திராவிடம் என்கிற சொல் அது உருவான காலத்திலிருந்து இன்று வரை இந்த துணைக்கண்டத்தின் ஆதிக்க வர்க்கத்தை புரட்டிப் போடும் சொல்லாகவே இருந்து வருகிறது. பெரியார் திராவிடர் என்கிற சொல்லாடலை அரசியலாக்கியதிலிருந்து இன்றுவரை தமிழகத்திலுள்ள சனாதனிகளுக்கு அச்சொல் வேம்பாய் கசந்து கொண்டிருக்கிறது. தமிழர்கள் தம் வாழ்வில் சுயமரியாதை உணர்வும், ஏற்றமும் பெறக் காரணமாக இருந்த பெரியாரையும், திராவிட இயக்க பாரம்பரியத்தையும் விமர்சிப்பது என்பது புது அரசியல் வடிவமாக தற்போது உருவாகி வருகிறது. தற்போது பெரியாரை விமர்சிக்கும் நமது தமிழ்த் தேசியவாதிகளுக்கு பதில் சொல்வதற்கு முன் 'பெரியாரை’ இதற்கு முன் விமர்சித்த பெரியோர்களின் கொள்கைக‌ளை நாம் தெரிந்து கொள்ள வேண்டும். 

சைவநெறி காவலர் மறைமலையடிகளும், பறையரின பங்காளி பெரியாரும்: 

periyar_28தமிழ்த் தேசிய தந்தை என்று இன்றைய தமிழ்த் தேசியரில் பலரும் போற்றிப் புகழும் மறைமலையடிகள் ஒரு சைவ சமயப் பிரியவராவார். தமிழ் மொழியையும், சைவ நெறியையும் ஒன்றாக இணைத்து தொழுதவர். இராமாயணத்தை பெரியார் கொளுத்தியபோது, அதிக தரவுகள் தந்து இராமாயணத்தை மேலும் அம்பலப்படுத்த பெரியாருக்கு உதவியவர் மறைமலையடிகள். சமஸ்கிருதம் நீக்கப்பட்டு பல்கலைகழகங்களில் தமிழ் பாடமொழியாவதற்கு பெரியாரின் உதவியை நாடியவர். பெரியாரின் இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் பங்கு கொண்டவர். இது போன்று பல போராட்டங்களில் பெரியாருடன் உடன்பட்டு நின்றவர் மறைமலையடிகள். எந்த இடத்தில் பெரியாருடன், மறைமலையடிகளுக்கு முரண் வருகிறது என்று பார்ப்போமா?

இராமாயணத்தைக் கொளுத்திய பெரியார், பெரியபுராணத்தையும் கண்டனம் செய்தார். உடனே 'நாயக்கரின் வைணவக் குசும்பு' என்று மறைமலையடிகளார் ஆத்திரப்படுகிறார். பார்ப்பான், பறையன் இவர்களைத் தவிர்த்த மற்ற குடிகள் தமிழர் ஆவர் என்கிறார் மறைமலையடிகள்.

     மேலும் 'உழுதுண்பவர்கள் சூத்திரர்கள். ஆனால், நாங்கள் (சைவ வெள்ளாளர்) உழுவித்துண்பவர்கள். எனவே நாங்கள் சூத்திரர்கள் அல்ல' என்று தன்னுடைய சாதிப் பெருமையை பேசுகிறார் மறைமலையடிகள்.

     மாட்டிறைச்சி உண்ணுவோரை தமிழரே அல்ல என்கிறார் மறைமலையடிகள். ஆனால் பெரியாரோ மாட்டிறைச்சி உண்ணும் போராட்டம் நடத்தியவர். தான் நடத்திய சுயமரியாதை மாநாடுகளில் பறையரும், இசுலாமியரும்தான் சமைக்க வேண்டும் என்று கட்டளையிட்டவர். மொழிப்பெருமையோடு சுயசாதிப் பெருமை, புராண இதிகாச நம்பிக்கைகளை தூக்கி சுமந்த மறைமலையடிகள், பறையர்களுக்கு பங்காளனாகவும், பகுத்தறிவு சுடராகவும் விளங்கிய பெரியாரோடு முரண்படாமல் எப்படி இருந்திருக்க முடியும்? தன் சமூகத்தைத் தவிர பிற தமிழர்களை 'சூத்திரன்' என்று சொல்லும் மறைமலையடிகள் தமிழ்த் தேசியத் தந்தையா? தமிழன் மீது திணிக்கப்பட்ட‌ சூத்திர இழிவை ஒழிக்கப் பாடுபட்ட பெரியார் தமிழ் தேசியத் தந்தையா? என்கிற கேள்விக்கு பெரியார் மறுப்பாளர்கள் நேர்மையாக பதில் சொல்ல வேண்டும். 

