“இல்லாத ஒரு பொருளை இறைவனென்று சொல்லுவர்

                இருக்கின்ற மானிடரை இழிவு என்று சொல்லுவர்”

                சித்தர் பாடிய இப்பாடலில் இடம் பெற்றுள்ள மானிட இழிவானது, இந்தியத் துணைக் கண்டத்தைப் பொறுத்தவரை பெரும்பாலும், சாதியத்தின் அடிப்படையிலானதாக இருக்கிறது.

ambedkar_241                சுமார் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு பார்ப்பனர்களின் சுரண்டல் நலனுக்காக உருவாக்கப்பட்ட சாதியத்தால், இந்தியத் துணைக்கண்டம் முழுக்க பரவி வாழும் ஒடுக்கப்பட்ட உழைக்கும் மக்கள் அடையும் இன்னல்கள் சொல்லி மாளாது.

                இன்றைய நவீன அறிவியல் சாதனங்களின் உதவியுடன் பலகோடி ரூபாய் பணமிருந்தால் வானில் பறந்து விண்வெளிக்குக் கூட சுற்றுலா சென்று திரும்பலாம் என்கிற சூழல் நிலவும், இந்தக் காலத்தில் தான் சாதியம் தன் கோர வாயைப் பிளந்து, மனிதத்தை விழுங்கி ஏப்பம் விட்டுக் கொண்டிருக்கிறது.

                பரமக்குடி, தர்மபுரி போன்ற இடங்களில் நடக்கும் சாதிவெறி அரங்கேற்றங்கள் மனித நேயத்திற்கு விடப்பட்ட அறைக்கூவல்கள். கணினி முன் மண்டியிட்டு உலகையே சுழற்றும் இந்நாளைய நிலைமையே இத்தகையதென்றால், சாதிவெறி கோரதாண்டவமாடிய இருபதாம் நூற்றாண்டில் தொடக்கக் காலத்தைச் சொல்லித் தெரிய வேண்டியதில்லை. பின்னாளில் இந்தியத் துணைக் கண்டத்தின் தலைவிதியையே தீர்மானிக்கும் தனிப்பெரும் சக்தியாக விளங்கிய புரட்சியாளர் அம்பேத்கர் இளமைப்பருவம் முதலே அத்தகைய சாதிச் சுழலில் சிக்குண்டு தவித்தவர். எனவேதான் சாதியக் கொடுமையால் அல்லலுறும் ஒடுக்கப்பட்ட மக்களைப் பெரிதும் நேசித்து, அவர்களின் துயரினைத் துடைத்தழிக்க சாதியொழிப்புப் பயணத்தைத் தன் வாழ்நாள் முழுவதும், நெஞ்சுறுதியுடன் தொடர்ந்தார்.

                “இந்திய நாட்டில் ‘மநு’ என்னும் கொடுநெறிகளால் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் உருவாக்கப்பட்ட இந்து மதம் ஒரு மதமே அல்ல. அது சட்ட விதிகளே, சட்டத்திற்கு மதம் என்று தவறாகப் பெயர் சூட்டப்பட்டுள்ளது” என்று இந்து மதத்தைக் கடுமையாகச் சாடியவர் அம்பேத்கர்.

                அகல விரிந்துபரந்த மரத்தைத் தாங்கிப் பிடிக்கும் வேரினைப் போல, கேடான சாதியத்தை தாங்கிப் பிடிக்கும் ஆணிவேராய் விளங்கிய இந்து மதத்தை வேறோடும் வேரடி மண்ணோடும் பிடுங்கி எறிய உறுதியேற்று களமாடியவர் புரட்சியாளர் அம்பேத்கர். சாதியக் குத்தீட்டிகளால் இந்தியா முழுக்கவுள்ள ஒடுக்கப்பட்ட மக்கள் குத்தப்படுவதைக் கண்ட புரட்சியாளர் அம்பேத்கர் தேசிய இனம், மொழி என்ற வரையறைகளைக் கடந்து சாதியத்தால் ஒடுக்கப்பட்ட அனைவருக்காகவும் குரல் கொடுத்தார்.

