும்தான் அப்படி வளர்ச்சியடைந்து நிற்கிறது. ஆனால் மனிதன் என்பவன், தன்னை ஒரு மிருகத்துடன் கூட ஒப்பிட முடியாத அளவிற்கு வளர்ச்சியின்றி தன்னை பின்னோக்கிக் கொண்டு சென்று கொண்டிருக்கிறான். கல்வி என்பது ஒரு மனிதனை சதையும், எழும்பும் உள்ள ஓர் உயிருள்ள இயந்திரமாகவே உருவாக்குகிறது. அவனும் எந்தக் கேள்வியும் கேட்காமல் சமுதாயத்தின் சிலரின் நன்மைக்காகவே தான் ஓர் உயிருள்ள இயந்திரமாக செயல்படுவதை அறிந்துகொள்ளாமல், அதை அவனே பெருமையாக சொல்லிக் கொண்டு திரிகிறான். இன்றைய கல்வியானது மனிதனிடம் இருந்து மனிதத் தன்மையைப் பிரிக்கிறது. படித்தவுடன் இயந்திர குணத்தை தன்னுள் உருவாக்கிக் கொள்கிறான். இன்றைய கல்வி தெரிந்தோ, தெரியாமல் கூட வாழ்க்கை என்றால் என்ன என்றோ, வாழ்வது எப்படி என்றோ கற்றுக் கொடுப்பதில்லை. சமுதாயத்திற்கு இப்படி எந்தவித பயனும் இல்லாத கல்வியாளன் என்ற ஒருவனுக்குத் தான் ஏனோ சமுகத்தில் மதிப்பும், மரியாதையும் அதிகமாகக் கிடைகிறது. அவன் சதையுள்ள உயிருள்ள ஓர் இயந்திரமாக இருப்பதால் என்னவோ சக மனிதனிடம் இருந்து தன்னை பிரித்துக் கொள்வதோடு மட்டும் இல்லாமல் மற்றவர்களையும் விலக்கி வைக்கிறான். இப்படித்தான் இன்றைய கல்வி என்ற ஊழலானது நடைமுறை படுத்தப்படுகிறது.

ஊழல்வாதிகள்

தகவல் தொடர்பு என்ற திறமையானது, அதாவது, வாய்வழி - செவிவழி தகவல் பரிமாற்ற திறமை வளர்ந்து, எழுதுதல், படித்தல் போன்ற சாதாரண விசயமானது கல்வி என்ற மிகப்பெரிய பிம்பமாக மாறி இருக்கிறது. அப்படி இல்லாமல் யார் எல்லாம் சமுதாயத்தின் நலனிற்காகப் போராடுகிறார்களோ அவர்கள்தான் உண்மையில் கற்றவர்கள்; மற்றவர்கள் எல்லாம் என்னதான் கல்வி பயின்றிருந்தார்கள் என்றாலும் கல்லாதவர்கள்தான், ஊழல்வாதிகள்தான். எப்படியெனில், முன்பின் தெரியாத சமுதாயத்தில் யாரோ போட்ட பிச்சையில் கல்வி பயின்றவர், அதை சமுதாயத்திற்குப் பயன்படுத்தாமல், நல்ல வேலைக்குச் சென்று தன் வறுமையை நீக்கி, தன் ஆசைகளை நிறைவேற்றி, தன் குடும்பத்தின் தேவைகளை நிறைவேற்றி, தன்னைச் சார்ந்த வேண்டப்பட்டவர்களின் தேவைகளை நிறைவேற்றி, தான் உண்டு, தன் வேலையுண்டு, தன் குடும்பமுண்டு என்று இருக்கும் மிக நல்லவர்கள் எல்லாரும் எப்படி ஊழல்வாதிகளாக முடியும் என்ற கேள்வி எழலாம். ஆனால், சமுதாயத்திற்காகப் படித்த படிப்பை, தன் குடும்பத்திற்காக மட்டும் பயன்படுத்துவது அதாவது சமுதாயத்தில் அடிப்படை தேவைகள் கூட இல்லாமல் பலர் இருக்கும்போது, தான், தன் குடும்பம் என இருப்பது ஊழல்தான்.