ஏக இந்தியா மா.பொ.சியும் தனித் தமிழ்நாடு பெரியாரும்:-

     குலக் கல்வித் திட்டம், இந்தித் திணிப்பு என மானிட விரோதத் திட்டங்களை தமிழ்நாட்டிற்கு அறிமுகப்படுத்திய சனாதன வெறியர் இராசாசியின் செல்லப்பிள்ளையாக வளர்ந்தவர்தான் மா.பொ.சி. இந்தி மொழியையும் தமிழனை இழிவு படுத்தி சமஸ்கிருத்தையும் முழுமனதாக அங்கீகரித்தவர்தான் இந்த மா.பொ.சி. தனித் தமிழ்நாடு கோரிக்கையை ஏற்காதவர். ஏக இந்தியாவின் புனிதத்தை வலியுறுத்தியவர். இவரைத்தான் தமிழ்த் தேசியத்தின் தலையாய தலைவராக இன்றைய பெரியாரிய மறுப்பாளர்கள் முன்வைக்கின்றனர். 1950களில் திராவிட இயக்க எதிர்ப்பு மாநாடுகளை நடத்தியவர் மா.பொ.சி. இன்றைய திராவிட மறுப்பாளர்களின் மூலவர் மா.பொ.சி. எனலாம். தமிழ்நாடு, கர்நாடகம், கேரளம் என மூன்று மாநிலங்களையும் இணைக்கும் தட்சிணப் பிரதேச திட்டத்தை எதிர்த்தவர் பெரியார். இராசாசியின் சீடர் மா.பொ.சி. அதனை எதிர்க்கவில்லை. இந்தித் திணிப்பை எதிர்க்கவில்லை.

     சுயமரியாதைத் திருமணத்தை வெறுத்தவர். பார்ப்பன மந்திரம் ஓத வைதீக முறைப்படி திருமணம் நடக்க வேண்டும் என்றார் மா.பொ.சி. தமிழுக்காக மாபொ.சி. என்ன செய்தார்? ஆங்கிலத்தை சாடினார். பிறமொழிபேசும் மக்களை சாடினார். (பார்ப்பான், இந்தி மொழியினர் தவிர்த்து.) பெரியாரால் ஆதரிக்கப்பட்ட ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த காமராசருக்குப் போட்டியாக பார்ப்பன இராசாசியால் உருவாக்கப்பட்டவர் தான் இந்த மா.பொ.சி. சுயமரியாதை உணர்வு கொண்ட காமராசரையும் தோற்கடிக்க வேண்டும், பார்ப்பன எதிர்ப்பு பேசும் பெரியாரையும் எதிர்க்க வேண்டும் என்கிற இராசாசியின் கனவிற்கு கருவியாய் பயன்பட்டவர்தான் இந்த மா.பொ.சி. மா.பொ.சி.யின் திராவிட எதிர்ப்பு முழுவதும் பார்ப்பன சார்புத் தன்மை வாய்ந்தது என்பதை உணர வேண்டும். பார்ப்பனராக இராசாசி வெளிப்படையாக பெரியாரை எதிர்ப்பதற்குப் பதிலாக ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த மா.பொ.சியை வைத்து தன் திராவிட எதிர்ப்பைக் காட்டினார்.

     இராசாசியின் தந்திரத்திற்குப் பலியான மா.பொ.சி.யின் வாரிசுகள் இன்றும் இராசாசியின் குரலாய் பெரியாரை மறுத்து வருகிறார்கள். 

