தருமபுரி மாவட்டம் நத்தம், அண்ணா நகர், கொண்டம்பட்டி தாழ்த்தப்பட்ட மக்களின் மீது தொடுக்கப்பட்ட தாக்குதல் குறித்து சாதி ஒழிப்பு இயக்கத்தின் ஆய்வு அறிக்கையிலிருந்து சில பகுதிகள்:

தருமபுரி மாவட்டம் நாயக்கன் கொட்டாய் தமிழகத்தின் செந்தளப் பிரதேசமாய் தகதகத்த மண். 1970களின் வசந்தத்தின் இடிமுழக்கத்தால் விடியலைப் பெற்ற அந்த பூமியில்தான், பாலனும், அப்புவும் நடமாடி, உழைக்கும் வர்க்கத்தின் ஒற்றுமைக்கும், அரசியல் அதிகாரத்துக்குமான போராட்ட வேள்வியில் எதிரிகளால் வேட்டையாடப்பட்டனர். அந்த மண்ணில்தான், இன்று 2012 – நவம்பர் 7-ல் சாதி வெறிபிடித்த வேட்டை நாய்கள், பிறவியின் பெயரால் ஒடுக்கப்பட்ட, நசுக்கப்பட்ட, தாழ்த்தப்பட்ட (பறையர்) சமூகத்தினர் மீது கொடூரமான வார்த்தைகளில் வடிக்க முடியாத அடக்குமுறை யுத்தத்தைத் தொடுத்துள்ளனர்.

இராசபக்சே ஓர் அரசின் அதிகார சக்தியாக இருந்து, முள்ளிவாய்க்காலில் தமிழீழப்போரை மூர்க்கமுடன் ஒடுக்கிய ஆவேசத்துடன், 1994-ல் கொடியங்குளத்தில் ஜெயலலிதா, சசிகலாவின் போலிசு பட்டாளம் நிகழ்த்திய கொலை வெறியாட்டத்துடன், 2011-ல் நவம்பர் புரட்சியின் நினைவுநாளில், நாயக்கன் கொட்டாய் நத்தம் காலனியிலும், அண்ணாநகர், கொண்டாம்பட்டி பறையர் குடியிருப்புகளிலும், காவல்துறையின் கண்முன்னிலையிலேயே வன்னிய சாதிவெறியாட்டம் அரங்கேற்றப்பட்டிருக்கிறது.

dalith_colony_646

தாக்குதலுக்குப் பிறகு தலித் குடியிருப்புகளை பார்வையிட்ட தலித் இயக்கங்கள், மனித உரிமை அமைப்புகள், வர்க்கப் போராட்டத்தை கொள்கையாக வரித்துக் கொண்ட புரட்சிக்கர ஆற்றல்கள், தமிழ்த் தேசிய இன விடுதலைக்கான இயக்கங்கள் யாவும், நாயக்கன் கொட்டாயிலா இந்த நிலை? எப்படி, எவ்வாறு இங்கே நிகழ்ந்தது? என வியப்பின் உச்சியின் நின்று மலைத்துப் போயினர்! கீழத் தஞ்சையின் கம்யூனிச நெருப்பு மண்டலத்தில் தான் 1968-ல் 44 தலித் விவசாயக் கூலிகள் சாதிய நிலப் பிரபுத்துவ வர்க்க சக்திகளால் உயிரோடு எரித்துக் கொல்லப்பட்டனர். தர்மபுரியில் சாதி வெறியர்களுடன் ஆளும் வர்க்க அரசின் உளவுப்படையும் தலித்துகளின் வீடுகள் எரிப்புக்குப் பின்னால் துணை நின்றதை புரிந்து கொள்ள வேண்டும். கீழ் வெண்மணியில் 44 உயிர்கள் சாம்பலாக்கப்பட்ட அன்று பெரும்பாலான பகுதி விவசாயக் கூலிகள் திருவனந்தபுரத்தில் நடைபெற்ற அ.இ.வி.தொ.ச. மாநாட்டுக்குச் சென்றிருந்தனர். தருமபுரி சாம்பலாக்கப்பட்ட நேரத்தின் வன்னியர்களின் தாக்குதலை எதிர்கொள்ள வேண்டிய தலித் இளைஞர்கள் பெங்களூரு, ஓசூர், திருப்பூர் போன்ற நகரங்களுக்கு வேலை நிமித்தம் சென்றிருந்தார்கள்.

சாதி வெறியர்கள் ஒருபோதும் தலித்துகளின் மீதான தாக்குதலை நேரிடையாகச் செய்ததில்லை. மறைந்திருந்தோ, திட்டமிட்டோ திடீரென்று கும்பலாகத் திரண்டு முன்னிரவிலோ, விடியற்காலையிலோ தாக்குதல் நடத்தி, தங்கள் கோழைத்தனத்தை பறைசாற்றி வந்திருக்கிறார்கள்.

தமிழகத்தில் - இந்தியாவில் நடந்த எந்தச் சாதி வெறியாட்டத்திலும் ஆதிக்கச் சாதிப் பெண்கள் பங்கெடுத்ததாக செய்திகள் இல்லை. ஆனால் தருமபுரி சேரிகளின் அழித்தொழிப்பில், வன்னிய சாதிப் பெண்கள் சிலர் பாட்டில்களில் பெட்ரோல் நிரப்பி, திரிகொளுத்திக் கொடுத்ததும், வீட்டின் பிரோக்களில் உள்ள பொருட்களை கொள்ளையடிக்கும் செயல்களிலும் பங்கேற்ற செய்தி, ஆய்வுக்குழுவினர் பலரையும் கலங்கடித்தது.