தன் குடும்பத்தை முன்னேற்றிக் கொள்வதில் எந்த தவறும் இல்லை, ஆனால் தன்னை படிக்க வைத்த, தனக்கு பிச்சைபோட்ட சமுதாயத்தை முன்னேற்றுவதும் அல்லவா அவர்களுடைய கடமை. இவர்களின் பார்வையில், 'சமுதாயத்தில் நிறைய ஊழல்கள் நிகழ்கின்றது, நிறைய பிரிவினைகள் இருக்கிறது என்று, அதையெல்லாம் சரிசெய்யத்தான் படித்திருக்கிறேன், அது எல்லாம் தன் வேலைத்தான், ஊழலைக் களைந்து ஒரு நல்ல சமுதாயத்தை உருவாக்குவது என் கடமை' என தப்பித்தவறி கூட நினைப்பதில்லை. தவறு, ஊழல் எனத் தெரிந்து அதை திருத்த முயலவில்லை என்றால், ஊழலை அனுமதிப்பதாகத்தான் அர்த்தம், அப்படி அனுமதிப்பதன் மூலம் அந்த ஊழலில் அவருக்கும் பங்கு இருப்பதாகத்தான் அர்த்தம். அப்படி இல்லையென்றால், அதை எல்லாம் செய்யும் அளவிற்கு திறமை இல்லாதவர்களாக, கையாலாகாதவர்களாக இருக்க வேண்டும். எனவே, அவனும் எவ்வளவுதான் கற்றவனாக இருந்தாலும் கல்லாதவனாகிறான்.

எப்போது ஒருவன் தான் கற்றதை தவறாகப் பயன்படுத்துகிறானோ அல்லது சமுதாயத்திற்குப் பயன்படுத்தாமல் இருக்கிறானோ அவன் அப்போதே அறிவு விபச்சாரியாக மாறிவிடுகிறான். பின்பு எப்படி இவர்கள் எல்லாரும் மற்ற ஊழலைப் பற்றி பேசுகிறார்கள்? என்ன மற்றவை எல்லாம் நேரடியாக எளிதில் தெரிவதால் ஊழல் எனப் பேசப்படுகிறது. ஆனால், அப்படிபட்ட ஊழல்களுக்கு எல்லாம் அடிப்படைக் காரணமே இப்படிபட்ட கல்வி என்ற ஊழல்தான் என்பது யாருக்கும் தெரிவதில்லை. ஏனெனில், தன்னை சந்தோஷப்படுத்தும் அதாவது, தனக்குத் தேவையான தவறுகள் எல்லாம் தவறுகளாகவே பார்க்கப்படுவதில்லை.  எந்தவொரு உண்மைக் கல்வியாளனும், தன்னுடைய நலத்திற்காக மற்றவரின் வாழ்க்கையை, நலனை நேரடியாகவோ, மறைமுகமாகவோ கூட பணயம் வைக்கமாட்டான். அப்படி வைத்தான் எனில் அவன் கல்வியாளன் அல்ல. அவனும் ஊழல்வாதிதான். அப்படிபட்ட செய்து கொண்டிருப்பதுதான் மற்ற எந்த ஊழல்களை காட்டிலும் மிகப் பெரிய ஊழல் ஆகும்.

கல்வியாளன்

எவன் ஒருவன் தன் கற்ற, பெற்ற படிப்பினைகள் எல்லாத்தையும் தன் சமுதாயத்தின், சக மனிதனின் நலனுக்காக, நேரடியாகவோ, மறைமுகமாகவோ வரும் எந்தவொரு ஆபத்தையும் எதிர்கொண்டு, தன்னால் முடிந்தவரை முழுமுயற்சியையும் கொடுத்து தன் சமூகத்தை சமதர்மம், சமத்துவம், சகோதரத்துவம், சுதந்திரமுடைய, பாதுகாப்பான சமுதாயத்தை கட்டமைக்கின்றானோ, அவனே உண்மையான கல்வியாளன்.

Pin It