பெரியார் - இலக்கியம் தெரிந்தவரா? புது இலக்கணம் படைத்தவரா? 

     பெரியாரின் மொழிக்கொள்கை தவறு. தமிழை காட்டுமிராண்டி மொழி என்று பெரியார் எப்படி கூறலாம்? போன்ற கேள்விகள் பெரியாரை வேறு எந்த வகையிலும் பழி சொல்ல முடியாத தருணத்தில் தமிழ்த் தேசியர்கள் தொடுக்கும் வினாக்கள். ஆனால் இது மற்ற வினாக்களை விட மிகவும் எளிமையென்று அவர்களுக்குப் புரிவதில்லை.

     தமிழ்மொழியின் பெருமையை எங்கிருந்து ஆரம்பிக்கிறார்கள்? மன்னன் துதி, கடவுள் வழிபாடு, ஆணாதிக்க மொழியிலிருந்தே இவர்கள் தமிழ் மொழியின் பெருமையைப் போற்றுகிறார்கள் . சிவன்-பார்வதி காமுறுதலையும் இராமன் - சீதையை வர்ணிப்பதையும் படித்துதான் நாம் தமிழ் உணர்வை பெருக்கிக் கொள்ள வேண்டுமா? திருவாசகமும், பெரியபுராணமும் தான் உன் தமிழ்த் தேசியத்தின் அடையாளமா? இதிலிருந்துதான் தமிழின் அழகையும், மேன்மையையும் நீங்கள் போற்றுவீர்களேயானால், தமிழ் காட்டுமிராண்டி மொழி என்று பெரியார் சொன்ன‌தில் என்ன தவறு? இராச இராச சோழனின் தஞ்சை பெரிய கோவிலை எல்லோரும் புகழ்ந்தபோது பெரியார் மட்டும் வானாளவிய குட்டிச்சுவர் என்று அதை விமரிசனம் செய்தார். இராசராசன் என்கிற தனிமனிதனின் சாதனையாக தமிழ் அறிஞர்கள் அப்பெரிய கோவிலைப் பார்த்தார்கள். ஆனால் பெரியாரோ, எத்தனையோ பாட்டாளிகளின் இரத்தம், உழைப்பாளர்களின் வரிப்பணம், ஒரு மன்னனின் புகழ் பாடுவதற்காக வீணடிக்கப்பட்டடிருக்கிறதே என்று மனம் வெதும்பினார்.

     உடைமை சமூகத்திற்கு எதிரான பெதுவுடைமை சிந்தனையாளர் பெரியாரால் தனியுடமையாளர்களை எப்படி போற்ற முடியும்? சமூக விடுதலை, சாதி ஒழிப்பு, உடைமை சமூக எதிர்ப்பு, ஆணாதிக்க எதிர்ப்பு என எதையும் பேச வேண்டாம்; கண்ணகியின் கற்பையும், தமயந்தியின் பதிபக்தியையும் அழகுத் தமிழில் படிக்கவும், அதைப் பரப்பவும் செய்யக் கூடியவர்களே தமிழ்த் தேசியர்கள் என்று நீங்கள் வாதிட்டால், தமிழில் முனைவர் பட்டம் பெற்ற எத்தனையோ தமிழ்ப் பேராசிரியர்கள் இருக்கிறார்கள் உங்களுக்குத் தலைமை தாங்க. தமிழன் தரணி ஆள்வதற்காக புது இலக்கணம் படைத்த பெரியாருக்கு, உங்களுடைய தமிழ் இலக்கியம் தெரியாது என்பதை நான் ஒப்புக் கொள்கிறேன். 