திவ்யா இளவரசன் திருமணத்திற்குப் பிறகு ஆத்திரமுற்ற உள்ளூர் வன்னிய சாதிப் பிரமுகர்களும் பா.மா.க. தலைவர்கள் சிலரும் திருமணத்தை ரத்து செய்து, தனது மகளை அழைத்து வருமாறு, திவ்யாவின் தந்தை நாகராசனை நெருக்கியள்ளனர். நாகராசன் மிக மோசமான பிற்போக்குவாதியோ, சாதிவெறியரோ அல்ல. ஒரு காலத்தில் சுலுடு இயக்கத்தின் தீவிர ஆதரவாளராக இருந்தவர். ஆனால் 1980-களில் நக்சல்பாரிகள் மீது போலிசு அடக்குமுறை ஏவப்பட்டதற்குப் பிறகு பலரும், பல திசைகளில் சிதறியோ, திசைவிலகியோ போனபோது, தனது சிவப்பு அரசியல் அடையாளத்தை திமுகவுக்குள் கரைத்துக் கொண்டவர். கால ஓட்டம் அவரை சராசரி வன்னியராகவும், பிரபுத்துவ சமூக அமைப்பின் (சாதியமைப்பின்) சகலவிதமான போலி அல்லது வறட்டு கௌரவங்களும் கொண்டவராகவே வாழ்ந்திருக்கிறார். எனவே அவரை சாதிய உறவு உரிமையில் உள்ளூர் சாதிய சக்திகள் நெருக்கவே, அவரும் தன் மகளை அழைத்து வர முயன்றிருக்கிறார். மகள் தன் காதல் கணவருடன் வாழ்வதை உறுதி செய்து, தந்தையின் அழைப்பை மறுத்துவிட்டார்.

ஆனால் அனைத்துக் கட்சிகளையும் சேர்ந்த வன்னியர் சாதியினரும், நவம்பர் 4 அன்று பாட்டாளி மக்கள் கட்சியின் தருமபுரி மாவட்ட இளைஞர் அணித் தலைவர் மதியழகன், புளியம்பட்டி மணி, முருகன், மாது உள்ளிட்ட பலரும் வன்னியர் சாதியினரைத் திரட்டி சாதிப்பஞ்சாயத்து முறையில் கூடிப் பேசி, அதில் எடுத்த முடிவின் அடிப்படையில் நத்தம் காலனி தலித்துகளிடம், குறிப்பிட்ட நாளுக்குள் திவ்யாவை தங்களிடம் (தங்கள் சாதியினரிடம்) ஒப்படைக்கும்படியும், இல்லாவிட்டால் கடுமையான பின் விளைவுகளைச் சந்திக்க வேண்டியதிருக்கும் என்றும் மிரட்டிவிட்டுச் சென்றுவிட்டனர்.

இப்படி ஒரு பஞ்சாயத்து நடந்ததை உள்ளூர் போலிசாரும் அவர்களின் மாவட்ட வருவாய், போலிசு நிர்வாகமும் உளவுப்பிரிவினரின் தகவலோடு அறிந்தே இருந்தனர். பதற்றமான சூழல் அங்கே நிலவுவதை காவல்துறை அறிந்திருந்தது. குறைந்த அளவு பாதுகாப்பு பணியில் போலீசாரும் அக்கிராமத்தில் நிறுத்தப்பட்டனர். ஆனால் கொடூரங்கள் நடந்தால் அதைத் தடுப்பதற்கான கூடுதல் பாதுகாப்பு அம்சங்களை போலீசார் திட்டமிட்டதாகத் தெரியவில்லை.

6-ஆம் தேதி, திவ்யாவின் தந்தை போலீசு நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் தன் மகளை மீட்டுத் தருமாறு காவல் உதவி ஆய்வாளர் பெருமாள் என்பவரை அணுகியுள்ளார். அவர் 'பறையனுக்கிட்ட இரண்டு வருடமாக கூட்டிக்கொடுத்து விட்டு இப்ப என்னை என்ன பண்ணச் சொல்கிறாய்? போய்யா வெளியே! போய் வேற வேலையிருந்தா பாரு' என்ற சொல்லிவிடுகிறார். இன்னொருபுறம் 'பறையன் சம்பந்தி போறான் பாரு' என்று அவரை வன்னியர்கள் கிண்டலும், கேலியும் பேசி வெறுப்பேற்றுகின்றனர். பஞ்சாயத்து நடந்த 4 ஆம் தேதிக்கும், தாக்குதல் நடந்த 7ஆம் தேதிக்கும் இடையில் இடைத்தரகர்களில் சிலர் நாகராசனிடம் குறிப்பிட்ட தொகை கேட்டு பேரம் பேசியதாகவும் தகவல்கள் உள்ளன. இந்த இடைப்பட்ட முக்கோண நெருக்கடியில் தான் நாகராஜன் விஷ‌ம் குடித்து தற்கொலை செய்து கொண்டார் என்று வன்னியரும் - போலீசாரும் கூறுகின்றனர். ஆனால் அங்குள்ள தலித்துகளும் புரட்சிகர முன்னோடிகளில் சிலரும், தங்களுக்கு கிடைத்த தகவலின்படி, அவர் மதுகுடிக்கும் பழக்கமுடையவர் என்பதால் சாதிவெறியர்கள் தங்களது தாக்குதல் திட்டத்தை நிறைவேற்றச் சந்தர்ப்பத்துக்காக காத்திருந்து, இந்த சூழலில் நாகராசனுக்கு மதுவில் விஷ‌ம் கலந்து கொடுத்து கொன்றுவிட்டதாகவும் சொல்கின்றனர். எப்படியோ நாகராசன் மரணம் அங்கு பதற்றத்தைக் கூட்டியுள்ளது.

