காங்கிரஸ் கூட்டணி அரசின் அமைச்சரவை பிப்ரவரி 1 அன்று நடைபெற்றது. அவசரச் சட்டம் ஒன்றைக் கொண்டு வரப் போவதாக அறிவித்தது. பாலியல் வன்கொடுமைகள் என்ற அவசரப் பிரச்சனையைக் கையாளவே அவசரச் சட்டம் என்று அமைச்சரவை அறிவித்திருந்தது. உண்மை நேர் எதிரானது என்று தோன்றுகிறது. வர்மா ஆணையத்தின் பரிந்துரைகளை ஒழித்துக் கட்டும் அவசரத்திற்காகவே அவசரச் சட்டம் கொண்டு வரப்பட்டிருக்கிறது.

verma_commission_630

நீதியரசர் வர்மா (நடுவில் இருப்பவர்) உடன், ஆணையத்தின் உறுப்பினர்கள் நீதியரசர் லீலா சேத் (இடது) மற்றும் இமாச்சலப் பிரதேசத்தின் முன்னாள் தலைமை நீதிபதி கோபால் சுப்ரமணியம்

வர்மா ஆணைய அறிக்கையை வலைமனையில் வெளியிடக் கூட மத்திய அரசு தயங்கியது. வெளியிடப்பட்ட அறிக்கை உடனேயே உள்துறை அமைச்சகத்தால் விலக்கிக் கொள்ளப்பட்டது என்பதையும் எனது முந்தைய கட்டுரையில் எழுதியிருந்தேன். வர்மா ஆணைய அறிக்கையை ஏற்றுக்கொள்ள மத்திய அரசு தயாராக இல்லை. வர்மா ஆணையம் தனது எல்லைகளைத் தாண்டிச் சென்றுவிட்டதாக காங்கிரஸ் கருதுகிறது.

ஆனால், தற்போது காங்கிரஸ் முன்வைக்கும் வாதம் வினோதமானதாக இருக்கிறது. அவசரச் சட்டம் ஒன்றைக் கொண்டு வந்து குற்றவியல் சட்டங்களில் திருத்தம் என்று அறிவித்ததே வர்மா ஆணைய அறிக்கையை நடைமுறைப்படுத்தியதாக அர்த்தம் என்கிறது காங்கிரஸ். வேறு வார்த்தைகளில் சொல்வதானால், குற்றவியல் சட்டங்களில் திருத்தம் என்ற அடையாள நடவடிக்கைக்கு அப்பால், பெண்கள் மீதான ஒடுக்குமுறைக்கு எதிரான ஒரு சமூக-அரசியல் தொடர் நடவடிக்கைக்கு காங்கிரஸ் தலைமையிலான அரசு தயார் இல்லை. அவ்வளவுதான்.

வர்மா ஆணைய அறிக்கையின் கதையை முடித்து வைக்கும் கொலை நடவடிக்கை என்றே காங்கிரஸ் அறிவித்துள்ள அவசரச் சட்டத்தைச் சொல்ல வேண்டும்.

வர்மா ஆணைய அறிக்கையின் உயிர் என்ன என்பதைப் பார்ப்போம்:

பாலியல் வன்கொடுமை என்பது பற்றிய இதுவரையிலான பொதுப் புரிதலை, ஆணாதிக்க கருத்து நிலையை, வர்மா ஆணையம் ஏற்றுக்கொள்ளவில்லை. மாறாக, பெண்ணின் சுதந்திரத்தை, அவளின் பாலியல் சுதந்திரம் உள்ளிட்ட சுதந்திரத்தை உறுதி செய்ய வேண்டும் என்ற கோணத்தில் இருந்து பாலியல் வன்கொடுமையை வர்மா ஆணையம் அணுகியிருந்தது.

