சாதிமறுப்புத் திருமணங்கள் அதிகரிப்பதால் சாதி ஒழிந்துவிட்டதா? சாதிமறுப்புத் திருமணம் புரிந்தோரின் வாரிசுகள் பெற்றோர்களின் சாதியை, அதுவும் தாய் அல்லது தந்தை தாழ்த்தப்பட்டவராக இருந்தால் அந்த சாதியைத்தானே அடையாளப்படுத்துகின்றனர். இடஒதுக்கீட்டில் பயன்பெற வேண்டுமென்ற எதிர்காலத் திட்டமிடலில், சாதிமறுப்புத் திருமணத் தம்பதிகளுக்குப் பிறக்கும் வாரிசுகளுக்கும் சாதி அடையாளத்தைச் சூட்டிவிட்ட பிறகு இதில் சாதி ஒழிப்பு எங்கே? என்ற கேள்வி ஒரு சிலரால் முன்வைக்கப்படுகிறது.

 இப்படிக் கேள்விக்கணை தொடுப்பவர்கள் முதலில் ஒன்றைப் புரிந்து கொள்வது நல்லது. காதலிப்பவர்கள் அல்லது சாதிமறுப்புத் திருமணம் செய்பவர்கள் எல்லாம் சாதிஒழிப்புப் போராளிகள் என்று நினைப்பது தவறு. அவரவர் பணிபுரியும் இடம், வாழ்விடம், பழகுமிடம், இப்படி ஒரு ஆணும் பெண்ணும் நெருக்கமான சூழலிலேயே சந்திப்புகளும் அதன் தொடர்ச்சியாக காதலும் ஏற்படுகின்றன. ஒரு ஆண் ஒரு பெண்ணையோ அல்லது ஒரு பெண் ஒரு ஆணையோ காதலிக்கத் தொடங்கும்போது யார் யார் என்னென்ன சாதி என்று தெரிந்து கொண்டுதான் காதலிக்கின்றனர். ஒரு ஆணின் அல்லது பெண்ணின் தனித்தன்மை, அழகு, பொருளாதாரம், கல்வியறிவு, பண்பு நிலை, இவைகளில் ஏதாவது ஒன்றோ இரண்டோ பிடித்திருந்தால் காதல் மலர்கிறது. இந்தக் காதல், திருமணத்தில் முடிந்தபின் இவர்களுக்குப் பிறக்கும் குழந்தைகளை 'சாதியற்றவர்கள்' என்று அழைக்கும் உரிமை பெற்றோர்களுக்குக் கிடையாது.

 நிலைமை இவ்வாறு இருக்க சாதிமறுப்புத் திருமணங்கள் செய்து கொண்டவர்கள் மீது சேற்றைவாரி இறைக்கும் வேலை ஒருபக்கம் நடந்து கொண்டிருக்கின்றது. "பார்ப்பன‌ சாதிப்பெண்ணை திருமணம் செய்து கொண்ட ஒரு தாழ்த்தப்பட்டவர் தன் வாரிசுக்கு தாழ்த்தப்பட்டவர் என்று சாதிச்சான்று பெற்று விடுகிறார். இதனால் இவரது வாரிசு தாழ்த்தப்பட்டவர் என்ற தகுதியுடன் கல்வி, வேலை வாய்ப்புகளிலும் முன்னுரிமை பெற்று உயர்ந்து விடுவார். இதனால் உண்மையான தலித் குழந்தைகளின் இடஒதுக்கீட்டை இவர்கள் பறித்துக் கொள்கிறார்கள்" என்று பேனாவில் மைஊற்றி எழுதவதற்குப் பதிலாக பார்ப்பனியப் பொய் ஊற்றி சிலர் எழுதி வருகின்றனர்.