தாக்குதலின்போது நாயக்கன் கொட்டாயில் 40 போலீசார் முகாமிட்டிருந்தும், அவர்கள் தாக்குதலைத் தடுக்கத் தேவையான, வானத்தை நோக்கிய துப்பாக்கிச் சூடோ, கண்ணீர் புகைக் குண்டுகளோ வீசவில்லை. வீடியோ படமெடுத்துக் கொண்டிருந்தனர். தாக்குதலில் பாமக மதியழகன், தென்னரசு, முருகன், வெள்ளாளப்பட்டி கிருட்டிணமூர்த்தி, புளியம்பட்டி மெடிக்கல் சிவா, மதன்கொட்டாய் ராக்கி, ராமநாதன் முதலியோர் தலைமையேற்றுள்ளனர்.

வீடுகளைக் கொளுத்துவதற்காகவே அங்குள்ள வன்னியர் சமூகத்தைச் சேர்ந்த ரேஷ‌ன்கடை ஊழியர் ஒருவர் மட்டும் 50 லிட்டர் மண்ணெண்ணெய் அளித்துள்ளார். அப்படி என்றால், இது தற்செயல் நிகழ்வல்ல; திட்டமிட்ட நீண்டகால வன்னெஞ்ச வெறியாட்டம் என்பது தெளிவாகத் தெரிகிறது. மாடி வீடுகளின் பளிங்கு தரைகள், அலங்கார கண்ணாடிகள் அனைத்தும் உடைக்கப்பட்டுள்ளன. சில வீடுகளில் சுவர்கள் தெரித்து நீண்ட வெடிப்பைக் கொண்டிருந்தன.

1982-ஆம் ஆண்டில் பெண்ணாடம் அருகே உள்ள தொளார் கிராமத்தில் 208 வீடுகளை 2000 வன்னியர்கள் சூழ்ந்து தீப்பந்தம் ஏந்தி வந்து கொளுத்தியதால் எரிந்த வீடுகளின் காட்சிகளை, மீண்டும் தருமபுரியில் பார்த்து அதிர்ச்சியுற்றோம். வன்னியர்கள் மத்தியில் 1982-க்கும் 2012-க்கும் இடையில் எந்த மனமாற்றமோ,முதிர்ச்சியோ ஏற்படவில்லை என்பதையே இது காட்டுகிறது.

தாக்குதலுக்குள்ளான தலித் குடியிருப்புகளின் இளைஞர்கள், விவசாயக் கூலி வேலையிலிருந்து வெளியேறி திருப்பூர், ஓசூர், தருமபுரி, பெங்களூரு போன்ற நகரங்களில் கடினமாக உழைத்து, ஊதாரித்தனமாக இல்லாமல், நல்லதொரு நடுத்தவர்க்க வாழ்க்கையை அமைத்துக் கொண்டனர். மாடிவீடுகள், தரமான ஓட்டு வீடுகள், சில தொகுப்பு வீடுகள் என கூரைவீடில்லாத வாழ்க்கை நிலைக்கு உயர்ந்திருந்ததை வன்னியசாதி வெறியர்களால் சகித்துக் கொள்ள முடியவில்லை. சாதி மறுப்புத் திருமணம் தான் காரணம் என்றால், இங்கே பல சாதி மறுப்புத் திருமணம் இதற்கு முன்னர் நடந்துள்ளது. அப்போதெல்லாம் வராத கோபம் இப்போது மட்டும் எப்படி வந்தது? தமிழகத்தில் நடந்த தலித்துக்கள் மீதான தாக்குதலில் எங்கேயும், எப்போதும் பிற்படுத்தப்பட்ட சாதிப் பெண்கள் கலந்து கொண்டதாக தகவல் இல்லை. ஆனால் இங்கே பெண்களும், தாக்குதலில் பொறுப்பேற்று இருந்துள்ளது வியப்பைத் தருகிறது.

800 பேர் மீது வழக்கு பதியப்பட்டதில் 136 பேர் மட்டுமே இதுவரையும் கைது செய்யப்பட்டுள்ளனர். தாக்குதலில் சம்பந்தமே இல்லாத கோணாங்கி நாயக்கன் அல்லி கிராமத்தைச் சேர்ந்த நாயுடுகள் 15 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். போலீசாரின் இத்தகைய செயலானது தலித்துக்கு எதிராக அனைத்து சாதியினரையும் பொது எதிரியாக்கிக் காட்டும் போக்காகும். வன்னியர்களாகத் திரண்ட கும்பலில் சில திமுக, தேமுதிகவினர் இருந்ததை காரணமாகக் காட்டி அனைத்துக் கட்சியினரும் தாக்குதலில் ஈடுபட்டார்கள் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கூறுவது, போலீசாரின் உள்நோக்கத்துக்கு இணையானதே.