ஒரு பெண் ஒப்புக்கொள்ளாத எந்தவொரு பாலியல் நடவடிக்கைக்கு அவளைக் கீழ்படுத்தும் எந்தவொரு நடவடிக்கையும் பாலியல் வன்கொடுமைதான் என்று வர்மா சொல்கிறார். மேலும், அந்தக் குற்றத்தை எவர் புரிந்திருந்தாலும் –அவர் இராணுவ வீரராக, காவல்துறை அதிகாரியாக, நீதிபதியாக, அரசியல்வாதியாக- எவர் புரிந்திருந்தாலும் தண்டனையிலிருந்து தப்பித்து விடக்கூடாது என்பதிலிருந்து வர்மா ஆணையம் துவங்குகிறது. அரசின் அவசரச் சட்டம் இந்த அடிப்படைக் கோட்பாட்டை அழித்து ஒழித்துவிட்டிருக்கிறது.

2012ல் மத்திய அரசு குற்றவியல் சட்டத் திருத்த மசோதா ஒன்றைக் கொண்டுவந்தது. அந்த சட்ட திருத்தத்தில் சொல்லப்பட்ட பாலியல் குற்றம் தொடர்பான பிரிவுகளில் சில மாற்றங்கள் செய்து புதிய அவசரச் சட்டம் கொண்டு வரப்பட்டதாகத் தோன்றுகிறது.
நமது மதிப்பீடு சரிதான் என்பதை மத்திய சட்டத்துறை அமைச்சரின் கூற்று காட்டுகிறது.

"ஏற்கனவே, நாடாளுமன்ற நிலைக்குழுவின் பரிசீலனையில் இருந்து கொண்டிருக்கும் குற்றவியல் சட்ட (திருத்த) மசோதாவின் பிரிவுகளை நீதிபதி வர்மா ஆணையப் பரிந்துரையின் வெளிச்சத்தில் ஆய்வு செய்து மாற்றுவதற்கு அவசரசச் சட்டம் முயல்கிறது", என்று மத்திய சட்ட அமைச்சர் அஸ்வினி குமார் குறிப்பிடுகிறார்.

பழைய திருத்த மசோதாவை மீண்டும் சற்று மாற்றியெழுதுவதுதான் அரசின் நோக்கம் என்றால், எதற்காக வர்மா ஆணையத்தை அமைத்து அதன் பரிந்துரைகளைக் கோர வேண்டும்?

அவசரச் சட்டத்தின் சில முக்கியமான அம்சங்களை மட்டும் பார்ப்போம்:

16 முதல் 18 வயதுக்கு இடைப்பட்டவர்கள் தங்களின் சொந்த சம்மதத்தின் பேரில் உடலுறவு கொள்வதைக் குற்றம் என்று அவசரச் சட்டம் வரையறை செய்கிறது. இது, கலாச்சாரக் காவலர்கள் என்று வேடமிட்டுக் கொண்டு கொட்டமடிக்கும் பழமைவாதிகளுக்கு அருமையான வாய்ப்பாக அமைந்துவிடும். இந்துமத அடிப்படைவாதிகள் ஆட்டம் போடுவதற்கு கூடுதல் வாய்ப்பு கிடைக்கும். இராமதாசு போன்ற சாதி வெறியர்கள் சாதி கடந்து காதலிப்போரை குறிவைத்து, குறிப்பாக தலித் இளைஞர்களுக்கு எதிராக உசுப்பிவிடும் சாதிவெறி மேலும் வேகம் கொள்ள வாய்ப்பளிக்கும். துர்கா வாஹினி படை, பஜ்ரங் தள் போன்ற பிற்போக்குவாதிகள், இளம் காதலர்களைப் பிடித்து காவல்துறையில் ஒப்படைக்கும் வேலையை மங்களூர் போன்ற நகரங்களில் மேற்கொள்கின்றனர். இவர்களுக்கும் இந்த திருத்தம் உதவியாக அமைந்து பெண்ணின் சமூக வெளி சுருங்குவது மேலும் நீடிக்கும். பெண்களின் அச்சமற்ற சுதந்திரம் என்பதுதான் பெண்களின் கோரிக்கை என்பதை நாம் மறந்துவிடக் கூடாது.