 காரணம், சாதிமறுப்புத் திருமணம் செய்து கொண்டவர்களின் குழந்தைகள், தாய் அல்லது தந்தை சாதியைத்தான் சூட்டிக்கொள்ள மட்டுமே உரிமையிருக்கிறது. சாதியற்றவர்கள் என்றோ அல்லது தமிழர் என்றோ புதிய பெயரை அடையாளப்படுத்த உரிமையில்லை. அதாவது ஒரு தாழ்த்தப்பட்ட ஆண், ஒரு பார்ப்பன சாதிப் பெண்ணை திருமணம் செய்து கொள்கிறார் என்றால் இவர்களுக்குப் பிறக்கும் குழந்தைகளுக்கு இரண்டு சாதியில் ஏதாவது ஒன்றை, அதாவது தாழ்த்தப்பட்டவர் அல்லது பார்ப்பனர் என்றுதான் குறிப்பிடமுடியும். இப்போது நமக்குத் தெரியும், அந்தக் குழந்தைக்கு தாழ்த்தப்பட்டவர் என்றே சாதிப்பெயரைக் குறிப்பிட பெற்றோர் விரும்புவார்கள். காரணம் இடஒதுக்கீட்டின் பயன் தங்களின் குழந்தைக்குக் கிடைக்க வேண்டுமென்ற எதிர்பார்ப்புதான். ஆனால் இன்று அதுகூட சாத்தியமற்றதாகிவிடும் நிலை உள்ளது. காரணம் சாதிமறுப்புத் திருமணம் செய்து கொண்டவர்களின் வாழ்நிலைப் பகுதியைப் பொருத்துதான் அவர்களின் குழந்தைகளுக்கு, பெற்றோர்களில் யாருடைய சாதியைச் சூட்ட வேண்டும் என்று சாதிச்சான்று வழங்கும் அதிகாரிகள் தீர்மானிக்கின்றனர். அதாவது பார்ப்பனப் பெண்ணை மண‌முடித்த தாழ்த்தப்பட்டவர், தாழ்த்தப்பட்டோர் பகுதியில் வாழ்ந்தால் இவர்களின் குழந்தைகளுக்கு தாழ்த்தப்பட்டோர் என்றே குறிப்பிடவேண்டும். இவர்கள் அக்ரகாரத் தெருவில் அல்லது பொதுக் குடியிருப்புப் பகுதியில் வசித்தால் தன் குழந்தைக்கு பார்ப்பனர் என்ற சாதிப்பெயரைக் குறிப்பிட வேண்டும் என்று அரசு அதிகாரிகள் கூறுகிறார்கள்.
 
 பார்ப்பன சாதிப் பெண்ணை மட்டுமல்ல, தாழ்த்தப்பட்டோர் அல்லாத பிற சாதிப் பெண்களை திருமணம் செய்தாலும் ஒரு தாழ்த்தப்பட்டவரால் அவரது வாரிசுக்கு தன் சாதி அடையாளத்தை வழங்க முடியும் என்ற உண்மையை, பொய்யூற்றி எழுதுபவர்கள் மூடி மறைப்பதற்குப் பெயர்தான் நவீனப் பார்ப்பனியம். சாதிமறுப்புத் திருமணத்தைத் தவிர்த்து சொந்த சாதியில் மணமுடித்திருந்தாலும் வாரிசுகளுக்கு தன் சொந்த சாதியின் அடையாளத்தை ஒரு தாழ்த்தப்பட்டவரால் வழங்க முடியும். இதன்மூலம் அவர் அதே இடஒதுக்கீட்டுப் பயனை தன் வாரிசுக்கு வழங்க முடியும். இதனால் பிற தலித் குழந்தைகளின் கல்வி, வேலை வாய்ப்பை பறித்த குற்றத்திற்கு இவர் எப்படி ஆளாவார்? அரசாங்கம் செய்ய வேண்டிய வேலையை சாதிமறுப்புத் திருமணம் புரிந்தவர்கள் செய்யமுடியாது, செய்யவும் சட்டத்தில் இடமில்லை. சரி இதற்குத் தீர்வுதான் என்ன? சாதி, தீண்டாமை ஒழிப்பில் அரசு உண்மையான அக்கறை செலுத்தினால் அடுத்த 20 ஆண்டுகளில் முற்றாக சாதியை ஒழித்துவிடலாம். இதற்கு அரசாங்கம் செய்ய வேண்டிய வேலை சுலபமானதும் கூட.

 ஒரு தாழ்த்தப்பட்ட ஆணையோ, பெண்ணையோ தாழ்த்தப்பட்டவரல்லாதவர் திருமணம் செய்து கொண்டால் மட்டுமே சாதிமறுப்புத் திருமணமாக தமிழக அரசு அங்கீகரிக்கிறது; சலுகைகள் வழங்குகிறது. அதாவது தம்பதிகளில் நிச்சயம் யாராவது ஒருவர் தலித் அல்லது பழங்குடியினராக இருக்க வேண்டும். பிற சாதிகளுக்குள் நடக்கும் திருமணங்களை சாதிமறுப்புத் திருமணமாக அங்கீகரிக்கவில்லை. உதாரணமாக தேவர் சாதிக்கும், வன்னியர் சாதிக்கும் நடக்கும் திருமணங்கள் சாதிமறுப்புத் திருமணங்களாக அங்கீகரிக்கப்படுவதில்லை. அதே நேரத்தில் சாதிமறுப்புத் திருமண தம்பதிகளாக அங்கீகரிக்கப்படுவர்களுக்கும் பெரிதாக அரசின் உதவி கிடைத்து விடுவதில்லை. சாதிச்சான்று, திருமண அழைப்பிதழ், திருமணப்பதிவு, அதிகாரிகளின் சான்றொப்பம் இத்தனையும் இருந்தால் மட்டுமே சில ஆண்டுகள் அலைக்கழிப்பிற்குப் பின் சாதிமறுப்புத் திருமண தம்பதிகளாக அங்கீகரித்து ரூ.20,000/- உதவித் தொகை வழங்கப்படுகின்றது. தீண்டாமையும், சாதிவெறியும் தலைவிரித்து ஆடுவதற்குக் காரணம் அரசின் இந்த அலட்சியம்தான்.