திராவிடம் - தமிழினத்தின் அடையாளம்: 

     "பெரியார் ஒரு கன்னடர். எனவே தன்னுடைய கன்னட மக்களின் நலனை முன்னிறுத்தி 'திராவிடர்' என்கிற சொல்லை அரசியலாக்கிவிட்டார்." என்கிறார்கள். முதலில், இத்தகைய குற்றச்சாட்டை முன்வைப்பவர்கள் கன்னடர்களுக்காக பெரியார் என்னென்ன பணிகளை செய்தார் என்று கூற முடியுமா? கர்நாடகம், கேரளம், தமிழ்நாடு என் மூன்றையும் இணைக்கும் 'தட்சிணப்பிரதேசம்' திட்டத்தை கடுமையாக எதிர்த்தவர் பெரியார். பெரியார் கன்னடராக தன்னை உணர்ந்தால் இத்திட்டத்தை எதிர்ப்பாரா? 1950களில் ஆந்திரா மாநிலம் தனியாக உருவானபோது பெரியார் மகிழ்ச்சி கொள்கிறார். பார்ப்பனப் பிடிப்பு கொண்ட தெலுங்கர்கள் நம்மை விட்டு பிரிந்து செல்வது நமக்கு வசதியான ஒன்று என்கிறார். 1950களின் தொடக்கத்திலேயே மலையாளிகளின் பொருளாதார ஆதிக்கம் சென்னையில் பெருகுவதை கண்டித்து குடியரசில் கட்டுரைகள் எழுதினார்.

தமிழரின் கல்வி, அரசியல், பொருளாதார நலன் குறித்து, பெரியாரின் திராவிட இயக்கம் அளவிற்கு அக்கறை கொண்ட அமைப்பு வேறு எதுவம் கிடையாது. தமிழர்களைப் புறந்தள்ள திராவிடம் பெரியாரால் பயன்படுத்தப்பட்டது என்றால், திராவிடம் பெரியாரால் கண்டுபிடிக்கப்பட்ட சொல் கிடையாது என்பதை முதலில் தெரிந்து கொள்ள வேண்டும்.

வரலாற்றறிஞர் கால்டுவெல், ஜான் மார்ஷல், அபேதுபே, பாபாசாகிப் அம்பேத்கர், சீனிவாச அய்யங்கார், கே.கே.பிள்ளை, தமிழ்அறிஞரான அயோத்திதாசர், பண்டித திராவிட பாண்டியன் இதழாசிரியர் ஜான்ரத்தினம் ஆகியோர் பெரியாருக்கு முன்னால் வரலாற்றில் அடிப்படையில் தாழ்த்தப்பட்டடோர் விடுதலைக்கான அரசியலுக்காக‌வும், திராவிடம் என்கிற சொல்லை பயன்படுத்தினர். இந்த வரலாற்று தொடர்ச்சியாகத்தான் பெரியாரும் பார்ப்பனரல்லாதோர் எனப் பொருள்படும் வகையில் 'திராவிடர்' என்னும் வார்த்தையை பயன்படுத்தினார்.

     தமிழ், தமிழர், தமிழம் என்கிற வார்த்தைதான் மருவி திரமளம், திராவிடம் என மாறியதாக ஒரு வரலாற்று ஆய்வும் உண்டு. ஆகவே பொயாரின் திராவிடப் பற்றில் கன்னட சார்பு இல்லை. நமது தமிழ்த் தேசியத் தோழர்களின் திராவிட எதிர்ப்பில்தான் ஆரியச் சார்பு இருக்கிறது. 