                சாதியத்திற்கெதிரான குரல் எங்கெல்லாம் ஒலிக்கிறதோ, அந்தக் குரல் யாருடையது என்றறிந்து அவர்களுடன் கரம் கோர்த்து நின்றவர் புரட்சியாளர் அம்பேத்கர். அந்த வகையில் தமிழ்நாட்டில் இந்துத்துவ – சாதியத்திற்கெதிரான ஒரு குரல் ஓங்கி ஒலிப்பதைக் கண்டார். அந்தக் குரல் பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியாருடையது என்பதை அறிந்து அவருடன் நட்பு பாராட்டினார். ‘வடநாட்டுப் பெரியார்’ என்று போற்றப்பட்ட புரட்சியாளர் அம்பேத்கர், ‘தென்னாட்டு அம்பேத்கர்’ என்று அழைக்கப்பட்ட தந்தை பெரியார் கருத்தெருமித்துக் களத்தில் நின்றனர்.

                புரட்சியாளர் அம்பேத்கரின் சாதி ஒழிப்புக் களத்தை நன்கறிந்திருந்த தந்தை பெரியார் 1931-ல் விருதுநகரில் நடைபெற்ற சென்னை மாகான மூன்றாவது சுயமரியாதை மாநாட்டுக்குத் தலைமை ஏற்றிட எம்.ஆர்.ஜெயகர் அவர்கள் மூலம் புரட்சியாளர் அம்பேத்கரை அழைத்தார். பம்பாய் மாகானச் சுயமரியாதை மாநாட்டை நடத்துகிற பணியிலிருந்த புரட்சியாளர் அம்பேத்கர் அவர்களால், பெரியாரால் நடத்தப்பட்ட சென்னை மாகான மாநாட்டில் கலந்து கொள்ள இயலவில்லை.

                சாதி ஒழிப்புக் களத்தில் சிறப்பானதொரு வேலைத் திட்டத்துடன் செயல்பட்டு வந்த நீதிக் கட்சிக்கு இந்தியா முழுக்க கிளைகளைப் பரப்பி தம்மால் ஆன ஒத்துழைப்பும், ஆதரவும் நல்குவதாக புரட்சியாளர் அம்பேத்கர் தெரிவித்துள்ளது நீதிக்கட்சியின் மீதான அவரின் தெளிவான பார்வையைப் புலப்படுத்துகிறது.

                இந்துத்துவத்தால் கட்டமைக்கப்பட்ட சாதியத்தின் கோரவடிவத்தை சிறு வயதிலிருந்தே அனுபவித்த புரட்சியாளர் அம்பேத்கர், இந்து மதக் கழிசடையிலிருந்து வெளியேறத் திட்டமிட்டார். “நான் இந்துவாகப் பிறந்து விட்டேன்@ ஆனால் இந்துவாகச் சாகமாட்டேன்” என்று உறுதியளித்தார். அந்நிலைப்பாட்டின் படி ஒரு பொதுக்கூட்டத்தில் இசுலாமிய மதத்ததிற்கு மாறிவிட வேண்டும் என எண்ணினார். அச்சமயத்தில் தமிழகம் தழுவிய ஒப்பற்ற தலைவைராக விளங்கிய தந்தை பெரியார், அம்பேத்கருக்கு ஒரு தந்தி ஒன்றை அனுப்பினார். அதில் “நீங்கள் மதம் மாறுவதாக இருந்தால் ஒண்டியாகப் போகக்கூடாது, குறைந்தது ஒரு இலட்சம் பேருடன் மதம் மாற வேண்டும். அப்போதுதான் முஸ்லீம் மதிப்பான். இல்லாவிட்டால் தனியாக அங்கு போனால் அவனும் நம்மைக் கவனிக்க மாட்டான். உங்கள் தாழ்த்தப்பட்ட இனம் நசுக்கப்பட்டுக் கொண்டே இருக்கும். முஸ்லீம் ஆகிவிட்டால் இந்து மதத்தின் இழிவுபற்றி நீங்கள் பேசினால் முஸ்லீம் இந்து மதத்தைப் பற்றி பேசுவதா என்று கிளப்பிவிடுவார்கள். ஆகையால் ஒரு இலட்சம் பேரோடு தாங்கள் போகும் போது நானும் ஒரு 10, 20 ஆயிரம் பேர்களைத் தருகிறேன்” என்று குறிப்பிட்டிருந்தார்.