1980 வரை நக்சல்பாரிப் புரட்சியாளர்களால் தாழ்த்தப்பட்டோர் மற்றும் இதர சமூகங்களில் உள்ள மக்கள் பிரிவினர் திரட்டப்பட்டிருந்தனர். இக்கால கட்டத்தில் தருமபுரி மாவட்டத்தில் நக்சல்பாரி இயக்கத்தில் தலித் சமூகத்தைச் சேர்ந்த சில முன்னணி பொறுப்பாளர்களின் தலைமையில் பிற சமூகத்தில் பிறந்தவர்களும், பிற சமூகத்தில் பிறந்த‌ அரசியல் முன்னணி சக்திகளின் தலைமையிலான அரசியல், வர்க்க அரங்குகளில் தலித்துகளும் பங்கெடுத்திருந்தனர்.

dharmapuri_attack_429

அதாவது, உழைக்கும் வர்க்கம் சாதி, மத முரண்பாடுகளுக்கெதிரான போராட்டத்தினுடாகவே வர்க்க அரசியலில் அணி திரட்டப்பட்டிருந்தனர். ஆனாலும் இந்த அணி திரட்டலானது மிகப் பெரும் மக்கள் சக்தியைக் கொண்ட அணிதிரட்சி அல்ல; மாறாக எதிரி வர்க்கத்தின் அரசும், காவல் துறையும் நிம்மதியாக உறங்க முடியாத அளவிற்கு ஓர் அசைவையும் அவர்களிடையையே பதற்றத்தையும் பதைபதைப்பையும் உருவாக்குகிற அளவிற்கு செல்வாக்குப் பெற்றிருந்தது.

வழக்கமாக, தலித்துகள் அல்லது தலித் இயக்கங்கள் மட்டுமே தங்கள் மீதான சாதியப் பாகுபாடுகள், தீண்டாமைக் கொடுகைளை எதிர்த்து நாட்டின் பல பகுதிகளிலும் போராடி வருகின்றனர். ஆனால் தருமபுரி மாவட்டத்தில் நாயக்கன் கொட்டாய் உள்ளிட்ட நக்சல்பாரி அரசியல் செல்வாக்கு உள்ள கிராமங்களிலெல்லாம் இரண்டு சமூகங்களிலிருந்தும் உருவாகி வந்த நக்சல்பாரிப் புரட்சியாளர்கள், தலித் மக்களுக்கு எதிரான தீண்டாமைக் கொடுமைகளையும், பாகுபாடுகளையும் எதிர்த்துப் போராடிய புதிய வரலாற்றுத் திசையில் சாதி ஒழிப்பு அரசியலும் வர்க்கப் போராட்டமும் பிரிக்கப்பட முடியாத அரசியலாக இணைந்தே இருந்தது.

ஆனால் 1980களில் எம்.ஜி.ஆர். ஆட்சியில் நக்சல்பாரிப் புரட்சியாளர்கள் தமிழகமெங்கும் குறிப்பாக மேற்கு, வடமேற்கு மாவட்டங்களில் அன்றைக்கிருந்த காவல் துறை ஐ.ஜி.தேவாரம் தலைமையில் அடக்குமுறை கட்டவிழ்த்து விடப்பட்டு, இப்பகுதியில் மட்டும் சுமார் 70க்கும் மேற்பட்ட முன்னணித் தோழர்கள் காவல்துறையினால் கொடூரமாகக் கொலை செய்யப்பட்டனர். தோழர் பாலன், அப்பு, கண்ணாமணி, மச்சக்காளை, சீராளன் போன்ற பலரும் அழித்தொழிக்கப்பட்டனர்; சிலர் தலைமறைவானார்கள். காவல் மற்றும் உளவுத் துறையின் அச்சுறுத்தலாலும், பிரித்தாளும் சூழ்ச்சிகளாலும் இத்தகைய இயக்கங்களில் பங்கேற்ற மக்களின், முன்னணிகளின் எண்ணிக்கை வெகுவாகக் குறைந்துவிட்டது. மக்களுக்குத் தலைமை கொடுக்கக் கூடிய நக்சல்பாரிப் புரட்சியாளர்கள் பல்வேறு சிறுசிறு குழுக்களாகச் சிதறுண்டும், தங்களுக்கிடையே ஐக்கியமின்றியும் போயினர். குறிப்பாக ஏ.எம்.கோதண்டராமன் அவர்களை செயலாளராகக் கொண்ட போல்ஷிவிக் கம்யூனிஸ்ட் கட்சி தருமபுரியில் மட்டும் நான்கு குழுவினராகச் சிதறுண்டுள்ளனர். இதைப் போலவே ஊத்தங்கரை வழக்கில் ஒன்றாகக் கைது செய்யப்பட்ட மாவோயிஸ்டுகள் சிறையிலிருந்து வெளிவரும்போது இரண்டு குழுக்களாகப் பிரிந்தனர். இவ்விரண்டு குழுக்களையும் சாராத சிலர், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியில் இணைந்தனர். மாவோயிஸ்ட் கட்சியிலிருந்து வெளியேறியதாக அறிவித்துக் கொண்ட புதிய போராளிக் குழுவினரும் ஒரு சில ஆண்டுகளிலேயே தங்களுக்குள்ளும் பிளவுபட்டு இருவேறு குழுவினராக பிரிந்துவிட்டனர்.