திராவிட எதிர்ப்பின் நீட்சியும், சாதி சங்கங்களின் கிளர்ச்சியும்

     சுமார் 80 ஆண்டுகளுக்கு முன்னால் தன் பெயருக்குப் பின்னால் சாதிப் பட்டத்தை நீக்க வேண்டும் என்று கொள்கை வகுத்து அதனை நடைமுறையிலும் சாத்தியமாக்கியவர் பெரியார். இந்தியாவில் இன்று எல்லா மாநிலத்திலும் அரசியல்வாதிகள், இலக்கியவாதிகள் என அனைத்து தரப்பினரும் தன் பெயருக்குப் பின்னால் சாதிப்பெயரை இட்டுக் கொள்கிறார்கள். (சீதாராம் யெச்சூரி, பிரகாஷ் காரத், மம்தா பானர்ஜி, சோமநாத் சாட்டர்ஜி, பிரணாப் முகர்ஜி, பால்தாக்கரே, அமிதாப்பச்சன், அருந்ததி ராய், லால்லு பிரசாத் யாதவ். அகிலேஷ் யாதவ், சரத் யாதவ்) மேற்கண்ட உதாரணங்கள் தமிழகம் அல்லாத பிற மாநிலங்களில் இருந்த அல்லது இருக்கின்ற ஆளுமைகளின் பெயர்கள். இவர்களில் முற்போக்குவாதிகளும் அடக்கம். ஆனால், தமிழகத்தில் திராவிட இயக்க எழுச்சிக்குப் பின் சாதிப்பட்டத்தை பெருமையாக போட்டுக் கொள்ளும் அரசியல்வாதிகள் இருக்கிறார்களா? காங்கிரசில் கூட கிடையாது. ஏன் பார்ப்பனர்கள் கூட சாதிப் பட்டம் இட்டுக் கொள்வது கிடையாது. (இல.கணேசன், சுப்பரமணிய சுவாமி, சோ) இது தான் தமிழ்நாடு. இதுதான் பெரியார் ஏற்படுத்திய மறுமலர்ச்சி.

ஆனால் இந்நிலையை மாற்றுவதற்காக சாதிவெறிக் கும்பல் ஆயத்தமாகி வருகிறது. சாதிமறுப்புத் திருமணம் செய்தால் அவர்களை வெட்டுவேன் என்கிறார் ஒரு சாதி சங்கத் தலைவர். கலப்புத் திருமண எதிர்ப்பு இயக்கம் என்று கொங்குமண்டலத்தில் இயக்கம் கட்டுகிறர்கள். இந்த கொடுமையெல்லாம் எங்கிருந்து புறப்படுகிறது? திராவிட எதிர்ப்பின் நீட்சிதான் இவையெல்லாம். சாதிப்பட்டத்தை தூக்கு என்று சொன்ன திராவிட இயக்க சிந்தனை வேண்டுமா? சாதிக்காக அரிவாளைத் தூக்கு என்கிற திராவிட எதிர்ப்பு மனநோய் வேண்டுமா? என்பதை நாம் சிந்திக்க வேண்டும்.

இனத்தூய்மை என்கிற பெயரில் சாதியை வைத்து தமிழரை அடையாளம் காணும் அவலமும் நடக்கிற‌து. தேவர், நாடார், வன்னியர், பறையர், பிள்ளை, கவுண்டர் உட்பட சிலர் தமிழர்கள்; நாய்க்கர், ரெட்டியார், அருந்ததியர், ஒட்டான், மாதர், பகடை, தெலுங்குச் செட்டியார், கன்னடச் செட்டியார், சௌராஷ்டிரா, உருது முஸ்லிம்கள் ஆகியோர் அந்நியர் என்று தமிழக நிலப்பரப்பில் வாழும் பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட மக்களை பிரித்தாளும் சூழ்ச்சியும் நடக்கிறது. தமிழர் அடையாளத்தைப் பேணுவதற்காக சாதிப் பெருமையும் நிலைநாட்டப்படுகிறது. காதல் மணம், சாதிமறுப்புத் திருமணம் தடுக்கப்படுகிறது.

     திராவிட இயக்கத்தின் நூற்றாண்டு சாதனையான சாதி ஒழிப்புப் பணியை குறுகிய காலத்தில் சிதைக்கப் பாக்கிறார்கள் திராவிட மறுப்பாளாகள். உன்னை 'சூத்திரன்' என்று சொல்லும் இந்த சாதிப்பட்டத்தை தகர்த்தெறிந்த திராவிடம் வேண்டுமா? மீண்டும் உன்னை சூத்திரன் என்பதில் பெருமை கொள்ள வைக்கும் இந்த திராவிட மறுப்பு அரசியல் வேண்டுமா? பிற்போக்குத்தனமாக பழம்பெருமை பேசி அழியப் போகிறோமா? பெரியார் வழியில் பகுத்தறிவு சமூகமாக பாரினில் வலம் வரப் போகிறோமா? என்பதை தமிழ் சமூகம் சிந்தித்து முடிவு எடுக்க வேண்டும்.

- ஜீவசகாப்தன் (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)

Pin It