திருமண உறவு நிலையில் வன்புணர்ச்சியைக் குற்ற நடவடிக்கை என்று அவசரச் சட்டம் பார்க்கவில்லை. மேலும், பிரிந்து சென்ற கணவன், தன்னோடு வாழாத மனைவியை வன்புணர்ச்சி செய்தல் என்ற குற்றத்திற்கு அவசரச் சட்டம் குறைவான தண்டனையை அளிக்கிறது. அதாவது, பெண் ஆணின் பாலின்பச் சொத்து என்பதை அரசு ஒப்புக்கொள்கிறது. ஒரு கணவன் மனைவியைப் பிரிந்துவிட்டாலும், அவளின் உடலைக் கட்டுப்படுத்தும் உரிமை அவனிடமே இருக்கிறது என்பதால் ‘குறைவான’ தண்டனை கொடுக்க அரசு விரும்புகிறது என்று பொருளாகும். அதாவது, ஆணின் 'உணர்வைப்' புரிந்துகொண்டு, அவனுக்குச் 'சாதகமாக' அரசு செயல்படும் என்பதையே, விலகிச் சென்ற கணவன் கூட வல்லுறவு கொள்வது அத்தனை பெரிய குற்றம் இல்லை என்ற அரசின் நிலை காட்டுகிறது. மொத்தத்தில் பார்த்தால், பெண்ணின் உடல், வாழ்க்கை மீது பெண்ணின் சுதந்திரம் என்ற வர்மா ஆணையத்தின் அடிப்படை நிலைபாட்டை அரசு ஏற்றுக் கொள்ளவில்லை என்பதை அவசரச் சட்டம் தெள்ள‌த் தெளிவாக வெளிப்படுத்துகிறது.

வர்மா ஆணைய அறிக்கை ஆணுக்கு எதிரான, பெண்ணுக்குச் சார்பான பாலினப் பார்வையை அடிப்படையாகக் கொண்டுள்ளது. ஆனால், அவசரச் சட்டமோ பாலின வன்புணர்ச்சியை பாலின சமநிலையில் அணுகுகிறது. விளைவாக, ஓர் ஆண் கூட பெண்ணின் மீது பாலின வன்புணர்ச்சி குற்றம் சுமத்தலாம் என்ற நகைப்பிற்கிடமான நிலை உண்டாகியிருக்கிறது.

கீழ் நிலையில் உள்ள காவல் அல்லது இராணுவ ஊழியர்/அதிகாரி வன்புணர்வில் ஈடுபட்டால் அதற்கு அவருக்கு மேலுள்ள அதிகாரியே பொறுப்பேற்க வேண்டும் என்ற வர்மா ஆணையத்தின் அடிப்படையான பரிந்துரையை அரசு புறந்தள்ளிவிட்டது. இது எத்தனை மோசமானது என்பதைப் புரிந்து கொள்ள வேண்டுமானால், நீங்கள் சோனி சோரிக்கு நிகழ்ந்ததைத் தெரிந்து கொள்ள வேண்டும். மூத்த காவல்துறை அதிகாரியான அன்கிட் கார்க் என்பவன் சோனி சோரியைப் பாலியல் ரீதியாக துன்புறுத்தும்படி தனது கீழ் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டான். (அவனுக்கு இந்தியாவின் முதல் பெண் குடியரசுத் தலைவர் வீர விருது வழங்கி கௌரவித்தார் என்பது மற்றொரு வெட்கத்துக்குரிய செய்தி). குனான போஸ்போரா என்ற வழக்கையும் இங்கே குறிப்பிட வேண்டும். காஷ்மீரில் உள்ள தொலைதூர மாவட்டமான குப்வராவைச் சேர்ந்த குனான போஸ்போரோ கிராமத்துப் பெண்கள் அனைவரையும் இராணுவ வீரர்கள் கூட்டு பாலியல் வன்புணர்வுக்கு ஆளாக்கினர். உயர் இராணுவ அதிகாரியின் ஆதரவின்றி, தூண்டுதல் இன்றி, சரியாகச் சொன்னால் உத்தரவின்றி இப்படியொரு குற்றம் நடப்பது எப்படி சாத்தியம்?