இந்தச் சூழல்களின் தாக்கம் நாயக்கன் கொட்டாயிலும் பிரதிபலித்தது. நாயக்கன் கொட்டாய் அருகிலுள்ள தாக்குதலுக்குள்ளான தலித் கிராமங்களில் பேர் சொல்லிக் கொள்ளும் அளவிற்கு ஓரிரு மாவோயிஸ்ட் ஆதரவு சக்திகளும், பரவலாக விடுதலைச் சிறுத்தைகளும் இருக்கின்றனர். ஆனால் இவர்களுக்குள் சாதிரீயான ஐக்கியமும், அரசியல் அமைப்பு ரீதியான முரண்பாடும் இருக்கிறது. இதில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சாதி ரீதியான அடையாளங்களோடு தன்னை நிலைநிறுத்திக் கொள்வதில் வியப்பொன்றுமில்லை. ஆனால் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, சாதி ஒழிப்பை லட்சியமாகக் கொண்டிருந்தால் அதற்கான அரங்குகளை அல்லது அமைப்புகளை வன்னியர் மத்தியிலும் கட்டி எழுப்பியிருக்க வேண்டும். அப்படிப்பட்ட வேலைத்திட்டத்தைக் கொண்ட இயக்கமாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சி இல்லை என்பதும், அப்படி முயன்றாலும் கூட அது உடனடியாகச் சாத்தியமற்றது என்பதும் நம்மால் விளங்கிக் கொள்ளக் கூடியது தான். புரட்சிகர, வர்க்கப் போராட்ட லட்சியத்தைக் கொண்ட மாவோயிஸ்ட் கட்சியினர் தங்கள் கட்சி ஆதரவுத் தளத்தை அப்பகுதியிலுள்ள அனைத்து சமூகங்களிலும் உருவாக்குவதற்கும், விரிவுபடுத்துவதற்கும் மாறாக, தலித் தெருவுக்குள்ளேயே தங்கள் செயல்பாடுகளைச் சுருக்கி கொண்டதன் மூலம் அடையாளத்தில் புரட்சிகரக் கட்சியாகவும் உள்ளடக்கத்தில் தலித் கட்சியாகவும் காட்சியளிக்கிறது.

இதே போன்று அப்பகுதியிலுள்ள இதர மக்கள் ஜனநாயக இளைஞர் கழகம், மக்கள் ஜனநாயக இளைஞர் அணி, மக்கள் கலை இலக்கியக் கழகம், புரட்சிகர இளைஞர் முன்னணி போன்ற இயக்கங்களாக இருக்கிற நக்சல்பாரி அரசியல் வழியினர் அப்பகுதியிலுள்ள வன்னியர் உள்ளிட்ட விவசாயிகள், இதர உழைக்கும் மக்கள் பிரிவினரிடம் சென்று, மக்களின் சிக்கல்களுக்குக் குரல் கொடுத்து அமைப்பாக்கும் பணிகளில் தங்களை இணைத்துக் கொள்வதற்கு மாறாக, தங்கள் குழுவிற்குள்ளான அரசியல் சித்தாந்த வாதப் பிரதிவாதங்களுக்குள் மூழ்கிப் போயினர். இந்த வெற்றிடத்தை வன்னியர் சங்கமும், பாட்டாளி மக்கள் கட்சியும், இதர தேர்தல் அரசியல் கட்சிகளும் தங்களின் சுயநல, சுயலாப நோக்கங்களுக்காகப் பயன்படுத்திக் கொண்டனர். எனவே வன்னியர்கள் தரப்பிலும் தலித்துகள் தரப்பிலும் மக்களை நேசிக்கும் நேர்மையான ஜனநாயக சக்திகள் உருவாக முடியவில்லை. இந்த நிலைமையானது தத்தமது சமூகங்களுக்குள்ளும் இருவேறு சமூகங்களுக்குள்ளும் எழும் முரண்பாடுகளை வழக்காக்குவதிலும், கட்டைப் பஞ்சாயத்து நடத்துவதிலும், அதன் மூலமாகக் குறுக்கு வழியில் பேரங்கள் மூலமாக பணம் சம்பாதிப்பதிலுமாக மக்கள் விரோதக் குழுவினர் தலையெடுத்து விட்டனர்.

ஒன்று, இரண்டு, மூன்று எனப் பிரச்சனைகள் தலையெடுக்கும் போதெல்லாம் புரட்சிகரக் குழுக்களின் தலையீடு இல்லாமலும், அவர்களுக்குத் தெரியாமலும் இரு சமூகங்களுக்கிடையே உள்ள சுயலாபக் குழுக்கள் சரியாகவோ, தவறாகவோ பிரச்சனையைத் தீர்மானிக்கும் சக்திகளாக மாறிவிடுகின்றன. இத்தகைய போக்கில் இரு சமூகத்திலுமுள்ள சுயநல, சுயலாபக் குழுவினர் தங்கள் இருவருக்கும் ஆதாயம் கிடைக்கிற பிரச்சனைகளில் ஒற்றுமையாகவும், தங்களில் ஒருவருக்கு மட்டுமே ஆதாயம் கிடைக்கிற வேறு சில சிக்கல்களில் பகையுணர்வோடு வேறுபட்டும் தங்களிடையேயான உறவில் ஒற்றுமையும் விரிசலும் கலந்தே அப்பகுதியில் தங்களை நிலைநிறுத்திக் கொள்கிறார்கள்.