இவ்வாறாக இருள் சூழ்ந்திருந்த இந்து மதத்தை விட்டு மக்கள் வெளியேற தன்னாலான உதவிகளைச் செய்யத் தயாராக இருந்தார் தந்தை பெரியார். மேலும் 1954 டிசம்பர்-3, பர்மாவின் தலைநகர் இரங்கூனில் நடைபெற்ற உலக புத்தர் மாநாட்டில் தந்தை பெரியாரும், புரட்சியாளர் அம்பேத்கரும் கலந்து கொண்டு சிறப்பித்தார்கள். அப்போது தந்தை பெரியார் அவர்களைப் பௌத்த மதத்தைத் தழுவிக் கொள்ளும்படி கனிவுடன் கேட்டுக் கொண்டார். அதற்கு தந்தைபெரியார் அவர்கள், “இந்து மதத்தில் இருக்கும் போது தான் அதன் கொடுமைகளை எதிர்த்துப் பேச முடியும். நான் இன்னொரு மதத்துக்காரனாக இருந்தால் அப்படிப்பட்ட வசதி எனக்கு இருக்காது. நான் வெளியில் இருந்து கொண்டு புத்த மதத்தைப் பரப்புரை செய்கிறேன் என்றார். (விடுதலை – 22.02.1959). மேலும் தந்தை பெரியார் பர்மாவில் தங்கியிருந்த பெரும்பாலான நேரத்தை புரட்சியாளர் அம்பேத்கருடனே செலவிட்டார்.

                1956 அக்டோபர் 14 ஆம் நாள் நாகபுரியில் புரட்சியாளர் அம்பேத்கர் தனது மூன்று இலட்சம் தொண்டர்களுடன் பௌத்த மதத்தை தழுவிக் கொண்டார். புரட்சியாளர் அம்பேத்கரின் மதமாற்ற நிகழ்வுக்குப் பிறகு தழிழகத்தின் சென்னை, வேலூர், பெங்களுர், ஊப்ளி, கோலார், தங்கவயல் ஆகிய பகுதிகளில் வாழ்ந்த மக்களும் பௌத்த மதத்திற்கு மாறினார்கள்.   

                தந்தை பெரியார் அவர்கள் பம்பாய் சென்று புரட்சியாளர் அம்பேத்கரைச் சந்தித்து நடப்பு அரசியல் சூழல் குறித்து விவாதித்துக் கொண்டார்கள். அச்சந்திப்பின் போது அம்பேத்கரின் விருந்தினராக ஜனாப்.முகம்மது அலி ஜின்னாவும் பங்கேற்று சிறப்பித்தார். இவ்வாறாக பம்பாயில் அம்பேத்கரும் பெரியாரும் மும்முறைச் சந்தித்துக் கொண்டார்கள். அச்சந்திப்புகள் 06.04.1940, 07.04.1940 மற்றும் 08.04.1940 ஆகிய நாட்களில் நடைபெற்றது.

ambedkar_periyar_400

                மேலும் ஜனாப்.ஜின்னாவையும், புரட்சியாளர் அம்பேத்கரையும் தமிழ்நாட்டிற்கு வரும்படி தந்தை பெரியார் அவர்கள் அழைக்க, அவர்களும் தமிழ்நாட்டிற்கு வர இசைவழித்தார்கள். அதன்படி 21.09.1944-இல் சென்னை பெரியார் மாளிகையில் தந்தை பெரியாரும், புரட்சியாளர் அம்பேத்கரும் சந்தித்து, தமிழக அரசியல் குறித்து விவாதித்துக் கொண்டார்கள்.

                கேரளத்தின் ‘வைக்கம்’ என்ற ஊரின் நடுவில் அமைந்துள்ள கோவில் வீதிகளில் ஒடுக்கப்பட்ட புலையர், ஈழவ மக்கள் நடக்கக்கூடாது என ஆதிக்கச்சாதிகள் தடை விதித்திருந்தனர். அதை எதிர்த்து 1924-இல் கடுமையான போராட்டத்தை முன்னெடுத்த தந்தை பெரியார் சிறையிலடைக்கப்பட, இறுதியில் தோழர்களின் தொடர் போராட்டத்தால் வைக்கம் போராட்டம் வெற்றி பெற்றது.