சாதி/ மதவாத தாக்குதல்கள்/ படுகொலைகள் நிகழும்போது நடக்கும் பாலியல் வன்முறைகளை பாரதூரமான பாலியல் குற்றம் என்ற வர்மா ஆணையத்தின் பரிந்துரை அவசரச் சட்டத்தில் காணவில்லை.

நீதிபதிகள், பொதுமக்கள் ஊழியர்கள் போன்றோர் பாலியல் குற்றம் செய்தால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க தனியாக அனுமதி கோர வேண்டியதில்லை என்ற வர்மா ஆணையத்தின் பரிந்துரையை அரசு மறுத்துள்ளது. அதுபோல ஆயுதப்படையினர் சிறப்பதிகாரச் சட்டத்தில் திருத்தம் செய்து, பாலியல் குற்றங்களுக்குத் தண்டனை வழங்க வேண்டும் என்ற பரிந்துரையையும் அரசு மறுத்து ஒதுக்கியுள்ளது. பாலியல் குற்றம் புரிந்தவர் தேர்தலில் போட்டியிட முடியாது என்ற ஆணையத்தின் கருத்தும் புறந்தள்ளப்பட்டு விட்டது.

வர்மாவின் வாதம் மிக எளிமையானது: ஒரு நீதிபதி அல்லது பொது ஊழியம் செய்யும் அரசியல்வாதி, அல்லது ராணுவம்/காவல்துறை அதிகாரி என்ற எவரின் கடமையாகவும் வன்புணர்வு இருக்க முடியாது. அவர் பாலியல் குற்றம் செய்தார் என்றால் அவர் தண்டனைக்குரியவர்.

இந்த எளிய, நியாயமான, பெண்கள் சார்புள்ள வாதத்தை மத்திய அரசு நிராகரித்துள்ளது. இதன் பொருள் என்ன?

பாலியல் வன்புணர்ச்சிக்கு மரண தண்டனை தேவையில்லை என்ற வர்மா ஆணையத்தின் பரிந்துரையை அரசு மறத்து, மரண தண்டனை வழங்கப்படும் என்று அவசரச் சட்டம் சொல்கிறது. பாலியல் குற்றத்துடன் கொலைக் குற்றமும் சேரும்போது மரண தண்டனை என்பது ஏற்கனவே சட்ட நடைமுறையில் இருக்கிறது. ஆனால், அவ்வாறு மரண தண்டனை அளிக்கப்படுவதும், அளிக்கப்பட்ட மரண தண்டனை நிறைவேற்றப்படுவதும் மிகக் குறைவு. எனவே, மரண தண்டனை என்று அரசு சட்டத்திருத்தம் செய்வது வீரதீரமான நடவடிக்கையாக இருக்குமே தவிர பலன் தரும் நடவடிக்கையாக இருக்காது. எனவே, நீண்ட கால சிறை தண்டனைகள், குற்றத்தின் கொடூரம் அதிகரிக்க, அதிகரிக்க தண்டனையின் காலம் அதிகரிக்கும் என்ற வர்மா ஆணையத்தின் பரிந்துரை நீதிமன்ற நடவடிக்கைகளில் நீதிபதியின் ஆணிய கருத்தை நடைமுறையாக்குவதை சிரம‌மாக்கும் தன்மை கொண்டவை என்பதையும், சாதாரண தண்டனையுடன் அல்லது கருணை மனுவின் பேரில் குற்றவாளி தப்பிச்செல்ல அரசு கதவுகளைத் திறந்துவிடுகிறது என்பதையும் நாம் இனம் காண வேண்டும்.

முதல் தகவல் அறிக்கையைப் பதிவு செய்யத் தவறும் காவல் துறையினருக்கு 5 ஆண்டு சிறை தண்டனை என்று வர்மா பரிந்துரைத்தார். இந்த விவகாரத்தில் சிறை தண்டனையை அரசு ஒப்புக்கொண்டாலும் ஓராண்டு என்று அதனைக் குறைத்துள்ளது.