இருவேறு சமூகங்களிடையேயான முரண்பாடுகளும், ஒவ்வொரு சமூகத்துக்குள்ளும் நிலவும் வர்க்க முரண்பாடுகளும் கூர்மை அடைகிறபோது தங்களுடைய சுயநலத்தை, சுயலாபத்தைப் பாதுகாத்துக் கொள்ள, லாபத்தில் ஒன்றாக இருந்த இக்குழுவினர் லாபத்தை பங்கிட்டுக் கொள்வதில் பிரச்சினை என்று வருகிறபோது உடனடியாகத் தத்தமது சாதியின் பாதுகாப்பாளர்களாக மாறி, சாதி அரசியல் முரண்பாட்டை மக்களிடம் கொம்புசீவி விடுகின்றனர். இதுவே சாதி மோதலாக வெடித்துக் கிளம்புகிறது. இதில் பலவீனமான சமூகத்தை, பலமான சமூகம் திட்டமிட்டுத் தாக்குகிறபோது எதிர்த்தரப்பினர் குறிப்பாக தலித் தரப்பினர் தங்கள் மீதான தாக்குதலை எதிர்பார்க்காததாலும் தயாரிப்பு இல்லாமல் இருந்ததாலும் இளைஞர்கள் பலரும் வெளியூர் சென்றிருந்ததாலும், தலித்துகள் தரப்பிலிருந்த பெண்களும் குழந்தைகளும் முதியவர்களும் தங்களைத் தற்காத்துக் கொள்ளத் தப்பித்து ஓடத் தள்ளப்பட்டனர்.

திட்டமிட்ட வரையறுக்கப்பட்ட ஆயுதங்களோடு மூன்று குழுவினராகப் பிரிந்து நின்று ஒரே நேரத்தில் நத்தம், அண்ணாநகர், கொண்டாம்பட்டி ஆகிய மூன்று தலித் குடியிருப்புகளிலும் தாக்குதல் தொடுத்துள்ளனர். தலித்துகள் கடந்த 25 ஆண்டுகளில் உழைத்து சேமித்து விளைவித்த சாதனையை முற்றாக அழித்தொழித்து அவர்களுடைய முன்னேற்றத்தை, இன்னுமொரு 25 ஆண்டுகளுக்குப் பின்னுக்குத் தள்ளியுள்ளது. எல்லா சாதி ஆதிக்கத் தாக்குதல்களிலும் தலித்துகளை அழித்து பலவீனப்படுத்தி தங்களது சாதி அதிகாரத்தின் கீழ் கட்டுப்படுத்தி வைத்துக் கொள்ளும் நோக்கமே இங்கும் நிறைவேற்றப்பட்டிருக்கிறது.

இந்த ஆபத்தான போக்கு, தலித்துகளோடு நின்று விடப்போவதில்லை. தன்சொந்த சமூகங்களுக்குள் இருக்கிற உழைக்கும் மக்களை கசக்கிப் பிழிவதும், பிளவுப்படுத்துவதும், தங்கள் சமூகத்திலுள்ள சுயநல சக்திகள்தான் என்பதை அம்மக்கள் அறிய வேண்டும். அப்படி அறியாத வண்ணம் ஏழை வன்னியர்கள், விவசாயிகள், தொழிலாளர்கள் சாதியின் பெயராலான கலாச்சார உறவுகளுக்குள்ளும் மாமன், மைத்துனன், சித்தப்பா, பெரியப்பா போன்ற ரத்த உறவுகளுக்குள்ளும், கடவுள் தலைவிதி தத்துவத்தின் காரக் கிரகத்துக்குள்ளும் மூழ்கிக் கிடப்பதால் அவர்கள் தங்கள் சமூகத்துக்குள்ளேயே இருக்கிற தனது வர்க்க எதிரிகளை அடையாளம் கண்டு அவர்களுக்கு எதிராகப் போராடத் துணிவதில்லை.

மத்திய மாநில அரசுகள் அளிக்கும் இலவசங்களிலும், தேர்தலின் போது அரசியல் கட்சிகள் கொடுக்கும் ரூபாய் 500க்கும் 1000-க்கும் தங்களுடைய நீண்டகால அரசியல் நலன்களை விற்றுவிடுகிற வாக்காளர்கள் மூலம்தான், இப்போது இரண்டு சமூகத்திலும் இருக்கிற சாதிவாத, உள்ளூர் கட்டப்பஞ்சாயத்துக்குத் தலைமை தாங்குகிற தலைவர்கள் வசூலிக்கிற பெருந்தொகையில் சில ஆயிரம் ரூபாய்களைச் சிதறியடித்து மது விருந்து போன்ற சில்லரை இன்பங்களின் பக்கம் திருப்பி, தன்னைச் சுற்றி ஒரு கூட்டத்தை இரு தரப்பினரும் உருவாக்கிக் கொள்கின்றனர்.