 சாதி ஒழிப்பிலும், சாதி மறுப்புத் திருமணம் புரிந்து கொண்டவர்களுக்கு உரிய பாதுகாப்பையும், வாழ்வாதாரத்தையும் வழங்க தமிழக அரசு மூன்று உறுதியான, முக்கியமான முடிவுகளை உடனடியாக மேற்கொண்டாக வேண்டும்.

1) தாழ்த்தப்பட்டோர் - பிறசாதியினர்களுக்கிடையே நடைபெறும் திருமணங்கள் மட்டுமல்லாமல் அனைத்து சாதிக்களுக்குள் நடக்கும் சாதி மறுப்புத் திருமணங்களையும் அரசு அங்கீகரிக்க வேண்டும்.

2) சாதி மறுப்புத் திருமணங்கள் புரிந்த தம்பதியினர்களில் யாரேனும் ஒருவருக்கு திருமணம் முடிந்த ஒரே மாதத்தில் தகுதிக்கேற்ப அரசுப்பணி வழங்க வேண்டும்.

3) சாதிமறுப்புத் திருமணத் தம்பதியினரின் குழந்தைகளுக்கு சாதியைக் குறிப்பிடும் இடத்தில் நம்முடைய மரபு வழி அடையாளமாகவும், தேசிய அடையாளமாகவும் திகழும் 'தமிழர்' என்ற சொல்லை பயன்படுத்த வேண்டும்.

சாதி ஒழிப்பிற்காக சாதி மறுப்புத் திருமணம் செய்து கொண்டோருக்கு உண்டான இம்மூன்று செயல் திட்டங்களையும் தமிழக அரசு உடனடியாக நடைமுறைப்படுத்தினால் சாதி ஒழியும். நாட்டில் அமைதி நிலவும். ஆனால் அரசு இதை நடைமுறைப்படுத்தாது ஏன்?

 கடந்த 40 ஆண்டுகாலமாக மாறி மாறி தமிழகத்தைச் சுரண்டி வரும் இரு திராவிடக் கட்சிகளும் சாதியால், மதத்தால், தமிழர்கள் பிரிந்து பிளவுப்பட்டிருப்பதைத்தான் விரும்பும். அப்போதுதான் இவர்களால் எளிதில் ஆட்சிக் கட்டிலைத் தக்க வைக்க முடியும். தமிழர்களின் ஒற்றுமையை சீர்குலைத்து சாதித் தலைவர்களை தேர்தலுக்குத் தேர்தல் உருவாக்கி சாதிகளுக்குள் பகைமையை மூட்டி தமிழர்கள் ஒரு தேசிய இனமாக எழுந்து நிற்க முடியாமல் போனதற்கு தமிழகத்தை ஆண்ட, ஆண்டு கொண்டிருக்கும் இரு திராவிடக் கட்சிகள் தான் காரணம். எல்லோரும் தமிழர்களாகிவிட்டால் தென் மாவட்டத்திலும், மேற்கு மாவட்டத்திலும், வட மாவட்டத்திலுமாக இப்படி அவரவர் சாதிகள் நிறைந்த பகுதிகளில் சாதி அரசியல் நடத்த முடியாமல் போய்விடுமோ என்ற காரணத்தினால் சாதியத் தலைவர்களும் இதில் ஆர்வம் காட்டவில்லை; இனியும் காட்ட மாட்டார்கள்.