                தந்தை பெரியாரின் வைக்கம் போராட்டத்தை ஆதரித்து புரட்சியாளர் அம்பேத்கர் தான் நடத்திய ‘ஊமையர்களின் குரல்’ என்ற இதழில் ‘வைக்கம் போராட்டத்தின் வெற்றி’ என்ற தலைப்பில் தலையங்கம் தீட்டினார். அதில் ‘மகர்’ என்ற இடத்தில் பொதுக்குளத்தில் பட்டியலின மக்கள் தண்ணீர் எடுக்க உரிமை கோரி போராட்டம் நடத்துவதற்கு, தந்தை பெரியார் நடத்திய வைக்கம் போராட்டம் மிகுந்த தாக்கத்தை உண்டாக்கியதாகக் குறிப்பிட்டிருந்தார்.

                08.02.1959-இல் புரட்சியாளர் அம்பேத்கரின் கட்சியான, அகில இந்திய குடியரசு கட்சியினரின் அழைப்பிற்கிணங்கி கான்பூர், லக்னோ, டெல்லி, பம்பாய் போன்ற நகரங்களில் சாதி ஒழிப்பு குறித்து பரப்புரை செய்தார் தந்தை பெரியார். அம்பேத்கரின் பின்னால் அணிவகுத்து நின்ற மக்கள் அனைவரும் பெரியாரின் பரப்புரைப் பயணத்திற்கு உறுதுiணாய் நின்றார்கள்.

                பதவிகள் பல கூடி வந்த போது அவற்றைத் துச்சமாய் நினைத்து உதறித்தள்ளி, ஒடுக்கப்பட்ட மக்கள் நலனை முன்னிறுத்தி போராட்டம் நடத்திய புரட்சியாளர் அம்பேத்கரை தமிழக மக்கள் ஆரத்தழுவி தங்கள் தலைவராக ஏற்றுக்கொண்டார்கள். அம்பேத்கரின் போராட்டம் மக்கள் நெஞ்சத்திலும், புகைப்படம் வீட்டுச் சுவர்களிலும் அலங்கரித்து நிற்கின்றன.

                1932-இலண்டனில் நடந்த இரண்டாவது வட்டமேசை மாநாட்டில் ரெட்டைமலை சீனிவாசன் பட்டியலின மக்களுக்கு இரட்டை வாக்காளர் தொகுதி வழங்கப்பட வேண்டும் என்றும், பட்டியலின மக்களின் விகிதாச்சார அளவுக்கு ஏற்ப கல்வியிலும், வேலை வாய்ப்பிலும் உரிய பங்கு அளிக்கப்பட வேண்டும் என்பதையும் வலியுறுத்திப் பேசினார். இந்தக் கோரிக்கையை வலியுறுத்தி புரட்சியாளர் அம்பேத்கரும் மிக விரிவாகப் பேசினார். அம்பேத்கரின் இந்த உரை மாநாட்டிற்கு வந்திருந்த அனைவரையும் மெய்சிலிர்க்க வைத்தது. இலண்டனில் நடந்த வட்டமேசை மாநாடுகளின் போது தாத்தா ரெட்டைமலை சீனிவாசனும், அண்ணல் அம்பேத்கரும் சீரிய நட்புடன் பழகினர்.

                மகாராஷ்டிரத்தில் பிறந்த புரட்சியாளர் அவர்கள் இந்தியத் துணைக் கண்ட முழுக்க வாழும் ஒடுக்கப்பட்ட மக்களுக்காக குரல் கொடுத்தார். தமிழ்நாட்டின் கடை கோடியில் அமைந்துள்ள திருநெல்வேலி மாவட்டத்தில் வாழும் புதிரை வண்ணார் சமூக மக்களின் உரிமைக்காகவும்,பிற பகுதிகளில் வாழும், ஒடுக்கப்பட்ட மக்களுக்காகவும் குரல் கொடுத்துள்ளார்.