இதற்கு எதிராக கூர்மையான நேர்மையான அர்ப்பணிப்பு மிகுந்த புரட்சிகர அரசியல் ஆற்றல்கள் ஒன்றிணைந்து சுய‌நல சக்திகளிடமிருந்து மக்களை வென்றெடுத்தும், தங்களது லட்சியப் பாதையின் கீழ் அணிதிரட்டி, எதிரிகளை முறியடிப்பதன் மூலம் மட்டுமே நாயக்கன் கொட்டாய் தலித் குடியிருப்புகளின் மீது நடத்தப்பட்ட கொடூரமான சாதி வெறியாட்டத் தாக்குதல்களுக்கு நிரந்தரமான முடிவுகாண‌ முடியும்.

பசுமைப் புரட்சியும் அதனையொட்டி தொடர்ந்து வந்த உலகமயமாதல், பொருளாதாரக் கொள்கையும் கிராமப்புறங்களில் விவசாயத்தை நலிவடையச் செய்தது, விவசாயிகளைக் கடனாளியாக்கியது; விவசாய உற்பத்தி நவீன எந்திரமாக்கப்பட்டது. இதில் பிற்படுத்தப்பட்ட சமூகத்தில் இருந்து சிறு, குறு விவசாயிகளும் விவசாய உற்பத்தியில் எந்திரமயமாக்கத்தையும், பணப்பயிர் உற்பத்தியையும் செய்வதற்குத் தகுதியடைந்த புதிய பணக்கார விவசாயிகளிடம் தங்களுடைய துண்டு நிலங்களை இழந்துவிட்டு அல்லது சொற்ப வருமானத்தால் வாழ முடியாது என்று தரிசாகப் போட்டு விட்டு நகரங்களை நோக்கிச் செல்லத் தள்ளப்பட்டனர். நகரங்களில் அவர்கள் தொழிலாளர்களாகவோ காய்கறி, பெட்டிக்கடை போன்ற சிறுதொழில் நிறுவனத்தினராகவோ தங்களை மாற்றிக் கொண்டார்கள். தலித்துகளில் பலரும் அருகிலுள்ள மாவட்டங்கள், மாநிலங்களில் தொழிலாளர்களாக வேலை தேடிச் சென்றனர். இவ்விரண்டு தரப்பினரும் விவசாயப் பொருளாதாரத்திலிருந்து கிடைத்ததைவிட கூடுதலான வருமானத்தை நகர் மயத் தொழிலாளர் உழைப்பால் பெற்றார்கள். அப்படிப் பெற்ற ஊதியத்தில் ஒரு பகுதியைக் கொண்டு உலகமயச் சந்தையின் நுகர் பொருள்களை வாங்கிக் குவிக்க ஆரம்பித்தனர். இச்சூழலானது வளரும் இளம் தலைமுறையினரிடம் பழைய கால சாதிகளிடையேயான இடைவெளியைத் தகர்த்து இளம் பெண்களும் ஆண்களும் நெருங்கிப் பழகவும் காதலிக்கவும் வாய்ப்பளித்தது. இந்தப் போக்கை ஊக்குவிப்பதற்கும் வரவேற்பதற்கும் மாறாக இரு சமூகங்களிலும் உள்ள பிற்போக்கு சுயநல சக்திகள் அதனை சாதி ரீதியாகப் பிளவுப்படுத்தி சாதிய வர்க்கக் கசப்புகளுக்கும், மோதல்களுக்கும் இட்டுச் செல்கின்றனர். இப்படித்தான் நாயக்கன் கொட்டாய் அருகில் உள்ள நத்தம் காலனி இளவரசன், செல்லன் கொட்டாய் திவ்யா காதல் திருமணமும் ஒரு பெரும் தாக்குதலில் கொண்டு வந்து நிறுத்தியது.

dharmapuri_attack_640

பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் மருத்துவர் ராமதாசு அவர்கள் இத்தாக்குதலுக்கும் தமது கட்சிக்கும் வன்னியர் சங்கத்திற்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்று அறிவித்திருகிறார் முழுப் பூசணிக் காயையும் கவளச் சோற்றால் மறைக்கும் கலையை ராமதாஸ் எங்கிருந்து தான் கற்றாரோ? தன் கட்சியின் பொறுப்பாளரும் வன்னிய இளைஞர் அமைப்பின் மாவட்டப் பொறுப்பாளருமான மதியழகன் குறித்து ராமதாஸ் வாய் திறக்காதது ஏன்? மாது (எ) மதன், ராஜா போன்றவர்கள் வன்னியர் சங்கத்தில் பொறுப்பில் இருப்பது உண்மையா? பொய்யா? அவர்களை பாட்டாளி மக்கள் கட்சி மற்றும் வன்னியர் சங்கத்திலிருந்து நீக்காமலேயே தமது கட்சிக்கும், சங்கத்துக்கும் தலித்துகள் மீதான தாக்குதலுக்கும் தொடர்பில்லை என்று சொல்வது கடைந்தெடுத்த அயோக்கியத்தனம் இல்லையா?

தலித்துகள் பொய்யாக வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தில் புகார் கொடுத்தால் அதை நேர்மையாக எதிர்கொண்டு நீதிமன்றத்தில் அதனை பொய் வழக்கு என நிரூபிக்காமல் புகார்தாரருக்கும், காவல் துறைக்கும் பெரும் தொகையை லஞ்சமாகக் கொடுத்து சரிக்கட்ட வன்னியர்கள் முன்வருவது ஏன்?