பாலியல் கொடுமைக்கு ஆளான பெண்ணைக் கையாளுவதற்கான மருத்துவ-சட்ட ரீதியான நடைமுறைகளுக்கான வழிகாட்டுதல்களை வர்மா ஆணையம் பரிந்துரைத்திருந்தது. இரண்டு விரல் சோதனை போன்ற கேடுகெட்ட, அவமானகரமான, பெண்களுக்கு இழிவை ஏற்படுத்தும் நடைமுறைகளைக் கைவிடும்படி வர்மா ஆணையம் பரிந்துரைத்திருந்தது. காவல்துறையை சீர்செய்வது, பொதுப் போக்குவரத்தை முறைப்படுத்துவது என்ற முக்கியமான ஆனால் விரிவான வர்மா ஆணையப் பரிந்துரைகள் முழுமையாக புறந்தள்ளப்பட்டுவிட்டன.

சுருக்கமாகச் சொன்னால்:

16 வயது பெண்ணாக இருந்தால் விரும்பி, பாலியல் நடவடிக்கையில் இறங்கக் கூடாது. திருமணமான பெண்ணாக இருந்தால் கணவனின் விருப்பத்திற்கேற்ப பாலியல் நடவடிக்கையில் இறங்க வேண்டும். எனவே, பெண்ணுக்கு தன் உடல் மீது உரிமை கிடையாது என்கிறது அரசின் அவசரச் சட்டம்.

திருமணம் என்ற நிறுவனத்தின் அதிகாரியான கணவனும், காவல்துறை/ இராணுவம்/ நீதிபதிகள்/ பொது ஊழியர்களாகிய அரசியல்வாதிகள் உள்ளிட்டோர் பாலியல் குற்றம் செய்தாலும் அவர்கள் சார்ந்த நிறுவனத்தின் காரணமாக தண்டனையிலிருந்து தப்பித்துச் செல்லலாம்/ பாதுகாக்கப்படலாம்/ குறைவான தண்டனை பெறலாம். எப்படி இருக்கிறது நியாயம்?

டெல்லி பாலியல் கொடுங்குற்றத்திற்குப் பின்பு, நாடு எதிர்கொண்ட பெண்களின் போராட்ட அலையின் காரணமாக பிறப்பெடுத்த வர்மா ஆணைய அறிக்கையை நீர்த்துப் போகச் செய்ய அனைத்தையும் காங்கிரஸ் கூட்டணி அரசு செய்யும் என்ற மதிப்பீடு சரியானதுதான் என்றாகிப் போனது.

'மரண தண்டனையை' உயர்த்திப் பிடித்து அதன் மூலம் தான்தான் சிறந்த பெண் பாதுகாவலன் என்ற வேடத்தை பாரதீய‌ ஜனதா கட்சி அரங்கேற்றி தனது ஆணாதிக்க பழமைவாதத்தை மறைத்துக் கொள்ளப் பார்க்கிறது.

அனேகமாக, அனைத்துக் கட்சிகளும் வழக்கம்போல கள்ள மௌனம் சாதிக்கும் என்பது உறுதி. பெண்களுக்கான இட ஒதுக்கீட்டை நிறைவேற்றுவதைத் தள்ளிப் போடுவதை ஓர் அரசியல் கடமையாகக் கொண்டுள்ள அரசியல் கட்சிகள், அரசியல்வாதிகளையே குற்றவாளியாக்கும் வர்மா ஆணைய பரிந்துரைகளை நடைமுறைப்படுத்தாது.

சோனியாவின் காங்கிரஸ் துவங்கி ஆண் அரசியல்வாதிகளின் கட்சிகள் வரை அனைத்தும் பெண்கள் விரோதமானவை என்ற உண்மை அம்பலமாகி ஆட்சியதிகாரத்தில் இருந்து விரட்டப்படும்வரை பெண்கள் போராட்டம் நீள வேண்டும். அந்தப் போராட்டத்தின் முக்கியமான அங்கமாக வர்மா ஆணைய பரிந்துரைகள் இருக்க வேண்டும்.

Pin It