                மேலும் 1946 டிசம்பர் 29-இல், சங்கம் வைத்து தமிழ் வளர்த்த மதுரை மாநகரில் தேவேந்திர குல வேளாளர் சங்கம் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த மாநாட்டில் தேக்கம்பட்டி பாலசுந்தராசு அவர்களின் அழைப்பினை ஏற்று புரட்சியாளர் அம்பேத்கர் அவர்கள் கலந்து கொண்டார். அம்மாநாட்டில் தென் தமிழகத்தில் நிலவிய சாதிய ஒடுக்கு முறைக்கு எதிராக நெஞ்சுறுதியுடன் சமர்புரிந்த மாவீரன் இமானுவேல் சேகரனும், புரட்சியாளர் அம்பேத்கரும் சந்தித்துக் கொண்டார்கள்.

                புரட்சியாளர் அம்பேத்கர் அவர்களின் அரசிய களம் - இந்து மத எதிர்ப்பு - சாதி ஒழிப்பு ஆகியவற்றோடு நின்று விடவில்லை. அம்பேத்கரின் அரசியல் பார்வை விரிந்தது@ அவரின் மொழி ஆய்வு ஆணித்தரமானது. புரட்சியாளர் அம்பேத்கர் இந்தியாவில் பேசப்பட்ட மொழிகள் குறித்து நுணுகி ஆய்ந்துள்ளார். அவர் தமிழ்மொழி ஆய்வு குறித்துக் குறிப்பிடும் போது, “தமிழ் மொழி இந்தியா முழுமைக்குமாக பேசப்பட்ட மொழி” என்கிறார். மேலும் “தமிழ்” என்ற சொல் சமற்கிருதமயமாக்கப்பட்ட பிறகு ‘தமிழா’ என்றும் ‘தமிளா’ என்றும் உருமாறி பிறகு ‘திராவிட’மாகிவிட்டது. திராவிடம் என்பது தமிழர்களின் மொழியைக் குறிப்பிடுகின்றது. அது அம்மக்களின் இனத்தை அல்லது ‘திராவிடம்’ என்பது தென்னிந்தியாவின் மொழி மட்டும் அன்று. ஆசிரியர் வருகைக்கு முன் தமிழ்மொழி இந்தியத் துணைக்கண்டம் முழுக்க பேசப்பட்ட மொழியாகும் என்கிறார்.

                தமிழ் காஷ்மீரத்தில் இருந்து குமரி வரையில் பேசப்பட்ட மொழி. இது உண்மையில் இந்தியா முழுவதும் நாகர்களால் பேசப்பட்ட மொழியாகுமெனக் குறிப்பிடுகிறார். ஆரியர்கள் நாகர்கள் மீதும், அவர்களின் மொழி மீதும் ஏற்படுத்திய தாக்கத்தினால் தான், வட இந்தியாவில் வாழ்ந்த நாகர்கள் தங்கள் தாய்மொழியான தமிழை விட்டு அதற்குப் பதிலாக சமற்கிருத்ததோடு கலந்தனர் என்கிறார் புரட்சியாளர் அம்பேத்கர். புரட்சியாளர் அம்பேத்கரின் இந்த மொழி ஆய்வு இதுநாள் வரையிலான மொழியியல் வல்லுநர்களால் ஏற்றுக் கொள்ளப்பட்டதாகவே உள்ளது.

                இவ்வாறாக சாதி ஒழிப்பு, இந்துத்துவ எதிர்ப்பு, ஒடுக்கப்பட்ட மக்களின் சமூக-அரசியல்-பொருளியல் விடுதலை போன்ற தளங்களில் யாரெல்லாம் உண்மையாகப் போராடினார்களோ, அவர்களுடன் அந்தந்தச் சூழலுக்கு ஏற்க கலந்துரையாடி, நட்பு பாராட்டி அரசியல் பயணம் மேற்கொண்ட புரட்சியாளர் அம்பேத்கரின் சாதியொழிப்பு சிந்தனையும், மொழி ஆய்வும், சாதியத்திற்கெதிரான போர்க்குரலாகவும், ஒப்பற்ற தமிழ் மொழியின் உயர்வினை எடுத்தியம்பும் ஆவணமாகவும் இன்றும் விளங்கிக் கொண்டிருக்கிறது என்பதில் சிறிதும் ஐயமில்லை. எனவே சாதி ஒழிப்பும் போரில் புரட்சியாளர் அம்பேத்கரின் அரசியல் பாதையில் நாமும் பயணிக்க அணியமாவோம்!

 - தங்க.செங்கதிர் (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)

Pin It