சாதிய அணுகுமுறையோ, பாகுபாடோ காட்டாத வன்னியர்கள் புகார்தாரருக்கும், காவல்துறைக்கும் லஞ்சம் கொடுக்க முன் வருவதன் மூலம் தங்கள் குற்றத்தை தலித் சமூகத்தில் உள்ள சில இடைத்தரகர் வழியாக சரிசெய்து தப்பித்துக் கொள்கிறார்கள் என்றுதானே பொருள்? இதையெல்லாம் விட்டுவிட்டு தலித் எழுமலைக்கும், பொன்னுச்சாமிக்கும் எம்.பி. அமைச்சர் பதவி கொடுத்தேன் என்று சொல்வது இரண்டு பேரைக் காட்டி லட்சக்கணக்கான தலித்துகளின் உரிமைகளை தங்களின் சாதியினர் அடக்கி ஆளுவதை நியாயப்படுத்தத்தானே உதவும்! இரண்டு பேருக்குப் பதவி கொடுத்துவிட்டு, பல்லாயிரம் தலித்துக்களுக்கு கசையடி கொடுத்தால் பாட்டாளி மக்கள் கட்சி சமூக நீதிக் கட்சியாகிவிடுமா? சித்திரை முழுநிலவு விழாவில் இராமதாசு அவர்கள் முன்னிலையில் சாதிமறுப்புப் திருமணம் செய்வதற்கு எதிராக காடுவெட்டி குரு பேசிய பேச்சு குறித்து மௌனம் சாதிப்பது ஏன்? தமிழின ஒற்றுமைக்கும், தமிழ் பாதுகாப்புக்கும் பாடுபடுவதாகச் சொல்லும் மருத்துவர் இராமதாசு அவர்கள், தமிழர் ஒற்றுமைக்கு வேட்டு வைக்கும் கொங்கு வேளாளர் இளைஞர் பேரவையின் தலைவர் மணிகண்டணின் சாதி மறுப்புத் திருமணத்திற்கு எதிரான பேச்சை ஏன் கண்டிக்கவில்லை? தருமபுரி தாக்குதலுக்கு 20 நாட்களுக்கு முன்பாக செல்லன்கொட்டாய் அருகில் உள்ள அரியகுளம் என்ற கிராமத்தில் காடுவெட்டி குரு பேசியது தற்செயலானதா? திட்டமிட்டதா?

இதைப்போல தோழர் திருமாவளவன் அவர்கள் நாயக்கன் கொட்டாய் தலித்துகளில் மீதான‌ தாக்குதலுக்கு பா.ம.க. தான் காரணம் என்று சொல்லிவிட்டு, இராமதாசோடு இணைந்து சமுதாய நல்லிணக்கத்துக்கு பாடுபடத் தயார் என்று சொல்வது சாதி ஒழிப்பு மற்றும் சமூக நல்லிணக்கத்துக்காகவா? ஓட்டு, கூட்டணி தந்திரமா?

தன் கட்சியைச் சேர்ந்த அப்பகுதி நந்தன் பல்வேறு கட்டப்பஞ்சாயத்துகளில் ஈடுபடுவதும், அதனால் தலித்துகளின் நலன்களும், உரிமைகளும் காவு கொடுக்கப்படுவதும் உண்மையா? பொய்யா? இத்தகைய சக்திகளின் மீது அவர் எடுத்த நடவடிக்கை என்ன? ஊரில் உள்ள சாதி இந்துக்கள், கட்சிக்காரர்கள் செய்யும் கட்டப்பஞ்சாயத்துக்கும், தலித் கட்சி செய்யும் கட்டைப் பஞ்சாயத்துக்கும் வேறுபாடு இல்லையா? ஒடுக்கப்பட்ட சமூகங்களின் உரிமைகள் பறிபோகாமல் இருக்குமானால், எந்த சாதி இந்து உங்கள் கட்சி முன்னணிகளுக்கு பணம் கொடுப்பான்? பா.ம.க. மதியழகன்களையும், மெடிக்கல் சிவா, மாது, முருகன்களையும் தலித்துகளில் கோவிந்தசாமி, ராசா, நந்தன்களையும் அம்பலப்படுத்தி தனிமைப்படுத்தாமல் இத்தகைய சிக்கல்களை எப்படித் தீர்ப்பது? புரட்சிகர ஆற்றல்களின் பங்கு இத்தகைய பணியில் என்னவாக இருக்கப் போகிறது?

வர்க்க எதிரிகளும், அவர்களது அடிவருடிகளும் ஒன்று சேருகிறபோது கம்யூனிஸ்டுகளை, ஜனநாயக சக்திகளை ஒன்றுபடவிடாமல் தடுப்பது எது? தத்துவார்த்த முரண்பாடுகளினூடாகவே, மக்கள் பிரச்சனைகளிலேனும் நாம் ஒன்றுபடாவிட்டால் மக்களுக்கு நேரும் அனைத்துத் துன்பங்களுக்கும் எதிரிகள் மட்டும் காரணமல்ல, நாமும் அத்துன்பங்களுக்கு வலிமை சேர்த்த குற்றவாளிகளே என்பதை சாதி ஒழிப்பு இயக்கத்தின் ஆய்வுக்குழு மூலம் தோழமை ஆற்றல்களுக்கு சுட்டிக் காட்டக் கடமைப்பட்டுள்ளோம்.

- அரங்க.குணசேகரன்

Pin It