 வெள்ளையர்களிடம் நாடு அடிமைப்பட்டுக் கிடந்தபோதுகூட நாட்டின் விடுதலைக்காக ஓரளவு சுதந்திரமாக சுற்றித் திரிந்த தலைவர்கள் இன்று சுதந்திர இந்தியாவில், தமிழகத்தில் சிறைபட்ட கூண்டுக்குள் நிற்கிறார்கள் சிலையாக. இந்த அவமானம் வெள்ளையனின் காலத்தில் கூட அவர்களுக்கு நேர்ந்திருக்காது. இந்த தலைவர்களின் பிறந்தநாளை தமிழ்ச் சமூகம் கொண்டாடுவதற்குப் பதிலாக அவரது சாதியில் பெயரால் கொண்டாடும் அவலம் தமிழகத்தில் பெருகி வருகிறது. இதனால் பெரும் கலவரம், துப்பாக்கிச்சூடு, வழக்குகள், நீடித்த பகை, பொருளிழப்பு, அரசுச் சொத்துக்கள் நாசம் என்று அடிக்கடி நிகழும் அவமானங்கள் அழியாக் கறையாக மாறிவருகின்றன. இதற்கெல்லாம் ஒரே முற்றுப்புள்ளி சாதி மறுப்புத் திருமணங்களை ஊக்குவிப்பதும், அவர்களின் வாழ்வாதாரத்திற்கு அரசு உறுதியளிப்பதும்தான்.

 வேலை வாய்ப்பு இல்லாதவன் என் பெண்ணை வைத்து எப்படி காப்பாற்றுவான் என்ற பெற்றோர்களின் கருத்தும், கவலையும், நியாயமானதுதான். சாதிமறுப்புத் திருமணம் புரிந்தவர்களில் ஒருவருக்குத் தகுதிக்கேற்ப அரசுப் பணி நிச்சயம் என்றால் சாதி மறுப்புத் திருமணம் செய்து கொண்டவர்களின் வாழ்வுரிமை காப்பாற்றப்படும். காதல் செய்பவர்களும் திருமணம் முடிந்தால் தகுதிக்கேற்ப வேலை கிடைக்கும் என்பதால் படிப்பில் கவனம் செலுத்துவார்கள் அல்லது தன்னைவிட படிப்பில் உயர்ந்தவர்களைத் தேர்ந்தெடுப்பார்கள். இரண்டினாலும் படிக்கும் எண்ணம், இளைஞர்களிடம் பெருகும். பெற்றோர்களுக்கும் தங்களது வாரிசுகளுக்கு மருமகளோ, மருமகனோ தேடும் வேலையும், வரதட்சணைச் செலவும், நாள், நட்சத்திரம், பொருத்தம் பார்க்கும் வீண் அலைச்சலும், செலவும் மிச்சமாகும். இதனால் பொருந்தாத் திருமணங்கள் முடிவிற்கு வரும். அதோடு கள்ளக்காதலும், கொலைகளும் முடிவிற்கு வரும். நாட்டில் வெகுவிரைவில் சாதிக்கலவரம் குறையும். சாதியின் பெயரால் பிழைப்பு நடத்துவோரின் சோற்றில் மண் விழும். திராவிடக் கட்சிகளின் ஆட்சியதிகாரம் முடிவுக்கு வரும். இன்னும் ஒருசில தலைமுறைகளிலேயே 'தமிழர்கள்' என்ற ஒற்றை அடையாளம் மீட்டெடுக்கப்பட்டுவிடும்.

 படித்தவர்களுக்கு வேலை உத்திரவாதம் என்றால் காதலிப்பவர்களில் இருவருமே படித்திருக்காவிட்டால் அவர்களின் நிலை என்ன என்ற கேள்வி எழுகிறது. அவர்களின் நீடித்த வாழ்வாதாரத்திற்கு தமிழக அரசு 5 லட்ச ரூபாய் நிதி உதவி வழங்க வேண்டும். காதலிப்பவர்கள் ஏற்கனவே அரசுப் பதவியில் இருந்தால் பதவி உயர்வில் அவர்களுக்கு முன்னுரிமை வழங்க வேண்டும். சாதி மறுப்புத் திருமணம் செய்து கொண்டவர்களின் வாரிசுகளுக்குண்டான கல்விச் செலவை அரசே ஏற்றுக்கொள்ள வேண்டும். அவர்களுக்கும் வேலை வாய்ப்பில் உத்திரவாதமளிக்கும் வகையில் சட்டம் இயற்ற வேண்டும்.

 ஆனால் இவையெல்லாம் நாளைக்கே நடைமுறைக்கு வந்துவிடாது; விடவும் மாட்டார்கள். தமிழினத்தை பிடித்து உலுக்கிக் கொண்டிருக்கும் இந்த சாதிப் பேயை எப்பாடுபட்டாவது ஒழித்துக் கட்டியாக வேண்டும். அதற்கு ஒரே வழி உயிரைக் கொடுத்தேனும் இப்பணியை நாம் செய்தாக வேண்டும். மேற்கண்ட வேலைத் திட்டத்தை நடைமுறைப்படுத்த தமிழ்த் தேசிய, இடதுசாரிய, பெண்ணிய அமைப்பினர் ஓரணியில் உடடினயாகத் திரளவேண்டும்.

- கா.தமிழ்வேங்கை

Pin It